இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா/வேற்றுமையில் ஒற்றுமை

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

வேற்றுமையில் ஒற்றுமை

உலகில் கோடானுகோடி மக்கள் பிறக்கிறார்கள்; இறக்கிறார்கள். “நெருநல் ஒருவன் உளன், அவன் இன்று இல்லை எனும் பெருமையுடைத்து இவ்வுலகு” என்று கூறுகிறார் வள்ளுவர். "நேற்று ஒருவன் இருந்தான், அவன் இன்று இல்லை எனும் பெருமையை உடையது இவ்வுலகு” என்பது இக் குறளின் கருத்து. அவர்களுள் ஒரு சிலர் வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து, வரலாற்றில் அழியாத் தடம் பதித்தவர்களாக, வாழும் மக்களின் நினைவில் நிழலாடுபவர்களாக அமைகிறார்கள். அத்தகைய மா மனிதர்களில் ஒருவர் பெயர் மக்களால் நினைக்கப் படுவதற்கு மட்டுமல்லாது, உலக முழுக்க உரத்த குரலில் இருபத்து நான்கு மணி நேரமும் ஒலிக்கப்படுகிறது. அதுவும் இடையறாது ஒலிக்கப்படுகிறது. உலகம் முழுமையும் ஒவ்வொரு விநாடியும் இடைவிடாமல் ஒலிக்கப்படுகிறதென்றால், அது நபிகள் நாயகம் (சல்) அவர்களின் திருப்பெயர்தான் அவ்வாறு ஒலிக்கப்படும் பேறு பெற்ற பெயராக அமைந்துள்ளது.

நாள் ஒன்றுக்கு ஒரு கோடி முறை

நாள் முழுமையும் ஐவேளைத் தொழுகைக்காக பள்ளி

வாசல்கள்தோறும் தொழுகை அழைப்பாக பாங்கு ஒலிக்கப்படுகிறது. ‘அதான்’ எனப்படும் ஒவ்வொரு பாங்கொலியிலும் இருமுறை பெருமானாரின் பெயர் உச்சரிக்கப்படுகிறது. உலகில் குறைந்த பட்சம் பத்து இலட்சம் பள்ளிகளுக்குக் குறையாமல் இருக்கின்றன. அவற்றில் நாளொன்றுக்கு பாங்குக்கு இருமுறையாக, ஐவேளை பாங்குக்கு ஒரு கோடி முறை அண்ணலார் பெயர் உலகில் ஒலிக்கப்படுகிறது. அதுவும் இடையறாமல். எப்படி? இருபத்தியேழு கிலோ மீட்டருக்கு ஒரு விநாடி வேறுபடுகிறது. எனவே, பெருமானாருடைய பெயர் இருபத்தியேழு கிலோமீட்டருக்கு ஒரு விநாடியாக ஒவ்வொரு பள்ளிவாசலிலும் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருப்பதன் மூலம், பெருமானாரின் பெயரும் இருபத்தி நான்கு மணி நேரமும் இடையறாமல் உலகெங்கும் ஒலித்துக் கொண்டேயிருப்பது உலக மகா அதிசயமாகும். அந்த அளவுக்கு அண்ணலாரின் திருப் பெயர் மக்களின் நினைவில் இருந்து கொண்டே இருக்குமளவுக்கு அன்னாரின் புகழ் நிலை பெற்றுள்ளது.

வழிகாட்டும் ஒளிவிளக்கு

பெருமானாருடைய பெயர் மட்டுமல்ல, அவரது வாழ்வும் வாக்கும் உலக மக்கள் அனைவருக்கும் வழிகாட்டும் ஒளி விளக்காகவே அமைந்துள்ளதெனலாம். அண்ணலாரின் வாழ்வும் வாக்கும் நேற்றும், இன்றும் ஏன் நாளைய மக்களின் வாழ்வின் முன்னேற்ற ஆதார சுருதியாக அமையும் பெற்றியைப் பெற்றுள்ளதாகும். இஃது நாம் மட்டுமல்ல, உலக முழுமையும் ஒப்புக் கொண்டுவிட்ட உண்மையாகும்.

வரலாற்றை மாற்றும் வல்லமை

தி ஹன்ரட்’ என்ற ஆங்கில நூலைப் பற்றிக் கேள்விப் பட்டிருப்பீர்கள். அதனை எழுதிய ஆசிரியர் மைக்கேல் ஹெச். ஹார்ட் என்பவர் என் இனிய நண்பர். தங்களுடைய

'

தனித்த செல்வாக்கால் உலகத்தினுடைய வரலாற்றையே ஒட்டு மொத்தமாக மாற்றியமைத்தவர்களில் நூறு பேரைத் தேர்ந்தெடுத்து, அவர்களை வரிசைப்படுத்தும் அருமையான நூல் அது. அதிலே முதலாமவராக அண்ணலார் பெயரைப் பொறித்துள்ளார் என்பதும் நீங்களெல்லாம் அறிந்த செய்திதான். முதலாமவராகத் தெரிவு செய்ததற்கான காரணத்தை விளக்கும்போது, ‘நேற்றைய வரலாறும் அண்ணலாரால்தான் மாறியது; இன்றைய உலக வரலாறும் அவரது செல்வாக்கால்தான் மாறிக் கொண்டுள்ளது. நாளைய உலக வரலாற்றையும் அவரது வாழ்வும் வாக்குமே முற்றாக மாற்றியமைக்கும். அத்தகு வல்லமை மிக்கது அவரது வாழ்வும் வாக்கும்” என்பதை மிகத் தெளிவாகவும் திடமாகவும் கூறுகிறாரென்றால் அந்த அளவுக்கு இறைத்தூதரின் வாழ்வும் வாக்கும் மனித குல முழுமைக்கும் வழிகாட்டும் ஒளி விளக்காகத் திகழத்தக்கதாக இறைவன் அமைத்துத் தந்துள்ளான் என்பதை நாம் உணர்ந்து தெளிய வேண்டும். உலக மாறுதலுக்கும் - மாற்றத்திற்கும் அண்ணலாரே அச்சாணி என்பதை இன்றைய அறிவுலகு புரிந்து கொண்டு வருகிறது.

என்றும் மாறாது

அண்மையில் அந்த நூல் திருத்தப் பதிப்பாக வெளி வந்தது. சிலருடைய பெயர் நீக்கப்பட்டது. கோர்பச்சோவ் போன்ற சிலருயை பெயர் இணைக்கப்பட்டது. இதே போல் காலப் போக்கில் இப்போதுள்ள வரிசை முறை மாறிக் கொண்டே செல்லுமா? என்று கேட்டபோது “மற்றவர்களின் வரிசை முறை வேண்டுமானால் மாறலாமே தவிர, நபிகள் நாயகத்தின் முதன் நிலை எக்காரணம் கொண்டும் மாறாது” எனக் கூறினார் என்றால், பெருமானார் மீது ஹார்ட் கொண்டுள்ள நம்பிக்கை நம்மை வியக்க வைக்கிறது.

இங்கு இன்னொரு செய்தியையும் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். நம்மில் பலரும் மைக்கேல் ஹெச். ஹார்ட் ஒரு கிறிஸ்தவர் என்றே கருதிக் கொண்டுள்ளோம். அவர் கிறிஸ்தவர் அல்லர்; அவர் ஒரு யூதர். ஒரு யூதரின் உள்ளத்தின் அடித்தளத்தில் அண்ணலாரைப் பற்றி இப்படியொரு உயர்வான எண்ணம் அழுத்தம் பெற்றிருக்கிறது என்றால், அந்த உயர்வான உணர்வையும் ஆக்கப்பூர்வமான சிந்தனையையும் எது கொடுத்திருக்கும்?

ஆன்மீகம் மட்டுமே

அண்ணலாருக்கு முன்னதாக ஆதம் (அலை) முதல் ஒரு லட்சத்து இருபத்து நான்காயிரம் நபிமார் உலகெங்கும் எல்லா நாட்டிலும், எல்லா இனத்திலும், எல்லா மொழியிலும் இறை தூதராகத் தோற்றம் பெற்று, வாழ்ந்து வழிகாட்டிச் சென்றுள்ளார்கள் என்பது வரலாறு. அவர்கட்கு முப்பத்தியாறு வேதங்களும் வல்ல அல்லாஹ்வால் அளிக்கப்பட்டுள்ளன என்பது வேத வரலாறாகும். ஆனால் அண்ணலார்வரை வந்த அத்தனை நபிமார்களும் வாழ்வின் ஒரு பகுதியாக அமைந்துள்ள ஆன்மீகத்தைப்பற்றி - அக வாழ்வின் அகமியங்களைப் பற்றி மட்டுமே போதித்துச் சென்றார்கள் என்பது நபிமார் வரலாறாகும்.

ஆன்மீகமும் அறிவியலும் போதித்த அண்ணலார்

ஆனால், அண்ணலார் மட்டுமே இறைக்கட்டளைக் கிணங்க அக வாழ்வுக்கான ஆன்மீகத்தையும் புறவாழ்வுக்கான அறிவியலையும் ஒருசேர போதித்தார் என்பது வள்ளல் நபியின் வரலாறு. அகமும் புறமும் சேர்ந்த முழு வாழ்வுக்கு முழு முன் மாதிரியாக வாழ்ந்து காட்டி, மக்களை வழி நடத்த வேண்டும் என்பது இறையுள்ளம். இதன் மூலம் நபித்துவமும் முழுமையாகப் பரிணமிக்கலாயிற்று.

அனைத்துத் துறைகளிலும்

திருமறையில் 'தங்களில் அழகிய முன்மாதிரி அமைந்துள்ளது' என்று கூறியதற்கொப்ப அண்ணல் நபிகள் நாயகம் (சல்) அவர்கள் வாழ்வின் அனைத்து மட்டங்களிலும் வாழ்ந்து காட்டுபவராயினர். முந்தைய நபிமார்கள் வாழ்வை எண்ணிப் பாருங்கள். அவர்களில் சிலர் கணவராக, தந்தையாக வாழந்ததில்லை; சிலர் ஆட்சித் தலைவராக, இன்னும் சிலர் படை நடத்தும் படைத் தளபதியாக வாழும் வாய்ப்பைப் பெற்றவர்கள் இல்லை. ஆனால், அண்ணல் நபிகள் நாயகம் (சல்) அவர்கள் மனித வாழ்வில் எத்தனை படித்தரங்கள் உண்டோ அத்தனை படித்தரங்களிலும் முழு வாழ்வு வாழ்ந்து முடித்த பெருமை பெருமானாருக்கு உண்டு. .

அன்றும் இன்றும் என்றும்

பெருமானாரின் பெரு வாழ்விலும் அதற்கு ஆதார சுருதியாயமைந்த திருமறையிலும் கூறப்படாத செய்திகள் எதுவுமே உலகில் இல்லை எனலாம். உலகில் அன்று முதல் இன்று வரை ஏன் நாளை தலைதூக்கும் பிரச்சினைகள் அனைத்துக்கும் தீர்வு திருமறையிலும் பெருமானார் பெருவாழ்விலும் காணக் கிடக்கின்றது. இதைத்தான் வியந்து வியந்து பாடுகிறார் தக்கலையின் மிக்க புகழ் மெய்ஞ்ஞானி பீர் முஹம்மது அப்பா அவர்கள். “அறிவு வகை எத்தனை என்று அறிய வகை இல்லை; அத்தனையும் அவன் உரைத்த அருமறையுள் அடக்கம்” என்பது அவர்தம் வாக்கமுதாகும். பீர் முஹம்மது அப்பா மாபெரும் மெய்ஞ் ஞானி. நாமெல்லாம் எண்ணி யெண்ணிப் பெருமைப் படத்தக்க அளவுக்கு உயர்ந்த கருத்துகளை, சிந்தனைகளை, ஆழ்ந்த ஆன்மீக உணர்வுகளை நம்மிடையே பத்தாயிரம் பாடல்கள் மூலம் பரப்பிய மாபெரும் மேதை.

பீரப்பாவைக் காட்டிலும் நமக்கெல்லாம் மிக நன்றாக அறிமுகமானவர் குணங்குடி மஸ்தான்தான். திருமுறை 

தரும் ஆன்மீகக் கருத்துகளையெல்லாம் அவர் கால வழக்குச் சொற்களைக் கொண்டே மதங்கடந்த முறையில், இனங்கடந்த நிலையில் எல்லோர் உள்ளமும் ஏற்கும் வண்ணம் எடுத்துக்கூறிய மாபெரும் ஆன்மீகச் செல்வராவார். குணங்குடி மஸ்தான் எனும் பெயரில் உள்ள குணங்குடி என்பது அவர் ஊரும் அல்ல; மஸ்தான் என்பது அவரது பெயருமல்ல. ‘குணங்குடியார்’ எனக்கூறுவது நற்குணங்களெல்லாம் ஒருங்கே குடிகொண்டிருக்கும் இறைவனைக் குறிக்கும் சொல்லாகும். இறைவனிடத்திலேதான் நற்குணங்கள் அனைத்தும் ஒட்டு மொத்தமாக அமைந்திருக்கும். குணத்தைப் பொறுத்தவரை நாமெல்லாம் குறையுடையவர்கள். அக்குறையை நீக்கிக் கொள்வதற்காகத்தான், இறைநெறியிலே பெருமானார் (சல்) வாழ்ந்து காட்டிய வழிமுறைகளையெல்லாம் தெரிந்து, அந்தக் குறைகளைக் கொஞ்சம் கொஞ்சமாகக் களைந்து, குறையறிந்தவர்களாக நாமெல்லாம் வாழ்வில் உயர முயற்சி மேற்கொண்டு வருகிறோம்.

