உள்ளடக்கத்துக்குச் செல்

உத்தரகாண்டம்/17

விக்கிமூலம் இலிருந்து

17


ப்போது, மின்னல் கீறுகள் மண்டையைக் கூறு போடுகின்றன. தப்பு வழியில் வளரும் சந்ததி, தப்பு வழியிலேயே பூவும் பிஞ்சும் உதிர்க்குமா?

ஆனால், பழியோரிடம், பாவமோரிடம் என்றல்லவோ விடிந்திருக்கிறது? அவன் அன்று வந்து கூப்பிட்டான்; கெஞ்சினான்.

அன்று மட்டுமில்லை. இதற்கு முன்பும் ரஞ்சிதம் அனுப்பி வந்திருக்கிறான். ரஞ்சிதத்துக்கும் அவள் மீது அன்றிலிருந்தே கோபம்தான்.

“கெளவி இருத்து வச்சிக் கழுத்தறுத்திட்டதே?” என்றாளாம் ரஞ்சிதத்தின் பாட்டி.

தான் செய்தது தவறோ என்ற உறுத்தல் அவள் அடிமனதில் மணலாய் வேதனை தந்து கொண்டிருக்கிறது...

காந்தி வழியில் கதருடுத்தி, மதுவிலக்குப் பிரசாரம் செய்து சிறை சென்ற பெண்மணிகள், பிறகு சமூக சேவை என்று ஆதரவற்ற, ஆநாதை விடுதி என்றுதான் தங்கள் சேவைகளைத் தொடர்ந்தார்கள்.

அப்படிப்பட்ட நிறுவனம் ஒன்று வெற்றிவிழா கொண்டாடியபோது அம்மா இல்லை; அய்யா இருந்தார். டில்லியில் இருந்து அப்போதைய பிரதமர் இந்திரா அம்மையார் வந்து பேசினார். இவருக்கு அந்த ஆங்கில வார்த்தைக்கு அர்த்தம் புரியவில்லை என்றாலும் ஒருவர் மொழி பெயர்த்தார். “வெள்ளிவிழா கொண்டாடும், இந்த நிறுவனத்தின் மூலமாக சேவை செய்யும் பெண்கள் சிறந்த சமூக சேவகர்கள் தாம். சந்தேகமில்லை. ஆனால் இது சிறப்பாகப் பொன்விழாக் கொண்டாட வேண்டும் என்று சொல்லமாட்டேன். ஏன் என்றால், ஒரு முன்னேற்ற சமுதாயத்தில் ஆதரவற்ற பெண்கள், கர்ப்பிணிகள், அநாதைகள் என்ற கரும்புள்ளிகள் இருக்கலாகாது...” என்று சொன்னாராம்.

அநாதைப் பெண்கள், கர்ப்பிணிகள்... அநாதைகள்...

அநாதைகள் எப்படி வருகிறார்கள்?

மரகதம் ஒரு பிள்ளையைப் பெற்று, அதை அநாதையாகக் குப்பைத் தொட்டியிலோ எங்கோ விடக்கூடாது என்று தான் அவள் ஆதரவு கொடுக்கும் ஒரு நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தினாள். ஒரு சமயம் ஒரு பெரிய வக்கீல் வீட்டில் வேலைக்கிருந்த பெண் கர்ப்பமாகிவிட்டாள். வக்கீலா, அவர் மகனா என்று அந்தப் பெண் சொல்லவில்லை. பயத்தில் உறைந்து போனாள். அம்மாதான் அவளை அந்த இல்லத்தில் கொண்டு சேர்ப்பித்தார். ‘உங்க குருகுலத்திலேயே வைத்துக் கொள்ளலாமே, சரோம்மா’ என்று அவர் கேட்டாராம்... அம்மா அய்யாவிடம் வந்து சொன்னார். “இங்கு தப்பு நடக்கக் கூடாது தாயம்மா, நீ உன் பிள்ளையைத் தாலியைக் கொடுத்து குழந்தைக்கு ஒரு அங்கீகாரம் கொடுத்தது ரொம்ப சரி...” என்றார்.

