ஈச்சம்பாய்/பெரியம்மா மகன்…
பெரியம்மா மகன்…
அந்தப் பூங்காவில், ஆணும், பெண்ணுமாய் கலந்து நின்ற இளைஞர் கூட்டத்தை ‘ஜிப்சி’ சிம்பா, கலப்படமாக்க ஆயத்தமான போது…
குமுதாவும், இளங்கோவும் இணை சேர்ந்து, அந்தக் கூட்டத்தை நோக்கி நடந்தார்கள். உள்ளடக்கம் எப்படியோ, அவர்களின் உருவப் பொருத்தம் பிரமாதம். அவனும், இவளும் ஒரே நிறம். சிவப்புக்கும், கறுப்புக்கும் இடைப்பட்ட மாநிறம். அவனது உருண்டு திரண்ட தேக்கு மர உடம்பை உரசியபடியே, அவளின் நளினப்பட்ட மேனி வெற்றிலைக் கொடியாய் நெளிந்தது. அந்தக் கூட்டத்தை நோக்கி நடந்தபடியே, குமுதா இளங்கோவின் கையைப் பிடித்துக் கொண்டு, அவன் முன்னால் ஒருச்சாய்த்து நின்று, அவனது நடை வேகத்தை நிறுத்தி விட்டு பதறிப் பதறி, கைகளை உதறி உதறிப் பேசினாள்.
‘எனக்கு பயமாய் இருக்குது இளங்கோ… வேண்டாம். திரும்பிப் போயிடலாம்’.
‘இந்தாப் பாரு குமுதா!… இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிக்குப் பயப்படுறியா? இல்ல நான் உன்ன தப்பா நினைப்பேன்னு தயங்குறியா?’
குமுதா, நீல நிறத் துப்பட்டா துணியின் முனையை கடித்தபடியே மௌனமாக நின்று, தரையை ஒரு பூச்செடியோடு பெருவிரலால் துழாவிய போது, இளங்கோ புரிந்து கொண்டான், ஆனாலும் புரியாதபடியாய்ப் பேசினான்.நான் வால்டேர் மாணவன்...
இந்தச் சமயத்தில வால்டேரை ஏன் இழுக்கிறீங்க இளங்கோ...? அவர்தான் ரிட்டயர்டு ஆயிட்டாராமே?
“உலக மக்கள் இருக்கும் வரை எப்போதுமே ரிட்டயர்டு ஆகாத பிரெஞ்க சிந்தனையாளர் வால்டேரை சொன்னேன். 'உன் கருத்திலிருந்து நான் மாறுபடுகிறேன். ஆனாலும் அந்தக் கருத்தை நீ சொல்வதற்குரிய உரிமைக்காக போராடுவேன்னு சொன்ன ஜனநாயக வாதி வால்டேர்.”
இந்தக் குழப்பத்தோட உங்க குழப்பம் வேறயா?
இதுல குழப்பத்திற்கு அவசியமே இல்ல குமுதா. அந்தத் தொலைக்காட்சி நிலையத்தோட “கண்டதும் காதல்” என்கிற நிகழ்ச்சியில கலந்துக்க உனக்கு ஆசை. எனக்கோ உடன்பாடில்லாத செயல். ஆனாலும் என்னதான் நான் காதலனா இருந்தாலும், உன் சுதந்திர உரிமையைத் தடுக்க மாட்டேன். இப்போ மட்டுமல்ல. நமக்கு திருமணம் ஆனபிறகு கூட.
‘உங்கள காதலிக்கவும் திருமணம் செய்யவும் நான் கொடுத்து வைத்தவள்.’
‘நானும்தான்’
‘நீங்களும் இந்தப் புரோகிராமில கலந்து கொள்ளுங்களேன்’
‘இப்போ நீ எனக்கு வால்டேர் ஆகணும். அதோட சாதாரண பேண்ட் சட்டை போட்டவனையே கிண்டலடிக்கிற கூட்டத்துல, இப்படி வேட்டியும் ஜிப்பாவும்மாய் இருக்கிற என்னை சகிக்கமாட்டாங்க. நீ உன் வழியில போ. நான் என் வழியில போறேன். சாயங்காலமா இதே பொது வழியில் சந்திப்போம்’.
'மறந்திடப்படாது இளங்கோ. சும்மா ஒரு சேஞ்கக்காகத்தான் போறேன்.
