உள்ளடக்கத்துக்குச் செல்

இல்லம்தோறும் இதயங்கள்/அத்தியாயம் 9

விக்கிமூலம் இலிருந்து
9
ரு வாரம், தவிப்பும் திகிலுமாக மணிமேகலை துடித்தாள். அப்பாவின் நினைவு அடிக்கடி வந்தது. அண்ணிக்காரியின் ஞாபகம்கூட வந்தது. தபால்காரர் கொடுத்துவிட்டுப் போன கடிதத்தைப் படிக்கும்போது கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. அப்பா சுகமாக இருக்கிறாராம். அண்ணிக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறதாம். பரணி நட்சத்திரமாம். தரணி ஆள்வானாம்!

சந்திரன் கடிதம் போட்டிருந்தான். ரயில் நிலையத்தில், அவன் இரண்டு கண்களும் போனதுபோல் உணர்வதாய் சொன்னானாமே, அது இன்னும் போகவில்லையாம். அக்கா, அடிக்கடி கடிதம் போடாதது வருத்தமாம். உடனே கடிதம் போடவில்லையென்றால, ரயிலேறி வந்துவிடு வானாம்.

அட கடவுளே! இவன் வேறயா? நான் படுற பாடு போதாதா?

தம்பிக்கு உடனடியாகக் கடிதம் எழுதி, சூசகமாக வரவேண்டாம் என்று சொல்ல வேண்டும் என்று நினைத்தாள். அப்போது அந்தப் பக்கமாக வந்த பாமா அண்ணியின் கையிலிருந்ததை அர்த்தபுஷ் டியுடன் பார்த்ததும், மணிமேகலை "சந்திரன் எழுதியிருக்கான். ‘உங்கள் நினைவாய் இருக்கேன்னு’ எழுதியிருக்கான். ‘உங்கள் என்பது பன்மையா, இல்ல. அக்கா என்கிற மரியாதை ஒருமையான்னு தெரியல” என்றாள் சிரிப்பை வலிய வரவழைத்துக்கொண்டு. அது வந்தால்தானே?

பாமா, சிறிதுநேரம் அந்தக் கடிதத்தையே பார்த்தாள். அவள் கண்கள் எங்கேயோ பார்த்தன. கைகள் தானாக வங்கி மோதிரத்தைத் தொட்டுப் பார்த்துக் கொண்டன.

மணிமேகலைக்கு மகிழ்ச்சி. தன்னை விட்டு சிறிது விலகி நின்றாலும் தன் தம்பியை அவள் மறக்கவில்லை. முந்தா நாள் கூட, சங்கரன் வாங்கிக்கொண்டு வந்த கரும்பைத் தின்னும்போதுகூட, “இந்தக் கரும்பு இனிக்கல” என்று ‘இந்த’வுக்கு ஏகப்பட்ட அழுத்தம் கொடுத்து, வலது உள்ளங்கையை இடது கைவிரல்களை குவித்து அழுத்திய கள்ளியாயிற்றே...

பாமா போய்விட்டாள்.

இதற்குள் நாலைந்து வீடுகள் தள்ளியுள்ள ஒரு வீட்டில், அவுட் ஹவுஸில் குடியிருக்கும் கம்பவுண்டர் மணி வந்தான். மணிமேகலையை அடிக்கடி டெஸ்ட் செய்யும் டாக்டருடைய நர்ஸிங் ஹோமில் வேலை பார்ப்பவன். இவள், அவனை அண்ணனென்றோ அல்லது தம்பி யென்றோ சொல்லமுடியாத வயது. இருந்த இடம் தெரியாதபடி இருப்பவன். அவன்தான் அடிக்கடி வந்து, மாத்திரைகளைக் கொடுத்துவிட்டுப் போவான். சில சமயம், அவள் நோய்த் திகிலில் இருக்கும்போது, அந்த நோய் பற்றிய புத்தகங்களைப் படித்துக் காட்டிவிட்டுப் போவான். “நல்லா படியுங்க. நாளைக்கு டெஸ்ட் வைப்பேன்” என்று அவள் மகிழ்ச்சியாக இருந்தால், தமாஷாக சொல்லிவிட்டுப் போவான். அவனைப் பார்த்ததும் மணிமேகலைக்கு ஆறுதலாக இருந்தது.

“லட்டர்ல விசேஷமா? சந்தோஷமா இருக்கிங்க...”

