ஈழம் உணர்வின் ஆரம்பங்கள்

விக்கிமூலம் இலிருந்து

இரண்டு தமிழ் நாவல்கள், ஒன்று, தனி வீடு, மு.தளையசிங்கம் 1962-ல் எழுதியது, ஆனால் அது அவரது மரணத்திற்குப் பிறகு 1984-ம் வருடக் கடைசியில் தான் பிரசுரமானது, மற்றது, புதிய உலகம் 'கோவிந்தன்' என்ற புனைபெயரில் ஒருவர் எழுதியது, 1985-ன் நடுவில் பிரசுரமானது, இவ்விரண்டும் இலங்கை வாழ் தமிழர்கள், ஓர் இனமாகத் தனித்து சுதந்திரமாக வாழ தனி நாடு கோரி நடத்தும் போராட்டத்தின் இரண்டு நிலைகளின் இலக்கிய அடையாளக் குறிகளாகக் கொள்ளலாம். ஒன்று, தனி வீடு, அத்தகைய ஒரு சிந்தனை, தன் மனச் சான்றின் பதிவுகளைத் தன் எழுத்தாகக் கொண்ட ஒருவரின் மனத்தில் உதித்ததை அடையாளப்படுத்துகிறது. மற்றது அந்த சிந்தனை போராட்டமாக உருவெடுத்து வளர்ந்துள்ள கட்டத்தை அடையாளப்படுத்துகிறது. இவ்விரண்டு வளர்ச்சிப்புள்ளிகளுக்கு இடையில் ஒரு மையப்புள்ளியாக இருக்கும் இன்னொரு நாவலையும் கவனத்தில் கொள்வது அவசியம். 1973-ல் வெளிவந்த அருள் சுப்பிரமணியத்தின் அவர்களுக்கு வயது விட்டது என்னும் நாவல் அது. மூன்று புத்தகங்களின் ஆசிரியர்களும் இலங்கை வாழ் தமிழ் எழுத்தாளர்கள் தாம்.

மு.தளையசிங்கம் எழுத்தாளர், சிந்தனையாளர். அருள் சுப்பிரமணியம் தன் நாவலை எழுதியபோது எழுத்துலகுக்கு புதியவர். அது அவருடைய முதல் நாவல். மூன்றாமவரான, 'கோவிந்தன்' எழுத்தாளரில்லை. ஒரு போராளி அவர். இந்த நாவலை எழுதியபோது ஈழப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஒரு இயக்கத்தின் செயல் வீரர். அவர் சார்ந்திருந்த விடுதலைப் போராட்ட இயக்கத்தின் உட்கட்சிச் செயல்பாடுகளை வெளிப்படுத்தி நாவலாக எழுதியதே அவர் விதியை நிர்ணயித்துவிட்டது. அவர் தன் சாவைத் தானே வரவழைத்துக் கொண்டு விட்டதாயிற்று. அவர் தப்பியோடிச் சென்றவிடமெல்லாம் பின் தொடரப்பட்டு கடைசியில் சுட்டுக் கொல்லப் பட்டார்.

இம்மூன்று நாவல்களும் எழுதப்பட்ட வருடங்களையும், பின் அவை புத்தகமாக வெளிவந்த வருடங்களையும் கவனத்தில் கொண்டு அவற்றின் சமூக அரசியல் பின்னணியையும் கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும்.

எந்த ஒரு மனித போராட்டமோ, சமூக எழுச்சியோ, அல்லது வரலாற்று நெருக்கடியோ, உடனுக்குடன் அதன் சமகாலத்திய இலக்கியத்தில் பதிவு பெறுவதில்லை என்பது எல்லோரும் அறிந்த ஒப்புக்கொள்ளப்பட்ட விதி. ஏனெனில், அவை நிகழும் கொந்தளிப்பின் சூட்டில் அவற்றைப் புறவயமாகப் பார்த்தலோ அலசி ஆராய்வதோ, பின் அதை சிருஷ்டி இலக்கியமாகத் தருவது என்பதோ சாத்தியமாவதில்லை. ஒரு பிரசாரகன் தான் இத்தகைய முயற்சிகளில் ஈடுபடுவான். உண்மைதான். ஆனால், இந்த மூன்று நாவல்களில் எதுவுமே பிரசாரம் செய்யும் நோக்கில் எழுதப்பட்டவை அல்ல.

இவற்றில் முதல் இரண்டு நாவல்கள் மனித உறவுகளின் சிக்கல்களை அவற்றின் சமூக, அரசியல் பின்னணியில் பதிவு செய்கின்றன. மூன்றாவது, முற்றிலும் வேறானது. ஒரு தனி வகைப்பட்டது. இம்முன்றுமே நம் சீரிய கவனத்தை வேண்டுவன.

