எங்கே போகிறோம்/12. எங்கே போகவேண்டும்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search


12. எங்கே போகவேண்டும்?

மதுரை வானொலி நேயர்களே! இனிய நல்வாழ்த்துக்கள்! கடந்த பதினொரு வாரமாக “எங்கே போகிறோம்?” என்ற தலைப்பில் கருத்துரைத் தொடர் வழங்கும் வாய்ப்புக் கிடைத்தது. நீங்களும் கேட்டீர்கள். இந்தக் கருத்துரைத் தொடரின் மூலம் ஏற்பட்டுள்ள கிளர்ச்சி எவ்வளவு? எத்தகையது? என்று கணக்கிட முடியவில்லை.

மதுரை அன்பர் ஏ.எஸ்.கே. ஒவ்வொரு பேச்சுக்கும் வினாக்களை எழுப்பியிருந்தார். அர்த்தமுள்ள வினாக்களாக எழுப்பியிருந்தார். அவருக்கு நன்றி! அதுபோல திருப்புனவாசல் இளைஞர்கள் கூடியிருந்து கேட்டுள்ளனர். வினாக்களும் எழுதியுள்ளனர். அந்த இளைஞர்களுக்கு நமது வாழ்த்துக்கள். வானொலி நிலையத்தாருக்கும் நன்றி சொல்ல வேண்டும். ஆனாலும் நன்றியை வார்த்தைகளால் கூறாமல், வானொலி நிலையத்தினர் நமக்குப் பலவிதங்களில் சிந்திக்கும் வாய்ப்பு அளித்து வருவதை நினைந்து, திருக்குறள் வழியில் அவர்களுக்கு நன்றியறி தலுடன் வாழ்தல் நமது கடமை.

எங்கே போகின்றோம்? வாழ்க்கை ஒரு பயணம்; நெடிய பயணம் போலத் தோற்றமளித்து குறுகிய காலத்தில் முடியும் பயணம்.

“நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை யுடைத்திவ் வுலகு”

என்று திருக்குறள் கூறும். வாழ்க்கையில் இளமையில் பிழைகள் நேர்ந்தால் வாழ்க்கையின் நடுவில் போராட்டங்கள் அமையும்; வாழ்க்கையின் முடிவில் கழிவிரக்க நிலை தோன்றும். இந்த அவலத்தைத் தவிர்த்துக்கொள்ள வேண்டாமா? எங்கே போகிறோம்?

எது நமது வாழ்க்கையின் குறிக்கோள்? “மானுடம்” அற்புதமான பிறவி நான்கு சுவர்களுக்குள் அடங்கிய குடும்பத்திற்காக மட்டுமா இவ்வளவு பெரிய மானுடப் பிறவியை இறைவன் வழங்கியிருப்பான்? தான் உண்டு, தான் வாழ்தல் அவசியம்; திருமணம் நிகழ வேண்டும்; வாழ்தல் வேண்டும்; அடுத்த தலைமுறைகள் தோன்ற வேண்டும்; எல்லாம் நடக்க வேண்டும்; நன்றாகவே நடக்க வேண்டும்.

ஆயினும் வீட்டிற்கு வெளியே உள்ள உலகம் வெளிச்சத்தில் இருந்தால்தான் வீட்டிற்குள் வெளிச்சம் இருக்கும். சூரியன் எரிகிறது; உலகம் முழுவதற்கும் ஒளி தருகிறது; வாழ்வளிக்கிறது; சிமினியும் எரிகிறது. ஆனால் வெளிச்சம் குறைவு. தன்னைக் காட்டுகிறது; சுற்றிலும் கிடக்கும் சில பொருள்களைக் காட்டுகிறது. இன்று பலர் சிம்னி விளக்குப் போல வாழ்கின்றனர். பலரால் அவ்வளவுதான் முடியும்.

