ஊசிகள்/பக்கம் 75-85

விக்கிமூலம் இலிருந்து
(ஊசிகள்/பக்கம் 75-84 இலிருந்து வழிமாற்றப்பட்டது)

எழுத்தறிவித்தவன் இறைவன்:





தேவைஇருக்கக்
கூடாது என்றுதான்
தெய்வமாய் ஆக்கி வைத்தோம்.

அதற்குப் பிறகும்
அது இது வேண்டும்
எனறு சும்மா
அலட்டினால்......
மூச்......

தப்பில்லாமல்


மூன்று வயதில்
ஞானசம்பந்தர்
பாடினாராம்
தோடுடைய செவியன் என்று

இப்போதும்
அதே வயதுப்
பாலகர்கள்
பாடுவார்கள்
தோடுடைய செவியள் என்று.

தப்பில்லாமல்.

பஞ்சப்படி




மூட்டை மூட்டையாய்
முதுகில் சுமையை
ஏற்ற மட்டும்
ஏற்றி விட்டு
ஒரே ஒருதுரும்பை
எடுத்துப் போட்டதும்
பாரம் எல்லாம்
பறந்து போனதாய்
எப்படி உன்னால்
மகிழ முடிந்ததோ?
ஓ......
பாலைவனத்தில்
பயணம் போகும்
ஒட்டகமே!

ஒன்றே செய்க

சுடுங்கள்......
உணவுகோரிக்
கிளர்ச்சி செய்தால்!
உடனே சுடுங்கள்

மக்களைக் காக்க
முடியவில்லையே
என்ற கவலை எதற்கு?

சட்டம் ஒழுங்கை யேனும்
சரியாய்க் காத்தால் போதும்......

சுடுங்கள்......
சும்மா சுடுங்கள்

உயர்ந்த பள்ளம்!



எங்கள் ஊருக்கு
எதிரிலோர் பள்ளம்...

இன்று நேற்றா
இருபது வருடமாய்
நின்று கொண்டிருக்கும்
நெடிய பள்ளம்

          எங்கள்
          ஊரின் பெயரோ
          உறங்கான் பட்டி
          உச்சரிப்பதுவோ
          உரங்கான் பட்டி

மாட்டு வண்டிகள்
மட்டு மல்லாமல்
கனதனவான்களின்
கார்களும் கூடப்
பாதையில் இருக்கும்
பளளம் வநததும்
பணிவாய்ப் போகும்;
பாம்பாய் ஊரும்!



சமத்துவப் பாடம்
சாற்றும் இந்த
உயர்ந்த பள்ளத்தின்
வெள்ளிவிழாவைக்
கொண்டாடுதற்குக்
குழு அமைத்துள்ளோம்.
முதல்வர் உட்பட
முக்கியமான
அமைச்சர் பலரை
அழைக்கப்போகிறோம்.

ஆனால்...
அடுத்த ஊர்ப்பள்ளி
ஆண்டு விழாவில்
பரிசு வழங்க
வந்த போது
வேறு பாதையில்
காரை விடுத்த
மராமத்தமைச்சரை மட்டும்......
மாட்டோம்... மாட்டோம்.

எங்கள்
ஊரின் பெயரோ
உறங்கான்பட்டி
உச்சரிப்பதுவோ
உரங்கான்பட்டி



இடைவேளை






பள்ளி திறந்தது;
அ-சொல்லிக் கொடுத்தோம்


அப்புறம்......
அறுவை சிகிச்சைக்கு

ஆளைப் பிடிக்க
வலையை வீசப் போனோம்


அப்புறம்...
சீனி அட்டையைத்
தெருத் தெருவாக
விநியோகிக்கப் போனோம்.


அப்புறம்...வாக்குப் போடும்
மன்னர் தொகையைக்
கணக்கெடுக்கப் போனோம்


தேர்வு வந்தது;
ஃ-சொல்லி முடித்தோம்.

நான் அவன் நண்பன்


நான் அவன் நண்பன்;
நல்ல நண்பன்......
ஏன் அவன் இப்படி......