“பரவாயில்லியே. டக்குன்னு கண்டுபிடிச்சிட்டிங்களே... அண்ணிக்கு ஆண் குழந்தை பிறந்திருக்காம். தரணி ஆளப்போற பரணி நட்சத்திரமாம். அவன் பிறந்த நேரத்துலயாவது, எனக்கு சுகமானால் சரி.”

“என்ன நீங்க? உங்களுக்குச் சுகமாயிட்டு, சுகமாயிட் டுன்னு எத்தன தடவ சொல்றது. இப்போ நீங்க என்னை மாதிரி. ஆரோக்கியமான யாரையும் மாதிரி—ஒரு நார்மல் பேஷன்ட்.”

“அப்படின்னா, இன்னும் மூணு வருஷம் மாத்திரை சாப்பிடணுமுன்னு ஏன் கஷ்டப்படுத்துறிங்க?”

“இனிமேல் நீங்க கஷ்டமே படக்கூடாது என்கிறதுக்குத்தான். உடம்புல ரிஸிஸ்டன்ஸ் இல்லாததுனாலதான, கிருமிகளுக்குக் கொண்டாட்டமாயிடுது. மூணு வருஷம் ரிஸிஸ்டன்ஸ் பவரைச் சேர்க்கதுக்குத்தான். அதோட தப்பித் தவறி, உடம்புக்குள்ள அந்த கிருமியோ நோயோ இருக்கப்படாது பாருங்க”

“அய்யய்யோ! அப்படின்னா, இன்னும் எனக்கு நோயிருக்கா?”

“இல்லம்மா சத்தியமாய் இல்ல. இருந்தாலும் ஜாக்கிர தையா இருக்கணும் இல்லியா? இது கன்னிப் பெண்ணுக்குப் போடுற காவல் மாதிரி. இதனால அவள் கெட்டுப் போயிடுவான்னா அர்த்தம்? ஒருவர் சில்லறைக் காசுகள கொடுக்கும்போது எண்ணிப் பார்க்கிறோம். இதனால கொடுத்தவர்மேல சந்தேகப்படுறதாவா அர்த்தம்? இது மாதிரிதான், நீங்க மாத்திரை சாப்பிடறதும் உங்களுக்கு இப்போ எந்த நோயும் கிடையாது. என்னை நம்புங்க. நான் பார்மஸி கோர் ஸ்ல டிப்ளமா வாங்குனவன்.”

மணிமேகலை அவனை நம்பியவள்போல் லேசாகச் சிரித்தாள். பிறகு எதையோ சொல்ல நினைப்பவள் போலவும், சொல்லத் தயங்குபவள் போலவும் ஆள்காட்டிவிரலை உதட்டில் வைத்து அடித்தாள். மணி புரிந்து கொண்டான். பொல்லாத மணி.

“எதையோ சொல்ல வந்திங்க போலுக்கு?”

“ஆமாம். பரவாயில்ல சொல்லிடுறேன். நான் இப்போ நார்மல் லேடிதான்னு எங்க... என் வீட்டுக்காரர்கிட்ட சொல்லிடுவிங்களா?”

“எப்பவோ சொல்லிட்டேனே. இன்னைக்கும் சொல்றேன்!”

மணிமேகலை திடீரென்று எழுந்தாள். ராமபத்திரன் !

ராமபத்திரன் ஆவேசமாக உள்ளே வந்தார். அக்காள்காரியை ஒரு உலுக்கு உலுக்கினார்.

“என்னக்கா இதெல்லாம்? எதுக்கு சும்மா இருக்கணும். எதுக்கு சும்மா இருக்கப்படாதுன்னு ஒரு வரமுறை வேண்டாம்? லட்சுமியானதால பொறுத்துக்கிட்டாள். ஒன்பொண்ணுன்னா பொறுப்பியா? பாமாவுக்கு கன்னத்துல புள்ளி வந்தால் பொறுப்பியா? சீதாவுக்கு காலுல புள்ளி வந்தால் பொறுப்பியா? என் பொண்ணுன்னா ஒங்களுக்கு அவ்வளவு இளக்காரம்!”

“என்னடா சொல்ற?”

“பின்ன என்ன... இன்னைக்கி இவளுக்கு வந்திருக்கு; நாளைக்கு அவருக்கு வரும். ஒனக்கு வரும். தள்ளாத வயசுல மச்சானுக்கு வரும். இந்த வீட்டுக்கு வார எனக்குக்கூட வரும். விளையாடுறதுக்கு விளையாடணும்; விளையாடாததுக்கு விளையாடப் படாது!”

