உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்/தூக்கு மேடை முழக்கம்
எனது தாய் நாடு சுதந்திரம் அடைய வேண்டும். அந்த மண்ணின் சுதந்திரக் காற்றை நான் சுவாசிக்க வேண்டும். செக்கோஸ்லேவியா நாட்டின், விடுதலை வீரன் ஜீலியஸ்பியூசிக், துக்கு மேடையிலே முழக்கமிட்டார். “ஏ. கொடுங்கோலர்களே, எனது நாட்டின் உயிர் நாடிகள், உயிர்மூச்சைக் கொன்றுவிட்டதாக எண்ணி மனப்பால் குடிக்காதீர்கள். நீங்கள் நினைப்பதுபோல் நான் குற்றவாளி அல்ல. என் நாட்டு மண் சுதந்திர பூமியாகக் காட்சி தர வேண்டும் என்று ஆசைப்படும் நான் குற்றவாளியா? ஊருக்குள் எல்லை தாண்டி உத்திரவிடாமல் போர்க்கோலம் பூண்டு என் தாய்நாட்டிலும் கால்வைத்த கொள்ளையர்களே நீங்கள் தான் குற்றவாளி. நான் தான் நீதிபதி. இந்தத் தூக்குமேடைதான் நீதிபதியாகிய என்னுடைய நீதிமன்றம், இந்த நீதிமன்றத்திலிருந்து நீதிபதியாகிய நான் உங்களுக்குத் தீர்ப்பு அளிக்கிறேன். உங்கள் ஆட்சிக்கு கடைசிக் காலம் நெருங்கிவிட்டது. உங்கள் சவக்குழியை நீங்களே தோண்ட தயார் ஆகுங்கள்”. என்று துக்குமேடையிலே நின்று விடுதலை வீரன் ஜீலியஸ் பியூசிக் என்று முழக்கமிட்டார்.
தூக்கு மேடையிலே நின்று கொண்டு அந்த மாவீரன் தீர்பளித்ததற்காக, அவன் உயிரைவிட்டது என்னவோ உண்மை, ஆனால் அந்த மேடையிலே நின்ற அந்த மாவீரன் அளித்த நீதித்தீர்ப்பினைகாலம் பிறகு நிறைவேற்றியது.
1942-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23-ம் நாளில் இட்லரின் இரகசிய போலீஸ் அந்த விடுதலை வீரனைக் கைது செய்தது. பிரேக் நகர சிறையிலே அடைத்தது. சித்திரவதையும், கொடுமையும் செய்தது. அவரை ஒரு துரோகி என்று இட்லரின் படை நாஜி வெறியர்கள் பழி சுமத்தினார்கள். ஆனால், அந்த நாட்டு மக்கள் அவர் ஒரு வீரர், தேசத் தியாகி, விடுதலை வீரர் என்று எதிர்குரல் எழுப்பினார்கள். 1943ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், பெர்லின் நகரில் அந்த நாஜி வெறியர்கள் அம்மாவீரனைத் தூக்கிலிட்டுக் கொன்றார்கள்.
தூக்கு மேடையிலே நின்ற, அந்த விடுதலைச் சிங்கம் ஜீலியஸ் பியூலிக், அலட்சியமாக நகைத்தது. மனிதகுலத்தின் கொடிய எதிரிகளை நாஜி வெறியர்களை நோக்கி கேலியாகச் சிரித்தார்.
இன்பத்திற்காக வாழ்ந்தேன், இன்பவாழ்விற்காக போர்க்களம் புகுந்தேன், இன்பம் தரும் சுதந்திரத்திற்காகவே இப்போது செத்துக்கொண்டிருக்கிறேன். ஆகவே துன்பம் என் பெயரோடு என்றுமே இணைக்கப்படக் கூடாது. அது முறையல்ல. நான் சாகும் போதும் இன்பத்துடன், இனிய சிந்தனையுடன் அஞ்சாநெஞ்சன் வீரத்துடன், தேசபக்தி எண்ணத்துடன் இருந்தேன் என்பதை இந்த உலகம் புரிந்துகொள்ளவேண்டும்.
