உலகம் பிறந்த கதை/இது வரை என்ன கண்டோம்?

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
28. இது வரை என்ன கண்டோம்?

இது வரை என்ன கண்டோம்?

சுமார் முந்நூறு கோடி ஆண்டுகள் முன்பு சூரியன் இல்லை. பிரபஞ்சமானது அந்தகாரத்தில் ஆழ்ந்து இருந்தது. எங்கும் இருள். வாயு நிரம்பியிருந்தது. கன வாயு, உஷ்ண வாயு. அது கனத்தால் அழுத்திற்று.

அந்த அமுக்குதலினால் விரிந்தது; விரிந்து கொண்டே இருந்தது. மேலும் விரியவே, சிதறியது. பல கோளங்கள் தோன்றின. அவற்றில் ஒன்று சூரியன். மற்றவை பிற கிரகங்கள்.

உலகம் அணு மயமானது. அணுக்கள் சூடானால் விலகுகின்றன. இலேசாகின்றன; கன வாயுவாகின்றன. வான மண்டலத்தில் திரிகின்றன. அவை குளிர்ந்தால் நெருங்குகின்றன. திரவமாகின்றன. மேலும் குளிர்ந்தால் இறுகுகின்றன. கட்டியாகின்றன.

அணுவின் தன்மை சும்மா இருப்பது அன்று. எப்போதும் துள்ளிக் குதித்துக் கொண்டு இருப்பதுதான். வான வீதியிலே உள்ள நீர் வாயு அணுக்கள் விநாடிக்கு ஒரு மைல் வேகத்தில் துள்ளி ஓடி அட்டகாசம் செய்கின்றன.

இவ்விதம் அணுக்கள் அட்டகாசம் செய்வது ஏன்? அணுவில் மின் சக்தி இருப்பதால். மின்சக்தி எப்படி இருக்கிறது? எலக்ட்ரான் என்னும் பொறியாக இருக்கிறது.

அணுவிலே உள்ள இந்த சக்தி சில சமயத்தில் பீறிட்டு அடிக்கும். இவ்விதம் பீறிட்டு அடிக்கும் அணுக்களுக்கு ரேடியோ ஆக்டிவ் அணுக்கள் என்று பெயர்.

சூரிய மண்டலத்திலே உள்ள அணுக்கள் மகத்தான குஸ்தி போடுகின்றன. அதனாலே அணுசக்தி பீறிடுகிறது. அந்த அணு சக்தியே சூரிய கிரணங்கள். அவை மின்கதிர்கள்; உஷ்ணக் கதிர்கள்.

'வாயு மண்டலத்தில் பாய்ந்து வரும் அந்த உஷ்ணக் கதிர்களே சூரிய வெளிச்சம் என்றும் வெய்யில் என்றும் அழைக்கப்படுகின்றன.

பிரபஞ்சத்தின் தலை நாளிலே சூரியன் எப்படித் தோன்றியது என்று கண்டோம். அந்த வாயுக் கூட்டத்திலிருந்து பல கோளங்கள் தோன்றின . என்றும் அறிந்தோம்.

அப்படித் தோன்றிய வாயுக் கோளங்கள் சூரியனைச் சுற்றி வலம் வரத் தொடங்கின. அவ்விதம் வலம் வந்த போது ஒன்றை ஒன்று இழுத்தன. அப்போது ஒன்றுடன் ஒன்று மோதின. அதனால் பெரிதாயின சில. தொலைவில் ஓடிப் போயின சில. இப்படி விலகி வந்ததுதான் நமது பூமி.

சுமார் இருநூறு கோடி ஆண்டுகள் முன்பு இவ்வாறு நிகழ்ந்தது. பூமியிலே உள்ள ஈயமும், கடலிலே உள்ள உப்பும் பூமியின் வயதை நமக்கு அறிவிக்கின்றன.

சூரிய வட்டத்திலிருந்து விலகி வந்த பூமி அனல் கக்கிக் கொண்டு இருந்தாள் பம்பரம் போல் சுழன்று கொண்டு இருந்தாள். பல நூறு ஆண்டுகள் இப்படிச் சென்றன.

பூமியின் மேல் பகுதி சிறிது கெட்டி ஆயிற்று. ஆயினும் உள் பகுதி மட்டும் குழம்பாகவே இருந்தது.

அந்தக் காலத்திலே பூமி வெகு வேகமாகச் சுற்றியது. இன்று சுற்றுவதை விட நான்கு பங்கு வேகமாகச் சுற்றியது.

அவ்விதம் சுற்றிய போது பூமியின் உள் பகுதியான திரவத்திலே அலை எழும்பியது.

அது, வேகமாக மோதியது. அப்படி மோதியதால் பூமியின் ஓடு நொறுங்கியது. நொறுங்கிய ஓடு, தொலைவில் போய் விழுந்தது. அப்படி விழுந்ததே சந்திரன். சந்திரன் பியந்து போன இடம் பள்ளம் ஆயிற்று.