தனி வீடு என்னும் நாவலை எழுதியவர் யாழ்ப்பாண வளைகுடாவின் வடபகுதியில் உள்ள தீவுக் கூட்டத்தில் புங்டுதீவு என்னும் தீவைச் சேர்ந்தவர். இலங்கைத் தீவு ஒரு மாம்பழம் போன்ற தோற்றத்தைத் தருவதால், அம்மாம்பழத்தை மொய்க்கும் ஈக்கூட்டம் என்று தம் தீவுக்கூட்டத்தை தளையசிங்கம் வர்ணித்திருப்பது அழகாகவும், வேடிக்கையாகவும் இருக்கும். தளைய சிங்கம் சுதந்திர மனமும், தீர்க்க சிந்தனையும், திறமையும் கொண்ட ஒரு இளைஞர். தொடக்கத்தில் மார்க்ஸிஸ்ட்டாக இருந்தவர் பின்னர் அதன் இறுகிக் கெட்டித்துப் போன கொள்கைகளிலும், கட்டுப்பாடுகள் நிறைந்த நடைமுறைகளிலும் வெறுப்புற்று விட்டாலும், தன் வாழ்நாள் முழுதும் சுதந்திர சிந்தனை கொண்ட மார்ஸிஸ்ட்டாகவே இருந்தார். பின்னாட்களில் அவர் அரவிந்தர், டெய்ஹார்ட் டி சார்டையின் போன்றோரின் சிந்தனைகளால் கவரப்பட்டார். கடைசியில் ரமண மகரிஷி போன்ற ஆளுமை கொண்ட, அவரது ஊர்ப்பக்கம் இருந்த நந்தகோபலகிரி என்னும் ஞானியின் சீடரானார். வாழ்க்கையைத் துறந்துவிட்டது போன்ற துறவு நிலை மேற்கொண்டாலும், அரசியல் வாழ்க்கையிலிருந்து அவர் விலகிவிடவில்லை. அவர் மேற்கொண்ட ஒரு சத்தியாக்கிரஹ போராட்டத்தில் அடிபட்டு, சிறையில் அடைக்கப் பட்டார். இதன் விளைவாக ஏற்பட்ட உடல் நிலைக் குறைவால், 1973-ல் தனது 38 வது வயதிலேயே அவர் மரணத்தைச் சந்திக்க வேண்டி வந்துவிட்டது. அந்தக் குறுகிய வாழ்காலத்திற்குள் அவர் நாவல்கள், சிறுகதைகள், விமரிசனங்கள், கவிதைகள் என்று அவர் விட்டுச் சென்ற எழுத்துக்கள் கணிசமான அளவில் இருந்தன. அத்தோடு இந்த இலக்கிய வகைகள் எதிலும் அடைபடாத, சிருஷ்டி இலக்கியமும், சிந்தனையும் கலந்த ஒரு புது வகை எழுத்தையும் அவர் விட்டுச் சென்றிருக்கிறார். அவர் உயிரோடு இருந்த வரை, அவரது கட்டுக்கடங்காத செயலூக்கமும், சிந்தனைத் துடிப்பும், அப்போது இலங்கைத் தமிழரிடையே இலக்கியத்திலும், பல்கலைக் கழகங்களிலும் கோலோச்சி வந்த மார்க்ஸீயர்களுக்கு நெஞ்சில் நீங்காது தைக்கும் முள்ளாகவே இருந்தது.

அவரது முதல் நாவல், தனி வீடு 1962-லேயே எழுதப்பட்டு விட்டாலும், 1984-ல் தான், அவர் இறந்து 11 வருடங்களுக்குப் பிறகு, அது எழுதப்பட்டு 22 வருடங்களுக்குப் பிறகு தான் வெளிவந்தது. பத்து வருடங்களாக அடுத்தடுத்த வீடுகளில் வாழ்ந்த இரண்டு குடும்பங்களின் இளம் வயதினர் இருவரின் இளம் பருவக் காதலோடு கதை தொடங்குகிறது. அந்த இரு குடும்பங்களின் உறவில் இப்போது விரிசல் விழுந்து விட்டது. ஒரு குடும்பம் அமோக செல்வத்தில் கொழிக்க, மற்றது ஏழ்மையைச் சந்திக்க நேர்கிறது. இதன் விளைவாக அந்த இளம் காதலர்களும் பிரிகின்றனர். பணக்காரக் குடும்பத்தின் பெண் கொழும்புவில் ஒரு பணக்கார வணிக குடும்பத்தில் திருமணம் ஆகிப் போய்விடுகிறாள். இங்கே காதலில் தோல்வியடைந்த பையனோ தன் குடும்ப ஏழ்மைக்கேற்ப டவுனில் ஒரு சின்ன கடையைத் தொடங்கி தன் பிழைப்புக்கு வழி தேடுகிறான். அத்தோடு அவனுக்கு சுற்றி நிகழும் சமூக மாற்றங்களைக் கண்டு மனம் பொறுப்பதில்லை. சிங்கள வெறியர்களின் மேலாதிக்க மனப்பான்மை சிங்கள தமிழ் மக்களிடையே இனப் பிளவை உக்கிரபபடுத்துகிறது. முன்னால் மனதுக்குள் குமுறிப் புகைந்து கொண்டிருந்த இனவேறுபாடுகள் இப்போது 1956-ல் அரசு பண்டாரநாயகவின் கைக்கு வந்ததும் அரசியல்வாதிகளின் சிஙகள் சர்வாதிகார செயல்பாடுகளால் பற்றி எரிய ஆரம்பித்தது. அது 1959-ல் இனக்கலவரமாக வெடித்தது.

