உத்தரகாண்டம்/29

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

29

காலையில் விழிப்பு வந்து எழுந்து உட்காருகிறாள்.

“நீங்க உடம்பு நல்லாகணும். எழுந்து, உங்க சேலையை உடுத்து வெளியே போகணும். ஆயிரமாயிரம் பேர் உங்களைப் போல் உறுதியாகப் போராடுபவர்களைச் சேர்ப்பீர்கள்...’

இதுதானே டாக்டர் பெண் சொன்ன கருத்து?

ஆங்காங்கு இருக்கிறார்கள். குடும்பம் குடும்பமாகக் கிராமத்தில் இருந்து பெயர்ந்து, பூமிதேவிக்குச் சொறி சிறங்கு பற்றினாற் போல் குப்பை மேடுகளிலும் சாக்கடைத் தேங்கல்களிலும் விளையாடும் தலைமுறைகளை வளர்ப்பவர்கள்... மாறவேணும்.

“ஆயா, வணக்கம். எப்டீகிறீங்க?” கையில் பிளாஸ்டிக் பை முடமுடக்கிறது.

“நல்லாயிட்டேன் கன்னிம்மா, சீலை கொண்டாந்திருக்கியா?”

“இந்தாங்க, வெள்ள சீல இல்ல. இன்னிக்கு எப்படியும் வாங்கியாந்திருவ.” அவள் பையைத் திறந்து துணிகளை எடுக்கிறாள். இரண்டு உள்பாவாடைகள்; இரண்டு வெள்ளை ரவிக்கைகள். தொட்டால் வழுக்கும் இரண்டு சேலைகள். ஒன்று வெள்ளையில் சிறு சிவப்புப் பூக்கள் போட்டது; இன்னொன்று மஞ்சட்பூக்கள் போட்டது. அவள் எட்டுகஜம் சேலை-வெள்ளையில் பின் கொசுவம் வைத்துத்தான் உடுத்துவாள். அப்படியே பழக்கமாயிருக்கிறது. கதரில் பூப்போட்ட சேலை உடுத்திய காலம் உண்டு. பிறகு உள்பாவாடை உடுத்தி ஆறுகஜம் சேலை உடுத்தினாள். கைத்தறிச் சேலைதான். பஞ்சமி இறந்து போன பிறகு அவள் வெறும் வெள்ளைச் சேலை என்று மாறிவிட்டாள். குஞ்சிதம் துணிக்கடையில், காதிபந்தாத் துணியே விற்பான். அவன் கடையிலேயே ஒரு தையற்காரன் உண்டு. அதே துணியை இவளுக்கு கழுத்து மூடி, இடுப்பு இறங்க தைத்துக் கொடுப்பான்.

காலைக்கடன் கழித்து, நீராடி, புதிய ஆடைகளை அணிந்து கொள்கிறாள். இந்த மாதிரி உடைகள் இவள் இதுவரை அணிந்ததில்லை. ரவிக்கை தொளதொளவென்றிருக்கிறது கழுத்து இறங்கி, இடுப்பு ஏறி...

“இது, ரஞ்சி அம்மாவோட அம்மாவுக்குத் தச்சி வச்சது. எடுத்துக் குடுத்தாங்க. பணம் குடுத்திருக்காங்க. நான் அப்பால வெள்ள சீல எடுத்தாரேன்... போயி, நாஷ்தா கொண்டாரேன்” என்று போகிறாள்.

நைட்டி உடைமாறினாலும், இந்த உடை ஏதோ சர்க்கஸ் கோமாளி போல் தோன்றுகிறது, பின் முதுகை இழுத்து இழுத்து விட்டுக் கொள்கிறாள். சிறையில் இருப்பது போல் ஓர் உணர்வு. அறையின் ஒருபுறம் குளியலறை. சிறு இடைவெளி. பின் வாயில் கதவைத் திறக்கிறாள். காலியான பூச்சு வர்ணத்தகரங்களும், செடிகளில்லா மண் தொட்டிகள், தட்டுமுட்டுகள் அடங்கிய தாழ்வரை. சிறு மண் முற்றம். அதில் புல்லும் முள்ளும் வளர்ந்திருக்கின்றன. தலைமறையும் உயர்ந்த சுவர். அந்த எல்லைச்சுவரின் மீது கண்ணாடித் துண்டுகள் பதிக்கப்பட்டிருக்கின்றன.

