உத்தரகாண்டம்/9

விக்கிமூலம் இலிருந்து

9

காலை பத்தரை பதினோரு மணி இருக்கும். அவள் வீட்டின் வலப்பக்கம் படர்ந்து கிடந்த அவரைக் கொடிக்குக் குச்சிகள் நட்டு ஏற்றிவிட்டுக் கொண்டிருந்தாள். இன்னும் தை பிறக்கவில்லை. இது ஊன்றிய வித்தில் இருந்து வந்த கொடி அல்ல. ஏற்கனவே பந்தலில் அவரைபூக்கத் தொடங்கி இருந்தது... வாசலை ஒட்டி, கம்பி வேலி கட்டி இருக்கிறார்கள். முன்புறம் நேராக வீதிதான். ஆனால் எதிர்ச்சாரி யில் வீடுகள் இல்லை. ஆடுமாடு உள்ளே நுழையாதபடி கம்பி வேலி இருக்கிறது.

இவள் அங்கிருந்தே பார்க்கையில் கார் ஒன்று, வாசலில் வந்து நின்றது தெரிந்தது. ‘மண்ணாங்கட்டி’ ஓடி வந்து கம்பிவேலிக்கு அப்பால் நின்று அவளை அழைத்தான்.

கூழையான கூலிக்காரன். பெரிய சாலையில் உள்ள ரேசன் கடையில் மூட்டை சுமப்பவன். அவனுடைய பெயர் என்னவென்று யாருக்கும் தெரியாது ‘மண்ணாங்கட்டி’ என்ற பெயரில் அவன் சந்தோசமடைந்தது போலவே சிரிப்பான்.

“யம்மா? உம் மக வந்துகிறாரு!” அவள் டக்கென்று நிமிர்ந்தாள் “யாரு, யாரப்பா சொல்றீங்க?”

“ஆமாம்மா, தமிழ் புரவலர், இளவழுதி அய்யா... பிள்ள நிலாப் படம் போடு போடுன்னு போடுதல்ல? இவருதானே பாட்டு கதை வசனம் எல்லாம்?... வந்துகீறாரு...!”

அவளுக்குச் சொல்லத் தெரியாத ஒரு குழப்பம். வீட்டுப் பக்கம் போகலாமா, வேண்டாமா என்று நின்றாள். அவளைப் பொறுத்த மட்டும் புருசனால் வந்த புள்ளை குட்டி உறவுகள் இல்லாமலாகிவிட்டன. ஏனெனில், பஞ்சமி இந்தக் கலவரங்கள் நிகழ்ந்த போது மூன்றாவதாகக் கருப்பமாக இருந்தாள். முதல் இரண்டு தரம் கருவுற்று கலைந்து போனதால், மூன்றாவதாக அவள் கருவுற்ற போது, தாய் வீட்டுக்கே வரவில்லை. பாப்புவுக்குப் பெற்றோர் இல்லை. ஒரு அண்ணன் திருச்சியில் பாலக்கரையில் கடை வைத்திருந்தான். அவன் சம்சாரம் பெரியாசுபத்திரியின் உதவியாளராக இருந்தாள். இரண்டு குழந்தைகளுடன் வீட்டில் அவன் சின்னம்மாவும் இருந்தார்கள். அங்கே பிரசவத்துக்குப் போனாள்.

எட்டுமாசத்திலேயே நஞ்சுக்கொடி முதலில் வந்து, அவளும் பிழைக்கவில்லை, பிள்ளையும் பிழைக்கவில்லை. தந்தி வந்து, அவள் பதறப்பதறப் போனாள். பயனில்லை. நல்ல மருமகன். அதற்குப் பிறகு அவன் கல்யாணமும் செய்து கொள்ளவில்லை; இங்கு வரவும் இல்லை. குடி, சூது, கெட்ட வழக்கம் எதுவுமே கிடையாது. ராதாம்மா போன போதுகூட வந்தான். திருப்பராய்த்துறை ஆசிரமத்தில் வேலை செய்திட்டிருக்கேன்மா, அப்பப்ப அண்ணன் குழந்தைகளைப் பார்ப்பேன்... முந்தாநாதா, பேப்பருல செய்தி பார்த்தேன்... பொய்யா இருக்கக் கூடாதான்னு நினச்சேனே"ன்னு அழுதான். அப்போதே உடம்பு வத்தி, எதிலும் பிடிப்பில்லாதவனாக இருந்தான். காவேரி புதைமணலில் சிக்கி இறந்ததாக ஒரு கார்டு வந்தது. அப்போது அம்மா இருந்தார். சந்திரி ‘நர்ஸ்’ படிப்பு முடித்துவிட்டு, கொஞ்ச நாட்கள், ஒரு தனியார் மருத்துவமனையில் முந்நூறு ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தாள். பிறகு ஏதோ வாய்ப்பு வந்ததென்று அமெரிக்கா சென்றாள். எப்போதேனும் ஒரு கடிதம் வரும். அவள் திகைத்து நிற்கையில்.