“என்ன பண்ணணுமுன்னு நீயே சொல்லேன்!”

“நம்ம குடும்பத்துல இருக்கிற எல்லாரும் டாக்டர் கிட்ட டெஸ்ட் பண்ணிக்கணும்.”

“இதோ வாராங்களே இவங்ககிட்ட சொல்லு. ஒருத்திக்கு வந்திருக்கது ஊருக்கே வருமுன்னு சொல்லு. ஒன் பேச்சைக் கேட்டிருந்தால் இந்த கதி வந்திருக்காது. இப்போ சொல்லியும் லாபமில்ல. சொல்லாமலும் லாபமில்ல.”

ராம—லட்சுமணர்போல் அங்கே வந்த சங்கரஜெயராஜ் சகோதரரில், மூத்தவன் “ஊர்ல. இருந்து எப்போ மாமா வந்திங்க?” என்று எடுத்துக் கூற, “வசந்திக்கு கல்யாணம் ஒழுங்காயிட்டுதா?” என்று இளையவன் தொடுத்துக் கூறினான். மருமகன்களின் உபசரிப்பு மாமனாருக்கு மிளகில் பப்பாளி விதையை கலப்படம் செய்து விற்கும்போது ஏற்படும் திருப்தியைச் சாதாரணமாக்கியது.

“பின்ன என்ன மாப்பிள்ளை. எதுக்கு மரியாத கொடுக் காட்டாலும், வயசுக்கு மரியாத கொடுக்காண்டாமா?”

“ஏன்? ஊர்ல மாப்பிள்ளை வீட்ல மரியாதக் குறைவா நடந்துகிட்டாங்களா?”

“நான் அதச் சொல்லல. வசந்திக்கு பார்த்த மாப்பிள்ளை பட்டந்தான் பி.ஏ. கிம்பளம் வாங்காமல் சம்பளத்துலேயே காலந்தள்ளப் பார்க்கிறவனாம். எப்படிப்பட்டவன்? சர்க்கார் வேலையில எப்படி குப்ப கொட்டுவான்? அவன எவனும் தள்ளாம இருப்பானா என்ன? விடுங்க குப்பைய! நான் அதைச் சொல்லல. நான் சொல்ல வந்தது லட்சுமிக்கு புள்ளி வந்திருக்கு. நாளைக்கு அவருக்கு வரும். மறுநாளைக்கு இவருக்கு வரும். மறுநாளைக்கு இவருக்கு வரும். டாக்டர்கிட்ட டெஸ்ட் பண்ணுனா என்ன? என்னேன்னன்....”

ஜெயராஜ் சப்புக் கொட்டிக்கொண்டே பேசினான்:

“ஆல்ரைட்! இன்னைக்குச் சாயங்காலமே நம்ம டாக்டர் குமரன்கிட்ட செக்கப் பண்ணலாம். இப்போ திருப்திதானே?”

ராமபத்திரன் முதல் ரவுண்டில் வெற்றி பெற்ற குஸ்தி வீரன்போல் ஜாக்கிரதையாகப் புன்முறுவல் செய்தபோது, மணிமேகலை அருகில் நின்றுகொண்டிருந்த கம்பவுண்டர் மணி அங்கே வந்தான். அவனால் பொறுக்க முடிய வில்லை. “தயவுசெய்து, நான் சொல்றத கேளுங்க. நானும், லட்சுமியம்மாவோட புள்ளியப் பார்த்தேன். லேசா பஞ்சை வைத்து அழுத்துனேன். வலிக்குதுன்னாங்க. அதனால அது வெறும் பூச்சிக்கடிதான். நோயைவிட, நோய் வந்திருக்கோ என்கிற பீதிதான் மோசமானது.”

ராமபத்திரன் எகிறினார். யாரும் தடுக்க முடியாத அளவிற்கு எகிறினார்.

“பேசாம உன் வேலய பார்த்துக்கிட்டு போயேன். நீ எதுக்கு வார என்கிற சங்கதி எனக்குல்லா தெரியும்? நாளைக்கு என் மவளும், மருமக்கமாரும், கூடப் பிறந்த அக்காவும் பேரப் பிள்ளிகளும் தெருவுல விரல் இல்லாம நின்னால், நீயா உதவப் போற? மேயுற மாட்ட கெடுக்கு மாம் சாயுற மாடு!”

