எங்கே போகிறோம்/1. சுதந்திர தின விழாச் சிந்தனைகள்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search


1. சுதந்திர தின விழாச் சிந்தனைகள்

எங்கே போகிறோம்? சுதந்திர தினத்தன்று நம்முடைய மதுரை வானொலி நிலையம் இந்த வினாவை நம்மை நோக்கிக் கேட்கிறது. இல்லை இல்லை! இந்த நாட்டு மக்களை நோக்கிக் கேட்கிறது. ஏன்?

எங்கே போகவேண்டும் என்று சொல்லாமல், வழி காட்டாமல், எங்கே போகிறோம் என்று கேட்பதற்குக் காரணமென்ன?

குற்றங்கள் தெரிந்தால் குணங்களை வளர்த்துக் கொள்ள முடியும். குறைகள் தெரிந்தால் நிறைகளை வளர்த்துக் கொள்ள முடியும். எனவே, எங்கே போகிறோம்? வழி தவறி விட்டோமா? அல்லது வழித் தடத்தில்தான் செல்லுகிறோமா? இப்போது செல்லுகின்ற வழி அல்லது தடம், எங்கே செல்லவேண்டுமோ அங்கே அழைத்துச் சென்று விடுமா? இன்று நாம் போகவேண்டிய வழியில் போகிறோமா அல்லது நம்மை இந்த உலகத்தின் செய்திகள், சின்னஞ்சிறு கதைகள், நிகழ்ச்சிகள், இழுத்துக் கொண்டு செல்லுகின்றனவா? இன்று சுதந்திரமாகப் பயணம் செய்வோர் யார்?

கால்நடை மருத்துவமனை என்று அறிவிப்புப் பலகை போட்டிருக்கிறார்கள். எனக்கு ஒருநாள் ஐயம் வந்தது. இது என்ன ‘கால்நடை என்றால் என்று பக்கத்திலுள்ள வரைக் கேட்டேன். "கால்நடை” என்றே திருப்பிச் சொன்னார். திருப்பித் திருப்பிக் கேட்ட பிறகு "காலால் நடக்கின்ற மாடு, ஆடுகள்" என்று சொன்னார். அப்படியானால் மனிதனும் காலால் தானே நடக்கின்றான்? அவனுக்கும் இந்த மருத்துவமனை பயன்படுமா? என்று சிந்தித்தேன். காலால் நடப்பது மட்டுமே கால்நடைகளின் இயல்பு.

சிந்தனையாலும், கருத்தாலும், அறிவாலும், நாகரிகத்தாலும், பண்பாட்டாலும், படைப்பாற்றலாலும், நடக்கவேண்டிய பொறுப்பு மனிதனுடையது. அவன், தான் நடக்கவேண்டிய தடத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும். புவி, அவனை நடத்தக்கூடாது. புவியை அவன் நடத்தவேண்டும். பாவேந்தன் பாரதிதாசன் "புவியை நடத்துக! பொதுவில் நடத்துக” என்று சொன்னான்.

சுதந்திர தினத்தன்று இதைப் பற்றிச் சிந்தனை செய்யுங்கள்! பாரதி, சுதந்திர தினத்தை மக்கள் தினமாக நினைத்துப் பாடுகின்றான். ஆடச் சொல்லுகின்றான், பள்ளுப் பாடச் சொல்லுகின்றான், "ஆடுவோமே! பள்ளுப் பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்”* என்று பாடுகிறான். இன்றைக்கு எந்த மக்கள் ஆடுகிறார்கள்? எந்த மக்கள் பள்ளுப் பாடுகிறார்கள்? எந்த நாட்டு. நகர வீதிகளில் சுதந்திர தினவிழா மக்கள் விழாவாக கொண்டாடப்படுகிறது? இன்னமும் தீபாவளிக்கு இருக்கிற செல்வாக்கு குறையவில்லை. பொங்கலுக்கு இருக்கிற செல்வாக்கு குறையவில்லை. சுதந்திர தினவிழா அரசு பணிமனைகளில், கல்வி நிலையங்களில் கொடியேற்று விழாவாக முடிந்து விடுகிறது. பாரதியின் ஆசை அதுதானா? இல்லை. தினந்தோறும் மக்கள் ஆடவேண்டும். சுதந்திரப் பள்ளு பாடவேண்டும். ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று பாடவேண்டும். ஆம்! இன்றைக்கு மக்கள் அப்படிப் பாடாததற்குக் காரணம் என்ன? அவர்கள் அனுபவிப்பது ஆனந்த சுதந்திரமா? இல்லை. எத்தனையோ நெருக்கடிகள்! எத்தனையோ தொல்லைகள் அடிமைத்தனங்கள் பயந்தாங்கொள்ளித் தனங்கள் பயமுறுத்தல்கள்! இவைகளுக்கிடையே இந்தச் சமுதாயம் மெள்ள ஊர்ந்து கொண்டிருக்கிறது.

