ஈச்சம்பாய்/காலுக்குச் செருப்பாய்
காலுக்குச் செருப்பாய்…
“ஒங்க காலுக்குச் செருப்பா கிடந்த என் பிள்ளாண்டான இப்படி வீசிட்டியேப்பா… நாய்க்கு எலும்புத் துண்ட வீசற மாதிரி, நா பெத்த மவன போலிசில வீசிட்டியே… ஒன்ன விட்டா அவனுக்கு ஆருப்பா”
மாருதியின் நவீன அவதாரமான அந்தக் காரை பளபளக்க வைத்து விட்டு கீழே எறியப்பட்ட கந்தல் துணி போல், கீழே கிடந்த பொன்னம்மா எழுந்தாள். சற்றே உடம்பை நகர்த்தியவள், சுந்தரத்தைப் பார்த்து விட்டாள். அந்த அழுக்குத் துணி காற்றால் தூக்கப்பட்டு, ஒரு கம்பு முனையில் விழுந்தால், எப்படித் தோன்றுமோ, அப்படிப்பட்ட தோற்றத்தோடு எழுந்தவள், கார்க் கதவைத் திறக்கப் போன கந்தரத்தை வழி மறிப்பவள் போல், நின்று கொண்டு இப்படிக் கேட்டு விட்டாள்.
கந்தரம் திடுக்கிட்டார். பிறகு அவளைத் திட்டப் போவது போல், முகத்தை வீராப்பாக்கினார். பழக்கப்பட்ட முகம் என்பதால் சிறிது நிதானித்தார். ஆனாலும், அதற்குள் “என் சிநேகிதனை எப்படித் திட்டலாம்” என்று கேட்பது போல், பங்களாவுக்குள் கிடந்த நாய் கேட்டுக்கு மேல் முன்னங்கால்களைப் பற்றிக் கொண்டு, பின்னங்காலில் ஒரு மனிதன் போல் நின்றபடி குரைத்தது. அந்தக் குரைப்பு, பங்களாம்மாவையும் வாசல் வரை கொண்டு வந்து விட்டது.
சுந்தரம் கார் முனையில் ஒரு கையை ஊன்றியபடியே, குரைத்த நாயை இன்னொரு கையால் ஆற்றுப்படுத்தி விட்டு அவளைக் கேட்டார்.‘என்ன பொன்னம்மா.. என்ன நடந்தது. ஏன் இப்படி ஒப்பாரி வைக்கிறே’
“ஏன் பிள்ளாண்டான ராவோடு ராவா போலிக பிடிச்சுட்டு போயிடுச்சேயப்பா.. அதுவும் நீ சொல்லி பிடிச்சுட்டு போயிடுச்சேயப்பா...”
“இந்தா பாரு... தத்துப் பித்துனு உளறாதே... உன் மகன் எனக்கு கூடப்பிறக்காத பிறப்பு மாதிரி... அவன நான் எப்பவுமே வேலைக்காரனா நினைச்சதில்லே... அப்படி இருக்கையிலே அவன பிடிச்சுக் கொடுப்பேனா. என்ன நடந்தது... சட்டு புட்டுனு. சொல்லு”
பொன்னம்மா கிழவி சிறிது நிதானப்பட்டான். ஒண்டியாய்ப் பிறந்த மகன் பாக்கியமுத்து அப்போதே ஜாமினில் வந்துவிட்டது போல் நினைத்தாள். வருத்தக்குறைவே அவளுக்கு மகிழ்ச்சியாய் தோன்றியது. அய்யாவைப்பார்த்து கேட்கக் கூடாத கேள்வியைக் கேட்டதுபோல் நாணினாள். ‘மன்னிச்கடுப்பா’ என்று சொன்னபடியே அவர் கையைப் பிடிக்கப் போனாள். ஆனாலும் கூச்சம். டாலடித்த கடிகாரக் கையை தன் அழுக்குக் கையால் தீண்ட அச்சம். அவள் கை மேலேயே ஒரு அருவருப்பு.
சுந்தரம் பரபரத்தார்.
‘விவரமா சொல்லு பொன்னம்மா... எதுக்கும் நான் இருக்கேன்.’