கொழும்புக்கு திருமணமாகிச் சென்ற பெண், கொழும்புவில் உடன் நிகழ்ந்த ஒரு இனக்கலவரத்தில் தன் கணவனை இழந்து இப்போது விதவையாகித் திரும்பிவிடுகிறாள். திரும்பிய அவளுக்கு தன் பழைய காதலனின் அன்பு கிடைக்கிறது, அவளை மணந்து கொள்ள அவன் தயாராக இருக்கிறான். ஆனால் ஒரு நிபந்தனையோடு. அவர்கள் வாழ அவனுக்கேயான ஒரு வீடு வேண்டும். அதன் பிறகு தான் அவன் கல்யாணத்தைப் பற்றி யோசிப்பான். "தனி வீட்டிற் கென்ன தேவை. அதான் அவர்கள் குழந்தைப் பருவத்தில் கட்டிய வீடு இருக்கிறதே. அது இருவருக்கும் சொந்தமானது தானே? என்று அவள் கேட்கிறாள். அவன் அதை மறுக்கிறான். "அது நம்மதல்ல. நம் எல்லோருக்குமான, நமது என்று நாம் உரிமை கொண்டாடக்கூடிய ஒரு வீடு நமக்கு வேண்டும்" என்கிறான்.

அவன் தன் இழப்பை மாத்திரம் சொல்லவில்லை. தமிழ் மக்கள் அனைவரின் இழப்பைத் தான் அவன் தனி வீடு குறிக்கிறது, நாட்டின் அரசியல் வாழ்க்கையில் வளர்ந்து வரும் கொந்தளிப்பும் நாவலின் இவ்விருவரின், இரு குடும்பங்களின் வாழ்வோடு நன்கு பின்னப்பட்டுள்ள காரணத்தால், தனக்கென ஒரு வீடு வேண்டும் என்று அவன் சொல்லும்போது அந்த வீடு தமிழ் மக்கள் தமது என உரிமை கொண்டாடுகிற வாழ்விடத்தையே, தனி நாட்டையே அது குறிக்கிறது என்பது மிக தெளிவாகவும் உறுதியோடும் சொல்லப்பட்டு விடுகிறது

இரண்டு முக்கிய விஷயங்களை இங்கு கவனத்தில் கொள்ளவேண்டும். ஒன்று, இந்த நாவல் எழுதப்பட்ட 1962-ல். தமிழருக்கென தனி நாடு என்பது ஒரு எண்ணமாகக் கூட அன்றைய மக்கள் மனத்தில் எழவில்லை. அப்படி இருக்க அது ஒரு அரசியல் போராட்டத்திற்கான இலட்சியமாக, ஒரு கொள்கையாக உருவெடுப்பது பற்றிப் பேச்சில்லை. இரண்டாவது, இந்த நாவல் 22 வருடங்களாக கையெழுத்துப் பிரதியாகவே இருந்துள்ளது; 1984-ல் தான் மு.தளையசிங்கத்தின் மறைவுக்குப் பிறகு அவரது எழுத்துக்களை எல்லாம் ஒன்று விடாமல் சேகரித்துப் பிரசுரிக்கவேண்டும் என்ற முயற்சி எழுந்தபோது, இது கண்டெடுக்கப்பட்டு பிரசுரம் பெறுகிறது. தனித் தமிழ் நாடு என்பது, வெகு இயல்பாக ஒரு இன மக்களின் மனத்தில் ஊறிப் பெருக்கெடுக்கும் இயற்கையான உணர்வாகத் தான் எழுந்துள்ளது போல் தோன்றுகிறதே ஒழிய, பேரம் பேசி, போராடிப் பெறவேண்டிய ஒரு அரசியல் கோரிக்கையாக எழவில்லை.

1948-ல் சிலோன் ஒரு சுதந்திர நாடாக இலங்கை என்று பிரகடனப்படுத்த நாளிலிருந்தே இரு இனங்களுக்கும் இடையேயான பிளவுக்கு விதை ஊன்றப்பட்டு அது வளர்ந்து வந்துள்ளது. விதை ஊன்றிய பெருமை 1948-ல் பதவி ஏற்ற பிரதமர் டட்லி சேனநாயகவைச் சேரும். அவர்தான் இலங்கை வாழ் தமிழரின் குடி உரிமையைப் பறிக்கும் சட்டத்தைக் கொணர்ந்தார். அதைத் தொடர்ந்து 1956-ல் S.W.R.D பண்டாரநாயகேயின் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பதவி ஏற்றதும், புத்த துறவிகளின் தூண்டுதலால், 'சிங்களம் மாத்திரம்" கொள்கையைச் சட்டமாக்குகிறார். இதன் காரணமாக தமிழர்கள், கல்வியிலும் உத்தியோகங்களிலும் ஒதுக்கப்படத் தொடங்குகிறார்கள். இதன் விளைவு மறுபடியும் இனக்கலவரங்கள்.

