உயர் இரத்த அழுத்தமும் அக்யுபங்ஸர் சிகிச்சையும்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

ஆக்கர்: wikipedia:ta:எம். கே. முருகானந்தன்
காலம்: ஜூலை, 2007
valaiyetram

வலையேற்றம்: Natkeeran 15:03, 15 ஜூலை 2007 (UTC)


உயர் இரத்த அழுத்த நோய் இன்று உலகெங்கும் பல கோடிக்கணக்கான மக்களைப் பாதிக்கும் ஒரு முக்கிய நோயாகும். இதைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு

  • உணவில் உப்பைக் குறைப்பது,
  • எடையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவது,
  • தினசரி உடற்பயிற்சிகள் செய்வது

போன்ற வாழ்க்கைமுறை மாற்றங்களைக் கடைப்பிடிப்பதுடன் உயர் இரத்த அழுத்த நோய்க்கு எதிரான மருந்துகளையும் தினசரி உட்கொள்ள வேண்டும்.


இதே நேரம் இப்பொழுது அக்யுபங்ஸர் சிகிச்சையானது ஒரு முக்கிய மாற்று மருத்துவமாக மக்களிடையே உலகெங்கும் பிரபல்யமாகி வருகிறது.


இன்றைய நவீன வைத்தியத்துறையானது அக்யுபங்ஸர், சீனவைத்தியம், கீழைத்தேச வைத்தியம் போன்ற மாற்று வைத்தியத்துறைகளில் உள்ள பயனளிக்கக் கூடிய அம்சங்களை ஆய்வுகளின் ஆதாரத்துடன தன்னுள் உள்வாங்கப் பின்நிற்பதில்லை. இந்த வகையில் அக்யுபங்ஸர் சிகிச்சை முறையானது உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்குமா என்பதை அறிவதற்காக ஜேர்மனி ஏர்லன்ஜனில் உள்ள பல்கலைக்கழகத்தில் டாக்டர் பிராங் ஏ பிளச்ஸ்கம்ப் தலைமையில் ஓர் ஆய்வு நடாத்தப்பட்டது.


160 பேரைக் கொண்டு செய்யப்பட்ட ஆய்வு அது. இவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 30 நிமிடங்கள் வீதம் 6மாத காலத்திற்குள் 22 தடவைகள் அக்யுபங்ஸர் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை முடிவில் ஆவர்களது சுருக்கழுத்தமும், விரிவழுத்தமும் முறையே 5.4 மி.மி ஆலும் 3.0 மி.மி ஆலும்; குறைந்திருந்தன. இது குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும். லோசாட்டன் போன்ற மாத்திரையைத் தனியே கொடுக்கும்போது குறையும் மருத்துவ நடவடிக்கையுடன் இது ஒத்துப் போகக் கூடியது. எனவே சரியான முறையில் செய்யப்படும் அக்யுபங்ஸர் சிகிச்சை முறையானது உயர் இரத்த அழுத்த நோயைக் குறைக்கும் என்பது இந்த ஆய்வு மூலம் தெளிவாகத் தெரிந்தது.


ஆயினும் அக்யுபங்ஸர் சிகிச்சையை நிறுத்திய பின் மூன்று முதல் ஆறு மாதங்களில் அவர்களது இரத்த அழுத்தமானது மீண்டும் பழைய நிலைக்கு அதிகரித்திருந்தமை அவதானிக்கப்பட்டது. எனவே உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த வேண்டுமாயின் அக்யுபங்ஸர் சிகிச்சையை தொடர்ந்து செய்ய வேண்டும் என்பது தெளிவாகத் தெரிந்தது. இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் மாத்திரைகளையும் கூட தொடர்ந்து உபயோகிக்கத்தான் வேண்டும். மாத்திரைகளானால் தினமும் 2-3 மாத்திரைகளை வாயில் போட்டு நீரைக் குடிப்பதுடன் அலுவல் முடிந்துவிடும். அக்யுபங்ஸர் சிகிச்சையானால் வாரத்தில் இரண்டு தடவையேனும் சிகிச்சை நிலையம் செல்ல வேண்டும். அக்யுபங்ஸர் ஊசிகளைக் குத்திக் கொண்டு 20 நிமிடங்கள் வரை ஓரிடத்தில் உட்கார்ந்திருக்க வேண்டும். வுhழ்நாள் முழுவதும் இவ்வாறு செய்யவேண்டும். இன்றைய அவசர யுகத்தில் எத்தனை பேருக்கு இவை தொடர்ந்து சாத்தியமாகும் என்பதனையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.


அத்துடன் அக்யுபங்ஸர் சிகிச்சையானது குறைந்தளவு அல்லது நடுத்தர அளவு உயர் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களுக்கே பயனளிக்கும். மிக உயர்ந்த அளவு உயர் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களுக்கு பயன்படாது. இருதய நோயுள்ளவர்களுக்கும் இதனைச் செய்ய முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது. அக்யுபங்ஸர் சிகிச்சையில் எந்த வித பக்கவிளைவுகளும் கிடையாது என்பது மிக முக்கியமான நன்மையாகும். இருந்தபோதும் ஆய்வுக்கு உட்பட்ட 160பேரில் இருவர் மட்டும் ஊசி குத்துவது வலித்தது என்று கூறினார்கள்.


இதனால்தான் உயர் இரத்த அழுத்த நோய்க்கு ‘‘இது அற்புதமான சிகிச்சை என்றோ, மிகப் பெரும் நன்மையளிக்கும் சிகிச்சைமுறை என்றோ கூறமுடியாது. பிரஸைரைக் குறைப்பதில் இதற்கும் பங்கு இருக்கிறது’ என இந்த ஆய்வைச் செய்த டொக்டர் பிராங் ஏ பிளச்ஸ்கம்ப் கூறினார்.

ஆதாரங்கள்[தொகு]

  • Flachskampf FA, Gallasch J, Gefeller O, et al. Randomized trial of acupuncture to lower blood pressure. Circulation 2007; DOI: 10.1161/CIRCULATIONAHA.106.661140. Available at: http://www.circulationaha.org.