உள்ளடக்கத்துக்குச் செல்

உரிமைப் பெண்/தூரப் பிரயாணம்

விக்கிமூலம் இலிருந்து
(உரிமைப் பெண்/ தூரப் பிரயாணம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)



துாரப் பிரயாணம்

“எங்கே சடையனைக் காணவே இல்லையே?”

“யார் கண்டா? நேத்து ராத்திரி வேலைக்காரி கூப்பிட்டுப் பார்த்தாள். வரவே யில்லை. காலையில்கூடத் தேடினாள், காணுேம்.”

காலையிலே கூப்பிட்டுப் பார்த்திர்களா?”

“ஆமாம், பின்னே பார்க்காமலா சொல்றேன்?” என்று கொஞ்சம் பிகுவாக என் மனைவி பதிலளித்தாள்.

எனக்கு அவளுடைய பதில் அவ்வளவு திருப்தி அளிக்கவில்லை. அதனால் உடனே வேலைக்காரியை அழைத்து விசாரித்தேன். அவளும் அதே மாதிரிதான் பதில் சொன்னாள்.

நான் வேலைக்காரியை விசாரித்தது என் மனைவிக்குப் பிடிக்கவில்லை. நான் சொன்னா உங்களுக்கு நம்பிக்கை கிடையாது; இப்போ சரிதானே? அந்தச் சனியன் எங்கே பிரயாணம் போச்சோ யார் கண்டா?”

அவள் வார்த்தை என் உள்ளத்தில் ஆழ்ந்து தாக்கியது. மறதியென்னும் அந்தகாரச் சலதியிலே மெதுவாக முழுகிக்கொண்டிருந்த சம்பவங்களை யெல்லாம் கொந்தளிப்புடன் மேல் வரச் செய்துவிட்டது.

இன்றல்ல; ஐந்து வருஷமாகிவிட்டது. எனது ராஜா மணி........ ஆமாம், அன்று நடந்த சம்பவங்களையெல்லாம் இப்பொழுது நடப்பனபோல் என் மனக் கண் முன்பு தோன்றச் செய்துவிட்டது அவள் பேச்சு.  இதோ என் ராஜாமணி சடையனைக் கூவிக் கொண்டு துள்ளி ஓடி வருகிறான்.

“சடையா, சடையா-வாடா போகலாம்.” அவன் குரல் கணிரென்று ஒலிக்கிறது. சடையன் வாலை ஆட்டிக் கொண்டு ஒரே பாய்ச்சலில் ராஜாமணியின் பக்கத்தில் வந்து அவனைச் சுற்றிச் சுற்றி ஒடியாடிக் தனது சந்தோசத்தைத் தெரிவிக்கிறது.

ராஜாமணியும் வெளியே புறப்பட ஆத்திரப்பட்டுக் கொண்டிருக்கிறான். ஷர்ட்டைப் புோட்டுக்கொள்ள ஒரு நிமிஷம் நிற்கவும் அவனால் முடியவில்லை. அவசர அவசரமாக அதையணிந்துகொண்டே கிளம்பினான்.

“ராஜா எங்கே புறப்படுகிறாய்?”

“அப்பா, நாங்கள் பிரயாணம் போறோம்”.

“எங்கேடா போகிறாய்? பள்ளிக்கூடம் இல்லாவிட்டால் காலையிலிருந்து ஊர் சுற்ற ஆரம்பித்து விடுகிறாயே?”

“இல்லையப்பா, வாரத்திலே ஒரு நாளாவது வெளியே போகவேண்டாமா? வீட்டிலேயே இருந்தால் எனக்கு எப்படியோ இருக்கிறது”.

“சின்னம்மாவிடம் சொல்லிவிட்டுப் போடா, போய் விட்டு சீக்கிரம் வந்துவிடு.”

எனது அனுமதி கிடைத்ததே போதும் அவனுக்கு. “சின்னம்மாவிடம் நீயே சொல்லப்பா; நான் மாட்டேன்” என்று கூறிவிட்டு ஒரே ஒட்டமாய் ராஜாமணி மறைந்து விட்டான் சடையன் அவனுக்கு முன்னாலே பாய்ந்தது.

தாயில்லாத பிள்ளை. சின்னம்மாவிடம் அவனுக்குப் பற்றுதல் ஏற்படவில்லை. சிறு குழந்தையாக இருந்திருந்தால் ஒரு வேளை தன் தாயின் ஞாபகம் மறக்திருக்குமோ  என்னவோ. நான் இரண்டாவது கல்யாணம் செய்து கொள்கிறபோது ராஜாமணிக்கு எட்டு வயது. கல்யாணமாகியும் இாண்டு வருஷங்களாய்விட்டன. இன்னும் அவன் ஏக்கங்கொண்டே இருக்கிறான். தாயின் உடலை மயானத்திற்கு எடுத்துக்கொண்டு போனபோது வாடிய அவன் முகம் அடிக்கடி அதே வாட்டத்தோடு காணப்படுகிறது. சடையனோடு விளையாடும்போதும், அதைக் கூட்டிக்கொண்டு வெளியே புறப்படும்போது தான் அவன் முகத்தில் உண்மையான மகிழ்ச்சி பிரகாசிக்கின்றது. என்னுடன் கொஞ்சும்போதும் சிரித்துக்கொண்டுதானிருக்கிறான். ஆனால் அவன் தன் சிற்றன்னையின் முன்னிலையில் இருக்கும்போது எதையோ இழந்துவிட்டவன் போலக் காணப்படுகிறான்; முகத்தில் புன்னகையே தோன்றுவதில்லை.

