ஈசுரமாலை
Appearance
← | ஈசுரமாலை எழுதியவர்: ஔவையார் ஔவையார் அருளிய ஆத்திசூடி ஆதியாம் நூல்களில் ஒன்று ‘ஈசுரமாலை’. சிவபெருமானுடைய திருமேனித் தோற்றங்களையும் இயல்புகளையும் அருட்செயல்களையும் அடிதோறும் விளக்கி அகர வரிசையாய் அமைந்திருப்பது இந்நூல் |
→ |
காப்பு
[தொகு]- விரும்பித் தொழுவார் வினைதீர்க்க முக்கட்
- கரும்பிற் பிறந்த களிறு
நூல்
[தொகு]- அரும்பிய கொன்றை அணிந்த சென்னியன்
- ஆறும் பிறையும் சூடிய கடவுள்
- இறையவன் மறையவன் இமையவர் தலைவன்
- ஈசன் மழுப்படை ஏந்திய கையன்
- உம்பர் தலைவன் உயர்கயி லாயன்
- ஊழி ஊழி காலத்து ஒருவன்
- எங்கள் நாயகன் கங்கை வேணியன்
- ஏழ்உல குஆளி இமையவர் தலைவன்
- ஐங்காத்து ஒருகோட்டு ஆனையை ஈன்றவன்
- ஒன்றே ஊரும் ஒற்றி ஊரான்
- ஓங்கா ரத்துஉட் பொருளாய் நின்றவன்
- ஓளவனத் தில்லையின் ஆடல் உகந்தவன்
- அக்கு மாலை அரவோடு அணிந்தவன்
- கண்மூன்று உடையவன் கால காலன்
- ஙகரமும் நடுவு ஒருதூணி நிற்பவன்
- சம்பு மறையவன் சம்பந்த நாதன்
- ஞயநிறை பூரணன் ஞான நாயகன்
- இடம்பெறு ஞானியர் நெஞ்சத்து இருப்பவன்
- இணங்கரர; புரம்மூன்று எரித்த பரமன்
- தக்கனுக்கு உதைத்துத் தலையை அணிந்தவன்
- நன்மங்கை பாகன் அயன்மூன்று உடையோன்
- பஞ்ச முகத்தோன் பரமன் ஆதி
- மதியே சூடி மதியில் இருப்பவன்
- இயல்பொடு பிட்சை ஏற்கும் எம்பிரான்
- அர எனும் அஞ்செழுத்தாக நின்றவன்
- இலங்கை வேந்தன் எடுத்த மலையன்
- வடமரத்து அடியில் மாமறை ஓதி
- அழகிய திருமறை ஆடல் உகந்தவன்
- இளமையும் முதுமையும் மூப்பும்இல் லாதவன்
- அறம் பொருள் இன்ப முத்தி ஆனவன்
- அனந்த கோடி யுகத்திற் பழையவன்
- கங்கைக்கு இறைவன் ஏகம்ப வாணன்
- காலம் மூன்றும் கடந்து நிற்பவன்
- கிள்ளைக் குலத்தில் வள்ளல் ஆனவன்
- கீதப் பிரியன் வேத பூரணன்
- குருந்தடி தன்னில் குருவாகி நிற்பவன்
- கூடல் தெருவில் குதிரையை விற்றவன்
- கெட்ட வேடன் எச்சிற் பிரியன்
- கேது வேணியன் மாது பாகன்
- கைதொழும் அடியவர் கடிவினை தீர;ப்பவன்
- கொலைக்கண் வேடன் மலைக்கண் உற்றவன்
- கோலக் கூற்றை காலால் உதைத்தவன்
- சமயம் ஆறும் தானாகி நின்றவன்
- சாதி பேதம் இல்லாத சங்கரன்
- சினப்புலி உரியைச் சிற்றாடை உடுத்தவன்
- சீரங்க(ம்) இராயன் தேடற்கு அரியவன்
- சுருதி மூன்றும் சுடர் மூன்றும் ஆனவன்
