உள்ளடக்கத்துக்குச் செல்

ஈசாப் கதைப் பாடல்கள்/ஜாடித் தேன்

விக்கிமூலம் இலிருந்து

ஜாடித் தேனும் தரையிலே
தவறிக் கொட்டிக் கிடந்தது.
நாடி அதனை ஈக்களும்
கூடி வந்து மொய்த்தன.

தேனின் மீது அமர்ந்தன;
திருப்தி யாகக் குடித்தன.
தேனைக் குடிக்கும் ஆவலில்
சிந்தை மறந்து போயின.

அதிக நேரம் அப்படி
அமர்ந்த தாலே தேனுமே,
பதிய வைத்த கால்களைப்
பசைபோல் பற்றிக் கொண்டது.


எழுந்து பறக்க முயன்றன;
இறகை அடித்துப் பார்த்தன
முழுதும் தோல்வி! ஆதலால்,
மூச்சுத் திணற லானது.

உடம்பு முழுதும் தேனுமே
ஒட்டிக் கொண்டு ஈக்களை
உடும்புப் பிடியாய்ப் பிடித்தது;
உயிரை வாட்டி வதைத்தது.

சிக்கிக் கொண்ட ஈக்களோ
செய்வ தேதும் இன்றியே
மிக்க சிரமப் பட்டன.
மூச்சு நிற்கும் வேளையில்,

“ஆசை அதிகம் கொண்டதால்,
ஐயோ? இன்று நாமெலாம்
மோசம் போனோம்!” என்றன;
மிகவும் வருந்தி இறந்தன!