உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்/வங்கம் தந்த விடுதலைச் சிங்கம்

விக்கிமூலம் இலிருந்து

வங்கம் தந்த விடுதலைச் சிங்கம்

“கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது” என்று நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை பாடியதற்கு ஏற்ப உலகத்துக்கு ஒரு புதுமையாக அகிம்சை வழியிலே அறப்போர் நடத்தி இந்திய நாட்டிற்கு விடுதலை பெற்றுத் தந்தார் மகாத்மா காந்தியடிகள்.


அந்த காந்தீய நெறியைப் பின்பற்றி உலகத்திலே பலர் அகிம்சை வழியிலே சமுதாய விடுதலையும் பெற்றுத் தந்துள்ளார்கள். குறிப்பாக அமெரிக்காகாந்தி மார்டீன் லூதர் கிங், அயர்லாந்து காந்தி டிவேலர்லரா போன்ற பலர் காந்திய வழியைப் பின்பற்றினார்கள்.

இந்தியத் திருநாட்டு சுதந்திரத்திற்காக காந்தீய வழியில் ஜவஹர்லால் நேரு, லால்பகதூர் சாஸ்திரி, வ.உ.சிதம்பரனார், காமராஜர், சுப்பிரமணிய சிவா, இராஜாஜி போன்ற எண்ணற்ற தேசப் பக்தர்கள் விடுதலை அறப்போரில் ஈடுபட்டு அளவற்ற தியாகங்கள் செய்துள்ளார்கள். இது, உலகவிடுதலைப் போரில் இதுவரை யாரும் வழிகாட்டியிராத ஒரு புதுமையானபோர் முறையாகும்.

“கொலைவாளினை எடுடா, மிகு கொடியோர் அறவே, குகைவாழ் ஒரு புலியே உயர் குணமேவிய தமிழா”

என்ற புரட்சி பாடலுக்கேற்ப காந்தியடிகளுக்கு மாறுபட்ட போக்கில் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு வேறு வழியில் நாட்டு விடுதலைக்காகப் போராடி தங்களது இன்னுயிரை ஈந்த உலக வீரர்கள் பலர். அவர்களுள் மாஜினி, கரிபால்டீ, லெனின், பர்மிய வீரர் அவுன்சான் போன்றவர்கள் உண்டு.

இவர்கள் ஈடுபட்டுள்ள போர்முறை வன்முறை என்றாலும் இவர்கள் உள்ளத்தில் அவரவர் நாட்டின் விடுதலையும் சமுதாய முன்னேற்றக் கருத்துக்களும் செஞ்சுடர் பரப்பிக் கொண்டிருந்த தேச பக்திக் கனல் ஒன்றுதான்.

இந்த வகையில் காந்தியடிகளைப் பின்பற்றி நடந்தோர்க்கும் மற்றவர்களுக்கும் இடையே வேறுபாடே இல்லை. அந்த தேசபக்த மாவீரர்களின் வரிசையிலே முதலிடம் வகிப்பவர் வங்கம் தந்த விடுதலைச் சிங்கம் நேதாஜி ஆவார்.

விடுதலை வீரர் சுபாஷ் சந்திர போஸை மக்கள் நேதாஜி என்றும் அழைப்பதுண்டு. அவர் விடுதலைப் போர் முறையிலே காந்தியடிகளிடம் வேறுபட்டு இருந்தாரே தவிர மாறுபட்டவராக இருக்கவில்லை. போர்முறையில் கருத்துவேறுபாடுகள் இருந்தாலும் நேதாஜி, மகாத்மா காந்தியினை மதிப்பிற்குரிய தலைவராக இறுதிவரை எண்ணியவராவர்.