'நீ விளையாட்டுப்பிள்ளைன்னு எனக்குத் தெரியாதா? சரி போய் வா
குமுதா, அவனைத் திரும்பத் திரும்ப பார்த்தபடியே ஜிப்சி சிம்பாவை சுற்றிய வட்டத்திற்கு வெளியே, முட்டிக் கால்களுக்கு கீழே நிர்வாணமாய் கையில் 'பேடோடு' நின்ற ராஜியிடம் போய் தன்னைப் பற்றிய விவரங்களைச் சொன்னாள். அவள் கையில் வைத்துள்ள குறிப்பேட்டில் அதைக் குறித்துக் கொண்டாள். அது முடிந்ததும், குமுதா, அந்த இளைஞர் வட்டத்திற்குள் ஊடுருவி மனிதச் சங்கிலியில் ஒன்றானாள். அவள் அந்த வட்டத்தில் கரையும் வரை, அவளையே பார்த்து நின்ற 'ஜிப்சி' சிம்பா, தோளை ஒரு குலுக்கி குலுக்கி முகத்தை ஆட்டுவது தெரியாமல் ஆட விட்டு கண்களைக் கிறங்க வைத்து, கூட்டத்தை கற்றுமுற்றும் பார்த்தாள், மனித வட்டத்திற்கு மையப் புள்ளியாய் நின்றபடியே அங்கு திரண்டு நின்ற கூட்டத்தை ஒட்டுமொத்தமாகப் பார்த்தாள். இந்தப் பார்வைக்கென்றே பயிற்சி எடுத்தவள். ஒட்டுமொத்தமாக பார்க்கும்போதுகூட ஒவ்வொரு இளைஞனும் தன் மீது உரிமை கொண்டாடலாம் என்பதுபோல் இரட்டைப் பார்வையாய் பார்ப்பவள். இதனால்தான், உயர்நீதி மன்ற நீதிபதியின் ஆண்டு வருமானம், இவளது மாத வருமானம். நுனி நாக்கில் அவள் பேசும்போது, நேயர்கள் சொக்கிப் போவார்கள். மழலைத் தமிழோடு அங்குமிங்குமாய் முகமாட்டி அவள் பேசுகிற தொனி அலாதியானது. அத்தனைத் தமிழர்களையும் கட்டிப் போடக் கூடியது. இப்போதும் அதே நுனி நாக்கில், ஒன்றும் தெரியாத பாப்பா போல லேசாய் சிணுங்கியபடியே பேசினாள். அவள் பேசப் பேச வீடியோ கேமரா ஒன்று கழன்றது. இன்னொரு என்.ஜி.வோ கேமரா, கூட்டத்தை லாங் ஷாட்டில் எடுத்து விட்டு அழகான பெண்களையும் ஆண்களையும், அவர்களது கிககிகப்புக்களையும் குளோசப்பில் அம்பலப் படுத்திக் கொண்டிருந்தது. சிம்பா, கேமிரா பயம் ஏதும் இல்லாமல் சரளமாகப் பேசினாள்.
ஹாய்.... பாய்ஸ் அண்டு கேர்ள்ஸ்! உங்கள் 'ஜிப்சி' சிம்பாவோட மார்னிங் வணக்கங்கள் - ஓகே -- சப்ஜெக்ட்டுக்கு வருவோமா? 'ஜிப்சி' நிறுவனத்தின் சார்பில் தொலைக்காட்சியில நான் கொடுத்த இன்விடேஷனுக்கு இணங்கி இங்கே வந்திருக்கிற உங்களுக்கு என்னோட மெனி மெனி தேங்ஸ்.... இந்த நிகழ்ச்சி புதுமையான துங்கோ. பொதுவாக, நம்மோட மெஜாரிட்டி யங்ஸ்டர்ஸ் காதலில் ஈடுபடுறதில்லங்கோ. கேக்கிறதுக்கே கஷ்டமாயில்ல? அதுதான் பேக்ட்டுங்க -- ஆனால், ஒண்ணுங்க. அவங்க மனசுக்குள்ளேயும் ஒரு மானசீகமான உருவம். முன்பின் பார்த்தறியாத உருவம் காதலனாகவோ -- காதலியாகவோ நடமாடும். மேரேஜ் ஆன பிறகும், இவங்க இந்த மானசீக உருவத்தோட குடித்தனம் நடத்துவாங்க. இதனால கட்டுனதுக்கிட்டயும் பேசமுடியாம மனகக்குள்ள எட்டுனதுக்கிட்டயும் பேசமுடியாம டிஸ்டர்ப் ஆவாங்கோ.... இந்த மாதிரி எங்ஸ்டர்ஸ்க்கு, பாசிட்டிவ் சான்ஸ் கொடுக்க வந்திருக்கோம். இது ஒரு சமூக டூட்டி என்கிறதுல பெருமை படுறோம். இங்கே கூடியிருக்கிற நீங்கெல்லாம் இதுவரைக்கும் காதல் அனுபவம் இல்லாதவங்கதானே? சொல்லுங்கோ? இல்லாதவங்களா? ஓகே. ஓகே. இங்கு