... அசுவினி சொன்ன சொற்கள் அந்தக் கண்ணாடிச் சில்லுகளில் நிழலாடுகின்றன. அபலைப் பெண்களின் குரல்களை அவை வெளியே விடாமல் வாங்கிக் கொண்டிருக்கும்.


“இன்னாம்மா, கதவத் துறந்திட்டுக் குச்சி போவலாமான்னு பாக்குறியா?”

தூக்கிவாரிப் போட்டாற்போல் திரும்பிப் பார்க்கிறாள்.

கன்னிம்மாதான். அகலப்பொட்டு. பளீரென்று சிரிப்பு. கழுத்தில் பருமனான தாலிச்சரடு...

“ஒண்ணுமில்லம்மா, சும்மா உக்காந்தே பழக்கமில்லையா, கதவு இருக்கேன்னு துறந்து பாத்தே...”

“வாங்க, சுடசுட பொங்கல் கொணாந்திருக்கிறேன்...” அவள் திரும்பி வருகிறாள். தட்டில் பொங்கல், சட்னி... இப்படி ஒரு காலம்... சாப்பிடுமுன், “நீ ஒருவாய் சாப்பிடு கன்னிம்மா?”

“ஐய்யே, நான்லாம் இப்ப சாப்புடமாட்டே...”

“ஏன்...? நீ ஒருவாய் சாப்புட்டாத்தா நான் எடுப்பேன். நானே குடுக்கிறேன்... வாயத் தொற?”

அவள் சிரிப்பும் சந்தோசமுமாக மறுக்கிறாள்... “அட இன்னா நீ... யார்னாலும் பாத்தாங்கன்னு வச்சிக்க, என்னியக் கழுத்தப்புடிச்சி வெளிலே தள்ளி போலீசுக்கும் குடுத்திருவாங்க. வாசல்லியே போல்சு உக்காந்திருக்கு தெரியுமில்ல?”

“இல்ல கன்னியம்மா, தெரியாமதா கேக்குற, போலீசில புடிச்சிக் குடுக்கிற அளவுக்கு நீ என்ன குத்தம் செஞ்சே, ஏன் பயப்படுற? நாம் பாத்துக்கறேன். நீ பாதி நான் பாதி சாப்பிடுவம்...”அவள் உருகிப் போகிறாள்.

“போதும், போதும், நான் எங்காத்தாளயே பாக்குறேன், அவ என்னில் எப்படியோ பாடுபட்டு, முதல்ல எனக்கு ஊட்டுவா. அப்பன் குடிகாரன். அவன் அடிச்சே செத்தா. இன்னொருத்திய வூட்ல கொண்டாந்தா. அவ என்ன இஸ்கூலுக்குத் தொரத்திட்டு எல்லாம் தின்னுக்குவா. ஆப்பக்கட வச்சிருந்தா. இஸ்கூல்ல போடுற சோறுதா. அப்பன் லாரி மோதி செத்துப் போச்சி. நஷ்ட ஈடுன்னு ஒரு லட்சம் குடுத்தாங்க. அத்த வாங்கிட்டு அவ ஓடிட்டா. எங்க பக்கத்து வூட்ல ஒராளு இருந்தாரு, அவுரு கிரீ ஆசுபத்திரில வார்டு பாயா இருந்தாரு. அப்ப ரஞ்சி அம்மாக்கு ஆபுரேசனாகி ரொம்ப ஒடம்பு காயலாவா இருந்தாங்க. பாவம், அவங்களுக்கு வூட்டோட இருந்து கவனிச்சிக்கத்தா வந்தே. அப்பதா நா மனிசி ஆயிருந்தே... அப்பிடிதா இங்க வந்த...”

