உள்ளடக்கத்துக்குச் செல்

உரிமைப் பெண்/மழையும் இடியும்

விக்கிமூலம் இலிருந்து
(உரிமைப் பெண்/ மழையும் இடியும் இலிருந்து வழிமாற்றப்பட்டது)



மழையும் இடியும்

ப்பசி மாதத்தில் ஒரு நாள் மாலை. மேற்குக் திசையிலே தலை நிமிர்ந்து படுத்திருக்கும் மலைத் தொடர்களின் இடையே வானம் உறுமிக்கொண்டிருந்தது. அங்குக் தோன்றி மேலெழுகின்ற கருமேகங்கள் பயங்கரமாக ஆகாயப் பரப்பை மூடுகின்றன. எட்டு நாட்களாக விடாது பெய்துகொண்டிருந்த மழையெல்லாம் சேர்ந்து ஒரே கணத்தில் பெய்ய வருவது போலத் தோன்றுகிறது. இன்று சற்றுப் பிரகாசித்த சூரியனும் ஒளிந்துகொண்டான். தனது நெருப்பெல்லாம் வரப் போகும் பெரு மழையில் அவித்துவிடுமே என்று பயந்துகொண்டான் போலிருக்கிறது.

நஞ்சப்பன் குறும்பையாட்டு ரோமத்தால் செய்த முரட்டுக் கம்பளியை இழுத்துப் போர்த்துக்கொண்டு திண்ணையிலே உட்கார்ந்திருந்தான். அவனுடைய பொக்கை வாயிலே எருக்கிலையினால் சுற்றிய புகையிலைச் சுருட்டுப் புகைந்துகொண்டிருந்தது. பக்கத்திலே ஒரு வாக்கணத்தில் தீத் தயாராக இருந்தது. சுருட்டு அடிக்கடி கெட்டுப்போகிறது. கிழவனைக் கண்டால் இந்தத் தீக்கூட லட்சியம் செய்வதில்லை. கிழவனுக்கோ வேகமாகச் சுருட்டை உறிஞ்சித் தீயை அணையாமல் செய்யவும் சக்தியில்லை. இந்த நிலையிலே நாலைந்து தரம் நெருப்புக்கொண்டு வத்து கொடுத்துச் சலித்துப்போன அவனுடைய பேத்தி மாராயி ஒரு வாக்கணம் நிறைய நெருப்புக் கொண்டுவந்து வைத்துவிட்டு உள்ளே அடுப்பு வேலையைக் கவனிக்கப் போய்விட்டாள். தீயை வாக்கணத்திலே கொண்டு வந்ததைக் கண்ட நஞ்சப்பனுக்குத் தன்னை அறியாமல் சிரிப்பு வந்துவிட்டது. “நல்ல யோசனை பண்ணினாய். இது தான் சரி. இனிமேல் உன்னைத் தொந்தரவு பண்ணமாட்டேன்” என்றான் அவன்.

“தொந்தரவொண்ணுமில்லை தாத்தா. அடுப்பு வேலை. கெட்டுப் போகுதேன்னு பார்த்தேன்” என்றாள் குமரி.

“ஆமாம்மா. அதைப்பாரு. சீக்கிரமா ஏதோ ரண்டு காச்சிக் குடித்துவிட்டுப் படுத்துக் கொள்வோம். பெரிய மழை வரும்போல் இருக்கிறது” என்றான்.

அதற்குள்ளே மறுபடியும் சுருட்டு அவிந்து போய்விட்டது. பேச்சை நிறுத்திவிட்டுக் கிழவன் அதைப் பற்ற வைக்கக் கரண்டியைக் கையில் தூக்கினான்.

மின்னல்போல மாராயி உள்ளே மறைந்துவிட்டாள்.

பனை ஒலை வேய்ந்த கூரையின் மேலே பெரும் பெரும் துளிகளாக விழும் மழையின் சப்தம் கேட்க ஆரம்பித்தது.

மாராயி வாசலுக்கு ஓடிவந்தாள். காய்ந்துகொண்டிருந்த சுள்ளிகளை யெல்லாம் அவசர அவசரமாகச் சேகரிக்கலானாள்.

“மாரு, உள்ளே வந்து விடு. மழையில் நனையாதே” என்று கூவினான் கிழவன்.

“விறகெல்லாம் நனைந்து போனல் நாளைக்கு அடுப்புப் பத்தவைக்க என்ன செய்வது தாத்தா?”