இதுவே போதும் ராசா... இதுவே போதும் முந்தாநாளு உன்ன ரயிலுல வழியனுப்பிட்டு நைட்ல வீட்டுக்கு வந்தான்.... வந்தானா... வந்ததும் வராததுமா என் மருமக அவனுக்கு தட்டுல சோறு போட்டாள். ஒரு கவளம் சாப்பிட்டுருக்க மாட்டாம்பா...நாலஞ்சு போலிஸ்காரங்க திபு திபுனு வந்தாங்க. அதுல ஒருத்தன் வாய்குள்ள போன சோத்துக் கையை முறுக்குனான்... இன்னொருத்தன் என் பிள்ளய மல்லாக்கத் தள்ளுனான். ஏதோ பேசப்போனவன் வாயிலே ரத்தம் வரும்படியா குத்தினான், ‘போலிஸ் ஸ்டேசனுக்கு, டயர் திருட்ட விசாரிக்க வான்னா வரமாட்டியா... போலீச ஒன் மாமான்னு நெனச்சியா’ன்னு ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒவ்வொருத்தனும் அடிச்சு என் பிள்ளய பிடிச்சிட்டுப் போய்டான்யா. நீ செல்லமா வச்சிருந்த என் பிள்ளாண்டான என் கண்ணு முன்னாலேயே கைய வளச்கக் கட்டி, அடி அடின்னு அடிச்சு, நாய இழுத்துட்டுப் போய்டாம்பா’
சுந்தரம் ரத்த அழுத்தம் கூடாமலிருக்க மத்தியானம் உட்கொள்ள வேண்டிய மாத்திரையை கைப்பையிலிருந்து எடுத்து மனைவியைப் பார்த்தார். அந்தம்மாவும் உள்ளே ஓடிப்போய் ஒரு டம்ளரோடு வெளியே வந்து கணவனிடம் நீட்டிவிட்டு தன் பங்குக்கும் பேசினாள்.
‘நீங்க எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் போலிஸ்காரங்க கேட்கல பாருங்க... அவனுகள விடப்பிடாது.. ரெண்டுல ஒண்ணு பார்த்தாகணும்... பொன்னம்மா! நீ வீட்டுக்குள்ள வந்து சொல்லி இருக்கலாம்... கூட்டம் கூடிட்டுப் பாரு..’
‘நீ நினைக்கிற மாதிரி ஒன் நாய் நினைக்க மாட்டேங்குதே.... ஒரு மணி நேரமா அல்லாடுறேன்.. ஆனாலும், அந்த நாய் முறைச்ச முறைப்புல என் கொலயே நடுங்கிட்டு... சீக்கிரமா போப்பா... என் பையன பண்ணாத கோலமில்லாம் பண்ணுறாங்களாம்... பழய பகை வேற உண்டுப்பா.. எங்க சேரிப்பக்கம் சாராய மாமூலுக்கு வார போலிககளை இந்தத் தத்தேரிப்பய ஒரு நாள் திட்டிட்டான்... சார் போட்டுத்தான் திட்டினான்... ஆனாலும் போலிசுக்காரன், யானை சுண்ணாம்புத் தேங்காய மறக்காதது மாதிரி மறக்கல...
கந்தரம், போலிசை மடக்க யூகம் வகுப்பதுபோல் தலையைச் சொரிந்தார்... மூக்கை ஆள்காட்டி விரலால் அடித்தார்... அவர் மனைவிதான் உஷார் படுத்தினாள்.
‘சீக்கிரமா போங்க... அவங்க மசியாட்டா உங்க பிரெண்டு டெபுடி கமிஷனர்கிட்ட போங்க.... அழாத பொன்னம்மா... இன்னும் அரைமணி நேரத்துல உன் மகன் உன் பக்கத்துல வந்து நிப்பான்... போதுமா.. அவருக்கு வழிய விட்டுட்டு உள்ள வா- பாத்திரங்களும் இருக்கு பழய சாதமுமிருக்கு’
காரில் பறந்த சுந்தரத்திற்கு கடந்த ஓராண்டு காலத்தில் இந்த மாதிரியான கோபம் வந்ததில்லை. அதன் வெளிப்பாடாக கார் அங்கும் இங்குமாய் லைன் மாறி ஓடியது. சில கார்க்காரர்களிடம் திட்டுக்களை வாங்கிக் கொடுத்தது. ஒரு ஓரமாய் ஹாயாய் நடந்த ஒரு சல்வார் கம்மீஸை அலறி அடித்து ஓட வைத்தது. ஆனாலும் அவர் காரின் போக்கு பற்றியோ, காதில் விழுந்த திட்டுகளைப் பற்றியோ மனதில் பதிக்காமல் அதே மனதின் முன்னைய நிகழ்ச்சிகளை பாதிப்புக்களாக்கிப் பார்த்தார்.