இவ்வளவு தீவிர பிரச்சினைகளுக்கிடையேயும், இனப் பிளவு என்பது தேசீய தளத்தில், அரசியல் வாழ்க்கையிலும், மக்கள் கூட்டமாக செயல்படும் போதும் தான் வெளிப்பட்டது. தனிமனிதராக சிங்களவரும் தமிழரும், முன்னர் இருந்த சினேக பாவத்தோடும் அன்னியோன்னியத்தோடும் தான் இருந்தனர். அன்றாட அண்டை உறவுகளில் வேற்றுமை தோன்றவில்லை.


இனக் கலவரங்கள் அடிக்கடியும் அவ்வப்போதும் நிகழ்ந்தும் இலங்கையில் வாழும் தமிழர்களும், சிங்களவர்களும் தனிமனிதர்களாக ஒருவருக்கொருவர் மனித நேயத்தோடே பழகினர். கலவரம் வெடித்த ஒவ்வொரு முறையும் தமிழர்கள் தங்கள் பகுதியில் உயிருக்கும் பொருளுக்கும் பத்து நேர்ந்த சிங்களவர்கள் தாக்கப்படாது தம் பாதுகாப்பில் மறைத்துக் காப்பற்றிய செய்திகளும், அவ்வாறே சிங்களவர் பெரும்பான்மையாக இருக்கும் பகுதிகளில் சிக்குண்ட தமிழரை சிங்கள வெறிக்கூட்டத்தின் தாக்குதலிலிருந்து காப்பற்றிய சிங்களவர் பற்றிய செய்திகளும் நிறையவே வெளிப்பட்டன.

இம்மாதிரியான சமூகப் பின்னணியில் தான், 1973-ல் அருள் சுப்பிரமணியத்தின் அவர்களுக்கு வயது வந்துவிட்டது போன்ற ஒரு நாவல் எழுதப்பட்டிருக்க முடியும், பிரசுரமும் பெற்றிருக்க முடியும். தனி மனித உறவுகளில் மனித நேயம் இன்னும் வற்றிவிடவில்லை. அத்தகைய ஒரு சோகம் எண்பதுகளில் தான் நிகழ விருந்தது.

ஒரு தமிழ் இளைஞன் தனக்கு கொழும்புவில் கிடைத்த அரசு வேலையை ஏற்றுக்கொள்ள திரிகோணமலையிலிருந்து கொழும்பு செல்கிறான். அங்கு ஒரு சிங்கள குடும்பத்தில் பணம் கொடுத்து இருக்க இடமும், உண்ண உணவும் பெறும் விருந்தாளியாகச் சேர்கிறான். அந்த சிங்கள குடும்பத்தில் ஒரு விதவை, அவளுடைய மகள், இருவரும் இவ்வாறு பெறும் வாடகைப் பணத்தில் பிழைப்பவர்கள். நாளடைவில் அக்குடும்பத்துக்கு அந்த தமிழ் இளைஞனை ரொம்பப் பிடித்துப் போகிறது. அவன் பேரில் தம் அன்பைச் சொரிகிறார்கள். மற்ற சிங்கள வாடகை விருந்தினர்களை விட அந்தத் தமிழ் இளைஞனையே அதிகம் விரும்புகின்றனர். ஒரு நாள், அறியன் என்னும் அந்தத் தமிழ் வாலிபன், வீட்டில் தனியாக இருக்கும் அந்தப் பெண்ணிடம் உறவு கொள்கிறான். அந்தப் பெண் கர்ப்பமடைகிறாள். தன் தவற்றுக்குப் பிராயச் சித்தமாக, அவளை மணந்து கொள்கிறான்.

தன் இளம் புது மனைவியை அழைத்துக்கொண்டு தன் பெற்றோர்களுக்கு அவளை அறிமுகப்படுத்த அவன் திரிகோணமலைக்குப் போகிறான். அவன் கொழும்புவில் ஒருத்தியை மணம் செய்து கொண்டதாகவோ, அவள் கிறிஸ்துவப் பெண் என்றோ அவன் அவர்களுக்கு தெரியப்படுத்தியவனில்லை. இருக்கிற சிக்கல்கள் போதாதென்றால், அவள் சிங்களப் பெண் என்பது இன்னுமொரு சிடுக்கு. அவன் வீடு சேர்ந்த பின் தான் தன் லட்சியங்களின் உலகம் யதார்த்த உலகிலிருந்து எவ்வளவு அன்னியப்பட்டது என்பது தெரிகிறது. பின் என்ன? வீடு அல்லோலப் படுகிறது.

அவன் பெற்றோர்கள் அவனுக்கும், அவனது தங்கைக்கும் பார்த்து ஏற்பாடு செய்திருந்த கல்யாண சம்பந்தங்கள் முறிந்து போகின்றன. அதுமட்டுமல்ல, அவனது தங்கையின் எதிர் காலமே இந்த முறிவு காரணமாக பாழ்பட்டு விட்டது போலத் தோன்றுகிறது. இவன் செய்த தவறான செய்கையால், இவனது குடும்பமே, அந்த சமூகத்தினால் பகிஷ்கரிக்கப்பட்டு தனித்துப் போகின்றனர். தனி மனிதரின் நல்ல குணங்கள் கசந்துவிட்ட சமூக உறவுகளைச் சரிப்படுத்த முடிவதில்லை.