ஒரு சிலராவது வீட்டிற்கு வெளியே உள்ள உலகத்தைப் பார்க்கக் கூடாதா? ஊருக்குப் பத்து பேர், ஊராரைப் பார்க்க, ஊரை வளர்க்க நேரமில்லாமலா போய்விட்டது? அல்லது ஆற்றல் இல்லாமல் போய் விட்டதா? அதெல்லாம் ஒன்றும் இல்லை. சுயநலம் ஒரு காரணம். மற்றவர் வாழவேண்டும் என்ற கவலையே பலருக்கு இல்லை. இன்னும் பலருக்கு அச்சம் பயம்! ஊருக்கு நல்லது சொன்னால் எவ்வளவு பேர் கேட்பார்கள்? பலர் கேட்க மாட்டார்கள். ஆதலால் நமக்கு ஏன் வம்பு என்று ஒதுங்குகின்றனர்.

இந்த உலகத்தின் போக்கு வினோதமானது. இந்த உலகத்தின் அங்கீகாரத்தை எதிர்பார்ப்பவர்கள் எதையும் செய்ய இயலாது. அதனால்தான் இன்று புகழ் என்பது விளம்பரமாக, தம்முடைய கையாட்களை வைத்துச் செய்து கொள்வதாயிற்று. அண்ணல் ஏசு முதல் அண்ணல் காந்தியடிகள் வரையில் அப்பரடிகள் முதல் அருட்பிரகாச வள்ளலார் வரையில், உலகம் அங்கீகரிக்கவில்லை மாறாகத் துன்புறுத்தியது.

ஆதலால் நீ வாழ ஆசைப்பட்டால் வாழ முற்படு! வாழ்க்கையின் குறிக்கோளை நிர்ணயம் செய்து கொள்! குறிக்கோளை அடையத் தளர்ச்சியின்றி முயற்சி செய்; நாளும் உழைப்பை, முயற்சியை, வளர்த்துக்கொள்! வாழ்வாய்! மற்றவர்களையும் வாழ வைப்பாய்!

இப்பிறவி நமக்குக் கிடைத்த ஓர் அரிய வாய்ப்பு. வாய்ப்பு எப்போதும் வராது. தொடர்ந்தும் வராது. அது நமக்காகக் காத்துக்கொண்டும் நிற்காது. வாய்ப்பு இருக்கும் திசையை நாடுங்கள் எது வாய்ப்பு-நல் வாய்ப்பு என்று இனங்கண்டு கொள்ளும் திறமை வேண்டும்.

வாய்ப்புக்களைத் தேர்வு செய்து ஏற்பதில்தான் வெற்றி இருக்கிறது. வாய்ப்புக்களைக் கவனிக்காமல் அதனைத் தாண்டி நாம் போய்விடக் கூடாது. அது போலவே நம்மைத் தாண்டி வாய்ப்பு போக அனுமதிக்கக் கூடாது. “வாய்த்தது நந்தமக்கு ஈதோர் பிறவி; மதித்திடுமின்” உளதாகும் சாக்காட்டை விரும்புங்கள்! வளருங்கள்! வாழுங்கள்!

ஒரு நாடு நல்ல குடிமக்களைப் பெற்றிருந்தால்தான் அந்நாடு வளரும் புகழ்பெறும் இன்று நமது நாட்டில் குடிமக்கள் தகுதி பெற்றவர்கள் மிக மிகச் சிலரே. 10 விழுக்காடு கூட இருக்க மாட்டார்கள். நாட்டுப் பற்றும், எல்லோரும் இந்தியர் என்ற உணர்வும் இன்று அருகி வருகிறது. நாட்டுக்காக அரசியல் என்பது போய், தனது ஆதாயத்துக்காக அரசியல் என்பதாகி விட்டது.

அன்று அன்னியர்கள் சுரண்டினார்கள். இன்று இந்தியர்களே இந்தியாவைச் சுரண்டுகிறார்கள். இந்த அவலம் எளிதில் அகலாது. பொது மக்கள் கருத்துத் திரண்டால், பொது மக்கள் இதுபற்றி பேசினாலே கூட அகலும். பொது மக்களிடத்தில் அரசியல், சமூக விழிப்புணர்வுகளை உண்டாக்குங்கள் போர்க் குணத்தை உருவாக்குங்கள்!

