உள்ளடக்கத்துக்குச் செல்

இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்/10

விக்கிமூலம் இலிருந்து

இராமானுஜருடைய இருதயம் விசாலமானதாக இருந்தது. தாழ்த்தப்பட்ட மக்களுக்காக அவர் பச்சாதாபப்பட்டு வருந்தினார். அவர்களுடைய பழைய அனுஷ்டானங்களையும் பழக்க வழக்கங்களையும் இயன்றவரையில் பரிசுத்தப்படுத்தி புதியதாக்கி ஆதரித்தார். அதே சமயத்தில் உயர்ந்த ஆத்மீக சாதனைகளையும் பிராமணர்களிடமிருந்து பறையர்கள்வரை அனைவருக்கும் உரிமையாக்கினார். இதுதான் இராமனுஜர் செய்த அரும்பணி. இப்பணி வட இந்தியா முழுவதும் முஸ்லிம்கள் ஆட்சியின் போதே பரவியது எனலாம்” எனக் குறிப்பிட்டுள்ளார் விவேகானந்தர்.

இதிலிருந்து ஹிந்து சமயச் சீர்திருத்தத்துக்கு, பக்தி இயக்க எழுச்சிக்கு இஸ்லாமும் இஸ்லாமியர் ஆட்சியும் பெருந்துணையாயமைந்து, இந்த நாட்டில் ஏற்றத் தாழ்வற்ற சமத்துவ சமுதாயம் உருவாக நேர்முகமாகவும் மறைமுகமாகவும் உதவிவந்ததை விவேகானந்தர் சுட்டிக்காட்டுவதன் மூலம் நம்மால் உணர்ந்து தெளிய முடிகிறது.

அதுமட்டுமல்ல சமய சுதந்திரத்தைப் பேணிக் காப்பதிலும் சமூக ஒருமைப்பாட்டை உருவாக்குவதிலும் முஸ்லிம் ஆட்சி எத்தகைய பங்காற்றியுள்ளது என்பதை ‘கிழக்கும் மேற்கும்’ என்ற நூலில் விவேகானந்தர் விவரிக்கும்போது,

“மதத்தின் கதவுகளைத் தொடாமல் திறந்தே வைத்திருக்க வேண்டும். தொடக்கூடாது... முகம்மதிய சாம்ராஜ்ஜியம் நம் நாட்டில் நீண்ட காலத்திற்கு எவ்வளவு வலிமையுடனும் திண்மையுடனும் விளங்கிற்று என்பதை எண்ணிப் பாருங்கள். இதற்கு என்ன காரணம்? அவர்கள் (முஸ்லிம்கள்) நம் மதத்தில் தலையிடாததுதான். சொல்லப் போனால் இந்துக்களே முகம்மதியப் பேரரசிற்குப் பெரும் ஆதாரமாக, தாங்கும் தூண்களாக விளங்கினார்கள் எனலாம். ஜஹாங்கீர், ஷாஜஹான், தாராசிகோ போன்ற முகலாய மன்னர்கள் ஹிந்து அன்னையர்களுக்குப் பிறந்தவர்கள்தாம்...” எனக் கூறுவதிலிருந்து இந்தியாவை ஆண்ட முஸ்லிம் மன்னர்கள் யாரும் ஹிந்து சமய விவகாரங்களில் தலையிடவில்லை என்பதும் ஹிந்து சமய பக்தி இயக்கங்கள் தோன்றவும் அதன் செயல்பாடுகள் வெற்றி பெறவும் பெருந்துணையாய மைந்தனர் என்பதும் தெளிவாகிறது. இதை மேலும் உறுதிப்படுத்தும் வகையில்,

“இந்தியாவில் முஸ்லிம்களிடையே ஏழை எளிய மக்கள் அதிகமாக இருப்பதற்குக் காரணம் என்ன? வாள் கொண்டு மதமாற்றம் செய்தார்கள் என்பது அறிவீனமாகும். புரோகிதர்களிடமிருந்தும், பண்ணையார்களிடமிருந்தும் விடுதலை கிடைக்கும் பொருட்டே ஏழை எளிய மக்கள் இஸ்லாத்தைத் தழுவி இருப்பார்கள் என்று தோன்றுகிறது,” எனக் கூறுவதோடமையாது அதற்கான சிறப்புக் காரணத்தையும் கண்டறிந்து கூறுகிறார் விவேகானந்தர்,

“இனத்தையும் நிறத்தையும் கடந்து முஸ்லிம்கள் காட்டுகின்ற, கடைப்பிடிக்கிற முழுமையான சமத்துவத்திலேதான் இவர்களின் சிறப்பு இருக்கிறது.”

