உள்ளடக்கத்துக்குச் செல்

உத்தரகாண்டம்/21

விக்கிமூலம் இலிருந்து

21

புதிய புதிய கட்டிடங்கள், வணிக வளாகங்கள்... நெருக்கடிகள் குறைந்து, வேற்றூர் செல்லும் வண்டித்தடம் தெரிகிறது. இளவெயில் இதமாக இருக்கிறது.

‘அய்யாவும் அம்மாவும் அவளிடம், வீட்டை விட்டுப் போகிறாயா, தாயம்மா?’ என்று கேட்பது போல் தோன்றுகிறது.

என்னை மன்னிச்சிடுங்க... எனக்கு எதுவும் தெரியல. நீங்க காட்டிய சத்தியம் இப்ப என்னை வெளியேறச் சொல்கிறது.

அப்போதுதான் கையில் மாற்றுச் சேலை கூட இல்லாமல் வந்திருப்பது உணர்வில் தைக்கிறது... ‘காஞ்சி’ என்று ஊர் பேர் விளங்கும் பின்புறம் காட்டிக் கொண்டு ஒரு பேருந்து போகிறது.

ஒரு காலத்தில்... இரண்டு புறங்களிலும் பசிய வயல்களாக இருந்தன. இப்படி நல்ல சாலையாக அப்போது இல்லை... ஆனால், இருபுறங்களிலும் ஏதேதோ பேர் போட்ட குடியிருப்புகளுக்காக, வீட்டுமனை எல்லைக்கற்கள் முட்டுமுட்டாகத் தெரிகின்றன.

ஒரு பெரிய சுற்றுச்சுவருக்கு இடையே மேலே வெண்மையான தூபியும் சிலுவைச் சின்னமும் தெரிகிறது. சாலையில் இருந்து அந்தக் கோயிலுக்குச் செல்ல ஒழுங்கான வழியும், பூச்செடிகளும் அமைந்திருக்கின்றன. சட்டென்று இடது கைப்பக்கம் பார்க்கிறாள். பசிய மரங்கள் தெரிகின்றன. சாலையின் எல்லையில் பாதுகாப்பான முட்கம்பி வேலிக்குள், சிவந்த தெச்சிப்பூக்கள் குலுங்கும் பசுமையான அரண். பெரிய எழுத்துக்களில் ‘சிவசக்தி ஆசிரமம் பசுஞ்சோலை’ என்று எழுதப்பட்டிருக்கிறது. பெரிய வாயிலின் அகன்ற கதவுகள் திறந்திருக்கின்றன. உள்ளே, மிக அமைதியான சூழல், மாமரங்களில் பூமித் தாயைப் பாதுகாக்கும் பசுங்குடைகள் போல் சூழ்ந்திருக்கின்றன. இன்னும் பூக்கத் தொடங்கவில்லை. மிகப்பெரிய பரப்பு. பல்வேறு வண்ண மலர்களின் தோட்டம்.

ஆங்காங்கு ஒன்றிரண்டு பேர் தோட்ட வேலை செய்பவர் தெரிகின்றனர்... பாதையில் அம்புக்குறி காட்டும் இலக்குகள். சிவசக்தி ஆலயம்... கிணறு... பொதுக்குடில்...

“ஆச்சி, காஞ்சி ரோடில சிவசக்தி ஆசிரமம்னு ஒண்ணு இருக்குதாம். மனசுக்கு ஆறுதலா இருக்குமாம். ரொம்ப அழகா, அம்பாளின் பதினாறு வடிவங்களை அமைச்சிருக்காங்களாம். ஒருநா போவலாமா? வரியளா?”

சங்கரி... சங்கரி... நீ இங்கு வந்தாயா?...

ஒரு கால் இங்கு இருப்பாளோ? கேள்விப் பட்டதெல்லாம் பொய்யாகப் போகட்டும்.

