உரிமைப் பெண்/தந்தை சொல்

விக்கிமூலம் இலிருந்து
(உரிமைப் பெண்/ தந்தை சொல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)



தந்தை சொல்

“காதலாவது மண்ணாங்கட்டியாவது? இதெல்லாம் சுத்த முட்டாள் தனம்” என்றார் ஒரு வழுக்கைத் தலையர்.

நாம் சொன்னால் யார் கேட்கிறார்கள்? இந்தக் காலத்துப் பையன்களுக்கு நம் பேச்சு ஏற்கிறதா என்ன?” என்று பதில் கொடுத்தார் ஒரு தொந்திக்காரர்.

“இந்தச் சினிமா வந்ததிலிருந்து பையன்களே கெட்டுக் குட்டிச்சுவராகப் போய்விட்டார்கள்” என்றார் வழுக்கைத் தலையர், தலையைத் தடவிக்கொண்டே.

“பையன்கள் மட்டுமா? பெண்களுந்தான்” என்று எதிரொலித்தார் மற்றவர்.

“காலங் கெட்டு எல்லாம் தலைகீழாய் நடக்கிறது” என்று பெருமூச்சுவிட்டார் முன்னவர்.

இரண்டு மனிதர்களும் காவிரி ஆற்றங்கரையிலே வெண்மணல் மேட்டிலே உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். இருவரும் எதிர்வீட்டுக்காரர்கள்; நீண்ட நாள் நண்பர்கள். மாலையிலே உலாவுவதற்காக இருவரும் சோடியாகப் புறப்படுவார்கள். காவிரியாற்றங்கரையில் கால் வலிக்கும்வரை நடந்துவிட்டுக் கடைசியாக அந்த மணல் மேட்டிலே வந்து உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பார்கள். அம் மணல்மேடு அவர்களுடைய குடும்ப ரகசியங்களையும் இன்ப துன்பங்களையும் தினமும் கேட்டிருக்கிறது. அவர்களுக்குள்ளே ஒளிவு மறைவு என்பது கிடையாது; தாராளமாக எல்லா விஷயங்களைப் பற்றியும் பேசுவார்கள்.  இருவருக்கும் ஆஸ்திகி உண்டு. ஆனால் சொந்தமாக அவர்கள் விவசாயம் செய்வதில்லை. நிலங்களை எல்லாம் குத்தகைக்கு விட்டு விட்டுச் சுகமாகக் காலங் கழித்துக் கொண்டிருக்கிறார்கள். நல்ல வருமானம் வருவதால் அவர்களுக்குக் குடும்ப நிர்வாக சம்பந்தமாக யாதொரு கவலையும் இல்லை.

கொடுமுடியைப்பற்றி அநேகமாகத் தமிழ்நாட்டார் அனைவருக்கும் தெரிந்திருக்கும். காவிரிக் கரையிலே அமைந்துள்ளது. அங்குத்தான் அவர்கள் இருவரும் தங்களுக்குப் பிதுசார்ச்சிதமாகக் கிடைத்த பழைய வீடுகளிலே வாழ்க்கை நடத்தி வந்தார்கள்.

முதலில் இந்தக் காதல் பேச்சை ஆரம்பித்தவருக்கு ஒரு மகனுண்டு. அவனுக்கு ஒரு நல்ல செல்வர் விட்டிலே பெண் பார்த்துக் கல்யாணம் செய்துவிட வேண்டு மென்பது அவருடைய ஆசை. ஆனால் மகன் அவருடைய எண்ணத்திற்கு இணங்கவில்லை. அவன் யாரோ தனக்கு விருப்பமான ஒரு பெண்ணை மணந்து கொள்ள வேண்டுமென்று சொல்லிக்கொண்டிருக்கிறான். தந்தை எவ்வளவு வற்புறுத்தியும் அவன் அவருடைய ஆசைக்கு இணங்க மறுத்துவிட்டான். அதனால்தான் அவர் மனமுடைந்து தம் நண்பரிடம் அதைப்பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்.

“நம் அந்தஸ்துக்குத் தக்கபடி நல்ல குடும்பத்திலே கல்யாணம் செய்யவேண்டாமா?” என்றார் அவர்.

“நகை நட்டு, சீர் சிறப்பெல்லாம் தாராளமாகச் செய்கிற வீடாகப் பார்த்துத்தான் கல்யாணத்திற்கு ஏற்பாடு செய்யவேணும்” என்றார் அவர் நண்பர்.  “இந்தக் காலத்திலே பணந்தான் பிரதானம்; பணமில்லாது போனால் நாய்கூட மதிக்காது” என்று வழுக்கைத் தலையர் தம் உள்ளக் கருத்தை வெளியிட்டார்.

