உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்/டொமினிகன் சுதந்திர சிற்பி

விக்கிமூலம் இலிருந்து

டொமினிகன் சுதந்திர சிற்பி ‘ஜூவான் பாஷ்’

உலக நாடுகளின் சுதந்திர சிற்பிகளில் டொமினிகன் நாட்டில் குடியரசுத்தலைவராகத் திகழ்ந்தவர் ஜூவான் பாஷ். டொமினிகன் குடியரசு இலத்தீன் அமெரிக்காவில் மேற்கு இந்தியத் தீவுகள் ஒன்றில் உள்ளது. இதன் பரப்பளவு ஐரோப்பாக் கண்டத்தில் உள்ள பெல்ஜியம் என்ற நாட்டைப் போல இரண்டு மடங்கு பெரியது. ஒரு தீவின் பாதியில் டொமினிகன் மறுபாதியில் ஹெய்டி நாடும் உள்ளன. பின்தங்கியுள்ள நாடு முன்னணியில் இடம் பெற்று வருவதற்கும், மக்களாட்சி ஆட்சி முறை மறுபடி வரப் போராடியதற்கும் டொமினிகன் குடியரசு ஒர் எடுத்துக்காட்டு.

ஒரு சிறிய குடியரசின் ஜனாதிபதியாக இருந்தாலும் ஜூவான் பாஷ் உலகப் புகழ் பெற்றவராக ஆனார். ஒருநேரத்தில் டொமினிகன் நாடு ட்ருஜில்லோ என்ற கொடுங்கோலன் ஆட்சியின் கீழ் அகப்பட்டுத் தத்தளித்து இருந்தது. அந்த நாட்டில் சுதந்திரம் என்ற பேச்சே இல்லை. பட்டியில் அடைக்கப்பட்ட ஆடு, மாடுகள் போல மக்கள் நடத்தப்பட்டார்கள். எழுத்துரிமை, பேச்சுரிமை அந்த நாட்டில் கிடையாது ‘ம்’ என்றால் சிறைவாசம் ‘ஏன்’ என்றால் வனவாசம் என்ற நிலையில் மிருகங்களுக்கும் மக்களுக்குமிடையே வேற்றுமையே இல்லை. அந்த அளவிற்கு நாட்டில் கொடுங்கோல் ஆட்சி நீடித்துக் கொண்டிருந்தது.


ட்ருஜில்லோ கொடுங்கோலர்கள் ஜூவான் பாஷை இருபது ஆண்டுகளுக்கு மேலாக நாடு கடத்தினார்கள். புரட்சிக்காரரை நாட்டைவிட்டுத் துரத்திவிட்டால், நாட்டில் புரட்சியே அஸ்தமித்துவிடும் என்று அந்தக் கொடுங்கோலர்கள் எண்ணினார்கள். ஆனால் அவர்கள் எண்ணம் ஈடேறவில்லை. நாடு கடத்தப்பட்ட ஜூவான் பாஷ் தன்னைப் போல நாடு கடத்தப்பட்ட நாட்டு பற்றுள்ள வீரர்களையெல்லாம் தேடிக்கண்டுபிடித்து புரட்சி இயக்கம் ஒன்றை உருவாக்கினார். அங்கிருந்த படியே தாய்நாட்டின் கொடுங்கோலர்கள் மிரண்டு பீதி அடையுமாறு சுதந்திர இயக்கத்தை நடத்தினார். இவ்வாறு, கால் நூற்றாண்டு காலமாக சுதந்திரப் போரை ஜூவான் பாஷ் நடத்தி இறுதியில் வெற்றி பெற்றார். டொமினிகன் நாடு விடுதலை பெற்றது. 

விடுதலைப் புரட்சிக்கு வித்திட்ட வீரராக திகழ்ந்த ஜூவான் பாஷ் ஒரு சிறந்த இலக்கிய வித்தகர். இன்றைய தலைமுறையின் இலத்தின் அமெரிக்கா எழுத்தாளர்களில் ஜூவான் பாஷக்கு ஒரு சிறப்பான இடம் உண்டு. அரசியல், சமுதாய, முற்போக்குக் கருத்துக்களைக் கொண்ட நூல்கள் மட்டுமன்றி சிறந்த சிறுகதைகளையும் எழுதியுள்ளார். தம்முடைய தாய்மொழியில் இவர் எழுதிய பல நூல்கள் ஆங்கிலம், ப்ரெஞ்சு மொழிகளில் மொழி பெயர்க்கபட்டுள்ளன. டொமினிகன் நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்பதற்கு முன்னால் ஐரோப்பிய நாடுகளில் இவர் சுற்றுப்பயணம் வந்தார். அந்தந்த நாடுகளில் அரசியல்வாதிகள் சமுகத்தொண்டர்கள் தொழிலதிபர்கள், தொழிலாளர் சங்கத் தலைவர்கள், விஞ்ஞானிகள், எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், கல்வி அதிகாரிகள் போன்றவர்களைச் சந்தித்து அவர்களுடன் அளவளாவி அவர் அனுபவம் பெற்றுத் திரும்பி வந்தார். உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர்களில் ஐரோப்பிய தலைவர்களையும் லத்தின் அமெரிக்காவைப் பற்றி எழுதியுள்ள நூலாசிரியர்களையும் பேட்டி கண்டார்.