சங்கரி... உடன் பிறந்தவனின் குடும்பம், மக்கள் என்று உழைக்கவே, அக்கினிமேல் நின்று தவம் செய்தாயே அம்மா?...

நெற்றியில் திருநீறும், கீழே குங்குமமும் துலங்கும் முகமும் ஒடிசலான, மாநிறமேனியில் கழுத்து மூடிய ரவிக்கையும் கைத்தறிச் சேலையுமாக அவள் “ஆச்சிம்மா!” என்று கூப்பிடுவதுபோல் தோன்றுகிறது.

வெண்மையும் நீலம் சிவப்பு அழகு விளிம்புகளுமாகத் தெரியும் தேவியின் ஆலயம். முன்புறம் எதிரே ஒரு பாதாம் மரம், அழகிய தீபாராதனைத் தட்டுகளைப் போல் கிளை பரப்பிக் கொண்டிருக்கிறது. அதைச் சுற்றி வழுவழுப்பான மேடை. அதில் வெறும் காவித் துண்டணிந்த, சிவப்புக் கயிறில் கோத்த ஒற்றை உருத்திராட்சம் அணிந்த சாமியார் இருக்கிறார். தாடி மீசை இல்லை. சற்று தொலையில் ஓட்டுக்கூரை கொட்டடிகள் தெரிகின்றன.

பளபளப்பாய் இழைக்கப்பட்ட படிகள்.

பட்டும் பளபளப்புமாக ஏழெட்டு ஆண் பெண்கள், பக்தர்கள் தெரிகின்றனர். மிகப் பெரிய சலவைக்கல் கூடத்தில் ஓர் அழகிய விதானமுடைய மண்டபத்தில் தேவி சலவைக் கல்லில் எழுந்தருளி இருக்கிறாள். சரிகைக்கரையிட்ட மஞ்சள் அரக்குச்சேலை. பச்சை ரவிக்கை. முத்தும் இரத்தினங்களுமான மாலைகள். சிம்ம வாஹினியாக, அபயம் கொடுத்து அருள் புரியும் அம்பிகை. இந்தப் பிரதானமான அம்பிகையைச் சுற்றி, பதினாறு தூண்களில், மாடங்களில் அம்மனின் வெவ்வேறு திருக்கோலங்கள். காயத்ரி, சண்டிகை, துர்க்கை, என்றெல்லாம் பெயர் எழுதியிருக்கிறார்கள். ஆனால் அவளுக்கு எந்த வடிவிலும் சங்கரியே தெரிகிறாள்.

கொத்துக் கொத்தாக வெண்மையும் சிவப்புமாக மலர்கள் அலங்கரிக்கும் பிரதிமைகளில், கண்களைத் திறந்து கொண்டாலும் மூடிக் கொண்டாலும் அவளே தெரிகிறாள்.

சங்கரிக்கு நாற்பது, நாற்பத்தைந்து வயசிருக்குமா?

எத்தனை பூக்களை இந்தப் பூமி பிரசவிக்கின்றன?

எல்லாமே காயாகின்றனவா? காயாகாத பூக்கள் தாம் கடவுளுக்கு என்று அருள் பெறுகின்றன... ஆனால் கடவுளுக்கு மட்டுமே பூசனைக்குரிய பூக்கள், ஆணையும் பெண்ணையும் தெய்வ சாட்சியாக இணைத்து, உலகை வாழவைக்கும் ஒரு தொடக்கத்துக்கான மணமாலைக்கும் பயன்படும் பூக்கள்... ஆனால், மாலைகள் கட்சிகளின் வெற்றிச் சின்னங்களாக, அழுக்குப் பிரதிமைகளை அலங்கரிக்கும் கட்சி மாலைகளாக... மிதிபடும் பூக்களாக, புழுதியில் வீசப்பட்டுக் கருகும்...

நெஞ்சைச் சுமை அழுத்துகிறது. இலக்குத் தெரியாமல் ஒவ்வொரு பிரதிமையின் முன்னும் நின்று மீள்கிறாள்.

