எது வியாபாரம், எவர் வியாபாரி/009-017
பெரிய கோம்பை என்பது சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் தம்பம்பட்டிக்கு மேற்கே கொல்லிமலை அடிவாரத்தில் உள்ள ஒரு சிற்றுார்.
அவ்வூரின் மணியக்காரர் ஒரு பெரிய விவசாயி. அவரிடம் நல்ல புகையிலை இருப்பதாகக் கேள்விப்பட்டேன். ஏழு மைல்கள் துாரம் நடந்து சென்றேன். நான் கேள்விப்பட்டது உண்மையாகிவிட்டது. மலையடிவாரம் ஆனதாலும் ஆட்டுப் பண்ணைகள் அவரிடம் அதிகமாக இருந்ததாலும். ஏரிமண், மாட்டு எரு, குப்பை கூளங்கள், நவீன உரங்கள் ஏதும் போடாமல் ஆட்டுப் புளுக்கைகளை மட்டுமே எருவாகப் போட்டு விளைய வைத்ததால் புகையிலைகள் நீண்டும் செழித்தும் கரு நிறத்தையும் மினுமினுப்பையும் விராகன் புள்ளிகளையும் பெற்று நல்லகுணத்தையும் மணத்தையும் கொண்டிருந்தது. விவசாயிடம் விலை கேட்டேன். அவர் 100 (நூறு) கட்டுகளின் விலை சொல்வது ரூபாய் 95/- என்றும் விற்பது ரூபாய் 90/- என்றும் முடிவாகச் சொன்னார். நான் கேட்டேன், ஏன்? சொல்லுவது ஒரு விலை விற்பது ஒரு விலை? என்று. அதற்கு அவர் விலையை எவ்வளவு குறைத்துச் சொன்னாலும் வருகிற வியாபாரிகள் அதற்குக் கீழேதான் குறைத்துக் கேட்கிறார்கள். அதனால்தான் விலையை ஒரு ரூபாய் குறைத்துக் கேட்டாலும் கொடுக்க முடியாது என்ற பொருளில்தான் கொடுப்பது 90 ரூபாய்க்குத்தான் என்று முடிவாகக் கூறினேன்.
நான் உடனே ஒரு நூறு ரூபாய் நோட்டை எடுத்துக் கையில் கொடுத்து ‘நீங்கள் கொடுத்த விலைக்கு எனக்கு வாங்குவதற்கு விருப்பம் இல்லை. நீங்கள் சொன்னவிலை 95க்கே நான் வாங்கிக் கொள்கிறேன்’ என்று கூறி, புகையிலை அதிக ஈரமாக இருக்கிறது. ஒரு வாரம் கழித்த பிறகு கட்டு கட்டலாம். ஒவ்வொரு கட்டும் 40 பதம் எடை உள்ளதாக கட்டி வையுங்கள். இன்றைய பதினைந்தாம் நாள் பணத்துடன் வந்து சரக்கை எடுத்துச் செல்வேன்” என்று கூறி எழுந்து வந்துவிட்டேன். பெரிய கோம்பை மணியக்காரர் ஆச்சரியப்பட்டு ஒன்றும் புரியாமல் என்னை ஏறஇறங்கப் பார்த்து ‘தம்பி இது என்ன புது வியாபார முறையாக இருக்கிறது?’ என்று கேட்டார். நான் உடனே கூறினேன்: “ஆம் உயர்ந்த சரக்கை அதிக விலைகொடுத்து வாங்கும் வியாபாரிதான் நான் என் வியாபாரமும் புது வியாபாரம் தான்” என்றுகூறி விடைபெற்றுக்கொண்டேன், சொன்னபடியே பதினைந்தாம் நாள் சென்று ஏழு நூறு கட்டு புகையிலையும் லாபக் கட்டு பதினான்கு கட்டுகளையும் வாங்கிக் கொண்டு 95 ரூபாய் வீதம் பணத்தை எண்ணிக் கொடுத்துவிட்டு வந்தேன். அதற்கு அவர் அப்பணத்தை வாங்காமல், ‘ என்ன இப்படி வியாபாரம் செய்கின்றாய்? நாற்பது பதம் எடை இருக்கிறதா? என்று ஒவ்வொரு கட்டையும் சரிபார்த்தாயா? நான் நேற்றைய இரவு நிறுத்துப் பார்த்தேன் 38½ பதம்தான் இருந்தது. ஆகவே நூறு கட்டுக்கு நான்கு கட்டு உள்ளீடு போடவேண்டும்’ என்று சொல்லி ஏழுநூறு கட்டுக்கு இருபத்து எட்டுக்கட்டு கணக்கை குறைத்துக் கொண்டு அதற்குரிய பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டார். அந்தப் பண்ணையார் மீது எனக்கு அதிக மதிப்பு ஏற்பட்டது. அன்றிலிருந்து பல ஆண்டுகள் அவர் புகையிலை விளைய வைப்பதும், என்னிடம் விலை சொல்லாமல் கொடுப்பதும், நான் அதற்குரிய விலையை நானே மதிப்பிட்டு கொடுப்பதும் வழக்கமாகப் போய்விட்டது. பத்து பன்னிரெண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இப்படிப்பட்ட புகையிலை விளைகிறது என்று கேள்வியுற்ற மற்றொரு வியாபாரி பண்ணையாரிடம் புகையிலை வாங்கப்போனார். அவர் புகையிலையையே காட்ட மறுத்துத் திருப்பி அனுப்பிவிட்ட செய்தி என் காதுக்கு வந்தது.
