எங்கே போகிறோம்/5. பொருளாதாரச் சிந்தனைகள்

விக்கிமூலம் இலிருந்து


5. பொருளாதாரச் சிந்தனைகள்

இந்த வாரச் சிந்தனை-பொருளாதாரத்தில் நாம் எங்கே போய்க்கொண்டிருக்கிறோம் என்பது. நாம் போகும் திசை சரியானது தானா? அல்லது எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறோமா? ஏனெனில் மானுட வாழ்க்கையின் அடிப்படையே பொருள்தான். வாழ்க்கைக்கு ஆதாரம் பொருள்; அதனால்தான் பொருளாதாரம் என்று பெயர் வைத்தார்கள் போலும்.

மானுடத்தின் உடல் சார்ந்த வாழ்க்கைக்கு இன்றியமையாத் தேவை பொருள். பொருள் என்னும் சொல் விரிவான பொருளாக்கம் தரும் சொல்லாகும். உணவு, உடை, இருக்க இடம் முதலியன எல்லோருக்கும்வேண்டிய அடிப்படைத் தேவைகள். இந்த அடிப்படைத் தேவைகள் நிறைவேறிய நிலையில் மேலும் தேவைகள் வளரும்.

தேவைகளை உழைப்பின் மூலம் அடைவது முதல் நிலை. ஆரம்பநிலை. காலப்போக்கில், சொத்து உருவாக்கும் ஆர்வத்தால், சொத்து, நிலம் முதலியன சேர்த்து, நிலப்பிரபுக்களாகி, பின் மெள்ள மெள்ள சுரண்டும் பொருளாதார நடைமுறைக்கு வந்துவிட்டான் மனிதன். இது வளரும் சமூகத்திற்கு நலம் பயக்காது.

ஒரு சமுகம் பொருளாதாரத்தில் சிறந்து விளங்க வேண்டுமானால் அனைத்துத் துறைகளிலும் முன்னேற்ற வேலைகள் நடைபெறவேண்டும் இது தவிர்க்க இயலாதது மட்டுமல்ல அப்போதுதான் முழுமையான வளர்ச்சியைக் காணமுடியும். மானுட சமுதாயம் பொருளாதாரம், கல்வி, கலை ஆகிய அனைத்துத் துறைகளிலும் முயற்சிகள் மேற்கொள்ளப் பெறுதல் வேண்டும்.

இவையனைத்தும்-அதாவது, கல்வி, பொருளாதாரம் கலை ஆகியன ஒன்றையொன்று தழுவியன. ஒன்றின்றிப் பிறிதொன்று முறையாக வளராது; பூரண வளர்ச்சியும் தடைபெறாது. பொருளாதாரம் என்பதன் முழுப்பொருள் பணமுடையராதல் அல்ல; சொத்துடையராதல் அல்ல; வாழ்கைத் தரம் உயரவேண்டும் என்பதாகும்; பொருளுக்காக வாழ்க்கையல்ல; வாழ்க்கைக்காகவே பொருள்.

பொருளாதாரம் உயர்ந்து வாழ்க்கைத்தரமும் உயர்ந்து விளங்கினால்தான் பாதுகாப்புக் கிடைக்கும்; சமாதானமும் அமைதியும் கிடைக்கும். உலகத்தில் பலகோடி மக்கள் வறுமையில் கிடந்து உழலும்வரை சமாதான்மும், அமைதியும் பகற்கனவே.

மக்கட் சமுதாயத்தில் நிலவும் சமநிலையற்ற பொருளாதார அமைவை முதலில் சமநிலைப்படுத்த வேண்டும். இதுவே பொருளாதாரம். இந்திய சமூகப் பொருளாதாரத்தில் அசமப் பொருளாதார நிலையே தொடர்ந்து இருந்து வருகிறது. வறுமைக்கோடு விழுந்து விட்டது.

நம்முடைய இந்திய சமுதாயத்தில் தமிழ்ச் சமுதாயத்தில் நிலவும் பொருளாதார அசமநிலை இருள் நிறைந்தது. இந்த அசமதிலையை மாற்றத் தொலைத் தூரம் சென்றிடல் வேண்டும். அத் தொலைதூரத்திற்குச் செல்ல முயற்சி செய்வோம்!

நமது ஏழ்மை நிலைக்கு கிரகங்கள் காரணம் அல்ல. நாம் தான் காரணம். வறுமையையும், ஏழ்மையையும் தொடர்ந்து போராடி அகற்றாத நாம் தான் குற்றவாளிகள். திருந்துவோம்! திருத்தமுறத் திட்டமிடுவோம்! திட்டமிட்ட திசையில் செல்வோம்!