பெரிய இடமாக இருப்பதால், கூட்டம் இல்லை போல் தோன்றுகிறது. ஆனால், பிரதான மண்டபத்தின் முன் ஐம்பது பேருக்குக் குறையாமல் வந்திருப்பது தெரிகிறது.

வெள்ளை வேட்டி அணிந்த ஒரு பிரும்மசாரி போன்ற இளைஞர் பூசை செய்கிறார். அவர் என்ன மந்திரம் சொல்கிறார் என்பது செவிகளில் விழவில்லை.

பிரதானமான இராஜராஜேசுவரி - அம்மனைப் பூசித்த பிறகு, பதினாறு வடிவங்களுக்கும் அவர் பூசை செய்கிறார். ஆங்காங்கு அவருடன் பூசையைப் பின்பற்றுவதுபோல சில பக்தர்கள் நகர்ந்த வண்ணம் இருக்கின்றனர். அப்போது, வெளிப்பக்கம், திண்ணை விளிம்பில் நின்று, பார்க்கும் வித்தியாசமான ஒருவனை அவள் பார்க்க நேரிடுகிறது. ஒல்லியாக, கூன் விழுந்த முகம். வெள்ளை வேட்டி... கதர்... கதர்சட்டை வழுக்கையில்லை; முடி தும்பைப் பூவாக இருக்கிறது.

அவன் முகத்தைப் பார்க்கும் ஆவலில் அவள் அதே இடத்தைச் சுற்றி வலம் வருவது போல் வருகிறாள். முன்பக்க வாயிலில் பெரிய மணி தீபாராதனை என்றழைக்க சுநாதமாக ஒலிக்கிறது. அவன் திரும்புகிறான். அவளும் பார்க்கிறாள்.

கழுத்துமணி தெரிய... நெற்றியில் பச்சைக்குத்துடன்...

“என்னம்மா, பாக்குறீங்க?... எனக்கும் பாத்தாப்புல இருக்கு..."

“நா. தாயம்மா... குருகுலம்... எஸ்.கே.ஆர். தியாகி...”

“அம்மா...! நான் சுப்பய்யா, தெரியல...?”

ஏதோ பிடிகிடைத்தாற்போல் மனம் சிலிர்க்கிறது.

பேசவில்லை. தீபாராதனைக்குப் போகிறார்கள்.

இவன் அம்மா அஞ்சலை. அப்பா கிடையாது. சேவா கிராமம் போய் பராங்குசம் வந்து ஆசிரியப் பொறுப்பேற்ற போது இவனும் வந்தான். ராதாம்மாவுக்கு இந்தி பேசப் பயிற்சி கொடுத்திருக்கிறான். நல்ல கறுப்பு; இப்போது, உடல் வெளுத்து சோகை பாய்ந்தாற்போல் இருக்கிறான்.

திடுமென்று ஒருநாள், குடிலைவிட்டுப் போய்விட்டான். அம்மா அஞ்சலை குருகுலத்தில்தான் பின்னர் வேலை செய்தாள்.

பேச்சே எழவில்லை. வெகுநாட்கள் சென்றபின் அறிமுகமானவர்களைப் பார்த்த மகிழ்ச்சி பிரதிபலிக்கவில்லை.

தனியாகத்தான் வந்திருக்கிறானா? எங்கிருந்து எங்கு வந்து முளைத்திருக்கிறான்? பிரதான தேவிக்குப் பின் சுற்றிலும் வந்து தீபாராதனை முடிகிறது. கர்ப்பூரத்தட்டை அங்கேயே நடுவில் பீடமொன்றில் வைத்து விடுகிறார் பூசாரி.

பக்தர்களுக்கு அந்தப் பூசாரி இளைஞரே, பூக்களும் தீர்த்தப் பிரசாதமும் தருகிறார்.

