எக்காலக் கண்ணி/ஆராய்ச்சியுரை

விக்கிமூலம் இலிருந்து

ஆராய்ச்சியுரை (முனைவர் நா. கண்ணன், 2002 )

எக்காலக் கண்ணி என்ற இந்த நூல் அரசினர் கீழத்திய சுவடி நூலகத்தினால் 1953-ம் ஆண்டு வௌியிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னுரை வழங்கியுள்ள திரு.வி.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் இத்தொகுப்பின் ஆசிரியர் அறியப்படாததால் பின் வருமாறு எழுதுகிறார்:

"தாயுமானவர் பாடல் தொகுப்பினுள் காணப்பெறும், எந்நாட் கண்ணி, பராபரக் கண்ணி முதலியனவற்றிற்கும் இங்ஙனமே பெயர் வந்துள்ளமை நோக்கத் தக்கது. இத்துணைச் சிறப்புக்கள் பொருந்திய இச் சிறுநூலை இயற்றி நமக்களித்த ஆசிரியர் இன்னார் என்று தெரியவில்லை. இவ்வாசிரியர் தாயுமானவருக்குச் சிறிது காலம் முன்போ, பின்போ இருந்தவராதல் வேண்டும். இந்நூற் பாடல்கள் தாயுமானவர் பாடல்களைப் போன்ற தன்னையுடையனவாய் இருப்பதால், எந்நாட் கண்ணி, பராபரக் கண்ணி முதலியவற்றை இயற்றிய தாயுமானவரே இதனையும் இயற்றியிருக்கலாம் என்று ஊகிக்கவும் இடமுண்டு. ஆயின், தாயுமானவர் பாட்டுக்களின் தொகுப்பைக் கொண்ட அச்சுப் பிரதியினுள் "எக்காலக் கண்ணி" என்னும் இப்பகுதி காணப் பெற்றிலது. இஃது அறிஞர்கள் ஆராய்ச்சிக்குரியதொன்று."

என்று முடிக்கிறார். உண்மையில் இது ஆய்வுக்குரிய ஒன்றுதான். ஏனெனில் ஆறு வருடங்கள் கழித்து சென்னை பிரேமா பிரசுரம் வௌியீடாக இதே பாடல்கள் சற்று வித்தியாசங்களுடன் "பத்திரகிரியார் மெய்ஞானப் புலம்பல்" எனப் பெயரிடப்பட்டு, 'சித்தர் பெரிய ஞானக் கோவை என வழங்கும் சித்தர் பாடல்கள்' என்ற புத்தகத்தின் ஒரு தொகுதியாக வந்திருக்கிறது. வித்வான் நா.தேவநாதனும், அரு.ராமநாதனும் பாடபேதங்களைப் பரிசோதித்து, திருத்தமாக விளக்கக் குறிப்புகளுடன் இதை வௌியிட்டுள்ளனர். இவர்கள் அரசினர் கீழத்திய சுவடி நூலகத்தினால் 1953-ம் ஆண்டு வௌியிடப்பட்ட "எக்காலக் கண்ணி" என்ற நூலினை அறிந்தார்களா? அதையும் இத்தொகுப்பின் ஆய்வுக்கு உட்படுத்தினார்களாவெனத் தெரியவில்லை. பெரிய தொகுப்பாகிய 'சித்தர் பாடல்' களில் மூலப்பிரதி பற்றிய குறிப்பேதும் இல்லை.

எனவே இப்பாடல்கள் தெரியாத ஆசிரியர் ஒருவரால் எழுதப்பட்டன என்பது போய் இதை எழுதியவர் தாயுமானவரா? இல்லை பத்திரகிரியாரா? என்ற சந்தேகத்தில் நாம் இப்போது நிற்கிறோம்! ஓலைகள் எழுதும் போது தவறுகள் ஏற்படுவது மிக சகஜம். இதைக் கீழ்க்காணும் குறிப்பு சுட்டுகிறது:

"இது நம்ம நாட்டு நாயத்து ஓலை. ரொம்பக்காலம் பழகிப் போனபடியால் கொஞ்சம் எழுத்து போயிருந்த படியாலும் அந்த ஓலைக்குப் பதில் புது ஓலை போட்டு யுவ வருஷம் அப்பிசை மாதம் 15 தேதி எழுதியிருக்கிறோம். ஏட்டுக் குத்தம், எழுத்துக் குத்தம், வாசகத் தப்பு, வரி மாறாட்டம் இருந்தபோதிலும் நீங்கள் அனைவரும் பொறுத்துக் கொள்ள வேண்டியது. கடவுள் துணை! " (கொங்கு நாட்டுச் சமுதாய ஆவணங்கள். ஆசிரியர் புலவர் செ.இராசு, தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் 1991. பக். 217)

இனி எக்காலக் கண்ணியின் இரு பதிப்புக்களுக்குள் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளைக் காண்போம்.

தலைப்பிடுவதிலேயே மாற்றம் தெரிகிறது. கீழத்திய சுவடி நூலகம் இதை 'எக்காலக் கண்ணி' என்றழைக்க, பிரேமா பிரசுரம் இதை 'பத்திரகிரியார் மெய்ஞ்ஞானப் புலம்பல்' என்றழைக்கிறது. முன்னதன் முதல் பாட்டு, பின்னதில் காப்புச் செய்யுளாக கருதப்படுகிறது, சிறு மாற்றத்திடன்,

முத்திதரும் ஞான மொழியாம் புலம்பல் சொல்ல அத்தி முகவந்தன் அருள்பெறுவது எக்காலம்?

என்பது காப்புச் செய்யுள். இருவேடுகளிலும் அத்தி முகம் கொண்ட விநாயகனுக்கு காப்பிட்டாலும், "ஞான மொழிப் புலம்பல்" என்ற வசனம் ஒரு ஏட்டிலும், "வேதமொழிந்த மெஞ்ஞானம்" என்ற வசனம் இன்னொரு ஏட்டிலும் காணப்படுகிறது. இவையே 'ஞானப்புலம்பல்' என்று ஒரு பதிப்பில் பெயர் பெருவதற்கும், மற்றொன்றில் 'எக்காலக் கண்ணி' என்று பெயர் பெருவதற்கும் காரணமாகிறது என்று ஊகிக்கலாம்.

இந்தக் காப்பு செய்யுள் சித்தர்கள் சிந்தனை மரபுடன் நெருங்கிக் காணப்படுகிறது. ஏனெனில், சித்தர்கள் நிறுவனப்படுத்தப்பட்ட மதத்திற்கு எதிராகக் குரல் கொடுத்தவர்கள். சிவவாக்கியரின் பின்வரும் பாடல் இதைத் தெள்ளத்தௌிவாகக் காட்டும்,

"சாத்திரங்கள் ஓதுகின்ற சட்டநாத பட்டரே! வேர்த்து இரைப்பு வந்தபோது வேதம் வந்து உதவுமோ? மாத்திரைப்போ தும்முளே மறிந்து தொக்க வல்லிரேல் சாத்திரப்பை நோய்கள் ஏது? சத்திமுத்தி சித்தியே!"

எனவே எக்காலம், எக்காலம் என்று புலம்பல் செய்த சித்தர் "முத்திதரும் வேத மொழிந்த மெஞ் ஞானஞ்சொல்ல" என்று சொல்லியிருப்பாரா? என்ற கேள்வி எழுகிறது. வேதம் என்பது அசைக்கியலா அதிகாரமாக உருப்பெற்று நிறுவனப்படுத்தப் பட்டு, பிறப்பால் உயர் சாதிக்காரர்களே வேதம் சொல்ல வல்லவர் என்ற இறுக்கமான ஒரு சமூக கட்டுப்பாட்டை சித்தர்கள் உடைக்கிறார்கள். நிறுவனம் பேசும் ஆசாரம் அனுஷ்ட்டானங்களை கேலி செய்து பராபரத்தின் உண்மை நிலை காட்டுகின்றனர். உதாரணமாக,

"சித்தமற்று சிந்தையற்று சீவனற்று நின்றிடம் சத்தியற்று சம்புவற்று சாதிபேதமற்றுநன் மித்தியற்று மூலமற்று மூலமந்திரங்களும் வித்தைஇத்தை ஈன்றவித்தில் விளைந்ததே சிவாயமே!"