இப்பொழுது வானொலி நிலையத்தை நோக்கி வந்து கொண்டிருக்கும்பொழுது, இரண்டு மூன்று காட்சிகள்! ஒரு இடத்தில் போராட்ட உண்ணாவிரதம்! இன்னொரு புறத்தில் மகிழ்வுந்தில் கூக்குரலிட்டுக் கொண்டு, கோஷம் எழுப்பிக்கொண்டு இந்த நாட்டு மகளிர் செல்லுகிறார்கள். மகளிர் எழுப்பிய முழக்கொலி "பெண்களை விடுதலை செய்! பெண்களுக்குச் சுதந்திரம்" நாடு விடுதலை பெற்று 47 ஆண்டுகள் கடந்த பிறகும் “பெண்களுக்கு விடுதலை இல்லை’ என்று தெருவில் நின்று முழக்கொலி செய்கிறார்கள் என்றால் ஆனந்த சுதந்திரம் ஆக முடியுமா?

சுதத்திர தினவிழா என்பது கொடியேற்றுதல் மட்டு மல்ல. ஒரு கணக்காய்வு செய்யவேண்டும். நேற்று என்ன நடந்தது? இன்று என்ன நடந்து கொண்டிருக்கிறது? நாளை என்ன நடக்கும்? நாளை என்ன நடக்குமாறு செய்யவேண்டும்? இந்தக் கணக்காய்வு செய்யாது போனால் சுதந்திர தினவிழாவுக்கு என்ன பொருள்? நேற்றிலிருந்து இன்று பிறக்கிறது. இன்றிலிருந்து நாளை பிறக்கிறது.

இன்றைக்கு நமது இளைய சமூகத்தைப் பற்றி, இளைய பாரதத்தைப் பற்றி, அடுத்து வருகின்ற தலைமுறையினரைப் பற்றி, நமக்குக் 566)6 இருக்கிறதா? அதற்குரிய திட்டங்களைத் தீட்டுகிறோமா? அப்படியே தீட்டினாலும், அந்தத் திட்டத்தினுடைய பயன்கள் குழந்தைகளுக்குப் போய்ச் சேருகிறதா? இவையெல்லாம் சிந்திக்க வேண்டியன, எங்கே போகிறோம்? சிந்தனை செய்வோம்? எங்கே போகவேண்டும்? முடிவு செய்வோம்.

இந்தியா பல நூற்றுக்கணக்கான ஆண்டுகள் வரலாற் றுப் பழமை உடையது, இந்த நாட்டினுடைய பழமைக்கு ஈடாக வேறு எதுவும் சொல்ல முடியாது. அந்தப் பழமை யினுடைய வரலாற்றுப் பெட்டகங்கள் ஏராளம் உண்டு. இந்திய நாட்டு வரலாறு தொடர்ந்து சென்று கொண்டிருக்கிறது. ஏராளமான வரலாற்றுப் படிப்பினைகளை இந்த நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டார்கள். வரலாற்றுப் படிப்பினைகளை இந்த நாட்டு மக்கள் ஏற்றுக்கொண்டு, புதியன கண்டு, போர்க் குணத்தோடு போராடி வந்திருந்தால் இன்றைக்கு இந்த நாட்டினுடைய அமைவே வேறு மாதிரியாக இருந்திருக்கும். ஆயினும் அவர்கள் படிப்பினைகளை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை.