வந்திருக்கக் கூடிய ஒங்கள ஆண் பெண்ணா ஜோடி சேர்க்கப் போறோம். மகாபலிபுரத்துக்கு கூட்டி போறோம். அதுக்குள்ள உங்களுக்கு காதல் வந்துட்டால், டெர்மினல் இடத்துல சொல்லுங்கோ. இப்படி கண்டதும் காதல் இன்றைய சமுதாயத் தேவைங்கோ. உங்களுக்கும் உங்களோட பைக்ல வருகிற பார்ட்னருக்கும் லவ் உண்டானால் எனக்கே லவ் உண்டானது மாதிரி. சும்மா ஒரு ஜோக்குக்குத்தான். ஆனாலும் புதுக் காதலர்கள உருவாக்கின புண்ணியம் எங்களுக்கு கிடைக்குங்கோ. -- அதனால பைக்ல போற உங்களோட பார்ட்னருக்கும் உங்க மானசீக உருவத்துக்கும் பொருத்தமாக இருக்குதான்னு பார்க்கப் போறீங்க. அப்படிப் பொருந்திப் போன ஜோடிகள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து ஒரு ஜோடியை மலேசியாவிற்கு அனுப்பப் போறோம். அந்த ஜோடியை அந்த நாட்டுலயே வெல்கம் பண்றதுக்கு நம்மோட யுனிவர்ஸல் ஸ்டார் கமல்நாத் குமார் தயாராய் இருப்பார். அந்த ஜோடியைப் பேட்டியும் காண்பார். இந்தப் பேட்டி உலகெங்கும் உள்ள தமிழர்களுக்காக ஒளிபரப்பாகும். இன்னொரு ஹேப்பி சமாச்சாரங்கோ. மலேசியா போகுறதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கபுள், தேவைப்பட்டால் அந்த நாட்டுல ப்ரீ ஹனிமூன் - டமிள்ல அதுக்கு என்ன பேரு - வாட்ட ஹனிமூன்னா தேன் நிலவு. அதுக்கு முந்தினது... பால் இரவா? குட் சொன்னவருக்கு தேங்ஸ் பால் இரவுக்கு ஏற்பாடு செய்வோம்... அதனால இந்த நிகழ்ச்சியை சீரியஸா எடுத்துக்கணும். இந்தப் போட்டிக்குரிய கண்டிஷன்கள நம்மோட... சாரி உங்களோட ராஜி தெரிவிப்பாள்.
ஸ்கர்ட் ராஜி மார்பகத்தைக் குலுக்கியபடியே அந்த வட்டத்திற்குள் வந்தாள், இரண்டு கைகளையும் உயரத் தூக்கி ஓரடி உயரத்துக்கு குதித்தாள். பிறகு, காலை அங்கும் இங்குமாய் ஆட்டினாள். இரண்டு கைகளில் பிடிபட்டு கிடந்த டப்பாக்களை முன்பக்கமாய் கொண்டு வந்தாள். ஒரே சமயத்தில், அத்தனை பேரையும் முத்தமிட போவது போல் உதடுகளை குவியவைத்து மம்மித் தமிழில் அசத்தினாள்.
'ஹலோ' மைடியர் அண்டு நியர் ஒன்ஸ்... இது கேர்ல்ஸ் பேரைக் கொண்ட பெண் டப்பா.... அது பாய்ஸ் பேரைக் கொண்ட ஆண் படப்பா- இந்த ரெண்டு டப்பாக்களையும் இந்த எங் மேன் சூரியா... நெசமாவே நீ எங் தானடா... ஒகே. ஒகே. சூரியா குலுக்குவான். ரெண்டு டப்பாக்கள்லயும் வருகிற சீட்டுகள்படி ஜோடி சேர்ப்போம். ஓகேயா- இந்தச் ஜோடிங்க மகாபலிபுரத்துக்கு நாலு மணி நேரத்துல அதோ வரிசையா நிற்கிற மோட்டர் பைக்ல ஏறி.. கடற்கரைப் பக்கம் இருக்கிற பாலடஞ்ச கோயில் பக்கம் வரணும். ஓகேயா. அங்கோ பிரபல நடிகை கம்பாகிட்ட, கண்டதும் காதல் வசப்பட்ட ஜோடிங்க, தங்கோ பேர்களக் கொடுக்கணும். அவங்க குலுக்கல் முறையில ஒரு ஜோடியத் தேர்ந்தெடுப்பாங்கோ. ஆனா ஒண்ணுங்கோவழியில ஒருத்தருக்கொருத்தர் ஏடாகொடாமா நடக்கக் கூடாதுங்கோ. ஏன்னா நாம தமிளங்கோ. நம்மோட தமிள் நாட்டு கல்ச்சர கட்டிக் காக்கணுங்கோ . சூரியா!... வீரத் தமிள் மகனே! உன்னத்தான் சூரியா. குலுக்குடா.'
