உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்/சரித்திரம் சமைத்த சான்றோன்
சூரியன்மறையாத பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் அதிகாரம் நாஜி போர் வெறியன் இட்லரால் பறிபோய் விடுமோ என்ற பயங்கர நிலை இரண்டாவது உலக யுத்த காலத்தில் இங்கிலாந்து நாட்டிற்கு இருந்தது. கொஞ்சம் அயர்ந்திருந்தால் அல்லது அலட்சியமாக இருந்திருந்தால் இங்கிலாந்து என்ற நாடே தெரியாமல் சுடுகாடாக மாறிவிட்டிருக்கும்.
சுதந்திரத்திற்கு சவாலாக அமைந்த நெருக்கடியான அந்தப் போர்க்கால நேரத்தில் துணிந்து முன்வந்து பொறுப்பேற்று இங்கிலாந்து நாட்டைக் காப்பாற்றிய பெருமைக்குரிய இரும்பு மனிதர் சர்வின்சென்ட் சர்ச்சில்.
இங்கிலாந்தின் சிறப்பிற்கும், பெருமைக்கும், புகழுக்கும், முன்னேற்றத்திற்கும் உழைத்த எத்தனையோ பெருமக்கள் அந்த நாட்டில் தோன்றினார்கள் என்றாலும் இங்கிலாந்து நாட்டின் சுதந்திர சிற்பி என்ற புகழிற்கு இலக்காக இருந்தவர் பிரதமர் சர்.வின்சென்ட்சர்ச்சில்தான்.
இங்கிலாந்து நாட்டை இழந்தாலும் இழப்போம், ஆனால், ஷேக்ஸ்பியர் இலக்கியத்தை இழக்கமாட்டோம் என்று உலக இலக்கிய உலகிற்கு சவால் விட்ட இலக்கிய மேதை பிரதமர் சர்.வின்சென்ட்சர்ச்சில்.90 வயதுக்குமேல் பழுத்த பழமாக, கனிந்த கனியாக, நிறை வாழ்வு வாழ்ந்து சரித்திரம் சமைத்த சான்றோன் என்ற பெருமையை நிலைநாட்டிவிட்டு மறைந்த மாமேதை தான், பிரிட்டிஷ் முன்னாள் பிரதமர் சர்.வின்ஸ்சென்ட்சர்ச்சில்.
அவர் உயிர் வாழ்ந்த காலத்தில் மறக்கமுடியாத அற்புத ராஜதந்திரியாக விளங்கியவர். அவருடைய அறிவாற்றல் மிக்க நாவன்மைப் பேச்சுகள், சுறுசுறுப்பான சாதனைகள், நுட்பமான சிந்தனைகள், நுண்மாண் நுழைப்புல நூலறிவுகள், கம்பீரமான தோற்றத்தின் உணர்வுகள் ஆகியவற்றால் அவர் உலகத்தின் மாமனிதராக நடமாடினார். விடுதலைப் போராட்டக்காலத்திலே சர்ச்சில் இந்தியருக்கு நேர் விரோதியாக இருந்தார். பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திலிருந்து இந்தியாவைப் பிரிப்பதா என்றார். பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் மணிமுடியிலிருந்து இந்தியா என்ற ஒளிமிக்க ஒரு வைரத்தை தூக்கி எறிவதற்காக நான் ஆட்சி பொறுப்பை ஏற்கவில்லை என்று சர்ச்சில் பிரதமராக இருந்த போது அன்றைய பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் முழக்கமிட்ட அந்த ஆவேசம் இந்தியர்கள் நெஞ்சைத்திலே எரி ஈட்டிபோல் எரிந்தன.
இவ்வாறு அவர் முழக்கமிட்டபேச்சின் உணர்வுகளிலே பொங்கி வழிந்த அவரது தேசபக்தியை நாம் தெளிவாகப் பார்க்கமுடிகிறது. இவருக்கு இருந்த அந்த உணர்வு இந்திய மக்களுக்கு இருக்காதா? சர்ச்சிலின் மனப்பண்பை இரண்டு கோணங்களில் நின்று பார்க்கலாம். இரண்டும் ஒன்றுக்கொன்று நேர் எதிரான துருவ கோணங்களாகும்.
இந்திய விடுதலைப் போர் காந்தியடிகள் தலைமையிலே நடைபெற்றபோது, இர்வின் பிரபு 1931-32ம் ஆண்டில் இந்தியாவின் வைசிராயாக இருந்தார். அக்காலத்திலே காந்தி-இர்வின் ஒப்பந்தம் என்ற ஓர் உடன்படிக்கை ஏற்பட்டது.
அந்தப் பேச்சின்போது காந்தியடிகள் கலந்து கொண்டதைப் பற்றி இங்கிலாந்து பாராளுமன்றத்திலே வின்ஸ்டன் சர்ச்சில் என்ன பேசினார் தெரியுமா?
“ஒரு காலத்தில் இரண்டாந்தர வழக்குரைஞராக இருந்த காந்தி, இப்போது அரசநிந்தனைப் பரதேசியாகி இருக்கும் இந்த ஆள், அரசப் பிரதிநிதியின் மாளிகைப் படியிலே அரை நிர்வாணப் பக்கிரிக்கோலத்தோடு ஏறி இருக்கிறார். மாட்சிமை மிக்க மன்னரின் பிரதிநிதியுடன் சரிசமானமாய் அமர்ந்து பேசுகிறார். இந்தக் காட்சியை நினைக்கும் போது என் நெஞ்சம் கொந்தளிக்கின்றது. அருவருப்பும் - அவமானமும் அடைந்து நான் துடிக்கிறேன்.” என்றார்.