காந்தியடிகளின் அறப்போர், சூரியன் மறையாத பிரிட்டீஷ் சாம்ராஜியத்தை இந்தியாவில் வேர் அறுக்குமா என அவர் உள்ளத்தில் தோன்றிய எழுச்சியின் விளைவாக விடுதலைக்கு தனிவழியே சென்று போராடினாரேயன்றி காந்தியடிகளுக்கு விரோதமாகச் செயல்படவேண்டும். என்பது அவர் நோக்கம் அல்ல. இந்திய நாடு விடுதலை பெற்றபின்னர்நேதாஜி உயிருடன் இருக்கும் வாய்ப்பினை பெற்றிருப்பாரானால் காந்தி வழிதான் வலிமைபடைத்தது என்ற அகிம்சை உண்மையினை அறிந்து அடிகளின் தலைமையினை மீண்டும் ஏற்றுநம்முடைய இந்திய நாட்டு குடியரசை முன்னேற்றுவிக்கும் அரும்பணியில் முன்வரிசையில் நின்றிருப்பார். அந்தப் பெரும் பேறு நமக்கு கிடைக்காதது துரதிர்ஷ்டமே ஆகும்.

ஆனாலும், நமக்கு பிரதமராக இருந்த பண்டிதர் நேரு அவர்கள் தலைமையில் அமைந்த பாரத குடியரசு, வங்கம் தந்தவிடுதலைச்சிங்கம் நேதாஜியின் வீரமிக்கவிடுதலைப் போராட்டத்தை இந்திய சுதந்திரப்போராட்டமாகவே ஏற்று அவருக்குபெருமையும் புகழையும் மதிப்பையும் வழங்கப் பின்வாங்கவில்லை.

எந்த வழியிலே நின்று நோதாஜி போராடிஇருந்தாலும் அவருடைய மனத்தில் குமுறி நின்ற இலட்சியம், குறிக்கோள், இந்திய சுதந்திரம் என்ற ஒன்றே தான்.

எனவே நேதாஜியும், காந்தியவழியில் விடுதலைக்காகப் போராடியவர் என்றுதான் பாரதமக்கள் கொண்டாடுகிறார்கள்.இந்த மக்கள் நோக்கத்தை அறிந்த நேருஜி அரசு, நேதாஜிக்குரிய நன்றி உணர்ச்சியைப் பிரதிபலித்துள்ளது.

வங்கச் சிங்கம் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பெற்றோர்கள் ஜானகி நாத் போஸ், பிரபாவதி ஆகியோருக்கு ஒன்பதாவது புதல்வராகப் பிறந்தார்.

கட்டாக் நகரில் உள்ள ஓர் ஆரம்பப் பள்ளியில் சுபாஷ் கல்வி கற்றார். அந்தப் பள்ளியில் ஆங்கிலேய மாணவர்களே அதிகமாக படித்துக்கொண்டிருந்தார்கள். அந்தப் பள்ளியில் போஸ் ஆறு ஆண்டுகள் கல்வி கற்றபின்னர் ராவென்ஷா உயர்நிலைப் பள்ளியில் மெட்ரிக்குலேஷன் வரை படித்தார். அதற்குப் பிறகு வங்காளத்தில் ஒரு கல்லூரியில் சேர்ந்து ஆனர்ட்ஸ் பட்டம் பெற்று முதல் மாணவராகத் திகழ்ந்தார். பிறகு இங்கிலாந்து சென்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஐ.சி.எஸ். பட்டம் பெற்றார்.

இந்த நேரத்தில், இந்தியாவில் காந்தியடிகள் ஒத்துழையாமைப் போர் என்ற ஒரு போராட்டத்தை துவக்கினார். அது உலகமெங்கும் ஓர் அரசியல் விழிப்புணர்ச்சியையும் வியப்பையும் உருவாக்கியது. இந்திய நாட்டில் காந்தியடிகள் மூட்டிய விடுதலைத் தீயின் புகை மூட்டத்தை போஸ் இங்கிலாந்தில் இருந்த படியே உணர்ந்தார். அவரது மனதில் தேசபக்தி உணர்ச்சி பொங்கி எழுச்சி பெற்றது. உடனே ஐ.சி.எஸ். பட்டத்தைத் தூக்கி எறிந்து விட்டு இந்தியாவிற்கு வந்தார்.