விவேகானந்தரின் இக்கருத்துகள் இஸ்லாமிய மார்க்கத்தின் வெற்றி ரகசியங்களை, முஸ்லிம்களின் சமய உணர்வுக்கப்பாலும் கடைப்பிடிக்கப்பட்டு வரும் மனிதாபிமான செயற்பாடுகளையும் உணர்த்துவதாயுள்ளது.

தேசியப் பண்பாடும் சமயப் பண்பாடும்

கலை, கலாச்சாரத்தன்மைகளை உட்கொண்ட ஒன்றே ‘பண்பாடு’ என அழைக்கப்படுகிறது. சமயப் பண்பாடு என்பது அவரவர் பின்பற்றும் சமய ஆச்சாரத்தின் அடிப்படையில், ஆன்மீக உணர்வூட்டமாக அமைந்துள்ள ஒன்றாகும். தேசியப் பண்பாடு என்பது சமயச் சடங்கு முறைகளுக்கும் சமயப் போக்கிற்கும் அப்பாற்பட்ட நிலையில், சமுதாயத்தவர் எல்லோருக்கும் பொதுவாயமைந்துள்ள, சமயச் சார்பற்ற பொதுப் பண்பாடாகும்.

ஒவ்வொரு சமயப் பண்பாடும் அச்சமயத்தின் உட்கிடக்கைக்கிணங்கவே அமையும். அது இயல்பும்கூட. இருப்பினும் சமயப் பண்பாடானது தேசியப் பொதுப் பண்பாட்டின் கூறுகள் பலவற்றை தன்னுட் கொண்டதாக அமைவதும் தவிர்க்க முடியாததாகும். இந்திய முஸ்லிம் பண்பாடும் அரேபிய முஸ்லிம் பண்பாடும் ஒரே சமய அடிப்படையைக் கொண்டிருப்பினும் அவற்றிடையே குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இருக்கவே செய்கின்றன. இந்தியக் கிருஸ்துவப் பண்பாட்டிற்கும் ஐரோப்பிய கிறிஸ்துவப் பண்பாட்டிற்குமிடையே குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உண்டு. இஃது அவ்வப்பகுதி மக்களின் தேசியப் பண்பாடுகளின் தாக்கத்தால் அமைவதாகும். இது தவிர்க்க முடியாததும்கூட. ஹிந்து சமயப் பண்பாடும்கூட ஒரே நாட்டிற்குள், அவ்வப்பகுதி சமூகப் பொதுப்பண்பாட்டின் தாக்கத்திற்கேற்ப மாறுதலைப் பெற்றே வழங்கி வருகின்றன என்பது எண்ணிப் பார்க்கத் தக்கதாகும். சிலசமயம் சமூகப் பண்பாடுகளில் மதப் பண்பாடுகள் செல்வாக்குச் செலுத்துவதும் உண்டு.

ஒவ்வொரு மதத்தவரும் அவரவர் சமயத்தைச் சார்ந்த கலை, ஆச்சார, பண்பாடுகளை முழுமையாகப் பேணி நடக்க முழு உரிமை பெற்றவராவார். அதனை மாற்றுச் சமயத்தவர் மதித்து நடக்க வேண்டியது இன்றியமையாக் கட்டுப்பாடு ஆகும். ஆயினும், தத்தமது சமயச் சார்பான கலை, ஆச்சாரங்களை பிறரும் பேணி நடக்கத் தூண்டும் வகையில் நேரடியான அல்லது மறைமுகமான தூண்டுதல்கள் செய்வது ஏற்றுக் கொள்ளத்தக்கதன்று. இச்செயல் சமய சகிப்புத் தன்மை அல்லது சமய நல்லிணக்கப் போக்கு வளர்வதற்கு வளமான வழியாக அமைய இயலாது என்பதை நாம் நன்கு உணர்தல் வேண்டும்.