இந்தியாவில் இருக்கின்ற இலக்கியங்களில் மிகப் பழமையானவை இதிகாசங்கள். இராமகாதை பாரதம், இந்த இரண்டு இதிகாசங்களும் மிகப் பழமையானவை என்பது மட்டுமல்ல. வாழ்க்கைக்குரிய நெறிகளை, முறைகளை நமக்கு ஏராளமாகப் புகட்டுகின்றன. இவைகளைப் பற்றி நாம் படித்துத் தெரிந்து கொண்டது ஓரளவு தான். ஆனாலும், எங்கு பார்த்தாலும் இராமனுக்குப் புகழ் பாடுபவர்கள் உணர்க. பாரதத்திற்குப் பறைசாற்றுபவர்கள் உண்டு. எனினும், இராமகாதையினாலும், பாரதத்தினாலும், படித்துக்கொள்ள வேண்டிய பாடங்கள் என்ன? இராம காதையிலிருந்த கோசல நாடு என்ன? இலங்கை நாடு என்ன? இன்றைக்கு இருக்கிற தம்முடைய நாடு என்ன? ஒப்பு நோக்கிப் பார்த்தோமா? புராணங்களை எடுத்துக் கொள்ளுங்கள். ஏராளமான புராணங்கள் அந்தப் புராணங்களும் கூட, தெரிந்தோ, தெரியாமலோ, சண்டைகளைப் பற்றியே நிறைய பேசி விட்டன. கடவுளுக்கும், தேவர்களுக்கும் சண்டைகள் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் சண்டைகள், மூன்று தேவர்களுக்கிடையில் சண்டைகள்! இப்படிச் சண்டைகளைப் பற்றியே இந்தியா ஏன் சிந்தித்துக் கொண்டிருந்தது என்று தெரிந்துகொள்ள முடியவில்லை. இந்தச் சண்டைகளை மறப்பது அவசியம்.

இலக்கிய உலகத்திற்குள் நுழைந்தால், இந்திய மொழி இலக்கியங்கள் ஒரு பூங்கா என்று சொல்லலாம். பெரிய கருவூலமாக இருக்கின்ற உபநிடத்திலிருந்து, நம்முடைய இராமானுசர் காலம் வரையில், ஏன், நம்முடைய பாரதி காலம் வரையில் இலக்கிய அடிச்சுவடுகளைத் தொடர்ந்து வந்தால், ஏராளமான படிப்பினைகள் பழைய உபநிஷத்து ஒன்று கூறுகிறது.

    "ஒன்றாக உழையுங்கள் ஒன்றாக உண்ணுங்கள்!

    ஒன்றாக இருங்கள், ஒன்றாக வாழுங்கள்!” என்று.

இது வேதங்களின் மணிமுடிச் சிகரமாக உள்ள உபநிடத்தின் வார்த்தைகள், இன்றைக்கு எங்கே அப்படி வாழுகிறோம்? ஒன்றாக உண்ணுவதிலேயே சாதி முறைகள் குறுக்கிடுகின்றன. இராமகாதையை எடுத்துக் கொண்டால், கம்பன் அற்புதமாக ஒரு நாட்டை எண்ணிப் பார்க்கிறான். அவனுடைய லட்சிய நாடு அது. அவனுடைய கோசல நாடு அப்படியிருந்ததா? தெரியாது. அவன் கண்ட இலங்கை நாடு அப்படியிருந்ததா? சொல்ல முடியாது. ஆனாலும் கம்பன் தன்னுடைய இலட்சிய நாடு ஒன்றை தன்னுடைய காதையில் நினைவூட்டுகிறான். "கள்வரும், காவல் செய்வாரும் இல்லாத நாடாக இருக்கவேண்டும்" என்று ஆசைப்படுகிறான். எல்லாரும் எல்லாப் பெருஞ் செல்வமும் பெறவேண்டுமென்று ஆசைப்படுகின்றான். இன்று இந்த நாட்டினுடைய நிலைமை என்ன? எண்ணிப் பாருங்கள்.