சந்திரன் தோன்றிய பிறகு மேலும் குளிர்ந்தது பூமி. வான மண்டலத்திலிருந்து மேகங்கள் மழை பொழிந்தன. இடை விடாது பொழிந்தன. கீழே விழுந்த மழை பல காலம் வரை ஆவியாகப் போய்க் கொண்டே இருந்தது.

பிறகு, பூமி ஓரளவு குளிரவே, ஆவியாவதும் குறைந்தது. பூமியிலே நீர் தேங்கியது. எங்கே பார்த்தாலும் ஒரே நீர் மயம். கடல்கள் தோன்றின, ஆறுகள் தோன்றின.

இப்படிப் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகள் சென்றன. மலைகள் தோன்றின. பூமியிலே தட்ப வெப்பங்களில் மாறுதல்கள் ஏற்பட்டன.

இன்னும் பல ஆயிரம் ஆண்டுகள் சென்றன. உயிர்கள் தோன்றுவதற்கான சூழ்நிலை உண்டாயிற்று.

கடலிலே உயிர்ப்பாசி தோன்றியது. உயிர்ப்பாசியிலிருந்து ஒரே கரு வட்டத்தாலான உயிர்கள் தோன்றின. அமீபா போன்றவை

அதன் பிறகு இரண்டு கருவட்டங்களால் ஆன உயிர்கள் தோன்றின. பவழம் போன்றவை. பின்னர் புழுக்கள் தோன்றின. சிப்பி, நத்தை போன்றவை. மெல்லிய உயிர் இனங்கள், டிரிலோபைட் போன்ற சிறு பிராணிகள் தோன்றின. நீண்ட காலம் வரை இவை தவிர வேறு எந்த விதமான உயிர் இனமும் இல்லை.

பிறகு முதுகுத்தண்டு உள்ளவை தோன்றின. மீன் குலத்தின் மூதாதைகள். இப்படிப் பல காலம் சென்றது. பிறகு கடலில் இருந்த உயிர் இனம் நிலத்துக்கு வரத்தொடங்கியது. நீரிலும் நிலத்திலுமாக மாறி மாறி வாழத் தொடங்கியது.

பிறகு ஓணான் இனம் தோன்றியது. அசுர ஜீவன்கள் தோன்றின. பூமியையும், கடலையும், வானையும் அதிரச் செய்தன.

இந்த அசுர ஜீவன்கள் செய்த அட்ட காசத்துக்குப் பயந்து கடலுக்கே ஒடிப்போயின சில. இன்னும் சிலவற்றிற்கு இறக்கை முளைத்தன. பறந்து போயின. பறவைகளின் மூதாதைகள் இவையே.

பூமியை மீண்டும் பனி மூடிக் கொண்டது. அந்தக் குளிர் தாங்க முடியாமல் இவை அழிந்தன. பல நூற்றாண்டுகள் வரை பனி கவிந்திருந்தது. பிறகு பனி விலகியது.

குட்டி போட்டுப் பால் கொடுக்கும் உயிர் இனங்கள் தோன்றின. குதிரை, யானை, முதலிய பல்வேறு மிருகங்களும் தோன்றின. மலருள்ள செடிகளும் மரங்களும் தோன்றின.

ஆயிரக்கணக்கான ஆண்டுகள் சென்றன. மலைகளிலும், காடுகளிலும் இருந்த பிராணிகள் மெதுவாகச் சமவெளிக்குச் சென்றன.

அவற்றுடன் செல்லாது தனித்து நின்றன சில. அவை குரங்குகள். இவை, மரங்களிலே வேகமாக ஏறின. தாவித்திரிந்தன. கிளைகளைப் பிடித்து ஊசலாடின.

இவற்றால் இவற்றின் கைகளும், கால்களும் வலுப்பெற்றன. இடுப்பிலே வலு உண்டாயிற்று. நிமிர்ந்து நிற்கத் தொடங்கின இவ்விதம் நிமிர்ந்து நின்ற இனமே மனித குலத்தின் முன் தோன்றல்.

ஆகவே, இந்த உலகமானது ஒரே நாளைய படைப்பு அன்று; ஒன்பது நாளைய படைப்பும் அன்று. காலப் போக்கில் மாறி மாறித் தோன்றியது ஆகும்.

முன்னூறு கோடி ஆண்டுகள் முன்பு தோன்றி மாறி மாறி இன்றைய நிலையை அடைந்திருக்கிறது.

உலகில் உள்ள உயிர் இனங்கள் திடீரென்று தோன்றவில்லை. ஒரு கரு உயிரிலிருந்து தோன்றி, மாறி, மாறி, பல கரு உயிர்களாகப் பரிணமித்திருக்கின்றன.

வெளித்தோற்றத்தில் பல் வேறு இனங்களாகத் தோன்றலாம். எனினும் உயிர்க் குலம் ஒன்றே. அதன் ஆதியும் ஒன்றே.

'காக்கைகள் கூவக் கலங்கினேன்' என்றும், "வாடிய பயிரைக் கண்டபோது உள நடுக்குற்றேன்" என்றும் அருளிய வடலூர் வள்ளலாரின் திருவாக்கை நோக்குக.