உலகம் பிறந்த கதை/உயிர்ப் பாசியின் தோற்றம்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

26. உயிர்ப் பாசியின் தோற்றம்

ஆதியில் உயிர் எப்படித் தோன்றியது? இது மிகவும் சிக்கலான கேள்வி. இதற்குப் பலர் பலவிதமான பதில் கூறுவர்.

ஓபரின் என்பவர் ரஷ்ய அறிஞர். பல ஆண்டுகளாக இது பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டவர். அவர் என்ன சொல்கிறார்?

கோடிக் கணக்கான ஆண்டுகள் முன்பு அதாவது சுமார் நூற்று ஐம்பது கோடி ஆண்டுகள் முன்பு, உலகம் எப்படி இருந்தது? கடல்கள் தோன்றின; மலைகள் தோன்றின; ஆறுகள் தோன்றின; பூமியில் இருந்த தாதுப் பொருள்களை எல்லாம் ஆறுகள் கடலில் கொண்டு சேர்த்தன.

கடல் நீர் கொந்தளித்துக் கொண்டிருந்தது. அலை மோதிக் கொண்டிருந்தது.

மோதல்! மோதல்! ஓயாத மோதல். ஓராண்டா நூறாண்டா? ஆயிரக் கணக்கான ஆண்டுகள்.

நமது வீடுகளிலே பெண்கள் தயிர் கடைவார்கள். அப்போது என்ன காண்கிறோம்? தயிரிலே கலந்துள்ள சத்து வெளிப்படுதல் காண்கிறோம். வெண்ணெய் திரண்டு வரல் காண்கிறோம்.

கோடிக்கணக்கான ஆண்டுகள் முன்பு கடலிலும் இப்படி ஏற்பட்டது. இயற்கையின் வேகம் கடலைக் கடைந்தது. அதாவது கடல் கொந்தளித்தது. அலைகள் எழுந்தன; விழுந்தன.

இவற்றால் என்ன ஆயிற்று? கடல் நீரிலே கலந்திருந்த தாதுப் பொருள்களிடையே ஒருவித ரசாயனச் சேர்க்கை உண்டாயிற்று.

கார்போ ஹைட்ரேட்ஸ் தோன்றின. அதாவது என்ன? கார்பனும் ஹைட்ரஜனும் கலந்த அணுச்சேர்க்கை. இந்த அணுச் சேர்க்கை என்ன ஆயிற்று? குமிழி போல் நீரில் மிதந்தது. அதைச் சுற்றி நீர் படிந்தது.

இதற்குக் 'கோசர்வேட்' என்று சொல்கிறார்கள். சூரியனுடைய ஒளிக்கதிர் இவற்றின் மீது வீசவே என்ன ஆயிற்று?

புரொடோபிளாசம்' என்கிற உயிர்க் கஞ்சி எப்படி இருக்கிறதோ அந்த மாதிரி இந்த கோசர்வேட்டுகளும் ஆயின.

நாளடைவில் இந்தக் கோசர்வேட்டுகள் வளர்ந்தன. உயிர்ப்பாசி தோன்றியது.

இவ்விதம் ஓபரின் சொல்கிறார்.