கொஞ்சம் எடுத்துக்கொண்டு சீக்கிரம் வா. மழையிலே நனையப்படாது.”  “ஒரு நாளைக்குத்தான் நனஞ்சுபோனா என்ன தாத்தா? நான் என்ன கருப்பட்டியா? கரைந்தா போவேன்?”

“ஐயோ, வாண்டாம்மா, நனையவேபடாது.”

"ஏன் தாத்தா, மழை வந்தபோதெல்லாம் இப்படியே சொல்றீங்க? உங்களுக்கென்ன மழையென்றால் இத்தனை பயம்?”

“ஆமாம், பயந்தானம்மா பயந்தான்.”

“என்னத்துக்குக் தாத்தா பயம்? எனக்கொன்றுமே தெரியவில்லையே?” என்று சுள்ளிகளைக் கையில் எடுத்துக் கொண்டு வந்து கதவருகே நின்ற மாராயி கேட்டாள்.

“அதுவா? அதை ஏன் கேட்கிறாய்? நான் பொல்லாத பாவி” என்று கிழவன் பெருமூக்சு விட்டுக்கொண்டு மெதுவாகக் கூறினான். அவன் குரலிலே சோகம் தொனித்தது. கையிலிருந்த சுருட்டு நழுவித் தரையிலே விழுந்தது. அதன் உயிர் போய்விட்டது.

விறகை அப்படியே குடிசைக்குள் போட்டுவிட்டு மாராயி தாத்தாவிடம் வந்து நின்றாள்.

“தாத்தா, என்னவோ ஒரு விசனம் உங்கள் மனசிலே இருந்துகொண்டே இருக்கிறது. அடிக்கடி இப்படி நீங்கள் பெருமூச்சு விடுவதை நான் பார்க்கிறேன். ஏன் தாத்தா, உங்களுக்கென்ன விசனம்?” என்று ஆவலோடு அவள் வினவினாள்.

இதற்குள்ளே பெரிய மழை ஆரம்பித்துவிட்டது. திண்ணை யெல்லாம் சாரலடித்தது. “மாரு, வா, உள்ளே போகலாம். சாப்பிட்டுவிட்டு, படுத்துக்கொண்டே பேசுவோம்” என்று கிழவன் உள்ளே நகர்ந்தான்.  இருவரும் உணவருந்தியதும் கதவை நன்கு இழுத்துச் சாத்திவிட்டுப் படுத்துக்கொண்டார்கள். ஒலைக் கூரையின்மேல் திபு திபுவென்று மழை விழுந்துகொண்டிருங்தது. அதன் வேகத்தால் ஓரிடத்தில் ஒழுக்கெடுத்துச் சிறுமியின் மேல் சொட்ட ஆரம்பித்தது. நஞ்சப்பன் சட்டென்று எழுந்து அவர்கள் படுத்திருந்த பாயை வேறிடத்தில் தள்ளிப்போட்டான்.

“ஆறேழு வருஷமாச்சு, கூரைபோட்டு. இதுவரை ஒழுகவே இல்லை. இனிமேல் யார் இப்படிப் போடப் போகிறார்கள்? உன்னை ஒருத்தன் கையில் பிடித்துக் கொடுக்கும் வரையில் இந்தக் கூரை தாட்டினால் போதும். அப்புறம் எப்படிக் கிடந்தால் என்ன?” என்று அவன் தனது உள்ளக் கருத்தை வெளிப்படையாகப் பேசினான்.

மராயிக்கு வயது சுமார் பன்னிரண்டிருக்கும். அவளுக்கு இப்பொழுது கல்யாணத்தைப் பற்றி யெல்லாம் எண்ணமே இல்லை. தன் தாத்தாவின் மனத்திலே படிங்திருக்கிற விசனத்திற்குக் காரணத்தை அறிந்துகொள்ள வேண்டுமென்பதே அவள் ஆசை.

“ஏன் தாத்தா, மழைத்துளி ஒரு சொட்டுக்கூட என் மேலே படப்படாது என்று நினைக்கிறீர்களே, என்னத்தினாலே?”

“மழையா? அதுதான் யமனாக வந்தது?” என்றான் கிழவன்.

மாராயிக்கு ஒன்றுமே விளங்கவில்லை. விஷயத்தை நன்றாக அறிந்துகொள்ள வேண்டுமென்று அவள், “தாத்தா, நீங்கள் சொல்லறது எனக்கு அர்த்தமே ஆக வில்லை. எல்லாச் சங்கதியும் ஒன்று விடாமல் சொல்லுங்க.  நீங்கள் என் அடிக்கடி விசனப்படுகிறீர்கள்? மழையைக் கண்டால் உங்களுக்கு ஏன் இத்தனை பயம்? சொல்லுங்க தாத்தா” என ஆவலோடு கேட்டுக்கொண்டாள்.

