எது வியாபாரம், எவர் வியாபாரி/001-017

விக்கிமூலம் இலிருந்து



எது வியாபாரம்? எவர் வியாபாரி?

வணிகம் - வணிகன் என்பன நல்ல தமிழ்ச் சொற்கள். இவை அடியோடு மறைந்து, “வியாபாரம் - வியாபாரி, வர்த்தகம் - வர்த்தகன்” என்பன போன்ற பிறசொற்களே வழக்கத்தில் இருந்து வருகின்றன. அதிலும் சிறு தொழிலை வியாபாரம் என்றும், பெருந்தொழிலை வர்த்தகம் என்றும் கூறி வருகின்றனர்.

எது நிறுவை?

வர்த்தகர்களின் சின்னம் தராசு. நிறுப்பவன் எவனாக இருந்தாலும், நிறுப்பது எதுவாக இருந்தாலும், தராசின் முள் சிறிது முனைக்கும்படி நிறுக்க வேண்டும். முள் முன்னுக்கு வந்தால், நிறுப்பவன் முன்னுக்கு வருவான்; முதலாளி முன்னுக்கு வருவான்; வியாபாரம் முன்னுக்கு வரும்; நாடும் முன்னுக்கு வரும். முள் பின்னுக்குப்போனால் வியாபாரம் பின்னுக்குப் போய் அடியோடு அழிந்து ஒழிந்து விடும். தராசைப் பிடித்து நிறுக்கிற ஒவ்வொருவரும் இதைத் தம் உள்ளத்தில் பதிய வைத்துக் கொள்வது நல்லது. காரணம் தராசின் முள் நடுநிலை வகிப்பதுபோல வர்த்தகர்களின் உள்ளமும் எப்போதும் நடுநிலைமை வகிக்க வேண்டும்.

எது வியாபாரம்?

கிடைக்குமிடத்தில் வாங்கி, கிடைக்காத இடத்தில் விற்பது வியாபாராம். விளையுமிடத்தில் வாங்கி விளையாத இடத்தில் விற்பது வியாபாரம். உற்பத்தி செய்யும் இடத்தில் வாங்கி உற்பத்தி இல்லாத இடத்தில் விற்பதும், கிடைக்கும் காலத்தில் வாங்கி, கிடைக்காத காலத்தில் விற்பதும் வியாபாரம். உழவர்களுக்கும், தொழிலாளிகளுக்கும் பொது மக்களுக்கும் ஒரு பாலமாய் அமைவது தான் வியாபாரம். இதைச் செய்யும் வியாபாரிக்கு “ஊதியம்” அடைய உரிமையுண்டு. அது ஒரு அளவுக்குள் இருக்கும்பொழுது “இலாபம்” என்று பெயர் பெறும். அளவுக்கு மீறினால் “கொள்ளை” என்றாகி விடும்.

நாட்டின் உறுப்பு

ஒரு மனிதனின் உடல் உறுப்புக்களும் ஒரு நாட்டின் உறுப்புக்களும் ஒன்றுதான்; வெவ்வேறல்ல. ஒன்றாகவே தோன்றும்.

தலை  காடு  (Forest)

ஈரும் பேனும்  விலங்குகள் (Animals)

நெற்றி  சமயம்  (Religion)

கண்கள்  கல்வி  (Education)

மூக்கு  நலவாழ்வு  (Health)

வாய்  பத்திரிகைகள்  (Press)

பற்கள்  தொழிற்சாலைகள்  (Industries)

காதுகள்  ஒற்றர்கள்  (C.I.D.)

கழுத்து  பாதுகாப்பு  (Police)

நெஞ்சு  அரசாங்கம்  (Government)

வயிறு  விவசாயம்  (Agriculture)

கைகள்  தொழிற்சாலை  (industries)

கால்கள்  போக்குவரத்து  (Transport)

முதுகெலும்பு  வர்த்தகம்  (Commerce)

இதிலிருத்து ஒரு நாட்டின் வர்த்தகம் அந்த நாட்டின் முதுகெலும்பு என்றே தெரிகிறது. ஒரு நாட்டின் வர்த்தகம் பாழ்படுமானால் முதுகெலும்பு இல்லாத மனிதனைப் போன்று அந்ந நாடு காட்சியளிக்கும்.