குங்குமப்பூ, கர்ப்பூர மணமும் கரைந்த தீர்த்தம் நாவுக்குப் புனிதம் கூட்டுகிறது. புலன்கள் ஒடுங்கிவிட்டால் எந்தச் சுவையும் கவர்ச்சி கொடுக்காது அய்யா. ராதாம்மாவின் மறைவுக்குப் பிறகு, வழக்கமாக, கீதைபடித்துச் சொல்வார். அம்மாவுடன் அவளும் கேட்பாள்.

யோகத்தில் ஒடுங்கியவர் அம்மா. ஒரு குழந்தை வேண்டுமென்று, காந்திஜியைத் தனியாகச் சந்தித்து, புருசனின் பிரும்மசரிய விரதத்தை மாற்றிக் கொள்ள அறிவுரை பெற்றார். முத்தாக ஒன்று பெற்றதை இழந்த சோகம்... ஒரே வருசம்தான்...

இரவு படுத்தவர், உறக்கத்திலேயே இறைவனடி சேர்ந்தார். நோய், நொடி, எதுவுமே அநுபவிக்கவில்லை... ஆனால், அய்யாவுக்குத் துயரம் இல்லையா?...

புரியவில்லை.

அவள் அந்தப் பிரசாத தீர்த்தத்திலேயே, கனவில் மிதப்பது போல் நிற்கிறாள்.

ஒரு பெரிய ‘ஸில்வர்’ அடுக்கில் சர்க்கரைப் பொங்கல் தேவிக்கு நிவேதனமாயிருக்கிறது.

எல்லோருக்கும் வாதா மரத்தடியில் கண்ட சாமியார் வாழை இலைத் துண்டுகளைக் கொண்டு வந்து கொடுக்கிறார். பூசாரி ஒரு வாளியில் பொங்கலை எடுத்து வந்து பெரிய கரண்டியால் ஒரு கரண்டி எடுத்துப் போடுகிறார். பட்டுக்கரை வேட்டிகள், சரிகைப் புடவைகள், குழந்தைகள் என்று எல்லோருமே அந்த விசாலமான கூடத்தில் பளிங்குத் தரையில் அமர்ந்து பிரசாதம் உண்ணுகின்றனர்.

“அம்மா, நீங்களும் வாங்கிக்குங்க?”

இலையில் சர்க்கரைப் பொங்கல். நெய் மணக்கும், முந்திரி திராட்சை தெரியும் பொங்கல். சுவாமியும் பக்தர்களும் மட்டும் செழிப்பில்லை; பிரசாதமும் செழிப்புத்தான்.

பொங்கலுடன் அவள் படியில் இறங்குகையில், படிக்குக் கீழே உள்ள சுத்தமான கடப்பைக்கல்லில், சாமியார் ஒரு வாளிப் பொங்கலைப் போடுமுன், ஏழெட்டு நாய்கள் வருகின்றன.

எல்லாமே ‘அநாதைகள்’தாம். தாமே தெருப் பொறுக்கி இன விருத்தி செய்யும் உயிர்கள். அவற்றில் ஒன்று சொறி நாய். அது அவசர அவசரமாக விழுங்கிவிட்டு, இன்னும் இன்னும் என்று குலைக்கிறது. சுப்பய்யா, தன் இலையில் இருந்து கொஞ்சம் போடுகையில் சாமியார் ஓடி வருகிறார். “நீங்க போடாதீங்க சுவாமி. அது பசியில்லை; வெறி” என்று கையால் விரட்டி, “போ” என்று துரத்துகிறார். ஆனால் அது சுப்பய்யாவைக் குறி வைத்து ஓடிவர, தாயம்மா, தன் இலையில் இருந்து கொஞ்சம் கீழே போடுகிறாள். அதற்கு அது அடங்கவில்லை.

“நீங்க சாப்பிடுங்கம்மா...?” என்று சுப்பய்யா வற்புறுத்துகிறான். ஆனால் தாயம்மாவைத் துரத்தி, அவள் காலில் பாய்ந்து புடவையை இழுத்துக் கடித்ததும் அவள் பொங்கலை அப்படியே இலையுடன் நழுவவிட்டதும் மின்னல் வெட்டாக நிகழ்ந்து விடுகின்றன.