ஜீலியஸ் பியூஸ்க் அன்று தூக்குமேடையிலே மாண்டார். ஆனால், சாவதற்கு சில மணி நேரத்திற்கு முன்னால், மரணமில்லா புகழ் படைத்த இலக்கியம் ஒன்றின் ஆசிரியராக விளங்கினார் என்பதை, கொஞ்சம் காலம் கடந்துதான் உலகம் உணர்ந்தது. தூக்குமேடை ஏறுவதற்கு முன் நாள் இரவு, தனது சிந்தனையிலே வழிந்து கொண்டிருந்த சிந்தனை ஊற்றுப் பெருக்கை அள்ளி மக்களுக்கு வழங்க எனக்கு வாய்ப்பு இல்லையே என பியூஸ்க் மனம் புழுங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது “அய்யா” என்று ஒரு குரல் கேட்டது. அந்த விடுதலை வீரன் திரும்பிப் பார்த்தான். சிறைக் கம்பிகளுக்கு வெளியே நின்றுகொண்டிருந்த அந்தக்காவலன் வணக்கம் என்றான். கனல் தெறிக்கும் கண்ளோடு என்ன என்று கேட்டார். அய்யா தாய்நாட்டு மக்களின் தெய்வம் என தங்களைப் போற்றுபவர்களில் நானும் ஒருவன். இறுதி காலத்தில் ஏதோ உங்களுக்கு ஓர் அற்ப உதவி செய்தேன் என்ற பேறு எனக்கு கிடைக்குமா என்றான்.
பியூஸிக், மகிழ்ச்சியோடு அவனை நோக்கி எழுதுவதற்கு கொஞ்சம் தாளும், எழுதுகோலும் கொடுப்பாயா என்று கேட்டார். என் உயிர்போவதானாலும் நான் கவலைப்படவில்லை. கொண்டு வந்து கொடுக்கிறேன் தலைவா என்று சென்று எழுதுகோலும், தாளும் கொண்டுவந்து கொடுத்தான்.
அவற்றைப் பெற்ற அந்த மாவீரன் இரவெல்லாம் எழுதினான். பொழுது விடிய விடிய தன்னுடைய சிறை வரலாற்றை எழுதிக்கொண்டே இருந்தார். ஊற்றெடுத்த சிந்தனைக் கருவூலங்களைத் தாள்களில் எழுதினார். அன்று காலை காவலனை அழைத்து, நான் எழுதிய இந்த வரலாறு எனக்கு உயிர் நாடி போன்றது. இதைப் பாழ்படுத்தாமல் என்னுடைய மனைவியிடம் கொண்டுபோய் கொடுப்பீரா என்று மனமுருகிக் கேட்டார்.
கவலைப்படாதீர்கள். என்னுடைய உயிரை விட அதிக அக்கறையுடன் தங்கள் கட்டளைகளை, நிறைவேற்றியே தீருவேன் என்றான் காவலன். தன்னுடைய வாக்குறுதிப்படி பியூசிக்கின் மனைவியிடம் கொண்டு சேர்த்தான்.
பியூஸிக்கின் மனைவி அகஸ்டினா பியூஸிக் அந்த வரலாற்றை 1945-ம் ஆண்டு தூக்குமேடைக் குறிப்புகள் என்ற பெயரில் புத்தகமாக வெளியிட்டார். இந்த நூல் உலகப் பெரும் புகழ் பெற்றது. பியூஸிக் எழுதிய கடைசி நூல் என்றாலும், அதில் தனது சிறை வாழ்க்கையின் 311 நாட்கள் அந்த புத்தகத்தில் விவரமாக எழுதப்பட்டிருந்தன. அந்தக் காலத்தில், அந்த நேரத்தில் இப்படி பட்ட ஓர் உணர்ச்சியைத் தூண்டும் சிறை இலக்கியம், அன்று வரை தோன்றியதே இல்லை என்று உலக இலக்கிய மேதைகள் அந்த நூலைப் போற்றி புகழ்ந்துள்ளார்கள்.
உலகப் புகழ்பெற்ற பிரிட்டிஷ் எழுத்தாளர் ஜேம்ஸ் ஆல் ரிஜட் அந்த நூலைப் பற்றிக் கூறும்போது ஒரு வெற்றி வீரரின் உன்னத வீரம் என்று பாராட்டினார்.
மனிதனுடைய உள் உணர்வின் அஞ்சா நெஞ்சத்திற்கு, அது ஒரு சத்திய சாட்சி இலக்கியம். நெஞ்சை உருக்கும் கதை. பொருட் செறிவு, உள்ளடக்கம் நிறைந்த, தெளிவு நிறைந்த சிறந்த படைப்பு என்று அந்த நூலைப் பற்றி நியூ டைம்ஸ் என்ற பத்திரிக்கை புகழ்ந்து எழுதியிருந்தது.