புறநானூற்றுக் காலத்திற்கு வந்தால், உலக சர்வ தேசிய இளைஞனைப் போல விளங்குகின்றான் கணியன் பூங்குன்றன். ஓர் உலகம் என்னும் கருத்து அறிவியல் பூத்துக் குலுங்கிய பின்னர் மேற்றிசை நாட்டில் தோன்றிய கருத்து. இன்னும் சொல்லப் போனால் அச்சத்தில் தோன் றிய கருத்து. ஆனால் கணியன் பூங்குன்றன் அன்புதழுவிய நிலையில் ”யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று பாடுகின்றான். "எல்லா ஊர்களும் என்னுடைய ஊர். எல்லாரும் என்னுடைய சுற்றத்தார்" என்ற கணியன் பூங்குன்றன் பிறந்த மண்ணில் இன்றைக்கு ஜாதி, குலம் போன்ற வேற்றுமைகள் பிரிந்து வளர்ந்து வருகின்றன.

பழைய காலத்தில் சாதி வேற்றுமைகள் இருந்த துண்டு. ஆனாலும் அந்த வேற்றுமைகள் நெகிழ்ந்து கொடுத்தன. இன்று அவை நெகிழ்ந்து கொடுக்காமல் இறுக்கமடைந்து வருகின்றன என்பதை அன்பு கூர்ந்து எண்ணிப் பாருங்கள். 2000 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய திருவள்ளுவர்,

    "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்”

என்று சொன்னார். பிறப்பில் உயிர்களிடையே வேறுபாடு இல்லை. அனைவரும் சமம் என்று சொன்னார். அதையே வழி மொழிந்த அப்பரடிகள், "இந்த நாட்டில் சாதி இல்லை. சாதிகளைச் சொல்பவர்கள் சழக்கர்கள்” என்று மிகக் கடுமையாகச் சாடினார்.

எல்லோருக்கும் மேலாக புரட்சி பூத்த மண்ணாகிய பசும்பொன் மாவட்டத்துத் திருக்கோட்டியூர் மதில் மேல் ஏறி, ஒரு பெருந்தகை உபதேசித்தார். மந்திரத்தை எல்லா மக்களுக்கும் வாரிக் கொடுத்தார். அவருடைய ஆச்சாரியன் ”இந்த மந்திரத்தை நீ மற்றவர்களுக்குச் சொன்னதால் நீ நரகத்திற்குப் போவாய்" என்று சொன்னார். "கோடானுகோடிப் பேர் வைகுந்தத்துக்குப் போகும்போது நான் நரகத்திற்குப் போனால் என்ன?” என்று இராமாநுசர் கேட்டார். அந்த இராமாநுசர் பிறந்த மண்ணில் இன்றைக்குச் சுயநலமே வளர்ந்து வருகிறது. பிறர் நலம் குறைந்து வருகிறது. நாட்டுக்கு உழைத்தல் தவம் என்று பாரதி சொன்னானே, அந்த தவம் மீண்டும் தோன்ற வேண்டும். அந்தத் தவத்தை வளர்க்க வேண்டும். அந்தப் பெருமக்கள் காலத்தை வென்றார்களா?

எத்தனை சிறந்த கவிஞர்கள், தத்துவ ஞானிகள், மேதைகள் இந்த நாட்டில் தோன்றினார்கள்? அவர்கள் காலம் கடந்து நம்மால் பாராட்டப்படுகிறார்கள். போற்றப் படுகிறார்கள். ஆனால் அவர்களை நாம் பின்பற்று கிறோமா? அவர்களுடைய வழித் தடத்தில் நாம் நடக்கின்றோமா? அவர்களுடைய சிந்தனைகளுக்கு செயல்களுக்கு நாம் வெற்றி சேர்ப்பிக்கின்றோமா? என்றால் இல்லை.