‘எனவே, அவரவர் சமயப் பண்பாடு அவரவர் சமயத்தவர்கட்கு’ என்பதே ஏற்றுக் கொள்ளத்தக்க இனிய போக்காக அமைய இயலும். இதற்கு வாய்ப்பளிக்கும் வகையில் எல்லோருக்கும் பொதுவான சமுதாயமும் அதை ஆட்சி செய்யும் பொது அரசும் சமயச் சார்பற்ற தன்மையை அடித்தளமாகக் கொண்டு இயங்க வேண்டியது இன்றியமையாததொன்றாகும். இதைக் கருத்தில் கொண்டே நம் நாட்டின் மிகப்பெரும் தேசியத் தலைவர்கள் சமுதாய-சட்ட மேதைகள் நாட்டின் அரசமைப்புச் சட்டத்தை வகுக்கும்போது, சமயச் சார்பற்ற தன்மையை அரசின் அடித்தளக் கொள்கையாக அறிவித்தார்கள். இதன் மூலம் அவரவர் தனிவாழ்வில் அரசோச்சம் பல்வேறு மதங்களும் சமயச் சடங்கு, சம்பிரதாயங்கள் பொது வாழ்வான சமுதாய வாழ்வை பாதிப்பதே இல்லை. அதைப் பற்றி சற்று ஆராய்வோம்.

மதச் சார்பின்மைக் கொள்கையின் உட்பொருள்

நமது இந்திய அரசமைப்புச் சட்டம் பல தனித்தன்மை வாய்ந்த சிறப்புக்களுடையதாக விளங்குகிறது. அவற்றுள் குறிப்பிடத்தக்க ஒன்று ‘செக்குலரிஸம்’ என அழைக்கப் படும் ‘சமயச் சார்பின்மை’க் கொள்கையாகும்.

பல இனங்களையும் பல மதங்களையும் உடைய நாடாக இந்தியா அமைந்திருப்பதால் ‘இந்திய அரசின் மதம்’ என எதனையும் ஏற்க வேண்டிய அவசியமில்லை என அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள் ஒரு மனதாகக் கருதி, ‘சமயச் சார்பின்மை’க் கொள்கையை அரசமைப்புச் சட்டத்தில் இடம் பெறச் செய்தார்கள். இதன் மூலம் இந்தியாவில் உள்ள அனைத்துச் சமயங்களையும் அவற்றைப் பின்பற்றுபவர்களையும் சமமாகப் பாவிப்பதும் நடத்துவதும் இக்கொள்கையின் அடிப்படை நோக்கமாகும்.

மதச் சார்பின்மை கொள்கை பற்றி 7.8.1952 அன்று மாநிலங்களவையில் கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்கள் கூறிய கருத்து மேலும் தெளிவூட்டுவதாக அமைந்துள்ளது.

“ஒரு மதச் சார்பற்ற அரசு என்றால் என்ன? எந்த ஒரு மதத்திற்கும் எதிரானதல்ல. மதச்சார்பற்ற தன்மை என்பது, எந்த ஒரு மதத்தையும் இந்த அரசு பின்பற்றவில்லை என்பதுதான் அதன் பொருள். இத்தகைய அரசு எந்த ஒரு மதத்தையும் ஆதரிக்கவில்லை அல்லது எதிர்க்கவில்லை என்பது தான் அதன் உட்பொருள். எந்த ஒரு மத விவகாரங்களிலும் தலையிடுவது மதச் சார்பற்ற அரசின் வேலையல்ல, எல்லா மத விவகாரங்களிலும் அது நடுநிலை வகிக்க வேண்டும்” என்ற காயிதே மில்லத்தின் கருத்து மிகக் தெளிவாகவும் திட்பமாகவும் சமயச் சார்பின்மைக் கொள்கையை விளக்குகிறது.