‘என்ன அநியாயம்... எங்கேயும் நடக்காத அநியாயம்... போன மாதம் வாங்கின கண்டசலா கார் டயர்கள எந்தப் பயலோ அல்லது கும்பலோ கழட்டிட்டுப் போனது நிசம்தான்... இரவோடு இரவா நடந்த திருட்ட மறுநாள் ஆமை மாதிரி கிடந்த காரைப் பார்த்ததும், உடனே போலீகல புகார் செய்தது இந்த பாக்கியமுத்துதான்... போலீசுக்காரங்க லத்தியும் கையுமாய் வந்ததும்... பாராட்டுக்குரியதுதான்... ஆனா அவங்க பாராட்டும் படியாகவா நடந்துக்கிட்டாங்க?... வெறுப்பேத்தினாங்க... காரோட டிரைவர், வீட்டில் இப்போது வேலை பார்ப்பவர்கள், வேலையில் இருந்து நீக்கப்பட்டவர்கள், நின்றவர்கள், வண்டிக்காரர், பேப்பர்க்காரன், ஆவின் பால் போடும் சிறுமி, குப்பை அள்ளும் எக்ஸனோரா பையன், பிளாட்பாரத்தில் தொழில் நடத்தும் செருப்புத் தைக்கும் தொழிலாளி, இஸ்திரி போடும் ஒரு இளவட்டம், காய்கறிக்காரி, பூக்காரி - எல்லாவற்றுக்கும் மேலாக புகார் கொடுத்த இந்த பாக்கியமுத்து அனைவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரிக்க வேண்டும் என்றார்கள். வயிறுகளில் குத்தினால் வாய் உண்மையைக் கக்கும் என்றார்கள். இதற்கு இவரும் உடன்படவில்லை. வாய்மொழி மூலம் கொடுத்த புகாரையும் வாபஸ் வாங்கியாயிற்று... அவர்களிடம் சட்டம் பேசிய பாக்கிய முத்தையும் அடக்கியாயிற்று. காவலர்களுக்கும் ஆட்டோவில் வந்ததற்கும் போனதற்கும் நூறுரூபாய் நோட்டை வேறு கொடுத்தாயிற்று. அப்படியும் பசி அடங்கலன்னா... என்ன நினைச்சிட்டான் இந்தப் போலீஸ்...?’
‘இந்தப் பாக்கியமுத்து எப்பேர்ப்பட்டவன்... இவன் காலுக்கு மட்டுமா செருப்பு... மார்புக்குக் கவசம்... தலைக்குத் தொப்பி... பின்பக்கம் புதர்க்காடாயும் முன்பக்கம் வீடுகளாயும் உள்ள இந்த எரியாவிலே கைப்பம்பு, மோட்டார் செட்டு, சைக்கிள், டாங்கி மூடி, நேரம் கிடைத்தால் வாசல் கேட்டு போன்ற திருடுகள் ஆரம்பத்தில் இரவில் நடந்தது... அதை நாலும் தெரிந்த வீட்டுக்காரர்கள் கண்டுக்காததால் பகலிலும் நடந்தது... இப்படி ஒரு தடவ பாக்கிறதுக்கே பயங்கரமான ஒரு பச்சக்குத்திப்பயல் பக்கத்து வீட்டு கைப்பம்பை கழட்டியபோது அவனைக் கண்டிக்க வேண்டியதாயிற்று. அவனோ.. நாளைக்கு ஒன் வீட்டில் திருடிக்காட்டுறேன் பார் என்று சவால் விட எங்கிருந்தோ வந்த இந்தப் பாக்கியமுத்து அவன்மேல் பாய்ந்து பம்பரமாய்ச் கழற்றி காலில் விழவைத்தான். இன்னும் ஒரு வாரத்திலே ஒனக்கு இருக்குடா ஆப்புன்னு கத்திக்கிட்டே ஓடின பச்சைக்குத்தியை வெறுங்கையோடு துரத்தியவன் இந்த பாக்கியமுத்து, பத்து வருஷமா ராமனுக்கு அனுமார் மாதிரி பயபக்தியோட பணிவிடை செய்கிறவன். உண்மையத்தவிர எதையுமே பேசாதவன். அவனப் போய் பிடிச்சுட்டுப் போனால், இனிமேல் நாட்டிலே போலீகக்காரன் எவன வேணும்னாலும் பிடிக்கலாம்.. ரெண்டுல ஒண்ணப் பார்த்தாகணும். ஆனாலும் லோக்கல் போலீக.. அதிகமாப் பகைக்கப்படாது. அளவுக்கு மேலே போனா இருக்கவே இருக்கார் டெபுடி கமிஷனர்...