சுதந்திர தினப் பொன்விழா வரப்போகிறது. இன்னமுமா வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்வது? நமது நாட்டு இளைஞர்கள் வேலையில்லாத் திண்டாட்டத்தினால் தவித்தும் வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகள் கூட அமையாத வாழ்க்கையில் ஒரு புழுவென நெளிந்தும் எத்தனை ஆண்டுகள் வாழ்வது? நெடுந்துயிலிலிருந்து விழித்துக் கொள்! பொது மக்களிடம் விழிப்புணர்ச்சியை உண்டாக்கு! தன்னை நாடிக் கேட்பவர்களுக்கும், ஏதாவது தருபவர்களுக்கும், விளம்பர மன்னர்களுக்கும், வாக்களிக்க மாட்டோம் என்று உறுதி கொள்ளச் செய்க!

அடக்கமாக இந்த நாட்டை நேசிப்பவர்களை இந்த நாட்டு மக்களை நேசிப்பவர்களைத் தேடிப் பிடித்து வேட்பாளர் ஆக்குங்கள்! அவர்களுக்கே வாக்களியுங்கள்! இந்த நாட்டில் ஐம்பது ஆண்டுகள் வாழ்ந்தவர்களுக்கு இந்த நாட்டைப் பற்றித் தெரியாதா? யாருக்கு வாக்களித்தால் நல்லது என்று இளைஞர்களுக்கு வழிகாட்டக் கூடாதா?

மனிதகுல வரலாற்றை உருவாக்குவதில் மத்தியதர வர்க்கத்திற்கு ஒரு இடம் உண்டு! சமுதாய மாற்றத்தை மத்தியதர வர்க்கமே உருவாக்க இயலும். இன்று நமது நாட்டு மத்தியதர வர்க்கம் நுகர்பொருள் சந்தையில் மூழ்கி விட்டது. மூளைச் சோம்பலுக்கு இரையாகி விட்டது. ஏழைகள் நிலையான தீர்வுகாண விரும்பவில்லை. இனாம், இலவசம், இவற்றையே நம்பி வாழ்கின்றனர். கோடிக்கணக்கான மக்கள் என்று பொழுது விடியும் என்று எதிர்பார்த்துக் கிடக்கின்றனர். பொழுது விடியாது! நாமாகத்தான் விடியவைக்க வேண்டும்.

ஜனநாயக மரபுகளைப் பயிற்றுங்கள்! கூடிச் சிந்தனை செய்யுங்கள்! கூடிவாழக் கற்றுக்கொள்ளுங்கள்! ஒருவர் எல்லாருக்காகவும், எல்லோரும் ஒருவருக்காகவும் என்று வாழக் கற்றுக்கொள்ளுங்கள்! மக்களுக்கு நன்னடை நல்கும், அரசைப் போற்றுவோம்!

நிலத்தில் நாம் பிறக்கின்றோம். நிலத்திலேயே வாழ்கின்றோம். நிலமே நமக்கு உணவுப் பொருள்களைத் தந்து வாழ்வளிக்கிறது. இறுதியிலும் நிலத்தின் மடியையே சரண் அடைகின்றோம். நிலத்தை நம்மிடமிருந்து பிரிக்க முடியாது. இந்நிலத்தைப் பேணுங்கள்! நிலத்தின் தரத்தைக் காப்பாற்றுங்கள்! நிலத்தில் மரங் களை நடுங்கள்! பயிர்களைச் சாகுபடி செய்யுங்கள். எங்கும் பசுமை போர்த்திய நிலத்தையே காண்க!

விலங்குகள், பறவைகள் துணையின்றி மனிதன் வாழ்தல் இயலாது. கால் நடைகள் செல்வம். கால்நடை வளர்த்தல் பன்முகப் பயன்தரும் தொழில். பால் மாடுகள் நமக்குப் பூரண சத்துணவாக விளங்கும் பாலைத் தருகின்றன. நிலத்திற்கு உரமளிக்கின்றன. ஆதலால் வீடுகள் தோறும் பால்மாடுகள் வளர்த்து பாலும், மோரும் உண்டு வளமாக, வலிமையாக வாழ்வோமாக!

மானுட வாழ்க்கையின் அடிப்படை, மானுட வாழ்க்கையின் இயக்கம் எல்லாம் பொருளாதார அடிப்படைதான். அல்லது பொருளாதாரமே தான். ஒரு சிலர், கருத்தே உலகை இயக்குகிறது என்பர். கருத்து இந்த உலகத்தை இயக்குவதாயின் ஆன்மிக மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும். உலகத்தில் மனிதன் சிந்திக்கத் தொடங்கி பல நூறாயிரம் ஆண்டுகள் உருண்டோடி விட்டன.