அடுத்து. இந்தியாவில் ‘ஜாலியன் வாலாபாக்’ என்ற படுகொலை நடந்த நேரம். இந்தப் படுகொலையை பிரிட்டிஷ் அரசு சார்பாக ஜெனரல் டயர் என்ற கொடியவன் நடத்தினான். இந்தச் செய்தியை கேள்விப்பட்ட சர்ச்சில் துடிதுடித்து “மன்னர் பிரானின் அன்புக்குப் பாத்திரமான மக்களை ஈவிரக்கம் கொஞ்சமும் இல்லாமல் படுகொலை செய்தவன் எவனாக இருந்தாலும், அவனைக் கடுமையாகத் தண்டித்தே ஆகவேண்டும்” என்றார்.
இந்த இரண்டு பேச்சுக்களால் நாம் புரிந்து கொள்வது என்னவென்றால், சர்ச்சில் இந்திய மக்களை வெறுக்கவில்லை; தனிப்பட்ட முறையில் அவர் காந்தியடிகளையும் கோபிக்கவில்லை; ஆனால், இந்தியா பிரிட்டிஷ் பேரரசின் ஒரு பகுதியிலே இருந்து பிரிந்து போகிறதே என்ற சாம்ராஜ்ய மனப்போக்கு, இந்தியாவை இழப்பதைப் பற்றிய சிந்தனை, அவரது மனத்திலே கொந்தளிக்கும் கோபத்தை உண்டாக்கி விட்டதை அல்லவா தெரிவிக்கின்றது?
இதுபோலவே, 1950-ம் ஆண்டிலே மற்றொரு சம்பவம். நம்முடைய பண்டித நேரு அவர்கள், இந்தியாவின் பிரதமர் பொறுப்பை ஏற்ற பிறகு, அமெரிக்கா சென்றிருந்தார். திரும்பி இந்தியாவரும் போது, இங்கிலாந்து நாட்டில் குறிப்பாக லண்டன் மாநகரில் சில நாட்கள் தங்கியிருந்தார்.
அப்போது பிரிட்டிஷ் பிரதமராக இருந்தவர் அட்லி பிரபு. அவர் ஒரு விருந்து நமது நேரு அவர்களுக்குக் கொடுத்தார். அந்த விருந்தின் போது அட்லி பிரபு பண்டிதநேருவுக்கு சர்சிலை அறிமுகப்படுத்தினார். நட்புறவோடு சர்ச்சில் நேருவின் கைகளைப் பற்றிக் குலுக்கித் தனது மகிழ்ச்சியைத் தெரிவித்தபோது;
“எனக்கு ஒர் ஆசை, நானும் உங்களுடன் அமெரிக்காவுக்குச் சென்று அமெரிக்க மக்களுக்கு உங்களை அறிமுகப்படுத்த வேண்டும். அத்தகைய ஒரு சந்தர்ப்பம் எனக்குக் கிடைக்கும்போது என்ன சொல்லுவேன் தெரியுமா?
“இதோ இந்தப் பெரிய மனிதர் பகைமையையும், பயத்தையும் வென்றவர்!” என்று தான் கூறியிருப்பேன்" என்றார் சர்ச்சில்.
சர்ச்சிலின் பாராட்டுரையைக் கேட்ட பிரதமர் நேரு, இது எனது தகுதிக்கு மீறிய மிக உயர்ந்த புகழுரை என்று அவருக்கு நன்றி தெரிவித்தார்.
உடனே சர்ச்சில் பிரதமர் நேருவைக் கட்டித் தழுவிக் கொண்டு, ‘மிஸ்டர் நேரு’ இது முகஸ்துதியல்ல; உடனே எனது உள்ளத்தில் உந்திய பேச்சுமல்ல; இதைப் பற்றி நான் மிகவும் சிந்தித்து வைத்திருக்கிறேன். எனது மனப்பூர்வமான ஆசையைத்தான் அப்படிக் குறிப்பிட்டேன்” என்றார்.
இந்தியா சுதந்திரம் பெற்றதற்குப் பிறகு, பிரிட்டிஷ் ஆட்சியின் நேர் எதிரியாக இருக்கும் என்று சர்ச்சில் நினைத்தார். ஆனால், இந்தியா இன்றும் காமன்வெல்த் நாடுகளுடன் இணைந்து ஒரு நட்பு நாடாகவே திகழ்வதற்கு காரணம் பகைபாராட்டாத நேருவின் ஜனநாயகப் பண்பல்லவா? இந்தப் பண்பை சர்ச்சில் சாகும்வரை எண்ணி மகிழ்ச்சியுடன் அன்றே, நேரு எதிரிலேயே கண்ணீர் விட்டார்.
எந்த சர்ச்சில், பெருமகனார் காந்தியடிகளாரைச் சுடு சொற்களால் தாக்கிக் கடுமையாகக் கண்டனம் செய்து பேசினாரோ, அதே சர்ச்சில் பிறகு, காந்தியடிகளைப் பற்றிப் பாராட்டிப் பேசியபோது,
“பகைவரை வெல்லுவதுதான் மிஸ்டர் காந்தியின் நோக்கம் என்று எண்ணினேன். ஆனால், அவர் பகைமையை வென்று என்னைப் பெரும் வியப்பில் ஆழ்த்திய மகான் என்றார்!