குணங்குடி என்பது போன்றே ‘மஸ்தான்’ என்பதும் அவரது பெயர் அல்ல. அவரது இயற்பெயர் சுல்தான் அப்துல் காதர் என்பதாகும். பிறகு ஏன் ‘மஸ்தான்’ என்று அழைக்கப்படுகிறார். ‘மஸ்து’ எனும் சொல்லினடியாக அமைந்துள்ளது ‘மஸ்தான்’ என்ற பெயர். மஸ்து என்பது பாரசீகச் சொல்லாகும். அதற்கு 'இறை மயக்கம்’ என்பது பொருளாகும். சூஃபிகளாகிய மெய்ஞ்ஞானிகள் இரவு பகல் எந்நேரமும் இறையுணர்வில் - இறை மயக்கத்திலேயே இருப்பவர்கள். அவர்கள் உள்ளத்தில் எந்நேரமும் இறைச் சிந்தனையே ஒளிர்ந்து கொண்டிருக்கும். அந்த இறை உணர்விலே - இறை மயக்கத்திலே தான் ஆன்மீக ஞானம் பொங்கிப் பொழிய முடியும். ஆகவேதான், அத்தகைய மஸ்தையுடையவர்கள் மஸ்தானாக அழைக்கப்படுகிறார்கள்.

‘மஸ்து’ தந்த மயக்கம்

‘மஸ்து’ பெயரால் உருவாக்கப்பட்ட ஒரு மாபெரும் விபரீதத்தை உங்களிடம் கூறலாம் என எண்ணுகிறேன்.

குணங்குடி மஸ்தானைப் போன்ற ஒரு மாபெரும் பாரசீகச் சூஃபிக் கவிஞர் உமர்கையாம். அவர் உருவாக்கிய ஞான இலக்கியம் ரூபய்யாத்’ பாரசீக மொழியின் மாபெரும் ஞானக் களஞ்சியமாகப் பாராட்டப்படும் படைப்பு. அதிலே ‘மஸ்து’ எனும் சொல்லைப் பல இடங்களில் உமர்கையாம் பயன்படுத்தியுள்ளார். இறைவனைப் பற்றி, இறையுணர்வைப் பற்றி பல அரிய கருத்துகளைத் திறம்படக் கூறியுள்ள அந்நூலை ஆங்கிலப் புலமைமிக்க, பாரசீக மொழியும் ஒரளவு அறிந்த ஃபிட்ஜெரால்டு என்பவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். மொழி பெயர்ப்பின்போது மஸ்து என்பதற்கு இறை மயக்கம் என்று பொருள் கொள்வதற்கு மாறாக, வெறும் மயக்கம் எனப் பொருள் கொள்ளலானார். மஸ்து எனும் பெர்சியச் சொல்லுக்கு மரபு முறையிலான பொருள் விளங்காததால், வெறுமனே மயக்கம் எனப் பொருள் கொண்டதோடு, மயக்கம் ஒரு மனிதனுக்கு எதனால் வரும் என எண்ணிய மாத்திரத்தில் மதுவால், மங்கையால், கவிதையால் வரும் என அவரளவில் அனுமானித்தவராக மது, மாது, கவிதை என மொழி பெயர்த்து விட்டார். இம் மொழிபெயர்ப்பைப் படித்த தேசிய விநாயகம் பிள்ளை, கையிலே கம்பன் கவியுண்டு. மதுக் கலயமுண்டு. மங்கை மடியுண்டு என்று கருத்துப்பட பாடலானார். அதைப் படித்த கண்ணதாசன் கோப்பையிலே அவன் குடியிருப்பு என உமர்கையாமை மதுக் கோப்பைக்குள் தூக்கிப் போட்டுப் பாடினார். மொழி பெயர்ப்பில் எங்கோ ஏற்பட்ட ஒரு சிறு தவறு தொடர்ந்து பெருக்கமடைந்து நேர் மாறான போக்கையே உருவாக்கி விட்டது. மதுவைத் தொட்டறியாத, அன்னிய மங்கையரை ஏறெடுத்தும் பாராத, ஒரு மாபெரும் சூஃபிக் கவிஞரை,

மெய்ஞ்ஞானப்போதகரை மாபெரும் குடியராக, பெண் பித்தராகச் சித்தரிக்கும் இழிநிலை ஒரு சிறு மொழி பெயர்ப்புப் பிழையால் உருவாயிற்று.

தவறான பெயர்ப்பு தந்த பேரழிவு

தவறான மொழிபெயர்ப்பால் கருத்துப் பிழை மட்டுமல்ல, ஒரு நாட்டின் புகழ் பெற்ற இரு நகரங்களே அழிந்த வரலாறும் உண்டு. இரண்டாம் உலகப்போரின் போது போர்ட்ஸ்டாம் மாநாட்டிற்குப் பின் அமெரிக்கா, ஜப்பானுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்தது. அதற்குப் பதிலாக ஜப்பான் 'மோகு ஸ்ட்ஸு' என ஜப்பானிய மொழியில் தந்தி மூலம் பதில் அளித்தது. இதற்குச் சரியான பொருள் “ஆராய்கிறோம், பொறுக்கவும்” என்பதாகும். ஆனால், தந்தி பதிலை வாஷிங்டனில் பெற்ற மொழி பெயர்ப்பாளர் தவறாக நிராகரிக்கிறோம் என மொழி பெயர்த்து முடியரசுத் தலைவருக்கு அனுப்பி விட்டார். நிராகரிக்கிறோம் என்ற பதிலைப் பெற்ற குடியரசுத் தலைவர் ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய இரு பெரும் நகரங்களின் மீது அணு குண்டுகளை வீசுமாறு ஆணையிட்டார். அவ்வாறே அணுகுண்டு வீசப்பட்டு, இரு நகரங்களும் அழிக்கப்பட்டது. மொழி பெயர்ப்பில் ஏற்பட்ட சிறு பிழை இரு நகரங்கள் அழியக் காரணமாயிற்று. ஒரு உன்னதமான சூஃபிக் கவிஞரை மிகக் கேவலமானவராகக் காட்டக் காரணமாயிற்று. இவை வரலாற்றில் படிந்த களங்கங்களாகும். இறை நெறியை - உன்னதமான ஆன்மீக உணர்வை உலகுக்குணர்த்திய உமர்கையாமிற்கு ஏற்பட்ட இழிவு மனதைப் புண்படுத்தும் ஒன்றாகும்.

நெறி பரப்பிய ஞானியர்

“சூஃபியர்” என அழைக்கப்படும் இம் மெய்ஞ்ஞானிகள்தான் இஸ்லாத்தை - இறை நெறியை மக்களிடத்தே கொண்டு சென்ற பெரியார்கள். இன்னும் சொல்லப்

போனால் இந்தியாவில் இஸ்லாத்தைப் பரப்பியவர்கள், இறை நெறியை மூலை முடுக்கெல்லாம் கொண்டு சென்று சேர்த்தவர்கள் இந்த சூஃபிமார்கள்தான். ஆனால், இந்திய வரலாறைச் சரிவர உணர்ந்து தெளியா ஆங்கில வரலாற்றாசிரியர்கள், தங்கள் ‘பிரித்தாளும்’ சூழ்ச்சி காரணமாக ‘இந்தியாவில் இஸ்லாம் வாள் கொண்டு பரப்பப்பட்டது’ எனத் தவறாகக் குறிப்பிட்டு, பழி பாவத்துக்கு ஆளாயினர்.

இந்தியாவை 600 ஆண்டுக்காலம் கட்டியாண்ட முஸ்லிம் மன்னர்கள் யாருமே இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளைக் கூட முழுமையாய் நிறைவேற்றாதவர்கள் என்பது கசப்பான உண்மை. டெல்லியிலிருந்து ஆட்சி செய்த முஸ்லிம் மன்னர்களில் யாருமே ஐம்பெரும் இஸ்லாமியக் கடமைகளில் ஐந்தாவதான ஹஜ் கடமையை நிறைவேற்றியதாக வரலாறு இல்லை. இஸ்லாமியப் பெருங்கடமைகளையே நிறைவேற்ற முடியாத இவர்கள் எங்கே இஸ்லாத்தைப் பரப்பும் முயற்சியிலே ஈடுபட்டிருக்க முடியும்? இஸ்லாத்தின் மீதும் இஸ்லாமியர்கள் மீதும் பழிபோட வேண்டும், தூற்ற வேண்டும் என்பதற்காகக் கற்பனையாக இட்டிக்கட்டி கூறுகின்ற ஒன்றே இந்தியாவில் இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது என்ற பழிச் சொல்.

அப்படியானால் இஸ்லாமிய நெறியை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்த்தவர்கள் யார்? இக் கேள்விக்கு மிக எளிமையாக இஸ்லாமியச் சூஃபிமார்களாகிய மெய்ஞ் ஞானிகளும் இறையடியார்களாகிய வலிமார்களுமே அவர்கள் எனக் கூறிவிடலாம். பீரப்பா, குணங்குடி மஸ்தான் போன்ற மெய்ஞ்ஞான மேதைகளும் டெல்லியில் அடக்கமாகியுள்ள நிஜாமுதீன் அவுலியா, ஆஜ்மீரில் அடக்கமாகியுள்ள குவாஜா மொய்னுதீன், திருச்சியிலே அடக்கமாகியுள்ள நத்தர்ஷா, நாகூர் சாஹூல் ஹமீது ஆண்டகை போன்ற அவுலியாக்களும் சதக்கத்துல்லாஹ்

அப்பா போன்ற ஞான மேதைகளுமே இஸ்லாத்தை மக்களிடையே பரப்பிய மாபெரும் பணியை ஆற்றியவர்கள்.

இந்தியாவை ஆண்ட முஸ்லிம் மன்னர்கள் அனைவரும் வெளிநாட்டவரோ அல்லது வெளி நாடுகளிலிருந்து ஆட்சி செய்தவர்களோ இல்லை. பாபர் போன்றவர்கள் வெளி நாட்டிலிருந்து வந்திருக்கலாம். ஆனால் அவர்தம் சந்ததியினர் அனைவரும் இங்கேயே பிறந்து, வாழ்ந்து மடிந்தவர்கள் என்பதை நாம் மறந்து விடக் கூடாது. 600 ஆண்டுகளுக்கு மேலாக அவர்கள் இந்தியர்களாகவே வாழ்ந்து மறைந்தவர்கள். இஸ்லாமிய மார்க்க நெறிகளைப் பின்பற்றி வாழ்ந்த போதிலும் இந்த மண்ணுக்கே சொந்த மான கலை, பண்பாடுகளைப் பேணியவர்கள்; போற்றி வளர்த்தவர்கள்; வளப்படுத்தியவர்கள்.

‘யார்?’ என்பதல்ல; ‘என்ன?’ என்பதே

இந்தியாவின் தனித்துவம் என்ன தெரியுமா? ‘யார்’ என்று பார்ப்பதில்லை. ‘என்ன’ என்பதில் கருத்தூன்றுவதே அத் தனிப்பெரும் பண்பாடு. வெளியிலிருந்து யார் வந்தாலும் அல்லது எந்தச் சமயம் வந்தாலும் அதிலுள்ள நல்லனவற்றையெல்லாம் ஏற்று தனதாக்கிக் கொள்வதே அத் தனித்துவம். ஜைன சமயமாகிய சமண சமயம் இந்து மதத்தை எதிர்த்து எழுந்த இந்தியச் சமயமாகும். காலப் போக்கில் சமண சமயத்தில் இந்துமதக் கருத்துகளை கொஞ்சங் கொஞ்சமாகப் புகுத்தி, சமண சமயத்தையே இந்து சமயத்தின் ஒரு கிளைச் சமயம் போல் ஆக்கி விட்டது. இந்து சமயத்தை எதிர்த்து கெளதம புத்தரால் உருவாக்கப்பட்ட சமயம் புத்த சமயமாகும். அதிலும் இந்து மதக் கருத்துகளைத் திறமையாகப் புகுத்தி புத்த சமயத்தினரின் தனித்துவமே குலைக்கப்பட்டது. சடங்கு, சம்பிரதாயங்களை எதிர்த்து எழுந்த புத்த சமயத்தில் இந்து சமயச் சடங்குகளையெல்லாம் புகுத்தி ஹீனயானம்,

மகாயானம் என்ற இரு பெரும் பிரிவுகளை ஏற்படுத்தி, பலவீனப்படுத்தி இந்து சமயச் சாயலோடு இயங்கச் செய்து சீர் குலைக்கப்பட்டது. இப்படி இந்தியாவில் உருவாக்கப்பட்ட அனைத்துச் சமயங்களிலும் இந்து சமயம் தன் கைவரிசையைக் காட்டிய போதிலும் இஸ்லாம் மார்க்கத்தை அதனால் நெருங்கவே முடியவில்லை. அதன் தனித்துவத்தில் எந்தச் சீர் குலைவையும் ஏற்படுத்த இயலவில்லை. காரணம், இஸ்லாத்தின் அடிப்படை அத்தகு வலிமை வாய்ந்ததாக அமைந்துள்ளது. இஸ்லாத்தில் கூறப்படும் இறைக் கொள்கை இறைவன் ஒருவனே; உருவமற்றவன்; ஆணும் இல்லை, பெண்ணும் இல்லை, அலியுமில்லை. அவன் யாரையும் பெறவுமில்லை. அவன் யாராலும் பெற்றெடுக்கப்படவுமில்லை. எடுத்து இணைப்பதென்றால் இதைத்தான் எடுத்து இந்து மதத்தில் சேர்க்க வேண்டும். அவ்வாறு இவ்விறைக் கொள்கையை எடுத்து இணைத்தால் அங்கே இருக்கும் இறை பற்றிய மற்ற இந்து மதக் கொள்கைகளெல்லாம் தகர்ந்து போகும்.