‘சங்கதி எனக்குல்லா தெரியும்’ என்று ராமபத்திரன் சொன்னதை யாருமே சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. வெளியே இருந்த மணிமேகலைகூட புரிந்துகொள்ள வில்லை. ஆகையால் கம்பவுண்டர் மணியும், அவரைப் புரிந்துகொள்ளாமலே சொன்னான்.

“குழந்தைங்க மனசுல தாங்கள் நோயாளிங்க என்கிற பீதியைக் கிளப்பக் கூடாதுன்னு பார்க்கிறேன். வேணு முன்னால் எங்க டாக்டர் குமரன்கிட்ட கேளுங்க. அவரும் இதைத்தான் சொல்வாரு. யாருக்கும் எதுவும் கிடையாது சாமீ. மிஸ்ஸஸ் ஜெயராஜுக்குகூட இப்போ ஒண்ணும் கிடையாது. டாக்டர் குமரன் கொடுத்த மருந்துல சரியாப் போயிட்டு.”

“இந்தா பாருப்பா! நீ எந்த டாக்டர வேணுமுன்னாலும் பேசு. ஆனால் டாக்டர் குமரனைப் பத்தி மட்டும் பேசாத பத்தி எரியுது! டாக்டரய்யா அவன்? ரெண்டு மாத்திரையைக் கொடுத்து நோயை அடக்குவானே தவிர, அப்புறப்படுத்த மாட்டான். தன்ன எல்லாரும் கைராசிக்காரன்னு சொல்லணுங்கறதுக்காக, நோய் சுகமாகும் முன்னாலேயே சுகமாயிட்டுன்னு சொல்றவன். சுகமில்லாத டாக்டர். இனிமேல் அவன் பேச்சை பேசாத சரி! எல்லாரும் ரெடியாகுங்க. திருவள்ளுர்ல நர்ஸிங்ஹோம் வச்சிருக்கிற டாக்டர் மாதவன்கிட்ட போகலாம். நல்ல ராசிக்கார மனுஷன். மருந்து கொடுக்கு முன்னாலயே நோய் சுகமாயிடும். நோய சொல்லிக்கிட்டு இருக்கும் போதே மருந்த எழுதுவாரு அவ்வளவு சீக்கிரமாய் கண்டு பிடிக்கவரு” மணி இறுதியாக இடைமறித்தான்.

“நீங்க செக்கப் பண்ணப் போறதே தப்பு. அதுவும் மாதவன்கிட்ட போறதவிட, மரணத்துக்கிட்ட போவலாம். சுத்த அம்போக்கு மனுஷன். அவ்வளவுதான் நான் சொல்லுவேன். அப்புறம் உங்க இஷ்டம்.”

“எங்க இஷ்டமுன்னு தெரியுதுல்லா, பிறகு எதுக்குய்யா கிளிப்பிள்ள மாதிரி சொல்லிக்கிட்டே இருக்கியரு: ஒம்ம வேலய பாத்துக்கிட்டு போவீரா...”

கம்பவுண்டர் மணி போனான். தனக்கு அங்கே வேல இல்லை என்பதைப்போல் போய்விட்டான். ராமபத்திரன் எல்லோரையும் அதட்டுவதுபோல் பார்த்தார். பெண்கள் உடைமாற்றப் போனார்கள். ஆண்கள் கை கழுவப் போனார்கள். அந்த வீட்டுக் கிழவர் மட்டும் எதுவும் புரியாமல் எதிர்த்துப் பேசவும் முடியாமல், மணிமேகலையைப் பார்ப்பதும் மற்றவர்களைப் பார்ப்பதுமாக இருந்தார்.

ஒரு மணி நேரத்தில் எல்லோரும் ரெடியானார்கள். மாமியார்க்காரி, மணிமேகலையைப் பார்த்து ‘வீட்ட பாத்துக்கம்மா’ என்றாள் எதுவும் நடவாததுபோல. மணிமேகலையும் தான் ஒன்றும் பாதிக்கப்படவில்லை என்பதைக் காட்டும் வகையில் “சமைச்சு வைக்கட்டுமா?” என்றாள். உடனே லட்சுமி பதறியடித்து “திருவள்ளுர்லயே சாப்பிட்டுட்டு வந்துடுறோம். பாவம் ஒனக்கு எதுக்குச் சிரமம்?” என்றாள்.

