ஈசாப் கதைப் பாடல்கள்/கழுதை நிழல்
அரிசி பருப்பு விற்க வேண்டி
வணிகன் ஒருவனும்
அதிக தூரம் தன்னி லுள்ள
ஊரை நோக்கியே.
பெரிய கழுதை ஒன்றில் சுமையை
ஏற்றிச் சென்றனன்;
பின்னால் அதனைத் தொடர்ந்த வாறே
போக லாயினன்.
அந்தக் கழுதை வணிக னுக்கே
சொந்த மென்றுநீ
அவச ரத்தில் எண்ணி டாதே!
கதையைக் கேட்டிடு.
சொந்த மில்லை! வாட கைக்கே
அதைய மர்த்தினன்.
தொடர்ந்து கழுதைக் கார முனியன்
ஓட்டி வந்தனன்.
பட்டப் பகலில் சுட்டுப் பொசுக்கும்
வெய்யில் தன்னிலே
பாதித் தூரம் சென்ற வணிகன்
களைத்துப் போயினன்.
வெட்ட வெளியில் தங்கு தற்கு
நிழலில் லாததால்
வேறே என்ன செய்வ தென்றே
எண்ணிப் பார்த்தனன்.
கழுதை தன்னை அவ்விடத்தே
நிறுத்தச் சொல்லினன்;
களைப்புத் தீரக் கழுதை நிழலில்
அமர லாயினன்.
கழுதைக் கார முனியன் இதனைக்
கண்டு கோபமாய்க்
கண்டிப் பான குரலில் உடனே
கூற லாயினன்.
“வாட கைக்குக் கழுதை ஒன்றை
மட்டுமே தந்தேன்.
வாட்ட சாட்ட மாக இதனின்
நிழலில் அமர்வதேன்?
கூட வேஇக் கழுதை நிழலைச்
சேர்த்தோ பேசினீர்?
கொடுக்க வேண்டும் நிழலுக் காகத்
தனியே வாடகை”
இதனைக் கேட்ட வணிகன் உடனே
எழுந்து கோபமாய்,
“என்ன சொன்னாய்? கழுதை யோடு
நிழலும் சேர்ந்ததே.
அதற்குத் தனியே செப்புக் காசும்
தருவேன் என்றோநீ
ஆசை கொண்டாய், மடையா” என்றே
ஏச லாயினன்.
“நானோ மடையன்?" என்று கூறி
அந்த வணிகனை
நன்கு பிடித்துத் தள்ளி விட்டுக்
கழுதைக் காரனும்,
தானே அந்தக் கழுதை நிழலில்
அமர்ந்து கொண்டனன்.
தாங்கொ ணாத கோபத் தோடு
வணிகன் பாய்ந்தனன்.
கைக லந்து சண்டை அவர்கள்
போட லாயினர்.
கழுதை அந்தச் சமயம் பார்த்தே
ஓடி விட்டது!
“ஐயோ, கழுதை! கழுதை!” என்று
முனியன் கதறினன்.
‘அட்டா! சரக்குப் போச்சே!’ என்று
வணிகன் அலறினன்!