அந்தக்காவல் நிலையத்திற்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்ட செங்கல் லாரிகள், பயணிகளோடு கூடிய வேன்கள், டெம்போக்கள், ஆட்டோக்கள், டயர்போய் மண்ணோடு மண்ணாய் மக்கிப்போன கார்கள், கசமுசா என்று கம்பிகள் மூலம் பேசும் ஒரு கம்பீரமான மோட்டார் பைக் ஆகியவற்றிற்கு இடையே காரை எப்படியோ நுழைத்துவிட்டு அதிலிருந்து வெளிப்பட்ட சுந்தரத்தின் பாதங்களில் இரண்டு கரங்கள் பதிந்தன. கண்ணீர் அவற்றை நனைத்தது. வாய் ஒப்பாரியாய், விம்மலாய், விக்கலாய், தலையடியாய், முகமடியாய், ஒப்பித்தது.
'அய்யா... என் புருசனக் கொல்லாமக் கொல்றானுங்க ஐயா.... சோறு கொண்டுபோன என்னை வெண்டை வெண்டையாப் பேசி துரத்திட்டாங்க சாமி. அப்படியும் நானும் என்னோட பிள்ளிங்களும் இங்கதான்யா பழிகிடக்கோம்... ராத்திரி அவர் போட்ட கூச்சல காது கொடுத்துக் கேட்க முடியாதய்யா- என் ஆம்புடயான கண்ணால பார்ப்பேனாய்யா...' சுந்தரம், ஆபத்துக்குப் பாவம் இல்லையென்பதுபோல் அவளைத் தூக்கி நிறுத்தினார். தலையில் அடிக்கப்போன கரங்களைப் பிடித்துக் கொண்டார். இவருக்குப் பரிச்சயப்பட்டவள் தான். பலதடவை வீட்டுக்கு வந்தவள். ஒருவர் உருமாற ஆண்டுக்கணக்கில் ஆகும். இளமயான குண்டுக் கன்னங்களும், துருத்திய கண்களும், குழிகளாக மாற ஆண்டுக்கணக்கில் ஆகும். ஆனால் இப்படி ஒரே நாளில் கூட ஆகுமா...
ஆக முடியும் என்பதற்கு அத்தாட்சியாக, நின்றவளுக்கு கண்களால் கருணை காட்டி - யாமிருக்கப் பயமேன் என்பதுபோல் பார்த்துவிட்டு ‘அதான் நான் வந்திட்டேனில்ல... இன்னும் ஏன் அழுகிறே..’ என்று சொல்லிவிட்டு, அவரை கொக்குகள் போல் தலைநிமிர்த்திப் பார்த்த ஆறு வயதுப் பையனையும், எட்டு வயது சிறுமியையும்... “நல்லா படிக்கணும்.... படிப்பீங்களா... அம்மாவ அழாதிங்கன்னு சொல்லுங்கள் என்று சொல்லிக் கொண்டே நடந்தார்.