காந்தியடிகளை பம்பாயில் சந்தித்து அவரது ஆசியைப் பெற்றார். வங்கத்தில் ஒத்துழையாமைப் போரை ஏற்று நடத்திக் கொண்டிருந்த சித்தரஞ்சன் தாஸ் அவர்களையும் சந்தித்தார்.

சித்தரஞ்சன் தாஸை இந்திய மக்கள் சி.ஆர்.தாஸ் என்று அன்புடன் அழைப்பார்கள். அவர் சுபாஷ் சந்திர போஸ் இங்கிலாந்தில் படித்துக் கொண்டிருந்தபோதே அறிமுகமானவர். அதனால் ஐ.சி.எஸ். பட்டத்தை உதறித் தள்ளிவிட்டு தன்னை வந்து பார்த்த சுபாஷை பெரும் மகிழ்ச்சியுடன் வரவேற்றுப் பாராட்டினார்.கடமை உணர்ந்த தேசிய விடுதலை வீரன் என்று மக்களிடையே அறிமுகப் படுத்தினார்.

சுதந்திரப் போராட்ட செய்திகளை நாடெங்கும் பரப்பவும் போராட்டக் கொள்ளைகளுக்கு விளக்கம் தந்து வழிகாட்டவும் ‘முன்னோற்றம்’ என்ற பெயரில் பத்திரிக்கை ஒன்றை சி.ஆர். தாஸ் துவக்கினார். அதன் ஆசிரியர் பொறுப்பை அவர் சுபாஷ்க்கு வழங்கினார். பெரும் மகிழ்ச்சியுடன் ஆசிரியராகப் பொறுப்பேற்ற சுபாஷ் தனது எழுத்து வன்மையால் நாட்டிற்கு அருந்தொண்டு ஆற்றினார்.

இந்திய சுதந்திரப் போராட்டம் மகாத்மா தலைமையில் தீவிரமாக நடந்து கொண்டிருந்தபோது, சுபாஷ் முழுநேரத் தொண்டராகப் பொதுவாழ்வில் ஈடுபட்டார். கனல் கக்கும் தனது பேச்சு வன்மையால் இளைஞர்களைக் கவர்ந்தார். அவர்களை சக்திவாய்ந்த தொண்டர்காளாக உருவாக்கினார். அதனால் புதிய ஒரு தொண்டர் படையை அமைத்து அதன்தளபதியாக செயலாற்றினார். நாடெங்கும் இருந்த தீவிர இளைஞர்களைத் திரட்டி இராணுவம் போல கட்டுப்பாட்டுடன் அந்தப் படையை நடத்தினார்.

தீவிரவாதிகள் அனைவரும் போஸ் தலைமையில் திரண்டனர். தீவிரமான திட்டங்களையும் தீட்டினர். உணர்ச்சிமிக்க கருத்துக்களை பேசினர். இப்படிப்பட்ட புரட்சிகரமான போக்கில் சுபாஷ் செல்வாரேயானால் ஒரு பயங்கரபுரட்சியாளனாக எதிர்காலத்தில் மாறிவிடுவாரே என்று ஆங்கிலப் பேரரசு அஞ்சி நடுநடுங்கியது.

சுபாஷ் மீது பலவிதமாக பழிகளை பிரிட்டிஷ் அரசு சுமத்தியது. பக்கத்து நாடான பர்மாவுக்கு நாடு கடத்தியது. அங்கே மாந்தலே சிறையில் வைக்கப்பட்டார். அதே நேரத்தில் தீவிரவாதிகளை எல்லாம் பிரிட்டிஷ் அரசு கொடுமைப்படுத்தி சிறையில் அடைத்தது.

சிறைக் கொடுமை சுபாஷை வாட்டிவதைத்தது. பலமிக்க அவர் உடல் வாடியது. நோய்க்கு இலக்கானார். பிரிட்டிஷ் அரசு அவரை உடனே விடுதலை செய்தது.

