உத்தரகாண்டம்/11

விக்கிமூலம் இலிருந்து

“ஏம்பா, இங்கென்ன கதையளந்திட்டு நிக்கிற ? இந்தக்காயெல்லாம் சாக்குல போட்டு, ஏசண்டு ஆட்ல கொண்டு குடுத்திடு.” ரங்கன் வந்து சொல்றான். எந்த ஏசன்டு, யாரு ஏசென்டு என்று கேட்க முடியவில்லை. எதோ ஒரு நாகரிகம் நாவை அழுத்துகிறது. சிலும்புகள் கையைக் குத்துகின்றன. ஆனாலும் அவளால் எதுவும் செய்ய முடியவில்லை. சொர்ணம் வந்து கேட்டா என்று சொல்லலாமா?

அவன் சாக்கைக் கொண்டு போன பிறகு, நான்கு காய்களைச் சமையலறை மேடை மீது வைத்திருப்பதைப் பார்க்கிறாள். பின்னால் இலைக் குப்பைகளை வேலியோரம் தள்ளி விட்டு, துரட்டுக் கோலுடன் ரங்கன் செல்வதைப் பார்க்கிறாள்.

“ஏம்பா, நாலு காய் எதுக்கு வச்சிருக்கே?...”

“உனுக்குத்தா. உப்புப் போட்டு கஞ்சிக்குக் கடிச்சிக்கலாமில்ல?” அவனுடைய பேச்சின் தோரணை மெல்லிய உணர்வுகளில் முட்களாய் குத்துகிறது. வாங்க போங்க மரியாதை எல்லாம் சுத்தமாகப் போய்விட்டன. அந்தக் காயை இனி எடுத்து நறுக்கக்கூட மனம் ஒப்பாது, அற்பப் பொருள் இல்லை இது. அருமையான பொருள். ஆனால் இவர்களுக்கு எல்லாம் காசு...

வாயில் கீழ்த்திண்ணையில் நின்று ஈரமுடியை அவிழ்த்து விடுகிறாள். எங்கோ அருகில் ‘போர்’ பூமிதுளைக்கும் ஒசை நாராசமாகச் செவியில் விழுகிறது. கம்பிக்கதவைத் திறந்து கொண்டு தெருவில் நின்று பார்க்கிறாள். எதிர்ப்புறம் ‘பிளாட்’ போட்டிருக்கும் இடத்தில்தான் கிணறு தோண்டுகிறார்கள் போலிருக்கிறது. ஏரி இருந்த இடம்தான். குப்பைகளைக் கொட்டி மூடினார்கள். முள் காடாய் இருந்தது. சுற்றி ஒரு வேலி போட்டுச் சுத்தப் படுத்தினார்கள். ஆஸ்டல் கட்டுவதாகச் சொன்னார்கள். தகரக் கொட்டகை மாதிரி நீண்ட ‘செட்’கள் தான் தெரிந்தன. இடிதடியன்கள் போல் இரண்டு மூன்று காப்பிரிப் பையன்கள் தாம் பன மரங்களூடே புகுந்து அந்த செட்டுக்குள் போவார்கள். “பரங்கிமலைப் பக்கம் பெரிய காலேஜிருக்காமே, இன்ஜினிர் காலேஜி, அதில படிக்கிறாங்களாம். ஆனா, அவனுவ படிக்கிறதாத் தெரியல. கஞ்சா விக்கிறானுவ” என்று ரங்கன் சொன்னான். இது போன்ற செய்திகளை அவள் செவிகளில் போடத் தவறமாட்டான்.

இப்போது பறங்கிமலையில் அந்தக் காலேஜே இல்லையாம். சங்கரியின் அண்ணன் மகனை அங்கே சேர்க்கத்தான் வந்து இங்கே குடும்பம் போட்டாள். அப்போதே அது வேறங்கோ போய்விட்டது. அந்தக் காப்பிரிகளும் இல்லை. இப்போது அந்த இடம் கைமாறி, கிணறு தோன்டுகிறார்கள்.