சுந்தரம், காவல் நிலைத்தின் ஆறுபடிக்கட்டுக்களையும் மூன்று மூன்றாய்த் தாவி, மேட்டுத்தனத்தில் நின்று உள்ளே எட்டிப் பார்த்துவிட்டு, நுழைந்தார். அங்கே இருப்பவர் களையும், இருந்தவற்றையும் பார்க்கப் பார்க்க, அவரது ஆவேசத்தில் பாதி ஆவியாகியது. மீதி வேர்வையானது. பல்லிகள் மாதிரி சுவரில் அப்பிய துப்பாக்கிகள்... கழுத்தும் காலும் சேர்த்துக் கட்டப்பட்ட ஒரு இளைஞன்.... சிறிது தொலைவில் அய்யோ அம்மா என்று கேட்கும் கூக்குரல்... அதற்குப் பதிலாக அவர்களது அம்மாக்களையும் அக்காக்களையும் வம்பிற்கிழுக்கும் வார்த்தைகள்... பகாகர வயிறுகள்... இரைச்சல் போடும் மைக்குகள்... வெளியுலகம் தெரியாத உள்ளுலகம்... அதுவே பலருக்கு நரகம்... அந்த நரகமே சிலருக்குச் சொர்க்கம்....சுந்தரத்திற்கு ஆவேசமே பயமானது. அவரது நண்பரான டெபுடி கமிஷனரின் உருவத்தை மனதில் நிறுத்திக் கொண்டார். அவருக்கும் தனக்கும் உள்ள உறவை பூதக்கண்ணாடிபோல் பெரிதாக்கிக் கொண்டார். தன் பக்கம் நியாயம் இருப்பதை நினைத்துக் கொண்டார். யாரிடம் போவது என்று கண்களைச் கழற்றினார். யாருமே அவரைக் கண்டுக்கவில்லை. அதட்டுவதைவிட மோசமான உதாசீனம். அதுவே அவமானமாகப்பட்டது. ஆனாலும் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு பார்த்தபோது... பழக்கமான ஒரு காக்கிச் சட்டை. விசாரணைக்கு என்று வந்து நூறு ரூபாய் நோட்டை வாங்கிக் கொண்ட சப் இன்ஸ்பெக்டரோ - ஏட்டோ. நாற்பது வயதுக்குள்ளேயே முகம் பழுத்த வீரர். அவருக்கு எதிரே எஸ் வடிவ நாற்காலியில், ஒரு கிடா மீசை மனிதர். பார்த்தால் பயம் வரும் தோற்றம். அதைப்பற்றிக் கவலைப்படாமலேயே ஒருத்தன் - அதுவும் கைலி கட்டிய ஆசாமி அட்டகாசமாக பேசுகிறான். வீரப்பா போல் சிரிக்கிறான். அவர் காதில் கிசு கிகக்கிறான்.
இன்ஸ்பெக்டர் நிமிர்ந்து பார்க்கிறார். சுந்தரத்தை முகத்தை ஆட்டிக் கூப்பிடுகிறார். அவர் வந்ததும் என்ன என்கிறார். இதற்குள் எதிர் நாற்காலியில் இருந்தவர் 'சார் சார் இவர்தான் உள்ள புடிச்சுப் போட்டிருக்கிறோமே... பாக்கியமுத்துப் பய... அவனோட முதலாளி.... உட்காருங்க சார்' என்கிறார். பிறகு இவரு நம்ம டிசி. சௌத்துக்கு வேண்டப்பட்டவர்' என்று கண்களைச் சிமிட்டுகிறார். உடனே, சொன்னவரின் அருகே உள்ள நாற்காலியில் இரண்டு கால்களையும் தூக்கிப் போட்டிருந்த இன்ஸ்பெக்டர், அந்தக் கால்களைத் திரும்பப் பெற்றுக்கொண்டு, சுந்தரத்தை கண்களால் உட்காரச் சொல்லுகிறார்.சுந்தரம், மீண்டும் டெபுடி கமிஷனரை நினைத்துக் கொண்டு பயத்தால் பயங்கரவாதிபோல் கேட்கிறார்.
‘என் பேர் கந்தரம். பாக்கியமுத்தோட பாஸ் நான்தான் வாய் மொழியாக் கொடுத்த புகாரை வாபஸ் வாங்கிட்டேனே... நீங்களும் எப்.இ.ஆர் போடல... அப்படியும் என் செர்வன்ட எப்படி சார் லாக்கப்பிலே போடலாம்...’