இந்திய நாட்டில் வாழும் சிறுபான்மை இஸ்லாமியச் சமுதாயத்தினர் மதச்சார்பற்ற நம் அரசிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை 3-8-1951 ஆண்டில் லோக் சபையில் தலைவர் காயிதே மில்லத் அவர்கள் மிகத் தெளிவாக,

“ஒரு விஷேசமான சலுகைகளையோ, அதிகப்படியான அனுகூலங்களையோ, சிறுபான்மை மக்களாகிய நாங்கள் கேட்கவில்லை. நமது தாய்நாட்டில் பெரும்பான்மை சமயத்தினர் என்னென்ன உரிமைகளையும் சலுகைகளையும் அனுபவிக்கிறார்களோ, அத்தகைய சலுகைகளும் உரிமைகளும் எங்களது எண்ணிக்கைக்குத் தகுந்தவாறு எங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்றே நாங்கள் எதிர்பார்க்கிறோம்,” எனக் கூறியதன் மூலம் உலகெங்கும் பல்வேறு நாடுகளில் சிறுபான்மையினராக வாழும் மக்கள் எதை அந்தந்த அரசுகளிடமிருந்து எதிர்பார்க்கிறார்களோ அதையே தான் இஸ்லாமியர்களாகிய இந்திய முஸ்லிம்களும் எதிர்பார்க்கிறார்கள் என்பதைத் தெளிவாக, அதே சமயத்தில் அழுத்தந் திருத்தமாக இஸ்லாமிய நெறி வழி கேட்கிறார் காயிதே மில்லத் அவர்கள்.

இதே நிலையை கிருஸ்தவ, பௌத்த சிறுபான்மைச் சமயத்தவர்கட்கும் பொருந்தும் என்பது சொல்லாமலே பெறப்படுகிறது.

இந்தியாவில் 600 ஆண்டுக்கால முஸ்லிம் ஆட்சியில் தாங்கள் முற்றாகப் பேணி பின்பற்றி வந்த ஷரீயத் சட்டங்களை ஹிந்து சமயம் போன்ற பிற சமய மக்களிடம் திணித்ததாக வரலாறே இல்லை. இங்கு மட்டுமல்ல ஸ்பெய்ன் வரை பரவிய முஸ்லிம்களின் ஆட்சி அதிகாரத்துக்குட்பட்ட பகுதிகளில் வாழ்ந்த கிருஸ்தவர்கள், யூதர்கள் போன்ற பிற சமயத்தவர் மீதும் இம்மியளவு கூடத் திணித்ததாக, திணிக்க முயன்றதாக எந்த வரலாற்றுக் குறிப்பும் இல்லை. காரணம், அவ்வாறு ஆட்சியாளர்களோ பிறரோ திணிக்க முயல்வதையே இஸ்லாம் கடுமையாகத் தடுக்கிறது. அவரவர் மதச் சம்பிரதாயப்படி வாழ முழுமையாக அனுமதிக்க வேண்டும் எனப் பணிக்கிறது. “அவர்கட்கு அவர்கள் மதம், நமக்கு நம் மார்க்கம்” என்பது திருமறை தரும் கட்டளையாகும். இதே முறைதான் தொடர வேண்டும் எனச் சிறுபான்மையினரான இந்திய இஸ்லாமியச் சமயத்தவரான முஸ்லிம்கள் விரும்புகிறார்கள்.

எது சிறந்த வீடு? நாடு?

ஒரு சமயம் நாயகத் திருமேனி அவர்கள் தன் தோழர்களை நோக்கி, “எது சிறந்த வீடு தெரியுமா?” எனக் கேட்டார்கள். பதில் கூற இயலாத நபித் தோழர்கள், அண்ணலாரிடம் அதற்கு விடை கூறுமாறு வேண்டினார்கள். அதற்குப் பதில் தர முனைந்த நபிகள் நாயகம் (சல்) அவர்கள், “எந்த வீட்டில் ஒரு அனாதைக் குழந்தை தான் ஒரு அனாதை என்ற உணர்வே இல்லாது அன்போடும் அரவணைப்போடும் இருக்கிறதோ, அந்த வீடுதான் சிறந்தது” என்று கூறினார்கள்.

அதேபோன்று எந்த நாட்டில் வாழ்கின்ற மத, இன, மொழிச் சிறுபான்மை மக்கள் தாங்கள் சிறுபான்மையினராக உள்ளோம் என்ற உணர்வே இல்லாது முழுப் பாதுகாப்போடும் சமத்துவத்தோடும் வாழ்கிறார்களோ அந்த நாடுதான் சிறந்த நாடாக இருக்க முடியும். நம்நாடு அத்தகைய சிறந்த நாடாக சமத்துவமிக்க ஜனநாயக நாடாக திகழ வேண்டும் என்பதுதான் நல்லுள்ளம் படைத்தோரின் பெரு விருப்பம்.