பொருளாதாரத்தில் முன்னேற்றம் காண திறனுடைய முயற்சிகள் தேவை. இன்று இத்தகைய அருந்திறன் பெரும்பாலாரிடம் இல்லை. வறுமொழியாளரும் வம்பப் பரத்தரும், விவாதங்களிலேயே காலத்தைக் கழிப்போரும் நிறைந்து விட்டனர். இன்று இந்தியாவின் 85 கோடி மக்களும் சாப்பிடுகின்றனர். ஆனால் உருப்படியான வளர்ச்சி பொருந்திய பொருளாதாரத்திற்கு உழைப்போர் எத்தனை பேர்?

பழங்காலத்தில் திண்ணைகள் இருந்தன. திண்ணைப் பேச்சு இருந்தது. இன்று திண்ணைகள் இல்லை. ஆதலால், இன்று முச்சந்திப் பேச்சு, கடைப் பேச்சு; என்று உழைக்கும் காலமும், மனித ஆற்றலும் விரையமாகிறது. நுகர்வோர் எண்ணிக்கை கூடிவிட்டது. ஆனால் நுகர்வோருக்குத் தேவையான பொருள்கள் உற்பத்தி செய்யப் பெறவில்லை. ஒருபுறம் பிரமிக்கத்தக்க வளர்ச்சி ஏற்பட்டுள்ளதை மறுக்க முடியாது.

நவீன மருத்துவ வசதிகள் முதலியன அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன. அதனால் பல நோய்கள் நமது நாட்டை விட்டே விடைபெற்றுப் போய்விட்டன. நோய் வெளியேறிய போதிலும், பசி என்ற நோய் வெளியேற வில்லை. பலர் உயிரோடிருந்தும், பசியினால் வாடுவதில் என்ன பயன்?

போதிய, தேவையான சத்துணவு கிடைக்காமையால் உடல் நலம் குன்றி, சமுதாயத்திற்கு எந்தவிதப் பயனும் இன்றி வாழ்வோர் எண்ணிக்கை வளர்வது பொருளாதாரத்தைச் சீர்குலையச் செய்யும். கிராமப்புறங்களில் இன்று ஒரு குடும்பத்தில் ஆணும் பெண்னும் சேர்ந்து வேலை செய்து கூலி பெற்றால் கூடச் சீராக வாழ முடியாத நிலை.

கூலியாகப் பெறும் தொகை கூடுதலாக இருக்கலாம். ஆனால் வாங்கும் சக்தியில்லை. நமக்கு உண்மையான சம்பளம் வாங்குவதிலும் பெறுவதிலும் அக்கறை வேண்டும். உண்மையான சம்பளம் என்றால் அது பணத்தின் அளவு அன்று; வாங்கும் சக்தியேயாகும். இதுவே இன்றைய நமது பொருளாதாரம் செல்லும் திசை.

இன்றைய இந்தியனின், குடும்பத்தின் சராசரி ஆண்டு வருமானம் 64 டாலர். அதாவது ஆண்டுக்கு சுமார் 1920 ரூபாய். மாதம் 160 ரூபாய் சம்பாதிக்கிறான். இந்த சம்பாத்தியத்தையும் விலையையும் ஒப்பிட்டுப் பார்த்தால் நமது பொருளாதாரத்தின் சமச்சீரற்ற நிலை விளங்கும்.

பொருளாதாரத்தில் வளராத நாடுகளில், வளம்-வறுமை இவை இரண்டிற்கும் உள்ள இடைவெளி மிகவும் கூடுதல். இந்த இடைவெளியை தொழிற் புரட்சி செய்வதன் மூலமும், வழங்கப்பெறும் கூலியில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை அகற்றுவதன் மூலமும்தான் குறைக்க இயலும்.

நமது குடியரசுத் தலைவர் “நம் நாடு இன்னும் பொருளாதார விடுதலை பெறவில்லை. அந்தப் பொருளாதார விடுதலையை என்று பெறுகின்றதோ அன்றுதான் இந்தியா பரிபூரண சுதந்திரத்தை அனுபவிக்கும்” என்று கூறியுள்ளார்.

ஆம்! அரசியல் சுதந்திரம் வந்ததில் பயன் என்ன? மக்கள் நலம்பெற்று வாழத்தானே சுதந்திரம்? தேர்தலில் ஆளுக்கு ஒரு வாக்குச் சீட்டு என்பது சுதந்திரமாகுமா? கோடீசுவரனின் வாக்குச் சீட்டு சுதந்திரமாகப் பயன்படுத்தப் பெறும்; கோடீசுவரனின் வாக்குச் சீட்டு விலை போகாது.

ஆதலால் ஆளுக்கு ஒரு வாக்குச்சீட்டு என்பது சுதந்திரம் அல்ல. குடிசையில் வாழும் குப்பனும் தனது வாக்கை என்று பரிபூரண சுதந்திரத்துடன் பயன்படுத்துகின்றானோ அன்றுதான் சுதந்திரம் வந்ததாகப் பொருள். இன்று இந்தியாவைப் பற்றியுள்ள வறுமை, ஏழ்மை, சொல்லும் தரத்ததன்று. ஆனாலும் படிப்படியாகக் குறைந்து வருகிறது.