ஆனால் தவறாக ஒரு பிள்ளைக்குத் தாயான பிறகு, மரகதம், எந்தப் பாட்டைத் தொழிலாகக் கொண்டு வாழ்க்கை நடத்த வந்தாளோ, அந்தப் பாட்டின் பக்கமே திரும்பி வைராக்கியமாக இருந்திருக்கலாம். இல்லையேல்...?

சீ! ஆண் திருந்தாமல், பெண் எங்கிருந்து வைராக்கியம் காப்பாள்? இவள் இப்போது, துப்பிய எச்சிலை எடுத்து விழுங்குவாளா? ஓர் ஏழைத்தாய்க்கு நியாயம்.

குருகுலத்தில் அடிபதித்து எத்தனையோ ஆண்டுகளாகி விட்டன. பராங்குசம் இவளைப் புல்லுக்கும் மதிக்கமாட்டான். சாட்சிக்காரன் காலில் விழுவதைவிட, சண்டைக்காரன் காலில் விழலாம்.

அவர்களுடைய முறையீட்டை வாங்கிக் கொண்டு மகன் வீடு செல்ல முடிவு செய்கிறாள்.

பிற்பகலில் ரங்கன், மாமரத்துக்கும் தென்னமரத்துக்கும் எரு வைப்பவர் என்று ஒருவனைக் கூட்டிக் கொண்டு வருகிறான். வாசலில் ஆட்டோவில் ஒரு பாலிதீன் சாக்கில் இருந்து வெளிர் நீலப் பொடியைக் கொண்டு வருகிறார்கள். மரத்தைச் சுற்றிக் கொத்தித் துரவுகிறார்கள்.

இவளுக்குச் சும்மா இருக்க முடியவில்லை.

“ஏம்பா, மாமரம் முச்சூடும் பூச்சி... புழுபுழுவா இருக்கு. கடிச்ச எடம் நெருப்புப் பட்டாப்பில கொப்புளிக்குது...”

“அதெல்லாம் போயிடும் பாட்டிம்மா? இது, பூச்சி கொல்லி, உரம் எல்லாம் சேத்த காம்பிளெக்ஸ் உரம்...”

ரங்கன், உடனே, “குருகுலத்திலேந்து டாக்டர் அம்மா தான் அனுப்பி வச்சிருக்காங்க!” என்று தீர்க்கிறான்.

இவளுக்குப் பேச வாயில்லை. என்றாலும், “ரங்கா, உங்கிட்ட ஒரு சமாசாரம் சொல்லனும், அவரை அனுப்பிட்டு வா” என்று தயங்கி நிற்கிறாள்.

“என்ன விசயம்...?” கேட்கும் தோரணையே அவளை ஒதுக்கித் தள்ளப் போதுமானதாக இருக்கிறது.

ராமலிங்கம் வந்ததையும் அந்தப் பெண் பிள்ளை கதறியதையும் சொல்கிறாள்.

“மனசு அடிச்சுக்கிது. அவுங்க இப்ப இருக்கிற எடம் எனக்குத் தெரியாது. அசோக் நகரோ, அண்ணா நகரோ சொன்னாங்க. உனக்குத்தான் அந்தப் பக்கமும் பழக்கம். இட்டுட்டுப் போறியா?”

“இதென்னம்மா, நாயம் ! வூடுதேடி வந்தவங்கள வெறட்டி அடிச்சீங்க. இப்ப என்னியும் சேத்து அடிப்பாங்க! தவுரவும் இப்ப அவுங்க கட்சி இவங்ககட்சிக்கு ஆதரவு கூட இல்ல. உங்களுக்கு அட்ரசு வாணா மண்ணாங்கட்டியக் கேட்டு வாங்கிட்டுவரேன். போயிட்டு வாங்க!” என்று கடித்துத் துப்பிவிட்டுப் போகிறான்.

‘மண்ணாங்கட்டியாகிய குழந்தைவேலு’ பொங்கிவரும் சந்தோசச் சிரிப்புடன் தலைத்துணியை உதறிக் கொண்டு மாலை ஆறரை மணிக்கு வருகிறான்.

