ஈசாப் கதைப் பாடல்கள்/ஜாதி நாய்
ஊரைக் காவல் செய்துவரும்
உயர்ந்த ஜாதி நாய்ஒன்று
வீரன் போலத் தலைநிமிர்ந்து
வீதியில் நடந்து சென்றதுவே.
செல்லும் போது தன்னுடைய
சிறிய குட்டி ஒன்றினையும்
மெல்ல அழைத்துச் சென்றதுவே.
வீதியில் நாய்கள் கண்டனவே.
சொறிநாய், வெறிநாய், தெருவினிலே
சோற்றுக் கலையும் நாய்களெலாம்
சிறிய குட்டியைக் கண்டதுமே
சேர்ந்து பலமாய்க் குலைத்தனவே.
குட்டி நாயைப் பார்த்தவைகள்
குலைத்ததை ஜாதி நாய்கண்டும்
சட்டை சிறிதும் செய்யாமல்
சாந்த மாகச் சென்றதுவே.
குட்டி நாய்:
அப்பா, உயர்ந்த ஜாதியென
அனைவரும் நம்மைப் போற்றுகிறார்.
அப்படி யிருந்தும் எனைப்பார்த்தே
ஆத்திரக் கூச்சல் இவைபோட,
கண்டும் சும்மா செல்கின்றாய்.
கடித்துக் கொன்றிட வேண்டாமா?
என்னே துணிச்சல் இவைகட்கு!
இவற்றைச் சும்மா விடலாமா?
அப்பா நாய்:
கட்டிக் கரும்பே, கண்மணியே,
கண்டேன்; கேட்டேன் அத்தனையும்.
எட்டி நின்றே குலைக்கின்ற
இந்தக் கோழை நாய்களெலாம்
உலகில் இருக்கும் வரையில்தான்
‘உயர்ந்த ஜாதி’ நாயென்றே
பலரும் நம்மை அழைத்திடுவார்;
பாராட் டெல்லாம் கூறிடுவார்.
ஒன்றுடன் மற்றொன் றிருந்தாலே
உயர்ந்தது எதுவென் றறிந்திடலாம்.
நன்றாய் வாழ இந்நாய்கள்
நாமும் வாழ்த்துக் கூறிடுவோம்.
78