குமுதா துணுக்குற்றாள். இளங்கோவின் காதலியாக இருக்கும் அவளுக்கு, சிறிது மன உளைச்சல். அந்த உளைச்சலுக்குள் மனச்சாட்சி ஓணானாய் ஆடியது. ஆனாலும் அவள் கண்ட காட்சி அந்த ஓணானை ஒரே குத்தாய்க் குத்தியது.
சூரியா தன்னை ஒரு குலுக்கு குலுக்கிக் கொண்டே இரண்டு டப்பாக்களையும் குலுக்கி விட்டு, இரண்டு கைகளையும் அவற்றுள் துழாவ விட்டு இரண்டு துக்கடாப் பேப்பர்களை தனியாக நின்ற இந்திக்கார வாணியிடம் ஒப்படைத்தாள். அவள் மார்பைப் பிளப்பதுபோல் பின்பக்கமாய் வளைந்து நெஞ்சை உயர்த்தி, உரத்துக் குரலிட்டாள்.
'தங்காத்துரை - அண்டு லலிதா- ஹை'
ஒரே கைதட்டல். லலிதாவும், தங்கத்துரையும், சிம்பாவுக்கு அருகே போய் நின்றார்கள். சிம்பா, இருவரையும் ஒருவர் பக்கம் ஒருவரைத் தள்ளி விட்டாள். உடனே பலத்த கைதட்டல், அதைப் பார்த்து சிம்பாவே வாயில் கையை வைத்து உய், உய் என்று விசிலடித்தாள். என்றாலும் சிவப்பியான லலிதாவுக்கு கறுப்பன் தங்கத்துரையைப் பிடிக்கவில்லை. ஆனாலும் அழகற்ற கணவனை, அவன் சம்பளத்திற்காக பொறுத்துக் கொள்வது போல், இவளும் மலேசியப் பயணத்திற்காக பொறுத்துக் கொண்டாள். இரண்டாவது ஜோடியான நவீனுக்கு முன்பல் நீண்ட காந்தாவைப் பிடிக்கவில்லை. ஆனாலும் பெற்றோர் ஏற்பாடு செய்யும் மணமகளை கட்டிக் கொன்ளும் அடக்கமான மாப்பிள்ளைபோல் அவன் அடங்கி நின்றான்.
குமுதா தனக்கு வரப்போகும் ஜோடியைப் பற்றி துளிகூட கவலைப்படவில்லை. வெறுமனே மாமல்லபுரம் மட்டும் வரையான அட்வென்சர். லைப் அட்வென்சர் அல்ல. கெழவனர் இருந்தாலும் ஓ.கே.தான்.
நடுக்கட்டத்தில், 'ஹாய்! -- குமுதா... பாண்டியன் என்று சூரியா குரலிட்டபோது, ஆண் பெயருக்குரியவன் நடந்தபடியே 'நோ பாண்டியன். அயாம் பாண்டியா... நாட் பாண்டியன்' என்று அட்டகாசமாகச் சிரித்துச் சொன்னான். கூட்டத்தினரின் கைதட்டலோடு, பாண்டியாவும் குமுதாவும் ஏற்கனவே ஜோடி சேர்ந்து நின்றவர்கள் பக்கம் போய் நின்று கொண்டார்கள். குமுதா, தன் ஜோடியை ஏறிட்டுப் பார்த்தாள். இது என்ன அலங்கோலம் - முகத்தில் கரடித் தாடி, ஒரே ஒரு காதில் மட்டும் வளையம், பெண் மாதிரி லேசான கொண்டை அவளை விட ஓரடி உயரம்.
பாண்டியன். மன்னிக்கவும் பாண்டியா... குமுதாவின் சுருங்கிப் போன கையைப் பிடித்து மெல்ல தன் பக்கமா இழுத்து கைகொடுத்தான். உடனே ஒரே கைதட்டுகள். ஒன்ஸ் மோர் கேட்டு இன்னொரு தட்டுகள். குமுதாவுக்கு அவமானமாக இருந்தது. பொறுத்துக் கொண்டாள். பேயனுக்கு வாழ்க்கைப்பட்டு புளியமரத்தில் ஏறிய கதை...