நமது நாட்டில் வறுமை, நகர்ப்புறங்களிலும் உண்டு. ஆயினும் கிராமப்புற வறுமை மிக மிகக் கொடியது. இதில் கவனிக்க வேண்டிய ஒன்று-கிராமப்புற வறுமையை யாரும் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. நகர்ப்புற வறுமையாளர்கள் போராடும் இயல்பினர்.

கிராமப்புற மக்கள், வறுமையை இயற்கை என்று கருதி, அந்த வறுமையுடனேயே வாழ்வதில் பழகிப் போய் விட்டனர். ஆதலால் கிராமப்புற வறுமையாளர்களிடையில் “போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து” என்ற பழமொழிக்கு நல்ல செல்வாக்கு உண்டு.

இந்த மனப்போக்கு, பொருளாதார வளர்ச்சிக்குத் துணை செய்யாது. வறுமை என்பது வசதிகள் அற்ற வாழ்க்கை. ஏழ்மை என்பது உணவுக்குப் போராடும் நிலை. நமது நாட்டில் பலர் வறுமையில் வாழ்கின்றனர். ஏராளமான கிராமப்புற மக்கள் ஏழ்மையில் கிடந்து உழல்கின்றனர்.

இதில் வருத்தம் என்னவெனில், வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளாகிய நுகர் பொருட்கள் உணவுப் பொருள்களை கிராம மக்களே உற்பத்தி செய்கின்றனர். ஆனால் அவர்கள் உற்பத்திப் பெருக்கத்தின் காரணமாக் ஏற்படும் விலை வீழ்ச்சியினாலும், பணத் தேவையினாலும் ஏழ்மைக்கு ஆளாகிறார்கள். நெல்லை உற்பத்தி செய்பவன் நியாய விலைக் கடைகள் முன், நீண்ட நெடிய வரிசையில் நிற்கிறான் அரிசி வாங்க!

ஆம்! நமது நாட்டில் பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள், விவசாயம் செய்யப் பெறாமல் தரிசாகக் கிடக்கிறது. தேசத்தின் செல்வ வளர்ச்சிக்குரிய ஆதாரங்களை, உற்பத்திச் சாதனங்களை, முறையாகப் பயன்படுத்தி உற்பத்தியைச் செய்து, தேசத்தின் செல்வத்தைப் பெருக்க வேண்டும்.

இன்று சில கடுமையான முயற்சிகளை, வழிமுறைகளை, மேற்கொள்ளாவிட்டால் 2001-லும் நமது நிலை இப்படியேதான் இருக்கும். நமது அடுத்த தலை முறைக்கும், நஞ்சினும் கொடிய வறுமையை, ஏழ்மையை வழி வழியாக விட்டுச் செல்லும் பாவத்தைச் செய்தவர்களாவோம்.

இன்னும் நாம் நம்முடைய அன்றாட வாழ்க்கையிலும், சரி, சமூக வாழ்க்கையிலும் சரி, அரசும் சரி, “ஏழ்மை பிரதேசமே இல்லை” என்று அறிவிக்கக்கூடிய அளவுக்கு, எல்லாப் பணிகளையும்விட வறுமை ஒழிப்புப் பணியை ‘இதுவே முதற்பணி’ என்று கருதிச் செயல்பட வேண்டும்.

பொருளாதாரத்திற்குப் பல தடைகள் உண்டு. அவற்றில் தலையாயது பழைய நம்பிக்கைகள்-அதாவது ஊழ், விதி முதலியவற்றை நம்பி, பொருளாதார முயற்சிகளைக் கைவிடுவது அல்லது சோர்ந்து போதல். மேலும் கடவுள், ஊழ் என்று வாளா இருப்பது.

கடவுள் உயர் ஆற்றல், உயர் பண்பே தவிர, கடவுள் பணம், செல்வம், கொடுக்கல் வாங்கலில் ஈடுபடும். லேவாதேவிக்காரரும் அல்ல-இரவலர்களை ஊக்குவிக்கும் வள்ளலும் அல்ல. போதிய முதலீடு வேண்டும்.

அடுத்து சிறந்த அறிவியல் தொழில் நுட்பம் இருக்க வேண்டும். நமது நாட்டில் அறிவியல் மேதைகள் நிறைய உண்டு. அறிவியல் தொழில் நுட்பங்களும் உண்டு. முதலீட்டுக்குப் பஞ்சமே இல்லை. நிறைய முதலீடு செய்வதற்குரிய பணம் இருக்கிறது. ஆனால் பொருளாக்கத்திற்குத் துணை செய்யும் வழியில் முதலீடு செய்ய முன் வருவதில்லை.

மனித ஆற்றல் நம்மிடத்தில் நிறைய உண்டு என்பது எல்லோரும் அறிந்த உண்மை. ஆயினும் பொருளாதார வளர்ச்சி மனநிறைவு தரத்தக்க வகையில் இல்லை. நல்ல நிர்வாகமும், கடின உழைப்பும் தேவை.