அம்மாவே பின்புறமாகக் குரல் கொடுத்தாள். “தாயம்மா...?” அவள் தலையைத் தொங்க விட்டுக் கொண்டு சென்றாள்.

“மோகன் வந்திருக்கான், கலியாணம். சினிமாப்படக்காரர் பொண்ணாம். சந்தோச சமாசாரம் வா...!”

“அம்மா, நா அவனைப் பார்க்கவே பிரியப்படல...” மனசுக்குள் சொல்லத் தெரியாமல் வேதனை. ஆத்திரம், பொங்க அவளை அசையவிடாமல் தடுத்தன.

“அட, சீ! இதென்ன அசட்டுப் பிடிவாதம்? ஒரு நல்ல காரியம், பெத்தவங்க பெரியவங்களுக்குப் பத்திரிகை வச்சு, ஆசீர்வாதம் வாங்கணும்னு வந்திருக்கிறான், அய்யாவே சந்தோசப்படுறார் வா!”

அவள் போய் கூடத்தில் நின்றாள். அவன் நேராக அவள் காலில் வந்து விழுந்தான். இது போல், அய்யா, அம்மாவுக்கும் மாலைகள் கொடுத்துக் காலில் விழுந்திருப்பதாகத் தெரிந்தது. இவளுக்கு மாலை இல்லை.

“அம்மா, நீங்க எல்லாரும் கட்டாயம் வரனும், நீங்க தா மாப்புள வீட்டுக்காரங்க. இப்படி ஒரு சம்பந்தம் கிடைக்க நான் குடுத்து வச்சிருக்கணும்...” என்றார்.

சிவப்பாக, முன் வழுக்கை மின்ன, ஒரு நாமக்காரப் பெரியவர், கதர்சட்டை அணிந்து வந்திருந்தார். இவளைக் கண்டதும் கைகுவித்தார்.

“தாயம்மா தானே? நினைப்பிருக்கா? இந்தாத்துல பர்மாக்காராளுக்கெல்லாம் தங்க இடம் கொடுத்து அவாவாளுக்குச் சொந்த ஊருக்குப் போக உதவி செய்த போது... கிணற்றுத் தண்ணி இழுத்து, குஞ்சு குழந்தைகளுக்குத் துணி மணி வாங்கிக் குடுத்து...

“ஓ... தம்பி விஜயராகவனில்ல?” என்றாள் அவள் வியந்து. மனசுக்குள், அதற்குள் எப்படிக்கிழவனாய்ப் போனாய் என்ற கேள்வி முளைத்தது.

“ஆமா உங்கம்மா கைக்குழந்தையை எடுத்திட்டு செயிலுக்குப் போனாங்க. இப்ப எப்படி இருக்காங்க? நீங்க கல்யாணம் கட்டி நல்லாயிருக்கீங்கல்ல?”

“இருக்கேம்மா. காங்கிரஸ் தியாகத்துக்கு, மக்களுக்குன்னு இருந்த காலம் போயிடிச்சம்மா. வருங்கால சந்ததிக்கு கடனைத்தான் வைக்கப் போறோம்னு பெரியவர் ராஜாஜி சொல்றதுதான் பலிச்சிருக்கு. டம்பாச்சாரி திட்டங்கள். காந்திஜி எதெல்லாம் வாணாம்னு சொன்னாரோ, அதெல்லாம் நாட்டுல வந்திட்டது...” என்றார்.