போஸுக்கு நோய் மிகவும் மோசமாக இருந்ததால் ஐரோப்பாவில் உள்ள வியன்னாநகர மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றார். அப்பொழுது இந்தியாவிலே நடந்த காங்கிரஸ் கட்சிக் கூட்டத்தில் சுபாஷ் சந்திர போலை தலைவராக காங்கிரஸ் கட்சி தேர்ந்தெடுத்தது.

குஜாராத் மாநிலத்திலுள்ள அரிபுரா என்ற நகரில் காங்கிரஸ் பேரவை கூடியது. மக்கள் இலட்சக் கணக்கில் திரண்டு சுபாஷ் சந்திரபோஸ் தலைமையை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டார்கள். அப்போது அவர் ஆற்றிய தலைமை உரை பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தைக் குலைநடுங்க வைக்கும் வீரஉரையாக அமைந்தது.

அடுத்த ஆண்டும் சுபாஷ் சந்திர போஸ் அகில இந்திய காங்கிரஸ் பேரரவையின் தலைவர் ஆனார். பிரிட்டிஷ் பேரரசு இன்னும் ஆறு மாதங்களுக்குள் இந்திய நாட்டை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும் என்று அவர் எச்சரித்தார்.

போஸின் தீவிரமான இந்தப் பேச்சு காங்கிரஸ் பேரவையின் உள்ளும் புறமும் பலத்த எதிர்ப்பை கிளப்பியது. தீவிரமாக இருந்த இளைஞர்கள் எல்லாம் போஸ் பிரகடனத்தை முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை. காங்கிரசுக்கு போதிய பலம் இல்லாத நிலையில் இந்த பயங்கரப்புரட்சி நடவடிக்கையில் ஈடுபட்டால் எங்கே விடுதலைப் போராட்டத்திற்குத் தோல்வி வந்து விடுமோ என்று காங்கிரஸ் அஞ்சியது. ஆனால் சுபாஷ் சந்திரபோஸ் தனது முடிவில் உறுதியாக நின்றார். தனது போக்கை மாற்றிக்கொள்ள மறுத்து விட்டார்.

இந்திய தேசிய காங்கிரஸ் பேரவையில் தனது கருத்துக்களை ஏற்றுக்கொள்வோர் பெரும்பான்மையாக இல்லை என்பதைப் புரிந்துகொண்ட சுபாஷ் சந்திரபோஸ் பேரவையின் தலைமைப் பெறுப்பிலிருந்து விலகிவிட்டார். தனது இலட்சியம் எதுவோ அதே பாதைக்கு வழிவகுத்து நடமாடத் துணிந்துவிட்டார்.

அப்போது, இராண்டாவது உலகப்போர் துவங்கியது. உலகமெங்கும் ஒரே பரப்பரப்பு சூழ்நிலை.இந்தநேரத்தில், சுபாஷ் சந்திர போஸின் அதிதீவிர நடவடிக்கைகளைக் கண்டு பிரிட்டிஷ் பேரரசு பீதியடைந்தது. போர்க்கால நெருக்கடியை பயன்படுத்திக் கொண்டு சுபாஷ் சந்திரபோஸ் புரட்சி நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடுமே என்று கலங்கி அவரைச்சிறையில் அடைத்தது.

என்னை சிறையில் அடைத்தது ஏன்? காரணம் என்ன உடனடியாக விடுதலை செய்யாவிட்டால் விசாரணையின்றி என்னை சிறையில் அடைத்து வைத்ததை எதிர்த்து உண்ணாவிரதம் மேற்கொள்வேன் என்று சூளுரைத்து உண்ணாவிரதம் இருந்தார். ஆங்கிலப் பேரரசு பலமுறை கேட்டுக்கொண்ட பிறகும் கூட அவர் உண்ணாநோன்பை நிறுத்தமாட்டேன் என்று அறிவித்தார்.

பிரிட்டிஷ் அரசு உடனடியாக அவரை விடுதலை செய்தது. ஆனால் அவருடைய வீட்டைச் சுற்றிலும் போலீஸ்காரர்களை நிறுத்தி அவருடைய நடமாட்டங்களை கூர்ந்து கவனித்தது. அரசு அனுமதியில்லாமல் போஸ் வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது என்று தடை விதித்தது.