இன்ஸ்பெக்டர், ஒரு பேப்பர் வெயிட்டை அவர் மேல் எறியப்போவதுபோல் தூக்கினார். எதேச்சையா. டெக்னிக்கா தெரியவில்லை. பிடித்த பிடியை விடாமலேயே, சுந்தரத்தைப் பார்க்காமலேயே, சுந்தரத்திற்குப் பதில் அளித்தார்.
‘லுக் மிஸ்டர்... ஒவ்வொருத்தரும் எங்களுக்கு எழுத்துமூலம் புகார் தரணுமின்னு அவசியமில்ல... நாங்களே கயோ மோட்டோவா, அதான் தன்னிச்சையா நடவடிக்கை எடுக்கலாம். எப்போ ஒரு திருடு நடந்திட்டதா எங்க பார்வைக்கு வந்திடுதோ... அப்ப புகார் முக்கியமில்ல... சட்டந்தான் முக்கியம். எந்த கேசையும் எல்லாக் கோணத்திலயும் பார்க்கிறதுதான் போலிக நீங்க கூட இன்ஸுரன்ஸ் காரனுகள ஏமாத்துறதுக்கு இப்படி செய்திருக்கலாம் இல்லியா....’
‘என்னப்பற்றி டெபுடி கமிஷனர் மிஸ்ட்ர் கொண்டையா கிட்ட கேட்டுப்பாருங்க் சார்..’
‘சும்மா ஒரு பேச்சுக்குச் சொன்னேன்... இவர் உங்ககிட்ட விவரமாச் சொல்வார்... நான் இப்ப அவசரமா வெளியிலே போறேன்... இந்தாப்பா இந்த அப்பாவி மனுஷனுக்கு அந்த ஸ்டேட்மென்ட காட்டு...’
இன்ஸ்பெக்டர் இடுப்பைச்சுற்றிய பெல்டோடு, உறைபோட்ட துப்பாக்கியோடு, லத்திக்கம்பு வீச்சாக புறப்பட்டார். அவர் தொப்பி மறைவதுவரைக்கும் கண்களால் சல்யூட் அடித்தபடியே பார்த்த ஏட்டோ, சப் இன்ஸ்பெக்டரோ, சுந்தரத்தை சிநேகிதமாகப் பார்த்தார். பிறகு மேஜையின் அண்டிராயர் மாதிரியான ஒரு அடைப்பை இழுத்து, குப்பையாய் கிடந்த காகிதக் குவியலை நிமிர்த்தி, கைகளால் இஸ்திரி போட்டுவிட்டு, கந்தரத்திடம் நீட்டினார்.
சுந்தரம், அந்தக் காகிதங்களை மேலோட்டமாகவும், மேலும் கீழுமாகவும் பார்த்தார். சந்தேகமில்லை. இது பாக்கியமுத்து வோட எழுத்துத்தான்.
கந்தரம், பாக்கியமுத்துவின் இறந்துபோன அப்பன், இறக்கத்துடிக்கும் அம்மா, உறங்கமுடியாத வீட்டு முகவரி, வயது, ஜாதி, தொழில் ஆகியவை பற்றிக் கொடுத்த விவரங்களை உதாசீனமாய் ஒதுக்கிவிட்டு, அதற்குப் பிறகு வந்த தகவல்களை மாறி மாறிப் படித்தார். 'அடப்பாவி... இரண்டாவது குறுக்குத் தெருவுல மொபட்ட திருடினானாம்... அஞ்சாவது அவின்யூவில புத்தம் புது ஏசி. மெஷின கழட்டி வித்தானாம்... பிள்ளையார் கோவில் பக்கம் ஒருத்தியோட தாலியை அறுத்திட்டு, அடயாளம் தெரியாத ஒரு பாவி தப்பிச்சு ஓடினானே. அவனுக்கு இடம், பொருள், ஏவல் சொல்லிக் கொடுத்ததே இவன்தானாம்... போன வாரம் ஒரு பச்சப் பொறுக்கிய அடிச்சுப் போட்டானே... அது கூட ஒரு நடிப்பாம்... திருடின சாமான்களை எங்கே விற்றான்னு அட்ரசையே கொடுத்திருக்கிறான்... இந்த லட்சணத்திலே ஒவ்வொரு பக்கமும் இவன் கையெழுத்து... நம்பவும் முடியல, நம்பாமவும் இருக்க முடியல...