ஏன் அவன் இப்படி
இருக்கிறான்?
கண்ணோதுர்ந்த கிணறு
கன்னமோ ஒய்ந்த களத்துமேடு
உதடோவறண்ட வரப்பு
முகமோ கோடைக்கால வயல்...
ஏன் அவன் இப்படி...
எனினும் இன்றவன்
பட்டுடை பூண்டுள்ளான்;
பரிமளம் பூசியுள்ளான்;
மாப்பிள்ளை மாதிரி
மல்லிகை மாலை
மார்பினில் சூடியுள்ளான்.
பற்பல மாநில ஒப்பனைக்காரர்
பக்கம் சூழ்ந்துள்ளார்.

அவனைப்
பார்த்துச்சிந்தையில்
பரவசச்சித்திரம்
தீட்ட முயல்கிறாள்
திலகவதியாள்......

வெம்பிப் போனவாழ்வை
விட்டெறியாமல் இன்னும்
தம்பிக்காகத்தானாம்-அத்
தமக்கை வைத்துள்ளாளாம்

இன்று

அவள் கண்களிலே
ஆனந்தக்கண்ணிர்.
தந்தை படத்தையும்
தாததாபடததையும
வந்தனை செய்கிறாள்.....
தம்பியை வளர்த்து
ஆளாக்கிவிட்டதாய்
அகம்குளிர்கின்றாள்......

இதோ அவள்தம்பியின்
ஏற்றம் பேச
வரிசையாய்ச்சிலர்
வருகிறார்......
தம்பிக்கு இனிமேல்
சுக்கிர திசையாம்
வங்கிகள் அனைத்தும்
வாரித்தருமாம்
அரசர்கள் கொட்டம்
அடங்கி விட்டதாம்
இனி அவன் எங்கும்
அட்சய் பாத்திரம்
ஏந்தும் அவசியம்
நிச்சயம் இல்லையாம்...
நிசமாய்


உச்சி குளிர
மெச்சிப் புகழ்கிறார்
காது களுக்குக்
கனத்த விருந்து
என்றன்.
விழிகள் மட்டும் விடுமா?
அவன் மேல் பாய்ந்தன...

இதோ அவன்
“கேக்" வெட்ட எழுகிறான்
கால்களோ தடுமாறு கின்றன;
தமக்கை
கைகளோ விரைந்து தாங்குகின்றன...
பாவம்
நாண் ஏற்றியதோர் வில்லைப் போல
”விண்” என்றிருக்க வேண்டிய
பிள்ளை
தேரை விழுந்த தேங்காய் போலத்
தேகம் மெலிந்து
தேய்ந்து போயுள்ளான்.
அவனது
முகவாசலிலே முதுமைச் சிறுக்கி
புள்ளி வைக்கிறாள் கோலம் போட...
எனினும்
இதோ அவன் ‘கேக்’ வெட்டுகிறான்.

நேற்று வரைக்கும்
வயிறு நிறையக்
கூழ் குடித்தானோ என்னவோ...



போகட்டும்
இன்றவன் பிறந்த நாளாம்;

இருபத்தைந்தாம் வயதை எட்டிப்
பிடித்து விட்ட
சிறந்த நாளாம்!
வானை நோக்கி
வாழ்த்து மழைகள்......

நான் அவன்
பாதாதி கேசம் பார்க்கிறேன்......
பளிச்சென்று கண்ணில்
படுகிறதோர்நரை!
"இது என்ன இந்த வயதில்
இளம் வயதில்?" என்கிறேன்.
பக்கத்தில் நிற்கும் பாகவதரோ
    “தம்பிதங்கக் கம்பி-அவன்
    தலையில் வெள்ளிக் கம்பி”

என்று
பல்லவி இசைத்துப்
பாடத் தொடங்கினார்......

நான்......
நான் அவன் நண்பன்;
நல்ல நண்பன்!

"https://ta.wikisource.org/w/index.php?title=ஊசிகள்/பக்கம்_75-85&oldid=1013812" இலிருந்து மீள்விக்கப்பட்டது