ஆனால், சீக்கிய மதத்தை உருவாக்க நினைத்தவர்கள் இந்து மதத்தின் சிறந்த கொள்கைகளில் சிலவற்றையும் இஸ்லாமியக் கொள்கைகளில் சிலவற்றையும் இணைத்து ஒரு புதுவகைச் சமயத்தை குருநானக் போன்றவர்கள் உருவாக்கலானார்கள். ஆனால், அதையும் இந்து மதவாதிகள் விட்டு வைக்கவில்லை. நாளடைவில் இந்து மதக் கருத்துகளையெல்லாம் அதோடு இணையச் செய்து, அதனையும் இந்து மதப் பிரிவாகவே ஆக்கிவிட்டார்கள். அதை எதிர்த்து இன்று பல சீக்கியர்கள் மூல வடிவில் சீக்கிய சமயத்தை மீண்டும் உருவாக்கிப் பின்பற்ற பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

ஆனால், இந்து சமயத்தைப் பொறுத்தவரை வேறொரு காரியத்தைத் திறம்படச் செய்து வருகிறார்கள். இஸ்லாத்தில் இந்து மதக் கருத்துகளைப் புகுத்த அறவே இயலாததால், இஸ்லாமியக் கருத்துகளில் பலவற்றைத்

தேர்ந்தெடுத்து, இந்து மதத்தைப் புதுப்பிப்பதில், புத்துயிரூட்டி, புனரமைப்பதில் பலர் ஈடுபட்டு வெற்றி பெற்றிருக்கிறார்கள். இதைத் தெளிவுபடுத்த வரலாற்றுப் போக்கில் ஒரிரு உதாரணங்களை உங்கள் முன் எடுத்து வைக்க விரும்புகிறேன்.

பிற சமயச் சீர்திருத்தம்

எட்டாம் - ஒன்பதாம் நூற்றாண்டுகளில் இஸ்லாம் தமிழகத்தில் மிக வேகமாகப் பரவிக் கொண்டிருந்தது. நந்தர்ஷா எனும் இறைநேசச் செல்வர், திருச்சி மாநகரின் மையப் பகுதியிலே அடக்கமாகி இருக்கின்ற அவர், அன்று சோழ நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று இறைப் பணி ஆற்றியவர். ஏழை எளிய மக்களிடம் அன்போடு கலந்துரையாடி, ஓர் இறைப் பிரச்சாரத்தைத் திறம்பட ஆற்றி வந்தவர். ‘ஒரே இறைவன்; உருவமற்றவன்; அன்புருவாகவும் அருள் வடிவாகவும் விளங்குபவன். இணை துணை இல்லாதவன். அவன் யாராலும் பெறப்படவுமில்லை. யாரையும் பெற்றெடுக்கவுமில்லை. அவனை வணங்க எந்தத் தரகரும் தேவையில்லை. நேரடியாகவே வணங்கலாம். அவன் எந்தத் தேவையும் இல்லாதவனாதலால் எதையும் வைத்துப் படைக்க வேண்டாம். இறை வேதத்தை யார் வேண்டுமானாலும் படிக்கலாம். நீங்களே புரிந்து தெளிவு பெறலாம். ஒரு நாளைக்கு ஐந்து வேளை தொழுவதன் மூலம் இறைவனுக்கு நன்றி செலுத்துகிறோம்’ என்றெல்லாம் மக்களிடம் எடுத்துச் சொன்ன போது அது அவர்களின் உள் மனதைத் தொட்டது. வேதத்தை நேரடியாகப் படித்தபோது ‘வேதம் இவ்வளவு எளிமையாக இருக்கிறதே’ என வியந்து போற்றியவர்களாக இஸ்லாத்தில் இணைந்தனர். இவர்களின் தொகை விரைந்து கூடிக் கொண்டே சென்றது.

அப்போது சோழ வளநாட்டை ஆண்டு வந்தவன் கூன் பாண்டியன் என்பவன். சோழ நாட்டின் மக்களின்

பெருந்தொகையினர் இஸ்லாமிய மார்க்கத்தில் இணைந்து வருவதையறிந்து வியந்தான். இஸ்லாமிய நெறிகளின் சிறப்பை அறிந்தபோது பெரு மகிழ்வு கொண்டான். இஸ்லாத்தில் இணைந்த மக்கள் வழிபாட்டிற்காக பள்ளிவாசல் கட்ட முயன்றால் அதற்கு அரசு அதிகாரிகள் உதவி செய்ய வேண்டுமெனக் கட்டளையிட்டான். இதன் மூலம் முஸ்லிம்கள் மசூதி கட்ட அரசு நிலங்கள் எளிதாகக் கிடைத்தன. இதன் மூலம் எங்கும் பாங்கொலி எழ, இஸ்லாமியச் செல்வாக்கு அழுத்தமாகவும் ஆழமாகவும் படியத் தொடங்கியது.

சோழ மண்டலத்தில் இஸ்லாம் விரைவாகப் பரவிக் கொண்டிருப்பதை ஸ்ரீபெரும்புதூரில் இருந்த இராமானுஜர் கேள்விப்படுகிறார். வைதீக சமயவாதிகளில் இராமானுஜர் முற்போக்குச் சிந்தனை மிக்கவர். இறைவன் மனித குலத்துக்கு வழங்கிய வேதம் மக்களிடம் நேரிடையாகச் சென்றடையாமல் ஒரு சிலரிடம் மட்டும் முடங்குவதை விரும்பாதவர். இத்தகு சூழ்நிலையில் இஸ்லாமிய வேதத்தை யாரும் படிக்கலாம் என்ற முறை அவரை வெகுவாக ஈர்க்க, சோழ மண்டலம் சென்று உண்மை நிலைகளை அறிய ஆட்களை அனுப்புகிறார். அவர்கள் உண்மை நிலைமையை அறிந்து வந்து விளக்க, வேதம் அனைவருக்கும் சொந்தம், பொது என்பதை நிலைநிறுத்த முடிவெடுக்கிறார். வேதத்தைத் தாங்கள் மட்டுமே படிக்க வேண்டும்; மற்றவர்கள் படிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்த வேதியர்களின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாது, கோயில் மதிலேறி நின்று, அங்கு வாழ்ந்த சேரி வாழ் மக்களுக்கு வேதம் போதித்தார் என்பது உண்மை வரலாறு.

அன்றையச் சூழலில் இன்னொரு இஸ்லாமியக் கருத்தும் சிந்தனையும் அவரின் உள்ளத்தை ஈர்ப்பனவாயமைந்தன. ஒருவன் இஸ்லாத்தை ஏற்று இறைவன் ஒருவனே

என்பதில் முழு நம்பிக்கை கொண்டு விட்டால் அவன் சாதி, வகுப்பு, பிரிவுகள் ஏதுமில்லாதவனாகிவிடுகிறான். அனைத்து வேறுபாடுகட்கும் அப்பாற்பட்டு மனிதத்துவம் உள்ள மனிதனாக மட்டும் கருதப்படுகிறான். மனித குலம் முழுமையையும் ஆதித் தந்தை ஆதாம் வழி வந்த சகோதரர்களாகக் கருதி, உலக சகோதரத்துவம் நிலைபெற உறுதி ஏற்கிறான் என்ற உணர்வும் கருத்தும் அவர் உள்ளத்தை ஈர்க்க அக்காலத்தில் பஞ்சமர்களாக, தீண்டத்தகாதவர்களாக புழுப் பூச்சிகளைப்போல் கருதி நடத்தப்பட்ட சேரிவாழ் ஹரிஜனங்களை அழைத்து, அவர்கட்கு வேதத்தைப் புகட்டி, வேதியர்களாக்கியது அக்காலத்தில்அவர் நிகழ்த்திக் காட்டிய அதியற்புதப் புரட்சியாகும். ஹரிஜனங்களுக்கு வேதம் கற்பித்ததோடு அவர்கட்கு ஆகம விதிப்படி, இந்து சமய சம்பிராதாயப்படி பூணூல் அணிவித்து வேதியர்களாக ஆக்கி, அவர்கட்கு ‘ஐயங்கார்’ எனப் பெயரிட்டழைத்தார் என்றால் அவர் செய்த புரட்சி எத்தகையது என்பதை எண்ணிப் பாருங்கள். அதனால்தான் இன்றும் ஐயர் வெண்மையாகவும், ஐயங்கார் கறுப்பு நிறத்தவராகவும் இருப்பதைக் காண்கிறோம்.

இப்படி இந்து சமயத்திலே மாற்றங்களும் திருத்தங்களும் ஏற்பட, இஸ்லாம் காரணமாக இருந்துள்ளதை யாரும் மறுக்க இயலாது.

சைவ சமயமும் இஸ்லாமும்

இது மட்டுமல்ல, தென்னாட்டிற்கே சொந்தமான சமயம் எனக் கொண்டாடப்படும் சைவ சமயத்திலேயும் மாற்ற திருத்தங்களோடு வீர சைவம் உருவாக ஒரு வகையில் இஸ்லாமும் இஸ்லாமியக் கருத்துகளும் சிந்தனைகளுமே காரணமாயமைந்துள்ளன என்பது வரலாறு.

தென்னகத்தின் மிகச் சிறந்த சமயமாக அன்றும் இன்றும் போற்றப்படுவது சைவ சமயமாகும். மாணிக்க வாசகர் போன்றவர்களால் உருவாக்கி, வளர்க்கப்பட்ட சமயம்.

தென்னகத்தில், குறிப்பாக கர்நாடகப் பகுதியில் மிக வலுவாக ஒரு கால கட்டத்தில் திகழ்ந்தது. அச்சமயத்தின் ஆச்சாரியராக பஸவேஸ்வரர் என்பவர் திகழ்ந்தார்.

அக் கால கட்டத்தில் இஸ்லாமிய சூஃபியாக்களில் பலர் கர்நாடகத்தின் மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் இஸ்லாமியப் பிரச்சாரத்தை மக்கள் உள்ளம் ஏற்கும் வகையில் வலுவாக ஆற்றி வந்தார்கள். மக்கள் மத்தியில் இஸ்லாம் மிகுந்த செல்வாக்குப் பெறத் தொடங்கியது. ஆங்காங்கு வாழ்ந்த மக்கள் இஸ்லாமிய மார்க்கத்தின்பால், தங்களை இணைத்துக் கொள்ள முனைந்தார்கள்.

இச் செய்தி சைவ சமய ஆச்சாரியரான பஸ்வேஸ்வரரை எட்டியபோது ஒரு புறம் ஆச்சரியத்தையும் மறுபுறம் மனக்கிலேசத்தையும் அவருக்கு ஏற்படுத்தியது. இஸ்லாமியப் பிரச்சாரத்தின் சாரத்தை நேரடியாகவே அறிய விரும்பி, இஸ்லாமியச் சூஃபிமார்களை அணுகி அவர்களோடு விவாதிக்கத் தொடங்கினார். அவர்கள் இஸ்லாத்தின் அடிப்படை கொள்கை கோட்பாடுகளை எடுத்து விளக்கியபோது, இஸ்லாமியக் கொள்கைகள் அனைத்தும் மனித குலம் ஏற்றிப்போற்றத் தக்கவைகளாக இருக்கின்றனவே எனக் கருதினார். இறை வணக்கச் சடங்கேதும் இல்லாததும் இஸ்லாம் தந்துள்ள பெண்ணுரிமையும் குறிப்பாக விதவைகளுக்குத் தரப்பட்டுள்ள மறுமண உரிமையும் சமுதாய மதிப்பும் அவருக்குப் புதுமையாகப் பட்டது. மொத்தத்தில் மனிதனை இறைவன் படைத்தது வாழ்வாங்கு வாழ்வதற்கேயன்றி வருந்திச் சாவதற்கு அல்ல என்ற கோட்பாடு அவருக்கு உவகையளித்தது. ஜகாத் போன்ற பொருளாதாரக் கொள்கைகளும் அவரை வெகுவாக ஈர்த்தன. உன்னதக் கொள்கைகளின் உறைவிடமாக இருக்கக்கூடிய இஸ்லாமிய நெறியில் தன்னை இணைத்துக் கொள்வதை விட தன்னைப் பின்பற்றும் பல்லாயிரம் மக்கள் இக் கொள்கை வழி வாழ, அதுவும் அவர்கள் காலங்காலமாய் பின்பற்றும் சைவ சமய வழியிலேயே வாழ

வைக்க வேண்டும் என எண்ணினார். இவ்வெண்ணத்தை ஈடேற்றும் வகையில் சைவ சமயத்தில் பல்வேறு மாற்ற திருத்தங்களைச் செய்தார். இறைவனுக்கு அல்லாஹ் என்பதன் சாயலில் அல்லமா பிரபு என ஆக்கினார். இறைவனைப் பல்வேறு வடிவில் வணங்காது ‘லிங்க வடிவில்’ வணங்கப் பணித்தார். இவ்வழிபாட்டில் ஈடுபடுவோர் ‘லிங்காயத்துகள்’ என அழைக்கப் படலாயினர்.

பெண்களின் சம்மதத்தோடு திருமணம் நடக்கச் செய்தார். மண விலக்கு உரிமையளித்தார். மணப் பெண்ணுக்குத் தாலி எடுத்துக் கொடுக்குமளவுக்கு விதவைகளுக்கு மரியாதை ஏற்படுத்தினார். விதவை விவாகம் ஏற்புடையதாக்கினார். இறந்தோரை எரிப்பதற்கு மாறாகப் புதைக்கச் செய்தார். இவ்வாறு இஸ்லாத்தின் உயரிய கோட்பாடுகளில் பலவற்றை தான் பின்பற்றி வந்த சைவ சமயத்தில் இணைத்து, மக்களையும், அவற்றைப் பின்பற்றச் செய்தார். இக்கொள்கை வழி வாழ்வோர் “வீர சைவர்” களாவர் என அறிவித்தார். இவ்வாறு சைவ சமய சீர்திருத்தத்துக்கு இஸ்லாம் ஒரு பெரும் காரணமாய் அமைந்ததை இன்றும் காண முடிகிறது.