“அய்யா, நீங்க இப்ப ஒதுங்கக் கூடாது. வரணும், பெரியவர் என்னை அதுக்காகவே இன்னிக்கு அனுப்பிச்சார். நாளைக்கு நரசிம்மன் சார் வருவார், உங்களைக் கூட்டிட்டுப் போக. இப்ப ஒதுங்குவது விவேகம்னு படலன்னு, அவர் சொன்னதை நான் சொல்லுகிறேன். சுதந்தரத்துக்கு முந்தி இருந்த காங்கிரசைக் கலைச்சிடணும்னு காந்திஜி சொன்னார். ஆனால் யார் கேட்டாங்க? அப்பாக்குப் பிறகு பொண்ணுன்னு ஆட்சி மாறிருக்கு... நீங்க ஒத்துக்கணும்...”

“என்னப்பா, மோகன்தாசு, நீ கல்யாணத்துக்குத்தானே கூப்பிட வந்திருக்கே, எப்ப கல்யாணம்?”

பெண்ணின் தந்தையாகத் தெரிந்த ஒருகடுக்கன்காரர், அவளைத் திருப்பிப் பார்த்து “வணக்கம்மா... பொன்னம்பலம், எம்பேரு. உங்க மகன், எழுதிய பிள்ளை நிலாம் படம் நாத்தான் எடுத்தேன். இங்கேயே ஜி.டி. ரோட்ல, வெற்றில ஓடுத. முதல் படமே பேரும் புகழும் சம்பாதிச்சிக் குடுத்திருக்கு. அண்ணா தலைமையில் பாராட்டு விழா வச்சிருக்கிறோம். இப்ப அய்யாகிட்ட ஒரு குடும்ப பாஸ் குடுத்திட்டுப் போறேன். அவசியம் வந்து பாக்கணும்...” அவள் குழம்பிப் போனாள். கல்யாணப் பத்திரிகையா, சினிமா பாஸா, அய்யாவைப் பாக்க வந்தது, தேர்தல் விசயமா?

“அய்யா அவசியம் வந்து பார்க்கணும்... தேர்தல் வருது. அது முடிஞ்சதும் தை பிறந்து கலியாணம்னு நினைச்சிட்டிருக்கிறோம். பெரியம்மா, இதான் பொண்ணு ஃபோட்டோ...”

பெரிய தோல்பையைத் திறந்து பெண்ணின் புகைப்படத்தை எடுத்து அவர் அய்யாவிடம் கொடுத்தார். அய்யா, அம்மாவிடம் கொடுக்க, “பொண்ணு, லட்சணமா இருக்கா. இந்தா, பாரு தாயம்மா...” என்று கொடுத்தாள்.

“இதில நான் சொல்ல என்னம்மா இருக்கு? நீங்க சொன்னா சரி...”

“பொண்ணுக்கு என்ன வயசு?...”

“இந்த மாசி வந்தா பதினெட்டு முடியிது... அதெல்லாம் சிக்கல் இல்ல. ஊரில பொம்புளப்புள்ளங்க ஸ்கூல் எட்டு முடியத்தானிருக்கு. அத முடிச்சிட்டா. நல்லா சமைப்பா, மனுசங்க குணம் அறிஞ்சு நடப்பா. நான் சொல்ல வேணாம் நீங்களே தெரிஞ்சிப்பீங்க...” என்றார் அவளைப் பார்த்து.

அம்மா அதற்குள் சமையலறைக்குள் காபி தயாரிக்கச் சென்றாள். அவள் உடனே அம்மாவை விடுவிக்கச் சமையலறைக்குச் சென்றாள்.

“நீ போய்ப் பேசிக்கொண்டிரு தாயம்மா, உறவுகள் விட்டுப் போகக்கூடாது. அரசியல் வேற, இது வேற. போம்மா...” என்று அம்மா வற்புறுத்தியும் அவள் கேட்கவில்லை. அவளே காபி தயாரித்துக் கொண்டு சென்றாள்.

பழத்தட்டுகளும் பூவிதழ்களும் ஒரு புதிய துவக்கத்துக்குக் கட்டியம் கூறினாற்போல் இருந்தது.

படத்துக்கான இலவச பாஸை அய்யா அம்மாவிடம் கொடுத்தார்.

“ராதா இருந்தால் போய்ப் பார்க்கலாம். அவளுக்குத் தான் மோகன் எழுதியதுன்னா, கொண்டாட்டமாகப் போகலாம்பா...” என்றார் அம்மா.

‘ஏன், நீயும் தாயம்மாவும் போய்ப் பார்த்துவிட்டு வாங்களேன்?”