இதைச் சொல்லிவிட்டு, அவளை மார்போடு-தலையைச் சாய்த்து அணைத்துக் கொள்கிறாள்.

“தாயி, ஆயா, எப்பிடி வேணாலும் வச்சுக்க, நீங்க போறச்சே இந்த எடத்துலேந்து என்னியக் கூட்டிட்டுப் போயிடுங்க. உங்களுக்குக் கடசி வர ஒழச்சி, என் கண்ணா காப்பாத்துவே. இது அசிங்கம் புடிச்ச எடம்...”

கதவு தட்டப்படும் ஒசை...

சட்டென்று சுதாரித்துக் கண்ணைத் துடைத்துக் கொண்டு கதவுத் தாழைத் திறக்கிறாள்.

வந்தவள் சந்திரி... கன்னியம்மாளை உறுத்துப் பார்க்கிறாள்.

“நீயா? கதவைத் தாப்பா போட்டுக்கிட்டு என்ன ரகசியம்? நாஷ்தா குடுத்தாச்சில்ல? எல்லாம் எடுத்திட்டுப் போ?”

கல்பட்ட நாய்க்குட்டி போல சுருண்டாலும் சமாளிக்கிறாள்.

“இல்லீங்க டாக்டரம்மா, அவங்க டிரஸ் பண்ணிட்டாங்க. சாத்துன.”

“ஆமாமாம். எல்லாத்துக்கும் பதில் வச்சிருப்பியே! இவங்க பதினெட்டு வயசுப் பருவம். கதவ சாத்தினாளாம். போ, போ, அந்த வூட்ல இருக்கறவ, இங்க எதுக்கு வரணும்? இங்க குருவம்மா, லச்சுமி ஆரானும் பாத்துப்பாங்க, நீ வாயக்கய்யப் பொத்திட்டுப் போ!” இவள் சுருண்டு போகிறாள்.

சந்திரியா! நர்ஸ் வேலைக்குப் படித்த அந்த சந்திரியா! கனடாவிலோ அமெரிக்காவிலோ யாரையோ கொச்சிக்காரனை கல்யாணம் பண்ணிக் கொண்டாளாம்...

“யம்மா, இங்க வர வேலைக்காரிங்ககிட்ட நீ எதும் பேச்சு வச்சிக்காத. வயசு காலத்துல நீ தனியா இருக்கக் கூடாது. பெத்தவ பிச்சை எடுக்கிறா. இவன் ஏ.ஸி. காரில போறான்னு எதிர்க்கட்சிக்காரன் மேடை போட்டு அசிங்கமா பேசுறான். இப்பக்கூட, அடியாள் சுவாமியப் பாத்து ஒரு பூசை வைக்கத் தான் போயிட்டு வரேன். மாத்ருசாபம், பித்ருசாபம் இருக்குன்னு சொன்னாரு. அருள் வாக்கா வந்திட்டதேன்னு கவலையா இருக்கு...”

“உன் தம்பியாண்டானுக்கு இதிலெல்லாம் இப்ப ரொம்ப நம்பிக்கை வந்திட்டாப்பல போல.” இடக்காக அவள் உதிர்த்த சொற்கள் குத்திவிடவில்லை.

“ஆமா, எல்லாரும் எப்பவும் ஒரே மாதிரி இருக்காங்களா? காலத்துக் கேத்த மாதிரி மாற வேண்டியிருக்கு. உன் காலத்துல இருந்த காங்கிரசே இன்னிக்குப் பொய் பித்தலாட்டத்திலும், சூதிலும் அடுத்தவங்க காலை வாரி விடுறதிலும் தான் புழச்சிருக்கு. அன்னிக்கு ராட்டை நூத்திங்க. இப்ப யாரு செய்யிறாங்க? கூலிக்கு மாரடிக்குற ஆளுகதா-நீராரம் சாப்பிட்ட சேரி ஆளுவ, ரசனா, கோலா, பெப்சி கேக்கு றானுவ. வூட்டு வேலைக்கு வரவ, கேபிள் டி.வி. வாசிங்மெசின் இருக்கான்னு கேக்குறாளுவ. கிராமத்துல, ஒரு நேரக்கஞ்சிக்கு மாடா உழச்சவனுகள, நம்பிக்கைன்னு தூக்கி வச்சிது தம்பி. அவனுவ நம்ம சோத்தையே தின்னுப்பிட்டு, நமக்கெதிரா கட்சி மாறி கொடி பிடிக்கிறானுவ...”