இவ்வாறு இந்தியாவின் மிகப் பெரிய சமயங்களெல்லாம் இயன்றவரை இஸ்லாத்தின் அடிப்படை அம்சங்களை தங்கள் தங்கள் சமயத்தினுள் ஈர்த்துக்கொள்ளத் தவறவில்லை. இதைப்பற்றி புகழ்பெற்ற சமூகவியல் ஆய்வறிஞர் டாக்டர் தாரா சந்த் அவர்கள் தமது புகழ் பெற்ற ஆராய்ச்சி நூலான "தி இஸ்லாமிக் இன்ஃபுளுயன்ஸ் இன் இண்டியன் கல்ச்சர்' எனும் ஆய்வுப் படைப்பில் வரலாற்றுப் பூர்வமாக பல உண்மைகளைத் திறம்பட தொகுத்துரைத்துள்ளார்.

தவிர்க்கவியலா நிலை

ஒரு கால கட்டத்தில் இஸ்லாம் எடுத்தியம்பும் வாழ்க்கை

நெறிமுறைகளை தவிர்ப்பது இந்தியச் சமயங்களுக்கு இயலாததொன்றாகியது. அறிவுப்பூர்வமாக அவற்றை ஒதுக்க அல்லது தவறானவை எனக் காட்ட இந்தியச் சமயவாதிகளால் இயலவில்லை.

இஸ்லாத்தில் பிற சமயக் கருத்துகள் எதையும் புகுத்த இயலா விட்டாலும் இஸ்லாத்தின் கொள்கை, கோட்பாடுகளைத் தேவையான அளவுக்குச் சுவீகரித்துக் கொள்ள ஹிந்து சமயமும் ஹிந்து சமயத்தின் பல்வேறு பிரிவுகளும் தவறவில்லை.

இதனை வரலாற்றுப் பூர்வமாக "இண்டியன் ரிலிஜியன்ஸ்” எனும் ஆங்கில நூலில் டாக்டர் பர்த் எனும் ஆய்வறிஞர் சிறப்பாக அலசி ஆராய்ந்துள்ளார். இந்தியாவில் இருக்கக்கூடிய அத்தனை மதங்களைப் பற்றி, அவற்றுள் நடைபெற்ற கொடுக்கல் - வாங்கல் பற்றி, அவற்றில் காணும் சாயல்கள், ஒற்றுமை - வேற்றுமைகள் பற்றி மிகச் சிறப்பாக ஆய்ந்து எழுதியுள்ளார்.

பக்தி இயக்கமும் இஸ்லாத்தின் பங்களிப்பும்

இதையெல்லாம்விட நாம் தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான செய்தி 'பக்தி இயக்க’ முயற்சியாகும். இஸ்லாமியக் கருத்துகளின்பால் ஈர்க்கப்பட்ட பல இந்து சமயப் பெரியார்கள் இந்து சமய மறு மலர்ச்சி ஏற்பட உழைக்கலாயினர். இந்த இயக்கம் இந்தியா முழுமையும் தன் செல்வாக்கைப் பதிக்கத் தவறவில்லை. இந்த இயக்கம் ஏற்பட முழு முதற்காரணமாயமைந்தவர்கள் இந்தியா முழுமையும் பரவியிருந்த இஸ்லாமியச் சூஃபிகளும், வலிமார்களுமாவர்.

முஸ்லிம்களின் ஆட்சி வடக்கே நிலை பெற்றிருந்த கால கட்டத்தில், முஸ்லிம் மன்னர்களோ ஆட்சியினரோ இஸ்லாமிய நெறி பரப்ப எந்த முயற்சியும்

எடுத்தவர்களில்லை. அவர்களின் சிந்தனையும் செயலும் ஆட்சி செலுத்துவதோடு சரி. இஸ்லாத்தைப் பொருத்தவரை மன்னர்கள் முஸ்லிம்கள் என்பதைத் தவிர வேறு எந்தச் சிறப்பும் இல்லை.

ஆனால் இஸ்லாத்தை இந்திய மக்களிடம் கொண்டு சேர்த்தவர்கள் இஸ்லாமிய சூஃபிகளும் இறைநேசச் செல்வர்களாகிய வலிமார்களுமேயாவர். அத்தகையவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள் குவாஜா மொய்னுதீன் (ஆஜ்மீர்), நிஜாமுத்தீன் (டெல்லி), நத்தர்ஷா (திருச்சி) ஷாஹ-ல் ஹமீது ஆண்டகை (நாகூர்), இபுறாஹீம் ஷஹீது ஒலியுல்லாஹ் (ஏர்வாடி) ஷேக் தாவூத் ஒலியுல்லாஹ் (முத்துப் பேட்டை) சதக்கத்துல்லா அப்பா போன்ற பெரியோர்களாவர்.

இருபால் மெய்ஞ்ஞானியர் தொண்டு

அவ்வாறே சூஃபிமார்களும் சூஃபிக் கவிஞர்களும் அவ்வப் பகுதிகளில் வழங்கிய அவ்வம் மொழிகள் வாயிலாக இஸ்லாமியக் கருத்துகளையும் சிந்தனைகளையும் சிந்தைகொள் மொழியில் எடுத்தியம்பினர். தமிழைப் பொருத்தவரை ஐம்பதுக்கு மேற்பட்ட இஸ்லாமிய மெய்ஞ்ஞானிகளாகிய சூஃபிக் கவிஞர்கள் நூற்றுக் கணக்கான இஸ்லாமிய ஞானப்படங்களை எழுதிக் குவித்துள்ளனர். இவர்களுள் தக்கலையின் மிக்க புகழ் பீர் முஹம்மது அப்பா அவர்கள் பத்தாயிரம் இஸ்லாமிய ஞானப் பாடல்களைப் பாடியுள்ளார். குணங்குடி மஸ்தான் நாடறிந்த மெய்ஞ்ஞானத் தமிழ்க் கவிஞராவார். இவர்களுள் சில பெண் சூஃபிக் கவிஞர்களும் வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள் என்பது வியப்பூட்டும் செய்தியாகும். தென் காசி ரசூல் பீவி, இளையான்குடி கச்சிப் பிள்ளையம்மாள், கீழ்க்கரை செய்யது ஆசியா உம்மா (மேல் வீட்டம்மா) ஆகியோர் குறிப்பிடத் தக்கவர்களாவர்.

சித்தர்களும் சூஃபிகளும்

சூஃபிகள் எனப்படும் மெய்ஞ்ஞானியர்களைச் சித்தர்கள் என அழைப்பது வழக்கம். இவர்களில் பதினெட்டுப் பேர்களைச் சிறப்பாக பதினெண் தமிழ்ச் சித்தர்கள் என அழைப்பர். இப்பதினெட்டுச் சித்தர்களுள் மூவர் முஸ்லிம்கள். மச்சரேகைச் சித்தர் எனும் ஐதுரூஸ், குணங்குடி மஸ்தான் எனும் சுல்தான் அப்துல் காதர், தக்கலை பீர் முஹம்மது அப்பா ஆகியோர் ஆவர். இவர்கள் மற்ற சித்தர்களைப் போன்று இறைநெறியை, அதை அறிந்துணர்வதற்கான மெய்ஞ்ஞான உணர்வை மனித குலம் ஒன்று என்ற நோக்கில் வழங்கிய சிறப்புக் கருதி, இவர்கள் மத பேதம் ஏதுமின்றி பதினெண் சித்தர் பட்டியலில் இணைத்து அழைக்கப்படலாயினர்.

தென்னகத்தில் சித்தர்களும் சூஃபிகளும் மெய்ஞ் ஞானத்தைப் பரப்ப விழைந்தது போன்றே வட நாட்டில் மனிதகுல வாழ்வு மேன்மையுற, மனிதர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வாழ்வியல் அடிப்படை உண்மைகளை, இந்து சமயத்தின் சிறப்புச் சிந்தனைகளை, இஸ்லாத்தின் ஏற்புடைய உயர் கருத்துகளையும் தத்தம் மொழிகளில் குழைத்து தந்து மக்களை நல்வழிப் படுத்த முயன்றனர். யார் என்பதைவிட என்ன என்பதில் மட்டுமே கருத்தைச் செலுத்தத் தூண்டும் இப் பெரியார்களின் முயற்சியே 'பக்தி இயக்க’மாக வட நாட்டில் நடைபெறலாயிற்று. இவ்வியக்கத்தை ஆற்றலுடன் நடத்திய பெருமை ராமானந்தர், கபீர்தாஸ், சாது தயாள், ராம தேவர், லால் தாஸ், பாபாலால் பிரான்தாஸ், ராம்சரண், ஜகஜீவன் தாஸ், புல்லா சாஹிப், சந்திர தாஸ், கேசவ தாஸ், கரீம் தாஸ் போன்றோர்களையே சாரும். இவர்கள் ஏற்புடையதெனக் கருதிய இந்து சமயச் சிந்தனைகளையும் இஸ்லாமியக் கருத்துகளையும் தங்கள் மொழிகளில் குழைத்துக் கொடுத்து, மக்களிடையே சமய சமரச உணர்வு மேலோங்க உழைத்தவர்கள். இவர்கள் தங்கள் பெயர்களிலேயே இரு சமயச் சாயலையும்

இணைத்துக் கொண்டவர்கள். இதன் மூலம் ஒருவித மறுமலர்ச்சிப் போக்கை ஹிந்து சமயத்தில் தோற்றுவிக்க முயன்று வெற்றி பெற்றவர்கள். இத்தகு முயற்சிக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் பெரும் காரணமாக அமைந்தது இஸ்லாம் எனில் அஃது மிகையன்று.

சீர்மைச் சிந்தனை

இந்த பக்தி இயக்கத்தைத் தொடங்கி வைத்த பெருமைக்குரியவர் ராமானந்தர் ஆவார். இறைவனுக்கு உருவமில்லை; உருவமில்லாத இறைவனை மனத்தளவிலேதான் எண்ணிப் பார்க்க முடியும். மனித குலம் முழுமையும் ஒன்றுதான். நீங்கள் எந்தப் பெயரிட்டு வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளுங்கள். ராம் - ரஹீம் என்ற பெயர்களெல்லாம் ஒரே பரம்பொருளைக் குறிக்கும் வெவ்வேறு பெயர்களாகும். இத்தகைய கருத்துகள் மக்களிடையே மிகுந்த செல்வாக்குப் பெற்றன. இதனால் அவருடைய பக்தி இயக்கத்திலே பெருந்திரளாக இந்து சமயப் பெருமக்கள் இணைந்தார்கள். அவருக்குப் பின் கபீர் தாஸ், ராம தேவர், ராம் சாஹிப், புல்லா சாஹிப், கரீம் தாஸ் எனப் பெயரிட்டுக் கொண்டதனால் அவர்களை ஹிந்துவா, முஸ்லிமா எனக் கண்டறிய இயலாவண்ணம் தங்கள் பெயர்களை வைத்துக் கொண்டு இரு பெரும் சமயங்களிடையே இணைப்புப் பாலமாகவும் மக்களிடையே சமயப் பொதுமை உணர்வை உருவாக்கும் சமய சமரசவாதிகளாகவும் அமைந்தனர். அவர்கள் பேச்சிலும் எழுத்திலும் நீக்கமற நிறைந்திருப்பது இறைவனை ராம் என்று கூறினாலும் ரஹீம் என்று கூறினாலும் இறைவன் ஒருவனே; நாம் எப் பெயரிட்டு அழைப்பினும் இறைவனுக்கு உருவமில்லை; உருவ வணக்கம் அறவே கூடாது. மனத்தளவிலே இறை நம்பிக்கையோடு வணங்குதல் வேண்டும். ஏனெனில் இறைவனை மனத்தளவிலேதான் உணர முடியும்.

இறைவனுக்கு நன்றி செலுத்துவதுதான் மனிதப் பிறப்பின் தலையாய கடமை. ஏனெனில், மனிதனுக்குத் தேவைப்படும் அனைத்தையும் படைத்தளித்துள்ள இறைவன், அவற்றை உரிய முறையில் துய்க்க, பகுத்தறிவையும் கொடுத்துள்ளான். எனவே, அனைத்தையும் அளித்த இறைவனுக்கு உள்ளத்தாலும் உடலாலும் இறைவணக்கம் புரிந்து நன்றி கூறுவது இன்றியமையாக் கடமையாகும்.

இதையே தமிழ்நாட்டுச்சித்தர்களும் தமிழ் பாடல்கள் மூலம் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள். “நட்டக் கல்லைத் தெய்வம் என்று நாலு புஷ்பம் சாற்றியே சுற்றி வந்து மெண மொணத்துச் சொல்லும் மந்திரம் ஏதடா, நட்டக் கல்லும் பேசுமோ நாதனுள்ளிருக்கையில், சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?” என்று அழகாகப் பாடியுள்ளார் பத்திரகிரியார். மொத்தத்தில் சித்தர் பாடல்களை எடுத்துக் கொண்டால் உருவ வழிபாட்டிற்கு எதிரான கருத்துகளையே கூறிச் சென்றுள்ளார்கள். ஒரே இறைவன் என்பதையும் உலக மக்களெல்லாம் ஒரே குலத்தைச் சார்ந்தவர்கள்; சகோதரர்கள் என்றும் அவர்களுள் வேறுபாடுகளேதும் காட்டுதல் கூடாது என்ற உணர்வை மக்கள் உள்ளத்தில் அழுந்தப் பதிக்க முயன்றவர்கள் சித்தர்கள். இவ்வுணர்வுகளெல்லாம் தமிழ் மண்ணிலே அழுந்தக் காலூன்றக் காரணமாயமைந்தவர்கள் வலிமார்களும் சூஃபிமார்களுமாவர்.

சூஃபிமார்கள் என்றழைக்கப்படும் இஸ்லாமிய மெய்ஞ்ஞானச் செல்வர்களும் வலிமார்கள் என்றழைக்கப்படும் இறைநேசச் செல்வர்களும் பக்தி இயக்கத் தோற்றத்துக்கும் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்களிப்பைச் செய்துள்ளார்கள். இவ்வியக்கத்தை மதங் கடந்த நிலையில் மெய்ஞ்ஞானச்செல்வர்களாகப் பார்த்ததனால்தான் தமிழ்ச் சித்தர்களிலே மிகச் சிறந்த சிந்தனையாளர்களாகப் போற்றப்படும் பதினெண் சித்தர்களில் மூவர் முஸ்லிம் சூஃபிக்கவிஞர்களாக இணைக்கப்பட்டு போற்றப்பட்டனர்.