மேலும் சித்தர் பாடல்களில் வரும் பத்திரகிரியார் மெய்ஞ்ஞானப் புலம்பல் மொத்தம் 231 கண்ணிகளைக் கொண்டுள்ளது. விநாயகன் துதியுடன் ஆரம்பிக்கும் இத்தொகுப்பு அவனது இணையடியைத் தொழுது முடிகின்றது.

"ஐந்து கரத்தானை அடி இணைப் போற்றிசெய்து நெஞ்சில் பொருத்தி நிலைபெறுவது எக்காலம்?"

இந்த வகையில் பத்திரகிரியார் மெய்ஞ்ஞானப் புலம்பல் ஒரு முழுமை பெற்ற தொகுப்பாகத் தோன்றுகிறது. கம்பராமாயணத்திற்கு அதன் சிறப்பு குறித்து பல்வேறு படிகள் இருப்பதுபோல் பத்திரகிரியார் பாடலுக்கும் படிகள் இருப்பது, இப்பாடல் மக்கள் மத்தியில் எவ்வளவு பிரபலமாக இருந்திருக்கிறது என்பதைக் காட்டுகிறது. இப்பாடல்களைப் படிப்பவர் மனதைத் தொடும் வண்ணம், அதே நேரத்தில் அவர்தம் ஆற்றாமையை புலம்பும் வண்ணம் இப்பாடல்கள் எழுதப்பட்டிருப்பது இதன் சிறப்பு.

பத்திரகிரியார் என்பவர் பட்டிணத்தாரின் சீடர் என்பது மரபு. பட்டிணத்தாரின் பாடல்களில் பெண்ணாசை குறித்த ஒரு வெறுப்பு மேலோங்கி இருக்கும். உதாரணமாக,

"மானிடர்க்கெல்லாம் யானெடுத்துரைப்பேன் விழிவௌி மாக்கள் தௌிவுறக் கேண்மின்...... நகுவார்க்கு இடமாய் நான்று வற்றும் முலையைப் பார்த்து முளரிமொட்டென்றும் குலையுங் காமக் குருடர்க்கு உரைப்பேன்!"

இத்தொணி "எக்காலக் கண்ணி"யிலும் ஒலிக்கிறது!


பெண்ணிநல்லா ளாசை பிரமைதனை விட்டொழிந்தென் கண்ணிரண்டு மூடிக் கவிழ்ந்திருப்ப தெக்காலம். 10

வெட்டுண்ட புண்போல் விரிந்தவல்குற் பைதனிலே கட்டுண்டு நில்லாமல் கருதியிருப்ப தெக்காலம். 11

வெட்டுண்ட புண் போல விரிந்த அல்குல் என்னும் உவமையைச் சித்தர்கள் தவிர வேறு யாரும் பேசமுடியாது!

மேலும் சித்தர்களால்தான்,

வேதாந்த வேதமெல்லாம் விட்டொழிந்தே னிச்சையினால் ஏகாந்த மாகி யிருப்பதினி யெக்காலம். 32

சாத்திரத்தைச் சுட்டுச் சதுமறையைப் பேயாக்கிச் சூத்திரத்தைக் கண்டு துயாறுப்ப தெக்காலம் 117*

என்றும் சொல்லமுடியும்! இது தன்னிச்சையாக அலைந்து திரியும் ஒரு ஏகாந்தியின் ஞானமாக இருக்க முடியுமே தவிர, பூஜை, புனஸ்காரம் செய்யும் ஒரு வேதியரின் ஞானமாக இருக்க முடியாது!