இரும்புக் கம்பிகளை ஏற்றிக் கொண்டு ஒரு லாரி போகிறது. பின்னே ஓர் ஆட்டோ. இரண்டு சக்கர பைக் என்று தெருவில் இந்தப் பகல் நேரத்திலும் சந்தடி. எவர் சில்வர் பாத்திரக்காரர், வழுக்கை மண்டை பளபளக்க, சைகிளைத் தள்ளிச் செல்கிறார். பின்னால், ஜயந்தி டீச்சர்... பை, குடை எதையும் காணவில்லை. முகம் செவசெவ என்று இருக்கிறது. இவள் ஜுபிலி ஸ்கூலில் வேலை செய்கிறாள். இந்தத் தெரு மூலையில்தான் பழைய ஓட்டுவீட்டை வாங்கிக் கட்டிக் கொண்டிருந்தாள்... இங்கே தான் வருகிறாள்.

“ஆச்சிம்மா, கெஞ்சம் உள்ள வரீங்களா?”

“வாங்க என்ன விசேசம்’ அவள் வாசல் கதவைச் சாத்திவிட்டு உள்ளே செல்லும்போதே ஜயந்தியும் வருகிறாள். “என்னம்மா? இன்னிக்கு ஸ்கூல் இல்லையா?”

“இருக்கு. லீவு போட்டேன். சங்கரி இங்க வந்ததாம்மா?” கேள்வியில் உள்ள பதற்றம் அசாதாரணமாக இருக்கிறது.

“யாரு... உங்க வீட்டில குடியிருந்த சங்கரியா?”

“ஆமாம்மா, பத்து நாளா அவளக் காணல.”

“என்னது? காணலியா?...”

“முத ஞாயித்துக்கிழம மாசாமாசம் நானோ, அவுங்களோ வந்து வாடகை வாங்கிட்டுப் போவோம். அவ இங்க வந்து அஞ்சு வருசமாகப் போவுது- அண்ணன் புள்ள படிச்சி முடிச்சிட்டுப் போயிட்டான். இங்கியே கிரிச் மாதுரி புள்ளங்கள வச்சிட்டு இருந்தா. “மேடம், நா பிழக்கனுமே, இப்டிச் செய்யிறதுக்கு நீங்க ஒண்ணும் சொல்ல மாட்டிங்கன்னு நினைக்கிற..."ன்னிச்சி. சரின்னு ஒத்துக்கிட்டேன். பாவம்மா, அது. வாசப்பக்கத்துல உள்ள ரூமுல, காலம எட்டு மணிக்கு ஜெரோம் டாக்டர் வருவாரு. ரெண்டு மணி வரையிலும் பாப்பாரு. ஓமியோபதிதான். ஏழை எளிசுங்களுக்கு மருந்துக்கு மட்டும் பத்து ரூபா வாங்குவாரு. சாயங்காலம் மெயின்ரோடு வீட்டுல இருப்பாரு. புள்ளங்களக் கொண்டு விடுற எஸ்தர், ஈசுவரி ரெண்டுபேரும் கதவு பூட்டிருக்கிறத பாத்திட்டு டாக்டர்ட்ட கேட்டிருக்காங்க. அவருக்குத் தெரியல. சாதாரணமா அது எங்கும் போகாது. ஞாயிற்றுக் கிழம புள்ளங்க வராது. எப்பவானும், ரயில் கேட் தாண்டி, ஆஞ்சநேயர் கோயிலுக்குப் போகும்... இப்ப பத்து நாளாக் காணலன்னு சொல்றாங்க. இந்தப் பக்கம் துணிக்கடைக்காரர் வீட்டுல தெரியலன்றாங்க...” அவள் சொல்வது வெறும் விவரங்களாக இல்லை.

“ஏம்மா இவ்வளவு பதட்டப்படுற? அண்ணன், இல்ல உறவுகாரங்க, தெரிஞ்சவங்க வீடுகளுக்கு அவசரமா கெளம்பிப் போயிருப்பா... அவளுக்கு... கலியாணம் ஆயி புருசன் வச்சுக்கலியா?...”