ஆன்மிக ஆராய்ச்சியில் ஈடுபட இருப்பதாக போஸ் கூறினார்.தமது அறையைச்சுற்றிலும் கருப்புத்திரை ஒன்றை கட்டச்செய்தார். தாம் தனிமையை விரும்புவதால் உணவுப் பொருள்களைக் கூட யாரும் தன்னிடம் நேரடியாகக் கொண்டு வராமல் திரைவழியாக உள்ளே வைத்துவிட்டால் போதும் என்று ஏற்பாடு செய்தார். ஒரே ஒரு முஸ்லீம் மட்டும் மருத்துவர் என்ற முறையில் தினமும் அவரை சந்தித்து வந்தார்.

உலகப் போர் தீவிரம் அடைந்தது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இந்திய நாட்டின் விடுதலைக் கிளர்ச்சியை மிகக் கடுமையாக நசுக்க விரும்பும் என்று சுபாஷ் உணர்ந்தார். இந்த நிலையில் தேசத் தொண்டர்கள் மன நிம்மதியோடு செயற்பட முடியாது என்று அவர் எண்ணினார். எனவே, நாட்டை விட்டு எப்படியாவது வெளியேறி, அயல்நாடு சென்று அங்குள்ள இந்தியர்களைத் திரட்டி இராணுவப் பயிற்சி அளித்து, பிரிட்டிஷ் ஆட்சி மீது போர்ப் பிரகடனம் செய்யவேண்டும் என்று போஸ்திட்டமிட்டார்.

வழக்கமாக தன்னைச் சந்திக்க வரும் முஸ்லீம் மருத்துவரைப் போல வேடமிட்டு போஸ் தனது வீட்டை விட்டு வெளியேறி விட்டார். அவர் சென்றது யாருக்குமே தெரியாது. வீட்டிற்குள் அவர் இருப்பதாகவே ஆங்கில அரசு நினைத்துக் கொண்டிருந்தது. பிரிட்டிஷ் ஆட்சியினர் அவர் மீது தொடர்ந்த வழக்கு மீது விசாரணை வந்தது. போலீஸார் அவரை அழைத்து வர வீட்டிற்குள் சென்று பார்த்தபோது வெறும் அறைதான் இருந்தது தவிர போஸ் அங்கு இல்லை.

துப்பறியும் துறையினரும், காவலரும் பரபரப்பு அடைந்து நாடெங்கும் தேடிப்பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. ஆனால், அவர் அயல்நாடு சென்றார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

இமயமலைச்சாரலில் உள்ள கைபர் கணவாயைக் கடந்து ஆப்கானிஸ்தானத்திற்கு செல்லும் முயற்சியில் சுபாஷ் சந்திரபோஸ் ஈடுபட்டிருந்தார்.

கைபர் கணவாய் அருகே உள்ள மக்கள் புஷ்டு மொழி பேசுபவர்கள். அந்த மொழி அவருக்குத் தெரியாது. அதனால் அம்மொழி தெரிந்த பகத்ராம் என்ற ஒருவரை உடன் அழைத்து சென்றிருந்தார். இருவருமே எல்லைப் புற முஸ்லீம்களைப்போல வேடமிட்டிருந்தார்கள். ஜியாஉதின் என்ற பெயரை போஸ் வைத்துக்கொண்டார்.இரகமத்கான் என்ற பெயரை பகத்ராமுக்கு சூட்டினார்.

ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலை நோக்கி இருவரும் நடந்து சென்றார்கள். வழியில் ஒரு லாரியை பிடித்துக்கொண்டு மூட்டையோடு மூட்டையாக கிடந்து காபூல் நகர்போய் சேர்ந்தார்கள்.