தமிழ் சமூகத்தின் இன எதிரியாகிவிட்ட ஒரு சிங்களப் பெண்ணை மணந்தது அவன் செய்த முதல் குற்றம். அவன் அத்தோடு நிற்காமல், அந்த இன எதிரியை, தன் வீட்டுக்கே வாழ அழைத்து வந்தது இன்னம் பெரிய குற்றம். தேசீய பரிமாணத்தில் தமிழரின் இன எதிரியை தன் குடும்பத்துக்குள் கொணர்ந்தது ஏற்கனவே இருக்கும் இனப் பகைக் கசப்பை இன்னும் தீவிரமாக்கும் செயல்தான்

அவன் மனைவி தமிழ் சமூகத்தோடு ஒன்றி வாழ முடியாது. அவன் குடும்பமும் அவன் மனைவியை தம்மோடு சேர்த்துக் கொள்ள முடியாது. அவனும் சிங்கள சமூகத்தின் அங்கமாக தன்னை இணைத்துக் கொள்ள முடியாது. ஆகவே இருவரும் அவரவர் சமூகத்திலிருந்து மட்டுமல்ல, எல்லோருடனுமே அன்னியப்பட்டுப்போய் ஒதுக்கப்பட்டு விட்டார்கள். ஆனால் இப்போதைக்கு ஒரு நகரம் சாத்தியமாக்கும் தனிமையில் அவர்கள் காலம் தள்ளுவது சாத்தியமாகலாம். அதை ஒரு வேளை அவன் முயற்சி செய்து பார்க்கலாம். அவன் தன் தங்கையை அவள் திரிகோணமலையில் பட்டு வரும் அவமானத்திலிருந்து மீட்டு, கொழும்பு நகரத்திற்கு தன்னுடன் அழைத்துச் செல்லத் தீர்மானிக்கிறான். பெற்றோரிடமிருந்து தூர விலகி இருந்தால், அவர்களுக்கு அவன் மீது இருக்கும் வெறுப்பும், கோபமும் ஒரு வேளை தணியக்கூடும். காலம் அதைச் செய்யக் காத்திருக்க வேண்டும். கடைசியில், அவன் பெற்றோர்கள் நடந்தது நடந்தது தான், அதை இனி மாற்ற இயலாது என்ற காரணத்தால், அதை ஒப்புக்கொள்ளும் முகமாக, அவர்களை ரயில் வண்டி நிலயம் வரை சென்று வழியனுப்புகின்றனர்.

தேசீய பரிமாணங்களில் பரஸ்பர பகைமைத் தீயை ஊதி ஊதி கொழுந்து விட்டெரியச் செய்யும் காரியங்கள் இரு சமூகங்களிடையே பிளவையும், கசப்பையும் வளர்த்திருந்தாலும், தனி மனிதர்களின் அன்றாட அண்டை உறவுகளில் மனித நேயமும் நட்பும் நிலவியதை சிருஷ்டி இலக்கியங்கள் பிரதி பலித்தன. இந்நாவலின் பாத்திரங்களிடையேயான உறவுகளில் வெளிப்பட்ட சினேக பாவமும் மனித நேயமும் கற்பிக்கப்பட்ட சமாச்சாரங்கள் இல்லை, அவை உண்மை. அதே போல் தேசீய தளங்களில் நிலவிய முரண்களும், போராட்டங்களும் சித்தரிக்கப்பட்ட கரிய தடித்த கோடுகளாலான சித்திரங்களும் உண்மையைப் பிரதிபலிப்பன தான்.

ஆனால் பின் தொடர்ந்த எழுபதுகள் இந்த மனித நேயத்தையும் சினேக பாவத்தையும் இல்லாதாக்கிவிட்டன. சமூகத்தின் கூட்டுத் தளத்தில் இருந்த பகைமையும் கசப்பும் தனி மனித உறவுகளிலும் கசிய ஆரம்பித்தன. எல்லாத் தளங்களிலும், எல்லா முனைகளிலும் போர் பிரகடனப்படுத்தப்பட்டு விட்டது. ஆனால் போர் எனத் தொடங்கி விட்டதால் அதை எந்த திட்டமிட்ட வரையறைக்குள்ளும் கட்டுப் படுத்த முடியாது போகிறது. வரலாற்றில் நிகழ்ந்த எந்த போரும் முன்னதாகத் தீட்டிய வரைபடத்தில் திட்டமிட்டது போல் நிகழ்ந்ததில்லை.