“அடாடா... நான் சொன்னேனே, கேட்டிங்களா?”... ஒண்ணும் ஆகாது தாயே, குழாயடியில் புண்ணைக் கழுவிக் கொள்ளுங்கள்.”

“சாமி! கொஞ்சம் குங்குமம் குடுங்க, கடிவாயில் வைக்கட்டும்” சுப்பய்யா குங்குமத்தை வாங்கி வருகிறான்.

அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.

மண்ணில் பொங்கல் சிதறி இருக்கிறது... நாய் வெறி தணிந்தாற் போல் ஓடியிருக்கிறது.

“தாயே, இப்படி உக்காருங்க, கொஞ்சம் பிரசாதம் தரச்சொல்றேன், சாப்பிடுங்க!” என்று பாதாம் மரத்தடி மேடையில் அமர்ந்த அவர்களைச் சாமியார் உபசரிக்கிறார்.

“இருக்கட்டுங்க. இத இவரே வச்சிருக்காரு...” சுப்பய்யாவின் பிரசாதத்தில் இருந்து சிறிதளவு உண்கிறாள். அவளுடைய உறுதி, துணிவு எல்லாம் நைந்து கரைகின்றன. வெறிநாய், சொறிநாய் கடித்திருக்கிறது... இதுவும் ஊழ்வினையா?

குடிலில் ஒரு பையனை நாய் கடித்துவிட்டது. உடனே அய்யா அவனை ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றார். தொப்புளைச் சுற்றி பதினாறு ஊசிகள் போடவேண்டும் என்று போட்டார்கள் ‘அம்மா மாதிரி’ உறக்கத்தில் பிராணன் போகுமா?

பசி, பட்டினி, எல்லாம் உச்சக் கட்ட மரண பயத்தில்தான் கொண்டுவிடுமோ? சாயபு, சிறை உண்ணாவிரதத்தில் எப்படியெல்லாம் ஆசை காட்டி அதை முறிக்கச் சொல்வார்கள் என்று கூறியிருக்கிறார். ராமுண்ணி...? சே! அந்த நெஞ்சுரம் ஏனில்லை?

மவுனமாக அவர்கள் அந்தப் பெரிய ஆசிரமத்தைச் சுற்றி வருகிறார்கள். ஆங்காங்கே நின்ற கார்களில், வந்திருந்த பக்தர்கள் போகிறார்கள்.

மவுனம் கனத்திருக்கிறது.

“நீங்க எங்கியோ, வடக்கு அப்பவே போயிட்டதாச் சொன்னாங்க? இங்க வந்து எத்தினி நாளாச்சு? இப்பதா எங்கியும் இந்தி இல்ல. எங்க இருக்கிறீங்க? உங்கம்மா...”

“அவங்க அப்பவே ஊருக்குப் போனாங்க. அஞ்சாறு மாசத்துல போயிட்டாங்க. இருபது வருசமாச்சு. நீங்க எப்படி இங்க? பெரிய வீட்டில இல்லியா?”

அவள் அதற்கு விடை கூறாமல், “குருகுலம் போனீங்களா? பராங்குசத்தைப் பாத்தீங்களா?” என்று கேட்கிறாள்.

“என்ன என்னத்துக்கு வாங்க போங்கன்னு சொல்லுறீங்க? நா உங்க மகன் போல. சும்மா, சுப்பய்யா, இங்கு எங்க வந்தேன்னு கேளுங்க...”

அவள் மனம் இலேசாகிறது. “என்ன இருந்தாலும் நான் படிச்சு வேல பாக்குற கவுரவம் இல்லாதவ. எதோ நல்லவங்கள அண்டி ஊழியம் செய்ததில் பூப்பந்த வச்சிட்ட எலச்சருகுபோல. இப்ப இதுல பூவும் இல்ல; பசுமையும் இல்ல. நொறுங்கிப் போனாலும், உசுரு உணர்வு, அடங்கல...”

