உள்ளடக்கத்துக்குச் செல்

உலகம் பிறந்த கதை/முன்னுரை

விக்கிமூலம் இலிருந்து
முன்னுரை

நான் ஒரு பத்திரிகைக்காரன்; நிருபர். நிருபர்களின் தொழில் என்ன? தாம் கண்டவற்றை அறிவித்தல்; அறிந்தவற்றைச் சுவையுடன் அறிவித்தல்; விளங்கும் வகையில் தெரிவித்தல்.

நிருபர் என்ற முறையிலேயே இப்புத்தகத்தை எழுதியுள்ளேன். எல்லாம் அறிந்தவன் என்ற எண்ணத்தினால் அன்று.

எல்லாம் அறிந்தவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதையே எழுதியிருக்கிறேன்,

தமிழ் மொழியிலே அறிவியல் நூல்கள் வேண்டும் என்ற குரல் எங்கும் எழுப்பப்படுகிறது.

சிலர் இம்முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அவை பெரும்பாலும் பள்ளிகளிலும், கல்லூரிகளிலுமே இடம் பெற்றுள்ளன. ஏன்? அம்மாணவர்களின் பாடத்திட்ட வரம்புக்கு ஏற்றவாறு அப்புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு உள்ளன.

நமது நாட்டிலே உள்ள மக்களில் பெரும்பாலோர் கல்லூரிகளில் பயிலும் வாய்ப்புப் பெறாதோரே. விஞ்ஞானம் நிகழ்த்தியுள்ள புதுமைகளினை அறியத் துடிக்கும் உள்ளத்தினர் இவர். இவர் தமக்கு நூல் எழுதுவார் இலர்.

புதிய கருத்துக்களைத் தமிழ் மொழியில் கொண்டு வரல் வேண்டும். ஆனால் அவை இந்தியப் பண்புடன் தொடர்பு கொள்ளாமல் விலகி நிற்றல் கூடாது.

இத்தகைய உள்ளுணர்வுடன் இப்புத்தகத்தை எழுதியுள்ளேன். எனது முயற்சியிலே எவ்வளவு தூரம் வெற்றி யடைந்துள்ளேன் என்பதை நான் அறியேன்.

இருபத்தைந்து ஆண்டுகள் முன்பு கட்டுரைகளாகப் பத்திரிகையிலே வெளிவந்த விஷயம் இது.

பின்னே 1956ம் ஆண்டு நூல் வடிவில் வெளிவந்தது.

முதன் முதலாகத் தமிழ் மொழியிலே இதுபற்றி வெளிவந்த நால் இதுவே.

அப்போது அன்பர் பலர் பாராட்டினர்: உற்சாக மூட்டினர்.

நீண்டகால உறக்கத்தின் பின் இந்நூலின் மறு பதிப்பு இப்போது வெளிவருகிறது. இந்நூலை வெளியிட என் மனைவி திருமதி ஜலஜா சக்திதாசன் அவர்களும் பெரிதும் உதவினார்.

இதனை வெளியிட முன்வந்த பதிப்பகத்தாருக்கு எனது நன்றி.

சக்திதாசன் சுப்பிரமணியன்[1]

  1. இந்நூல்வெளிவருமுன் இவர் அமரராகி விட்டார்.