அடுத்து ஒரு தொழிலில் லாபம் என்றால், ஆட்டு மந்தைகளைப் போல அந்தத் தொழிலிலே பலரும் முயன்று, அந்தத் தொழிலில் உற்பத்தியைப் பெருக்கி, விலையை இறங்கக் செய்து, ஆரோக்கியமில்லாத போட்டியால் தேசத்தின் பொருளாதாரத்தை அழிக்கின்றனர். தாமும் கைம்முதல் இழந்து அல்லற்படு கின்றனர். பொருளாதார ஆக்க முயற்சிகளில் புதிய புதிய யுக்திகள் தேவை; வழிமுறைகள் தேவை. இதைத்தான் திருவள்ளுவரும்,

“இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு”

என்று கூறுகின்றார். இயற்றல் என்பது பொருள் உற்பத்திக்குரிய புதிய புதிய வாயில்களைக் காணல். பொருள் தேடும் முயற்சிகளில் புதியன காண்போர், தோன்றாததற்குக் காரணம்-அல்லது அதில் கருத்து நாடாமைக்குக் காரணம்-அதில் வருவாய் வருமா என்ற ஐயம் சோதனைகளை ஏற்கத் தயக்கம்!

ஒருவகைப் பொருள் முயற்சி வெற்றி பெற்றது. நிரூபிக்கப்பட்டு விட்டால், அந்தத் தடத்திலேயே மக்கள் செல்ல விரும்புவர். இது நமது மரபு. எல்லாவற்றுக்கும் மேலாக உற்பத்தித் தொடர்பில்லாத வழிகளிலேயே, வட்டிக்கடை நடத்துதல், வியாபாரம் செய்தல், எவரிடமாவது எடுபிடி வேலைக்கு அமர்தல் போன்றவற்றிலேயே மக்களுக்கு ஆர்வம் இருக்கிறது.

ஆர்வமும், முயற்சியும் உடையோருக்கும் பொருளாதார முயற்சிகள் எளிதில் கைகூடும். இந்த வழியில் அல்லாது, பொதுத் தொழில்களில் சுரண்டல் முறை நிலவுமானால் அது கொள்ளை நோயைவிடக் கொடியது. இந்தப் போக்கு, காரணமின்றியே வறுமையை உருவாக்கும்; இத்தகைய வறுமையை எதிர்க்கவேண்டும்.

பணவயமான சமூகம் கெட்ட பழக்கங்களில் ஈடுபடும். அதனால் வறுமை உற்பத்தியாகும். இந்த வறுமையை எதிர்த்துப் போராட வேண்டும். எல்லோரும் ஓயாமல். போராட வேண்டும்.

இந்தப் போரினைச் சுயநலக்காரர்கள், தவறான-முறையற்ற நிலையில் ஒரு அந்தஸ்தைப் பெற்றிருப்பவர்களே எதிர்ப்பார்கள். இவர்களது எதிர்ப்புகளை அஞ்சாது எதிர்த்து வெற்றி கண்டால்தான் சீரான பொருளாதாரம் வளரும்; நிலை நிற்கும்.

நமது நாட்டின் வறுமை வினோதமானது. நாட்டின் தேசீய வருவாய் அதிகரித்துள்ளது. ஆனால் அந்த அளவுக்குத் தனி நபர் வருவாய் உயரவில்லை. ஏன்? இதுதான் இன்றுள்ள புரியாத புதிர். நாட்டின் வருவாய் வளர்ந்திருந்தாலும், நாட்டின் மைய அரசும் சரி—மாநில அரசும் சரி-நிதிப் பற்றாக்குறையுடைய நிதி நிலைத்திட்டத்தையே அளிப்பதற்குரிய சூழ்நிலையே நிலவுகிறது.

ஒட்டகத்தின் முன் துரும்பெடுத்துப் போட்டு, சுமையை இறக்கிவிட்டதாக பாவனை செய்வது போல, மக்களுக்குச் சில சலுகைகளை அளிப்பதால் பயனில்லை. அதனால் பணவீக்கம் ஏற்படுகிறது. பணவீக்கத்தாலும் மறைமுகவரிகளாலும் விலைவாசிகள் ஏறிவிடுகின்றன.

இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கையில் நிதி நெருக்கடி தோன்றி வளர்ந்து விடுகிறது. ஆண்டுக்கு ஆண்டு அரசின் நிதிநிலைத் திட்டத்தில் நிதிப் பற்றாக் குறை கோடிக்கணக்கில் உயர்ந்து விடுகிறது. செல்வர்களுக்கு நிறைய வரிச் சலுகைகளை அளித்தாலும் நாட்டில் முதலீடு பெருகவில்லை.