“அம்மா, கூப்புடீங்களாமே! காரியகாரரு வந்து சொன்னாரு நா, ஜகஜோதி பௌன்டேசன்லதா கிற. உம்புள்ள, புரவலரய்யாவப் பாக்கணும்னு சொன்னாரு...’ கடலை உடைத்தாற் போல் இருக்கம் உடைபடுகிறது. “வ்லாசம் கேட்டாரு. வ்லாசம் என்ன, நான் கூட்டிப் போறேன். எதுக்கும் அவுரப் பாக்கணும்... தா, பூங்காவார்டு பக்கம், தொந்தரவாகீது. ஒரு மீட்டிங் எதுனாலும் வய்க்கணும். நம்ம சின்னவரக் கூட்டிட்டு வரணும். கொஞ்சம் காசு செலவு பண்ணனும். இலக்சன் வருதுன்னு சொல்றாங்க...” தேடிச் சென்று அருவருப்பை மிதித்து விட்டாற் போல் கூச்சம் ஏற்படுகிறது.

“கச்சி விவகாரமெல்லாம் வாணாம்பா, குழந்தவேலு. சும்மாத்தான் மருமக, பேரப்புள்ளங்கல்லாம் பாக்கணும்னு கேட்டே. என் மக, அமெரிக்காலேந்து வந்திருக்காளாம்...”

“ஆமாம்மா, சந்திரி டாக்டர்தானே? அவங்க மககூட பெரி டாக்டர் படிச்சிட்டு, எம்மக இருக்கிற ஆஸ்பத்திரியிலதா வந்திருக்குதாம்... சந்திரி அம்மாக்குத்தா, அமெரிக்கால கார் ஆக்ஸிடென்டாகி, ஒரு கை பலமில்லாம போயிடிச்சாம்...”

இவளுக்குத் தெரியாத பல செய்திகளை வைக்கிறான்.

“அப்ப நாளக்காலம, நா டூட்டி முடிச்சி, குளிச்சி முழுவிட்டு வாரன். வாடகக்காரெடுத்திட்டு வரட்டுமா?”

“அய்யய்ய, அதெல்லாம் வாணாம்பா! நீ எப்படிப் போவ...?”

“நாம் போவ...’ என்று வானைப் பாத்துப் பொக்கைப் பல் தெரிய ஒரு சிரிப்பு மலருகிறது.

“பஸ்சிலியா போவ... அதலு நானும் வார..?”

இரவு முழுவதும் உறக்கம் வரவில்லை.

வரவேற்பு எப்படி இருக்கும் என்பதை அநுமானிக்க முடியவில்லை.

காலையில் எழுந்து நெடுந்தொலைவு பயணம் செய்யப் போகும் உணர்வுடன் தயாராகிறாள்.

“அநாவசியமா ஒரு பெண் பாவத்தை... இல்லை ஏழைத் தாயின் சாபம் வேண்டாம். அந்த விபத்தை நானே கண்ணால் பார்த்தேன். அந்தப் பையன் மீதுள்ள வழக்கை இல்லாமலாக்கி விடுங்கள்.”

குழந்தைவேலு, அவளை மின் வண்டியில் ஏற்றிக் கூட்டிச் செல்கிறான். சைதாப்பேட்டையில் இறங்கி, ஓர் ஆட்டோவைப் பிடித்து அவளை ஏற்றிச் செல்கிறான். அவள் போகும் இடங்கள் எதுவுமே அவளுக்குப் பரிசயமாகத் தெரியவில்லை. பெரிய கட்டிடங்கள். அடுக்கு மாடிகள். பெரிய சாலையிலிருந்து திரும்பி, வழியில் முன்பே போலீசு... காவல் அறையில் துப்பாக்கியுடன் காவலர்கள். யார்யாரோ வெள்ளையும் சள்ளையுமாக. ஆட்டோவை அங்கேயே நிறுத்தி விடுகிறார்கள். சிறிய ஷெட்போல் ஒரு இடத்தில் கரைவேட்டிப் பையன் இவர்களை நோக்கி விசாரிக்கிறான்... “யாரோன்னு நெனச்சுக்காத தம்பி. அம்மா...” அவனைச் சற்றே விலகி அழைத்துச் சென்று காதில் கிசுகிசுக்கிறான்.

பெரிய கோட்டைக் கதவுகளை அவன் திறந்து அவர்களை மட்டும் விடுகிறான். உள்ளே எவ்வளவு பெரிய இடம்?