உலக ஒருமைப்பாட்டிற்குக் கட்டியம் கூறும்
பெருமானாரின் இறுதிப் பேருரை

நபிகள் நாயகம் (சல்) அவர்களின் இறுதி ஹஜ்ஜின் போது அரஃபாத் பெருவெளியில் ஆற்றிய இறுதிப் பேருரை மனித குல ஒற்றுமைக்கும் உலக ஒருமைப்பாட்டிற்கும் என்றென்றும் வழிகாட்டும் ஒளி விளக்காகவே அமைந்திருக்கிறதெனலாம்.

“ஓ மனிதர்களே! உங்களுடைய இறைவன் ஒருவனே! உங்கள் மூலப் பிதா ஆதாம் (அலை) அவர்களும் ஒருவரே! அரபிகள், அரபிகள் அல்லாதவர்களைவிட எந்த விதத்திலும் சிறந்தவர்கள் அல்ல. அதுபோல அரபி அல்லாதவர்களிலும் வெள்ளையர்கள் கறுப்பர்களைவிடச் சிறந்தவர்கள் அல்ல. ஆனால், உங்களில் ஈமானிலும் (இறை நம்பிக்கை) ஒழுக்கத்திலும் யார் உயர்ந்தவர்களோ அவர்களே உண்மையில் உயர்ந்தவர்கள். ஒரு மனிதன் மற்றொரு மனிதனைவிட - ஒரு நாட்டான் மற்றொரு நாட்டானைவிட, ஒரு நிறத்தான் வேறு நிறத்தானைவிட எந்த விதத்திலும் சிறந்தவன் அல்ல.”

பெருமானாரின் இந்த இறுதிப் பொழிவில் வெளிப்படும் அறிவிப்பானது மனித சமத்துவத்தையும் உலக ஒருமைப்பாட்டையும் என்றென்றும் கட்டிக்காக்கும் சங்க நாதமாக அமைந்து அவனிக்கு வழிகாட்டிக் கொண்டுள்ளதெனலாம்.

சமயச் சாயம் பூசப்படும்
தனிப்பட்டோர் விருப்பு வெறுப்புகள்

சாதாரணமாக இரு சமயங்களைச் சார்ந்தவர்களிடையே தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் ஏதேனும் தகராறு ஏற்பட்டால் அதை இரு தனிப்பட்ட மனிதர்களிடையே ஏற்பட்ட தகராறாக மட்டுமே கருதி செயல்பட வேண்டுமேயல்லாது இரு மதத்தவர்களுக்கிடையேயான மதச் சண்டையாகக் கருதும் போக்கு அறவே ஒழிய வேண்டும். சான்றாக, கரீமும் முருகனும் தனிப்பட்ட முறையில் சண்டையிட்டுக் கொள்ள நேர்ந்தால், தனிப்பட்ட இரு மனிதர்களிடையே ஏற்பட்ட சண்டையாகக் கொண்டு, யார் தவறு செய்தவரோ அவர் தண்டிக்கப்பட வேண்டும். மாறாக கரீமாகிய முஸ்லிமும் முருகனாகிய ஹிந்துவும் சண்டையிட்டுக் கொண்டதாகக் கருதும் போக்கு முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டும். இன, மதக் கலவரங்களுக்கு மத உணர்வு அடிப்படையிலான இப்போக்கே அடித்தளக் காரணமாயமைகின்றது. எந்தவொரு சிறு செயலுக்கும் சமயச் சாயம் பூசும் போக்கு, குழப்பத்துக்கும் வெறுப்புணர்வுக்குமே வழியாயமைகிறது. தனிமனித வாழ்விலும் சமுதாய வாழ்விலும் தாங்கள் சார்ந்த சமயத்திற்குரிய இடம் எது என்பதில் திட்டவட்டமான உணர்வும் சிந்தனையும் இருப்பதில்லை.