உலகத்தில் எந்த நிலையில் தோன்றிய எந்த கருத்தும் உலகத்தை வென்று விளங்கவில்லை. ஆனால் பொருளாதாரம் இயக்கி வந்திருக்கிறது. பண மதிப்பீட்டுச் சமுதாயம் விருப்பத்தக்கதல்ல என்று எவ்வளவு எடுத்துக் கூறினும் இன்னும் எடுபடவில்லை. நாட்டிற்கு நலம் செய்யும் வாய்ப்புக்களை நல்லூழால் பெற்றவர்கள் முதல் துறவியர் வரை பணமே இயக்குகிறது. ஏன்? திருக்கோயிலில் கடவுள் எழுந்தருளச் செய்யும் பொழுதுகூட பொற்காசுகள் போடுகின்றோம். அதனால்தான் மாமுனிவர் காரல்மார்க்ஸ் இந்தச் சமுதாய இயக்கத்திற்கு பொருளே முதல் என்றார்.

நமது திருவள்ளுவரும் “பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை” என்றார். “செய்க பொருளை” என்றார். ஆனால் பொருள் செய்யாமல், பொருள் செய்யும் முயற்சியில் முழு அக்கறையுடன் ஈடுபடாமல், அதிர்ஷ்டத்தை நம்புகின்றோம். லாட்டரிச்சீட்டை நம்புகின்றோம். இது தவறு. போகும் வழியும் அல்ல.

நமது நாட்டு மக்களின் வறுமைக்கு வயது குறைந்தது. இரண்டாயிரத்து முந்நூறு ஆண்டுகள் இருக்கலாம். ஆனால் மூப்பு அடையாமல், சாகாமல், வறுமை வளர்ந்து வருகிறது. இன்று வறுமை “வறுமைக் கோடு” என்று வெளிப்படத் தோன்றி, அரசின் அங்கீகாரத்தையும் பெற்று விட்டது. இந்த வறுமையை இந்தத் தலைமுறையில் அகற்றியே ஆகவேண்டும் என்று உறுதி பூணுங்கள்.

நடுத்தர மக்களுடைய பொருளாதார வளர்ச்சிக்கும்; ஏழைகளுடைய பொருளாதார ஆக்கத்திற்கும் நம் நாட்டில் தடைகள் பல உள்ளன. அவற்றுள் குறிப்பிடத்தக்கவை கறுப்புப்பணத்துடன் கொழுத்து வளரும் தனியுடைமை, பன்னாட்டு மூலதனம் முதலியன. மேலும் நம்முடைய பொருளாதார முன்னேற்றத்திற்குப் பெரிய தடை. நிலையாமைத் தத்துவம்— விதித்தத்துவம். இவற்றை எல்லாம் எதிர்த்துப் போர்க்குணத்துடன் போராடுவோம்! வறுமையிலிருந்தும், சிறுமையிலிருந்தும் விடுதலை பெறுவோம்!

மானுடம் அறிவுப் பிறவி!—அறிவு ஜீவன்! ஆனால் அறிவைத்தான் நம்மால் பெறமுடியவில்லை. கல்வி, கேள்வி முதலிய சாதனங்கள் பல்கிப் பெறுகியும் அறிவு வளரவில்லை. ஏன்? இன்று அறிவு வேட்கை உடையோர். யார்? அறியாமையையே - அறிவு என்று நினைத்துக் கொண்டு, தலையால் நடப்பவர்கள் பல்கிப் பெருகிவிட்டனர்.

எங்கு நோக்கினும் பட்டதாரிகள் ! ஆனால் படைப்புபாளிகளைக் காணோம்! ஏன் இந்த அவலம்? கற்க! தொடர்ந்து கற்க! கற்ற, கேட்ட கருத்துகளைச் சிந்தனை செய்க! அச்சிந்தனைக்கு உருவம் தருக! உருவம் தரும் முயற்சியில் அறிவு - முகிழ்க்கும்! அறிவு , துன்பத்திலிருந்து பாதுகாக்கும்! அறிவைத் தேடுவோம்! நாளும் தேடுவோம்!