காபூலில் பேசப்படும் பாரசீக மொழி இரண்டு பேருக்கும் தெரியாததால் தங்குமிடம் எங்கே என்று விசாரிக்க முடியவில்லை. அதனால் பல தொல்லைகளை ஏற்று ஒரு சத்திரத்தில் குதிரை லாயத்தில், குதிரைகளுக்கு மத்தியில் தங்க இடம் கிடைத்தது. துர்நாற்றம் வீசும் அந்த இடத்திலே அவர்கள் உறங்கினார்கள்.

அந்த இடத்திலும் பத்திரமாக இருக்க முடியவில்லை. காவலர் தொல்லைகள் அதிகரித்தன. அங்கிருந்து இரஷ்யாவிற்குத் தப்பிச் சென்று விடலாமா என்று யோசித்தனர்.

அகமத்கான் என்ற பெயரிலே உள்ள பகத்ராமின் பழைய நண்பர் ஒருவர் காபூலில் தங்கியிருந்தது நினைவிற்கு வந்தது. பகத்ராம் அவரிடம் சென்று தங்க இடம் கேட்டார். போஸ் மாறுவேடத்தில் மறுபெயரில் காபூல் வந்திருப்பது கண்டு உத்தம் சந்த் என்ற அந்த பகத்ராமின் நண்பர் வியப்பு அடைந்தார். என்றாலும் திகைப்போ பரபரப்போ ஏதும் அடையாமல் இந்திய நாட்டின் மாபெரும் புரட்சி வீரனுக்கு தஞ்சம் அளிப்பதில் பெருமைப்பட்டார்.

உத்தம்சந்த் வீட்டில் தங்கி இருந்தபோது சுபாஷ் சந்திரபோஸ் இத்தாலி நாட்டுத் தூதருடன் தொடர்பு கொண்டு அவருடைய உதவியினால் தந்திரமாக விமானத்தில் ரோம் நகர்சென்றடைந்தார்.

அங்கிருந்து ஜெர்மனி சென்றார். உலகத்தைக் கலக்கிக் கொண்டிருந்த சர்வாதிகாரியான இட்லரைச் சந்தித்தார். அவரிடம் தமது திட்டங்களைக் கூறி தனது நாட்டு விடுதலைக்கு தாம் மேற்கொள்ளும் முயற்சியில் உதவிசெய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

சுபாஷ் சந்திரபோஸின் நாட்டுப்பற்றையும், அஞ்சா நெஞ்சையும், அற்புத ராஜ தந்திரங்களையும் அவரிடம் கேட்டு இட்லர் பிரமிப்பும் மதிப்பும் கொண்டார். அவருடைய செயல்களுக்கு தாம் முழு ஆதரவும், உதவியும் அளிப்பதாக வாக்குறுதி அளித்தார்.

உலகப்போர் அப்போது மத்திய கிழக்கு நாடுகளிலும் பரவியிருந்தது. பிரிட்டிஷாருக்காக போரிட்ட பல இந்திய வீரர்கள் அப்போது ஜெர்மானியர் வசம் போர்க்கைதிகளாக இருந்தனர். அவர்களையெல்லாம் எந்த நிபந்தனையுமின்றி இட்லர் விடுதலை செய்தார்.

விடுதலை செய்யப்பட்ட போர் வீரர்களுடன் போஸ் தொடர்பு கொண்டார். தம்முடைய திட்டங்களை அவர்களிடம் கூறினார். பிரிட்டிஷாரிடம் அடிமைக் கூலிகளாக இருந்து அவதிப்பட்டதைவிட சொந்தநாட்டை மீட்கும் சுதந்திரப் படை வீரர்களாக நீங்கள் விளங்க வேண்டும். அந்த தேசபக்திச் சேவையிலே நீங்கள் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

பாரத வீரர்கள் போஸ் கூறியதைக் கேட்டு மகிழ்ச்சி பொங்கினார். சுபாஷின் திட்டத்தை ஏற்றனர். அவர் தலைமையில் நாட்டின் சுதந்திரத்திற்காகப் போராட தயாராகினர்.

