உரிமைப் பெண்/உள் நெருப்பு

விக்கிமூலம் இலிருந்து
(உரிமைப் பெண்/ உள் நெருப்பு இலிருந்து வழிமாற்றப்பட்டது)



உள் நெருப்பு

“சொங்கப்பனா அப்படிக் கோபித்துக்கொண்டான்? அவனுக்குக் கோபமே வாாதே!” என்று எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள். அவர்களால் அதை நம்பவே முடியவில்லை.

“வெறும் கோபம் மட்டுமா? பக்கத்திலிருந்தவர்கள் விலக்கி யிருக்காவிட்டால் பொன்னப்பனை அவன் கொன்றே இருப்பான்” என்று அந்தச் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் உரைத்தார்கள். அதைக் கேட்டுக் காட்டுப் பாளையம் என்ற அந்தக் கிராமமே திகைத்துப் போய் விட்டது.

சொங்கப்பனுக்குக் கோபமே வாாது; அவனைக் கேலி பண்ணலாம், வையலாம், வம்புச் சண்டைக்கு இழுக்கலாம்; என்ன செய்தாலும் அவனுக்குக் கோபம் வந்ததை யாருமே கண்டதில்லை. கோபம் வந்தால் அவன் முகம் எப்படியிருக்கும் என்று பார்க்கக்கூட வெகு பேர் ஆசைப்பட்டதுண்டு. ஆனால் அந்த ஆசை இது நாள் வரையிலும் பூர்த்தியாகவே இல்லை. சிறுவர்கள் அவன் காதைப் பிடித்து இழுப்பார்கள்; தொந்தி வயிற்றைத் தடவிப் பார்ப்பார்கள். அவனைச் சூழ்ந்துகொண்டு,

தொந்தி வயிற்றுச் சொங்கப்பா
சோற்றுப் பானை எங்கப்பா
குந்திக் கொண்டு அள்ளப்பா
குறையக் குறையத் தின்னப்பா

என்று அவன் தொந்தி வயிற்றையும் பெருந் தீனியையும் பரிகாசம் செய்து பாட்டுப் பாடுவார்கள். அவன்  கல்லுப் பிள்ளையார் மாதிரி ஒருவித உணர்ச்சியையும் வெளிப்படுத்தாது உட்கார்ந்திருப்பான். அவனுக்குக் கோபம் வராது.

“சொங்கப்பா, கல்யாணம் பண்ணிக்கிருயா? நான் வேணும்னா எங்காவது ஒரு நல்ல பொண்ணுப் பார்த்து உனக்கு ஏற்பாடு செய்கிறேன்” என்று சிலர் அவனைக் கேட்பார்கள். அப்படிக் கேட்டு அவனைப் பேச்சுக்கிழுப்பதிலே அவர்களுக்கு ஒரு தனி இன்பம். ஆனால் அந்தக் கேள்வியே காதில்விழாததுபோல அவன் அமர்ந்திருப்பான்.

நான்கைந்து தடவை வற்புறுத்திக் கேட்டால், “வாண்டாம்; நான் கல்யாணம் பண்ணிக்கமாட்டேன்” என்று பதில் வரும். சொங்கப்பன் முகத்திலே அப்பொழுதுகூட மாறுதல் எதுவும் விசேஷமாக உண்டாகாது. கொஞ்சம் சிரிப்பின் சாயல் லேசாகப் படரும். அவனுடைய மூளையிலே ஏதோ சிறிது கிளர்ச்சி ஏற்பட்டது போலத் தோன்றும். மறுகணத்திலே அதுவும் மறைந்துவிடும்.

அவனை ஒரு மசையன் என்று எல்லோரும் சொல்லுவார்கள். அப்படிப்பட்டவனுக்குப் பொன்னப்பன்மேல் அவ்வளவு பெரிய கோபம் வந்ததை அறிந்துதான் எல்லோரும் ஆச்சரியமும் திகைப்பும் அடைந்தார்கள்.

சொங்கப்பன் ஒரு அநாதை. குழங்தைப் பருவத்திலிருந்து அவன் காட்டுப்பாளையம் என்ற அந்த ஊரிலே தான் இருக்கிறான். ஆனால் அவனுடைய தாய் தந்தையர்கள் யாரென்று ஒருவருக்கும் தெரியாது. பஞ்சம் பிழைப்பதற்காக அந்த ஊருக்குச் சுமார் முப்பத்தைந்து வருஷங்களுக்கு முன்னால் வந்திருந்த யாரோ  அவனே அங்கேயே அநாதையாக விட்டுச் சென்றதாகச் சில முதியவர்கள் கூறுவார்கள். அதைப் பற்றி யாருக்கும் நிச்சயமாக ஒன்றும் தெரியாது. ஏழு வயதுச் சிறுவனாக இருந்த அவன் மேல் அந்த ஊர்ப் பெரிய பண்ணைக் காரரான முத்துசாமிக்கவுண்டர் இரக்கங் கொண்டார். தம் வீட்டிலேயே அவனுக்கு இடமளித்தார். நாளடைவில் சொங்கப்பன் அவருடைய பண்ணையிலே ஒரு நல்ல வேலையாளாகிவிட்டான். சிறுவனாக இருக்கும்போது மாடு மேய்க்கும் வேலையை அவனுக்குக் கொடுத்தார்கள். இப்பொழுது பண்ணையிலே அவன் செய்யாத வேலை கிடையாது.