அறிவு நுட்பமானது அறிவு பயனுடைய வகையில் இயங்க உழைப்புத் தேவை. இந்த உடல், உழைப்பால் ஆயது. உழைப்புக்காகவே உருவானது. உழைப்பும், அறிவறிந்த ஆள்வினையும் இந்த உலகை சென்ற காலத்தில் உருவாக்கி வந்துள்ளது. நம்முன் மதுரைப் பெருங்கோயில், வைகை நீர்த்தேக்கம், இவையெல்லாம் உழைப்பின் சிறப்பையே போதிக்கிக்றன! உழைப்பு, வாழ்வதற்கு இன்றியமையாதது.

உழைக்காது, அல்லது முற்றாக உழைக்காது உண்பவர்கள் சோம்பேறிகள்; கொள்ளைக்காரர்கள். உழைத்து உண்பதே உயர்வு. அறிவறிந்த ஆள்வினை சார்ந்த வாழ்க்கையை நடத்துவோமாக! உழைப்பில் இன்பம், இடையீடு இல்லாத உழைப்பில் இன்பம், பிறருக்கென உழைப்பதில் இன்பம் காண்போமாக!

மனிதனின் வரலாற்றுக்கு வளர்ச்சி தேவை! மாற்றங்கள் தேவை! ஓடிக்கொண்டே உள்ள ஆறுகள் பயன்படும் தீர்த்தம் எனப்படும். தேங்கிக் கிடக்கும் குட்டை நீர் பயன்படாது-நோய்களைத்தான் தரும். அதுபோல, வளர்ச்சியையும், மாற்றங்களையும் ஏற்படுத்திக் கொள்ளாத மனிதர்கள், மனிதகுலம் முன்னேற முடியாது; மேம்பாடு அடைய முடியாது.

பழக்கங்கள், வழக்கங்கள் என்ற சால் வழியே செல்லாது. பழக்கங்கள் தவிரப் பழகுமின் மனிதனுக்கு வாய்க்கும் எந்த ஒரு துன்பமும் இயற்கையுமன்று நியதியுமன்று இவையனைத்தும் மனிதனின், மனித குலத்தின் பிழைகளால் நேர்பவையே! பிழைகளைத் தவிர்த்துப் பழகுமின்!

“யாரொடும் பகை வேண்டாம்” என்றான் கம்பன், சொல் மூன்று. பொருள் பெரிது. “யாரொடும்” — உடன்பாடிலாதவரிடம் கூடப் பகை கொள்ளவேண்டாம். பகை இல்லையேல் போர் ஒடுங்கும்; புகழ் ஒடுங்காது. நாமும் பகையின்றி, பண்பு பாராட்டி, உறவு கொண்டு. வாழ்வோம்! யாரோடும் உறவு எவரோடும் ஒப்புரவு! இவை நமது வாழ்க்கை நெறிகளாகட்டும் பழமையின் சாரம் ஏற்போம்! பழமை வித்து!

பழமை இன்றையத் தலைமுறைக்கு உணவாக இயலாது. ஆனால் ஊட்டமேற்றும் உரமாகும். புதுமை படைப்போம்! புதியதோர் உலகைச் செய்வோம்! சாதிகளை அகற்றுவோம்! குலம், கோத்திரங்களை மறப்போம்! ஒன்றே குலம்-ஒருவனே தேவன் என்போம்! புவியை நடத்துவோம்! பொதுவில் நடத்துவோம்! மனிதகுல சமநிலை காண்போம்! மார்க்சியம் கற்போம்! வள்ளுவம் கற்போம்! இவ்விரண்டு தத்துவங்களும் இணைந்த சமுதாயம் காண்போம்!