சுபாஷ் சந்திரபோஸ் ஒரு இராணுவத் தளபதிக்கான எல்லாப் பயிற்சிகளையும் நிறைவாகப் பெற்று, சுதந்திரப் படையின் தலைமைத் தளபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

கடுமையாக நடந்து கொண்டிருந்த உலகப் போரில் ஜப்பானும் குதித்தது. மலேயா, பர்மா ஆகிய நாடுகளிலிருந்த பிரிட்டிஷ் அரசு படைபலத்தை ஆறே மாதத்தில் ஜப்பான் விரட்டியடித்தது. அந்தச் சமயத்தில் சுபாஷ் சந்திரபோஸிற்கு வியக்கத்தக்க பக்கத்துணை ஒன்று கிடைத்தது.

ராஸ்ட் பிகாரி போஸ் என்ற புரட்சி வீரர் ஆங்கிலேயரால் நாடு கடத்தப்பட்ட இந்தியர். அவர் ஜப்பானில் குடியேறியிருந்தார் புரட்சி வீரர் சுபாசுடன் தொடர்பு கொண்டார். சுபாஷை ஜெர்மனியிலிருந்து அழைத்துவந்து, இந்தியர்கள் இலட்சக் கணக்கில் வாழும் கிழக்காசிய நாடுகளில், இந்திய சுதந்திர இயக்கத்தை வலுப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டார். ஜப்பானும் ஜெர்மனியும் அப்போது நட்பு நாடுகளாயின. அதனால் ராஸ்ட் பீகாரி போஸின் திட்டங்கள் வெற்றியடையத் துவங்கின. ஜப்பானியப் பிரதமரான டோஜோவை ராஸ்ட் பீகாரி போஸ் அப்போது சந்தித்து சுபாஷ் சந்திரபோஸின் திட்டத்துக்கு ஜப்பான் உதவியையும் ஆதரவையும் பெற்றார்.

சுபாஷ் சந்திரபோஸ் தனது திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்பாக, பாரத மக்களுக்கும், காந்தியடிகளுக்கும் வானொலி மூலமாக தனது நிலையை விளக்கினார்.

இந்திய விடுதலை அரசின் தலைமையகம் ஒன்றை சுபாஷ் சந்திரபோஸ் தற்காலிகமாக சிங்கப்பூரில் அமைத்தார். அதன் தலைவராகத் தம்மைப் பிரகடனம் செய்து கொண்டார். அவருக்கு ஆலோசனை கூற ஓர் அமைச்சரவையையும் உருவாக்கிக்கொண்டார்.

பிரிட்டிஷ் அரசு மலேயாவிலிருந்து தோல்வி கண்டு பின்வாங்கிச் சென்றபோது இந்தியர்கள் பலர் அடங்கிய இராணுவப் பிரிவுகள் ஜப்பானியர்களிடம் சரணடைந்து இருந்தனர். போஸின் தலைமையை ஏற்று இந்தியாவை மீட்கும் படையணியில் அந்த இந்தியர்கள் படைகள் இரண்டற கலந்துவிட்டன. இப்போது, இராணுவத்தின் பிரதம தளபதி என்ற முழுபெறுப்பை ஏற்றுக் கொண்டு போஸ் விடுதலை முழக்கமிட்டார்.

கிழக்காசியப் பகுதிகளில் வாழ்ந்த இந்தியக் குடிமக்களும் சுதந்திர வீரப் படையினரும் சுபாஷ் சந்திரபோஸை ‘நேதாஜி’ என அழைத்துப் பெருமைப்படுத்தினார்கள். அப்பகுதி இந்தியப் பெருமக்கள், விடுதலைப் படை உதவிக்கென்று பெரும் பொருளை வாரிவாரித்தந்தனர்.

நேதாஜி விடுதலைப் படையில் பல்லாயிரக்கணக்கில் இந்தியர்கள் இராணுவத்திலும் சேர்ந்தனர். ஆண்கள் மட்டுமன்றி, அந்தப் பகுதியில் பெண் மக்களும் நேதாஜியின் தலைமையை ஏற்று விடுதலை முழக்கமிட்டு வீரிட்டு எழுந்தனர்.