இத்தகைய அஞ்சா நெஞ்சம் கொண்ட விடுதலை மாவீரன் ஜீலியஸ் பியூஸிக் செக்கோஸ்லேவியா என்ற நாட்டிலுள்ள, பிரேக் நகரில் 1903-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 23ம் தேதி பிறந்தார். அவர் ஓர் ஏழை உருக்காலைத் தொழிலாளியின் மகன். பிரேக் பல்கலைக் கழகத்தில் அம்மாவீரன் இலக்கியம், இசை, கலை ஆகிய துறைகளில் பயிற்சி பெற்றார். கல்வி கற்கும் காலத்தில் மாணவர் இயக்கங்களில் தீவிரமாகத் தொண்டாற்றினார். 1929ஆம் ஆண்டில் சிருஸ்டி என்ற ஒரு பத்திரிக்கை ஆசிரியராக இருந்தார். கனல் கக்கும் அவருடைய தேசபக்தி எழுத்துகளைக் கண்டு விடுதலைத் தத்துவத்திற்கு எதிரானவர்கள் கலங்கினார்கள், அஞ்சினார்கள். எப்படியெல்லாம் அவரைத் துன்பங்களில் சிக்க வைக்கலாம் அல்லது அழிக்கலாம் என்று திட்டமிட்டார்கள். தாய் மண்ணுக்கு விரோதமான இந்தத் துரோகிகளின் போக்கினை அம்மாவீரன் தெரிந்து கொண்டார். எந்த விதக் காரணமும் இல்லாமல் இந்த சூதுமதியினரின் சூழ்ச்சியில் சிக்கிச் சாவதைவிட, நாட்டுக்காக தொண்டாற்றி சாவதே மேல் என்று தனது உடலில் கடைசி மூச்சு உள்ள வரை நாட்டுக்குத் தொண்டாற்றுவதையே உன்னத நிலை, உயர்ந்த சேவை என்று கருதிய பியூஸிக் தலைமறைவாகத் தப்பிவிட்டார்.
அவரின் தலைமறைவு வாழ்க்கையின் போதும் ஓய்ந்து கிடக்கவில்லை, அப்போதும் கூட ஒரு செய்தித் தாளை துவக்கி நடத்தினார். மக்கள் மத்தியிலே அந்தப் பத்திரிக்கை பெரும் புகழ் பெற்றது. ஆனால், அதை அச்சு அடிக்கும் இடத்தை மட்டும் கண்டுபிடிக்க முடியவில்லை. அதன் முகவரியும் தெரிந்துகொள்ள முடியவில்லை. அதே நேரத்தில் இட்லரின் நாஜிப் படையை எதிர்த்து நூற்றுக்கணக்கான சிறு சிறு துண்டுகளை வெளியிட்டார்.
பிறகு 1930ஆம் ஆண்டில் சோவியத் யூனியனுக்கு அவரை செக்கோஸ்லேவியா நாட்டுத் தொழிலாளர்கள் அனுப்பி வைத்தார்கள். அங்கே சென்று திரும்பி வந்த பியூஸிக் சோவியத் யூனியனின் சோசலிசத் தத்துவத்தின் சிறப்புகளை கண்டு ஒரு புத்தகத்தை எழுதி வெளியிட்டார். இவ்வாறு அவர் பல நூல்களை எழுதினார். அவற்றில் ஒன்று தாயகத்தை நேசிக்கிறோம் என்ற நூல். இந்த நூல் விடுதலைப் போராட்டக் காலத்தில் செக் நாட்டு தொழிலாளர் வர்கத்தின் உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு எழுச்சியை உருவாக்கிப் புரட்சியைத் தூண்டிவிட்டது. பியூஸிக் எழுதிய கவிதைகள் ஏராளம். அவரது கவிதைகள் ஒவ்வொன்றும் மக்களிடையே தேசபக்திக் கனலை தூண்டிவிடும் போர்க்கருவியாக இருந்தது.
‘உலகின், நண்பர்களான உங்கள் அனைவரையும் நெஞ்சார நேசிக்கிறேன். அயர்ந்துவிடாதீர்! விழிப்புடன் இருங்கள். ஆம்! விழிப்புடன் இருங்கள் என்று தன் மனைவிக்கு எழுதிய தூக்குமேடை குறிப்புகள் என்ற வீர வரலாற்று நூலில் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு நாடு விடுதலை அடைவதற்கு எத்தகைய எழுச்சிகள், எப்படிப்பட்ட உணர்ச்சிகள் மக்களிடையே உருவாக வேண்டும் என்ற தத்துவத்தை விளக்கிய சுதந்திர மாவீரன் தூக்குமேடையில் முழங்கிய முழக்கம் அவன் இறந்ததற்கு பிறகு செக் நாட்டு மக்களின் உயர் வாழ்க்கை முழுமையடைய வேண்டும் என்ற சுதந்திர தாகத்தை ஊட்டியது.