மத்தியானம் ஒரு மணியாகிவிட்டது; இன்னும் ராஜாமணி திரும்பி வரவில்லை. உங்கள் பையனுக்கு நீங்கள் கொடுக்கிற செல்லம் பார்த்தீர்களா? நாயைக் கூட்டிக் கொண்டு போனவன் இன்னும் வரவில்லை. இனிமேல் வந்து சாப்பிட்டால் உடம்பு இளைத்துப்போகாமல் என்ன செய்யும்? நேரத்திற்கு நேரம் சாப்பிடாமல் இப்படியே சுற்றுகிறான்; பிறகு நான் கவனிக்கவில்லையென்றால் என்ன செய்வது? பையனைக் கொஞ்சம் மிரட்டி வைத்திருந்தால், இப்படியெல்லாம் இருப்பானா? நான் சொன்னால் மட்டும், உனக்கென்ன தெரியும் பிள்ளை அருமை?” என்பீர்கள் என்று என் மனைவி நீட்டினாள்.

ராஜாமணியின் மேல் எனக்குக்கூடச் சிறிது கோபந்தான். அதனால் அவன் திரும்பி வந்ததும் அவன் மேல் அவள் சீறிவிழுந்ததை நான் மெளனமாக விட்டுவிட்டேன்.  “எங்கேடா போனாய் இவ்வளவு நேரம்?” என்று கடித்தாள் அவள்.

“நாங்கள் பிரயாணம் போனோம்” என்று வெளியில் மனம் போனபடி சுற்றி வந்த குதுகலத்தில் அவன் சிற்றன்னேயிடமும் கொஞ்சின மாதிரி பேசினான்.

“ஒகோ பிரயாணமா? இவ்வளவு நேரம் எங்கேயோ நாய் போலக் திரிந்துவிட்டுப் பேசறதைப் பாரு” என்று அவன் கன்னத்தில் பளீர் பளீரென்று இரண்டு அறை கொடுத்துவிட்டாள்.

நான் அதை எதிர்பார்க்கவே இல்லை. திடீரென்று அவள் செய்த காரியமும், ராஜாமணியின் மேலிருந்த சிறிது கோபமும் என்னை உடனே குழந்தைக்குத் தேறுதல் சொல்லுவதிலிருந்து தடுத்துவிட்டன. சடையன் தான் அவளை உற்றுப் பார்த்து உறுமிவிட்டு ராஜாமணியிடம் சென்று வாலையாட்டித் தன் அநுதாபத்தையும் அன்பையும் தெரிவித்தது. ராஜாமணி அப்படியே திகைக்துப்போய் உட்கார்ந்துவிட்டான். வேறு குழந்தைகளைப் போல அவன் அழவே இல்லை. அழுதிருந்தால் அவன் துக்கம் ஆறியிருக்குமோ என்னவோ?

இந்நாள் வரையில் அவன் மேனியில் ஒர் அடி பட்டதில்லை. அவன் தாய் ஒரு கடுஞ்சொல் கூடக் கூறியிருக்கமாட்டாள். சிற்றன்னையும் இதுவரை கையால் தொட்டது கிடையாது. அவள் பார்வை யொன்றிலேயே ராஜாமணி பயந்து கிடப்பான்.

அவன் அப்படியே அசையாமல் உட்கார்ந்திருந்தான். சடையன் அவன் முகத்தை நக்கித் தேறுதல் சொன்னது. அதை மெதுவாக ராஜாமணி அணைத்துக்கொண்டான்.  நான் அழைத்தபோது கூட அவன் எழுந்திருக்கவில்லை. சாப்பிடவும் மறுத்துவிட்டான்.

மறுநாள் என் மனைவி சாமர்த்தியமாக ஒரு காரியம் செய்தாள். சடையனை யாரிடமோ பிடித்துக் கொடுத் தனுப்பிவிட்டாள். அது வீட்டிலிருப்பதால்தான் ராஜாமணி கெட்டுப் போகிறான் என்று அவள் எண்ணிக் கொண்டிருந்தாள்.

சடையனும் இல்லாமற்போகவே ராஜாமணியின் உள்ளம் நொறுங்கிவிட்டது. அவனுக்கு வாழ்க்கையில் மகிழ்ச்சியளித்து வந்த ஓருயிரும் இப்பொழுது அவனுடன் இல்லை. சிற்றன்னை அடித்ததை மெளனமாகப் பார்த்துக் கொண்டிருந்தேனென்றோ என்னவோ, அவனுக்கு என்னிடமும் பிரியம் விட்டுவிட்டது. அவன் உள்ளத்திலே ஏற்பட்ட குமுறலாலோ அல்லது என் மனைவி கூறியபடி கண்டபடி சுற்றியதாலோ கிடீரென்று ராஜாமணிக்குச் சளிக் காய்ச்சல் கண்டது, மூன்று நாட்கள் அவன் வாயில் ஜலங்கூட ஊற்றவில்லை. நல்ல நினைவை உண்டாகாமல் பிதற்றிக்கொண்டே படுத்திருந்தான். அடிக்கடி “சடையா, எங்கே போய்விட்டாய்? வா, தூரப் பிரயாணம் போகலாம்” என்று கூவினான்.