வரிசையாக நிறுத்தப்பட்ட பைக்குகளில் அத்தனை புதிய ஜோடிகளும் ஏறிக் கொண்டன. ஒரு காலத்தில், சோலை வனமாகி இப்போது பாலைவனமான அந்தப் பூங்காவின் சாம்பலில் துளிர்விட்ட செடிகளை துண்டித்தபடியே, புல்வெளிப் பாதையை சிதைத்தபடியே அத்தனை வண்டிகளும் சிதறிச் சிதறிச் சென்றன. சல்வார் கமிசுகள், பொம்மைச் சட்டைகள் மேலே தோன்ற அந்த பைக்குகள், யந்திர வண்ணத்துப் பூச்சிகளாய் - அந்த பூச்சிகளே பறப்பதை மறந்து துள்ளுவது போல் தோன்றியன.
குமுதா, மோட்டார் பைக்கின் பின்னிருக்கையில் விலகித்தான் இருந்தாள். மனம் ‘இளங்கோ இளங்கோ’ என்று ஜெபித்துக் கொண்டிருந்தது. குளிர்கால எதிர்க்காற்று, பருவக் காற்றாய் அவள் மூக்கில் இனம்பிரியாத வாசனையை தாவ விட்டது. ஆங்காங்கே சோடி சேர்ந்து போனவர்களை, அவள் பறவைப் பார்வையாய், பறந்தபடியேப் பார்த்தாள். ஒரு ஆங்கிலோ இந்திய இளைஞன், முட்டிக்கால் துணியோடு தன் தோளில் தலைபோட்டு நடந்த முக்கால் வெள்ளைக்காரியை முதுகில் அணைத்தபடியே நடந்துகொண்டிருந்தான். குமுதாவிற்கு மூடு வருவதுபோல் இருந்தது. பாண்டியாவை இளங்கோவாக அனுமானித்துப் பார்த்தாள். அவன் தான் இப்போது அவளை அழைத்துச் செல்வதுபோல கற்பித்துக் கொண்டாள். ஆனாலும் அந்தக் கரடு முரடுச் சாலையின் ஒரு பள்ளம் கட்டி, அவள் பாண்டியாவின் முதுகின் மேல் தூக்கிப் போடப்பட்டபோது கதாரித்துக் கொண்டாள். இவன் இளங்கோ அல்ல... இவன் அன்னியன்.. நான்கு மணி நேரக் கூத்தின் நடிகன்... அவ்வளவேதான்...
ஆனாலும், சிறிது நேரத்தில், பாண்டியாவின் ஒற்றைக்காது வளையம் எதிர் திசைக் காற்றாலும் அவன் வண்டியை அங்குமிங்கும் திருப்புவதாலும் ஊஞ்சலாய் ஆடுவதைக் கண்டதும் சிரிப்பு தாளமுடியவில்லை. அந்த வளையத்தைத் தொட்டுப்பார்க்கக் கூட ஆசை.... ஒரு விரல் உள்ளே போய்விடுமா என்று யோசித்தாள்... ஆன்காட்டி விரலை, அதன் அருகே கொண்டுபோய் விட்டாள்.. அவள் கை கழுத்தில் பட்டு, திரும்பிய பாண்டியா 'ஹாய்' என்றான். அவன் சிரிப்பும், அந்தத் தோரணையில் அந்த வளையம் ஆடிய ஆட்டமும், இவளை ஆட்டுவித்தது. எவ்வளவு உயரம்... எவ்வளவு கம்பீரம்... அந்த வளையம்கூட அந்தக் கம்பீரத்த எடுத்துக்காட்டுறது போல இல்ல? இந்த இளங்கோவும் இருக்கானே -- எப்பவோ கடுக்கன் போட்டானாம் -- அவன் காது துளையை பார்க்க சசிக்காது -
குமுதா திடுக்கிட்டாள். தன் எண்ணத்தை மாற்றுவதற்காக முகத்தை நிமிர்த்தியவளுக்கு, பாண்டியாவின் முதுகு, வண்ணத் தொலைக்காட்சி பெட்டிபோல் தெரிந்தது. பல்வேறு டிசைன்கள் போட்ட சட்டை. டிவி. பெட்டியில் வருவது போன்ற தடங்கல் கோடுகள், அழகான ஆண்களும் பெண்களும் காதல் களி நடனம் புரியும் ஓவியங்கள். - இந்த இளங்கோ இருக்காரே. இவரும் இவரு ஜிப்பாவும். இந்த மாதிரி ஒரு சட்டை வாங்கி அவருக்கு மாட்டனும், சரியான நாட்டுப்புறம்...
பழைய மாமல்லபுரம் சாலையில் பெருங்குடிப் பக்கம் அந்த மோட்டார் பைக் ஒடியபோது, எதிரே முட்டப்போவதுபோல் வந்த லாரியைக் கண்டு, பாண்டியா தடுமாற, பைக்கும் தடுமாறித் தடம் மாறியது. உடனே குமுதா பயந்துபோய் அவன் தோளைப் பிடித்துக் கொண்டாள்.- பயந்துபோய்தான்... பிறகு முன்னெச்சரிக்கையோடு, தன் உடம்பை, பின்பக்கமாக நகர்த்திக் கொண்டாள்.