எல்லோரும் காரில் ஏறிக்கொண்டார்கள். கிழவர், பேசாமல் உட்கார்ந்திருந்தார். ராமபத்திரன் வந்து “ஒமக்காகத்தான் மச்சான் டாக்டர்கிட்டயே கூட்டிக்கிட்டு போறேன். நீரு நூறு வருஷம் வரைக்கும் வாழ வேண்டாமா?” என்று ராகம் போட்டுச் சொல்லிக்கொண்டே, அவரது கையைப் பிடித்து ஆளைத் துக்கினார். கிழவர் ஒரேயடியாகத் தலையாட்டிவிட்டார்.

“விடும்வே... விடும்வே... ஒம்ம கை என்மேல படப்படாது. விடும்வே. பாழாப் போற காளியம்மா என்னை உயிரோட வச்சிருக்காளேன்னு சந்தோஷப்பட்டேன். இப்போதான் அவளோட மாய்மாலம் எனக்குப் புரியுது. இவ்வளத்தையும் நான் கண்ணால பார்க்கணு முன்னு விட்டு வச்சிருக்காள். விடும்வே. என்னைத் தொட் டால், ஒம்ம கையில கரையான் அரிக்கும். விடும்வே!”

இதுவரைக்கோ அல்லது இப்போதைக்கோ, கரையான் அரிக்காத கைகொண்ட ராமபத்திரன் அவரை விட்டு விட்டார். மற்றவர்களுக்கு அவரைக் கூப்பிடத் தைரியமில்லை. ஜெயராஜ் டிரைவர் இருக்கையில் அமர்ந்தான். திடீரென்று பாமா, “இந்திராவக் காணல! இந்திராவக் காணல!” என்றாள்.

சங்கரன் காரிலிருந்து இறங்கி இந்திராவைத் தேடி னான். பின்கதவைத் தட்டினான். கதவு உடைபடும் அளவுக்குத் தட்டப்பட்டதால், முருங்கை மரத்தில் சாய்ந்து கொண்டிருந்த இந்திரா கதவைத் திறந்தாள்.

“அம்மாவை ஸ்பெஷலா கூப்புடனுமோ?” என்று சங்கரன் ஸ்பெஷலாய் கத்தினான்.

“நான் வரல. எனக்கும் வரல. நீங்க போங்க.”

“ஏய்!”

“போண்ணா... அண்ணிக்கு நான் துணையாய் இருக்கணும்!”

“ஏய் !”

“மாமா பேச்ச கேட்டு நீதான் ஆடுற. நான் எதுக்காவ ஆடணும்? நான் அண்ணிகிட்ட இருப்பேன். அண்ணி கிட்டேயே இருப்பேன்!”

அவ்வளவுதான்.

சங்கரன் அவள் தலைமுடியைப் பிடித்து கைக்குள் பந்துமாதிரி சுருட்டி வைத்துக்கொண்டு, தோளிலும் முதுகிலும் புறநாநூற்று வீரன்போல் குத்திக்கொண்டே, அவளைத் தரதரவென்று கால்கள் தரையில் படும்படி இழுத்து காருக்குள் தொப்பென்று போட்டான். அவள் கதறக் கதற, அந்த சத்தத்தை அடக்குவதுபோல், கார் சத்தம் போட்டது. அங்கே அப்போது வந்த வசந்தியும் காரில் ஏறிக்கொண்டாள். வழியில் இறங்குகிறாளோ வழிகாட்டப் போகிறாளோ?

வரவேற்பு அறைக்கு முன்னால் கைக்குழந்தையுடன் காரையே வெறித்துப் பார்த்துக்கொண்டு நின்றாள் மணிமேகலை. ஜெயராஜ் திடீரென்று காரை ‘ஆப்’ செய்துவிட்டு, மணிமேகலையை நெருங்கி குழந்தையைப் பிடித்தான். பிறகு இழுத்தான்.

மணிமேகலை ஒரு கணம் யோசித்தாள். கொடுக்கலாமா, வேண்டாமா? கொடுத்துடலாம். பிள்ளையாவது, தன் பிள்ளை என்கிற ஞாபகம் இருக்கே!