“உலக அநுபவம் பணத்தை நாடுகிறது; இளமை காதலை நாடுகிறது” என்று இந்தச் சமயத்திலே யாரோ ஒருவர் தமக்குத் தாமே சொல்லிக்கொண்டார்.

நண்பர்கள் இருவரும் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தார்கள். அவர்களுக்குப் பக்கத்திலேயே மணல் பரப்பிலே ஒரு புது மனிதர் அமர்ந்திருந்தார். தங்கள் பேச்சிலேயே முழுகியிருந்தபடியால் இவர்கள் அவர் வந்ததைக் கவனிக்க வில்லை. அவரைப் பார்த்ததும் இவர்கள் தங்கள் பேச்சைச் சற்று நேரம் அப்படியே நிறுத்திக் கொண்டார்கள். அதையறிந்த புதியவர், நான் இங்கே இருப்பதால் உங்களுக்கு ஏதாவது இடைஞ்சலாக இருக்கிறதோ?” என்று கேட்டார்.

“அப்படி ஒன்றும் நாங்கள் ரகசியம் பேசவில்லை" என்றார் வழுக்கைத் தலையர்.

“நீங்கள் யோசிக்கிற மாதிரிதான் நானும் ஒருநாள் யோசித்துக் கொண்டிருந்தேன். நான் அன்றைக்குச் செய்த தீர்மானம் என் வாழ்க்கையையே கெடுத்து விட்டது” என்று அந்தப் பெரியவர் பெருமூச்சுவிட்டார். சுருக்கு விழுந்து உலர்ந்திருந்த அவர் முகத்தில் தீராத துன்பத்தின் சாயல் நன்கு படிந்திருந்தது. வெளுத்துப் போயிருந்த அவர் தலை ஊசிக்கட்டைப் புல் முளைத்த பாழுங்காடு போலத் தோன்றிற்று.

நண்பர்கள் இருவருக்கும் அவருடன் பேசி விஷயம் முழுவதையும் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டுமென்ற ஆசையுண்டாயிற்று.  “உங்கள் மகனும் சொல் பேச்சுக் கேட்காமல் இருந்தானா என்ன?” என்று கேட்டார் வழுக்கைத் தலையர்.

“என் பேச்சைக் கேட்டுத்தான் இந்தக் கதி நேர்ந்தது. தந்தை சொல்லைத் தட்டப்படாதென்று நினைப்பது கூடச் சில சமயங்களில் துன்பமாய் முடிகிறது” என்றார் புதியவர்.

“உங்கள் மகனுடைய வாழ்க்கையைப்ப்ற்றிக் கொஞ்சம் விவரமாய்ச் சொன்னால் இந்தச் சமயத்திலே மிகவும் அதுகூலமாக இருக்கும். என் சினேகிதர் தம் மகனுடைய கல்யாண விஷத்தைப்பற்றி நிச்சயமாக ஒருவித முடிவும் செய்ய இயலாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறார்” என்று தொந்திக்காார் கேட்டுக்கொண்டார்.

புதியவர் சிறிதும் தயக்கமில்லாமல் பேசலானார். மற்றவர்களிடம் தமது விருத்தாந்தத்தைச் சொல்லுவதனாலேயே அவருக்குச் சற்று ஆறுதல் கிடைத்ததுபோலும்.

என் மகன் ரங்கசாமியை மிகவும் நல்ல பிள்ளை என்று எல்லோரும் சொல்லுவார்கள்; தந்தை சொல்லைத் தட்டாதவனென்று புகழ்ந்து பேசுவார்கள். என் சொல்லுக்கு எவ்வளவு துாரம் அவன் கட்டுப் பட்டிருந்தான் என்பது மற்றவர்களுக்கு அதிகமாகத் தெரியாது. தனது வாழ்க்கையைவிட எனது வார்த்தையே பெரிதென்று அவன் மதித்திருந்தான் என்பது எனக்குத்தான் தெரியும்.

எனக்கு அவன் ஒரே மகன். அவனைச் சுற்றித் தான் எனது முதுமைப் பருவத்தின் இன்பம் முளைவிட்டுக் கொண்டிருந்தது. அவனுடைய பிற்கால வாழ்க்கைக்காக நான் எத்தனையோ மனக்கோட்டைகள் கட்டியிருந் கேன். அவையெல்லாம் ஒரே கணத்தில் இடிந்து போகுமென்று எதிர்பார்க்கவே இல்லை. என் மகன் என் பேச்சுக்கு மாறாக நடக்கமாட்டான்; நான் போட்ட திட்டப் படியே எதிர்காலம் உருவாகும் என்று நான் மமதை கொண்டிருந்தேன். இவ்வாறு கூறிவிட்டு உணர்ச்சி மிகுதியால் அவர் மெளனமாக வீற்றிருந்தார்.