“அய்யோ, அது பெரும்பாவம் ஆச்சிம்மா! வயசுக்கு வந்த நேரம் சரியில்லயாம். அதுனால கலியாணம் காட்சின்னு ஆகாமலே அந்தக் கன்னித் தெய்வம் போல நெருப்பா நின்னிட்டிருந்தா...”

சொல்லும் போதே ஜயந்திக்குக் கண்களில் குளம் கட்டுகிறது. இப்படியும் ஒரு பாவம் உண்டா என்று நெஞ்சு பதைக்கிறது.

“இவங்கல்லாம் புனாவில இருந்தாங்க. இவருக்கு இன்னொரு அண்ணன் இருக்கிறான். ஒரு தங்கச்சி அமெரிக்காவில் இருக்கிறா. அப்பா நடுவயசுல எறந்துட்டாரு போல. கஷ்டப்பட்டு பையங்களப் படிக்கவச்சி, கலியாணங்கார்த்தி செஞ்சிருக்காங்க. அம்மா கடோசி வருசங்கள்ள, பாரிசவாயு வந்து படுத்திட்டாளாம். இவளக் கலியாணம்னு கழிச்சி யார் வூட்டுக்கானும் அனுப்பிச்சிட்டா, மாமியாருக்கு ஆரு செய்யிறதுன்னு அண்ணிகாரியே வந்த எடமெல்லாம இதச்சொல்லித் தடுத்திட்டான்னு சொல்லுவாங்க. எங்கக்கா புனாவுல இருந்தா. அப்படி அவுக மூலமாத்தான் இந்த வீட்டில வச்சேன்... நானும் எல்லாப் பக்கமும் விசாரிச்சிட்டேன்... ஆச்சியம்மா, அரச புரசலாச் சொல்லிக்கிறாங்க. குரோம்பேட்டப் பக்கம் பத்து நா மின்ன ரயில்ல அடிபட்டு நசுங்கி ஒரு பொம்புள பொணம் இருந்திச்சாம். பரங்கிமல போலீசு டேசன்ல விசாரிச்சதுல, பெரியாசுபத்திரிக்கு அனுப்பிச்சி, பாடி கிடங்கில வச்சிருந்தாங்க. ஆரும் வரல. எரிச்சிட்டாங்கன்னு தெரியுது. ஆச்சிம்மா... வயிறே துடிக்கிது. வூட்ட சாவிபோட்டுத் தெறந்து, தேடின. அவண்ண அட்ரசுக்கு, டில்லிக்கு ஃபோன் போட, ஒண்ணும் தெரியல. தந்தி ஒண்ணு அனுப்பிருக்கிற. எந்தப் படுபாவி என்ன செய்தானோ, என்னேமா...”

நா ஒட்டிக் கொள்கிறது. உடலிலுள்ள கோடானு கோடி அணுக்களும் குலுங்கினாற் போல் இருக்கிறது. சுவரைப் பிடித்துக் கொண்டு ஒட்டிக் கொள்கிறாள்.

“ஆச்சி, காஞ்சிவரம் ரோட்டுல, அங்க ஒரு அம்பாள் கோயில் ஆசிரமம் வச்சிருக்காங்களாம், வாரீங்களா, போய் வரலாம்...” என்று கேட்டு குரல் ஒலிக்கிறது. அவள் போக வில்லை.

“ஏம்மா, அந்த வாசல் டாக்டர் எப்பிடி வயசான வந்தா...”

“ஐயம்மா, அவுரு ரெம்ப நல்ல மனிசரு. அவருக்கு வயசா-தொண்ணுறாகப் போவுது. செத்துப் போன சம்சாரம் நினைவாத்தான் தரும வைத்தியமே பண்ணுறாரு. அவுருக்குன்னு ஒரு சைகிள் ரிச்சா, அதுலதா வருவாரு போவாரு. அவுருதா சொல்லப்போனா, காபந்து.”