மூன்று முஸ்லிம் சித்தர்கள் கூறிய ஞானக் கருத்துகளை அடியொற்றியே மீதமுள்ள பதினைந்து சித்தர்களும் தம் ஆன்மீகக் கருத்துகளை வெளியிட்டிருக்கிறார்கள். எனவே தான் அவர்களும் இவர்களுடன் ஒன்றாக இணைக்கப்பட்டு பதினெண் சித்தர்கள் என அழைக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் ஒத்த கருத்தினையுடைய, ஒரே கூட்டத்தினராகக் கருதப்பட்டனர். இவர்களில் குணங்குடி மஸ்தானின் சீடர்களில் பெரும்பாலோர் முஸ்லிமல்லாதவர்கள், குறிப்பாக சமூகத்தில் மேற்குடி மக்களாகக் கருதப்பட்ட மேற்சாதியினராவர்.

தமிழ் பெண் சூஃபிகள்

இதில் மற்றொரு சுவையான செய்தியும் உண்டு. சித்தர்களில் பெண் சித்தர்கள் யாரும் வாழ்ந்ததாகத் தெரியவில்லை. காரைக்கால் அம்மையார்கூட பக்தை என்ற வட்டத்துக்குள் வைத்துப் போற்றப்படுகிறாரே தவிர சித்தர் என்று யாரும் கருதுவதில்லை. ஆனால் இஸ்லாமியப் பெண் சூஃபிகள் ஐவர் இருந்ததாகக் கூறப்படுகிறது. அவர்களில் மூவரைப் பற்றிய முழுத் தகவல்கள் கிடைத்துள்ளன. தென்காசி ரசூல் பீவி, இளையான்குடி கச்சிப் பிள்ளை அம்மாள், கீழக்கரை செய்யது ஆசியா உம்மா ஆகியோரே அவர்கள். இவர்கள் எழுதிய பலப்பல மெய்ஞ்ஞான சூஃபிப் பாடல்களும் கிடைத்துள்ளன. இவர்களில் தென்காசி ரசூல் பீவி நாற்பது சீடர்களைப் பெற்றிருந்ததாகக் கூறப்படுகிறது. அவர்களில் ஒருவர் மட்டுமே முஸ்லிம். மற்றவர்களெல்லாம் பிற சமயத்தைச் சார்ந்தவர்கள். அந்த ஒரு முஸ்லிம் சீடரும் அவ்வம்மையாரின் கணவரே ஆவார் என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும்.

தொட்டவர்கள் சித்தர்கள் - முடித்தவர்கள் சூஃபிகள்

நான் சுமார் இருபது ஆண்டுகட்கு முன்னர் சூஃபி லிட்டரேசர் இன் தமிழ்’ (Sufi literature in Tamil) என்ற

கருத்தரங்கை மத வேறுபாடின்றி மற்ற சமயத்தவர்களும் பங்கேற்கும் வகையில் நடத்தினேன். அதில் பங்கேற்ற டாக்டர் இரா. மாணிக்கவாசகம் என்பவர் பெரும் பேராசிரியர்; சித்தர்களைப் பற்றி ஆய்வு செய்து 'டாக்டர்’ பட்டம் பெற்றவர். அவர் “சித்தர்களும் சூஃபிகளும்” என்ற தலைப்பில் ஆய்வுரை நிகழ்த்துகையில், தன் ஒப்பீட்டாய்வின் பிழிவை, சுருக்கமாக மெய்ஞ்ஞானச் சிந்தனையைத் தொட்டவர்கள் சித்தர்கள்; அதன் கொடுமுடியாக சென்று, மெய்ஞ்ஞானத் துறையை நிறைவு செய்தவர்கள் இஸ்லாமிய சூஃபிகள் எனக் கூறினார்.

அப்போது எனக்கு ஒரு ஆசை எழுந்தது. இஸ்லாமிய மெய்ஞ்ஞானத் துறையைத் தமிழில் ஞானப்பாடல்கள் மூலம் பரப்பியவர்கள் எத்தனை பேர் என்பதை அறிய முயன்றேன். நண்பர் தக்கலை எம்.எஸ். பஷீர் அவர்களின் துணையோடு பட்டியல் தயாரிக்க முனைந்தேன். அப்போது சுமார் எழுபதுக்கு மேற்பட்ட இஸ்லாமியத் தமிழ் மெய்ஞ்ஞானிகள் தமிழில் சூஃபிப் பாடல்களை எழுதியதோடு, அவற்றைத் தமிழிலும் வெளியிட்டுள்ளனர் அல்லது அவை பிறரால் வெளியிடப்பட்டுள்ளன என்ற விவரம் தெரிய வந்தது. அவ்விவரங்களை ‘தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்’ என்ற நூலில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. இதிலிருந்து இஸ்லாமிய ஞானத்தை மெய்யறிவைத் திறம்பட தமிழ் மக்களிடத்தே சமய வேறு பாடின்றி எடுத்து விளக்க, தமிழ் இலக்கியப் போர்வையில் எவ்வகை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்பதை உய்த்துணர முடிகிறது.

இந்நிகழ்வுகளெல்லாம் ஒரு பேருண்மையை நமக்குத் தெளிவாக்குகின்றன. அதுதான் 'இஸ்லாமிய நெறியைப் பரப்பியவர்கள், பெருமானாருடைய பெருமையை மக்களிடத்தே கொண்டு சென்று விளக்கியவர்கள், இறை நெறியை நிலை நாட்டியவர்கள் முஸ்லிம் மன்னர்களோ ஆட்சி அதிகாரமோ எதுவுமே இல்லை. இஸ்லாமிய

சூஃபிகளும் இறைநேசச் செல்வர்களான வலிமார்களுமே என்பது எல்லா வகையிலும் தெளிவாக்குகிறது.

ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் சூழ்ச்சி

எனினும், ஆங்கிலேய வரலாற்றாசிரியர்கள் குறிப்பாக ஸ்மித் போன்றவர்கள் இந்தியர்களைப் பிரித்தாளும் சூழ்ச்சியின் அடிப்படையில், இந்தியாவில் இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது என எழுதி வைத்துள்ளார்கள். இது ஒரு வரலாற்று மோசடியாகும். ஆனால், பின்னால் வந்த பி.என். பாண்டே போன்ற நேர்மையான இந்திய வரலாற்றாசிரியர்கள் இஸ்லாம் இந்தியாவில் எக்காலத்திலும் எக்காரணம் கொண்டும் வாளாலோ அல்லது ஆட்சி அதிகாரத்தாலோ இஸ்லாம் பரப்பப் படவில்லை என்பதைப் பல ஆதாரங்களைக் கொண்டு நிறுவி, தவறான எண்ணங்களைத் துடைத்தெறிந்துள்ளார்கள்.

தவறான பொருளில் ஜிகாது

இஸ்லாத்தை இழிவுபடுத்த, முஸ்லிம்கள் மீது குற்றம் சுமத்த சில நல்ல சொற்களைத் தவறான பொருளில் கையாண்டு இஸ்லாத்தின் மீது மாசு கற்பிக்க முயல்கிறார்கள். அதற்கு அவர்கள் கையாளும் சொல் 'ஜிஹாது’ எனும் சொல்லாகும். இப்போக்கு சிலுவைப் போர் காலம் முதலே இருந்து வரும் சொல் மோசடியாகும். பொருளாழம் மிக்க ஜிஹாது எனும் சொல்லைத் தவறான பொருளில் பயன்படுத்துவதை அறியும்போது மிகவும் வேதனையாக உள்ளது.

யாராவது ஒரு முஸ்லிம் ஏதாவது ஒரு சூழ்நிலையில் ஜிஹாது எனும் சொல்லைப் பயன்படுத்தினால் கலவரத் தீவிரவாதியாக அவனைக் காணும் சூழ்நிலையே இன்று எங்கும் உள்ளது. அரபி மொழிச் சொல்லான ஜிஹாது என்பதன் உண்மைப் பொருளையோ இஸ்லாத்தையோ சரிவர அறிந்துணரும் வாய்ப்பைப் பெறாத சிலமுஸ்லிம்களும் கூட, இச் சொல்லைத் தவறான பொருள் தொனிப்பில் பயன்படுத்துவதன் விளைவாக இஸ்லாம் மாசுபடுத்தப்படுகிறது. அதன் உண்மைப் பொருள்தான் என்ன?

'ஜிஹாது’ என்பதற்கு இறைவழியில் போராடுவது என்பது பொருளாகும். ஜிஹாது என்பது இருவகைப்படும். ஒன்று 'ஜிஹாதுல் அஸ்கர்’ என்பது. மற்றொன்று 'ஜிஹாதுல் அக்பர்’ என்பதாகும். இரண்டும் வெவ்வேறு நிலைகளில் அமைந்து செயல்படுவனவாகும்.

ஜிஹாதுல் அஸ்கர்

ஒரு முஸ்லிம் தனக்கோ அல்லது தன்னைச் சார்ந்தவர்களுக்கோ அல்லது தங்கள் உடைமைகளுக்கோ ஆபத்து ஏற்படும்போது அதைத் தடுக்க, எதிர்த்துப் போராட முயல்வது அவனது இன்றியமையாக் கடமையாகும். இத்தகைய தற்காப்பு முயற்சி அல்லது தற்காப்புப் போரே இஸ்லாத்தில் 'ஜிஹாதுல் அஸ்கர்’ என அழைக்கப்படுகிறது. 'உன்னை எதிர்த்துப் போராடுபவர்களைத் தற்காப்பு நிமித்தம் எதிர்த்து அல்லாஹ்வுக்காகப் போரிடு. ஆனால், அவர்களை முதலில் தாக்கி விடாதே. ஏனெனில், ஆக்கிரமிப்பாளர்களை இறைவன் அறவே விரும்புவதில்லை’ என்பது இறைநெறியாகும். எவ்வளவு அற்புதமான கருத்து.

எக்காரணம் கொண்டும், நான் உங்களை அடித்து விடக் கூடாது. நீங்கள் என்னை அடிக்க வந்தால் உங்களை எதிர்த்து தாக்கத்தான் அனுமதி உண்டே தவிர, ஒரு முஸ்லிம் எடுத்த எடுப்பில் யாரையும் அடிப்பதற்கோ, எந்த ஒரு நாட்டையும் தாக்குவதற்கோ எந்த ஒரு இனத்தையும் பாதிப்புக்குள்ளாக்குவதற்கோ எந்த உரிமையும் இல்லை. அப்படிச் செய்யக் கூடியவர்களை இறைவன் விரும்புவதும் இல்லை. அவர்களை வெறுத்து ஒதுக்கி வைத்து விடுகிறான். இதுவே திருமறையின் வாக்கமுதாகும். மொத்தத்தில் தற்காப்புக்காகப் போராடப் பணிப்பதே ஜிஹாதுல் அஸ்கர் ஆகும்.இதனை இன்னும் தெளிவாகப் புரிந்து கொள்ள இஸ்லாமியத் தமிழ்ப் புலவர்களால் எழுதப்பட்ட 'படைப்போர்' இலக்கியங்கள் வாழும் சான்றாகக் காட்சியளித்து வருகின்றன. போரையும், போருக்கான அடிப்படை அமைப்பான படையையும் பற்றியது 'படைப்போர்' இலக்கியங்கள்.

பிற சமயத்தினர் முஸ்லிம்கள் மீது தொகுத்த போர்களைப் பற்றிய செய்திகளே அதில் இடம் பெற்றுள்ளன. பிற சமயத்தினர் தாக்கும்போது அத்தாக்குதலை எதிர்த்து முஸ்லிம்கள் நடத்திய தற்காப்புப் போர்களே இவ்விலக்கிய நூல்களின் கருப்பொருள். மொத்த 18 படைப் போர் இலக்கியங்கள் தமிழில் உண்டு. ஆனால், ஒன்றிற்குக் கூட முஸ்லிம்களின் பெயர் இல்லை. அனைத்து இலக்கியத் தலைப்புகளிலும் நீக்கமற நிறைந்திருப்பவர்கள் முஸ்லிம்கள் மீது படையெடுத்த பிற சமயத்தைச் சார்ந்த கதாநாயகர்களே ஆவர். உச்சிப் படைப்போர், வடோச்சிப் படைப்போர், செய்யிதத்துப் படைப்போர் என இலக்கியத்துக்குக் கூட படை நடத்திய பகைவர்களின் பெயர்கள் உண்டே தவிர இஸ்லாமியப் பெயர் இல்லை. படைப்போர் இலக்கியத்தின் தலைப்பில் இடம் பெற்றவர்கள் அத்துனை பேரும் இஸ்லாத்தின் எதிரிகள். இஸ்லாத்தை அழிக்க வேண்டும், முஸ்லிம்களை ஒழிக்க வேண்டும் என்பதற் காகவே முஸ்லிம்கள் மீது படையெடுத்து வந்தவர்கள். எனவே, அவர்களின் பெயராலேயே இப்படைப்போர் இலக்கியங்கள் அழைக்கப்படலாயின. ஏனெனில், முஸ்லிம்கள் யாரையும் முதலில் தாக்குவதற்கு அறவே அனுமதி இஸ்லாத்தில் இல்லை.