நண்பர்களுக்கு முழு வரலாற்றையும் தெரிந்து கொள்ள வேண்டுமென்று ஆசை அதிகமாகிவிட்டது. “ரங்கசாமியைப்பற்றி விரிவாகச் சொல்லுங்கள்” என்று இருவரும் ஏகோபித்துக் கேட்டார்கள்.

அந்த மனிதர் மறுபடியும் தொடங்கினாா்.

எனக்குச் சொத்து அதிகம் இல்லை. இருந்தாலும் சிரமத்தைப் பாராமல் ரங்கசாமியைச் சென்னைக்கு அனுப்பிக் கல்லூரியில் படிக்க வைத்தேன். எப்படியோ கஷ்டப்பட்டு நான்கு வருஷம் படிக்க வைத்துவிட்டால் பின்னால் சுகப்படலாம் என்று நான் எண்ணியிருந்தேன். அவனும் கெட்டிக்காரனாதலால் சிறப்பாகத் தேர்ச்சியடைந்து அரசாங்க உபகாரச் சம்பளமும் பெற்று பி. ஏ. வகுப்பிற்கு வந்துவிட்டான். அதில் இரண்டாவது வருஷம் தொடங்கி மூன்று மாதங்களானதும் அவனுடைய கல்யாணப் பேச்சு ஆரம்பித்துவிட்டது.

என் சொந்த ஊருக்குப் பக்கத்திலேயே வேரறொரு சிற்றுார் இருக்கிறது. அங்கே நல்ல பூஸ்திதி படைத்த ஒருவர் வாழ்ந்து வருகிறார். அவருக்கு ஒரே மகள்தான் உண்டு. படித்த பையனாகப் பார்த்து அவளை மணம் செய்து வைக்கவேண்டுமென்று அவருக்கு ஆசை. எங்க  ளிலே படித்தவர்கள் மிக அருமை. அதனால் அவர் எனது சாதாரண நிலையையும் பொருட்படுத்தாது என் மகனுக்குப் பெண் கொடுக்க விரும்புவதாக ஒரு பந்துவின் மூலம் குறிப்பாகச் சொல்லியனுப்பினார். எனக்கு அவருடைய செல்வத்திலே இச்சை பிறந்துவிட்டது. எதிர்பாராமல் வலியக் கிடைக்கவிருக்கும் சீதேவியைத் தள்ள மனம் வருமா? அவர் மகளை என் மகனுக்கு மணம் செய்துகொண்டால் அவருடைய சொத்து முழுவதும் எங்களுடையதாகிவிடும். பெண்ணும் நல்ல அழகும் குணமும் உள்ளவள் என்று தெரிந்துகொண்டேன். ஆகையால் அந்த ஏற்பாட்டிற்கு உடன்பட்டேன். அது பற்றி என் மகனுக்கும் உடனே எழுதினேன். நான் எதிர்பார்த்தபடி அவன் அந்தக் கல்யாணத்திற்கு மகிழ்ச்சியோடு இணங்கவில்லை. கல்யாணத்திற்கு அவசரம் ஒன்றும் இல்லை யென்றும் ஒருவனுடைய வாழ்க்கையிலேயே கடைசிநாள்வரையிலும் பங்கெடுத்துக் கொள்ளுகிறவளைத் தேர்ந்தெடுப்பதில் நிதானம் வேண்டுமென்றும், பணத்தை நினைத்து முடிவு செய்யக்கூடாதென்றும் அவன் எனக்குக் கடிதம் எழுதினான். அன்று முதல் அவன் எழுதிய ஒவ்வொரு கடிதத்தையும் நான் என்னுடனேயே வைத்திருக்கிறேன். அவற்றை ஒவ்வொன்றாக உங்களுக்குப் பொருத்தமான இடத்தில் படித்துக் காண்பிக்கிறேன். நான் சொல்லுவதைவிட என் மகனுடைய உள்ளத்தை அக் கடிதங்கள் நன்றாக எடுத்துக் காட்டும்” என்று சொல்லி விட்டு அவர் தம் சட்டைப் பையில் நன்றாகக் கட்டிவைத்திருந்த ஒரு காகிதக் கட்டை எடுத்தார். அதிலிருந்து ஒரு கடிதத்தை ஜாக்கிரதையாகத் தேடி எடுத்து வாசிக்கலானார்.  'அன்புமிக்க தந்தை அவர்களுக்கு, எனது பணிவுள்ள வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன். தங்கள் நிருபம் கிடைத்து விஷயம் தெரிந்தேன். நான் இன்னும் எனது படிப்பைப் பூர்த்தி செய்யவில்லை. அதோடு எனக்கு வயது ஒன்றும் அதிகமாகிவிடவில்லை; இருபதுதான் நடக்கிறதென்பது தங்களுக்குத் தொிந்ததே. அதனால் இப்பொழுது கல்யாணத்தைப் பற்றி எண்ண வேண்டியதே இல்லை யென்று தோன்றுகிறது.