இன்று நம்முடைய நாடு ஜனநாயக நாடு. மக்களாட்சி முறை நடைபெறுகின்ற நாடு. ஜனநாயகம் என்பது ஒரு அரசியல் கோட்பாடு மட்டுமல்ல. அது ஒரு வாழ்க்கை முறை. நண்பர்களுக்கிடையில், கணவன் மனைவிக்கிடையில், குடும்பச் சூழ்நிலையில், கடை வீதியில், ஊரில், நாட்டில், சட்டசபையில், பாராளு மன்றத்தில், எங்கும் ஜனநாயக மரபுகள் செழித்து வளர் வேண்டும். சொல்லுவது சிலவாக இருக்கவேண்டும். பிறர் வாய் கேட்பது அதிகமாக இருக்கவேண்டும். ஜனநாயக வடிவம் போதாது. ஜனநாயக உணர்வு தேவை. ஜனநாயக வாழ்க்கையின் மரபில் அலட்சியம் கூடாது.

ஒரு சாதாரண பாத்திரம் கூனி. அவளை அலட்சியப் படுத்தியதால் இராம காதையின் திசையே மாறிவிட்டது. சிறுவர்களை, சின்னஞ்சிறு மனிதர்களை அலட்சியப் படுத்துகிற மனப்போக்கு கூடாது. எல்லோருக்கும் மதிப்புத் தரவேண்டும். பாராட்ட வேண்டும். போற்ற வேண்டும். அரசியல் என்பது ஒரு ஞானம், அது ஒரு அறிவியல், அரசியல் அறிவு மக்களாட்சி முறையில் வாழுகின்ற நாட்டு மக்களுக்குத் தவிர்க்க முடியாது. அரசியல் அறிவு, அரசியல் போராட்டங்கள், அரசியல் கட்சிகளுக்கே சொந்தமானவை அல்ல. நம்முடைய நாட்டில் அரசியலை, அரசியல் கட்சிகளிடமே ஒப்படைத்து விடுகிறார்கள்.

படித்தவர்கள், பேராசிரியர்கள், சிந்தனையாளர்கள், இவர்கள்கூட அரசியலைப் பற்றி பேச கூச்சப்படுகிறார்கள் -பயப்படுகிறார்கள். தப்பித் தவறி பேசிவிட்டால் கட்சிக் காரர்களுக்குக் கடுஞ்சினம் ஏற்படுகிறது. அன்பு கூர்ந்து மன்னித்துக் கொள்ளுங்கள். அரசியல் சிந்தனை இந்த நாட்டின் அனைத்து மக்களுக்கும் என்றைக்கு ஏற்படுகிறதோ, அன்றைக்கே மக்களாட்சி முறை வளரும்.

கோசல நாட்டில் இராமனுக்கு முடிசூட்டப் போகிற செய்தியறிந்தபோதும் மக்கள் மகிழ்ந்தார்கள். இராமன் காட்டுக்குப் போகிறபோதும் அழுதார்கள். அது நாட்டு அரசோடு மக்கள் சேர்ந்து இயங்கிய, இயக்கத்தினுடைய விளைவு. இன்றைக்கு நம்முடைய நாட்டு அரசியலில், ஆட்சியில் அந்த இயக்கத்தோடு மக்கள் சேர்ந்து இயங்குகிறார்களா? இல்லையில்லை. நாடு கடன் வாங்கினால் நம்முடைய நாட்டு மக்கள் கவலைப்படுகிறார்களா? அழுகிறார்களா? நாட்டுக் கடனைத் தீர்ப்பதற்காக ஒருவேளை சாப்பாட்டை தியாகம் செய்யத் தயாராக இருக்கிறார்களா? சாப்பாட்டைத் தியாகம் செய்ய வேண்டாம். ஒரு தேநீரைத் தியாகம் செய்வார்களா? அப்படிப்பட்ட புரட்சி எண்ணத்தை நாட்டு மக்களுக்குக் கொடுத்தாக வேண்டும். மக்களை அரசு காப்பாற்றக் கூடாது. அரசை மக்கள் காப்பாற்ற வேண்டும்.