முன் வாயிலில் உள்ளேயும் காவல்.

அலுவலக அறை. குழந்தைவேலு உள்ளே சென்று தகவலைச் சொல்கிறான். அப்போதுதான் அவளுக்கு வெறுங்கையாய் வருகிறோமே என்று உறுத்துகிறது. மரகதத்துக்கு முதலில் இரண்டு பிள்ளைகள். அடுத்து இரண்டும் பெண்கள். எல்லாருக்கும் அநேகமாகக் கல்யாணமாகிவிட்டது. திருமணம் என்றால், முன்பு வந்து அவர்கள் அழைப்பு வைத்தார்கள். அப்போது அய்யா இருந்தார்கள். மஞ்சு கல்யாணத்துக்குச் சென்றாள். மிகப் பெரிய ஆடம்பரத்துடன் நடந்தது. அங்கே அவளுக்குத் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளவோ அறிமுகம் செய்து கொள்ளவோ கூட இடமில்லை. ரஞ்சிதம் மட்டுமே, ‘வாங்கத்தே’ என்று ஒரு வாய்ப் பேச்சு உபசரணை செய்தாள்.

பேரப்பெண்ணுக்கென்று ஒரு வெள்ளிக் குங்குமச் சிமிழும் ரவிக்கைத் துண்டும் வாங்கிக் கொண்டு சென்றிருந்தாள். அதை மணவிடையில் ஏறிக் கொடுக்கவும் அவளுக்குச் சங்கடமாக இருந்தது. மரகதத்தின் கையில் கொடுத்து, “நான் கொடுத்தாகக் குடுத்திடம்மா ? நல்லாருக்கியா?” என்று கேட்டுக் கொண்டாள். “அத்தே, சாப்பிட்டுட்டுப் போங்க...? த, நவீ, பாட்டிய சாப்பாட்டுக் கூடத்துக்குக் கூட்டிட்டுப் போம்மா?” அந்தப் பெண் யாரென்று தெரியவில்லை. சிவப்பாக வயிரமும் பட்டுமாக, பெரிய இடத்துப் பெண் போல் இருந்தாள்.

அவளைக் கையைப் பிடித்துக் கூட்டிச் சென்றாள். பெரிய கூடத்தில் பந்தியில் முதல் நாற்காலியில் உட்கார வைத்தாள். தனிப்பட்ட முறையில் கவனிக்கச் செய்தாள். சாப்பாடு முடிந்த பின், வாயிலில் தாம்பூலப்பை வழங்கி வெளியில் அனுப்பி வைத்தாள். தெரு நிறைந்த கார்கள். போலீசுக்காரன் நின்றிருந்தான். அந்தச் சூழலில் நகை நட்டின்றி, காலில் செருப்பு மின்றி, ஒரு வெள்ளைச் சீலையுடன் இவள் வெளியேறுவதைப் பார்த்து போலீசுக் காரன், ‘யம்மா?...’ என்றான். இவள் எண் சாணும் ஒரு சாணாகக் குன்றிப் போனாள். “என்னப்பா...’

“பையக் காட்டு?...”

அவளுக்குச் சரீரென்று தேள் கொட்டிற்று.

“இந்தாப்பா, தாம்பூலப் பையி. வாணாம், நீயே வச்சிக்க?”

கண் கலங்கிவிட்டன. “உனக்கு வேணும்டி, தாயம்மா, வேணும்? அவர்கள் ஆடம்பரத்துக்கு, ஊருக்கு மெய்ப்புக்கு வந்து அழைப்பு வைப்பார்கள். உனக்கு இங்கே கால் வைக்க என்ன தகுதி?” அதற்குப் பிறகு அவள் இன்றுதான் கால் வைக்கிறாள்.

பெரிய கூடம், ரத்தினக் கம்பளம். சோபாக்கள். எதிரே அண்ணா, பெரியார், காந்தி படங்கள். பசுமையான பூத்தொட்டிகள். கூடத்தில் யாருமே இல்லை. தொலைபேசி, அவள் மகன் அண்ணாவுடன் இருக்கும் புகைப்படம்...