மேலும் கல்யாணம் என்பது ஒரு பெரிய காரியம். அவசரப்பட்டுத் தீர்மானம் செய்துவிட்டால் வாழ்க்கை முழுவதுமே வருந்தவேண்டி நேரலாம். தெய்வாதீனமாக ஆண் பெண் இருவருக்கும் திருப்தியாக முடிந்து விட்டால் நன்மைதான்; இல்லாவிட்டால் ஆயுள் முழுவதும் துன்பப்பட வேண்டிவரும். ஒரு தடவை செய்வதை மறுபடியும் மாற்றுவதென்பதும் இயலாது. அதனால் நிதானமாக ஆலோசனை செய்து திருமண விஷயத்தை முடிவு செய்யவேண்டும் என்று நான் கருதுகிறேன்.

மேலும் வாழ்க்கை இன்பத்திற்குப் பணம் பிரதானம் அல்ல. எளிய வாழ்க்கையிலும் மனமொத்திருந்தால் அதுவே இன்பம் கொடுக்கும். செல்வம் மிகுந்திருங்தாலும் கருத்தொருமித்து வாழாத வாழ்க்கை நரக வேதனை யாகிவிடும். இவையெல்லாம் தங்களுக்குத் தெரியாதவையல்ல. ஆதலால் இப்பொழுது கல்யாணத்தைப் பற்றி யாதொரு முடிவும் செய்யவேண்டாமென்று கேட்டுக் கொள்ளுகிறேன். தாங்கள் குறிப்பிடும் பெண் வீட்டார் உடனே உங்களுடைய அபிப்பிராயத்தைச் சொல்லவேண்டுமென்று கேட்பதானால் வேறு இடத்தில் ஏற்பாடு செய்து கொள்ளும்படி தயவுசெய்து தெரிவித்து விடுமாறு கேட்டுக்கொள்ளுகிறேன்.

தங்கள் அன்புள்ள மைந்தன்,
ரங்கசாமி.’


“இம்மாதிரிக் கடிதத்தை நான் எதிர்பார்க்கவே இல்லை. கடிதத்திலிருந்து அவன் உள்ளக் கருத்து முழுவதையும் நான் புரிந்து கொள்ளவில்லை. படிப்புப் பூர்த்தியான பிறகு ஏதாவது உத்தியோகம் தேடிக்கொண்டு பிறகு கல்யாணம் செய்து கொள்ள விரும்புகிறான் என்று தான் நான் நினைத்தேன். அதனால் உடனே வேறொரு கடிதம் எழுதினேன். இந்த மாதிரி சம்பந்தம் பின்னால் கிடைக்காதென்றும், படிப்பைப் பூர்த்தி செய்வதற்குக் கல்யாணம் எந்த விதத்திலும் இடைஞ்சலாக இருக்கா தென்றும் எழுதினேன். அந்தக் காலத்தில் ஒவ்வொரு மாதமும் ரங்கசாமிக்கு வேண்டிய பணம் அனுப்புவதற்குச் சிரமப்பட்டுக் கொண்டிருந்தேன். அதைக் குறித்தும் கடிதத்தில் தெளிவாக்கினேன். நான் படும் கஷ்டத்தைப் பற்றி நினைவுறுத்தினால் தடை சொல்லாமல் ஒத்துக்கொள்வான் என்பது எனது நம்பிக்கை. சில நாட்களில் அவனிடமிருந்து பதில் கிடைத்தது.”

இவ்வாறு சொல்லிவிட்டு மறுபடியும் அந்தக் கட்டில் தேடலானர். மகனிடமிருந்து வந்த இரண்டாவது கடிதத்தையும் எடுத்து நிதானமாகப் படித்தார்:

‘பிரியமுள்ள தந்தை அவர்களுக்கு,

தங்கள் அன்பு மைந்தன் ரங்கசாமி வணக்கத்துடன் எழுதிக்கொண்டது.

மறுபடியும் தாங்கள் கல்யாணத்தைப் பற்றி எழுதியிருக்கிறீர்கள். நான் இதுவரையிலும் தங்கள் வார்த்தைக்கு விரோதமாக நடந்து கொண்டதில்லை யென்றாலும் இது விஷயத்தில் மறுப்புச் சொல்லவேண்டி நேர்ந்திருக்கிறது. அதற்காக என்னை மன்னிக்கும்படி மன்றாடிக் கேட்டுக் கொள்ளுகிறேன்.  முன் காலக்திலே தமிழருடைய மண முறையே வேறு விதமாக இருந்தது. தான் காதலித்த பெண்ணையே ஒருவன் மணந்துகொண்டான். காதலைத் தவிர வேறு எதையும் அவன் கருதவில்லை. அதனால் அவனுடைய வாழ்க்கையானது இன்பம் நிறைந்திருந்தது. ஏழையினது குடிசையிலும் அன்பு நிறைந்திருந்ததால் இன்பம் நிறைந்திருந்தது. அம்மாதிரியான காதல் மணத்தையே நான் விரும்புகிறேன். ஒருவரை யொருவர் பார்த்தறியாத இருவரை வாழ்க்கைச் சகடத்தில் பிணைத்து ஒரு மனத்தோடு செல்லுமாறு ஏவுவது சரியான முறையல்லவென்பது நிச்சயம். தங்களுடைய ஆணைக்குட்பட்டு நான் மணம் செய்து கொள்ளலாம். ஆனால் ஆணைக்குட்பட்டு யாருடைய உள்ளமாவது அன்பு செய்யுமா என்பதை எண்ணிப் பாருங்கள். அன்பில்லாத வாழ்க்கையில் இன்பம் கிடைக்குமா?