அதனால் கிடைத்த பணம், ஆடம்பரமான நுகர்வுப் பொருட்களை வாங்கவே செலவிடப்படுகிறது. நுகர்வுச் சந்தை-அதுவும் ஆடம்பர நுகர்வுச் சந்தை வளர்வதன் மூலம் பணச் சுழற்சி ஏற்படாது. அதனால் பொருளாதார வளர்ச்சியும் ஏற்படாது. புதிய செல்வங்களும் உருவாகா. வேலை வாய்ப்புக்களும் பெருகி வளராது.

ஆதலால் வாழ்க்கைக்கு இன்றியமையாததல்லாத ஆடம்பரச் செலவுகளில் செலவு செய்வதை தடுத்து முதலீடாக மாற்றுவதற்கு ஏற்றாற்போல செலவு வரி விதிப்பதைப் பற்றி, சிந்திக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் இரவும் பகலும் சினிமா தியேட்டர்களின் இயக்கம். சினிமா தியேட்டர்களுக்கு வரிவிலக்குச் சலுகைகள். சினிமாக் கொட்டகைக்காரர்கள் விருப்பம் போலக் கட்டணம் வசூலித்துக் கொள்ளலாம். இவையெல்லாம் மனிதகுலத்தைப் பொருளாதார முயற்சிகளிலிருந்து விடுவிப்பவையாகும்.

உழைக்கும் நேரத்தில் திரைப்பட அரங்குகளில் இருந்தால், தொலைக்காட்சிப் பெட்டியின் முன் உட்கார்ந்து இருந்தால் எப்படிப் பொருளாதாரம் வளரும்? நாட்டின் நிலையிலும் சரி-தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி-சேமிப்பு பெருகி வளர்ந்து அந்தச் சேமிப்புகள் முதலீடு ஆகும் வகையில் சமூகமும், அரசும் இயங்க வேண்டும்.

சேமித்து முதல் தருபவர்களுக்கு அரசு சலுகைகள்கூட வழங்கலாம். ஆனால் நமது நாட்டில் சேமிப்பு முதலாக மாறுவதில்லை. ஒன்று பணமாக இருக்கும். அல்லது அணிகலன்களாக இருக்கும். திட்ட முதலீட்டுச் செலவு கூடி வருதல் வேண்டும். திட்ட முதலீட்டுச் செலவு கூடினால்தான் பொருளாதாரம் வளரும். புதிய பொருளாதாரக் கொள்கை வளரும்.

விலை ஏற்றம் கட்டுப்படுத்தப்படவில்லை. மக்களின் வாழ்க்கைத்தரம் உயரவில்லை. வேலை வாய்ப்புக்களும் அதிகரிக்கவில்லை. ஆயினும், வர்த்தகத் துறையிலும், தொழில் துறையிலும் சில விளைவுகள் ஏற்பட்டுள்ளது உண்மை. ஏற்றுமதியில் சற்றேறப் குறைய 21 சதவிகிதம் வளர்ந்திருக்கிறது. அன்னியச் செலவாணி கையிருப்புக் கூடி இருகிறது.

இவையெல்லாம் ஏற்றுக்கொள்ளத்தக்கதெனினும், பயன் அடைந்தவர்கள் தொழிலதிபர்கள், சாதாரணப் பொது மக்கள் அல்ல என்ற உண்மையை உணர வேண்டும்.

ஆனால் நமது நாட்டில் பொருளாதார முயற்சிகளே நடைபெறவில்லை என்று கூறமுடியாது, நமது நாட்டில் பொருளாதார வளர்ச்சிக்குரிய பணிகள் பரந்த அளவில் நடைபெறுவது உண்மை. இம் மாபெரும் புரட்சியானது ஏமாற்றத்தைத் தரக்கூடிய தாமதங்கள், தடங்கல்களால் பாதிக்கப்பட அனுமதித்துவிடக் கூடாது.

பொருளாதார வளர்ச்சி தொய்வின்றி நடைபெற நிர்வாக இயந்திரம் திறமையுடையதாக இருக்க வேண்டும். நிர்வாக இயந்திரம் பின்னோக்கிச் செல்கிறது. சிகப்பு நாடா முறை நமக்கு வழிவழி வந்த பிற்போக்குத் தன்மை; நமது பாரம்பரியத்தின் மிச்ச சொச்சம்.

பொருளாதார வளர்ச்சி சீராக அமையவேண்டுமானால் நிர்வாக இயந்திரம் மக்களோடு நெருங்கிய தொடர்பு கொள்ள வேண்டும். நமது நாட்டின் வளத்தைப் பெருக்கவேண்டும் என்ற கொள்கையை உயிர்மூச்சாகக் கொண்டு, சேவை செய்யும் அலுவலர்கள் தேவை. ஊழியர்கள் தேவை.