என்றாலும், ஒற்றை வளையக்காரன், இடது கையைப் பின்பக்கமாய்க் கொண்டுபோய் இருக்கையைத் தடவினான். பிறகு, தடவிய கையை நீட்டி, அவள் கையைப் பற்றிக் கொண்டான். அவள் அவசர அவசரமாக கையை இழுத்தபோது, வண்டி மீண்டும் தாறுமாறாய் ஓடியது. உடனே, கையை இழுப்பதை நிறுத்தி, அந்தக் கையை, அவன் கையின் போக்கிற்கு விட்டுக்கொடுத்தாள். இல்லன்னா, வண்டித் தாறுமாறாய் போய் விபத்து ஏற்பட்டு விட்ப்பிடாதே. விபத்து ஏற்படப் போவதுபோலே எதிரே ஒரு சைக்கிள்காரன் தும்மல் போட்டபடியே குறுக்கே பாய்ந்தான். இதனால் பைக் குறுக்கு வெட்டாய்ப் பாய்ந்து, சரியப் போனது. குமுதா மீண்டும் பயந்தாள். மீண்டும் அவன் தோளைப் பிடித்தாள். வண்டி சரியானதும், பாண்டியா அவளைத் திரும்பி பார்த்தபடி பாடுவதுபோல் பேசினான். ‘பயப்படாதே குமு! உன்னோட சேப்டி... என்னோட டியூட்டி... யூ ஆர் பியூட்டி... ஆனாலும் நான் அடிக்க மாட்டேன் லூட்டி... யூ ஆர் எ டெய்ட்டி.. ஓ.கே. குமு. பயப்படாதே... நான் ஜென்டில்மேன்.’பாண்டியா, மீண்டும் முகத்தை, சாலைப் பக்கமாக முகத்தைத் திருப்பியபோது, குமுதா குபீர் சிரிப்பானாள். கன்னங்கள் உப்பின. கண்கள் நாட்டியமாடின. எப்படி இங்கிலீஸ்ல அடுக்கு மொழி பேகறார்... குமுன்னு என் பேரக்கூட எப்படி ஜென்டிலா உச்சரிக்கிறார். இந்த இளங்கோவும் இருக்குதே - குமுதா... ஆ... ஆ... ன்னு ஒப்பாரி வைக்கும்.
குமுதா, ஆவலை அடக்க முடியாமல், அவன் இடது தோளுக்கு மேல் கழுத்தை ஒருச்சாய்த்து நீட்டி அவன் முகத்தைப் பார்க்கப் போனான். ஜோடி சேர்ந்தபோது அவனை வேண்டா வெறுப்பாக பார்த்ததால் அவன் முகம் அவள் மனதில் சரியாக பதியவில்லை. இப்போது பதிவு செய்யப் போனாள். அந்தச் சமயத்தில் எதிரே ஒரு வண்டி இவன் சடன் பிரேக் போட்டான். குமுதா, பயந்து போய், மார்பகம், அவன் முதுகில் கசங்கும்படி, அவன் இடுப்பைச் சுற்றி கைளை வளையமாக்கிக் கொண்டாள். பிறகு இளங்கோவை நினைத்து வளையத்தை உடைத்தெறிந்தாள். இதனால் என்னவோ பாண்டியாவுக்கு ஏகப்பட்ட உற்சாகம். மோட்டர் பைக்கின் இருக்கையில் இருந்து உடம்பை அரையடித் தூக்கி நிறுத்தியபடியே பாட்டு பாடினான். அந்தப் பாட்டிற்கு ஏற்ப தன்னையும், வண்டியையும் ஆட்டினான்.... 'தில்லானா.. தில்லானா. நீ தித்திக்கின்ற தேனா, திக்கு, திக்கு, நெஞ்சில் தில்லானா. மஞ்சக் காட்டு மைனா- நீ கொஞ்சிக் கொஞ்சிப் போனா..