தாங்கள் எனது இன்ப வாழ்க்கையைக் கருதியே இந்த ஏற்பாட்டைச் செய்ய முயலுகிறீர்கள் என்பது எனக்குக் தெரியும். செல்வனாகவும் சுகமாகவும் நான் இருக்க வேண்டுமென்று நீங்கள் ஆசைப்படுகிறீர்கள். இந்தக் கல்யாணத்தால் நான் செல்வனாகலாம்! ஆனால் சந்தோஷமாக நான் இருக்கவே முடியாது.

தங்கள் கடிதத்தில் கண்ட ஒரு விஷயந்தான் சதா என்னை வருத்துகிறது. எனக்காக நீங்கள் பெருங் கஷ்டப்படுகிறீர்கள். உங்கள் வாழ்க்கைக்கு அத்தியாவசியமானவைகளையும் நீங்கள் எனக்காகத் துறந்து விட்டீர்கள். உடல் நலிவு முதலியவற்றைக் கூடக் கவனியாது எனக்காக உழைக்கின்றீர்கள். என் தாய் உயிரோடிருந்தாலாவது தங்களுக்கு உதவியாக இருப்பாள்; தங்கள் வாழ்க்கையில் இன்பத்தை உண்டாக்க முயலுவாள். அவளும் இல்லாத நிலையில் தாங்கள் தனியாக நின்று படும் சிரமங்களை யெல்லாம் நான் நன்குணர்வேன். ஆனால் அவையெல்லாம் இன்னும் சில  மாதங்களில் தீர்ந்து போகுமென்று நான் உறுதி கூறுகிறேன்.

எனது கல்யாண விஷயமாக நான் ஒர் எண்ணம் வைத்திருக்கிறேன். அதைக் கோடை விடுமுறையின் போது தங்களுக்கு நேரில் தெரிவிக்கிறேன். இப்பொழுது அதைப்பற்றிய ஞாபகமே எனக்கில்லை. பி. ஏ. படிப்பைச் சிறந்த வெற்றியுடன் முடிக்க வேண்டுமென்பதே எனது சிந்தனையெல்லாம்.

தங்கள் அன்புள்ள மைந்தன்,
ரங்கசாமி.

“அவனுடைய கடிதத்தைப் படித்த பிறகும் எனது ஆசை மாறவில்லை. எப்படியும் நான் நினைத்தபடியே கல்யாணத்தை முடித்து விடவேண்டுமென்று தீர்மானித்தேன்.

“இந்தச் சமயத்திலே பெண்ணின் தகப்பனார் ஏதோ காரியமாகச் சென்னைக்குப் புறப்பட்டார். என்னையும் கூட வரும்படி அழைத்தார். நேரிலேயே மகனிடம் பேசி எல்லாம் முடிவு செய்யலாம் என்று அவர் எனக்கு யோசனை சொன்னார். கல்யாணப் பேச்சுத் தொடங்கியதிலிருந்து அவருடன் நான் அதிகம் பழகிக் கொண்டிருந்தேன். அதனால் அவர் சொல்லிய யோசனையை ஏற்றுக் கொண்டு சென்னைக்கு அவருடன் சென்றேன். ரங்கசாமிக்கு எனது விருப்பத்தைப் பல வகைகளில் எடுத்துக் கூறினேன். அவன் எனது பேச்சைத் தட்டுதற்கு வருங்தினானாயினும் எனது கருத்துக்கு இசையவே இல்லை.

“ஒரே சமயத்தில் விடாப் பிடியாக வற்புறுத்தக் கூடாது என்று நான் திரும்பி வந்துவிட்டேன். வந்த சில நாட்களுக்குப் பிறகு நான் அவனுக்கு ஒரு கடிதம் எழுதி  னேன். அதில் அவன் பலமுறை நான் கூறும் யோசனைக்கு உடன்படாதிருப்பதை எடுத்துக் காட்டியதோடு அதனால் எனக்கேற்பட்டுள்ள மன வருத்தத்தையும் வெளிப்படுத்தி யிருந்தேன்.