நஞ்சப்பனுக்குக் தன் மனத்திலுள்ள துயரத்தை யாரிடமாவது அந்தச் சமயத்தில் கூறிவிடவேண்டுமென்று தோன்றியது. அவன் தொடங்கினன்:

“மாரு, உனக்கு அம்மா ஒருத்தி இருக்காள்; ஞாபகமிருக்கிறதா? அவள்தான் வேலாத்தா. அவள் சாகிறபோது நீ ரொம்பச் சிறு பெண். உனக்கு மூன்று வருஷந்தானிருக்கும். தாயென்றால் அவளைத்தான் சொல்ல வேணும். உன் மேலே அவளுக்கு அத்தனை பிரியம். உன் தகப்பனும் அவளும் சங்தோசமா உன்னை வளர்த்துக் கொண்டு வந்தார்கள். ரெண்டு பேரும் உயிருக்குயிரா இருப்பார்கள். நான்தான் அவர்கள் வாழ்க்கையிலே மண்ணைப் போட்டுவிட்டேன். எனக்கும் அவர்கள் மேலே பிரியந்தான். பெத்த மகனிடத்திலே பிரியமில்லாமலா இருக்கும்? ஆனால் எனக்கென்னமோ அவர்கள் ரெண்டு பேரும் கூடிக் குலாவிக்கொண்டு இருக்கிறதைப் பார்த்தால் சில சமயத்திலே பிடிக்கிறதில்லை. ராமசாமி தான் உன் அப்பன் பேர். அவன் வேலாத்தாளை வேலை செய்யவே அனுப்பமாட்டான். அவளாக இஷ்டப்பட்டு வேலைக்கு வந்தாலும் வெயில் நேரத்திலெல்லாம் வீட்டுக்கு வந்து விடும்படி சொல்லுவான். இது எனக்குப் பிடிக்கவே இல்லை. சிறு வயசுக்காரர்களெல்லாம் நல்லாக் கஷ்டப்பட்டுப் பண்ணையில் வேலை செய்ய வேணும். நமக்கிருப்பதோ கொஞ்சம் நிலம். எல்லோரும் நன்றாகப் பாடுபட்டால்தான் ஜீவனம் பண்ண முடியும். நான் ஓயாமல் வேலை செய்வேன். அப்படி அவர்கள் ரெண்டு  பேரும் செய்யமாட்டார்கள். அதுவுமல்லாமல் உன் அம்மாள் என்றைக்குப் பார்த்தாலும் சீவுவதும், கொண்டையில் செவ்வந்திப் பூ வைத்து, நெற்றியிலே பெரிய பொட்டு வைத்துக்கொள்வதும் எனக்குப் பிடிக்கிறதே இல்லை.”

இதைக் கேட்டதும் மாராயிக்குச் சிரிப்பு அடக்க முடியவில்லை. வாய்விட்டு உரக்கச் சிரித்தாள். நஞ்சப்பன் தான் சொல்லுவதைச் சற்று நிறுத்தினான்.

“ஏன் தாத்தா, பாட்டி உங்களைக் கல்யாணம் பண்ணிக்கிட்ட புதிசிலே இப்படி யெல்லாம் பண்ணமாட்டாளா?” என்று சிறுமி குறும்பாகக் கேட்டாள்.

“பாட்டியா, அந்தக் காலத்திலே அவள் மாமனாருக்கு எதிரிலேயே வரமாட்டாள். அப்படி அகஸ்மாத் தாய் வந்துவிட்டாலும் முக்காடு போட்டுக்கொள்ளுவாள். அவள் சாகும் வரையிலும் அப்படித்தான். இந்தக் காலத்திலே யார் அப்படி இருக்கிறார்கள்? இப்போ எல்லாம் மாறிப் போச்சு. அந்தக் காலம் இனி வருமா?”

“கல்யாணமான பிறகு பாட்டி நாலஞ்சு வருஷந் தான் உயிரோடு இருந்தான்னு சொன்னிங்களே?”

“ஆமாம், இருக்கிற வரையிலும் அப்படி அடக்கமா இருந்தாள்.”