எண்பதுகளில் இந்த போராட்டம் பெற்ற மூன்றாம் கட்ட வளர்ச்சியைத் தான் மூன்றாவது புத்தகமான, புதிய உலகம் பதிவு செய்துள்ளது. இப்புத்தகத்தின் முன்னுரையில், இதன் ஆசிரியர் 'கோவிந்தன்' தான் ஒரு இலக்கிய கர்த்தா அல்லவென்றும் அதனால் இதை நாவல் எனக் கருதத் தேவை இல்லை என்றும் சொல்லியிருக்கிறார், கோவிந்தன் நம்மைப் போராடும் ஒரு இயக்கத்தின் உள்ளே அழைத்துச் சென்று அவ்வியக்கத்தின் குணச்சித்திரம் ஒன்றையும் அங்கு நடப்பவற்றையும், அவற்றிற்கான உந்துதல்களையும் இது காறும் அவற்றை மறைத்த திரையை விளக்கி வெளி உலகின் முன் வைக்கிறார். நிலவும் சூழ்நிலைகள், நிகழ்வுகள், அதன் பாத்திரங்கள் எல்லாம் உண்மை. ஒன்றும் கற்பித்துக் கதையாக்கப்படவில்லை. ஆசிரியரின், சம்பந்தப்பட்ட பாத்திரங்களின் பெயர்கள் மாத்திரம் அவர்களின் உயிர் காக்கும் பொருட்டு மாற்றப்பட்டு உள்ளன. இதன் ஆசிரியர் 'கோவிந்தன்' (இது ஒரு புனை பெயர் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை) இவ்வியக்கத்தின் அரசியல் குழுவில் தீவிரமாக செயல்பட்டுள்ளார். போர்ப் பயிற்சியும் பெற்ற போராளியாகவும் இருந்திருக்கிறார். இந்த நாவலின் மையப்பாத்திரமாக உள்ள 'சங்கர்" என்ற பாத்திரத்தோடு அவர் தன்னை அடையாளப்படுத்துகிறார் என்று தோன்றுகிறது.

ஆயிரக்கணக்கான் ஈழத்தவர் தொடர்ந்து செய்து வருவது போல, தமிழ் மார்க்ஸீய போராளியான சங்கரும் ஈழத்தை விட்டு வெளியேறி ரகசியமாக ஒரு இரவில் படகில் ஏறி தமிழ் நாடு வந்து ஒரு போர்ப் பயிற்சி முகாமில் சேர்கிறார். அவருடைய தந்தையும் மார்க்ஸிஸ்ட் தான். அரசியல் போராட்டக்காரர். எனவே தன் மகனின் உணர்வுகளை தீவிரவாதத்தைப் புரிந்து கொண்டவர். தன் மகனுக்கு அவர் தந்த ஒரே புத்திமொழி, அவன் எந்த விடுதலை இயக்கத்தை, குழுவைச் சேர்கிறானோ அதற்கு விஸ்வாசமாக உழைக்கவேண்டும் என்பதே. ஆனால் அந்த விடுதலைப் போராட்ட இயக்கத்தில் சேர்ந்த குறுகிய காலத்திற்குள்ளேயே அவன் தன் வாழ்க்கையின் மிகப் பெரிய ஏமாற்றத்துக் குள்ளாகிறான். இயக்கத்திற்குள் நடப்பவற்றின் யதார்த்த சொரூபம், அவனுக்கு நேரடியாகவும், ஒருவருக்கொருவர் காதுக்குள் பரிமாறிக்கொள்ளும் ரகசியங்களாகவும் தெரிய வருகிறது.

புலம் பெயர்ந்த தமிழர்களில் சிலர் ரகசியமாக, போதைப் பொருட்களை ஐரோப்பிய சந்தைக்குக் கடத்தி, ஈழப்போராட்டத்து நிதி உதவி தரப்படுகிறது, சாதாரண முணுமுணுப்பாக வரும் மறுப்புக்களைக் கூட சகித்துக் கொள்ளாத மேலிடம் மனிதாபிமானம் சற்றும் அற்று கொடூர சித்திரவதையைத் தண்டனையாகத் தருகிறது. ஈழத்தில் போராடிக்கொண்டிருக்கும் காலத்தில் தியாக உணர்வுடனும், தம் வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளைக் கூட சாத்தியப்படும் அளவு குறைத்துக்கொண்டும் இருந்த அதே விடுதலைப் போராட்டத் தலைமைகள், தமிழ் நாட்டில் கிடைக்கும் பாதுகாப்பின் சௌகரியத்தில் போராளிகளின் மேலிடத் தலைவர்கள் அனுபவிக்கும் ராஜபோக சுகவாழ்வு, இயக்கத்தில் நிலவும் தலைவர் வழிபாடு, இயக்கத்தில் நிலவும் தலைவரின் யதேச்சாதிகாரம், ஸ்டாலினஸ நடைமுறையை நினைவுபடுத்தும். கொஞ்சம் சந்தேகம் இருந்தால் கூட, அடிக்கடியும் பெரிய அளவிலும் நடைபெறும் கட்சி நீக்கம், இயக்கத்துள் நடக்கும் உள்விரோத சண்டைகள் எல்லாம் தெரிய வருகின்றன.