“அக் கடிதத்திற்கு ரங்கசாமி பல நாட்கள் பதில் எழுதவே இல்லை. எனது கடிதம் அவன் உள்ளத்தில் ஆழ்ந்து பதிந்து விட்டதென்று நான் மகிழ்ச்சியடைந்தேன். கொஞ்சம் மனம் மாறியிருக்கிற சமயத்திலேயே இணங்கச் செய்து விடவேண்டுமென்று மேலும் இரு நீண்ட கடிதம் வரைந்தேன். அதில் அவனிடம் எனக்குள்ள அன்பைப்பற்றி விரிவாக எழுதினேன். என் சொல்லுக்கு மீறி அவன் நடந்தால் என் அந்திய காலம் சந்தோஷமாக இருக்காது என்றும் எடுத்துக் காட்டினேன்.

"இதற்கு அவனிடமிருந்து பதில் வந்தது:

‘அன்பு நிறைந்த தந்தையவர்களுக்கு,

எனது பணிவான வணக்கம். தாங்கள் எழுதும் ஒவ்வொரு கடிதமும் என் உள்ளத்தைக் கலக்குகிறது. என்னுடைய நலத்திற்காகவே திட்டம் வகுக்கிறீர்கள் என்பது உண்மை. ஆனால் வாழ்க்கைத் துணையைத் தேடுகிற விஷயத்தில் நீங்கள் கொண்டுள்ள முறை சரியென்று எனக்குத் தோன்றவில்லை. எனக்குப் பிடித்த பெண்ணை நான் மணந்து கொண்டால்தான் இல்லறம் இன்பமாக நடக்கும். செல்வத்தால் மட்டும் ஒருவன் இன்பம் எய்திவிட முடியாது. எத்தனேயோ செல்வர்கள் வாழ்க்கையில் இன்பங்காணாமல் வாடுவதை நாம் பார்த்திருக்கிறோம்.

நான் பல தடவைகளில் தங்கள் வார்த்தையை ஏற்றுக் கொள்ளாமலிருப்பதற்காக என் மீது குறை கூறுகிறீர்கள். கல்யாண விஷயம் ஒன்று தவிர வேறு எதிலும்  தங்கள் விருப்பத்தை நான் தட்டியதில்லை. தங்கள் சொல்லுக்கு வேறு எதிலும் மாறு கூறியதாக எனக்கு ஞாபகம் இல்லை. இந்த ஒரு விஷயத்தில் மட்டும் எனது விருப்பம்போல் விட்டுவிட வேண்டுமென்று நான் மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். அப்படி விடுவதால் எனது வாழ்க்கை மட்டுமல்ல, தங்கள் வாழ்நாளும் இன்பமுடையதாக இருக்குமென்று நான் திண்ணமாக நம்புகிறேன்.

தங்கள் பணிவுள்ள மைந்தன்,
ரங்கசாமி.

“இந்தக் கடிதத்திலிருந்து அவன் என் சொல்லைக் தட்டுவதற்காகப் பெரிதும் மனம் வருந்துகிறான் என்று தெரிந்துகொண்டேன். அதனால் கல்யாணத்தை உறுதி செய்துகொண்டு முடிவாக எழுதிவிட்டால் அவன் எப்படியும் இணங்கி விடுவான் என்று தோன்றியது. பெண் வீட்டாருக்கு உறுதி கூறிவிட்டு அது விவரம் எழுதினால் அவன் என் வாக்கைக் காப்பாற்றுவான் என்று சூழ்ச்சி பண்ணினேன். இவ்வளவும் நான் என் மகனுடைய நன்மையை உத்தேசித்துத்தான் செய்தேன். அவனுக்குத் தீமையாக முடிகிற எதையும் நான் கனவிலும் கருதியிருக்கமாட்டேன். மண விஷயத்தைப்பற்றி முடிவு செய்ய இளம் வயதில் அநுபவம் போதாதென்றும் நான் நிச்சயமாக நம்பினேன். அதனால் என் சூழ்ச்சிப்படியே பெண்ணின் தந்தைக்கு உறுதி சொல்லிவிட்டு மைந்தனுக்கும் எழுதினேன்.