தமிழ் மண்ணில் சித்தர்களைப் பற்றிய ஒரு பொது அபிப்பிராயம் வர கீழ்க்கண்ட பாடல்கள் உதவியிருக்கும் என்று நம்பலாம். சித்தி பெற்றவர்கள் பல்வேறு வகைகளில் உலாவுகின்றனர். சிலர் ஜடாமுடி தரிக்கின்றனர், சிலர் கஞ்சா, அபின் குடிக்கின்றனர், சிலர் மௌனியாக உள்ளனர், இப்படி எத்தனையோ...

சேயாய்ச் சமைத்துச் செவிடூமை போல்திரிந்து பேய்போ லிருந்து பிரமைகொள்வ தெக்காலம் 8

தந்தைதாய் மக்களுஞ் சகோதரமும் பொய்யெனவே சிந்தைதனிற் கண்டு தௌிந்திருப்ப தெக்காலம். 13

அவவேடம் பூண்டு மலைந்துதிரி யாமல்யான் சிவவேடம் பூண்டு சிறந்திருப்ப தெக்காலம். 28

கஞ்சா லபினுண்டு கள்ளுண்டு வாடாமல் பஞ்சா மிருதவின்பம் பருகுவது மெக்காலம். 35

வளம்படிக்கும் மாதருடன் மண்ணுலகில் வாழ்ந்தவலும் புளியம் பழத்தோடு போன்றிருப்ப தெக்காலம் 54

பற்றற்று நீரிற் படர்ந்தவண்ணச் சிற்றிலைபோல் சுற்றத்தை நீக்கிமனந் தூரநிற்ப தெக்காலம் 55

ஆசார நேம மனுட்டா னமுமறந்து பேசாமல் ஞானநிலை பெற்றிருப்ப தெக்காலம் 114

மேலும் சித்தர்கள் சமயம் கடந்த ஒரு யோக நிலை பற்றி நிரம்பச் பேசுகின்றனர். அது 'எக்காலக் கண்ணி'யிலும் ஒலிக்கிறது.


ஆதார மூலத் தடியிற்கண பதியைக்கண்டு பாதர விந்தம் பணிந்துநிற்ப தெக்காலம் 67

காசிதனில் நடந்து காலோய்ந்து போகாமல் வாசிதனி லேறி வருவதினி யெக்காலம் 98

சித்தர்கள் பெண் சுகத்தைக் கண்டித்தாலும், அது தரும் சுவையை மெஞ்ஞான விளக்க மேற்கோள்களுக்கு பயன்படுத்தத் தவறுவதில்லை. திருமூலர் தொடர்ந்து பல சித்தர்கள் உடலின்பத்தை முக்திக்கான பாதையாகவும் (தந்திரம்- பரியங்க யோகம்) கருதுவதுண்டு.

சல்லாப லீலையிலே தன்மனைவி செய்தசுகஞ் சொல்லார்கண் டோனுக்குச் சொல்வதினி யெக்காலம் 56

தன்கணவன் தன்சுகத்தில் தன்மனம் வேறாப்போல் என்கருத்தி லுன்பதத்தை யேத்துவது மெக்காலம் 58

உண்டதுவு மாதருடன் ஊடிச் சேர்வதுவுங் கண்டதுவும் நீயெனவே கண்டுகொள்வ தெக்காலம் 176

பாரதி போல் கள்ளுண்ணும் சுகம் பற்றியும் உவமை வருகிறது !

கள்ளுண்ட வாயதுபோல் கலிதருமா னந்தமதில் தள்ளுண்டு திண்டாடி தடிபுரள்வ தெக்காலம் 191

சித்தர்கள் தமிழ் மரபில் வந்தவர்கள். நிறுவன மதங்களைக் கேலி பேசத் தயங்காதவர்கள். சித்தர்கள் பல்வேறு குலங்களிலிருந்து வருபவர்கள். அவர்கள் வாயிலிருந்து சிவனை 'ஆரியன்' என்னும் போது இச்சொல் மரியாதை நிமித்தம் பயன்படும் உயர்வு நவிற்சி என்று கொள்ளவேண்டுமே தவிர 'ஆரியன்' என்பது ஒரு மனித இனம் என்று கொள்ளலாகாது. அது ஒரு மொழிச் சொல்லாட்சி என்று பலர் விளக்கியம் இந்த ஆரிய-திராவிட சண்டை தமிழ் மண்ணில் ஓய்ந்த பாடில்லை!