ஜனநாயகம் என்பது ஒருமுறை மட்டுமல்ல அது ஒரு வாழ்க்கை முறை. அது உணர்வு செறிந்தது. ஒழுங்கு சேறிந்தது. ஒழுக்கம் செறிந்தது. இன்று எங்கு பார்த்தாலும் போட்டா போட்டிகள் தலைமைக்கும் பெருமைக்கும் போராட்டங்கள்! இலட்சியத்தைப் பறிகொடுத்து விட்டுக் கூட பெருமை தேடுவார்கள் போலத் தெரிகிறது. இலட்சியம் பெரிது. இலட்சியம் தூய்மையானது. இலட்சிய வாழ்க்கை உயர்ந்தது. பதவிகளும், பெருமையும் வரலாம் -போகலாம். இலட்சியத்தைத் தியாகம் செய்துவிட்டுத் தயவு செய்து பதவிகளைத் தேட வேண்டாம். பெருமைகளைத் தேட வேண்டாம்.

இளைய பாரதமே! எழுந்திரு புதிய பாரதமே! எழுந்து வா; உனக்குத் தேவையான கல்வி எது என்று நிர்ணயம் செய்! தற்சார்பான கல்வியைப் பெறு! வேலையைத் தேடாதே வேலையை உருவாக்கு கை வருந்தி உழைப்பவர் தெய்வம் என்று நம்பு நோம்பு நோற்று உழைத்து வாழ்க! புதிய வரலாறு படைத்திடுக! வரலாற்றுப் போக்கோடு ஓடி விடலாம் என்று நினைக்காதே! நீ வரலாற்றை நிகழ்த்தி, நின்று போராடிப் புதிய வரலாற்றைப் படைத்து சாதனை செய்! உன்னுடைய காலம் இந்த நாட்டினுடைய வரவலாற்றில் பொன்னேடாக அமைய வேண்டும்.

எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்? அன்பு கூர்ந்து சிந்தனை செய்யுங்கள். இன்று இந்த நாடு எங்கே போய்க் கொண்டிருக்கிறது? எங்குப் பார்த்தாலும் வன் முறைகள் மொழிச் சண்டைகள்! சாதிச் சண்டைகள் மதச் சண்டைகள்! ஏதோ ஒன்றைத் தேடிக் கொண்டு அவல மனத்தோடு அலைந்து கொண்டிருக்கிறார்கள், யாருக்கும் திருப்தியில்லை. எங்கும் ஆதிருப்தி இதற்கென்ன மாற்று? இதற்கென்ன வழி? இதற்கு யார் வழி சொல்ல முடியும்? வேறுயாறும் சொல்ல முடியாது.

இளைய பாரதம் ஒன்றுதான் சொல்ல முடியும். அவர்கள் எழுத்தால், எழுந்து நடந்தால், அவர்களால் இந்த நாட்டுக்கு வெற்றி வாய்ப்புக்களை, குவிக்க முடியும். புதிய வரலாற்றைப் படைக்க முடியும். புதிய பாரதம் பொலிவோடு விளங்கும். அதை நினைத்து, எண்ணிப் பார்த்து, முடிவு செய்வதற்காக எங்கே போகின் றோம் என்று சிந்தனை செய்யுங்கள்! எங்கே போக வேண்டும். என்று முடிவு செய்யுங்கள்! போக வேண்டிய இடத்திற்கு, போகவேண்டிய வழி, முறை, தொலைவு ஆகியவற்றையும் முடிவு செய்யுங்கள். தைரியமாக, துணிவாக, நடைபோடுங்கள்! வெற்றி பெறலாம்.