“எழுதிய மூன்றாம் நாள் காலையிலேயே நான் எதிர் பாராதவிதமாக ரங்கசாமி ஊருக்கு வந்தான். அப்பொழுது கிறிஸ்துமஸ் விடுமுறை யென்றாலும் அவன் ஊருக்கு வருவதாக முன்னால் தெரிவிக்க வில்லை.  “கல்யாண ஏற்பாட்டை நிறுத்த வேண்டுமென்று அவன் கெஞ்சிக் கேட்டுக்கொண்டான். அதோடு அவன் தன்னுடன் கல்லூரியில் படிக்கும் ஒரு பெண்ணைக் காதலிப்பதாகவும் அவளையே மணந்து கொள்வதாக வாக்களித் திருப்பதாகவும் கூறினான். எனக்கு அந்தச் செய்தி கலக்கத்தை உண்டாக்கிற்று. பக்கத்து ஊர்க்காரருடைய செல்வத்தின்மேல் விழுந்த ஆசையால் எனக்கு வேறெதுவும் சரியென்று படவில்லை. அதனால் காதலைப் பற்றி மிகவும் இழிவாகப் பேசினேன். எத்தனையோ பேர் காதலென்று மதிமயங்கிப் பின்னால் துன்பத்திற்குள்ளானதை யெல்லாம் எடுத்துக் காட்டினேன். மேல் நாடுகளிலே ஆணும் பெண்ணும் தாங்களே சம்பாதித்துக் கல்யாணம் செய்துகொண்டாலும் அங்கேதான் விவாகரத்துக்கள் அதிகமாக நடைபெறுகின்றன வென்றும் சொன்னேன்.

“இக்தனை கஷ்டப்பட்டு உன்னைப் படிக்க வைத்ததற்குப் பலன் இதுதான? என் விருப்பத்தை மீறி நீ எவளையாவது கல்யாணம் செய்து கொள்வதானால் நான் உன் முகத்திலேயே விழிக்கமாட்டேன்; உயிரை வேண்டுமானாலும் விட்டுவிடுவேனேயொழிய உன் விட்டில் காலெடுத்து வைக்கமாட்டேன். படாத பாடெல்லாம் பட்டுப் படிக்க வைத்த தகப்பனை அந்திய காலத்தில், அநாதையாக விட்டுவிட்டாய் என்ற பேச்சை நீ கேட்க வேண்டிய காலம் கட்டாயமாக வரப்போகிறது” என்று கடுமையாகப் பேசினேன்.

“அப்பா, நீங்கள் என்னிடம் இப்படிக் கோபமாகப் பேசலாமா? நான் ஒன்றும் அபசாரம் செய்துவிட வில்லையே!” என்று அவன் அழுத குரலில் சொன்னான்.  “நான் பெண் வீட்டாருக்கு உறுதி சொல்லியாய் விட்டது. நீ என் மகனாக இருந்தால் அதைக் காப்பாற்ற வேண்டும். இல்லாவிட்டால் என் முன்னால் நிற்க வேண்டாம்; எங்கேயோ போ” என்று பதற்றமாக மொழிந்தேன்.

“மகன் திகைத்துப் போய்விட்டான். அவனால் மேற்கொண்டு பேச முடியவில்லை. ஒரு நாள் கூட என் சொல்லைக் தட்டியறியாதவனுக்கு எப்படித்தான் பேச முடியும்? பேசாமல் தலையைக் குனிந்துகொண்டு நின்றான். நான் மேலும் மேலும் ஆத்திரத்தோடு வார்த்தை சொன்னேன்.

“அப்பா, எனக்கு ஒரு நான்கு நாள் அவகாசம் கொடுங்கள். அதன் பிறகு எல்லாம் முடிவு செய்து கொள்ளலாம் என்று இரங்கிய குரலில் கேட்டுக் கொண்டு ரங்கசாமி வெளியே சென்றான், அன்றும் மறுநாளும் அவன் சாப்பிடவே இல்லை. அது எனக்கு வருத்தமாகத்தானிருந்தது. இருந்தாலும் எல்லாம் சரிப்பட்டுப் போகுமென்று இருந்தேன். நீண்ட கடிதம் ஒன்று யாருக்கோ எழுதிவிட்டு அதற்குப் பதிலை எதிர் பார்த்திருந்தான். மூன்றாம் நாள் பதிலும் வந்துவிட்டது. அதில் என்ன எழுதியிருந்ததோ எனக்குத் தெரியாது. அதைக் கிழித்துத் தீயில் போட்டுவிட்டு ரங்கசாமி என்னிடம் வந்து, அப்பா, உங்கள் இஷ்டம்போல் கல்யாணத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள்” என்று சொல்லிவிட்டுப் போனான். அவன் கண்களிலே கண்ணீர் பிதுங்கிக் கொண்டிருந்தது. ஒரு கணம் என் உள்ளம் திடுக்கிட்டது. அவன் கண்ணீர் விடுவதை நான் கண்டதே இல்லை. கொஞ்ச நாளில் அந்த விசனம் தீர்ந்து போகும் என்று  கான் மனத்தைக் திடப்படுத்திக் கொண்டேன். கல்யாணத்தை அந்த விடுமுறையிலேயே வைத்து விட்டால் நல்லதென்று எனக்குப் பட்டது. சென்னைக்குப் போன பிறகு அவன் மனம் மாறிவிட்டால் என்ன செய்வதென்று எனக்குக் கவலை. பெண்ணின் தகப்பனாரிடம் என் எண்ணத்தைத் தெரிவிக்கவே அவரும் சந்தோஷமாகச் சம்மதித்து விட்டார். கல்யாணச் செலவையெல்லாம் அவரே ஏற்றுக் கொள்வதாகவும் கூறினார். பத்தாம் நாள் கல்யாணம் விமரிசையாக நடந்தேறியது.