“அவள் செத்த பிறகு நீங்க மறு கல்யாணம் பண்ணிக்கவில்லையா?”

“கல்யாணம் வேண்டாம்னு ரொம்ப நாள் இருந்தேன். உன் அப்பனுக்குக் கல்யாணம் பண்ணி வச்சபிறகு தான் எனக்கும் கல்யாணம் பண்ணிக்கலாமென்று ஆசை  வந்தது. ஆனால் அப்ப யாரும் பெண் கொடுக்க மாட்டேனென்று சொல்லிவிட்டார்கள்.”

மாராயி மறுபடியும் சிரித்தாள்.

“மாரு, இப்போ எனக்கு நீ தான் உயிர் உன்னிடத்திலே எல்லாவற்றையும் வெளிப்படையாகச் சொல்லாமல் வேறு யாரிடம் சொல்லப்போகிறேன்?”

“சரி தாத்தா, அப்புறம் சொல்லுங்க”

உனக்கு ரெண்டு வயசா இருக்கும்போது நான் ஒரு கல்ல கடாரி வாங்கி வந்தேன். அதையாவது வேலாத்தாள் மேய்த்து வளர்க்கட்டுமென்று நான் நினைத்தேன். அவளுக்கும் அதன்மேலே ரொம்ப ஆசைதான். ஆனால் தினமும் ராக்திரியிலே வீட்டுக்கு ஓட்டி வருவதில்லை. ஒரு நாளைக்குப் போய் ஒட்டிக்கொண்டு வருவாள். நாலு நாளைக்குப் போகமாட்டாள். காட்டிலே விட்டுவிடுவாள். நான் அதைப்பற்றி ராமசாமியிடம் சொன்னாலும் அவனும் காதில் போட்டுக்கொள்வதில்லை. பல தடவை இப்படி நடக்கவே எனக்குக் கோபம் அதிகமாய்க்கொண்டே வந்தது. காட்டிலேயே மாடு இருப்பதால் ஒன்றும் முழுகிப்போய்விடாது. இருந்தாலும் என் பேச்சை சட்டை செய்யாமல் வீட்டிலேயே இருந்துகொண்டிருக்கிறாளே என்று கோபம் அதிகமாய்விட்டது. ஒரு நாள் ராத்திரி கடாரி விட்டுக்கு வாராததைப் பார்த்து நான் அவர்கள் ரெண்டு பேரையும் வாய்க்கு வந்தபடி யெல்லாம் பேசிவிட்டேன்.

“மழை வருவது போல இருக்கிறது; ஒரே இருட்டாயும் இருக்கிறது. எப்படிப் போகிறது?” என்று ராமசாமி மெதுவாகச் சொன்னான். “மழை வந்தா என்ன ? நனஞ்சா முளைச்சுப் போவீர்களா ? வீட்டிலே ராணி மாதிரி உட்கார்ந்து கொண்டிருக்க எங்கே போவது? அவள் என்ன மழைத் துளி மேலே பட்டறியாத சீமாட்டியா ? என்று இப்படி யெல்லாம் இடித்து இடித்துப் பேசினேன். பேசின பிறகு ஏன் அப்படிப் பேசினேன் என்று கூட நினைத்தேன். என்னுடைய பேச்சு அவள் மனதைத் தாக்கிவிட்டது. அதற்குள்ளே பெரு மழையும் வந்து தொலைந்தது. அவள் அதைக் கவனியாமல் கும்மிருட்டுக்குள்ளே புறப்பட்டு விட்டாள். நான் போய் ஒட்டி வருகிறேன்; நீ போக வேண்டாம் என்று ராமசாமி கூவினான். அவள் அதைக் காதிலேயே போட்டுக்கொள்ளவில்லை. போய் நனைந்து சிரமப்படட்டும் என்றுதான் எனக்கும் இருந்தது. அவள் போன சிறிது நேரத்திற்குள் உன்னப்பன் சாந்தலை ஏற்றிக் கொண்டு பின்னாலேயே போனான். ஆகா, பெண்டாட்டி இருட்டிலே போறாள்னு கவலையைப் பாரு” என்று நான் ஏளனமாகக் கூறினேன்.

அவர்கள் திரும்பிவர வெகு நேரமாகிவிட்டது. காற்று வேகமாக அடித்ததால் கொஞ்ச துாரம் போனதும் சாந்தல் அணைந்திருக்க வேண்டும். இடியும் மின்னலும் அன்று பூமியையே பிளக்தெறிவது போலப் பயங்கரமாக இருந்தன. மழை ஒரே வெள்ளமாகக் கொட்டியது. எத்தனையோ மரங்கள் சடசடவென்று முறிந்து விழுந்தன.