சுந்தரம், விழி பிதுங்க பிரமித்தார். இரண்டு கைகளையும் முயல்வேடம் போட்டதுபோல் காதுகளோடு வைத்துக் கொண்டார். அந்த போலீஸ்காரரை புதிராகப் பார்த்தார். அவருக்கும் புதிதாக வந்திருக்கும் ஐநூறு ரூபாய் நோட்டை ஒத்தையாகவோ, இரட்டையாகவோ பார்க்க ஆசை. இயல்பாக பேசுவதுபோல், பேசினார்.
'ஏன் சார் அப்படிப் பார்க்கிறீங்க... உங்களால நம்ப முடியாதது தான்... இதுதான் புகார் கொடுக்கிற ஒரு அப்பாவிக்கும், புகாரை விசாரிக்கிற போலிசுக்கும் உள்ள வித்தியாசம்... எத்தன பொம்பளைங்க கள்ளக் காதலனோட சேர்ந்து கட்டுன புருஷனக் கொன்னுட்டு கண்ணகி வேஷம் போட்டத பார்த்திருப்போம்.... எத்தன புருஷனுங்க பொண்டாட்டிய கொளுத்திட்டு.... தீப்பிடிச்சப்போது அவனக் காப்பாத்தப் போனதா அழுகிறதையும்... அதுக்கு அடையாளமா கை, கால்களிலே சூடு போடுறதையும் பார்க்கிறோம்... ஆமாம் சார்... உங்களுக்கு வெளுத்ததெல்லாம் பாலு.... எங்களுக்கோ பாலுகூட விஷத்தைக்கூட மறைக்கிற வெளுப்பு... இந்த மாதிரி அனுகூலச் சத்ருவா இருக்கிற பசங்களை நம்பவே கூடாது... நாளைக்கி உங்க மனைவியோ, மகளோ நகை போட்டிருந்தால், அதைக் கைப்பற்றப் பார்க்கலாம்... பொதுவாய் இவங்க ஆள் வச்கத்தான் செய்வாங்க.... அடையாளம் தெரிஞ்சிட்டால், கொலை கூடச் செய்வாங்க... சொல்றதைச் சொல்லியாச்சு.... இன்னும் எப்.ஐ.ஆர் போடல... வேணுமின்னா , அவனை ஜாமீன்ல எடுத்துட்டுப் போங்க... கிரைம் நாவல்களெல்லாம் படியுங்க... நிறைய விஷயங்களைத் தெரிஞ்சுக்கிடலாம்.....
கந்தரம் அசைவற்றுக் கிடந்தார். அவரைக் கையைப் பிடித்து இழுத்து சுயத்திற்குக் கொண்டு வந்த போலீஸ்காரர் பவ்யமாகக் கேட்டார்.... அடிச்ச அடில, பய எல்லாத்தையும் ஒத்துக்கிட்டான்... வேணுமின்னா அவனப் போய்ப் பார்த்து நாலு கேள்வி கேட்கறீங்களா... நீங்க டிசிக்கு வேண்டியவர் என்கிறதாலதான் இவ்வளவும் செய்திருக்கிறோம். இல்லன்னா இது பத்தோடு பதினொன்னாவது கேசு...
கந்தரம், யோசிக்கவில்லை. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்ற எண்ணமும் எந்த வேகத்தில் வந்ததோ, அந்த வேகத்திலேயே போய்விட்டது. தீர்மானமாகச் சொன்னார்.
'அந்தத் துரோகிப்பயல பார்த்தாலே பாவம் சார்.. அடிபட்ட பாம்பு. அவன என் வம்புக்கு வராம பார்த்துக்க வேண்டியது உங்க பொறுப்பு. இதுக்கு எவ்வளவு செலவானாலும் சரி.'
சுந்தரம், எழுந்தார். புறப்படுவதற்காக வாசலைப் பார்த்தார், அந்தச் சமயம் பார்த்து வாசலுக்குள் நுழையப்போன ஒரு பச்சைகுத்தி கைக்குட்டையால் முகத்தை மறைத்துக் கொண்டே, ஒதுங்கிக் கொண்டான்.
- தினமலர் தீபாவளி மலர் - 1994