இராணுவப் பயிற்சி பெற்று வீராங்கனையாக ஆர்ப்பரித்தனர். பெண்களின் படைக்கு ஜான்சி இராணி பெயர் சூட்டப்பட்டது. கேப்டன் இலட்சுமி அதன் தலைவரானார். பாரத நாட்டின் காங்கிரஸ் பேரரவை தனது கட்சிக் கொடியாக அமைத்து இருந்த இராட்டைச் சின்னம் பொறித்த மூவண்ணக் கொடியே நேதாஜியின் விடுதலைக் கொடியாகப் பட்டொளி வீசிப் பறந்தது.

நேதாஜி அமைத்த சுதந்திர அரசாங்கத்தை ஒன்பது நாடுகள் அங்கீகரித்தனர். அப்போது, அந்தமான், நிக்கோபார் தீவுகளை ஜப்பான் பிடித்து அந்தத் தீவுகளை நேதாஜியின் பொறுப்பில் விட்டிருந்தது.

கிழக்காசிய நாடுகளில் வசித்த முப்பது லட்சத்திற்கு அதிகமான இந்திய மக்கள் சுதந்திர அரசாங்கத்தின் குடிமக்களானார்கள். நாணயச் செலாவணிக்கு வங்கி ஒன்றும் நிறுவப்பட்டது. விடுதலை சர்க்காரின் தலைமைச் செயலகம் சிங்கப்பூரிலிருந்து இரங்கோனுக்கு மாற்றப்பட்டது.

“டில்லி சலோ!” என்ற வானதிர்ந்த முழக்கத்தோடு சிங்கப்பூரிலிருந்து விடுதலைப் படை தனது இலட்சியத்தை நோக்கி புறப்பட்டது. தேசிய இராணுவம் தாய்லாந்தை சுற்றிக் கொண்டு பர்மா வந்து சேர்ந்தது. அந்தப் படைகளுக்கு ஷாநவாஸ், சேகல், தில்லான் ஆகிய மூவரையும் தளபதிகளாகத் தேர்ந்தெடுத்து நியமித்தார் நேதாஜி.

இந்தியாவின் வடகிழக்கு எல்லையில் நேதாஜியின் சுதந்திரப் படை தனது வெற்றிகரமான முதல் தாக்குதலை அறக்கான் யோமா, பெகு யோமா என்ற மலைச் சாரல் வழியாகத் தொடர்ந்தது.கடுமையான மோதலுக்குப் பின்னர் பிரிட்டிஷ் இராணுவம் தோல்வி கண்டு பின்வாங்கி ஓடியது.

நடைபெற்றுவந்த உலகப்போரில் எதிர்பாராதவிதமான சில திருப்பங்கள் தோன்றின.இரஷ்யா, ஜப்பான்மீது போர் தொடுத்தது. அணு குண்டுகளை வீசி ஜப்பானிய மக்களை அமெரிக்கா படுகொலை புரிந்தது. இருமுனைத் தாக்குதலைத் தாங்கமாட்டாமல் ஜப்பான் சரணடைந்தது.

நேதாஜி பெரும் மனக்குழப்பம் அடைந்தார். நீண்ட யோசனைகளுக்குப் பிறகு தம்முடைய உதவியாளர்களுடன் நேதாஜி செய்கோன் வந்து சேர்ந்தார். அங்கிருந்து விமானத்தில் புறப்பட்டு பயணம் செய்த பொழுது விமானம் விபத்துக்குள்ளானது. வங்கம் தந்த விடுதலைச் சிங்கம் நேதாஜி வீரமரணம் அடைந்தார்.

நேதாஜி நினைத்தது நடக்கவில்லை. ஆனால் அவருடைய இலட்சியம் வெற்றி பெற்றுவிட்டது. விடுதலை பெற்ற இந்திய நாடு வீரமரணம் அடைந்த நோதாஜியின் தியாகத்தை, நாட்டுப் பற்றை, தேசப் பக்தியை தன்னலம் பாரா மக்கள் சேவையை என்றும் மறக்காது. ஜெய்ஹிந்த்!