ஜெயராஜ், தன் மகனுடன் காருக்குள் போய், அண்ணன் அமர்ந்த இடத்தில் உட்கார அவன் டிரைவர் இருக்கையில் உட்கார, இதனால் கணவனருகே இருந்த லட்சுமி பின்னால் வர, பின்னாலிருந்த வசந்தா, ஜெயராஜின் அருகே வர, கார் புறப்பட்டது. நிற்காமலே புறப்பட்டது.

இந்திரா ஏங்கி ஏங்கி அழ, பலவந்தமாக பிடுங்கப்பட்ட பையன் கதற, கார் போய்விட்டது.

காரையே வெறித்துப் பார்த்தாள் மணிமேகலை. மனிதர்கள் இப்படி மாறிவிட முடியுமா? அன்பு, பாசம் என்பது போலிதானா? அவள் ஆகாயத்திற்குள் ஒளிந்து கொள்ளப் பார்த்தாள். பாதாளத்திற்குள் பதுங்கிக் கொள்ளப் பார்த்தாள். கைகால்கள் வேர்த்தன. உச்சந்தலை வலித்தது. உணர்வுகள் நெஞ்சுள்ளே கனத்தன.

எண்ணங்கள் இதயத்தைப் பாம்புகள் போல் கெளவின. எண்ணப் பாம்புவாய்ப் பட்ட இதயத் தவளை படபடக்க, கால்கள் பூமியில் படாமலே பட, கைகள் சுவரைப் பிடிக்காமலே பிடிக்க, அவள் நடக்காமலே நடந்து, அறைக்குள்ளே தன்னையறியாமலே தாவி கட்டிலில் விழுந்தாள். அதை பாடையாக நினைத்துக்கொண்டு பிணம்போல் விழுந்தாள்.

ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, அந்தப் பிணம் எழுந்தது.

வெளியே கதவைத் தட்டுஞ் சத்தங் கேட்டு வந்தாள். மணி நின்றுகொண்டிருந்தான். “இந்தாங்க மாத்திரை. மொத்தம் முப்பது இருக்கு, ஒங்கள அனாதை மாதிரி விட்டுட்டுப் போறதை நினைத்தால்...”

மணிமேகலை அவனை நிமிர்ந்து பார்த்தாள். என்னதான் என்றாலும், அவன் அன்னியன். விட்டுக் கொடுத் தால் அப்புறம் விடுபட முடியாது. காலையில் இவனிடம் கணவரிடம் சொல்லும்படிச் சொல்லியிருக்கக் கூடாது.

அவள் பிராயச்சித்தம் செய்தாள். “குடும்பமுன்னா ஆயிரம் இருக்கும். புத்தர், சாவாத வீட்ல கடுகு வாங்கிட்டு வாங்கன்னு சொன்ன கதைதான். வீட்டுக்கு வீடு வாசல்படி, அதோட செக்கப் பண்ணிக் கொள்றதுல தப்பில்ல. அவங்க மேல தப்பில்ல...”

“தப்பில்லதான். அதுக்காக இப்படியா ஆர்ப்பாட்டம் செய்யுறது ?”

“போகட்டும். திருவள்ளுர் டாக்டர் மாதவனா. ஆமாம். மாதவன்தான் அவரப்பற்றி அப்போ ஏதோ சொன்னிங்க போலுக்கு ?”

“ஆமா. அவன் சுத்த அம்போக்கு, டாக்டர் குலத்துக்கே அவன் ஒரு விதிவிலக்கு முன்னால கள்ளப்பபிள்ளியளை... நர்ஸிங்ஹோம்ல கழிச்சிக்கிட்டு இருந்தான். இதுல ஏகப்பட்ட காசு சேர்த்தான். இப்போ, அபார்ஷன லீகலைஸ் பண்ணிட்டதால பிழப்புக்கு என்னடான்னு பார்த்தான். அவனுக்கும் கிடைக்குது. ஒரு முள்ளு குத்திட்டால் போதும். ‘அய்யய்யோ! ஸெப்டிக்காயிட்டு. பெட்ல நாலு நாளைக்கு இருக்கணுமுன்னு’ சொல்லி, ஒட்டை ரூம்ல போட்டு, தினம் பதினைஞ்சு ரூபா பிடுங்கிடுவான். நர்ஸிங் ஹோம நடத்துறதே வாடகைக்கு விடத்தான். இந்த லட்சணத்துல, இவன் ஆஸ்பத்திரில வேற ஹானரரி சர்ஜன். ஆஸ்பத்திரி மருந்த எடுத்து நர்ஸிங் ஹோம்ல போடுவான். ஆஸ்ப்ரோ மாத்திரையை, அடை யாளம் தெரியாம துளாக்கி, பொட்டலம் போட்டு ஒவ்வொரு பொட்டலத்தையும் ஒரு ரூபாய்க்கு விக்கிறவன். முள்ளு குத்துன இடத்த மூனுநாள் ‘அப்ஸர்வ்’ பண்ணணுமுன்னு சொல்றவன்.”