பாண்டியா அந்தப் பாட்டிற்கு ஏற்ப அங்குமிங்குமாய் ஆடினான். குமுதாவுக்கும் ஆட வேண்டும் போல் இருந்தது. அவளுக்கு மிகவும் பிடித்த பாட்டு இது. எப்படி டாடுறார்! இந்த இளங்கோவும் இருக்குதே. தெரிஞ்சதெல்லாம் பாரதியார் பாட்டு, இல்லாட்டா... பாடாதி தேவாரம், திருவாசகம். இந்த மாதிரி மாடர்னா பாடத் தெரியலியே.... பாண்டியாவின் பாடல் உச்சக்கட்டத்திற்கு போனபோது, மோட்டார் பைக்கும் உச்சத்திற்குப் போனது. பிறகு ஆமை போல் ஆனது. அந்த வண்டிக்குப் பின்னால் வந்து முன்னால் போய்க் கொண்டிருந்த கார்க்காரன் வண்டியை நிறுத்தியபடியே கத்தினான். அசல் நோஞ்சான். ஊதினால் பறப்பான் என்பார்களே - அப்படி.
‘உனக்கு மூளை இருக்குதா மேன் -- புதுசா வண்டி ஓட்டுறியா. இல்ல இந்த பொண்ணு புதுசா?’
கார்க்காரன் பேசி முடித்துவிட்டு, வண்டியை வேகப்படுத்த போனபோது, பாண்டியா தனது மோட்டர் பைக்கை இடது பக்கமாய். ஒடித்து அந்த காருக்கு சாலைத் தடையை ஏற்படுத்தியவாறே. சினிமாக் கதா நாயகன் போல ஒரு சிகரெட்டை எடுத்து, நிதானமாக பற்றவைத்து, கார்க்காரனை பாராததுபோல் பார்த்தான். பிறகு ஒரு சினிமாவில் இதே சூழலில் கதாநாயகன் பேசிய டயலாக்கை அப்படியே ஒப்பித்தான்.
‘ஏண்டா டேய்! இடது பக்கம் ஓவர் டேக் செய்யக்கூடாதுன்னு தெரியாதவங்க, ஏண்டா கார ஓட்டி ரோட்டை இம்சிக்கிறீங்க? ஒருத்தன்கூட, ஒரு பொண்ணு போயிடக்கூடாதே - அதுவும் இந்தமாதிரி அழகான பொண்ண ஒரு ஆணோட ஜோடியாப் பார்த்தால் போதுமே. வயித்தெரிச்சல் வந்துடுமே... போகட்டும்... யோவ் பெரிக... இப்போ நீ என்னோட காதலிகிட்ட மன்னிப்புக் கேக்கிறே. இல்லாட்டி-- இந்த மோட்டர் பைக்காலேயே உன் கார அடிச்சு நொறுக்குவேண்டா மச்சி’
கார்க்காரன் பயந்துவிட்டான். ‘சாரி சார். சாரி மேடம்...’
ஏத்துக்கிட்டோம். எடுடா வண்டியை அசல் கார்த்திக் மாதிரி மிரட்டி - பிறகு ரஜினிகாந்த் மாதிரி அந்த ஆசாமியை விரட்டிய பாண்டியா, இப்போது குமுதாவின் மனதில் காலூன்றி விட்டான். இவளும் ஒரு கதாநாயகியாய் ஆகிவிட்டாள். அந்தச் சமயம் பார்த்து அவளை அறியாமலேயே ஒரு படுக்கையறை டூயட் பாட்டு காரணம் இல்லாமலே வாயில் முணுமுணுப்பாய் வெளிப்பட்டது... ஆனாலும் இளங்கோ அவ்வப்போது எட்டிப் பார்க்கத்தான் செய்தான். இவள், விகஜயசாந்தி மாதிரி, அவனுக்கு ஒரு உதை கொடுத்து உருட்டி விட்டாள்.... தெலுங்குப் படங்களில் கொடிகட்டிப் பறக்கும் அந்த நடிகையை இவளுக்கு ரொம்பப் பிடிக்கும்.
பாண்டியா, வண்டியை நிதானமாக ஓட்டியபடியே பின்பக்கமாய்த் திரும்பி ஒரு வேண்டுகோள் விடுத்தான்.
‘தப்பா நினைக்கப்படாது குமு! அந்தக் கார்க்காரப் பயல் பேசினது மாதிரிதான் இந்த ரோடுகாரப் பயலுக உன்னையும் என்னையும் ஒரு மாதிரிப் பார்க்காங்க. நீ விலகி இருக்கிறதனாலயும் பயந்து போய் அக்கம் பக்கம் பார்க்கிறதினாலயும் உன்ன நான் ஏதோ தள்ளிக்கிட்டுப் போறது மாதிரி நினைக்கிறாங்க. அதனால நெருக்கமா இருக்கிறது போல் நடித்தால் நல்லது.'