சிந்துப் போரும் ஜிஹாதே

இந்தியாவில் முஸ்லிம்களுக்கும் மற்றவர்கட்கும் முதன் முதலில் நடைபெற்ற போர் சிந்துவில் நடைபெற்ற போராகும். இதைப் பற்றி நான் நிறைய ஆய்வு செய்திருக்கிறேன். இந்தியாவிற்கு சிந்து நதிப் பகுதியில் ஏராளமான அரபு நாட்டு வணிகர்கள் வியாபாரம் செய்து வந்தனர். அரபு வியாபாரிகளின் வாணிகம் அப்பகுதியில் மிகச் சிறப்பாக நடைபெறுவதைக் காணப் பொறாத இந்திய வியாபாரிகள் குறிப்பாக இந்து சமயத்தைச் சார்ந்த வணிகர்கள் அடிக்கடி தகராறு செய்யத் தொடங்கினர். சில சமயம் இந்து மன்னர்களின் ஆதரவோடும் இவ்வாறு நடைபெறுவது வழக்கமாயிற்று. இதனால் அரபு வியாபாரிகள் பெரும் நட்டமும் மனவேதனையும் அடையலாயினர். அரசின் ஆதரவோடு வணிகர்களின் தடைகளும் தாக்குதல்களும் அளவுக்கு மீறிச் செல்கையில் அரபக ஆட்சியாளர்களின் கவனத்திற்கு சிந்துப் பகுதி அரபி வணிகர்கள் இச்செய்தியைக் கொண்டு சென்றனர். இந்தியாவின் சிந்துப் பகுதியில் தாங்கள் பாதுகாப்பு இல்லா நிலையில் அனுபவித்து வரும் துயரங்களை எடுத்துக் கூறியபோது, அரபக ஆட்சியாளர் முஹம்மது பின் காசிம் என்பவர் தலைமையில் ஒரு படையைச் சிந்து பகுதிக்கு அனுப்பி, எதிரிகளை அடக்கி ஒடுக்கி, அரபு வணிகர்கள் சுமுகமாக வணிகம் செய்வதற்கேற்ற இனிய சூழலை உருவாக்கித் தருமாறு பணிக்க, முஹம்மது பின் காசிமும் ஒரு படையுடன் சிந்துப் பகுதிக்கு வந்து, அரபு வணிகர் கட்கும் பாதகமானவர்களோடு போரிட்டு வென்று, நல்ல சூழலை உருவாக்கி அரபகம் சென்றார் என்பது வரலாறு. பாதகமான சூழலிலிருந்த அரபக வணிகர்கட்குச் சாதகமான வணிகச் சூழலை சிந்துப் பகுதியில் உருவாக்கவே முஹம்மது பின் காசிம் சிந்துப் பகுதி மீது படையெடுத்தாரே தவிர, நாட்டைப் பிடிக்கவோ ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றவோ இல்லை.

மக்காப் படையெடுப்பும் ஜிஹாதே

அவ்வளவு ஏன்? பெருமானார் (சல்) அவர்கள் மக்கா மீது படையெடுத்தார்கள் என்றுதான் மொட்டையாகப் பல வரலாற்றாசிரியர்களால் குறிக்கப்படுகிறது. ஆனால், உண்மை நிலை என்ன? பெருமானார் அவர்கள் மக்காவைப் பிடித்து ஆட்சி செய்ய வேண்டும் என்ற நாடு பிடிக்கும் ஆசையில் மக்கா மீது படையெடுக்கவோ அல்லது படை நடத்தவோ இல்லை என்பதுதான் உண்மை வரலாறு.

ஹுதைபியாவில் ஒரு உடன்படிக்கை அண்ணாலாருக்கும் மக்கா குறைஷிகளுக்குமிடையே ஏற்படுகிறது. அந்த உடன்படிக்கை மக்கா குறைஷிகளுக்கு சாதகமாகவும் பெருமானார் (சல்) அவர்கட்கு மிகப் பெரும் பாதகமாகவும் அமைந்த ஒருசார்பான உடன்படிக்கை. இருப்பினும் உலகில் சாந்தியையும் சமாதானத்தையும் நிலை நிறுத்தும் வகையில் அந்த உடன்படிக்கையை ஏற்கிறார் அண்ணலார். இம்மண்ணுலகில் இறை நெறியை நிலைநிறுத்தவும், மக்களிடையே சாந்தியையும் சமாதானத்தையும் நிலை நிறுத்தவும் முஸ்லிம்கள் எத்தகைய தியாகத்தையும் செய்யத் தயங்கக் கூடாது என்பதை உலகினர்க்கு உணர்த்தவுமே குறைஷிகள் விதித்த அத்தனை நிபந்தனைகளையும் ஏற்றார் ஏந்தல் நபி (சல்) அவர்கள்.

அப்பாலைப் பகுதியில் பல்வேறு இன மக்கள் வாழ்ந்து வந்தனர். அவர்களுள் பனீகுளாஅ என்பது ஒரு சின்னஞ்சிறு இனம். அவர்களும் குறைஷிகளைப் போன்று உருவ வழிபாடு நடத்தும் வழக்கத்தினர். அவர்களும் முஸ்லிம் களுடன் ஏற்பட்ட ஒப்பந்தத்தில் சம்பந்தப்படுகிறார்கள்.

குறைஷிகள் பனீகுளாஅ வகுப்பினர்க்கு பெருந் தொல்லையும் துயரமும் தருகிறார்கள். இரு சாராரும் விக்கிரக வழிபாடு செய்பவர்களாக இருந்தபோதிலும் மிகச் சிறுபான்மையினர் என்பதனாலும் முஸ்லிம்களுக்கு எல்லா வகையிலும் உதவி வருவதாலும் குறைஷிகள் பனீகுளாஅ வகுப்பினரைத் தொடர்ந்து தொல்லைகளுக்காளாக்கி வந்ததை பெருமானார் கண்டித்து குறைஷிகளுக்குக் கடிதம் எழுதினார். அக்கடிதத்தை அலட்சியப்படுத்திய மக்கா குறைஷிகள் பனீகுளாஅ மக்களுக்குத் தொடர்ந்து துன்பம் தரவே, அதைப் பொறுக்காது, சிறுபான்மையினரான பனீகுளாஅ மக்களைக் காக்கும் வகையிலேயே பெருங் கூட்டத்தினரைத் திரட்டி மக்காவுக்கருகில் இரவில் குழுமியிருந்ததைக் கண்டு பயந்துபோன மக்கா குறைஷிகள், அதைப் படையெடுப்பாகக் கருதி, பயந்துபோய் சரணடைந்தனர் என்பது வரலாறு.

எனவே, பனீகுளாஅ மக்களைக் காப்பதற்காகத்தான் மக்காக் குறைஷிகளின் மீது பெருமானார் படையெடுப்புப் பாவனை செய்தார்களேயன்றி, மக்காவை கைப்பற்றி ஆள வேண்டும் என்ற ஆதிக்க உணர்வோடு படைதிரட்டி போர் தொடுக்கவில்லை.

இங்கும் கூட நாம் கவனிக்க வேண்டிய இன்றியமையாச் செய்தி, தங்களின் தற்காப்புக்காகக் கூட அவர்கள் முயற்சி மேற்கொள்ளாது, ஒரு சிறுபான்மை சமூகத்தவர்களின் பாதுகாப்புக் கருதியே பெருங் கூட்டத்தைத் திரட்டி மக்கா நகர் சென்றார். இதுதான் ஜிஹாதின் பாற்பட்ட இராணுவ உத்தி அல்லது போர் உத்தி. இதுவே 'ஜிஹாதுல் அஸ்கர்' எனப்படுவதாகும்.

'ஜிஹாதுல் அக்பர்'

மற்றொன்று, 'ஜிஹாதுல் அக்பர்' என்பதாகும். 'இதற்கு மிகப் பெரிய போராட்டம்' என்பது பொருளாகும். ஜிஹாது அஸ்கரைவிட ஜிஹாதுல் அக்பர் என்பது சிறப்புமிகு ஒன்றாகும்.

இதற்கு வேறொரு வகையில் பொருள் கூறுவதென்றால் 'நம்மை நாமே எதிர்த்துப் போராடுவது; வெற்றி பெறுவது. நம்மை நாமே வெற்றி கொள்வது என்றால் என்ன?

நம் மனதை சென்றவிடமெல்லாம் செல்லவிடாமல், மனத்தை ஒருமுகப்படுத்தி, பக்குவப்படுத்தி அதனை நல்லுணர்வின்பால் திருப்புவதே நம்மை நாமே வெற்றி கொள்ள முயல்வதாகும். இதையே மெய்ஞ்ஞானியர் 'உன்னை உன்னளவில் இறந்துவிடும்படி செய்தல்' என்பர். உன்னளவில் இறக்கும் உன் உள்ளத்தை இறைவனிடம் வாழும்படி செய்தலாகும்.

நம் உள்ளத்தில் இறையுணர்வு பூரணமாய்ப் பொங்கிப் பொழியாமல் இருப்பதற்கு என்ன காரணம்? சில தீய உணர்வுகள், தீய சிந்தனைகள், தீய குணங்கள் நம்மிடம் நிறைந்திருப்பதோடு சில சமயம் நம்மை ஆட்சி செய்து ஆட்டிப் படைக்கவும் செய்கின்றன. இதனால் நம் மனம் களங்கமிக்கதாக ஆகிவிடுகின்றது. இத் தீயுணர்வு, கீழ்தடைகளை மனத்தளவில் ஒழித்து, உள்ளத்தை அப்பழுக்கற்றதாக தூய்மையானதாக ஆக்கிக் கொண்டதால் அங்கே இறையுணர்வு பூத்துக் குலுங்கும்.

மனிதனின் அறிவு விளக்கத்திற்கு அடிப்படை யாயமைவன ஐம்புலன்களாகும். இதனை சம்ஸ்கிருதத்தில் ஐந்திரியங்கள் என்று கூறுவர். மனிதனின் ஐம்பொறிகளாகிய கண், காது, மூக்கு, வாய், மெய், எனப்படும் தொடுவுணர்வு ஆகிய ஐம்புலன்களும் செவ்வனே இயங்க, இவ்வைம்பொறிகளாகிய யானைகளை அறிவு என்னும் அங்குசத்தால் அடக்கி ஆள்வதே 'ஜிஹால் அக்பர்' எனும் மாபெரும் போராட்டம். இதன் அடிப்படையில் அமைவதுதான் சூஃபியிஸம் எனும் மெய்ஞ்ஞான வாழ்வு.

'மரணம் வருமுன் மரணித்துவிடு'

ஆன்மீக வாழ்வின் அடித்தளம் புலனடக்கமாகும். அண்ணல் நபிகள் நாயகம் (சல்) அவர்கள் "மரணம் வருமுன் மரணித்து விடு" என்று கூறினார்கள். இவ்வாசகம் பொருள் பொதிந்த அற்புதமான வாசகமாகும். "மரணம் வருமுன் மரணித்துவிடு" என்றால் என்ன பொருள். உன் உள்ளத்தை முழுமையாக இறைவனிடம் ஒப்படைக்க வேண்டுமென்றால், நீ இறப்பதற்குமுன் உன்னிடத்திலுள்ள தீய உணர்வுகள், தீய சிந்தனைகள் மேலும் உன் உள்ளத்தில் நல்லுணர்வுகள் உருவாவதற்குத் தடையாக உள்ள தடைக்கற்களையெல்லாம் தூக்கியெறிந்து அவற்றையெல்லாம் அழித்துவிடு. அதுதான் உண்மையான மரணம். அதற்கப் புறம்தான் இறைவனிடம் நேராகப் போக வேண்டிய பாதையை நீ தேடிக் கொள்ள முடியும். இதுதான் சூஃபிமார்களாகிய இஸ்லாமிய மெய்ஞ்ஞானிகள் அனைவரும் கண்டறிந்து பாராட்டிய பாதை.

இதையேதான் வான்புகழ் வள்ளுவரும்,

"உரனெனும் தோட்டியான் ஒரைந்தும் காப்பான்
வரனெனும் வைப்பிற்கோர் வித்து"

எனக் கூறி அறிவுறுத்துகிறார்.

"அறிவு என்னும் அங்குசத்தால் ஐம்பொறிகளாகிய யானைகளை யாறொருவர் அடக்கி ஆள்கிறாரோ அவர் அறிவுக்கு வித்துப் போன்றோர் ஆவார்," என்பது அவர்தம் கருத்தாகும்.

புலனடக்கம் என்பது அவ்வளவு எளிதான காரியம் அன்று. எல்லோராலும் இயலக்கூடிய செயல் அல்ல. மனிதனின் ஐம்புலன்கள் மனிதனையே ஆட்டி வைப்பவையாகும். அவற்றின் அட்டகாசப் போக்கால் மனிதன் எளிதாகத் தன் ஐம்புலன்களுக்கு அடிமையாகி விடுகிறான். அதன்பின் எல்லாவிதமான, தீயுணர்வுகள், தீச் சிந்தனைகளும், தீக் குணங்களும் எளிதாக அவனுள்ளே புகுந்து அவன் மனத்தையே நஞ்சாக்கி விடுகின்றன. ஆனால், இவ்வைம்புலன்களையும் நம் வயப்படுத்தினோமானால் நம் உள்ளத்துள் மாறுபாடான உணர்வோ சிந்தனையோ அறவே தலைதூக்க இயலாமல் போய்விடும். இன்னும் சொல்லப்போனால் அனைத்து மனக்கதவுகளும் அடைபட்டுப் போகும். அதன்பின் நம் உள்ளம் இறையுணர்வோடு ஒன்றி, நம்மை சரியான வழித்தடத்தில் பீடுநடை போட பெருந்துணையாயமையும். 

