உள்ளடக்கத்துக்குச் செல்

ஈரோடு மாவட்ட வரலாறு/001-043

விக்கிமூலம் இலிருந்து


1. ஈரோடு மாவட்டம்


தொல்பொருள் சிறப்பும், வரலாற்றுப் பெருமையும், இலக்கியப் புகழும் உடைய மாவட்டம்!

உலகத் தொழில் அனைத்தும் உவந்து செய்து மாநிலத் தலைநகர் சென்னைக்கு அடுத்து ஏற்றுமதியில் ரூபாய் 10ஆயிரம் கோடியைத் தாண்டி மாநிலத்தில் இரண்டாவது இடத்தைப் பிடித்த மாவட்டம்!

தமிழ்நாட்டில் எட்டாவது பெருநகரமாக எப்பொழுதும் சுறுசுறுப்பாக, இயங்கும் ஈரோட்டைத் தன் தலைமையிடமாகக் கொண்ட மாவட்டம்!

நீர் வளமும் நில வளமும் மக்கள் மனவளமும் கொண்டு வந்தாரை அரவணைத்து வாழவைக்கும் மாவட்டம்!

அரசு ஊழியர்களும் இதர அலுவலர்களும் தொழில் முனைவோரும் தொழிலில் பணிபுரிவோரும் வணிகர்களும் வாழ்வியல் வசதிகளால் மிகவும் விரும்பிப் போற்றும் மாவட்டம்!

சுமார் 85 ஆண்டுகள் தமிழக ஆட்சி, அரசியல், சமுதாய உணர்வு ஆகியவற்றின் தொட்டிலாக விளங்கும் மாவட்டம்!

ஈரோடு மாவட்டம்!

அக்காலத்தில் செல்வம் என்று கருதப்பட்ட கால்நடை மிகுதியாலும், பல்வேறு மணிக்கற்களால் உரோமானியரையும் கவர்ந்த செல்வப் பெருக்காலும், நீர் வளத்தாலும், நில வளத்தாலும் இரட்டரும் சுங்கரும் சேரரும் சோழரும் பாண்டியரும் போசளரும் விசயநகராரும் மதுரை நாயக்கர்களும் மைசூர் உடையாரும் ஐதரும் - திப்புவும் கிழக்கிந்தியக் கம்பெனியாரும் போட்டி போட்டுக் கொண்டு தங்கள் அதிகாரத்தின் கீழ் ஈரோடு மாவட்டப் பகுதியைக் கொண்டு வர விரும்பினர்.

தமிழகத்தைப் படைகொண்டு தாக்கிப் பணிய வைக்க வந்த அத்துணை அன்னியப் படைநாயகர்களும் புகுந்த மூன்று பெருவழிகளும் இம்மாவட்டத்தின் வடக்கு மேற்கு எல்லைகளிலேயே உள்ளன, படையோடு வந்தவர்களும் அவர்களின் வருகையைத் தடுத்தவர்களும் நடத்திய பல்வேறு கடுமையான பெரும் போர்களினால் ஏற்பட்ட அழிவையும் கொள்ளையடிக்கப்பட்ட பெருஞ்செல்வ இழப்பையும் பெரும் துன்பத்தையும் ஈரோடு மாவட்டமே தாங்கியது.

3000 வீடுகளைக் கொண்டு முக்கிய வணிக மைய ஊரான ஈரோடு முற்றிலும் அழிக்கப்பட்டு ஆள்நடமாட்டம் இல்லாத 400 இடிந்த வீடுகளைக் கொண்டிருந்தது 1792ல்! அழிவிற்கு இது ஒரு சான்று.

மெல்ல மெல்ல உயிர் பெற்று இன்று நிமிர்ந்து வீறுநடை போடுகிறது ஈரோடு மாவட்டம், அணுகுண்டு வெடிப்பிற்குப் பின் ஜப்பான் எழுச்சி பெற்றதை இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம்.

ஈரோடு மாவட்டம் கிழக்கே சேலம், நாமக்கல், கரூர் மாவட்டங்களையும், தெற்கே திண்டுக்கல் மாவட்டத்தையும், மேற்கே கோயமுத்தூர், உதகமண்டலம் மாவட்டங்களையும், வடக்கே கருநாடக மாநிலத்தையும் எல்லைகளாகக் கொண்டு விளங்குகிறது.

8192 சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்ட ஈரோடு மாவட்டம் கிழக்குத் தீர்க்க ரேகை 76-49' முதல் 77-5' வரையும் வடக்கு அட்சரேகை 10-36′ முதல் 11-58' வரையும் உள்ள பரப்பளவில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 25,74,067 பேர் ஆவர். ஆடவர் 1308039 பேர்; பெண்டிர் 1268028 பேர். பெண்கள் தொகை சற்றுக் குறைவு. கல்வியறிவு உடையோர் 69.5 சதவிகிதம். மாநில சதவிகிதத்தை விடக்குறைவு, சதுர கிலோ மீட்டருக்கு 314 பேர் வாழ்வதாகப் புள்ளி விவரம் கூறுகிறது (2001).

ஈரோடு, தாராபுரம், கோபிசெட்டிபாளையம் என்ற மூன்று வருவாய்க் கோட்டங்களையும், ஈரோடு, தாராபுரம், காங்கயம், பெருந்துறை, பவானி, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம் ஆகிய ஏழு வருவாய் வட்டங்களையும், இருபது ஊராட்சி ஒன்றியங்களையும் நாற்பத்தேழு வட்டாரங்களையும் (பிர்க்கா). ஐநூற்று முப்பத்தொன்பது வருவாய்க் கிராமங்களையும், 4687 குடியிருப்பு ஊர்களையும் கொண்டு விளங்குகிறது ஈரோடு மாவட்டம்.

இம்மாவட்டத்திலுள்ள நகராட்சிகள் பதினொன்று. அவை, ஈரோடு, தாராபுரம், பவானி, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம், வெள்ளகோவில், காங்கயம், பெரிய சேமூர், வீரப்பன் சத்திரம், சூரம்பட்டி, காசிபாளையம் ஆகியவையாகும்.

பொதுவாக வெப்பநிலை அதிக அளவு 37.9°செ குறைந்த அளவு 20.0°செ ஆகும். வடக்கே வெயில் குறைவாகவும் தெற்கே செல்லச் செல்ல வெயில் அதிகமாகவும் இருக்கும். ஆண்டுக்கு சராசரி 660மி.மீட்டர் மழை பெய்யும். தென்மேற்கு பருவமழை (சூலை - செப்டம்பர்) குறைவாகவும், வடகிழக்குப் பருவமழை (அக்டோபர்-டிசம்பர்) அதிகமாகவும் இருக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=ஈரோடு_மாவட்ட_வரலாறு/001-043&oldid=1491966" இலிருந்து மீள்விக்கப்பட்டது