குழந்தைவேலு ஏன் உள்ளே வரவில்லை?

இவள் அந்தக் கூடத்துக்குப் பின்புறம் செல்லும் வாயிலில் உள்ள மணித்திரையைப் பார்த்துக் கொண்டு நிற்கையில், குழந்தைவேலுவிடம் பேசிய அலுவலகக்காரன் வருகிறான். இளைஞன். வேட்டி சட்டையுடன் சாமானியனாக இருக்கிறான்.

“அம்மா, ஏன் நிக்கிறீங்க? உள்ளாற போங்க?...”

‘இருக்கட்டும்பா, இந்த வீட்டையா, அவுரு... இருக்கிறாரா?...”

“புரவலர் அய்யா, ஊரில இல்லீங்க. காலமதான் மதுரைக்குப் போனாங்க. நீங்க அம்மாளப் பாக்கலாமே? போங்க...”

“இல்லப்பா, அவங்க, மரகதம்மா இருக்காங்களா? அவங்களத்தா பாக்கணும்...”

அவன் தொலைபேசியை எடுத்து உள்ளே செய்தி தெரிவிக்கிறான். சற்று நேரத்தில் மஞ்சு... மஞ்சு வருகிறாள். ஒடிசலாக வடிவாக இருக்கும் பெண். முடியைக் குட்டையாக வெட்டிக் கொண்டு, பருமனாக, லேசுவைத்த நைட்டியில் வருகிறாள்.

“ஓ, நீங்க... அப்பாம்மாதான?” அருகில் சென்று அவள் கன்னத்தைத் தடவுகிறாள். கண் விழிகள் சோர்ந்திருக்கின்றன. செவிகளில் வளையங்கள். வேறு ஒரு நகை இல்லை. அவள் கையைக் கன்னங்களிலிருந்து விலக்குகிறாள்.

“ஏம்மா, மஞ்சு... நல்லாருக்கியா?”

“ம், இப்ப யாரப் பாக்க வந்தீங்க? அப்பா ஊரில இல்ல. அம்மா நர்ஸிங்ஹோமுல இருக்காங்க...”

இதற்குள் மரகதமே அங்கு வந்து விடுகிறாள்.

மரகதம்... மினுமினுப்புச் சேலையும் கை கொள்ளா வளையல்களுமாக அவளைப் பார்த்து, “எங்க இம்புட்டுத் துரம்?” என்று குத்துகிறாள்.

“மரகதம், நல்லாயிருக்கியாம்மா?...”

“ஏதோ ஒம் புண்ணியத்துல நல்லாருக்கோம்.”

அவள் அருகில் சென்று மரகதத்தின் கைகளைப் பற்றிக் கொள்கிறாள்.

“மரகதம், அநாவசியமா, ஒரு பொண்பாவத்த, ஏழைத் தாயின் சாபத்துக்கு ஆளாக வேணாம். நீங்கல்லாம் ரொம்ப நாளைக்கு நல்லா இருக்கணும். அந்த விபத்தை நானே கண்ணால பாத்தேன். நான் வாரப்ப, அந்த ரோடிலதா நடந்தது. ஏழை பாழை, பிரியாணிக்கு ஆசப்பட்டுக் கூட்டத்துக்குப் போயிருக்கா. அந்தப் பையன்தான் பொண்ணு கையப்புடிச்சி இழுத்து சக்கரத்துக்கு அடில வுட்டான்னு, கொலை வழக்குப் போட்டிருக்காம். நாகமணிதா...”

“ஏ, கெளவி!” என்று அவள் குரல் அரிவாள் வெட்டாகப் பாய்கிறது.