'திக்ர்' தரும் செய்தி

ஐம்புலன்களை அடக்கி, இதயமெல்லாம் இறையுணர்வுப் பொங்கிப் பொழிய இஸ்லாம் பல வழிகளைக் காட்டுகின்றது. அவற்றுள் புகழ் பெற்ற பெருவழியாக இஸ்லாம் இனம் காட்டுவது 'திக்ர் ' ஆகும். திருமறை பிறந்த அறபுச் சொற்களில் சிலவற்றை ஓசையோடும் வெளி ஒசையின்றி உள்ளொலியோடும் திரும்பத் திரும்பச் சொல்லி உச்சாடனம் செய்யப்படுகிறது. உள்ளும் புறமும் எழுப்பப்படும் இச்சொற்களின் ஒசை மூளைப் பகுதியின் ஒரு குறிப்பிட்ட பிரிவில் ஒருவித அதிர்வை உருவாக்கு கின்றன என்று ஜப்பானிய நரம்பியல் வல்லுநர் ஒருவர் கண்டறிந்துள்ளார். உச்சரிக்கப்படும் சொற்களின் ஓசைக்கேற்ப தொடர் லயமாக மூளைப் பகுதியில் ஏற்படும் அதிர்வுகள் அவனைப் பிற சிந்தனைகளிலிருந்து விடுபடச் செய்து ஆன்மீக உணர்வை தொடர்ந்து உருவாக்கிப் பலப்படுத்துகிறது. அது 'திக்ர்' செய்பவருக்கு ஒருவித இன்ப உணர்வை, பேரானந்தத்தை, இதற்குமுன் அனுபவித்திராத ஒரு புதுவித இறை அனுபவ உணர்வை அவருக்கு ஊட்டி மகிழ்விக்கிறது. இது ஒருவித இறை தியானமாக அமைந்து, அவனுள் இருக்கும், இறைவனிடமிருந்து பெற்ற ஆன்மாவைத் தட்டி எழுப்புகிறது. விழித்துக் கொண்ட ஆன்மா அவனை இறைவனை நோக்கிச் செல்லத் தூண்டுகிறது. இவ்விதம் தொடர் 'திக்ர்' பயிற்சியின் மூலம் ஆன்ம விழிப்பும் இறை நெருக்கமும் பெற ஏதுவாகிறது. இஃது அண்மைக் காலத்தில் அறிவியல் பூர்வமாக நிறுவப்பட்டு வருகிறது.

ஆன்மீக உணர்வு பெற நாம் மேற்கொள்ளும் திக்ர் பயிற்சியின்போது மூளைப் பகுதியில் ஏற்படும் அதிர்வு அதிகரிக்க அதிகரிக்க நாம் ஆன்மீக உணர்வின் அனுபவத்தின் உச்சத்தையே எட்ட முடிகிறது என்பதை இன்று அறிவியல் ஆய்வுகள் மெய்ப்பித்துள்ளது வியப்பாக இருக்கிறது.

ஆன்மீகமும் அறிவியலும் வேறு அல்ல

ஆய்ந்து பார்த்தால் ஆன்மீகமும் அறிவியலும் இணைந்து, முழுமையான இஸ்லாமிய அறிவை-இறை நெறியை முழுமையாக அறிந்துகொள்ள ஏதுவாயமை கிறது. அறிவியல துறையையும் ஆன்மீகத் துறையும் முரண் பட்டனவாக கருதுவது உண்மைக்குப் புறம்பானதாகும். சுருங்கச் சொன்னால் மனிதரின் இரு கண்களும் முழுமையான பார்வையைப் பெறத்துணை செய்வதைப் போன்று ஆன்மீகமும் அறிவியலும் இஸ்லாத்தின் இரு பெரும் கண்களாக அமைந்து இறைநெறியின் முழுத்தோற்றத்தை வழங்கி, மனிதனை அதன் வழி வாழத் தூண்டுகின்றன. இவ்விரு துறைகளின் உற்ற துணையோடு வாழ முனையும் ஒவ்வொரு முஸ்லிமும் மனிதர்களில் மேம்பட்டவர்களாக-மனிதப் புனிதர்களாக வாழும் பேற்றைப் பெறுகின்றார்கள்.

இந்த இருபெரும் துறைகளின் இணையும் துணையும் மனிதகுல வாழ்வை மாண்புடையதாக்கும் இருபெரும் சக்திகளாகும்.

உடல் தோல் பேசும்

திருமறையில் கூறப்படும் ஆன்மீகச் செய்திகளுக்கு அறிவியல் ஒளி பாய்ச்சப்படும்போது, அவற்றின் அடிப்படை உண்மைகள் தெற்றென விளங்குகின்றன. சான்றாக ஒன்றைப் பார்ப்போம்.

இறுதித் தீர்ப்பு நாளின்போது இறைச் சன்னிதானத்தில் விசாரணைக்காக நிற்கும்போது, நிற்பவர்களின் வாய் பேசாது. அப்போது, "மறுமையில் மனிதனின் ஒவ்வொரு உறுப்பும், அவனுடைய உடல்தோலும் பேச ஆரம்பிக்கும். அவை இவ்வுலகில் மனிதன் செய்த ஒவ்வொரு செயலைப்பற்றியும் ஓர் அணுவும் விடாமல் அப்படியே ஒப்புவிக்கும். மனிதனுக்கு அவனுடைய உடல் உறுப்புகளே சாட்சி பகரும்" என்பது திருக்குர்ஆன். 

இவ்வுலக வாழ்வின்போது பலதையும் பேசிப் பழக்கப்பட்டுப் போன வாய், வழக்கம்போல் பொய் புரட்டுகளையும் இணைத்துப் பேச முனைந்துவிடும் என்பதற்காக, அதைத் தவிர்த்துள்ள பிற உடல் உறுப்புகளெல்லாம் உள்ளதை உள்ளபடி பேசும். குறிப்பாக 'உடல் தோல் பேசும்' என்பது இங்கு கூர்ந்து கவனிக்கப்பட வேண்டியதாகும்.

'தோல் பேசுமா?' என்ற கேள்விக்கு டாக்டர் ஆர்லன் கார்னி எனும் அமெரிக்க விஞ்ஞானி தன் நீண்ட நாள் ஆய்வின் விளைவாக 'தோல் பேசும்' என்பதை ஆதார பூர்வமாக நிரூபித்துக் காட்டியுள்ளார். அவரது அறிவியல் ஆய்வுக்கு அவர் வைத்துள்ள பெயர் 'Skin Speech' என்பதாகும்.

"செவிப்பறை கிழிந்துவிட்டாலோ, நோய்வாய்ப் பட்டாலோ, பிறகு காதுகளால் ஒலிகளைக் கிரகிக்க முடியாது. அத்தகைய சந்தர்ப்பங்களில் விசேஷமாகத் தயாரிக்கப்பட்ட சில எலெக்டிரானிக் இயந்திரப் பொறிகளின் துணைகொண்டு உடல் தோலையே 'காதுகளாக'ப் பயன்படுத்தலாம்" என 30.5.84 அன்று வெளியான டைம்ஸ் ஆஃப் இண்டியா இதழில் அவரது விரிவான கட்டுரை வெளிவந்துள்ளது.

இதிலிருந்து திருக்குர்ஆனில் இறைவனால் கூறப்பட்டுள்ள ஆன்மீகக் கருத்துகள் ஒவ்வொன்றையும் அறிவியல் அடிப்படையில் ஆயும்போது, அவற்றின் உட்பொருளும் தெளிவான கருத்துகளும் நமக்குத் தெள்ளுதின் புலனாகின்றன.

'தோல் பேசும்' என்ற கோட்பாட்டை அறிவியல் பூர்வமாக விளக்கினால் உங்களுக்கு எளிதாகப் புரியுமென எண்ணுகிறேன்.

நம் காதிலே ஒலிகளைக் கேட்பதற்கென்று 'செவிப்பறை' என்ற மெல்லிய சவ்வு ஒன்று உண்டு. இது மென்மை யானது மட்டுமல்ல வலுவற்றதுமாகும். மிகப் பெரும் வெடிச் சத்தத்தைக் கேட்க நேர்ந்தால் கிழிந்துவிடும் அல்லது வெடிப்போ கீறலோ விழுந்து விடும். அதன்பிறகு காது கேட்கும் சக்தி இல்லாமற் போய்விடும். இதன் செயல்பாட்டை இன்னும் தெளிவாகப் பார்ப்போம்.

காதின் உட்பகுதியில் செவிப்பறை அமைந்திருக்கும். நாம் பேசும்போது எழும் ஒலி செவிப்பறையைத் தாக்கும். அப்போது செவிப்பறை அதிர்வடையும். செவிப்பறை எந்த அளவிற்கு அதிர்கிறதோ அந்த அளவுக்கு அவ்வொலி அதிர்வலைகளாகச் செய்தி நரம்புகள் மூலம் மூளைக்கு அனுப்பப்படுகிறது. இது எப்படியென்றால் நான் இப்போது வானொலியில் பேசுவதாக வைத்துக் கொள்ளுங்கள், அப்பேச்சு உங்கள் காதுகளுக்கு நேரடியாக வருவதாக நீங்கள் கருதுகிறீர்கள். அதுதான் இல்லை. நான் வானொலியில் பேசும் பேச்சின் சொற்கள் எல்லாம் ஒலி அலைகளாக மாற்றப்பட்டு விண்ணில் அனுப்பப்படுகிறது. வானில் மிதந்துவரும் ஒலி அலைகள் 'ஆன்டென்னா' எனும் அலைவாங்கி மூலம் ஈர்க்கப்பட்டு அவ்வலைகள் மீண்டும் ஒலிகளாக மாற்றப்பட்டு வானொலி மூலம் ஒலிபரப்பப்படுகின்றது. இதே முறையில் தான் செவிப்பறை மூலம் ஒலி மூளைக்கு அனுப்பப்படுகிறது. இதயம் உட்பட உடலில் மாற்றுறுப்புப் பொருத்தும் தொழில் நுட்பம் வளர்ந்திருந்த போதிலும் பழுதடைந்த செவிப்பறைக்கு மாற்றாக வேறொரு செவிப்பறை பொருத்த இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

செவிப்பறை முற்றாகக் கெட்டுவிட்டது என்றால் அவனால் என்றைக்கும் எதையும் கேட்கவே முடியாது. அவன் டமாரச் செவிடாவதைத் தவிர வேறு வழியில்லை. ஆனால், அவனையும் கேட்கச் செய்ய முடியும் என்கிறார் அமெரிக்க விஞ்ஞானி டாக்டர் ஆர்லன் கார்னி. எப்படி? 

இயற்கையாக நம் உடம்பிலுள்ள தோல்கேட்கும் ஒலிகளையெல்லாம் பதிவு செய்யக் கூடியனவாக உள்ளன. அத்தோலின் மீது ஒரு எலெக்ட்ரானிக் டிவைசை வைத்து அதனுடைய இன்னொரு முனையை காதினடியில் செவிப் பறையிலிருந்து மூளைக்குச் செல்லும் நரம்போடு இணைத்துவிட்டால் பேசுவதெல்லாம் மூளைக்குச் செல்ல, மற்றவர் பேசுதைப் புரிந்து கொள்ள முடியும். அதனால் இதனை 'தோல் பேச்சு' எனும் பொருளில் 'ஸ்கின் ஸ்பீச்' எனப் பெயரிட்டு அழைக்கிறார் டாக்டர் ஆர்லன் கார்னீ.

இவ்வாறு இன்று புதிதுபுதிதாக கண்டுபிடிக்கும் அறிவியல் உண்மைகள் அனைத்தின் அடித்தளமும் திருமறையில் இறைவனால் தெளிவாகச் சொல்லப்பட்டிருப்பதைக் கண்டு இன்றைய ஆய்வுலகம், குறிப்பாக விஞ்ஞான உலகம் வியந்து வாயடைத்துப் போய் நிற்கிறது. திருமறையை அறிவியல் கண்ணோட்டத்தோடு ஆயும் போக்கு உலகெங்கும் பெருகி வருகிறது. இதனால் அறிவியல் ஆய்வுலகம் ஒரு வகையில் செழுமையடைந்து வருகிறதென்றே கூறலாம்.

ஆனால், முஸ்லிம் மக்களாகிய நாம், இஸ்லாம் சாதாரணமாக விதித்துள்ள இஸ்லாமியக் கடமைகளைக் கூட நிறைவேற்ற இயலாதவர்களாக வெறும் முஸ்லிம் பெயர் தாங்கிகளாக வாழவே முற்படுகிறோம். இஸ்லாம் எதையெல்லாம் தவிர்க்கப் பணிக்கிறதோ அதையெல்லாம் நம் சுய நல வேட்கையில் இஸ்லாமிய நெறிகளுக்குப் புறம்பாக இருந்தால் கூட அதைக் கைவிடாமல் வாழவே விழைகிறோம் என்பதை வருத்தத்துடன் சொல்லாமல் இருக்க முடியவில்லை. இதில் மிக முக்கியமான ஒன்றை உங்கள் முன் எடுத்துவைக்க விரும்புகிறேன்.

இக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கி நடத்திவரும் ஈமான் அமைப்பின் தலைவர் அவர்கள் மிகவும் உணர்ச்சி வசப்பட்டு ஒரு விஷயத்தைக் கூறினார். இஸ்லாத்தில் நிலவி வரும் கைக்கூலி பற்றிய பிரச்சினைதான் அது. அவர்களைப் போன்ற சமுதாயப் பெருமக்கள் இத்தகைய பிரச்சினைகளைக் கையிலெடுத்துக் கொண்டிருப்பதற்காகப் பெருமைப்படுகிறேன்.

இன்றைய உலகின் நோக்கும் போக்கும்

இன்றைய உலகு இஸ்லாமிய நெறியை, பெருமானாரின் போதனைகளை அறிவியல் பூர்வமாக அணுக முற்பட்டுள்ளது. காலத்தை விஞ்சி நிற்கும் ஏற்றமிகு கருத்துகளை, புரட்சிகரமான சிந்தனைகளைக் கண்டு வியந்து போற்றுகிறது. அவற்றைச் செயற்படுத்தி வெற்றி காண முற்படுகிறது.

அதே சமயத்தில் இஸ்லாமிய மார்க்கத்தை சேர்ந்த முஸ்லிம்களாகிய நாம் இஸ்லாமிய நெறிப்படி வாழ்கிறோமா-வாழ முற்படுகிறோமா என்றால் 'ஆம்' என்று கூற என் 'நா' எழவில்லை. இஸ்லாத்தின் சிறப்புமிகு கொள்கைகள் பலவற்றுக்கு நேர்மாறான போக்கைக் கையாள்பவர்களாகவே இருக்கிறோம் என்பது ஒரு கசப்பான உண்மை.

