ஈசாப் கதைப் பாடல்கள்/எலிப் படை
எலிகள் யாவும் படைதி ரண்டு
கிளம்ப லாயின;
எதிர்த்துப் பூனைக் கூட்டத் தோடு
போர்பு ரிந்தன.
புலிகள் போலப் பாய்ந்து பாய்ந்து
பாதி எலிகளைப்
பிடித்துக் கடித்துப் பூனைக் கூட்டம்
விழுங்கி விட்டதே!
பிழைத்து வந்த எலிகள் சேர்ந்து
கூட்டம் போட்டன.
பெரிதும் கொழுத்த எலி எழுந்து
பேச லானது:
‘இளைக்க இளைக்க நாமெல் லோரும்
ஓடி வந்ததே
என்ன கார ணத்தி னாலே
என்று தெரியுமா?
தலைவ ரென்று சிலரை வைத்தோம்.
அவர்கள் சொற்படி
தகுந்த முறையில் போர்பு ரிந்தால்,
வெற்றி கிட்டிடும்.
பலத்த சண்டை போடும் போது
தலைவர் யாரெனப்
பார்த்துக் கண்டு பிடிப்ப தற்கே
சிரம மாகுதே!
ஆத லினால் குச்சி யாலே
குல்லா செய்துநாம்
அவர்கள் தலையில் மாட்டி வைப்போம்.
கண்டு கொள்ளவே.
சேதம் ஏதும் இன்றி அவர்கள்
காட்டும் வழியிலே
சென்று வெற்றி பெறுவோம்’ என்றே
எடுத்து ரைத்தது.
‘சரிதான்’ என்றே கூறி அவைகள்
குல்லா செய்தன.
தலைமை தாங்கும் எலிகள் தலையில்
மாட்டி விட்டன.
பெருமை யோடு தலைமை எலிகள்
முன்னே சென்றன.
பின்தொ டர்ந்து மற்ற எலிகள்
போக லாயின.
படைதி ரண்டு எலிகள் வரவே
பார்த்த பூனைகள்
பாய்ந்து வந்து மேல்வி ழுந்து
தாக்க லாயின.
நடுந டுங்கி எலிகள் யாவும்
முதுகைக் காட்டியே,
நான்கு திசையும் தலைதெ றிக்க
ஓட லாயின!
தப்பிச் சென்ற எலிகள் உடனே
வளையில் ஒளிந்தன.
தலையில் குல்லா தரித்த எலிகள்
தவிக்க லாயின!
அப்போ தந்தக் குல்லா வளைக்குள்
நுழைந்தி டாததால்
அந்தோ, வெளியில் அந்த எலிகள்
திகைத்து நின்றன!
தலையில் குல்லா தரித்து நின்ற
எலிகள் தம்மையே
தாவி வந்த பூனைக் கூட்டம்
பிடித்துக் கொண்டதே!
வெலவெ லத்துப் போன அந்தத்
தலைமை எலிகளின்
மேலே பாய்ந்து பூனை யாவும்
கடித்துத் தின்றன!