எங்கே போகின்றோம் என்ற கேள்விக்குப் பதிலாக நாம் எங்கே போக வேண்டும் என்ற கேள்வியைக் கேட்கப் போகின்றோம். ஆம்! மனிதனை முதலில் உருவாக்க வேண்டும். படிப்பாளிகளை உருவாக்கி இருக்கிறோம். ஆனால் படைப்பாளிகளை உருவாக்குகின்ற கல்வி, படைப்பாளிகளை உருவாக்குகின்ற அறிவு, திசைநோக்கி நாம் இனி போகவேண்டும். உழைப்பு என்பது உயர்ந்தது. மதிப்பில் உயர்ந்தது. தவமனை யது. அந்த உழைப்பை அலட்சியம் செய்யக் கூடாது. ஒரு நாட்டு மக்கள் கடுமையாக உழைத்தால் அந்த நாடு வளரும் வாழும்!

எந்த ஒரு நாட்டிலும் எளிதாக மாற்றத்தை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மாற்றம் என்பது வளர்ச்சிக்குத் தவிர்க்க முடியாதது. எங்கு வளர்ச்சி இருக் கிறதோ அங்கு மாற்றம் இருக்கும். மாற்றம் இருக்கின்ற இடத்தில் வளர்ச்சி இருக்கும். இவற்றைநோக்கி நாம் பயணம் செய்ய வேண்டும்.

இந்த நாடு பரம்பரை பரம்பரையாக வேளாண்மை யில் சிறந்து விளங்கிய நாடு. "உழவுக்கும், தொழி லுக்கும் வந்தனை செய்வோம்” என்பான் பாரதி. ஆனால் இந்த நாட்டில் கோடிக்கணக்கான ஏக்கர் நிலங்கள் தரிசாகக் கிடக்கின்றன. சாதாரணமாக கிராமப் புறங்களில் பெண் சிரித்தால், பலருக்கு, ஆண்களுக்குக் கோபம் வரும், பெண் சிரித்துவிட்டாளே என்று கோபப் படுவார்கள். ஆனால் இந்த நாட்டில் நீண்ட நாட்களாக ஒரு பெண் சிரித்துக்கொண்டே இருக்கிறாள். அதிலும் பரிகாசமாக நம்மைப் பார்த்து நகைத்துக் கொண்டிருக்கிறாள். அந்தப் பெண் யார்? நிலமகளாகிய பூமி தேவி.

”இலம் என்றசை இருப்பாரைக் காணின் திலம் என்னும் நல்லாள் நகும்" என்றார் திருவள்ளுவர் இன்றைக்கு நிலமகள் நம்மைப் பார்த்து நாணிச் சிரிக்கின்றாள். நம்நாட்டில் எண்ணெய் இறக்குமதி, கோதுமை இறக்குமதி செய்கிறார்கள். இப்படி விளைகின்ற விளையுள் இருந்தும், உழைக்கின்ற கரங்கள் இருந்தும், ஏன் இந்த நிலை? எண்ணுங்கள்! நல்ல வளமான நாட்டை உருவாக்க நடந்திடுங்கள்! அந்த திசைநோக்கி தடக்க வேண்டும்.

நல்ல கால்நடைகளைப் பேணிவளர்ப்போம் ”வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்" என்று அன்று ஆண்டாள் நாச்சியார் பாடினார். இன்று குடம் நிறையக் கறக்கும் மாடுகளை நமது நாட்டில் பஞ்சாபில்தான் பார்க்க முடிகிறது அடுத்து குஜராத்தில்தான் பார்க்க முடிகிறது. நாடு முழுதும் அத்தகைய கால் நடைகள் வளர வேண்டும்.

அறிவியல், நாட்டுக்கு இன்றி அமையாதது. அறிவியலும், ஆன்மிகமும் முரண்பட்டதல்ல. ஆன்மிகமும் ஒரு அறிவியல்தான். அறிவியல் என்பது வளரும் உலகத்தை, நம்மைச் சுற்றியுள்ள உலகத்தை, நம்மைச் சுற்றியிருக்கக் கூடிய சமூகத்தை, நமக்குப் பயன்படுத்திக் கொள்வது, வளர்ப்பது, வாழ்வது, என்பதுதான். நம்முடைய பொருளாதாரம் செழிப்பாக இருக்கவேண்டும். கடன் வாங்கிய காசு கையில் புரளலாம். ஆனால் சொந்த மாகாது. நம்முடைய நாட்டினுடைய சொந்த மூலாதார வளங்கள் பெருகி ஆக வேண்டும், நம்முடைய மூலதனம் பெருகவேண்டும், பன்னாட்டு மூலதனங்களைவிட, சொந்த மூலதனம்தான் தேசத்தின் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் என்பதை மறந்து விடாதீர்கள்!