இவள் கையைப் பற்றி நிறுத்துகிறாள்.

“சந்திரி, இந்த வெவகாரம் கேட்க எனக்குத் தெம்புமில்ல, திராணியுமில்ல. நான் என்னிக்குமே யாரும் கெட்டுப் போகணும் தும்பப்படணும்னு நெனக்கலம்மா. இப்பவும் எல்லாரும் நல்லா இருக்கணும்னு தான் நினைக்கிற. பித்ருசாபம், மாத்ருசாபம்னு ஏன் உறுத்தணும்?...அவங்கவுங்க நெஞ்சைத் தொட்டுப் பாத்துத் திருந்தனும். தப்புத்தப்பாப் பண்ணி ஒரு தப்ப மூட முடியாது. இந்தத் தேசமே, சனங்களே உங்க அரசியலால பாழாயிட்டிருக்கு தாயி! உன்னைக் கையெடுத்துக் கும்பிடாத குறையா கேட்டுக்கிடறேன். எனக்கு இந்த மாளிகை வாசம் வோனாம். நான் போயிடறேன். கேக்கிறதெல்லாம் ஒரு வெள்ளத்துணிச் சீல. வெளில எறங்கினா இது ஒட்டாம நழுவிடுமோன்னு பயமா இருக்கு...”

கண்ணீர் மல்குகிறது.

“இத பாரு, உனக்கு இதுதான் வீடு. நீ ஒரு பத்து பைசா தேடி, புள்ளைக்கு நல்லது பொல்லாது பண்ணல. அவனே தலைதுாக்கி முன்னுக்கு வந்தன். நீ எதுக்கு ஆரு சொத்தையோ, ஆரு வச்சதையோ பாம்பு மாதரி காக்கணும்? அத்தனை அக்கரை உள்ளவங்க, அந்த மக புருசன், புள்ள. அவுக தாயாதி பங்காளியக் கூட்டு வரட்டும், என்னமும் செய்யட்டும்? நீ அங்க அட்டையா புடிச்சிட்டுகிறதுக்கு பராங்குசம் மட்டுமல்ல- வேற எல்லாருமே என்ன சொல்றாங்க தெரியுமா? அவங்களல்லாம் வரவுடாதபடி நீயே செய்திட்டியாம். எனக்கே நாக்கப் புடுங்கிட்டுச் சாவலாம் போல இருந்திச்சி. “பெரியவரு, அந்தப் பொம்புளய வச்சிட்டி ருந்தாரு- அரச பொரசலா சரோ அம்மாக்குத் தெரியும். மக செத்ததும் அதா செத்திட்டாங்க. இப்ப, வூட்ட எம் பேருல எழுதி வச்சிருக்காங்க. யாரும் வரமுடியாதுன்னு சொல்றதுன்னு... சொல்றாங்க. இதெல்லாம் இன்னிக்கு அரசியல். கட்சி தலைவரா கவுரவமா, எம்.பியா இருக்கவருக்கு எத்தினி கேவலம்?” இவளுக்கு உடலே பற்றி எரிகிறது சீதை அக்கினியில் எரிந்த போது இப்படி இருந்ததா? அடிபாவி? நீ என் உதிரத்தில் ஜனித்தவளா?

பளார் பளாரென்று அவள் கன்னங்களிலும் முகத்திலும் அறைகிறாள். கை எரிகிறது.

சந்திரி விக்கித்துப் போகிறாள்.

