எது வியாபாரம், எவர் வியாபாரி/003-017
ஒரு நாட்டு மக்களில் அதிகத் திறமைசாலிகளாகக் காணப்படுகிறவர்கள் வியாபாரிகளே. இதற்குக் காரணம் அவர்கள் ஏழைகளிடத்தும் பணக்காரர்களிடத்தும், அரசாங்காத்திடத்தும் பொது மக்களிடத்தும், கிழவர்களிடத்தும் இளைஞர்களிடத்தும், குழந்தைகளிடத்தும், ஆண்களிடத்தும் பெண்களிடத்தும், நல்லவர்களிடத்தும் பொல்லாதவர்களிடத்தும், படித்தவர்களிடத்தும் படிக்காதவர்களிடத்தும், அறிந்தவர்களிடத்தும் அறியாதவர்களிடத்தும் பழகுவதேயாகும். இத்தனை பேரிடமும் பழகிப் பட்ட அறிவுபெறுவதினாலேயே ஒவ்வொரு வியாபாரியும் திறமைசாலியாகக் காணப்படுகிறான். ஆகவே திறமைசாலிகளாகக் காணப்படுகிறவர்களே வியாபாரிகளாவர்.
எது நல்லது?
மட்டச் சரக்குகளை வாங்கிக் குறைந்த விலைக்கு விற்பது வியாபாரமாகாது. உயர்ந்த சரக்குகளை வாங்கி அதிக விலைக்கு விற்பதே நல்ல வியாபாரம் “உயர்ந்த சரக்கு - குறைந்த விலை” என்பது மக்களை ஏமாற்றுகின்ற ஒரு சொற்றொடர். ஏனெனில் எந்த உயர்ந்த சரக்கையும் குறைந்த விலைக்கு யாரும் விற்க முடியாது. “உயர்ந்த சரக்கு - அதிக விலை” என்பதே உண்மையானதாக இருக்கும். மக்களும் இதனை நம்புவர். எழுபது ஆண்டுகளுக்கு முன்பு திருச்சிராப்பள்ளியில் உள்ள வணிகம் இந்த முறையிலேயே நடைபெற்று வந்தது. இப்பொழுது சில வணிகர்கள் இதை மீண்டும் தொடங்கியிருப்பது மகிழ்ச்சிக் குரியதாகும்.