“அய்யா, எனக்கொண்ணும் அதைப்பார்க்க வேண்டாம்!” என்றாள் அவள் நெஞ்சடைக்க. சினிமாவுக்கு அய்யா சென்ற நினைவே இல்லை. அம்மாவும் ராதா அம்மாவும் சென்றிருக்கிறார்கள். பத்மினி சிவாஜி நடித்த இராமாயணம் போனார்கள். அவளுக்குத் துவக்க முதலே சினிமாவில் ஈடுபாடு இல்லை. காங்கிரஸ் பொருட்காட்சி நடக்கும். அங்கே சென்றிருக்கிறார்கள். பஞ்சமியும் சந்திரியும் ராதாம்மாவும், மருதமுத்து, எல்லோருடனும் போயிருக்கிறார்கள். அங்கே காதிக்கடையில பராங்குசமும் சுப்பய்யாவும் மாறிமாறி வந்தவர்களிடம் உள்நாட்டுக் கைத்தொழில் பிரசாரம் செய்வார்கள். அய்யா மிகத் தீவிரமாக ஈடுபட்ட காலம். அங்கே நாடகம் நடக்கும். நவாப் இராஜ மாணிக்கத்தினை... ராமதாஸ் நாடகம் பார்த்திருக்கிறாள். எல்லாரும் சிறுபிள்ளைகள். நாடகம் முடிய ஒன்பது மணி ஆகும். கூட்டத்தோடு நடந்தே குருகுலம் வந்துவிடுவார்கள்... அங்கே அவர்கள் இருந்தபோது தான் அவ்வையார் படம் வந்தது. சுந்தராம்பாள் அம்மாள் குருகுல வித்யாலயா நிகழ்ச்சியில் வந்து பாடியிருக்கிறார்கள். வெள்ளைச் சேலை உடுத்து, வெள்ளை ரவிக்கை போட்டுக் கொண்டு வந்து எல்லோரிடமும் பேசினார்...

அந்த சினிமா பற்றி அப்போது, அவளுக்குத் தவறுதலான கருத்தே விழவில்லை.

தன் மகனைச் சுற்றியே அவள் செவியில் விழுந்த செய்திகள், அங்கு ஒழுக்கம் என்ற வரை முறைகளுக்கு இடமில்லை என்ற கறை அவள் உணர்வில் வெறுப்பூட்டிவிட்டது.

“இந்தாங்க, போஸ்ட் வந்திருக்கு....”

ரங்கன் ஒரு கார்டைக் கொண்டு வந்து பெஞ்சியில் போடுகிறான். ஈரச் சேலையை உலர்த்திக் கொண்டிருப்பவள் திரும்பிப் பார்க்கிறாள். வானம் மூட்டமாக இருக்கிறது.

“எனக்கா, போஸ்டு? எனக்காரு எழுதப் போறாங்க?”

ரங்கன் வெறும் சவடால்தான். படிக்க எழுதப் பவிசில்லை என்பது அவள் அனுமானம். அவளுக்கு சம்பு அம்மா எழுதப் படிக்கக் கற்பித்திருக்கிறாள். இந்தியும் ஆங்கிலமும் கூட, குருகுலக் கூடத்தில் அந்தக் காலத்தில் பிள்ளைகள் பயிலும்போது உடன் இருந்து நனைந்திருக்கிறாள். பேச எழுத வராது. எழுத்துப் புரியும். கறுப்பு மை தடவி, வந்திருக்கும் துக்கக் கடிதம்...

“சென்ற 28ந்தேதி வியாழக்கிழமை, இரவு பத்து மணிக்கு, எங்கள் தந்தையும், சின்னம்புலியூர் மிராசுதாரருமாகிய தெய்வ நாயகனாரின் புதல்வர் தியாகி, தண்டபாணி, அமர பதவியடைந்தார் என்று தெரிவித்துக் கொள்கிறோம். இப்படிக்கு, ராஜேசுவரி அம்மாள் மனைவி...”

மூன்று மகள்கள் - மருமகன்களின் பெயர்கள், மகன்களின் பெயர்கள் எல்லாம் எழுதியிருக்கிறார்கள். இரண்டு மாசம் முன்பு அங்கே வந்த இளைய பெண் மணிமேகலையின் புருசன் பெயரும், நந்தகுமார் என்று பதிவாகி இருக்கிறது. குடும்பப் பெருமை. கடமைகளைக் காற்றில் பறக்க விட்டவர்களை விலக்க முடியாத, ஊர், சமூகக் கட்டுப்பாடுகள், கவுரவங்கள்.