எல்லோருக்கும் எல்லாப் பெருஞ் செல்வமும் அடையும் படி செய்வோம்! வல்லாருக்கும் மாட்டாருக்கும் ஒருங்கே வாழ்வளிப்போம்; ஒத்தாரும், உயர்ந்தாரும் தாழ்ந்தாரும், எவரும் ஒருங்கிணைந்து உலகியல் நடத்துவோம்! கணியன் பூங்குன்றன் வழி, பெரியோரை வியத்தல் செய்வோம்! சிறியோரை இகழ்தல் அதனினும் இலம்! நாளும் புதியன கற்போம்! புதியன படைப்போம்! இன்றைய பணிகளை, இன்றைய கருவிகளைக் கொண்டே செய்வோம்! இல்லாதவர் இல்லை என்று செய்வோம்! -

அப்பரடிகள் கூறியவாறு, “இன்பமே எந்நாளும்—துன்பமில்லை” என்று வாழ்வோம்! இந்த மண்ணில் விண்ணரசு காண்போம்!

‘சுதந்திரம்’ விலைமதிக்க முடியாதது. உலகம் முழுவதும், பல நூறு ஆண்டு காலம் மக்கள் போராடிச் சுதந்திரத்தைக் கண்டனர். 18-ம் நூற்றாண்டில், பிரஞ்சு தேசத்தில் நடந்த புரட்சி, மனித குலத்திற்கு மூன்று மந்திரங்களை வழங்கின. அவையாவன சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்பன. இவையே இன்றைய மனித உலகத்தின் தாரக மந்திரங்கள். இதன் பின் உலகம், சுதந்திரக் காற்றை சுவாசிக்கத் தொடங்கியது.

இன்று நமது நாடு சுதந்திர நாடு நாமே, நமக்கென்று நம்மை ஆள்வதற்கென்று ஆட்சி அமைக்கின்றோம். இன்று நமது நாட்டில் சுதந்திரத்தின் அருமை பலருக்குத் தெரியவில்லை ஏன்-சுதந்திரத் திருநாளைக் கூட வீட்டு விழாவாக, பொது விழாவாக, மக்கள் கொண்டாடுவதில்லை.

சுதந்திரத்திற்குப் பிறகும் பழைய தீபாவளிதான் பெரிய விசேஷமாக இருக்கிறது. ஏன்-அரசு கூட துணி விலைச் சலுகைகளை சுதந்திர தினத்திற்குத் தரவில்லை. சுதந்திர தின விழாவை வீடுகளிலும், நாட்டு மக்கள் விரிவாகக் கொண்டாடுதல் வேண்டும்.

“நாமிருக்கும் நாடு நமது” என்ற உரிமையை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். 18 வயது நிரம்பியதும், ஊராட்சி அலுவலகத்திற்குச் சென்று வாக்காளராகப் பதிவு செய்துகொள்ள வேண்டும். வாக்காளர்கள் தவறாமல், எந்தவிதமான தூண்டுதலும் இன்றி, கையூட்டும் இன்றி, வாக்குச் சாவடிக்குச் சென்று வாக்களிக்க வேண்டும். தவறாமல் எல்லோரும் வாக்களிப்பது என்ற கடமை மேற்கொண்டொழுகினால், கள்ளத்தனமாக ஒருவர் பெயரில் மற்றவர் வாக்களிக்க இயலுமா? அல்லது செத்தவர்தான் எழுந்து வந்து வாக்களிப்பாரா? அடையாள அட்டை அவசியப்படுமா? நம்முடைய தவறுகள்தானே அடையாள அட்டை கேட்கும்படியாகச் செய்து விட்டது?

சுதந்திர ஜனநாயக ஆட்சியில் எல்லோரும் வாக்களிப்பது கடமை. இதில் தவறக்கூடாது. சுதந்திர நாட்டின் குடிமக்கள் அனைவரும் நாட்டின் வளர்ச்சிக்குரிய பணிகளில் ஈடுபட உரிமை உண்டு. ஈடுபடவும் வேண்டும். அவரவர் நிலைக்கு ஏற்பத் தாம் வாழும் ஊரின் நலனுக்கும், மேம்பாட்டுக்குமுரிய பணிகளிலாவது ஈடுபட வேண்டும். அதுவும் இயலாது போனால் குறைந்த பட்சம் ஊரின், சமூகத்தின் நலனுக்கு ஊறு விளைவிக்காமலாவது வாழ்தல் வேண்டும்.

