உள்ளடக்கத்துக்குச் செல்

ஈசாப் கதைப் பாடல்கள்/தண்டனை

விக்கிமூலம் இலிருந்து

‘கொக்கரக் கோ’வெனக் காலையிலே
கூவிடும் சேவல். அதுகேட்டு,

என்றன் அம்மா எழுந்திடுவாள்.
எழுந்ததும் அடுப்பங் கரைதனிலே,

உறங்கும் வேலைக் காரியையே
உடலைத் தட்டி எழுப்பிடுவாள்.

வேலைக் காரி சோம்பேறி.
மிகவும் அலுத்துக் கொண்டிடுவாள்.

தினம்தினம் இப்படி எழுவதுமே
சிரம மாக இருந்ததனால்,


திட்டம் ஒன்று தீட்டினளே;
செய்கையில் காட்ட முயன்றனளே.

இரவில் எவரும் அறியாமல்
எடுத்துச் சென்றாள் சேவலையே.

கழுத்தைத் திருகிக் கொன்றனளே,
களிப்புடன் வந்து படுத்தனளே.

செத்துப் போனது சேவல்எனத்
தெரிந்தது, மறுநாட் காலையிலே.

ஆயினும் எப்படி இறந்ததென
அம்மா அறியாள்; வருந்தினளே.

‘இனிமேல் சேவல் கூவியபின்
எழுவது என்பது முடியாது.

அதனால், தினமும் நானேதான்
அதிகா லையிலே விழித்தெழுந்து,

வேலைக் காரியை எழுப்பிடவே
வேண்டும்’ என்று எண்ணினளே.

சேவல் இல்லை.ஆதலினால்.
தெரிந்திட வில்லை, நேரமுமே.

விடிந்தது என்ற நினைப்புடனே
வேலைக் காரியை என் அம்மா,


நடுஇர வதிலே எழுப்பிடுவாள்;
நன்றாய் வேலை வாங்கிடுவாள்!

இப்படித் தினந்தினம் நடுஇரவில்
எழுப்பிய தாலே மிகமிகவே

வருந்தினள், வேலைக் காரியுமே.
வாட்டங் கொண்டு கூறினளே;

“சோம்பல் ஓட்டிக் காலையிலே
சுறுசுறுப் பினையே தந்திடுமாம்

சேவல் தன்னைக் கொன்றேன்நான்.
சிறிதும் யோசனை இல்லாமல்.

சேவல் இருக்கையில் எஜமானி
தினமும் காலையில் எழுப்பிடுவாள்.

சேவல் இறந்தபின் நடுஇரவே
சித்திர வதைதான் செய்கின்றாள்.

ஐயோ! என்றன் துயரமதை
யாரிடம் கூறி அழுதிடுவேன்?

சேவலைக் கொன்ற பெரும்பழிதான்
தீர்ந்திடும் நாளும் எந்நாளோ?”