“இந்த ஆளை ஒவ்வொரு நாள் ராத்திரி கழுத்தைப் பிடித்து நெறித்து விட்டு, போலீசில் போயி சரணடைஞ்சிடலாம்னு வருது சின்னக்கா! இந்தப் பொண்ணு, ஆதரவில்லாம வந்திடிச்சே, இதுக்காக நான் உசிரோடிருக்கிறேன்...” என்றழுத குரல் நெஞ்சில் உயிர்க்கிறது. ஒரு வழியாக செத்துத் தொலைந்தான்...

ஒருவேளை, துபாயோ எங்கேயோ போயிருந்த மருமகன் வந்திருப்பானோ?

யார் கண்டார்கள்? ஒருவீடு... பெரிய வீடு... அதற்குப் பங்கு கேட்டு வெட்டுக்குத்துக்குக் கூடத் தயாராவார்கள்!

சட்டென்று, ஒரு நடை ஊருக்குப் போய்ப் பார்த்து விட்டு வரலாமா என்று ஆவல் எழும்புகிறது. இங்கே இவள் எதற்காக, எதைக் கட்டிக் காத்துக் கொண்டு இருக்க வேண்டும்?...

அவள் இந்த எல்லையை விட்டுப் போய் வெகுகாலம் ஆய்விட்டது. அம்மா இறந்தபின் அவள் எந்த இடத்துக்கும் நகரவில்லை. அய்யாவும் கூட, சொந்த பந்தம் என்று சென்று பழகிய தொடர்புகள் என்று மதுரை, சின்ன மங்கலம் போய் வந்திருக்கிறார். பொதுக் கூட்டங்கள், அரசியல் சார்ந்த நிகழ்ச்சிகளுக்குப் போனதில்லை. நட்பும் உறவும், தோழமையும் விட்டுவிடாமல் தாமரையிலைத் தண்ணீர்போல ஒட்டியும் விடாமல் வைத்துக் கொண்டிருந்தார். நிக்கொலஸ், சாயபு, பத்மாவதி அம்மா, எல்லாரும் வருவார்கள். பழைய கனவுகளை அந்தக்கால சந்தோசத்துடன் பேசுவார்கள். காந்தி சிந்தனை நடக்கும்.

நிறையப் புத்தகங்கள் வாங்குவார்; படிப்பார். ஆனால் அவரை அரசியலில் ஈடுபடப் பெரியவர்கள் வற்புறுத்தியும் ஈடுபடவில்லை. அவள் மகன் கல்யாணம் எத்தனை ஆரவாரத்துடன் நடந்தது?

அவன் சார்ந்திருந்த அரசியல் கட்சி ஆட்சியைப் பிடித்து விட்டதே? ராதாம்மா விக்ரமுடன் கல்யாணத்துக்கு வந்தாள்.

ராதாம்மா ஒரு கைத்தறிச் சேலை அணிந்து, தாலிக்கொடியும் இரண்டு வளையல்களும் அணிந்து எப்போதும் போல் வந்தாள். அம்மா கதர்ச்சேலை; அவளும் வெள்ளைச் சேலை.

மணமகளின் தந்தைக்குத் தெய்வநம்பிக்கை அதிகமாம். முதல் நாளே குல தெய்வக்கோயிலில் குடும்பத்துடன் சென்று, சடங்கு செய்து திருமணம் முடித்துவிட்டார்களாம். மாலை வரவேற்பு, மிகப் பெரிய திருமணமண்டபத்தில் நடந்தது. அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், வண்ண விளக்கு ஜோடனைகள், என்று மிக ஆடம்பரமாக இருந்தது. அய்யா, தாமே பெரியவர் இராஜாஜியைப் போய்ப் பார்த்தாலும், புதிய கட்சியை ஏற்றுக் கொண்டு அரசியலில் நுழையவில்லை. விலகியது விலகியதுதான். இவர்களைத் தூக்கி சிம்மாசனத்தில் வைத்த பெரியவரின் கட்சி இருந்த இடம் தெரியாமல் போனதாகச் சொன்னார்கள்.

