எது வியாபாரம், எவர் வியாபாரி/015-017
ஒரு வியாபாரி சிக்கனமாக வாழ்க்கை நடத்திப் பொருளை சேமிப்பது மட்டும் போதாது. அவற்றைப் பாதுகாத்தும் ஆக வேண்டும்.
ஒருவர்க்கு பொருள் வந்து சேர்வது திடீரென்று வந்து விடாது. சிறுகச் சிறுக சேர்ந்து பின் பெருஞ்செல்வமாக வந்து காட்சியளிக்கும். ஆனால், போகும்போது சிறுகச் சிறுகப் போகாது; ஒரேயடியாய்த் திடீரெனத் தொலைந்து போய்விடும். ஒரு நாடகக் கொட்டகைக்கு மக்கள் ஒவ்வொருவராக வந்து பெருங்கூட்டமாகக் காட்சியளித்துப் பின் ஒரேயடியாகக் கலைந்து போவது போன்றதுதான் செல்வம் வருவதும் போவதும் - என்று வள்ளுவர் கூறுகின்றார்.
பல ஆண்டுகள் சேர்த்த செல்வத்தைப் பாதுகாக்கத் தெரியாமல் இழந்துவிட்டவர் பலர். இவர்களில் பெரும் பான்மையோர் உலகம் இன்னதென்று தெரியாதவர்கள். உலகம் இன்னதென்று நன்கறிந்த தரகர்களின் வஞ்சகச் சொற்களில் ஏமாந்து விடுவது இயல்பேயாகும்.
வியாபாரியாகவோ, தொழில் அதிபராகவோ இருப்பவர்கள், தம்மிடம் உள்ள தொகை முழுவதையும் தொழிலில் போட்டுவிடாமல் அத்தொகையைப் பத்துப் பங்குகளாகப் பிரித்து, ஐந்து பங்கினைத் தொழிலிலும், இரண்டு பங்கினை வீடுகளிலும், ஒரு பங்கினை வங்கியிலும், ஒரு பங்கினை ஆலைப் பங்கிலும்,அரைப்பங்கினை தங்கத்திலும் போட்டு அரைப்பங்கினை ரொக்கமாகவும் வைத்து இருக்க வேண்டும்.
ஆலைப்பங்குகள் அனைத்தையும் ஒரே துறையில் போட்டு விடாமல், வங்கிப்பங்கு, நூல்பங்கு, துணிப்பங்கு, தோட்டப்பங்கு, இயந்திரப்பங்கு ஆகிய பல துறைப் பங்குகளாகப் பார்த்து வாங்குவது நலமாகும். இம்முறையானது ஏமாற்றுக்காரர்களிடமிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்வது மட்டுமல்லாமல், அடிக்கடி சட்டத்தை மாற்றும் அரசாங்கத்திடமிருந்தும் நம்மைப் பாதுகாத்துக் கொள்ளவும் முடியும். மேலும் இதனால் ஒரு நன்மையுண்டு. ஒரு துறையில் இழப்பு ஏற்பட்டாலும் மற்றொரு துறை நம்மை உயர்த்திக் கொடுக்கும். எந்த முறையில் பார்த்தாலும் இதைவிடச் சிறந்த பாதுகாப்புக் கலை இப்போது இல்லை. திடீரென்று வருமானம் குறைந்து விட்டாலும் வருத்தப்பட வேண்டியதில்லை. வருந்தியும் பயனில்லை. அவர்கள் உடனே செய்ய வேண்டியது, “செலவினத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டியதுதான்.” ஒரு குளத்தில் தண்ணீர் வரும் வாய்க்கால் அடைப்பட்டுப் போனால் வடிகாலை உடனே மூடி விடுவது போல.
“வரவே சிறுத்துச் செலவே பெருத்தால் அதுவே அழிக்கும் அவனை” என்பது சான்றோர் கருத்து. வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள பெருமக்கள் இதிலும் கருத்தைச் செலுத்தியாக வேண்டும்.