ஒரு நாள் திருச்சியில் உள்ள என்னைப் போன்ற ஒரு புகையிலைவியாபாரி, “என்னப்பா புகையிலைக்காடுகளில் எல்லாம் போய் சொக்குப்பொடி போட்டு வருகிறாயா?” என்று கேட்டுக்கொண்டே வந்தார். நான் என்ன செய்தி என்று கேட்டபொழுது அவர் இப்படிச் சொன்னார் :
“நான் புகையிலை கொள்முதலுக்குக் கொல்லிமலைக் காட்டிற்குப் போனபொழுது பெரிய கோம்பை மணியக்காரரிடம் இந்த ஆண்டு நல்ல விலைச்சல் என்றும் ஆயிரம் கட்டுகள் வரை கட்டி அடுக்கி வைத்திருக்கிறார் என்றும் கேள்விப்பட்டு புகையிலையைப் பாா்வையிடப் போனேன். பெரிய கோம்பை மணியக்காரர் புகையிலைகளைக் காட்ட மறுத்துவிட்டார். நான் எவ்வளவோ கெஞ்சி எனக்குப் புகையிலை நீங்கள் கொடுக்க வேண்டாம். நல்ல சரக்கு என்று கேள்விப்பட்டேன். கண்ணால் பார்த்து விட்டுச் செல்கிறேன்” என்று கேட்டேன். அதற்கு அவர் “நான்கொடுக்க விரும்பாததும் நீங்கள் வாங்க முடியாததுமான ஒருபுகையிலையை எதற்காகப் பார்ப்பது? பார்த்துப் பயன் என்ன? நீங்கள் போய் வரலாம்” என்று கூறினார். நான் அவருக்கு வணக்கம் கூறி, சுருட்டு சுற்றி குடிப்பதற்காக ஒரே ஒரு புகையிலை மட்டும் கொடுங்கள் என்று கேட்டேன். அதற்கு அவர் சம்மதித்து அம்பாரத்தைத் திறந்து ஒரு புகையிலையை உருவிக் கொடுக்க முனைந்தார். அப்பொழுது அவருடைய மனைவியார் ஓடிவந்து கணவனை அம்பாரத்தைத் திறக்க விடாமல் தடுத்து, நீங்கள் இந்தத் தவறு செய்யக்கூடாது என்று கணவனிடம் கூறி, என்னிடம் வந்து அந்த அம்மாள் இப்படிச் சொன்னார்கள் “ஐயா மன்னிக்க வேண்டும். இந்தப் புகையிலை மட்டுமல்ல இந்த நிலம், கிணறு, பண்ணை தோப்பு துரவு ஆகியவைகளுக்கெல்லாம் உரிமையாளர் திருச்சியில் உள்ள எங்கள் முதலாளிதான். நாங்கள் உழைக்க வேண்டியது தான் எங்கள் கடமை. புகையிலை அவருடையது. அவருடைய சொத்துக்களில் ஒன்று இரண்டை எடுத்து உங்களுக்கு கொடுக்க எங்களுக்கு உரிமையில்லை;மன்னிக்க வேண்டும். போய் வாருங்கள்” என்றுசொல்லி,கணவனை அழைத்துக் கொண்டு போய்விட்டார். நான் வெட்கித் திரும்பினேன் நானும்தான் முப்பது ஆண்டுகளாகப் புகையிலைக் காடுகளில் சுற்றிச் சரக்கு வாங்கிக் கொண்டிருக்கிறேன். ஒரு விவசாயியாயினும் என்மீது இத்தகைய அன்பைக் காட்டவில்லை. அதற்காகத்தான் கேட்டேன் நீ எந்த சொக்குப்பொடியைப் புகையிலைக் காடுகளில் போட்டாய் என்று. தம்பி பொருள் சேர்ப்பது பெரிதல்ல நாணயத்தையும் நன்மதிப்பையும் பெறுவதே சிறப்பு என்று எனக்கு இப்போது தெரிகிறது. நான் உன்னை வாழ்த்துகிறேன். நீ ஒரு நல்ல வியாபாரி. உன்னால் “தமிழ் நாட்டு வர்த்தகமே வளம்பெறும்” என்று மன மகிழ்ந்து வாழ்த்திச் சென்றார். எப்படி, பெரிய கோம்பை வணிகம்?