கல்யாணம் ஆகி மூன்று நாள்தான் ரங்கசாமி ஊரில் தங்கியிருந்தான். அதற்குள் கல்லூரி திறந்துவிட்ட படியால் உடனே போகவேண்டுமென்று கூறினான். ஒரு வாரத்திற்காவது ரஜா வாங்கிக்கொள்ளுமாறு மாமனார் சொல்லியும் அவன் கேட்கவில்லை. மனைவியின் முகத்தைக் கூடச் சரியாகப் பார்த்தானோ இல்லையோ, புறப்பட்டுப் போய்விட்டான். படிப்பின் மேல் அக்கறையுள்ள பையனைத் தடுத்து நிறுத்த எனக்கு இஷ்டமில்லை. என் இஷ்டப் படியே கல்யாணம் முடிந்து விட்டதாகையால் மேலும் அவனைத் தடை செய்ய நான் எண்ணவில்லை.

“அவன் சென்ற சில நாட்களுக்குப் பிறகு பத்திரிகையிலே ஒரு துக்ககாமான செய்தி வெளியாயிற்று. நீங்க ளெல்லாம் அதைப் படித்திருக்கலாம். கல்லூரி மாணவி ஒருத்தி தற்கொலை செய்து கொண்டதாக அதில் காணப்பட்டது. மறுநாளே ரங்கசாமியிடமிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது” என்று சொல்லிவிட்டு மறுபடியும் அவர் காகிதக் கட்டைப் பிரித்தார். அவர் கை நடுங்கியது; முகம் இருண்டது.  விசனத்தோடு ஒரு கடிதத்தை எடுத்துப் படிக்கலானர்.

‘என் அன்புள்ள தங்தையே,

நான் தங்கள் கட்டளையைத் தட்டக் கூடாதென்று கல்யாணத்திற்கு இசைந்தேன். இசையுமுன் என் காதலிக்கு விஷயமெல்லாம் எழுதினேன். அவ்ள் நிலைமையை உணர்ந்து எனக்கு அநுமதி தந்துவிட்டதாகத் தான் பதில் எழுதினாள். நான் அவளுக்குக் கொடுத்திருந்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டியதில்லை யென்றும் குறிப்பிட்டிருந்தாள். ஆனால் கல்யாணம் செய்துகொண்டு வந்த என்னைக் காண, அவளுடைய துக்கம் கரை கடத்துவிட்டது. இனி உலகில் தனக்கு வேலை யில்லையென்று போய்விட்டாள். அவளுடைய சாவிற்கு நானே பொறுப்பாளி.அவளைத் தேடிக்கொண்டு போய் அவளிடம் மன்னிப்புப் பெறுவதைத் தவிர வேறு ஒன்றும் எனக்குத் தோன்றவில்லை. நீங்கள் விரும்பியபடி கல்யாணம் செய்து கொண்டுவிட்டேன். ஒரு விஷயத்தில்கூடத் தங்கள் பேச்சைத் தட்டவில்லை என்ற பேரும் சம்பாதித்துக் கொண்டேன்.

தந்தையே, நான் இனி என் காதலி சென்ற வழியே செல்லுகிறேன். முன்பின் அறியாத ஒர் இளம் பெண்ணை விதவையாக்கிவிட்டுப் போகிறேனே என்ற எண்ணம் என் உள்ளத்தைப் பாதிக்கின்றது; அந்தப் பெண்ணைப் பார்க்கும்போதெல்லாம் தாங்களும் உள்ளம் குலைவீர்களே என்றும் ஏங்குகிறேன். இருந்தாலும் நான் என் காதலிக்குச் செய்த குற்றம் மிகப் பெரியது. மற்றொருத்தியோடு வாழ்க்கை நடத்தி அக்குற்றத்தை இன்னும் பெரிதாக்க நான் ஒருப்பட மாட்டேன். தந்தையே, எனது வணக்கத்தை ஏற்றுக் கொள்ளுங்கள் போய்வருகிறேன். வணக்கம்.

தங்கள் அன்புள்ள மைந்தன்,
ரங்கசாமி.’


படிக்கப் படிக்க அந்த மனிதர் துக்கம் தாளாமல் கண்ணீர் விட்டார். அவர் தொண்டை அடைத்துக் கொண்டது.

நண்பர்கள் இருவரும் சிலைபோல அமர்ந்திருந்தார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=உரிமைப்_பெண்/தந்தை_சொல்&oldid=1535461" இலிருந்து மீள்விக்கப்பட்டது