பொருளாதார வளர்ச்சியில் இன்றியமையாத பகுதி வேலைவாய்ப்பு. இன்று வேலை வாய்ப்பில் உற்பத்தி சார்ந்த வேளாண்மை, கால்நடைத் துறைத் தொழில் வளர்ச்சியில் ஈடுபட இந்த நாட்டு இளைஞர்களுக்கு ஆர்வம் இல்லை. அவர்கள் எங்காவது சிற்றெழுத்தர்களாக-கூரியர் சர்வீசு வேலை போன்றவைகளில் ஈடுபடத்தான் விரும்புகின்றனர்.

காரணம் அளவுக்கு விஞ்சிய பய உணர்ச்சியில் ஏற்பட்ட பாதுகாப்பு உணர்வு. அவர்கள் வீட்டு வாயிலைத் தொழில்கள் தட்டினாலும், உற்பத்தி சார்ந்த தொழில்களில், கடின உழைப்பில் ஈடுபட அவர்கள் விரும்பவில்லை.

சேவைத் துறையில் வேலை வாய்ப்புப் பெறுவது. தவறானதல்ல என்றாலும் சமுதாய நோக்கில் பார்த்தால், இது நமது வாழ்க்கையைப் பாதிக்கும். ஆதலால் தொழில் துறையில் ஈடுபடுதலே சிறந்த வேலை வாய்ப்பு; ஆக்கம். தரக்கூடியது.

நமது நாட்டில், தொழில் துறையில் ஏற்பட்டுள்ள பின்னடைவு சரி செய்யப்பட்டால்தான், வேலைவாய்ப்புக்களும், வருவாயும் பெருகும். இத்துறையில் நமது அரசுக்கும் சரி-இளைஞர்களுக்கும் சரி-சமூகத்திற்கும் சரி-போதுமான ஆர்வம் இல்லாதது வருந்தத்தக்க செய்தி.

பல நூறு ஆலைகள் பூட்டப்பட்டுள்ளன. எண்ணற்றோர் வேலைகளை இழந்துள்ளனர். எதிர்பாராத நிலையில் நலிந்துபோன தொழில்களைப் புனரமைக்க அரசுகளும், வங்கிகளும், மூலதனத்துடன் முன்வர வேண்டும். நிர்வாகக் குறையின் காரணமாகத் தொழிற் சாலைகள் நலிவுறின் அந்தத் தொழிற் சாலைகளின் நிர்வாகிகள் தண்டிக்கப்படுதல் வேண்டும்.

இன்றுள்ள நடைமுறையில், நிர்வாகி வசதியாக இருக்கிறார். ஒரு பைசாக் கூடக் குறையாமல் ஊதியம் வாங்குகிறார். ஆனால் பாவம், தொழிலாளர்கள் வேலையை இழந்து தவிக்கின்றனர். தொழிற் சங்கங்களும் கூட இந்த மாதிரி விஷயத்தில் பேச போதிய முயற்சிகள் எடுக்காதது ஒரு குறை. இந்த வகையில் நமக்கே சொந்த அனுபவம் உண்டு.

இன்று கூட்டுறவுத் துறை “அஞ்சூரான், புஞ்சை போல” என்பார்களே அதுபோல, நலிந்து வருகிறது. இந்தியாவின் சாதாரண மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு, கூட்டுறவே சரியான வழி. ஆனால் கூட்டுறவு இன்று செப்பமாக இல்லை.

எந்த ஒரு தனி மனிதனும் சரி-அல்லது சமூகமும் சரி-அறிந்து பாவம் செய்ய உடன்பட மாட்டார்கள். அதுபோலவே மக்கள் வேலையில்லாத திண்டாட்டத்தையும் விரும்பவில்லை. புதிய தொழில் ஆலை, வேளாண் பண்ணைகளைத் தொடங்கி, வேலை வாய்ப்புக்களை வழங்கினால் உற்பத்தி பெருகும்.

நியாயமான வழியில் பூரண வேலை வாய்ப்பை உண்டாக்குவது பொருளாதார வளர்ச்சிக்கு ஒரே வழி! பூரண வேலைத் திட்டம் சமத்துவ சமுதாய அமைப்பிற்குரிய முதல் முயற்சி. பூரண வேலைத் திட்டம் என்பது சக்திக்கேற்ற வேலை-வேலைக்கேற்ற ஊதியம் என்பதாகும்.

இன்று வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிந்து, வேலைக்காகக் காத்திருப்போர் எண்ணிக்கை கடந்த காலங்களைவிட 20 மடங்காகப் பெருகியுள்ளது. வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிந்திருப்போரில் 10 சதம்தான் வேலை பெறுகிறார்கள். இதுபோக வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதியாமல் உள்ளவர்கள் வேறு கணிசமாக உள்ளனர்.

இனி, வருங்காலத்தில் நம்முடைய அரசுப் பணிகளிலும் சரி-வியாபாரத் துறையிலும் சரி-சேவைத் துறையிலும் சரி-வேலை வாய்ப்புக்கள் உருவாகுமா? இது ஐயப்பாடே! புதிய தொழில் ஆலைகளைத் தொடங்குவதன் மூலமே வேலை வாய்ப்புக்களை உருவாக்க வேண்டும்.