“ஆமா, நானும் பாத்திருக்கிற... வெளுப்பா வேட்டி சட்டை போட்டுட்டு மூக்குக் கண்ணாடி போட்டுட்டு வருவாரு. இந்தப் பக்கம் அந்தப் பக்கம் ஏழை எளிசெல்லாம் வந்த பெறகுதா அவுரு உங்க வீட்டு ரூம்புல வச்சிட்டாருன்னு தெரியும்...”

“ஆச்சிம்மா... எனக்கு, அந்த ஸ்கூல்ல ஒரு தடியன் இருக்கிறான். மோசமான ஆளு. அவன் சங்கரியக் கூப்புட்டுவுட்டு, “ஏம்மா, இந்தப் புள்ளிங்கள வச்சிட்டு லோலுப்படுற. கான்டீன்ல லஞ்ச்பாக்கெட் போடற உத்தேசம் இருக்கு ஒரு லெமன் பாத், இல்லாட்டி விஜிடபிள் தக்காளி பாத், காலம பத்துமணிக்கு வந்தா ஒரு மணியோட வேலை குளோஸ். இப்படி ஆறுமாசமம் மூணு மாசமுமான புள்ளங்க. அழுகைய மாத்தி, மூத்தரம் பீ எடுத்து, நோவு நொடிபாத்து, உனக்கு என்ன கெடக்கிது? இதுல மாசம் ரெண்டாயிரம் வரும். காபி சாப்பாடு கழிஞ்சு போகும்’ன்னானாம்.” டாக்டர்ட்ட சொல்லிச்சாம.

“யாரு, அந்தப் பாவி, தாசனா ?”

“தாசனே வந்து கேப்பனா? அவனுக்கு எடுபிடிகள் இருக்கே? சீ? ஸ்கூலா? அங்கேயும் ரெண்டாயிரம் புள்ளங்க படிக்கிதுங்க. பணமா கறக்கிறான். ஹேமான்னு ஒரு பொண்ணு. அவகிட்ட ஏழப் பொண்ணு தானேன்னு பல்ல இளிச்சிருக்கிறான். அவ மேச்சாதி இல்ல. அதுங்க தா, போலி கவுராதி பாத்திட்டு விட்டுக் கொடுத்துப் பூசி மெழுகும். இவ நேர போலீசுக்குப் போயிட்டா. மாதர் சங்கம்கூட வந்தது. ஆனா, எங்கெங்கோ பணத்தக்கட்டி, வாயக்கரிசி போட்டு எந்தப் பேப்பரிலும் ஒரு சமாசாரமும் வராமப் பாத்துக்கிட்டான். பொம்பிளக, வயித்திலல்ல, நெஞ்சில நெருப்ப வச்சிட்டு வேல பாக்குறோம். என்னமோ படிச்சிட்டா, வேல பாத்துட்டா சொதந்தரம் வந்திரும்னாங்க. ஒரெழவும் இல்ல...”

இவளுக்கு ஒன்றும் பேசத் தெரியவில்லை.

“இப்ப, நமக்கு ஒரு துப்பும் கெடக்கல. இவதா ரயில் பாதையில விழுந்து தற்கொலை பண்ணிட்டாளா, இல்ல, எதானும் நடந்து பாதையில வீசிட்டாங்களா? அடிவயிறு சொறேல் சொறேல்னு இழுக்குது. நானும் ரெண்டு பொம்புள புள்ளங்கள வச்சிருக்கிறேன். ஒண்ணு இத நாலா வருசம் மெக்கானிகல் படிக்கிது. ரெண்டாவது, பிளஸ் ஒண்ணில நிக்கிது. எந்நேரமும் டி.வி. முடிய பாப் பண்ணிட்டு வந்திட்டா. நா காலேல ஏழர மணிக்கு வூட்டவிட்டா, பொழு தடஞ்சி வர. சனிக்கிழமை ஞாயித்துக்கிழம கூட லோலுதா... அங்கியும் எல்லாம் பொம்புளபுள்ளங்க. எச்.எம். நல்ல மாதிரி... ஸ்கூல நல்லா கொண்டாறனும், நல்ல பேரு வாங்கனும்ன... எல்லாம் பாவப்பட்ட வீட்டுப் புள்ளங்க. அதுங்களுக்கு ஒரு வழி காட்டுறோம்ங்கற திருப்திதா. இங்க வீட்டுல வந்தா இந்த மனிச, பொம்புள புள்ளயப் போயி சிகரெட் வாங்கிட்டு வரச்சொல்றாரு. அத்தப் புடிச்சித்திட்ன...