இவர்கள் கல்யாண வரவேற்புக்குச் சென்ற போது, அந்த அரசியல் கட்சித் தலைவராகிய முதல்வரே, அய்யாவை கைபிடித்து வரவேற்றார். போட்டோ பிடித்தார்கள். அம்மா இரண்டு வெண்கலக் குத்து விளக்குகளைப் பரிசாக அளித்தார். பெண்ணைப் பெற்றவள் நல்ல மாதிரியாக இவளிடம் வந்து பேசினாள்.

“அம்மா, எங்க பொண்ணு, கிராமத்துல வளந்தது. நாங்க ரொம்ப ஆசாரம். இங்கே எழும்பூரில் ஒரு வீடு வாங்கியிருக்கு. அதுலதான் ரெண்டு பேரையும் தனிக்குடும்பம் வைக்கிறதா யோசனை. நீங்க வந்து கூட இருந்து, அவளுக்கு நல்லது பொல்லாதது எதுவும் சொல்லிக் குடுக்கணும்...”

ராதாம்மாதான் சூழலைக் கலகலப்பாக்கிப் பேசிக் கொண்டிருந்தாள். “சம்பந்திம்மா, இவங்க நல்லது சொல்லிக் குடுப்பாங்க. பொல்லாதது நிச்சயமாச் சொல்லிக் குடுக்க மாட்டாங்க...” என்று சிரித்தாள்.

“ஒரு பேச்சு வழக்குத்தாம்மா சொன்னேன். இது நல்லது, இது சரியில்லன்னு பிரிச்சறியத் தெரியாத பொண் ணும்மா. பொம்புள ஸ்கூல்லதா படிச்சா. இவுரு சினிமா லைன்ல எறங்கினதே தாத்தாக்கு சம்மதமில்ல. விவசாயந்தா பரம்பர பரம்பரையா. கட்சில சேர்ந்ததும், புதுசா இப்படி அகலக்கால் வச்சிருக்காங்க. முதமுதல்ல எடுத்த படம், நூறு நாள் தாண்டிடிச்சின்னதும், தொடர்ந்து இவங்க எலக்சன்ல செயிச்சதும், நல்ல படியா வந்திருக்கு. அந்தக் காலத்துல, எங்க மாமா, நாகபட்டனத்துல நாடகக்காரங்களக் கூப்டு வச்சிட்டு நாடகம் நடத்தி ஏகமாத் தோத்தாரு. நாடகக்காரங்க, சினிமாக்காரங்கன்னாலே குடும்பத்துக்கு ஒதவாதுன்னு நினச்சிட்டிருந்த குடும்பம்... ஏதோ பெரியவங்கல்லாம் பாத்து நடத்திருக்காங்க. எங்காலத்துல, ஒரு ‘உள் பாடி’ போடுறதுக்கு எங்க மாமியா, அப்படிப் பேசுவாங்க!... காலம் மாறிப்போச்சி...”

“நீங்க ஒண்னும் கவலப்படாதீங்க சம்பந்தி அம்மா, தாயம்மா போய் இருந்து, நல்லாக் கவனிச்சிப்பா...”

அவளுக்குத் துணுக்கென்றிருந்தது.

புதிய உறவு, புதிய தொடர்புகளா? இது சாத்தியப்படுமா? அவள் போய் அந்த வீட்டில்... எப்படி?

கல்யாணம் முடிந்ததும் அவர்கள் வீடு திரும்பிவிட்டார்கள். புது வீடு வாங்கி, சம்பிரதாயமாகக் குடும்பம் வைக்க அவள் மகனும், அவள் சம்பந்திகளும் அழைத்துச் செல்ல வந்தார்கள்.

“தாயம்மா, மாட்டேன்னு சொல்லாம போ! நீரடிச்சு நீர் விலகாது. அரசியல் வேற, மனித உறவு வேற. அரசியல்ல அப்பப்ப மாற்றம் வரலாம். வேற வேற வாழ்க்கை முறை வரலாம். மனித உறவுகள், மனித நேயம், அது மாறாமல் இருக்கணும்...”

தன்னுடைய இரண்டு வெள்ளைச்சீலைகளைப் பையில் வைத்துக் கொண்டு அவள் முதன் முதலாக அந்த நிழலை விட்டிறங்கினாள்; மகனுடன் சென்றாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=உத்தரகாண்டம்/9&oldid=1022818" இலிருந்து மீள்விக்கப்பட்டது