எல்லோரும்தான் பிறக்கிறார்கள், எல்லோருக்கும் ஒரே ஒரு முறைதான் பிறப்பு. ஆதலால் மீண்டும் பிறக்கப் பேசவது நிச்சயமில்லை. ஆதலால், இலட்சியத்தை மேற்கொள்ளுங்கள். அந்த இலட்சியம் எதுவாக இருக்க வேண்டும்? நம்முடைய நாடு, நம்முடைய காலத்தில், நாடா வளத்தனவாக விளங்கவேண்டும். தாழ்விலாச் செல்வர் பலர் வாழவேண்டும், வளரவேண்டும். இந்த நாட்டை, இமயம் முதல் குமரி வரையில் ஒரு நாடாக ஆக்குவோம் கூட்டுவாழ்க்கை வாழ்வோம்! கூடிவாழ்தல் என்பது ஒரு பண்பாடாக இருக்கவேண்டும்.

ஜனநாயக மரபுகளைக் கடைப்பிடிப்போம் என்பது எல்லாம், இத்தநாட்டு வாழ்க்கை நெறியில், முறையில், உயிர்பிக்கவேண்டும். அன்பு நெறி இந்த நாட்டு நெறி; உலகத்தின் மிகப்பெரிய சமயமான புத்த மதத்தைக் கொடுத்தது இந்தியா-மறந்து விடாதீர்கள். போர்க் களத்தைவிட்டு விலகினான் அசோகன். உயர்ந்த அன்பு நெறியை இந்த நாடு ஒரு காலத்தில் போற்றியது. பாராட்டியது. இன்று இந்த நாட்டில் எங்குபார்த்தாலும் வன்முறைகள் கிளர்ச்சிகள் தீவிரவாதங்கள்! இவைகளை எதிர்த்துப் போராடி, அன்பும், அமைதியும், சமாதானமும், தழுவிய ஒரு சமூக அமைப்பை நோக்கி நாம் நடைபோட வேண்டும்.

எங்கே போகிறோம்? தெளிவாக முடிவுசெய்யுங்கள். எங்கே போகவேண்டும்? தெளிவாக முடிவுசெய்யுங்கள். இதைப்பற்றித் தொடர்ந்து சிந்திக்க, தொடர்ந்து பேச, வானொலி அனுமதி வழங்கியிருக்கிறது. நீங்களும் கூடவே வாருங்கள்! கூடவே சிந்தனை செய்யுங்கள். என்னுடைய பேச்சில் ஐயங்கள் இருந்தால் எழுதுங்கள் வினாக்கள் இருந்தால் தொடுங்கள்! விடைகள் வேண்டுமா? தரப்படும். ஆனாலும் ஒரு நாடு எதைப்பற்றி அதிகமாகப் பேசுகிறதோ, அந்தத் திசையில் அந்த நாடு நகரும் என்பதை மறந்து விடாதீர்கள்!

நாம் அனைவருமாக வானொலியின் மூலம் இந்த நாட்டினுடைய முன்னேற்றத்தைப் பற்றி, இந்த நாட்டி னுடைய எதிர்காலத்தைப் பற்றி பேசவேண்டும்! சிந்திக்க வேண்டும்! செல்ல வேண்டும் அப்போதுதான் நமது நாட்டை நல்லதிசைக்கு அழைத்துச் செல்லமுடியும். எங்கே போகவேண்டுமோ அங்கே போகமுடியும். அந்தத் தடம் அதோ தெரிகிறது! அந்தத் தடத்தைப் பிடிப்போம், தடம் மாறாமல் நடந்துபோவோம்! வருக! வருக!

        15-8-94 அன்று மதுரை வானொலியில் ஒலிபரப்பான உரை

----------