டொமினிக்கன் குடியரசுக்கு சமுதாய அரசியல் துறைகளில் எப்படிச் சீர்திருத்தங்கள் செய்யப் போகிறார் என்ற கேள்வி இந்தப் பேட்டியில் கேட்கப்பட்டது. இதற்கு ஜூவான் பாஷ் பதில் கூறும் போது எங்கள் நாட்டு மக்களுக்கு, மக்களாட்சி என்னவென்று தெரியாது. பொருளாதார, சமுதாய, அரசியல் துறைகளில் சுதந்திரம் பெறுவது என்பது கனவிலும் பெறாத ஓர் அனுபவம். எனவே, ஏட்டுச் சீர்திருத்தங்கள் ஏட்டளவிலே இல்லாமல் பயன்தரத்தக்க அளவில் செயல்படச் செய்வது கால அட்டவணையில் முதலிடம் பெற வேண்டும்.

மற்றொரு கேள்வி அவரிடம் கேட்டப்பட்ட போது விவாசாயத் துறையில் இவர் சீர்திருத்தம் செய்வதற்கு என்ன திட்டம் போடுவார் என்பதற்கு அவர்கூறிய பதில் வருமாறு:

“சர்வாதிகாரி ட்ருஜில்லோ ஆட்சியில் நாட்டில் பெருவாரியான நிலம், சர்வாதிகாரியான அவருடைய சுற்றத்தார்க்குச் செந்தமாக இருந்தது. இப்போது அந்த நிலத்தை பாட்டாளிகளுக்குப் பங்கிடுவது முதல் சீர்திருத்தமாகும். பிறகு கூட்டுறவு இயக்கத்தை தோற்றுவித்து அதன் மூலம் இந்த நிலத்தின் விளைச்சல் பொருளை விற்பனை செய்து பாட்டாளிகளுக்கு போதிய அளவு ஊதியம் கிடைக்க வழி தேடவேண்டும். பாட்டாளிகள் ஒவ்வொருவருக்கும் மாதம் ஒன்றுக்கு ஏறத்தாழ நூறு டாலர் விகிதம் பெற தக்க ஊக்கம் அளிக்க வேண்டும். உழைப்பாளிகளுக்கு நிலம் தங்கள் சொத்து என்கின்ற உறுதியும் கூட்டுறவு இயக்கம் தங்கள் பொருளாதார உதவிக்கு முன்னேற்றதிற்கு அமைந்த ஒரு கருவி என்ற மனப்பான்மையும் வளர அடிகோல வேண்டும் என்று கூறினார்”

டொமினிகன் நாட்டிற்கு அண்டை நாடான ஹெய்டியில் சர்வாதிகாரமான நிர்வாகம் இயங்குகிறது. எல்லைப் புறத்தில் இத்தகைய நிர்வாகம் நடப்பது நாட்டிற்கு தீமை விளைவிப்பதாகும். எனவே ஜூவான் பாஷ் இந்த பிரச்சனைக்கு மிகவும் எச்சரிக்கையுடன் தீர்வுகண்டார்.

இவர் சிறு வயதில் ஹெய்டி நாட்டில் பிறந்து வளர்ந்தவர். அதனால் அந்த நாட்டின் மீது அவருக்கு ஒரு தனி அபிமானம் இருந்தது. ஆதலால் எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் ஹெய்டி நாட்டுடன் சண்டை சச்சரவு, தகராறு, கலவரம் எதுவும் உருவாகாத விதத்தில் தீர்க்கப்பட வேண்டும் என்று சிந்தித்து முடிவுகண்டார்.

ஜூவான் பாஷ் தலைமையில் இயங்கும் டொமினிகன் குடியரசு நாடு எதிர்காலத்தில் மிக உயர்ந்த உன்னத சிறப்படையும் என்று மக்கள் எதிர்பார்த்து வாழ்கிறார்கள். அவர்கள் எண்ணம் என்னவோ அதற்கேற்றவாறு ஆட்சியும் நடைபெற்றது.