“ஏண்டி, எலும்பில்லா நாக்குன்னா, எது வேணாலும் யாரை வேணுன்னாலும் பேசுமா? நீ நர்சு வேலைக்குப் படிச்சவடீ? ஆம்புள பொம்புளன்னு பேதம் இல்லாம எல்லாரையும் தொட்டே- அதனால உனுக்கு அத்தினி பேரும் தொடுப்புன்னு ஆயிடுமா? எந்தப் பன்னி சன்மண்டி இதைச் சொல்லிச்சு? அத்தத் தூக்கிட்டு வந்து எம்மூஞ்சில அவுத்துக் கொட்டுற? நா இந்த நிமிசமே இங்கேந்து போயிடுவ. அன்னைக்கு நான் வுழுந்தா, அப்படியே சாவட்டும்னு வுடவேண்டியது தான?... நாக்கு அழுவணும்னு நா சொல்ல மாட்டே. அன்னைக்கு, அந்த மனிசன்மேல, வுழுந்து அடிச்சி சட்டையக் கிழிச்சி காரை நொறுக்கி அவுமானம் பண்ணினானே, உன் தம்பி பெரி... அரசியல் தலவன்! அப்போ, இளம்புள்ளைங்க. கேசுகீசு ஒண்ணும் வாணாம், வுட்டுடுங்கன்னு போலீசு இன்ஸ்பெக்டர்கிட்ட சொன்னவருடி அந்தப் பெரி...மனிசர்! அவங்கல்லாம் தெய்வம். அந்தப் பத்தினி பேரில உன் விசத்தகக்குற. பொம்புளக்கிப் பொம்புள சேத்தவாரி அடிச்சிக்குதறுற சாதியில்லடி நாங்க! அப்புடி ஆகக்கூடாது"ன்னு... கண்கள் கலங்கிக் குரல் தழுதழுக்கிறது.

“அந்தப் புண், கடசீ வரை ஆறல, எந்தப் பொம்புளயின்னாலும் அவளைத் தொட்டுக் குலைக்கிறது, கல்லு கட்டி சைகிள் செயின் சோடா பாட்டில் கத்திகுத்தெல்லாந்தான் நீங்க ஆரம்பிச்சிவச்ச கட்சிக் கலாசாரம். அதான் இன்னிக்கு இந்தச் சீரழிவுக்கு எல்லாரையும் கொண்டாந்திருக்கு. ஒரு கட்சிக்கும் ஒரு கொடிக்கும் இன்னைக்கு அந்த சத்தியம் இல்ல.”

இந்தச் சீலையே நெஞ்சை அறுக்குது.

இவளுடைய பொங்கெழுச்சி, புயல்போல் வந்த சீற்றம், அவளைக் கட்டிப் போட்டாற்போல் பிரமிக்க வைக்கிறது

அப்போது, எங்கிருந்தோ குரல்கள், ஐயோ, ஐயோ என்ற சோகக் குரல்கள் எதிரொலிக்கின்றன. சந்திரி சட்டென்று கதவைத் திறந்து கொண்டு விரைகிறாள்.

அவளுக்கும் புரியவில்லை. மெள்ளக் கதவைத் திறந்து கொண்டு ஒழுங்கையில் நிற்கிறாள்.

ஒரு பணியாளன் வருகிறான். கண்ணைக் கசக்கிக் கொண்டு அழுகுரலில், “அய்யா, தலைவர் அய்யா, மாரடைப்புல பூட்டாரு...” என்று செய்தி தெரிவிக்கிறான்.