அவன் கூப்பிடுவது சடையனுக்கு எப்படிக் கேட்டதோ தெரியவில்லை. மூன்றாம் நாளன்று மாலையில் எங்கிருந்தோ சடையன் வந்துவிட்டது. வந்ததும் அது ராஜாமணி படுத்திருந்த கட்டிலில் தனது முன்னங் கால்களை வைத்து அவனை ஆவலோடு பார்த்தது. வாலைக் குழைத்தும் பல விதமான சப்தங்கள் செய்தும் தனது உள்ள உணர்ச்சிகளை வெளிப்படுத்தியது. ராஜாமணி அதை அன்போடு தடவிக் கொடுத்தான். பிறகு கண்களை  மூடிக்கொண்டே, “சடையா, வா நாம் துாரப் பிரயாணம் போகலாம்” என்று கொஞ்சி மொழிந்தான்.

சடையன் வழக்கம்போலக் துள்ளிக் குதித்து முன்னால் புறப்பட்டது. கதவண்டை சென்றதும் பின்னால் ராஜாமணி வாராமையால் நின்று அவனை வரும்படி கூப்பிடுவதுபோல் பார்த்தது.

ராஜாமணி கட்டிலே விட்டு எழுத்திருக்கவே இல்லை. வேறு பேச்சுப் பேசவும் இல்லை. என்னைக் தவிக்க வைத்துவிட்டுத் துாரப் பிரயாணம் போய்விட்டான்.

இடுகாட்டில் அவனைக் குழிக்குள் வைக்கும் வரையில் சடையன் பக்கத்திலேயே இருந்தது. எல்லோரும் திரும்புகின்றபோது கூட அதற்கு அந்த இடத்தை விட்டு வர இஷ்டமில்லை. நான்தான் அதை வலியப் பிடித்து இழுத்துக்கொண்டு வந்தேன்.

இச்சம்பவங்களெல்லாம் சலனப் படக் காட்சி போன்று என் முன்பு தோன்றி மறைந்தன.

ராஜாமணி பிரிந்தது முதல் மறுபடியும் சடையன் எங்கள் வீட்டிலேயே இருந்தது. இப்பொழுது திடீரென்று அதைக் காணவில்லை யென்பதால் எனக்குப் பழைய வருத்தம் தோன்றலாயிற்று. எண்ணமிட்டுக் கொண்டே உட்கார்ந்திருந்தேன்.

சட்டென்று ஒரு புது யோசனை என் மனத்தில் ஒடிற்று. ராஜாமணியைப் புதைத்த இடுகாட்டிற்குச் சடையன் ஒரு சமயம் போயிருக்குமா? ஒரு சமயம் அவனை நினைத்துக்கொண்டு சென்றிருக்கலாமல்லவா? இவ்வெண்ணத்திற்கு ஒருவிதமான ஆதாரமும் இருப்பதாகத் தெரியவில்லை. ஐந்து வருஷங்களுக்கு முன்னால்  நடந்த சம்பவத்தை இன்னுமா அந்த நாய் நினைத்துக் கொண்டிருக்கப் போகிறது? நானே மெதுவாக அவனை மறந்துகொண்டிருக்கிறேனே!

இருந்தாலும் அந்த எண்ணம் என் உள்ளத்தில் எப்படியோ நிலைத்து வலிமை பெற்றுக் கொண்டிருந்தது கடைசியாக இடுகாடு சென்று பார்த்துவிடலாமென்றே தீர்மானம் செய்து கொண்டு புறப்பட்டேன்.

ராஜாமணியைப் புதைத்த அதே இடத்தில் சடையன் படுத்திருந்தது. துாரத்தில் போகும்போதே அதைக் கண்டு நான் கூப்பிட்டேன். ஆனால் அது எழுந்து வரவில்லை. ஆழ்ந்த சிந்தனையிலிருப்பதுபோல் காணப்பட்டது. சற்று அருகே சென்று அழைத்தேன். அசையவே இல்லை. ஒரு வேளை பசி மயக்கமாக இருக்கலாமோ?

அருகில் சென்று உற்று நோக்கினேன். சடையனும் துாரப் பிரயாணம் போய்விட்டது. ராஜாமணி வந்து அதைக் கூட்டிக்கொண்டு போயிருக்கவேண்டும். இல்லாவிட்டால் அது அவனைப் புதைத்த இடத்திற்கு வந்திருக்காது. இருவரும் இப்பொழுது சதா இன்பத்தோடு விளையாடிக் கொண்டிருக்கிறார்களென்று நம்புகிறேன்.