கண்ணீர் பொங்க, குரல் கரகரக்கிறது.

“இதபாருங்க, விதின்னு சொல்றத இப்ப நானே நம்புறேன்... ராதாம்மா ஆஸ்பத்திரில இருந்தப்ப பார்த்தேன். பிறகும்-கடைசில, அய்யா அம்மாளையும் பார்த்தேன். அந்த இந்திக்களேவரத்துல, உங்க பய்யன் என்னை நேராக அடிச்சி, சட்டையக் கிழிச்சி, அவமானம் பண்ணினான். அப்புறமும் இங்கே இருந்தேன். அதுக்கும் மேலான அவமானம் வந்தது. ஓடிப்போனேன். எது அவமானம், எது இழுக்கு, எது தர்மம்னு ஒண்ணும் இப்ப புரியல. விதியின் கை எழுதிச் செல்லும் வாழ்க்கை...”

‘ஏம்பா, சுப்பய்யா, ராதாம்மா வீட்டுக்காரர், பையன்லாம் எங்க இருக்காங்க தெரியுமா?...”

“அவங்க அப்பவே நேவிலேந்து ரிடயராகிட்டாங்க. வடக்கே இமாலயப் பக்கம், போனாங்க. சிப்கோ மூவ்மெண்ட்ல தீவிரமா இருந்தாதா கேள்விப்பட்டேன்.”

“அது என்னப்பா?...”

“அதுவா, அங்கே பெரிய மரத்தெல்லாம் வெட்டிக் காடுகளை அழிச்சி, பரிசுத்தங்களை மாசுபடுத்துவதை எதிர்த்து ஓர் இயக்கம். ‘சிப்கோ’ன்னா ஒட்டிக்கிறதுன்னு அர்த்தம். கன்டிராக்ட் தடியங்க மரம்வெட்ட வரச்ச உங்கள மாதிரி பொம்பிளங்க அதை அப்படியே கட்டிட்டு ஒட்டிட்டு, எங்கள வெட்டிட்டு பின்னால மரத்த வெட்டுங்கன்னு சொல்ற இயக்கம்...”

நெஞ்சு உருகுகிறது “அய்யா, பய்யன்...?”

“பையன் அமெரிக்காவுல பி.எச்.டி. பண்றான்னு சொன்னாங்க அவங்க அத்தை இறந்து போனாங்க. வேற சேந்த மனிசங்க யாரையும் நான் பார்க்கல...”

“விக்ரம். அதுக்கு ஒரு கல்யாணம் காட்சி பண்ணிலியா ?”

“தெரியல. இப்ப உலகமே கிராமம் மாதிரி சுருங்கிப் போச்சின்னு சொல்றாங்க. வியாபார, அதர்மத் தொடர்பு கள்தா இறுக்கிப் புடிச்சிட்டிருக்கு. அதுக்குள் மனுசங்க ஒருத்தொருத்தர் தெரியாம வலைக்குள் இறுகிப் போயிட்டாங்க. எங்கியோ இருந்து வந்து கடை துறந்து கோழிக்கறி பண்ணி விக்கிறான்...”

“அய்யோ, அதெல்லாம் சொல்லாதீங்க...”

நிகழ்காலமே வேண்டாம் என்று சொல்வது போல், மரங்களினூடே வந்து வெளியே நிற்கிறார்கள். வரிசையாகச் செருப்புகள் வைத்திருந்த இடத்தில் சுப்பய்யா தன் செருப்பை இனம் கண்டு மாட்டிக் கொள்கிறான். அவளுக்குச் செருப்பணிந்து பழக்கமில்லை. வெளியேறுகிறார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=உத்தரகாண்டம்/21&oldid=1022833" இலிருந்து மீள்விக்கப்பட்டது