அவள் புருசன் இறந்த போது, அவளைச் சுற்றி யாரும் அடித்துக் கொண்டு அழவில்லை. குருகுலமே உட்கார்ந்து, துதிப்பாடல்களைப் பாடியது. பெரிய பெரிய ஆட்களெல்லாம் வந்தார்கள். அவன் திருட்டுத்தனமாகக் குடித்தான். போலீசு பிடித்துவிடும். ஆனால் ஜாமீன் வழக்கு இல்லாமலே, தண்டனை கொடுத்து விடுவிப்பார்கள். கண்கொத்திப்பாம்பு போல் உன்னைக் கவனிக்க வேண்டியிருக்கப்பா, எங்கே கிடைக்குது, சொல்லு? என்பார் அய்யா. ஒருநாள் போதையில் வரும்போதுதான் விழுந்து கல்லில் அடிபட்டு மாண்டான். ஆனால் அவன் அப்போதைய இலட்சியப்பாதையில் ஒரு முள்ளாக நெருடினான் என்று வசை பாடவில்லை. மரியாதை செய்தார்கள். இந்தத் தோட்டம் அவன் உழைப்பு; படைப்பு. தாயம்மா, இத்தனை மரங்களும், அவன்பேர் சொல்லும் குழந்தைகள் என்பார். அவள் பொட்டை அழிக்கவில்லை. இகழவில்லை; வண்ணச்சேலையை உரிந்து வெள்ளை வழங்கவில்லை. துணையை இழந்தவளுக்குக் குழந்தைகள்தாம் ஆதரவு என்று வலியுறுத்தினார்கள்.

இப்போதே, அவள் பிடித்துவைத்த களிமண்ணாக அமர்ந்திருக்கையில் பேர் பேராக வந்து, யார் யாரோ முக மறியாதவர்களெல்லாம் வந்து அடித்துக் கொண்டு அழுகிறார்கள்.

“இத்தை எதுக்குடி மரகதம் கூட்டியாந்தே?... கொள்ளி... கொள்ளி... கோட்டான், கழுவு போல உக்காந்திருக்கு. அப்பலேவுடியா ஆசுபத்திரிக்குக் கொண்டுட்டுப் போனப்பகூட மவராசன் புழச்சி வந்து, எல்லாரையும் பாத்து விசாரிச்சாரு. அத்தினி பேருக்கும் சீல துணி வாங்கிக் குடுத்தாங்க. இது கரிக்கால வச்சதும், ஒண்ணுமே இல்லாம சிரிச்சிட்டுப் பறந்து போன ஆளு, திடீர்னு மார்வலிக்கிதுன்னு சொன்னவரு ஆசுபத்திரிக்கு இட்டுப் போகுமுன்ன உசிருபோகுமா? பாவி, பாவி, மூதேவி, சண்டாளி, முதல்ல நீ செத்துத் தொலையக் கூடாதா? முழிச்சிக்கிட்டுப் பாக்குது பாரு? பெத்தபையங்கிட்டக் கொள்ளி வாங்கிட்டுப் போவணும்னு இருக்காதா? புருசனை முழுங்கினா. பெத்த பொண்ணு, மருமவன், அல்லாரையும் வாயில போட்டுக்கிட்டா. ஒண்டின எடத்திலண்ணாலும் ஆரவுட்டா?... பிசாசு... துக்கரி...”

செவிகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றி மாரடிக்கிறார்கள். ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது?

கண்கள் எரிகின்றன-

‘முருகா! என் மீது உனக்குக் கருணை இல்லையா? ஏனிப்படி வாட்டி வதைக்கிறாய்?’

அலையடித்து ஓய்ந்து இருள் வருகிறது, நேரம் என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. அவளைப் பொறுத்த வரையில் ‘காலமே’ நின்று போகிறது.

உறக்கமோ, மயக்கமோ, நினைவு மறப்பது, முருகா, உன் கருணை....

இருள் படலங்கள். கரைகின்றன.

உதயக்கதிர் போல் கன்னியம்மாவின் குரல் செவிகளில் விழுகிறது.

“ஆயா... ஆயா, நான் கன்னிம்மா...”


ஆ...? கன்னிம்மா...”

அவள் கையில் ஒரு தம்ளர் இருக்கிறது.

“வாங்க. ஆயா, மூஞ்சி கழுவிகினு இந்தக் காபிய குடியுங்க. உங்களுக்கூடத் தெம்பு இருக்காது. பிசாசுங்க, பிசாசுங்க, உங்கள என்ன கோரமா சொல்லுதுங்க? பொறம்போக்கு... வாங்க...” அவளை அழைத்து முகம் கழுவ, நீராடச் செய்கிறாள். ஒரு பூப்போட்ட வாயில் சீலை கொண்டு வந்திருக்கிறாள்.