“அவ்வளவு மோசமானவரா?”

“வேணுமுன்னா பாருங்களேன்! ஒங்க ஆட்கள எவ்வளவு தூரம் காப்ராபடுத்தப் போறான்னு... ‘மாதம் ஒரு தடவ, கண்டிப்பா வரணு’முன்னு சொல்லப் போறான் பாருங்க. இந்த டாக்டருக்கு, காச பிடுங்குறதுக்கே ஒரு டாக்டரேட் கொடுக்கலாம்.”

மணிமேகலை உதட்டைக் கடித்துக்கொண்டே எதையோ யோசித்தாள். மணி, கேள்விக்கு மேல் கேள்வியாகக் கேட்டான்.

“சாப்பிட்டிங்களா?”

பதிலில்லை.

“கவலப்படாதிங்க.”

“....................”

“போகட்டுமா ?”

“உம்....”

கம்பவுண்டர் வாலிபன் போய்விட்டான்.

மாலைப் பொழுதும் அவளைப்போல் மயங்கி, அவள் முகம்போல் இருண்டது.

மணிமேகலை ஸ்விட்சைப் போட்டாள். அவசரக் கோலத்தில் புடவைகளை அங்கங்கே போட்டிருந்தார்கள். அவற்றை எடுத்து ஒழுங்குபடுத்தினாள். பூட்ஸ்களோடு போன கால்கள் கழட்டிப் போட்ட செருப்புகளை எடுத்து சட்டப் பலகையில் வைத்தாள். வராந்தாவில் எதுவும் கீழே கிடக்கிறதா என்று பார்த்த போதுதான், அவளுக்கு மாமனார் ஞாபகமே ஏற்பட்டது. உடனே அவசர அவசர மாக, ஹார்லிக்ஸ் கலந்து மாமாவிடம் கொண்டு வந்தாள்.

சாய்வு நாற்காலியில் உட்கார்ந்திருந்த கிழவர், டம்ளரை மெளனமாக வாங்கிக் கொண்டார். மணி மேகலை குத்துக்காலிட்டு உட்கார்ந்து அவரது கால்களைப் பிடித்துவிட்டாள். முட்டிகளை தேய்த்துவிட்டாள்.

அவளையே பார்த்த அந்த கிழவரின் உதடுகள் துடித்தன. வார்த்தைகள் அவரது வயதையும் மீறிய வலுவோடு வந்தன.

“பாவி மகளே! நீ வாழ்ந்த அருமை என்ன, வாழ்விழந்த கொடுமை என்ன ? ஈ எறும்பயும் மிதிக்காம பாத்து நடக்கும் உன்னை, ஈ எறும்பு மாதிரி மிதிக்காங்களே. நீ ஒண்ணு சேர்த்த மனுஷங்களே ஒன்னைத் தனியாய் பிரிச்சி வச்சிட்டாங்களே. ஆண்டவா ! இதையும் நான் பார்த்துகிட்டு இருக்கணுமாடா? இன்னுமாடா நான் இருக்கணும்? இன்னுமாடா நான் இருக்கணும்? வாழ்ந்ததுலயும் கணக்கில்லாம, செத்ததுலயும் கணக்கில்லாம போயிட்டாளடா! போயிட்டாளடா !”

மணிமேகலை குழந்தையானாள். அந்தக் கிழவரின் கால்களைக் கட்டிக்கொண்டே “மாமா... மாமா...” என்றாள். பிறகு, அவர் கைகளை எடுத்துக் கண்களில் ஒற்றிக் கொண்டே “அப்பா! அப்பா !” என்றாள். அவர் நெற்றியில், தன் நெற்றியைத் தேய்த்துக்கொண்டே “அம்மா அம்மா” என்றாள். அவரைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டுக் கொண்டே “ஆண்டவா! ஆண்டவா!” என்றாள்.