சாப்பிடுவதில் போலவே வேலை செய்வதிலும் சொங்கப்பன் கெட்டிக்காரன், “நாலாள் வேலையை அவன் ஒருத்தனே செய்துவிடுவான்” என்று எல்லோரும் பேசிக்கொள்வார்கள்.

அவனுக்கு முத்துசாமிக்கவுண்டர் வீட்டிலே சோறு; பண்ணையிலே வேலை. நன்றாகச் சாப்பிடுவது, நன்றாக வேலை செய்வது—இதுதான் அவனுடைய தினசரி வாழ்க்கை. வேலையில்லாத சமயத்தில் எப்பொழுதாவது அவன் ஊர் மத்தியில் வேப்பமரத்தைச் சுற்றிக் கட்டியிருக்கும் மேடையிலே வந்து கொஞ்ச நேரம் உட்காருவான். அந்தச் சமயத்தில்தான் அவனை எல்லோரும் கேலி பண்ணுவது, சண்டைக்கிழுப்பது, வம்புக்கிழுப்பது, கல்யாணப் பேச்சுப் பேசுவது—எல்லாம்.

அவன் வாழ்ந்த இந்த நாற்பத்திரண்டு வருஷங்களில் ஒரு நாளாவது அவனுக்குக் கோபம் வந்ததை யாரும் கண்டதேயில்லை. அப்படியிருக்க இன்று அவன் திடீரென்று இவ்விதம் செய்ததுதான் யாருக்கும் விளங்கவில்லை. காட்டுப்பாளையத்து மக்கள் அனைவருக்கும் இது பெரிய அதிர்ச்சியை உண்டாக்கிவிட்டது. நேரிற் கண்டவர்கள் அப்படியே ஸ்தம்பித்துப் போனர்கள். காதில் கேட்டவர்கள், “ஆ அப்படியா? இத்தனை நாள் இல்லாமே இன்னைக்கு ஏன் அப்படி அவனுக்குக் கோபம் பொங்கிவிட்டது?” என்று அதிசயித்தார்கள்; பெண்கள் கன்னத்தில் கையை வைத்து மருண்டு விழித்தார்கள். சில கிழவிகள், “மசைக் கோபம் என்பது இதுதான். மசையனுக்குக் கோபம் வந்தால் அதை யாராலும் தணிக்க முடியாது” என்றார்கள்.

இவ்வாறு எல்லோரும் மலைத்துப் போகும்படியாக இன்று சொங்கப்பனுக்குக் கோபம் வந்துவிட்டது. அவனுடைய கோபத்திற்குள்ளான பொன்னப்பன் பல வருஷங்களாக அந்த ஊரிலேயே இருக்கவில்லை. இன்று காலையில்தான் ஊருக்கு வந்து சேர்ந்தான். அப்படியிருக்க அவன் மேல் சொங்கப்பனுக்கு அத்தனே பெரிய கோபம் உண்டானது மேலும் மலைப்பை அதிகரிக்கச் செய்தது.

இருபத்தைந்து வருஷங்களுக்கு முன்னால் காட்டுப் பாளையத்திலிருந்து கண்டிக்கு நாலைந்து பேர் ஒரே இரவில் யாரும் அறியாமல் புறப்பட்டுப் போய்விட்டார்கள். உள்ளூரில் கூலி கிடைப்பது அரிதாயிருந்தது. ஏதோ கிடைப்பதும் வயிற்றைக் கழுவுவதற்கே போதாமலிருந்தது. அதனால் பணம் சம்பாதிக்கவேண்டும், கல்யாணம் செய்துகொள்ளவேண்டும் என்று ஆசைப் பட்டவர்களுக்கு அந்த ஊர் லாயக்கில்லாமல் போய்விட்டது. கண்டிக்குப் போனால் ஐந்தாறு வருஷங்களில் ஏராளமாகச் சம்பாதித்துக்கொண்டு வந்துவிடலாம் என்று அவர்கள் நம்பிப் போனார்கள். அவர்களில் பொன்னப்பனும் ஒருவன்.