சமய அறிவில்லா சமயப் போலிகள்

உண்மையான சமய அறிவும் உணர்வும் உள்ளவர்களால் சமுதாயத்தில் எந்த விதப் பிரச்சினையும் ஏற்படுவதில்லை. இஸ்லாம் உட்பட எந்த ஒரு சமயமும் இத்தகு போக்கை அனுமதிப்பதும் இல்லை. சமய அறிவு இல்லாத சமயப் போலிகளாலேயே சமுதாய வீதியில் குழப்பமேற்படுகிறது. ஒரு ஹிந்துவுக்கு மகனாகப் பிறந்து விட்ட காரணத்தாலேயே இந்துவாக இருப்பவர்களாலும் முஸ்லிமுக்கு மகனாகப் பிறந்துவிட்டதாலேயே முஸ்லிம் என நடமாடி வருபவர்களாலும் ஒரு கிருஸ்தவனுக்கு மகனாகப் பிறந்துவிட்டதால் மட்டுமே கிருஸ்தவனாகக் கருதிக் கொள்பவர்களாலுமே எல்லா சமயச் சண்டைகளும் சச்சரவுகளும் சமுதாயத்தில் ஏற்படுகின்றன. சமயச் சார்புள்ளவர்கட்கு மகனாக பிறந்த இவர்கள் தங்கள் சமய அறிவைப் போதிய அளவு பெறாது, மதப் பெயர் தாங்கிகளாக மட்டும் இருப்பவர்கள். எனவே, உண்மையான சமய அறிவு உள்ளவர்கட்கும் சமய அறிவில்லாது, வெறும் சமயப் பெயர் தாங்கிகளாக உலவுபவர்கட்குமிடையே மாபெரும் இடைவெளியுள்ளது. இந்த இடைவெளியைப் பயன்படுத்தும் சமூக விரோதச் சக்திகள் சமயப் பெயர் தாங்கிகளிடையே உருவாக்கும் சமயவெறி பல்வேறு தீங்குகளுக்குக் காரணமாயமைகிறது.

தனிமனிதனும் சமுதாய மனிதனும்

ஒவ்வொரு மனிதனும் இருவேறு நிலைகளில் இயங்கக் கூடியவனாக இருக்கிறான். ஒன்று தனிமனிதன், மற்றொன்று சமுதாய மனிதன்.

ஒருவன் தன் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கேற்ப, தான் விரும்பியவாறெல்லாம், யாருடைய தலையீடுமின்றி வாழும் தனியுரிமை தனிமனித வாழ்வுக்குண்டு. இதற்கு எல்லா வகையிலும் ஏற்றநிலைக்களனாக அமைவது இல்லமாகும். வீட்டிலிருக்கும்போதோ அல்லது தன்னுடைய தனியுடைமையான இடங்களில் அன்னிய மனிதர்களின் தலையீடே இல்லாமல் வாழக்கூடிய சூழ் நிலைகளில் அவன் எப்படி வேண்டுமானாலும் வாழ முழு உரிமை உண்டு. விரும்பியதை உண்ண, உடுக்க, சமய வழிபாடுகளை, சடங்குகளை நிறைவேற்ற பரிபூரண உரிமை உண்டு.

ஆனால், அவன் தன் வீட்டை விட்டோ அல்லது தனியுரிமை கொண்ட வளாகத்தை விட்டோ வெளியேறி வீதியில் காலடி எடுத்து வைத்தவுடன் அவனது தனிமனித உரிமைகள் கட்டுப்படுத்தப்பட்டு விடுகின்றன. அவன் சமுதாய மனிதனாகி விடுகின்றான். பல்வேறு வகையான மனிதர்கள் உலவும் இடம் சமுதாய வீதி. பலவகை மனிதர்கள் மட்டுமல்லாது பல்வேறு வகையான சமய உணர்வுகளும் சிந்தனைகளும் கருத்துகளும் உலவும் இடமாகவும் சமுதாய வீதி அமைகிறது. அதற்கேற்ப தனிமனித உரிமைகள் கட்டுப்பட்ட நிலையில் அமைய வேண்டியதாகிறது. சுருங்கச் சொன்னால், சாலையில் என் விருப்பப் படி கைத்தடியைச் சுழற்றிச் செல்ல உரிமை உண்டெனினும், பிறர் கண்ணில்படாதவாறு சுழற்றிச் செல்ல மட்டுமே உரிமை உண்டு.