“யாரிடமேனும் சொல்லி அழவேணடும் என்று தோன்றும் ஆவேசம். ஆற்றாமை, யாரைக்குறை சொல்ல?...”

“படிக்கிறபுள்ளங்கள இந்த நாசகார டிவியே கெடுக்குது ஆச்சியம்மா? இந்தாளு, வி.ஆர்.எஸ். எதுக்கு வாங்கிட்டாரு?... ரெண்டு வளர்ந்த புள்ளகள வச்சிட்டு, வீட்டிலியே பாட்டில வாங்கி வச்சிட்டுக் குடிக்கிறாரு. இதுக்குதா அவுசிங் போர்டு வீட்டுக்குப் போனம். சீ...” கண்களைத் துடைத்துக் கொள்கிறாள்.

“இப்ப வீட்ல ரணகளம். சினனவ, பேசாம என் ஸ்கூலிலேயே படிக்க வச்சிட்டிருப்பேன். அது ஒழுங்கா வந்திருக்கும். அரசுப் பள்ளிக்கூடம், இவுரு அந்தசுக்கு சரியில்லேன்னு, ஆயிரம் ஆயிரமாப் புடுங்குற ஸ்கூல். அங்கேந்து, ‘மிஸ் எலிகென்ட்’ போட்டிக்கு இந்த இளசுகள அனுப்புறாங்களாம். இவ போவேன்னு நிக்கிறா. மாசம் ஆயிரம் ரூபாய்க்குக் குறையாம அதுக்கு லோஷன், கிரீம், லொட்டு லொசுக்கு... கண்ணத்துறந்திட்டே குழில புடிச்சி ஒரப்பன் தள்ளுறான். நா என்ன செய்யட்டும் ஆச்சிம்மா? வெள்ளம் கரைபுரள வருது. வெறும் கரையும் மண்ணு. குடும்பம்ங்கறது எப்பிடி நிக்கிம்?... இன்னிக்கு இந்த சங்கரி. நாளைக்கு இது எனக்கு, எம்புள்ளங்களுக்கு நேராதுன்னு என்ன நிச்சியம்? முதல்ல இந்தக் குடிக்கடைகளை மூடமாட்டாங்களா? எங்க ஸ்கூல்லேந்து, எட்டுனாப்புல ஒயின்கடை. அதுக்குப் போறவார எடமெல்லம் அம்புக்குறி போட்ட போர்டு. ராச்சசன்கள அழிச்ச, காளி எப்ப அவுதாரம் எடுத்து எல்லாம் நிர்மூலம் ஆக்கப் போறாளோ...!”

ஒருவாறு மூச்சு விட்டுத் தணிகிறாள்.

“ஆச்சி, கூடை எதானும் வச்சிருக்கீங்களா? இருந்தா குடுங்க... பணம் கொண்டாந்திருக்கிறேன்...” இடுப்பில் இருந்த சிறுபையை எடுக்கிறாள்.

“இல்லையேம்மா, நா போட்டு வைக்கிறேன். இப்ப முருகன் கடையில் அந்த நாருஇல்ல. மெயின் பஜார்ரோடுல இருக்குன்னான். நீங்க இப்ப பணம் ஒண்ணும் தரவேண்டாம். நா போட்டு வைக்கறேன்... பதனமாப் போங்கம்மா...”

"https://ta.wikisource.org/w/index.php?title=உத்தரகாண்டம்/11&oldid=1022822" இலிருந்து மீள்விக்கப்பட்டது