குமுதா ஓ.கே. சொல்லவில்லை, அதேசமயம் ஆக்ஷன் பெண்ணானாள். பின்னிருக்கையில் இருந்து முன்பக்கமாய் நகர்ந்து நகர்ந்து அவன் இடுப்போடு சேர்த்து வலது கையைக் கோர்த்துக் கொண்டாள். சும்மா ஒரு இதுக்குத்தான். இல்லாட்டி பார்க்கிறவங்க தப்பா நினைக்கப்படாதே- இந்த இளங்கோவும் இருக்கானே. அவன் மேல லேசா கைபட்டாபோதும் கற்பழிச்சிட்டது மாதிரி கதறுவான். பொது இடம், பொது இடமுன்னு பொலம்புவான். அவன எப்படித்தான் காதலிச்சேனோ ?...பாண்டியா, கண்மண் தெரியாமல் ஓட்டினான். எண்பது கிலோமீட்டர் வேகம் இருக்கலாம். குமுதா சிறிது பயந்து போனாலும் அந்த வேகம் அவளுக்கு பிடித்துப் போய்விட்டது. பின்பக்கமாய் ஓவர்டேக் செய்ய வரும் லாரியை மறித்து முன் பக்கமாய் வரும் பேருந்துக்கு குறுக்காய் வண்டியை வளைத்து அவன் ஓட்டிய விதமே ஒலிம்பிக் போட்டிக்கு தகுதியைக் கொடுக்கும். இந்த இளங்கோவும் இருக்கானே -- தாம்பரத்துல லாரி வருதுன்னா சைதாப்பேட்டையிலேயே ஸ்கூட்டரை நிறுத்துவான். அட்வென்சர்னா என்னன்னே தெரியாதவன்.
பாண்டியா, நாவலூர் பக்கம் ஒரு கடை முன்னால் பைக்கை நிறுத்தினான். கட்டு விரலை ஆட்டியபடியே, ரெண்டு கோலாக்களை கடைப் பையனையே கொண்டு வரச்செய்தான். ஒன்றைப் பல்லால் கடித்து, குப்பியை குதறி கடித்து, வீசினான். பிறகு பைக்கிலிருந்து இறங்கினான். ஆங்கிலப் படங்களில் வருமே அப்படி அவள் முன்னால் போய் மண்டியிடுவது போல் லேசாய் காலை வளைத்து அவளிடம் அந்த கோலாவை நீட்டினான். அவள், அவனைப் பார்த்தபடியே, சிரித்துக் குடித்தாள். அவனும் குடித்தான். பிறகு இவன் தான் குடித்து பாதியிருந்த கோலாவை அவளிடம் நீட்டினான்.... உடனே அவள் அதை வாங்க மறுத்ததுபோல், தொலைக்காட்சியில் விமல் சேலை விளம்பரத்தில், ஒரு பைலட் அதிகாரிக்கு கைகளால் தனது முகத்தை மறைத்தபடியே சிரிப்பாளே அந்தப் பெண்ணைப்போல சிரித்தாள். பிறகு, அங்குமிங்குமாய் பார்த்தபடியே அவன் கையிலிருந்த கோலாவை வெடுக்கென்று பற்றிக்கொண்டு, தனது கோலாவை முந்தானையால் மறைத்த படியே அவனிடம் நீட்டினாள்.குமுதாவின் மனம் அவனால் ஜில்லிட்டதா? அல்லது அந்த பானத்தால் ஜில்லிட்டதா என்று திண்டுக்கல் லியோனியால்கூட சொல்ல முடியாது. அப்படிப் பட்ட ஜில்லு. வாழ்க்கையின் அர்த்தத்தை புரிந்து கொண்ட ஜில்லு...
அந்தக் குளிர்காற்றிலும், வியர்த்துக் கொட்டுவதுபோல் பாண்டியா தனது சட்டைப் பொத்தான்காளை தொப்புள் வரைக்கும் கழட்டி விட்டான். செம்மண் நிலத்தில் பசும்புல் முளைத்ததுபோன்ற மார்பு- அதில் டாலர் செயின் டாலடித்தது. அதைத் தூக்கித் தூக்கிப் போட்டு பிடித்தபடியே, பாண்டியா அவள் கண்களை நேருக்கு நேராய்ப் பார்த்தபடியே கேட்டான். எப்பா எப்பேர்ப்பட்ட கண்ணு...
‘ஒன்ன ஸ்கூட்டர்ல கொண்டுவந்து விட்டானே... ஒரு இம்போட்டண்ட் பெல்லோ... அதான் ஒம்போதுமாதிரி.... அவன் யாரு? உன் காதலனா?’
குமுதா, பாண்டியாவை ஒய்யாரமாகப் பார்த்தபடியே அவசர அவசரமாய் பதிலளித்தாள். ‘நோ... நோ... அவன் எங்க பெரியம்மா மகன்’ குமுதா, இப்போது, அவன் தோளைப் பிடித்தபடியே வண்டியில் ஏறினாள்.
- வாசுகி - தீபாவளி மலர் - 1998