உத்தரகாண்டம்/19
முதலை... முதலைதான் அவளை விழுங்கக் கவ்விவிட்டது. யானையை முதலை கவ்விய போது, யானை ஆதி மூலமே என்று துதிக்கையை உயரத் தூக்கிப் பிளிறியதாம். துதிக்கையா, தும்பிக்கையா?... இவளுக்கு எந்தத் துதிக்கையும் தும்பிக்கையும் தெரியவில்லை...
குறைந்தபட்சம் மன வேதனையைச் சொல்லிக் கொள்ளக் கூட யாரும் இல்லை. அந்தத் தலைமுறையே பட்டுப் போய்விட்டதா? புதிய தளிரே வராதா?...
கடைசி காலத்தில், அய்யா, மன உளைச்சலோடு உடலும் பாதிக்கப்பட்டிருந்தார். நோயென்று எதுவும் இல்லாமலே படுக்கையோடு இருக்க வேண்டிய அளவுக்கு நலிந்து போனார். ஆதிநாட்களில் அக் குடும்பத்தில் சமையல்காரராக இருந்த சிங்காரம் அம்மா இறந்தபின் வந்திருந்தான். என்றாலும், அவனுக்கும் வயதாகி கண் பார்வை மங்கி இருந்தது. “தாயம்மா, நா அடுப்பு வேலய பாத்துக்கிறேன், கஞ்சியோ, இட்டிலியோ எதுன்னாலும் செய்துதாரேன், மத்ததெல்லாம் நீ பாத்துக்க” என்று சொல்லி விட்டான்.
குளிக்க நீர் எடுத்து வைத்து, துண்டு, வேட்டி வைத்துப் பணி செய்வது, அவரைக் கை பிடித்துக் குளியலறைக்குக் கூட்டிச் செல்வதாயிற்று. குச்சியை ஊன்றிக் கொண்டு வீட்டைச் சுற்றி, எதிரே விரிந்த தோப்புத்திடலில் அவர் காலையில் நடந்தால் இவள் உடன் செல்வாள். இந்த நடமாட்டமும் குறைந்து, இறுதியில் வீட்டோடு முடங்கி, படுக்கையிலும் தள்ளிவிட்டது. அப்போது காமத் டாக்டர் இருந்தார். பர்மாலட்சுமியின் தம்பி நிரஞ்சன், இவர்கள் எல்லோரும் வருவார்கள். பிடிவாதமாக மருந்து சாப்பிட மறுத்துவிட்டார். பர்மாலட்சுமி, தீங்குரலில் பாடுவாள். ‘மந்திரமாவது நீறு; வானவர்தாமுள நீறு’ என்று அவள் பாடும் போது கண்களில் எல்லாருக்குமே நீர் கசியும்.
அவர்கள் வந்து சென்றதும், “தாயம்மா...” என்று கூப்பிடுவார். குரல் தழுதழுக்க, என்னைத் தூக்கி விடுறியா? என்பார். முதுகில் திருநீற்றைத் தடவுவாள். படுக்கை யோரத்தில் வேப்பிலைதான் வைத்திருப்பாள். அவர் எழுந்து இயற்கைக் கடன் கழிக்கும் பாண்டத்தில் அமரும்போது அவள் உதவ வேண்டி இருக்கும். ஏறக்குறைய ஒரு மாத காலம் அதுவும் தெரியாமலே இயலாமலே இருந்தார். கைக் குழந்தையைப் பேணுவது போல் அவள் தொண்டாற்றிய போது, “தாயம்மா, நீ என் தாய், தெய்வம்” என்று விம்முவார். அவளோ, “அப்படி எல்லாம் சொல்லாதீங்கய்யா, என்னைப் பெத்த அப்பனுக்கு நான் செய்யும் கடன் இது. இது செய்ய நான் குடுத்து வச்சிருக்கணும்” என்பாள்.
“தாயம்மா, அய்யாவக் கவனிச்சிக்கோம்மா?” என்று அம்மா சொன்ன சொல் ஒலிக்கும்...
‘பராங்குசத்தை சத்தியத்தூண் என்று கபடில்லாமல் நம்பினீர்களே... அதனால்தான் அவன் கனவில் வந்தீங்களா, அய்யா? எனக்கு ஒருநாள் கூடக் கனவில் வரவில்லையே? அவன் கனவில் வந்து, ஆஸ்பத்திரி, விருந்தினர் விடுதி, அமெரிக்கா போல வசதின்னு, அமெரிக்காவை இங்கு கொண்டு வரச் சொன்னீங்களா?... புரியவில்லையே?’