சுய ஆய்வு

இந்நிலை மாற மீலாது விழாக்களிலாவது நாம் சுய ஆய்வு செய்ய முற்பட வேண்டும். அப்போதுதான் இஸ்லாமிய நெறிப்படி வாழ வேண்டிய நாம் எங்கே சறுக்கியிருக்கிறோம். எங்கெங்கே வழுக்கியிருக்கிறோம் என்பதை அறிந்துணரவும், அத்தவறான போக்குகளிலிருந்து மீண்டு, சரியான இஸ்லாமிய ராஜபாட்டைக்குத் திரும்ப வழிவகை ஏற்பட இயலும்.

மேல் மட்டம் விழித்தால் அடிமட்டமும் விழிக்கும்

இவ்விழாவுக்குத் தலைமை தாங்கி நடத்திக் கொண்டிருக்கும் அல்ஹாஜ் எஸ்.எம். சம்ஸ்தீன் அவர்கள் தம் தலைமையுரையில் இன்றைய சமுதாயப் போக்கைப் பற்றி விவரிக்கும்போது சற்று உணர்ச்சி வசப்பட்டவராக 'கைக்கூலி'யின் தீங்குகளைக் கடுமையாகச் சாடினார். அதைக் கேட்டு நான் பெருமகிழ்வடைந்தேன். சமுதாயத்தின் மேல் மட்டத்தில் வாழுபவர்களிடையே இத்தகைய சமூக உயர் சிந்தனைகள் பூக்கத் தொடங்கியது என்றால் அதன் நறுமணம், விளைவுகள் சமூகத்தின் அடிமட்டம் வரை விரைந்து பரவி நல்விளைவுகளை உருவாக்கும் என்பதில் ஐயமில்லை.

கைக்கூலி பெருநோய்

கைக்கூலி எனும் பெருநோய் இங்குள்ள பிற சமயச் சார்புள்ள சில சமூக மக்கள் மூலம் பரவிய மாபெரும் சமுதாய நோய். இதனால் இஸ்லாமியப் பெண்கள் அனுபவித்து வரும் தொல்லைகளும் துயரங்களும் கொஞ்ச நஞ்சமல்ல. தன்னைப் போல் இறையான்மா பெற்றவர்களே பெண்கள் என்பதற்கு மாறாக, மார்க்கெட்டில் வாங்கப்படும் பொருட்களைப்போல் பெண்கள் கருதப்படவும் நடத்தப்படவுமான இழிநிலையே இன்றுள்ளது என்பது மறுக்கமுடியாத உண்மை.

நாணயத்தின் இருபுறமே ஆணும் பெண்ணும்

இதற்கு அடிப்படையான காரணங்களில் முக்கியமான ஒன்று பெண்களைத் தாழ்மையாகக் கருதும் தவறான மனப்போக்காகும். உலகத்துச் சமயங்களிலேயே உன்னதமான இடத்தைப் பெண்களுக்கு வழங்கியிருக்கும் மார்க்கம் இஸ்லாம் என்பதை அறிவுலகம் நன்கு அறிந்து போற்றி வருகிறது.

ஏனெனில், மனிதன் பெற்றுள்ள இறை ஆன்மாவின் ஒரு பகுதியாக அமைந்திருப்பவளே பெண். ஆணுக்குள்ள அனைத்து உரிமைகளும் பெண்ணுக்கும் உண்டு. ஆனால், அவை செயல்படும் வழி முறைகளுள் வேறுபாடு உண்டு. ஒட்டு மொத்த சமுதாய நலன் ஆண்-பெண் இருவரையும் சார்ந்தே உள்ளது. நாணயத்தின் இரு பக்கங்களாக அமைந்திருப்பவர்கள் இஸ்லாமிய ஆணும் பெண்ணும்.

வால்ட் விட்மன் கவிதை

அமெரிக்காவின் மாபெரும் புதுமைக் கவிஞனான வால்ட் விட்மன் தன் கவிதையில் ஆணையும் பெண்ணையும் பற்றி பாடும்போது

"Female is love and beauty
Male is power and action
Both are secred"

என்று இரத்தினச் சுருக்கமாகப் பாடினான்.

பெண் அன்பும் அழகுமாக இருக்கிறாள்
ஆண் சக்தியும் செயலுமாக இருக்கிறான்
இரண்டும் புனிதத் தன்மை வாய்ந்தவைகளே"

என்பது இதன் பொருள். இருபாலரின் தனித் தன்மைகளை இரத்தினச் சுருக்கமாக உணர்த்தியுள்ளார் கவிஞர் வால்ட் விட்மன். இஸ்லாத்தின் பிழிவாகவே இக்கருத்து அமைந்துள்ளது. அகவாழ்வின் செழிப்புக்கு அன்பும் அழகும் ஆதாரமாயமைகின்றன. புற வாழ்வின் வெற்றிக்குச் சக்தியும் செயலும் அடித்தளமாயமைகின்றன. இரண்டும் ஒன்றிணைந்ததே மனித வாழ்க்கை. இதில் ஒருவரை மிக உயர்ந்தவர்கள் என்றோ மற்றொரு பாலரை மிகத் தாழ்ந்தவர்கள் என்றோ கூற முடியாது. எனினும் மனிதனின்றும் பெண்ணை இறைவன் உருவாக்கிய காரணத்தால் கையில் கட்டை விரல் இருப்பது போன்ற நிலை சமூகத்தில் ஆண்மகனுக்கு உள்ளதே தவிர, வேறு எந்தத் தனிச் சிறப்பும் இறைவனால் வழங்கப்படவில்லை. எனவே, ஆணுக்கும் பெண்ணுக்கும் இஸ்லாம் சம நிலை தந்துள்ளது. மணம் முடிக்க விரும்பும் மணமகன் பெண்ணுக்கு மஹர் எனும் அன்பளிப்புத் தொகையாக வாழ்க்கைப் பணமாக முன்னதாகத் தந்த பின்னரே மண முடிக்க வேண்டும் என விதி வகுத்தது. பெருமானார் (சல்) அவர்களும், "திருமணத்தின் போது மணமகனுக்கு அவனுடைய மஹர் தொகையை கண்ணியமான முறையில் கொடுத்து விடுங்கள்" என்று பணித்துள்ளார்.

அண்ணலார் வழிக்கு
மாறுபாடாக

நாயகத் திருமேனியின் வாக்கை மட்டுமல்ல, இஸ்லாமியக் கொள்கை, கோட்பாடுகளைக் குழி தோண்டிப் புதைக்கும் வகையில் பெண் வீட்டாரிடம் ஆயிரக்கணக்கில் பணமும் தங்கமும் வைரமும் வரதட்சிணையாகக் கேட்டுப் பிழிந்தெடுக்கிறார்கள். பெண்ணுக்கு மஹர் கொடுப்பதற்கு மாறாகக் கைக்கூலி கேட்டு கையேந்திட பெண் வீட்டாரிடம் நிற்கிறோமே என்ற வெட்கம் பெரும்பாலோருக்கு இருப்ப தில்லை. திருமணம் என்றால் மணப் பொருத்தம், குணப் பொருத்தம் பார்ப்பது இயல்பு. ஆனால், இன்று பணப் பொருத்தமும் நகைப் பொருத்தமுமே பார்க்கப்படுகிறது. அன்றாடங்காய்ச்சியாக கூலித் தொழில் செய்யும் முஸ்லிம் கூட பல ஆயிரங்களையும் நகை நட்டுகளையும் எதிர் பார்ப்பது - வாடிக்கையாகிவிட்டது. இதனால் வறுமை வாய்ப்பட்ட பல நூறு இளங்குமருகள் விடியலை நோக்கித் தங்கள் இளமையை இழந்து கொண்டிருக்கிறார்கள்.

அரபகத்தில் அவதி

நம் நிலைதான் இப்படி என்றால், அரபு நாடுகளில் வேறொரு கொடுமை தலைதூக்கி, ஆண்களை அவதிக்குள்ளாக்கிக் கொண்டுள்ளது. இதை விளங்கிக் கொள்ள அண்மையில் எகிப்தில் எனக்கேற்பட்ட கசப்பான அனுபவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்வது பொருத்தமானது எனக் கருதுகிறேன். 

அண்மையில் எகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோவுக்குச் சென்றிருந்தேன். அரசு விருந்தாளி என்பதால் அங்குள்ள நட்சத்திர ஹோட்டலில் ஒரு வாரம் தங்க வைக்கப்பட்டிருந்தேன். என் தேவைகளைக் கவனித்துக் கொள்ள நியமிக்கப்பட்டிருந்த சேவகர் தேவைக்கு அதிகமாகவே என் மீது அன்பைப் பொழிந்தார். மூன்றாம் நாள் பேச்சு வாக்கில் சற்று தயங்கியவராக "என் திருமணத்திற்கு நீங்கள் உதவ வேண்டும்" என மிக பவ்வியமாகக் கேட்டுக் கொண்டார். எனக்குச் சரியாகப் புரியவில்லை. நம்மைப் பெண் பார்க்கச்சொல்கிறாரா அல்லது அவர் சார்பில் பெண் வீட்டாரிடம் பேசி முடிக்க அழைக்கிறாரா? என்று நான் எண்ணிக் கொண்டிருக்கும்போதே, ஒரு புன் சிரிப்பை உதிர்த்தவாறு சென்றுவிட்டார். மறுநாள் காலை நான் வெளியே புறப்படுவதற்குச் சுற்று முன்னதாக ஒரு அழகான இளம் பெண்ணை அழைத்து வந்து அறிமுகப்படுத்தும் வகையில், "இவள் என் உறவுக்காரப் பெண். இவளை நான் நிக்காஹ் செய்து கொள்ள விரும்புகிறேன். ஆனால், பெண் வீட்டார், பெண்ணுக்கு முப்பதினாயிரம் எகிப்திய டாலர்களை மஹராகக் கொடுத்தால், அவளை நிக்காஹ் செய்து கொடுப்பதாகக் கூறிவிட்டனர். உங்களைப் போன்ற வர்களின் உதவியோடு கடந்த ஓராண்டாக சுமார் இருபத்தியிரண்டாயிரம் எகிப்திய டாலர்களைச் சேர்த்து விட்டேன். இன்னும் எட்டாயிரம் டாலர்கள் சேர்த்து விட்டால் எங்கள் நிக்காஹ் இனிது நடந்து விடும்" என்று ஏக்கப்பெருமூச்சோடு கூறி நின்றார். அவர் கூறியதையெல்லாம் அப்படியே ஆமோதிப்பதுபோல் நாணத்தோடு தலையை மேலும் கீழும் லேசாக ஆட்டியபடி அந்நங்கை நின்று கொண்டிருந்தாள். ஒரு வித வெட்கத்தால் அவள் முகம் ஜிவ்வென சிவப்பேறியிருந்தது. அவர்கட்கு உதவி செய்ய விழைந்த நான் நூறு எகிப்திய டாலர் நோட்டை எடுத்து நீட்டியவாறு, "சக்திக்கேற்றவாறு தானே மஹர்த் தொகை வழங்க வேண்டும். உன் சக்திக்குமீறிய பெருந்தொகையைக் கேட்பது கொடுமையாக உள்ளதே?" எனக் கூறி, நான் சற்று அங்கலாய்த்தபோது, அவன் கூறிய பதில் என்னைத் தூக்கி வாரிப் போட்டது. "இப்பெண்ணுக்கு ஐம்பதினாயிரம் மஹர் கொடுத்து மணம் முடிக்க பல பேர் காத்திருக்கிறார்கள். இப் பெண்ணும் நானும் ஒருவரையொருவர் உள்ளன்போடு நேசிப்பதால் எனக்கு சலுகை காட்டும் வகையில் முப்பதாயிரம் மஹர் நிர்ணயித்துள்ளார்கள் என்று கூறி, நன்றி சொல்லி நகர்ந்தார்கள்.

இங்கு இஸ்லாத்துக்குப் புறம்பான கைக்கூலி முறை கொடுமைப்படுத்துகிறது என்றால், அரபு நாடுகளில் அனுமதிக்கப்பட்ட மஹர் தொகை அதிகரிப்பு ஏழை, எளியவர்களை வருத்துவதாக அமைந்துள்ளது. கைக்கூலி எனும் வரதட்சணை முறை ஒழிக்கப்பட வேண்டும். சக்திக்கு மீறிய முறையில் மஹர் வசூலிக்கும் போக்கு மட்டுப்படுத்தப்பட வேண்டும். இல்லையேல் இரு சாராருமே இறை தண்டனைக்கு ஆளாவதினின்றும் தப்ப முடியாது.

எந்தப் பொருத்தம்

நிக்காஹ் செய்ய விரும்பும்போது ஆணுக்கும் பெண்ணுக்கும் மனப் பொருத்தமும் குணப்பொருத்தமும் முதன்மையாகப் பார்க்கப் பட வேண்டும். அப்போது அவ்வாழ்க்கை செம்மையானதாக அமையவியலும்.

எனவே, இஸ்லாத்தை அண்ணலாரின் வழியாக, திருமறையின் வழிகாட்டுதலோடு பேணி நடக்க ஒவ்வொரு முஸ்லிமும் வாழக் கடமைப்பட்டுள்ளோம். அவ்வாறு வாழும் வாழக்கையே வெற்றிகரமானதாக அமையவியலும். அத்தகு உறுதியை பெருமானாரின் பிறந்த நாள் விழாவிலே ஏற்போமாக.

(17-7-98 அன்று துபாய் ஈ.டி.ஏ. அஸ்கான் நிறுவனக் கூடத்தில் நடைபெற்ற மீலாது விழா உரைச் சுருக்கம்)