- சூரன் மார;பைத் துளைத்தவன் தாதை
- செம்பொன் அம்பலத்து ஆடிய செல்வன்
- சேல்படு(ம்) கண்உமை செம்பாதி ஆனவன்
- சைவா கமங்கள் தானே ஆனவன்
- சொக்க நாயகன் சுந்தர் வேடன்
- சோம வேணியன் மாது பாகன்
- தலையோடு ஏந்திய சாம வேதன்
- தாயும் தந்தையும் தானே ஆனவன்
- தினகரன் பல்லைத் தீரத் தகர்த்தவன்
- தீரா முதலைவாய்ப் பிள்ளை அழைத்தவன்
- துறைதுறை தோறும் தோற்றமாய் நின்றவன்
- தூரர;க்குத் தூரன் அணுகினர்க்கு அணுகினன்
- தென்னவர; கோமான் அடிபோற்ற நின்றவன்
- தேர்ஒன்று ஏறித் திரிபுரம் எரித்தவன்
- தைப்பூசம் ஆடத் தகும்தகும் என்றவன்
- தொம்தொம் தித்தி என்று ஆடிய சோதி
- தோகைமார் கைவளை சோர நடந்தவன்
- நரிபரி ஆக்கிய நல்ல வாரியன்
- நான்மாடக் கூடல் வழுதி ஆனவன்
- நிருபாவி கபாலி நிருவாணி ஆனவன்
- நுளைய னாய்வலை வீசிய வள்ளல்
- நூல்பல ஓதி வள்ளலுக்கு அளித்தவன்
- நெற்றிக் கண்ணாற் காமனை எரித்தவன்
- நேரார; புரம்மூன்று எரித்த பரமன்
- நைஞ்சம் பிறக்கும் நாகம் அணிந்தவன்
- நொடிவரை தன்னில் படிமுழு தாளி
- நோக்கியும் நோக்கொணா நுண்ணிய பழம்பொருள்
- பழையன் ஊரன் திருவாலங் காடன்
- பார்த்தனுக்கு அன்றுபாசுபதம் அளித்தவன்
- பிராயம் தவிர;ந்த பிறவி மருந்து
- பீறிய கோவணம் பிரியமாய் உடுத்தவன்
- புண்ணியர; நெஞ்சின் மேவிய புனிதன்
- பூங்கொடி உமையாள் பாகம் பிரியாதவன்
- பெருந்துறை மேவி அருந்துறை ஆனவன்
- மாவடி தன்னின் மகிழ்ந்தே அமர்ந்தவன்
- மிஞ்சிய சமயம் ஐந்தும் படைத்தவன்
- மீனவன் வையை அடைத்து அடி பட்டவன்
- முயலகன் முதுகில் அடியுற மிதித்தவன்
- மூவா யிரவரில் ஒருவ னாய் நின்றவன்
- மென்றிஇடும் வேடன் எச்சிற் பிரியன்
- மேலோகம் பரவும் சிவலோக நாதன்
- மைவிழி உமையாள் மங்கை பாகன்
- மொய்த்த செம்பொன் அம்பல வாணன்
- மோகம் தவிர்ந்து யோகம் இருப்பவன்
- வள்ளல் இருபத் தொன்றே ஆனவன்
- வாத வூரன் திருவாசகப் பிரியன்
- வித்தும் வேரும் விளைவும் ஆனவன்
- வீரட் டானம்மேவி இருப்பவன்
- உற்றது கூறுவார்க்கு உறுதிப் பழம்பொருள்
- ஊமையைப் பேசுவிக்கும் உபாயக் காரன்
- வௌ்ளி மால்வரை மேவி இருப்பவன்
- வேதாந் தத்துள் பொருளாகி நின்றவன்
- வையகம் உய்ய மையணி கண்டன்
- ஒண்டொடி உமையாள் பாகம் பிரியாதவன்
- ஓதும் பதினெண் புராணம் ஆனவன்
:ஈசுரமாலை முற்றிற்று.