தூரியில் மீனம்போல் கழன்றுமனம் வாடாமல் ஆரியனைத் தேடி யடிபணிவ தெக்காலம் 26

வாடிய பயிரைக் கண்டு வாடிய இராமலிங்க வள்ளலார் போல் பத்திரகிரியாரும் மன்னுயிரைத் தன்னுயிர் என்று கருத வேண்டும் என்கிறார்.

மன்னுயிரைக் கொன்று வதைத்துயிரைப் பார்க்காமல் தன்னுயிரைப் போலெண்ணித் தவமுடிப்ப தெக்காலம். 14

கண்ணா லருவி கசிந்துநின்று முத்துருளச் சொர்ணப் பழம்பொருளைத் தொகுத்தறிவ தெக்காலம் 61

மெஞ்ஞானம் தெரிக்கும் பாடல்கள் பலப் பல, அவற்றுள் சில....

இன்றுள்ளோர் நாளை இருப்பதுவும் பொய்யெனவே மன்றுள்ளோர் சொல்லும் வவைதெரிவ தெக்காலம். 34

ஐந்து பொறிவழிபோ யலையுமிந்தப் பாழ்மனத்தை வெந்துவிடப் பார்த்து விழிப்பதினி யெக்காலம் 86

சினமாண்டு பேசுஞ் செயல்மாண்டு நான்மாண்டு மனமாண்டு முத்திநிலை வந்தடைவ தெக்காலம் 88

ஊனிறக்கக் காய முயிரிது போகுமுன்னே நானிறந்து போகவினி நாள்வருவ தெக்காலம் 91

பொன்னில் பலவிதமாய்ப் பூடணமுண் டானதுபோல் உன்னில் பிறந்துன்னி லொடுங்குவது மெக்காலம் 152

செம்பில்நின்ற காளிதம்போற் சிவரூபத் தைவிழுங்கி வெம்பிநின்ற மும்மலத்தை வேரறுப்ப தெக்காலம் 167

ஊமைக்கனாக் கண்டுரைக்க வூறிய லின்பமதை நாமறிந்து கொள்வதற்கு நாள்வருவ தெக்காலம் 169

வெட்ட வௌிதனிலே விளைந்தவெறும் பாழைநான் திட்டமறக் கண்டு தௌிவதினி யெக்காலம் 174

எங்கும் பலவடிவா யென்வடிவும் நின்வடிவாய்க் கங்குல்பக லறியவுன்னைக் கண்டிருப்ப தெக்காலம் 175

சித்தர்களைப் பற்றிய தொன்மங்களில் அவர்கள் கூடுவிட்டுக் கூடு பாயும் திறனும் ஒன்று. அது பற்றிப் பேசும் பாடலொன்று.

வீடுவிட்டுப் பாய்ந்து வௌியில்வரு வார்போல்நீ கூடுவிட்டுப் பாய்ந்த குறிப்பறிவ தெக்காலம் 158

அதுபோல், சித்தர்கள் இரசவாதம் போன்ற விஞ்ஞான சாத்திரங்களிலும் வல்லவர்கள். இயற்பியல் பேசும் பாடல்கள்...

சூரிய காந்தவொளி சூழ்ந்தபஞ்சைச் சுட்டதுபோல் லாரியன் தோற்ற மருள்பெறுவ தெக்காலம் 154

விளங்கிநின்ற தாரகையை வெய்யோன் மறைத்தல்போல் களங்கமற வுன்காட்சி கண்டறிவ தெக்காலம் 163

சித்தர்களின் காலம் 10 நூற்றாண்டிற்குப் பின்தான் என்பது அறிவியலார் கருத்து. பத்திரகிரியார் 'கண்ணாடி' பற்றிய உவமையைக் கையாள்கிறார். கண்ணாடி என்பதைத் 'தட்டொளி' என்று சித்தர்கள் காலத்திற்கு முன் வாழ்ந்த ஆண்டாள் பேசுகிறாள். பத்திரகிரியார் காலத்தில் இரசம் பூசிய கண்ணாடி இருந்திருக்கலாம். அது அவர் பிற்காலத்தவர் என்று யூகிக்கவும் இடம் கொடுக்கலாம்.