தமிழகத்தில் வாய்ப்புகளும் ஒவ்வொரு நாளும் குறைந்து வருகிறது என்ற வருந்தத்தக்க செய்தியை அரசும் சமூக நிறுவனங்களும் உணரவேண்டும். மேலும், ஒரு வருந்தத்தக்க செய்தி. படிப்புக்கேற்ற வேலையைக் கூட பெற முடியவில்லை.

நமது நாட்டில் குறைவான வேலை பார்த்து பற்றாக்குறை ஊதியம் வாங்குபவர்களும் இருக்கிறார்கள். மேலும், மனித ஆற்றலுக்கும் இழப்பு ஏற்படுகிறது. வறுமை அணியில் நிற்போர் வரிசையும் நீளுகிறது. உற்பத்தியும் பாதிக்கப்படுகிறது.

வேறு சிலர் தாம் செய்யும் வேலைக்குப் பன்மடங்கு அதிகமாக ஊதியம் பெறுகின்றனர். இவர்களுடைய மனித ஆற்றல் குறைகிறது. உற்பத்தியும் பாதிக்கப்படுகிறது. ஆனால் நுகரும் சந்தை வளர்கிறது. இதனாலும் வறுமை வளர்கிறது. ஒருவருக்கு வேலை கிடைத்தால், அவர் முறையாக வேலை பார்த்தால் குறைந்தது மேலும் ஐவருக்கு வேலை வாய்ப்பு உண்டாக்க முடியும்.

தொழிற்கல்வி பயின்றவர்களிடையிலும் வேலை வாய்ப்பு பற்றிய நிலைமைகள் எதுவும் மாறவில்லை. தொழிற்கல்விகளைப் பொருத்த வரையில், டாக்டர்கள், பொறியாளர்கள் இவர்கள் தாமே கூடத் தொழில் செய்யலாம். ஆனால், இந்த வாய்ப்பையும் அரசுப் பணிகளில் வேலை பார்ப்போர் தட்டிப் பறித்து விடுகின்றனர்.

இதனால் நம்முடைய பொருளாதார வளர்ச்சி முயற்சிகளும் அதனைச் சார்ந்த வேலை வாய்ப்புக்களும் பின்னடைவிலேயே உள்ளன. இந்நிலையில் மாற்றம் ஏற்படாவிட்டால், அடுத்த நூற்றாண்டிலும் இந்தியா இப்போது இருப்பது போலவே இருக்கும். இதை நீங்கள் விரும்புகின்றீர்களா?

திருவள்ளுவர், “பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை” என்று கூறுகின்றார். இங்குப் பொருள் என்பது தங்கமும், பணமும் அல்ல. நுகரும் பொருட்கள், உணவு. முதலியனவாம். தங்கத்திற்கும், பணத்திற்கும் கிடைத்துள்ள பாதுகாப்பு வசதிகள் உணவுப் பொருள்களுக்குக் கிடைக்கவில்லை.

ஆண்டுதோறும் லட்சக்கணக்கான டன் தானியங்கள் போதிய பாதுகாப்பின்றி அழிந்து போகின்றன என்று அரசின் தகவலே கூறுகிறது. பொருள் என்றால் மனிதன் உயிர் வாழ்வதற்கான நுகரும் பொருள்களே என்பதுதான் தமிழ்வழிக் கருத்து.

“யாஅம் இரப்பவை பொன்னும் பொருளும் போகமும் அல்ல” என்ற பரிபாடல் வரியும் இதனையே வற்புறுத்துகின்றது. மனிதர் உண்டு, உடுத்தி வாழ்தலுக்குரிய பொருள்களை உற்பத்தி செய்யும் தொழிலே, தொழில்களில் எல்லாம் சிறந்தது.

அதனாலேயே, வள்ளுவம், “உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்” என்றது. ஆனால் இதுவரையில் பல துறைகளில் சக்கரவர்த்திகள் உருவாகியிருப்பதைப் போல, உழுவோரில் சக்கரவர்த்திகள் உருவாகவில்லை.

“உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்” என்ற பாரதியின் பாடல் இன்னமும் பாடலாகவே இருக்கிறது. உழவர்களும், தொழிலாளர்களும் இன்னும் சமூகத்திலும் சரி-ஆட்சியிலும் சரி-போதிய அந்தஸ்தைப் பெறவில்லை. உழவும், தொழிலும் சிறந்து விளங்கி, உழவர், தொழிலாளர் வாழ்க்கை, என்று சீர்மையுடன் அமைகின்றதோ, அன்றுதான் இந்தியப் பொருளாதாரம் சீரானதாக அமையும்.