சமூக ஒற்றுமைக்கு விரோதமாக, கோள் சொல்லுதல், சிண்டு–முடிந்துவிடுதல் போன்றவற்றைத் தவிர்த்து விடுதல் வேண்டும். ஊரைத் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். வீதிகளில் குப்பைகளைப் போடுதல், கழிவு நீர்களை விடுதல் தவறு. பசுமையான மரங்களை வெட்டக் கூடாது. இங்ங்ணம் நல்லன அல்லாதவற்றைச் செய்வதைத் தவிர்த்தாலும் ஊர் வளரும் வாழும்!

ஒரு சுதந்திர நாட்டின் குடிமக்களுக்கு சமூக, பொருளாதார அறிவு தேவை. இவற்றைக் கற்றுக் கொள்ள அனைவரும் முன்வர வேண்டும்! அரசியல், சமூக, பொருளாதார அறிவினை மக்கள் மன்றத்தில் வளர்க்க, இளைஞர்கள் வகுப்புக்கள் மூலம் அரசியல் அறிவை, பொருளாதாரச் சிந்தனையை வளர்க்க வேண்டும்.

ஜனநாயக வாழ்க்கை என்பது தேர்தலுக்கு மட்டுமல்ல. ஜனநாயகம் என்பது ஒரு வாழ்க்கை முறை. ஜனநாயக வாழ்க்கை முறை தனிமனிதனின் சுய விமர்சனத்தாலும், கூட்டாகப் பலர் செய்யும் விமர்சனத்தாலும் வளரும், ஆனால் மற்றவர்கள் செய்யும் விமர்சனம் உள்நோக்கம் கொண்டதாக இல்லாமல், உண்மையில் நாட்டு நலனில் அக்கறை கொண்டதாக அமையவேண்டும். “செவி கைப்பச் சொற் பொறுக்கும்” பண்பு, ஜனநாயக வாழ்க்கைக்கு, கூட்டு வாழ்க்கைக்கு, இன்றியமையாததாகும்.

ஜனநாயக வாழ்க்கை முறையின் ஆணிவேர் கட்சிகள். தவிர்க்க இயலாத தேவைகள். இந்த அமைவுகள் அதிகார வேட்கை உடையனவாகவும், ஆதிபத்திய ஆசை உடையனவாகவும், பொருளாசை உடையனவாகவும் இருத்தல் கூடாது. நாட்டுக்குத் தொண்டு செய்வதையே குறிக்கோளாகக் கொண்ட கொள்கை அணிகளாக அமைய வேண்டும். அக்குறிக்கோளை அடையும் நெறிமுறைகளிலேயே கருத்து வேறுபாடுகள்!

ஆதலால், உள்நோக்கமும், பகையுணர்வும், ஆட்சி அதிகாரத்தில் பிடிப்பும் உடைய அமைப்புக்களால், கட்சிகளால், நாட்டுக்குப் பயன் விளையாது. சட்டசபை, பாராளுமன்ற விவாதங்களில் சூடு இருக்கலாம். நாட்டில் சூடு இருத்தல் அறவே கூடாது. நல்ல ஜனநாயகப் பண்பு, பிறர் வாய்க் கேட்கும் ஆர்வத்தைத் தூண்டும். யாரோடும் பகை கொள்ளாத பண்பாடே வெற்றி தரும்.

வாழ்க்கை குறிக்கோளுடன் அமைக்கப் பெற்றது என்பது வாய்த்திருக்கும் கருவிகளைப் பொருத்தே உணரப்படும் உண்மை. மானுடம் ஒரு பிறவி. மானுடம் வெற்றி பெற வேண்டும். வெற்றி பொருந்திய வாழ்க்கைக்குக் குறிக்கோள் தேவை. குறிக்கோள் இமயம் போல உயர்ந்ததாக இருக்கவேண்டும். யானையைக் குறி வை! அடிபடுவது கொசுவாக இருந்தாலும் பரவாயில்லை. குறிக்கோள். உயர்வாக அமைய வேண்டும்.