“நீ கண்ணால பாத்தியா? ஏ இப்பிடிப் பொய் சொல்லுற? உனக்கு அதுதான் தொழிலு! பெத்த மகனுக்கு எதிராக் கட்சி கட்டுற சன்மம்! ஆடு நனையிதேன்னு ஓநாய் அழுதிச்சாம்! எதிர்க்கட்சிங்க, வேணுமின்னே கத்தியக் கையில வச்சிட்டுத் திரியுதுங்க. நாகு அண்ணக்கு ஊருலியே இல்ல. எதிராளிக கிட்டப் பணத்த வாங்கிட்டு, ஒண்ணுமே அறியாத புள்ளய வம்புல மாட்டி உட்டிருக்கா, அந்தப் பரதேசிக் கும்பல். இது சூதுவாது அறியாத புள்ள. போஸ்டர், பானர்னு இவங்கிட்டப் பணம் வாங்கிட்டு, அடுத்தவனுக்குச் சாதகமாக பிரசாரம் பண்ணுனா. நீ இப்ப அந்தப் பயலுகளுக்கு வக்காலத்து வாங்கிட்டு வரியா? எந்த மூஞ்சிய வச்சிட்டு இங்க வந்த?...”

இவளுக்கு இந்த அடிகள் பழக்கமில்லாதவை. ஈனச் சாதியில் பிறந்தாலும், அன்பின் அரவணைப்பும் பரிவின் குரல்களுமே அவளுக்கு நியாயங்களைப் பதிய வைத்திருக்கின்றன. அநியாயங்களுக்கு அவள் தலை வணங்கியதில்லை. ஆனால், ஒதுங்கியே பழக்கமானவள். நேராக நின்று இழிவம்புகளைத் தாங்குகிறாள்.

“இதபாரு மரகதம், என்ன நீ என்ன வேணாய் பேசிட்டுப்போ! அதனால எனக்கு ஒண்ணும் இல்ல. ஆனா, நீ ஒரு பொம்புள. நாலு மக்களப் பெத்தவ. இன்னிக்குக் கண்ணியமான ஒரு இடத்துல நீ இருக்கேன்னா, இது எப்பிடி வந்ததுன்னு ஒரு நிமிசம் நெனச்சிப்பாரு. நம்ம புள்ளங்களுக்கு நாமதான் நல்ல வழி காட்டணும். மறுபடி சொல்ற ரோட்டுல அன்னாடம் வண்டி கவுந்து மோதி சாவு நேருது. அதெல்லாம் விதின்னு தான் போறாங்க ஆனா...”

“இதபாரு கெளவி! ஆனா ஆவன்னா கேக்க நா வரல. மரியாதையா எடத்தக் காலி பண்ணு! போ!” என்று வெட்டுகிறாள், வெரட்டுகிறாள்.

அன்று கல்யாண மண்டப வாயிலில் போலீசுக்காரன், அவள் தாம்பூலப்பையைத் திறந்து காட்டச் சொன்னானே, அப்போது நெஞ்சில் தைத்த ஊசி அவளுக்கு வேதனையே அளிக்கவில்லை. இந்த வேதனையை விழுங்கிக் கொள்ள இயலவில்லை. சந்திரி வந்திருப்பதாகக் குழந்தை வேலு சொன்னதெல்லாம் அந்த வேதனை எரிச்சலில் நினைவுக்கு வரவில்லை.

அவள் வெளியேறியதைக் கவனித்து விட்டு குழந்தைவேலு வாயில் அறையிலிருந்து ஓடிவருகிறான்...

“அதுக்குள்ள வந்திட்டீங்க...?”

அவள் பதிலேதும் கூறாமல் விடுவிடென்று நடக்கிறாள். குழந்தைவேலு, கிடுகிடென்று உள்ளே ஓடி, “வரேன்... வரேன் தலவரய்யா கிட்ட மறக்காம ஒரு பேச்சுப் போடுங்க. சின்னவருதா ஏற்பாடு செய்வாரு... வரன்... வணக்கம் அய்யா. வணக்கம்.” ஒவ்வொரு போலீசு, வாசல்படிக்காவல் எல்லோருக்கும், சலாம், வணக்கம் சொல்லிவிட்டு அவன் வருகிறான். விடுவிடென்று அந்தத் தெரு திரும்பிப் பெரிய சாலைக்கு வருகிறார்கள்.

“பெரி...ம்மா, ஆட்டோ கூப்புடட்டுமா?”

“அட வேணாம்பா, இத ஓரெட்டு, பஸ்சில ஏறினாப் போயி எறங்கலாம்.”

குழந்தைவேலுக்குப் பேசவே அவள் இடம் வைக்கவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=உத்தரகாண்டம்/17&oldid=1022828" இலிருந்து மீள்விக்கப்பட்டது