“எனக்குப் பயமாகப் போய்விட்டது. அவர்கள் திரும்பி வந்த போது மழையில் நனைந்து நடுங்கிக் கொண்டிருந்தார்கள். வேலாத்தாளுக்குத் தலையிலே ரொம்ப மயிர்; நீளமாகக் தொங்கிக்கொண்டிருக்கும். அவள் தலையை உலர்த்திக்கொண்டாளோ என்னமோ, எனக்குத் தெரியாது, விட்டுக்குள்ளே போய்ப் படுத்துக் கொண்டார்கள். மறு நாளே காய்ச்சல் வந்து படுத்தவள் தான்: அப்புறம் எழுக்திருக்கவே இல்லை. போய்விட்டாள். ராமசாமி அலறித் துடித்தான். அவனுக்கு அந்த ஏக்கம் தீரவேயில்லை. என் மகன் நாளுக்கு நாள் துரும்பாக இளைத்துக்கொண்டே வந்தான். நானும் எத்தனையோ ஆறுதலெல்லாம் சொன்னேன். இன்னொரு கல்யாணம் செய்து வைக்கிறேன் என்றெல்லாம் சொல்லிப் பார்த்தேன். அவனுடைய துயரம் ஆறாத் துயரமாகி விட்டது. மாரு என்மேல் நீ கோபங் கொள்ளப்படாது. நானும் ரொம்ப வருத்தப்பட்டேன். இப்படி யெல்லாம் வரும் என்று எனக்கு எப்படித் தெரியும்? அதென்னமோ எனக்குப் பொல்லாத காலம். வேலாத்தாள் என்னிடம் பிரியமாகத்தான் இருந்தாள். ஆனால் அவள் அப்படித் தாராளமாக மகள் மாதிரி நடந்துகொள்வது எனக்குப் பிடிக்காமல் போயிற்று. மருமகள் என்றால் பயந்து கொண்டிருக்க வேண்டுமென்றோ என்னமோ ஒரு எண்ணம் என்னேயறியாமல் மனசுக்குள்ளே இருந்திருக்கிறது. அதனாலே தான் அவளை அப்படிப் பேசிவிட்டேன்.

அதனாலேதான் நான் ரொம்பக் கஷ்டப்பட்டுவிட்டேன். என் மகன் உருகிக்கொண்டே வந்தான். என்ன செய்தும் அவன் தேற வில்லை. வேலாத்தாள் இறந்து இாண்டு வருஷங்கூட அவன் உயிர் வாழவில்லை. அத்தனை காலமும் உன்னைப் பார்த்துத்தான் ஒரு மாதிரி உயிர் வைத்திருந்தான்.

“ஒரு நாள் மறுபடியும் பெரு மழை வந்தது. தாங்கிக்கொண்டிருந்த உன் தகப்பன் திடீரென்று எழுந்து அந்த மழைக்குள்ளே ஒடினான். நான் சத்தம் போட்டுப் பார்த்தேன். அவன் வெகு நேரம் வரையிலும் திரும்பவே யில்லை. அப்புறம் அவன் வந்து திண்ணை மேலே தொப்பென்று விழுந்தான். மெய்மறந்து கண்டபடி உளறிக் கொண்டிருந்தான். ‘வேலாத்தா, அதோ கடாரியைப் பிடி, மழை வந்தால் முளைச்சா போவாய்? இந்தா, அதோ ஒடு’ என்றெல்லாம் பேசினான். அவன் உடம்பு கொதித்துக் கொண்டிருந்தது. ‘இந்த மழையில் எதற்கடா வெளியே போனாய்?’ என்று நான் கதறினேன். கதறி என்ன செய்வது? மகன் எழுந்திருந்து என்னிடம் ஒரு நல்ல வார்த்தைகூடப் பேசவில்லை. அப்படியே மாண்டு போனான்.” இதைச் சொல்லிவிட்டுக் கிழவன் வாய்விட்டு அழுதான். மாராயியும் கூடச் சேர்ந்துகொண்டாள்.

“மழைதானம்மா அவர்கள் ரெண்டு பேருக்கும் கூத்துவனாக வந்தது” என்று விம்மியவாறே கிழவன் சிறுமியை அணைத்துக்கொண்டான்.

அந்தச் சமயத்தில் மழை சட்டென்று நின்றது.