உலகம் எப்பொழுதும் தன்னல உணர்ச்சியிலேயே செயல்படும். இஃது இயற்கை. இந்தத் தன்னல உணர்ச்சியைத் தடை செய்யக்கூடாது. நல்லவர்களுடைய பிறர் நலம் நாடும் நோன்புடன் இணைத்து, கயவர்களிடத்தில் காணப்படும் தன்னலத்தின் வேகத்தை மட்டுப்படுத்த வேண்டும். இது ஒரு சிறந்த பணி.

நமது பொருளாதார ஆக்கத்திற்குரிய முயற்சிகள், மூன்று காரணங்களிலிருந்து தோன்றி வளர்கின்றன. அவை தேவைகள், தேவைகளை அடையும் முயற்சிகள், திருப்தி (Wants, Efforts, Satisfaction) என்ற மூன்றாகும்.

எது காரணமாக இருப்பினும், பொருளாதார வளர்ச்சி, மனித மனங்களிலேயே தொடங்கப் பெறுதல் வேண்டும். நமது நாட்டில் சுகபோக வாழ்க்கையை எதிர்த்துப் போராடிய சந்நியாசிகள் அறிவுறுத்திய “ஆசை அறுமின்” என்ற கோஷத்திலிருந்து, வறுமையில் கிடந்துழலும்போதும் நம்மால் எழுந்திருக்க முடியவில்லை.

வாய்ப்பாட்டு, சுருதிக்கு இசைந்தவாறு இருக்க வேண்டும். அதுபோல, ஆசைகளும், சமுதாய நலன், பொதுநலன் ஆகியவற்றுக்கு அடங்கியதாக இருக்க வேண்டும்.

நமது பொருளாதார ஆக்கத்திற்குரிய வழி, ஒவ்வொரு பொருளையும் எவ்விதத்தில் மிகச் சிறந்த முறையில் பயன்படுத்தி எவ்வளவு கூடுதல் உற்பத்தி செய்யலாம் என்ற அணுகுமுறையிலேயே இருக்கிறது. பொருளாதார வளர்ச்சிக்கு மாமேதை லெனின் 10 கடமைகளை வரையறுத்து வலியுறுத்துகின்றார். அவற்றுள் சில:

1) உங்களுடைய சோம்பேறித்தனம், கவனமின்மை, பின்தங்கிய தன்மையை உள்ளவாறு உணருங்கள். இவற்றை மூடி மறைத்துப் பயன் இல்லை.

2) கல்வி இன்மையை மாற்றுங்கள்.

3) சோர்ந்து இருப்பதை எதிர்த்துப் போராடுங்கள்.

4) உங்கள் வேலைகள் எல்லாவற்றையும் சரி பாருங்கள். சொற்கள் சொற்களாகவே இருந்துவிடக் கூடாது.

பொருளாதார அமைப்பில், நடைமுறையில் வெற்றி அடைந்து இருக்கவேண்டும்.

என்பனவாகும். ஆம்! நமது நாட்டில் சோஷலிச பாணி, ஜனநாயக சோஷலிசம் என்று சொன்னவைகள் எல்லாம். வெற்றி பெறவில்லை. தீர்மானங்களாகவே இருந்து விட்டன. நடைமுறைக்கு வரவில்லை.

நமது நாடு வளமான நாடு. ஆனால் மக்களில் பெரும்பாலோர் ஏழைகள்; திட்டமிட்ட பொருளாதார வளர்ச்சியும், சமநிலை விநியோகமும், நமது நாட்டுக்கு இன்று உடனடியாகத் தேவை.

நமது சமுதாயம் தேனீக்களைப் போல, கூட்டுறவு முறையில் பணிப் பகிர்வு செய்து கொண்டு, அயர்விலாது, சுறுசுறுப்புடன், ஒரே குறிக்கோளுடன் உழைத்தால்தான் நமது நாடு வளமான நாடாக முடியும். எல்லோரும் எல்லாமும் பெற்று வாழ இயலும்.

தேனீக்களுக்கு வாய்த்தது இயல்பூக்கம். அதுபோல நமக்கும் பொருளாதார முயற்சிகளில், உற்பத்தி சார்ந்த பொருளாதார முயற்சிகளில் ஈடுபட்டு உழைப்பது இயல்பானதாக, ஜீவ சுபாவமாக என்று மாறுகிறதோ அன்றுதான் நாம் பொன்வளம் நிறைந்த புவியைக் காணலாம். பொதுவுடமையைக் காணலாம்.

இந்தத் திசையில் இன்று நாம் செல்லவில்லை. நாம் செல்லவேண்டிய திசை, புவியைப் பொதுவில் நடத்தும் திசையாக, உற்பத்தி சார்ந்த பொருளாதார ஆக்க வழியிலான திசையாக, பிறர் பங்கைத் திருடாத திசையாகப் பார்த்து நடைபோடுவோமாக!

வளர்க உற்பத்தி!
மலர்க பொதுமை!!

10-9-1994 அன்று மதுரை வானொலியில் ஆற்றிய உரை.