இப்புத்தகத்தின் பக்கங்களிலிருந்து வெளிப்படும் இயக்கத்தின் தலைவரைப் பற்றிய சித்திரம் அவரை இன்னொரு ஸ்டாலின் அவதாரமாகவே காட்சிப்படுத்துகிறது. அதிகம் படிப்பில்லாத, தந்திர புத்தி கொண்ட, சூழ்ச்சி மனமும், இரக்கமற்ற ஒரு இரத்த வெறியனின் சித்திரம் அது. இத்தகைய தலைமைக்கு எதிராக இருக்கும் குழுத் தலைமையோ, இயக்கத்திற்கு பெரும் பங்களிப்பு தந்தவர், அதன் போர்த் திறமை மிக்கவர், இயக்கத்தைக் கட்டமைத்துக் கொண்டு செல்லும் நிர்வாகத்திறமை உள்ளவர், லட்சிய தாகம் நிறைந்தவர், இயக்கத்திற்காக தியாகங்கள் செய்தவர், ஆனால் அவரும் கடைசியில் ஒழித்துக் கட்டப்படுகிறார். இவையெல்லாம் நமக்கு ட்ராட்ஸ்கி,. புகாரின் போன்றோருக்கு கிடைத்த துர்கதியை நினைவு படுத்தும்.

ஈழத் தமிழ் இயக்கப் போராளிகள் தமிழ் நாட்டில் தஞ்சம் புகுந்து, தமிழ் நாட்டினரின் பாதுகாப்பும் போர்ப்பயிற்சியும், நிதியும், இன்னும் பல உதவிகளும் பெற்று வரும் காலத்தில், தமிழ் நாட்டின் தமிழ் சமூகத்தினரைப் பற்றியும், இந்திய அரசாங்கத்தைப் பற்றியும், என்ன நினைக்கிறார்கள், பேசிக் கொள்கிறார்கள் என்று இப்புத்தகத்தில் பல இடங்களில் சொல்லப்பட்டுள்ளது.

இந்திய அரசாங்கத்துடன் அவர்களது மனப்பான்மை என்னவாக இருக்கவேண்டும் என்பது பற்றி முகாமில் அடிக்கடி பேசப்படும். இயக்கத்தின் எல்லாத் தரப்பினரிடமும் ஒருமுகமாக ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரு அடிப்படைப் பார்வை ஒன்று, அந்த அடிப்படை நோக்கில் தான் எல்லா சர்ச்சைகளும், ஆலோசனைகளும் நடக்கும். இந்த அடிப்படைப் பார்வையை யாரும் மறுத்ததில்லை, கேள்வி எழுப்பியதில்லை. ஈழப் பிரச்சினையில் இந்திய அரசின் இயக்கத்தைப் பற்றிய அணுகுமுறை மேலாண்மை மனப்பான்மை கொண்டதாகவே இருக்கும். இதைப் போராளிகள் எப்போதும் நினைவில் கொண்டு எச்சரிக்கையாகவே இருக்கவேண்டும். இதற்கு பதிலாக போராளிகள் எப்படி நடந்து கொள்ளவேண்டும், எப்படி எதிர்வினையாக்க வேண்டும் என்பது போன்ற கேள்விகள் அடிக்கடி எழும். இதற்கு தலைவர் அளிக்கும் பதில், நாம் எச்சரிக்கையாக இருக்கும் அதே நேரத்தில், தற்போதைய தற்காப்பு தந்திரோபாயமாக, நாம் நட்புறவுடனேயே இருக்கவேண்டும். நாம் அவர்களது நோக்கங்களை சந்தேகிக்கிறோம், எச்சரிக்கையோடு இருக்கிறோம் என்பதைக் காட்டிக்கொள்ளாது, நாம் பழக வேண்டும். இயக்கத்தினரின் அடிப்படைக் கொள்கை இதுவாகத் தான் இருக்கவேண்டும். இன்னொரு விஷயம் பற்றியும் இயக்கத்தின் தலைவரிடமும், எல்லாத்தரப்பினரிடமும் வேற்றுமையின்றி நிலவும் பொது அபிப்ராயம், தமிழ் நாட்டு அரசியலின் தரக்கேட்டிற்கும், அதன் துர்நாற்றத்திற்கும் தாங்களும் இரையாகாது எச்சரிக்கையாக இருக்கவேண்டும். அந்தக் குட்டையில் நாமும் மூழ்கிவிடக்கூடாது என்பதுதாகும். போராளிகள் சென்னை நகரத்தில் சுதந்திரத்துடன் எங்கும் செல்வார்கள். நகரத்தில் எங்கும் காணும் அசுத்தமும், குப்பை கூளங்களும், நகரத்தைப் பீடித்திருக்கும் சுவரொட்டி கலாச்சாரத்தின் உரத்த பாசமும் பற்றியெல்லாம் அவர்களிடையே கேலிப் பேச்சுக்கள் பரிமாறிக்கொள்ளப்படும். ஈழப் போராளிகள் யாரானாலும், தலைவரோ அடிமட்டத்தினரோ யாராயினும் அவர்களுக்கு தமிழ் நாட்டு அரசியல் வாதிகளும், அரசு அமைச்சர்களும் தரும் மரியாதையும் ராஜோபசாரமும் அவர்களது பரிகாசப் பேச்சுக்களுக்கு இரையாகும். அவர்கள் தஞ்சம் அடைந்து பாதுகாப்பு பெறும் தமிழ் சமூகத்தையே அவர்கள் இழிவாகப் பார்க்கும் மனப்பான்மை தான் அங்கு நிலவியது. மத்திய அரசாங்கமானாலும் சரி, தமிழ் நாட்டு அரசானாலும் சரி, யாரையும் சுலபத்தில் ஏமாற்றி தங்கள் காரியத்தைச் சாதித்துக் கொள்ள முடியும் என்ற பொதுவான ஒரு முன் தீர்மானம் அவர்களிடம் இருந்ததும், இப்புத்தகத்தில் அடிக்கடி சொல்லப்படுகிறது.