“இது என் சீலை. நீ உடுத்திக்க ஆயா...” கட்டித் தழுவி முத்தமிடுகிறாள்.

“அசுவினி மேடம் கிட்டச் சொல்லிருக்கிறேன். உனக்குச் சீல வாங்கி எப்படீன்னாலும் தந்திருவாங்க. நாம போயிரலாம். நாளைக்கி...”


“நாளைக்கி வேணாம். இப்பவே போகலாம் கண்ணு. என்ன எப்டீன்னாலும், டேசன்ல கொண்டு வுட்டுடு... அது போதும்.”

அவள் குனிந்து மெதுவான குரலில், “நீ உம் புள்ளயப்பாக்க வோணாமா? கண்ணாடிப் பொட்டில ஐஸ் வச்சி, ஆகாசத்தில பறந்து வருது. சனமோ சனம், மாலையும் பூவுமா நிக்குதுங்க. டெல்லிலேந்து அமைச்சர் பெரியவங்கல்லாம் வாராங்க. முதலமைச்சர் வருவாரு. எல்லாக் கட்சித் தலவருங்களும் வராங்க. டி.வி. காமிராவா வந்திருக்கு. அதெல்லாம் பாக்க வாணாமா?...”

“எனக்கு ஒண்ணும் பாக்க வாணாம் கன்னிம்மா. இந்த எடத்த வுட்டு எப்பிடின்னாலும் வெளில கொண்டு போ. அவங்க வேற அம்மான்னு இங்க வந்து என்னப் பாக்க, போட்டோ புடிக்க வாணாம்....”

“சரி, இந்த காபியக் குடிச்சிக்க, நா வாரேன்...”

காபியைப் பருகுகிறாள்.

“நீ யார் பெற்ற மகளோ? இப்ப நீதான் எனக்கு மகள் மகன், அப்பன் அம்மை, எல்லாம் கண்ணு?...”

“அழுவாத, அழுவாத ஆயா, அநாதைக்கு அநாதை துணை. நா உன்னோட வருவேன். எந்நேரமும் இந்தப் புள்ளீங்க சீண்டல்; உனக்குக் குருமா சோறு கொண்டாந்திச்சே, அந்தக் கசுமாலத்துக்கு பெரிசு என்னக் கட்டி வச்சித் தாலிபோட வச்சிருக்கு. மூணுவாட்டி இந்தச் சந்திரி அம்மாவே மாத்திரை குடுத்துக் கலச்சா, பாவி. பெறகுதா தாலி- நீ வா, அசுவினிமேடம் ரொம்ப நல்லவங்க. பெரியம்மா. ரஞ்சியம்மாவும் நல்லவங்கதா. ஆனா, இவுங்கல்லாம் விசம். எப்டீன்னாலும் போயிடுவம்...”

வெளி உலகெல்லாம் அலை ஓய்ந்து, துடிப்புகள் மங்கிய இருள் நேரத்தில், ஒரு போர்வையைப் போத்தி அவளைக் கன்னியம்மா எப்படியோ ஒழுங்கை, சந்து, என்று கூட்டிச் செல்கிறாள். பின்னே ஒரு சிறு திட்டி வாயில். கதவு திறந்ததும் ஒரு வீதி-அரவம் அடங்கிய தெரு. அசுவினி ஓர் ஆட்டோவுடன் நிற்கிறாள். அவள் கையில் ஒரு பை இருக்கிறது.

‘கன்னிம்மா, பத்திரம்.... நா சொன்னதெல்லாம் நினப்பிருக்கா?...”

“சரி மேடம். பாத்துக்க. பெரியசாமி, பத்திரமா கூட்டிட்டுப் போயி ஸ்டேசன்ல எறக்கிடுங்க!”

அவன் கையில் ரூபாய் நோட்டை வைக்கிறாள்.

அவர்கள் அந்த எல்லையை விட்டுச் செல்கிறார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=உத்தரகாண்டம்/29&oldid=1022841" இருந்து மீள்விக்கப்பட்டது