தனிமனிதனுக்கு எவ்வாறு உரிமைகளும் கடமைகளும் உண்டோ அதேபோன்று சமுதாய வீதியில் உலவும் ஒவ்வொரு சமுதாய மனிதனுக்கும் நிறைவேற்ற வேண்டிய கட்டுப்பாடுகள் பல உண்டு. இதைப்பற்றிய தெளிவான உணர்வும் சிந்தனையும் ஒவ்வொருவருக்கும் இல்லாததாலேயே சமுதாயத்தில் அமைதியின்மையும் குழப்பங்களும் சண்டை, சச்சரவுகளும் ஏற்பட ஏதுவாகின்றன. அதிலும், குறிப்பாக தனிமனிதத் தொடர்புள்ள சமயங்களை சமுதாய வீதிக்கு இழுத்து வந்து பிறர் மீதும் திணிக்க முயலும்போதுதான் எல்லா தகராறுகளுமே முளைவிட்டு, கிளைத்துப் படர்கின்றன.

எந்தச் சமயமும் தனி மனிதத் தொடர்புடைய ஒன்றாகத் தான் இருக்கிறது. சமய உணர்வுகளும் தத்துவங்களும் கருத்துகளும் உள்ளம் தொடர்பானவைகளாகும். ஒவ்வொருவரும் எந்த அளவுக்குத் தங்கள் உள்ளத்தில் இறை உணர்வையும் இறைச் சிந்தனையையும் கருத்துகளையும் தேக்கி, செயல் வடிவில் தன் வாழ்வில் நிறைவேற்றி வெற்றி பெறுகிறாரோ அந்த அளவுக்கு அவர் இறைவனின் பேரன்பையும் அதன் மூலம் பேரருளையும் பெற்றுய்ய முடியும் என்பது ஒவ்வொரு சமயமும் உணர்த்தி வருகின்ற உண்மை. இதற்குரிய இடங்களாக ஒவ்வொருவரின் வீடும் இறையில்லமும் சமயச் சார்பான வளாகங்களும் அமைகின்றன. சமயச் சார்பான நடவடிக்கைகளுக்கு உரிய இடம் சமுதாய வீதி அல்ல.

சமுதாய வீதியில் நடமாடும் ஒவ்வொருவரும் சமுதாய மனிதனுக்குரிய உரிமைகளை அனுபவிக்கவும் கடமை களை ஆற்றவும் மட்டுமே முயல வேண்டும். ஒவ்வொரு வரும் தங்கள் சமயச் சார்புகளை திணிக்காமலும் மற்றவர்களின் சமய உணர்வுகளை மதித்தும் நடக்க வேண்டிய இன்றியமையாக் கட்டுப்பாடு ஒவ்வொரு சமுதாய மனிதனுக்கும் உண்டு. உண்மையான சமய உணர்வாளர்களும் சிந்தனையாளர்களும் இத்தகைய போக்கையுடையவர்களாகவே இருக்கிறார்கள். இஸ்லாமும் இதையே வலியுறுத்துகின்றது.

சமயப் பிரச்சினைகளும் தீர்வும்

பல்வேறு சமயங்கள் உலவும் ஒரு நாட்டில், சமயத் தொடர்பாக எழும் பிரச்சினைகள் எதுவாயினும் அஃது சமயத் தலைவர்களாலேயே தீர்க்கப்பட வேண்டுமே யொழிய, சமயத்திற்கு அப்பால் உண்மையான சமய அறிவோ பற்றே இல்லாது இயங்கும் அரசியல்வாதிகளால் அல்ல. இவர்களின் தலையீட்டால் உண்மையான சமய உணர்வுகளும் ஆழிய சமயத் தத்துவக் கருத்துகளும் சிந்தனையும் பாழ்படுத்தப்படுவதோடு அவை கேலிக் குறியவைகளாகவும் ஆக்கப்பட்டு விடுகின்றன. எனவே மன ஒருமைப்பாடும் சமய நல்லிணக்க உணர்வும் உறுதி யாக நிலைபெற, அரசியலை சமயத்தோடு இணைக்கும் போக்குத் தவிர்க்கப்பட வேண்டும் என்பது கடந்த காலம் உணர்த்தும் உண்மையாகும்.