எண்ணாத தூரமெல்லா மெண்ணிப்பா ராமலுன்னைக் கண்ணாடிக் குள்ளொளிபோற் கண்டறிவ தெக்காலம் 124

பத்திரகிரியார் மாணிக்கவாசகர் காலத்திற்கு பிற்பட்டவர் என்பதை அவர் கையாளும் திருவாசக வசனங்கள் சுட்டுகின்றன.

புல்லாய் விலங்காய்ப் புழுவாய் நரவடிவாய் எல்லாப் பிறப்பு மிருளகல்வ தெக்காலம் 49

கல்லாய் மரமாய்க் கயலாய்ப் பறவையாய்ப் புல்லாய்ப் பிறசனனம் போக்குவது மெக்காலம் 51

போக்கும் வரவும் பிறப்புமுள்ளு மாகநின்று காக்கமொரு பொருளைக் கலந்துநிற்ப தெக்காலம் 181

இவையனைத்தும் 'சிவபுராணத்தில்' பேசப்படும் விஷயங்களாகும். 'போக்கும் வரவுமற்ற புண்ணியன்' என்பது மாணிக்கவாசகர் வாக்கு. பத்திரகிரியார், வைணவ சித்தாந்தத்தில் வருவது போல் போக்கும் வரவும் இறைவனுக்கு உண்டு என்றும், அதில் அந்தர்யாமியாமியாக இறைவன் உள்ளான் என்றும் சொல்கிறார்!

சித்தர்களின் தமிழ் எளிய தமிழ், புதிய தமிழ். அது மக்கள் தமிழும் கூட!

தானாரோ நீயாரோ தற்பரமாய் நின்றாரோ நானாரோ வென்றறிய நாள்வருவ தெக்காலம் 172

தாயின் தாலாட்டு கேட்கிறதா இப்பாடலில்?

மீனைரொம்ப வுண்டுகக்கி விக்கிநின்ற கொக்கதுபோல் ஞானத்தை ரொம்பவுண்டு நானிற்ப தெக்காலம் 190

சாதாரணமான உதாரணமும், கக்கி-விக்கி போன்ற மக்கள் தமிழும் இங்குண்டு.

ஒருவகையில் 'எக்காலம், எக்காலம்' என்று இவர் புலம்புவது ஒரு சாதாரணனனுக்காக வக்காலத்தாக இவர் புலம்புவது போல் உள்ளது. நம் மனத்தின் ஆன்மீக ஆற்றாமைகள் இக்கண்ணிகளில் பட்டுத் தெரிக்கின்றன. ஒருவகையில் பத்திரகிரியாரே நம்மைப் போல் புலம்புவது நமக்கு ஆறுதல் அளிப்பதாகவுள்ளது. கடைசியாகச் சொல்கிறார், இப்படிப் பேசும்படி இவரைச் செய்வித்தவன் எவன்? என்று. இத்தனை ஞானமும் உள்ளொளியாய் வந்ததென்றும் புரிகிறது. அருணகிரிக்கு கந்தவேள் சொன்னதுபோல் 'சொல்லற, சும்மா இரு' என்னும் நிலைபற்றிப் பேசி முடிக்கிறார்!

என்னினைவோ நானறியே னிந்தவண்ணஞ் சொன்னதெல்லாம் முன்னினைவோர் கைக்கொள்ளுநான் முடிபடுவ தெக்காலம் 200

நச்சரவை நீக்கி நன்மணிகைக் கொண்டாப்போல் சொற்சரவைத் தீர்த்தநல்லோர் துணைக்கொள்வ தெக்காலம் 201.