எல்லா விஷயங்களைப்பற்றியும், அவரவரது மனப்பான்மைகள், செயல்கள் பற்றியுமான இவ்வளவு விஸ்தாரமான ஆழ்ந்த அலசல்கள், சுய விமர்சனங்கள் செய்யும் இதன் ஆசிரியர், தானும் ஒரு மார்க்ஸிஸ்ட்டாக இருந்த போதிலும், ஸ்ரீலங்காவில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளின் செயல்பாடுகளைப் பற்றியோ ஈழப்போராட்டத்தில் அவர்களது கட்சிக் கொள்கைகள் பற்றியுமோ, வெகு கவனமாக எதுவும் பேசாது மௌனம் சாதித்து விடுகிறார். ஈழ இனப் பிரச்சினை என ஒன்றோ அதற்கான ஒரு நீண்ட போராட்டம் என ஒன்றோ இல்லாதது போலவே அந்தக் கட்சி கண்களை மூடிக்கொண்டு இருந்து வருகிறது. நாம் முதலில் பார்த்த மு. தளையசிங்கம், தாம் ஒரு மார்க்ஸிஸ்டாக இருந்த போதிலும், ஸ்ரீலங்காவின் கம்யூனிஸ்ட் கட்சிகளைக் கேலி செய்திருக்கிறார். ஈழ விடுதலைப் போராட்ட இயக்கத்தைப் பற்றியின் நோய்க்கான காரணங்களை, அதன் தலைமையின் குணப் பிறழ்ச்சியிலும், தான் பின்பற்றுவதாகச் சொல்லிக்கொள்ளும் கம்யூனிஸ்ட் கொள்கைகளைக் கைவிட்டதிலும் தான் காண வேண்டும் என்பதே இப்புத்தகத்தின் ஆசிரியரான 'கோவிந்தனின்' பார்வையாக இருக்கிறது.

ஷங்கர் என்னும் மத்திய பாத்திரத்திற்கு அடிக்கடி ஒரு சந்தேகம் எழுவதாக இப்புத்தகத்தில் சொல்லப்படுகிறது. இயக்கத்தின் தலைவரும் அவரது கூட்டாளிகளும் உண்மையிலேயே மார்க்ஸிஸ்ட்டுகள் தானா இல்லை, அவர்கள் மார்க்ஸீய வேடம் தரித்த வெற்று "தேசீய வாதிகள்" தாமா? என்பது தான் அந்த சந்தேகம். இந்தக் கேள்வியின் தோரணையிலேயே, சிரியரின் பார்வையில் "தேசீய வாதி" என்பதையே ஒரு வசைச் சொல் தான் போலும். தேசீய வாதிகளைச் சகித்துக் கொண்டு நட்புறவுடன் இருப்பதை ஒரு தாற்காலிக தந்திரமாகத் தான் இயக்கத்தின் தலைவர் மேற்கொண்டுள்ளார் என்று தெரிய வந்ததும் அவர் மனம் சமாதானம் கொண்டு விடுகிறது.

இப்புத்தகத்தின் சிரியர் இப்போது அவ்வியக்கத்தை விட்டு வெளியேறிவிட்டார் என்றும்,, இப்போது அவரும் அவரைப் போன்று தலைமையுடன் கருத்து வேற்றுமை கொண்டு வெளியேறிய மற்ற கூட்டாளிகளும் இன்னொரு குழுவைத் தொடங்க முயன்று கொண்டிருப்பதாக புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ளது. இதன் முன்னுரையில், சிரியர் சென்னையிலேயே தான், தன் உயிருக்கு ஆபத்தான நிலையில் தலைமறைவாக இருப்பதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

ஆசிரியர் இப்போது உயிருடன் இல்லை. இப்புத்தகம் வெளிவந்ததும், அவர் யாரிடமிருந்து தன் மரணத்தை எதிர்பார்த்து பயந்திருந்தாரோ, அவர்களாலேயே கொல்லப்பட்டு விட்டார்.

குறிப்புகள்[தொகு]

ஆங்கிலம்: Mirrors of 'Ealam" movement: Patriot, New Delhi: ஜூன் 5, 12, 19, 1988