அவன் பல வருஷங்களுக்குப் பிறகு இன்று எதிர் பாராதவிதமாகத் திரும்பி வந்தான். தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்து மலேரியா ஜூரத்தால் பீடிக்கப்பட்டு மிகவும் மெலிந்திருத்தான். உடம்பு வெளுத்துத் துரும்பாக இருந்தது.

இனிமேலும் கண்டியில் இருந்தால் உயிருக்கே ஆபத்தாக முடியும் என்ற நிலையில் அவன் திரும்பி வந்திருக்கிறான்.

பொன்னப்பன் நல்ல வாயாடி. “இந்த வாயில்லாவிட்டால் உன்னை நாய் கூட மதிக்காது” என்று அவளுடைய அரட்டையைக் கேட்டவர்கள் சொல்லுவார்கள். பிற்பகல் சுமார் மூன்று மணியிருக்கும். பொன்னப்பன் கண்டியில் தனது வாழ்க்கையைப்பற்றி வேப்ப மரத்துக் கல்லுக்கட்டின் மேல் உட்கார்ந்துகொண்டு அங்கே சூழ்ந்திருந்த ஆடவர்களிடம் கயிறு திரித்துக்கொண்டிருந்தான். அந்தச் சமயத்தில் சொங்கப்பன் தற்செயலாக அங்கு வந்தான். அவனுக்குப் பொன்னப்பன் திரும்பி வந்த சேதி அதுவரையில் தெரியாது.

வந்தவனைப் பொன்னப்பன், “என்ன சொங்கப்பா, தொங்கி கிந்தி பலமாக இருக்குதே; என்னைத் தெரியுதா?” என்று கேலியாய்ச் சிரித்துக்கொண்டு கேட்டான். அவ்வளவுதான், சொங்கப்பன் ஒரே பாய்ச்சலாக அவன் மேல் பாய்ந்து அடி அடி என்று அடித்து நொறுக்கிவிட்டான். “கேலியா பண்றே? அதெல்லாம் இப்போ எங்  கிட்டே கடக்காது” என்ற வார்த்தைகள் அவன் வாயிலிருந்து வெடித்தன. சுற்றியிருந்தவர்கள் யாருமே அவனைத் தடுக்க முயலவில்லை. எல்லோரும் ஆச்சரியத்தால் அப்படியே மரம்போல் ஆகிவிட்டார்கள்.

கடைசியில் ஒன்றிரண்டு பேர் சமாளித்துக்கொண்டு சொங்கப்பனைப் பிடித்து விலக்கி விட்டார்கள். இன்னும் கொஞ்சநேரம் அவர்கள் குறுக்கிடாமலிருந்தால் பொன்னப்பன் உயிர் தப்புவதே அரிதாகியிருக்கும்.

சொங்கப்பனுடைய தொந்தியைப் பற்றி எத்தனையோ குத்தலான தமாஷ்களெல்லாம் நடந்திருக்கின்றன. அப் பொழுதெல்லாம் அவன் கோபித்ததே கிடையாது. அவ்வாறிருக்க இன்று திடீரென்று ஒரு சாதாரண வார்த்தைக்கு, அதுவும் இத்தனை வருஷங்களாக ஊரைவிட்டுச் சென்றிருந்த ஒருவன் கேட்டதற்கு அவ்வளவு கோபம் வருவானேன்? அதிலும் சொங்கப்பனும் பொன்னப்பனும் சிறுவயதில் ஒன்றாகவே மாடு மேய்த்துக்கொண்டிருப்பார்களாம். அப்படியிருக்க அவனுக்கு ஆளையே கொன்று விடுவதுபோலக் கோபம் வருவதற்குக் காரணம் என்ன ? எல்லோரும் மனத்திற்குள்ளேயே இக்கேள்விகளைக் கேட்டுக் கொண்டார்கள். ஆனால் ஒருவருக்காவது நேரில் அவனை அந்தச் சமயத்தில் கேட்கத் தைரியம் வரவில்லை.

சிலர் சமாதான வார்த்தைகளைச் சொல்லிச் சொங்கப்பனே அவ்விடத்திலிருந்து கூட்டிக்கொண்டு போய் விட்டார்கள்.

ஒன்றிரண்டு மணி நோம் சென்ற பிறகுதான் மக்கள் நடந்த சம்பவத்தைப் பற்றி மெதுவாக அவனிடம் கேட்க  ஆரம்பித்தார்கள். “சொங்கப்பா, என்ன உனக்கு அவ்வளவு பெரிய கோபம் வந்துவிட்டது ?” என்றார் ஒரு பெரியவர்.

பதில் இல்லை. பழையபடி மெளனப் பிள்ளையாாாகச் சொங்கப்பன் வீற்றிருக்கிறான்.