பல நூறு ஆண்டுகளாக நம்முடைய சமுதாயத்தை வருத்தி வரும் தீண்டாமை, சாதிப் பிரச்சனைகள், மதப் பிரிவினைகள், அறியாமை, வறுமை முதலியன, சுதந்திரம் வந்த பிறகும் அகன்றபாடில்லை. இந்தப் புன்மைகளை யெல்லாம் அகற்றி, ஒரு புதிய உலகத்தைப் படைப்பதை இலட்சியமாகக் கொள்வோம்!

புவியை நடத்துவோம்! பொதுவில் நடத்துவோம்! கூடி வாழ்தல் ஒரு பண்பு; நாகரீகம்; கூட்டுறவு உழைப்பை ஊக்குவிக்கும்; கோடி நன்மை தரும்; கூட்டுடமைச் சமுதாயமே எல்லோரும் எல்லாச் செல்வமும் பெற வழி செய்யும் வகை செய்யும்; கூட்டுடமைச் சமுதாயமே பொதுநலம் காண வழி!

காலம்-வாழுங் காலம் மிக மிகக் குறைவு. வாழ்க்கையின் தொடக்கத்தில் பல ஆண்டுகள் குழந்தைப் பருவத்தில் கழிந்து போகின்றன. வாழ்க்கையின் பிற்காலத்தில் பல ஆண்டுகள் ஓய்வில், முதுமையில், கழிந்து போகின்றன. இடையில் 40 ஆண்டுகள் தாம் வாழும் காலம். காலத்தை விலை மதிப்புள்ளதாக ஆக்கவேண்டும்.

இளமையில் படித்தது வாழ்க்கை முழுவதையும் நடத்தப் போதாது. நாள்தோறும் புத்தறிவு தேவை. நாள்தோறும் பழைய இலக்கியங்கவைப் படிக்கவேண்டும். நாள்தோறும் புதிய அறிவியல் நூல்களைத் தேர்வு செய்து படிக்கவேண்டும். கற்றல் ஒரு தொடர் பணி! நாம் தொடர்ந்து கற்றுக்கொண்டே போனால் நன்றாக வாழலாம். உடலுக்கு வலிவு; ஆன்மாவிற்கு கருத்து!

நல்ல நூல்களைக் கற்றல், சிந்தித்தல், தெளிதல், செயற்படுதல், ஆன்மிக வாழ்க்கைக்குத் துணை செய்யும். ஆன்மிக வாழ்க்கை என்பது ஆன்மாவின் தரத்தை உயர்த்துதல், வளர்த்தல் என்பதாகும். ஆன்மிக வாழ்க்கை மத சம்பந்தமுடையது மட்டுமன்று. கற்றல், கேட்டல், அன்பு செய்தல், ஒப்புரவு அறிந்து ஒழுகுதல் ஆகியன எல்லாம் ஆன்மிக ஒழுக்க நெறிகள்; ஆன்மிகப் பண்புகள்.

இவர் தேவர் என்றும், அவர் தேவர் என்றும், என் மதம்-உன் மதம் என்றும் கலகம் செய்பவர்கள் மத வாதிகள்; மத வெறியர்கள்; இது ஆன்மிகம் ஆகாது. விநாயகரின் வயிறு-பெரு வயிறு; அது உலகத்தின் சின்னம். உலகந்தழி இய வாழ்க்கைதான் ஆன்மிக வாழ்க்கை ஒத்தது அறிந்து ஒழுகுதல்தான் ஆன்மிக வாழக்கை.

கடவுள், ஆன்மா, நிலம், வான், வாயு, நீர், மானுட உயிர்கள் அனைத்தும் கற்பிப்பது பொதுமை! கடவுள், ஊர், பேர், மதம், இவைகளைக் கடந்து வாழ்வோம்! கடவுள் வழிபாடு என்பது பொதுமை போற்றலேயாம்! ஆற்றல்மிக்க அன்பால், அமைதி வழியில் மானுட சமுதாயத்தை அழைத்துச் செல்லுதலே ஆன்மிக வாழ்க்கை.


கடவுள் வழிபாட்டினால் ஆற்றலைப் பெறுவோம். நாம் வளர்வோம்! நாடும் வளரும் எல்லாருக்கும் எல்லாம் கிடைப்பதான திசை நோக்கி நடப்போம்! புதியதோர் உலகம் செய்வோம்!


29-10-94 அன்று மதுரை வானொலியில் ஆற்றிய உரை