கோயில், மசூதி, சர்ச், விகார், குருத்துவாராக்களை விட்டு சமுதாய வீதியில் கால்வைக்கும் ஒவ்வொருவரும் சமயங் கடந்த இந்தியனாக, ‘எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் ஓர் இனம், எல்லோரும் இந்திய மக்கள், எல்லோரும் ஓர் நிறை, எல்லோரும் ஓர் விலை, எல்லோரும் இந்நாட்டு மக்கள்’ என்ற பாரதி கூறும் வாழ்வியல் நெறிக்கேற்ப வாழ முனைய வேண்டும். இதுவே உண்மையான இந்தியப் பண்பாடு. இதன் மூலமே அனைத்துச் சமயங்களைக் கண்ணியப்படுத்தவும் மனித நேயத்தை வளர்க்கவும் ஒருமைப்பாட்டுணர்வை வளர்க்கவும் வலுப்படுத்தவும் இயலும், இதற்கான ராஜபாட்டையாக அமைந்திருப்பதே இறை வழியாகிய இஸ்லாமிய நெறி முறை.

வேற்றுமையில் ஒற்றுமை

ஒற்றுமையின் அவசியத்தை வலியுறுத்தும் பாவனையில் இந்தியா முழுவதும் ஒரேவிதப் பண்பாடு-இந்துத்துவப் பண்பாடு-பின்பற்றப் படவேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது. ‘ஹிந்துயிஸம்’ வேறு, இந்துத்துவம் வேறு. ‘ஹிந்துயிஸம்’ மதத் தொடர்பான கொள்கை, கோட்பாடு. ‘இந்துத்துவம்’ என்பது மத நெறியல்ல, அரசியல் போக்கு. ஒலிச்சாயலைப் பயன்படுத்திச் செய்யப்படும் குழப்பம். இந்தியா பல இனங்களையும் மொழிகளையும் மதங்களையும் கலை, பண்பாடுகளையும் கொண்ட மிகப்பெரிய நாடு. இவையனைத்தையும் ஏற்றிப் போற்றி மதிப்பதில்தான் இந்திய ஒற்றுமையின் உயிரோட்டமே அடங்கியுள்ளது. ஒன்றுக்கு மேற்பட்ட தங்களைக் கொண்ட எந்த நாட்டிலும் இருவகைப் பண்பாடுகள் இருப்பது இயல்பு. ஒன்று சமயங்கடந்த நிலையில் அனைவருக்கும் பொதுவான சமுதாயப் பண்பாடு. மற்றவை அந்தந்த சமயச் சூழலுக்குள் உருவாகி நிலை பெற்றிருக்கும் சமயப் பண்பாடு. இந்தியாவைப் பொருத்தவரை பாரதப் பண்பாடு சமுதாய வீதியில் உலவும் அனைத்துச் சமயத்தவர்க்கும் பொதுவான சமுதாயப் பண்பாடு. இது சமயச் சார்பற்றது. இந்துத்துவம் என்ற பெயரில் ஹிந்து சமயச் சார்பான ஹிந்துயிஸப் பண்பாட்டை ஒரே பண்பாடாகக் கொண்டு எல்லோரும் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்துவது எல்லா வகையிலும் இந்திய ஒற்றுமைக்கு ஊறுபாடாகவே அமைய முடியுமே தவிர உதவிகரமாக அமையவே முடியாது என்பது வரலாறு புகட்டும் உண்மை. இந்தியாவின் பல்வேறு இன, மொழிகளையும் அனைத்துச் சமயங்களையும் அதன் அடிப்படையிலான கலை, பண்பாடுகளையும் நேசிப்பதன் மூலம், மதிப்பதன் வாயிலாகவுமே இந்திய ஒற்றுமையை வலுப்படுத்த முடியும் என்பது உள்ளங்கை நெல்லிக் கனி. இதற்கேற்ப வேற்றுமையில் ஒற்றுமை காணும் உயர் பண்பு நெறியை போற்றி வளர்க்க முற்பட வேண்டும். ஆற்றல்மிகு இப்போக்கே பல்வேறு இனத்தவர்களிடையே, மொழியினரிடையே, சமயத்தவர்களிடையே நெருக்கத்தை உருவாக்கும்; புரிந்துணர்வைப் போற்றி வளர்க்கும்; ஒற்றுமையை வலுப்படுத்தும்; ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு வழிகோளும். அத்தகு ஆக்கச் சிந்தனைகள் பூத்துக் குலுங்கும் பொன்னாடாக நம் நாட்டை உருவாக்குவோமாக.