“அப்பா ! எல்லாரும் பயந்தே போனோம். இன்னும் சித்தே விட்டிருந்தா, ஆளையே தீர்த்திருப்பாய்; சொங்கப்பா, ஏன் அப்படிக் கோவிச்சுக்கிட்டே?” என்றார் ஒரு தாடிக்காார்.

“மறுபடியும் கோபம் வந்துவிடப் போகிறது; சும்மா இருங்கோ” என்றார் ஒரு குள்ளையர்.

“சே, சே, அப்படியெல்லாம் வாாது. இல்லையா சொங்கப்பா? ஏன் இன்னைக்கு அப்படிப் பண்ணினே? சொல்லு” என்றார் ஒரு நெட்டையர்.

பதில் பிறக்கலாயிற்று.

“என்னவோ அவனேப் பார்த்ததும் என்னை அறியாமலே கோபம் வந்துவிட்டது. அவனை அப்படியே கசக்கிப் போடலாம்னு ரோசம் வந்தது” என்றான் சொங்கப்பன்.

அவன் பதிலிலே பதற்றமோ கோபமோ இருக்க வில்லை. அதனால் எல்லோருக்கும் தைரியமும் உற்சாகமும் பிறந்துவிட்டன. அந்தக் குள்ளையருங்கூட அவனை மொய்த்துக்கொண்டு கேள்விமேல் கேள்வி தாராளமாகப் போட ஆரம்பித்தார்.

“ஆமாம்; அவன் உன்னை என்ன பண்ணினான் ? சும்மா கேலியாக ரெண்டு வார்த்தைதானே சொன்னான்?”  “அதென்னமோ, அவனே அடிக்க வேணும்னே இருந்தது எனக்கு.”

“அவன் கண்டியிலிருந்து இன்னேக்குத்தானே வந்தான் ?”

“அது மெய்தான். இருந்தாலும் அவனைப் பார்க்ததும் ஒரே கோபம் வந்துவிட்டது. ஒரே அடியில் அடிச் செறியலாம்னு மனசு கொதித்தது.”

“ஏன் அப்படி ?”

“அதென்னமோ எனக்கே தெரியவில்லை.”

“சின்ன வயசில் நீங்க ரெண்டு பேரும் சேர்ந்தே இருப்பீர்களே?”

“ஆமாம், நாங்க ரெண்டு பேருந்தான் சேர்ந்து மாடு மேய்ப்போம். அப்போ அவன் என்னைவிடப் பெரிய பையனாக யிருந்தான். சும்மா என்னை அடிப்பான். தினமும் வேணும்னே அடிக்கிறது, கேலி பண்ணறது, ஏமாத்தறது. இதுதான் அவனுக்கு வேலை.”

“சரி சரி, அதுக்குத்தான் இப்போ வட்டியும் முதலுமாகக் கொடுத்தியா? ஆளையே கொன்றிருப்பாயே விட்டிருந்தா?”

“அப்பா அந்தக் காலத்திலே நான் அவனிடத்திலே பட்ட வேதனை சொல்லவே முடியாது. அன்னைக்கு அவனைத் திருப்பி அடிக்க எனக்குப் பலமில்லை. பேசாமல் எல்லாக் கஷ்டத்தையும் பொறுத்துக் கொண்டேன். என் மனசுக்கு அடியிலே மாத்திரம் குமுறிக்கொண்டிருந்தது.”

“அந்த வருத்தத்தையெல்லாம் இதுவரையிலும் அடக்கி வைத்துக் கொண்டிருந்தாயா ?”  “இல்லை இல்லை. அதெல்லாம் எப்பவோ மறந்து போச்சு. இருந்தாலும் இன்னைக்கு அவனைப் பார்த்ததும் என்னை அறியாமலே திடீர்னு கோபம் அப்படி வந்து விட்டது.”

“இனிமேல் அவனேக் கண்டா மறுபடியும் அடிச்சுடாதே. பாவம், மெலிஞ்சு வந்து சேர்ந்திருக்கிறான்!”

“சே, இனிமேல் என்னத்துக்கு அடிக்கிறேன்? என்னமோ ஒரு தடவை ஏமாந்து போச்சு. இனிமேல் அவனைத் தொடமாட்டேன்.”

சொங்கப்பன் இவ்வாறு கூறியபோதிலும் இப்பொழுது அவனிடம் மக்கள் முன்போல அவ்வளவு தாராளமாகக் கேலி, தமாஷ் வைத்துக்கொள்ள விரும்பவில்லை. உள்ளுக்குள்ளே பயம். திடீரென்று எரிமலை போல் கிளம்பி விட்டால் என்ன செய்வதென்று சந்தேகம், ஆனால் அந்த எரிமலை பொன்னப்பன் மேல் சீறிப் பொங்கியதற்குப் பின் நிரந்தாமாக அணைந்துவிட்டது என்பது அவர்களுக்குத் தெரியாது.