எனது கதைகளின் கதைகள்/அதிகப் பிரசங்கித்தனம்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

12
அதிகப் பிரசங்கித்தனம்...


கேள்வித்தீ

கல்பனா மாத இதழுக்காக நான் எழுதிய குறுநாவல், ‘ஊருக்குள் ஒரு புரட்சியாக’ ‘தேவி’யில் வந்துவிட்டது. என்றாலும், இப்படித் தாங்கள் கேட்டு எழுதப்பட்ட நாவல் வெளிவரமுடியாமல் போனதற்காக அந்த இதழை பிரசுரித்த நியு செஞ்சுவரி பிரசுரத்தின் நிர்வாகிகளான தோழர்கள் ராதாகிருஷ்ணன், குசேன் ஆகியோர் மிகவும் வருத்தப்பட்டார்கள். இரண்டு மூன்று மாதங்களுக்குப் பிறகு, என்னை என் அலுவலகத்தில் சந்தித்தார்கள். எப்படியோ, தவறு நடந்துவிட்டது என்றும், நான் உடனடியாக ஒரு குறுநாவலை “கல்பனா”விற்கு எழுதித்தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்கள். அவர்கள் நினைத்தால் என்னை ஒரம் கட்டியிருக்கலாம். ஆனால் அவர்கள் மார்க்சிய மனிதநேயத் தொண்டர்கள். மனம் விட்டுப் பேசினோம். பின்னர் கல்பனாவில் எல்லோரும் பேசுகிற மாதிரி ஒரு நாவல் எழுதவேண்டும் என்று சிந்தித்தேன்.

பொதுவாக, நான் கதைகளோ அல்லது நாவல்களோ எழுதும்போது, பல்வேறு சம்பவங்களை சுமார் ஒரு மணிநேரம் வரை நினைத்துப் பார்பேன். இந்த முயற்சியில் பல கதைக்கருக்கள் மனதுக்குள் உருவாகும். இவற்றில் எதை எழுதலாம் என்று சமூக நோக்கத்தோடு கணக்குப் போடுவேன். இப்படி நான் சிந்தித்தபோது, கிராமப் புறங்களில் நடைபெறும் தனியார் பள்ளிக்கூட சங்கதிகள் நினைவுக்கு வந்தன. இப்போதாவது இந்த பள்ளி நிர்வாகிகளின் ஆட்டமும் பாட்டமும் ஓரளவு அடங்கியிருக்கிறது. ஆனால் 15 ஆண்டுகளுக்கு முன்பு இவர்களுக்கு இவர்களே எஜமானவர்கள்; ஆசிரியர்களுக்கு சரியாக சம்பளம் கொடுக்க மாட்டார்கள். அத்தைமகன், மாமாபிள்ளை, பெரியம்மா பேரன், சின்னம்மா புருஷன் ஆகியவர்கள் தான் பள்ளியில் ஆசிரியர்களாக இருப்பார்கள். நியாயம் கேட்கும் ஆசிரியர்கள் எல்லா விதத்திலும் அடிபட்டுப் போவார்கள். எங்கள் ஊர் பள்ளிக்கூடத்தில் ஒரு ஆசிரியைக்கு அப்போதைய சம்பளம் 400 ருபாய். அந்த அம்மாவுக்கு மானேஜர் 100 ரூபாய் கொடுத்தார். அந்த ஆசிரியை ‘400 ரூபாயாச்சே’ என்று கேட்டார். உடனே, அந்த மானேஜர் ‘நீ வயலுக்கு களைவெட்டப் போனால் முப்பது ரூபாய் தானே சம்பளம். அதைவிட நான் மூன்று மடங்கு அதிகமாக சம்பளம் அழுகிறேனே’ என்று சிரித்துக்கொண்டே சொன்னாராம். போதாக்குறைக்கு, அந்த ஆசிரியை தனது சர்டிபிகேட்டை வேற இந்த நிர்வாகியிடம் கொடுத்திருந்தார். ஒரு பள்ளிக் கூட மானேஜர் இறந்ததும் அவரது இரண்டு மகன்களும் மானேஜர் வேலை யாருக்கு என்று போட்டா போட்டியில் இறங்கினார்கள். இறுதியில் உறவினர்கள் முன்னிலையில் மானேஜ்மென்ட் உரிமை ஏலம் போடப்பட்டது. ஏலத்தில் அதிகத் தொகை கேட்ட தம்பிக்கு பள்ளி நிர்வாகம் கொடுக்கப்பட்டது. இந்த ஏலத்தை முதன்மையாக வைத்து ஆசிரியர் போராட்டத்தைச் சித்தரிக்கும் “கேள்வித்தீ” என்ற குறுநாவலை எழுதி கல்பனாவுக்கு கொடுத்தேன். ஆசிரியர்கள் சமூகத்தில் இன்னும் இந்த நாவல் பேசப்படுகிறது.

‘கல்பனா’ மாத இதழ் இன்றைய அசிங்கமான மாத நாவல்களைப் போல் அல்லாமல், தரமான நாவல்களைக் கொடுப்பதற்காக உருவானது. ஒரு நல்ல நோக்கம் கூட எப்படி தோற்கடிக்கப்படும் என்பதற்கு இந்த இதழின் ஆசிரியத்தனமும் அதற்கு உடன்பட்டுப் போன நிர்வாக முறைமையும் காரணங்கள். எடுத்த எடுப்பிலேயே அசோகமித்திரன், சா.கந்தசாமி என்று தெரியாத பாணியில் எழுதப்பட்ட நாவல்களை வெளிப்படுத்தினார்கள். பின்னர் வாசகர் வட்டம் என்ற பெயரில் பல்வேறு நகரங்களில் கூட்டங்கள் போட்டு எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கும் அவரது விசிறிகளுக்கும் மேடை கொடுத்தார்கள். இதற்காக பேச்சாளர்கள் போக்குவரத்து, கூட்டச் செலவு எல்லாம் கல்பனா இதழின் தலையில் கட்டப்பட்டது. அது நஷ்டப்பட்ட போது, வாசகர்கள் மேல் பழிபோடப்பட்டது. இந்த இதழை மட்டும் ஒழுங்காக நடத்தியிருந்தால், இதற்கென்று இருந்த இடதுசாரி வாசர்கள் மத்தியில் இன்றும் அது கம்பீரத்துடன் உலா வந்து கொண்டிருக்கும். ஆனால் வாசகர் சந்திப்புக்கள் என்ற அதிகப்பிரசங்க செலவுகள் இந்த இதழை சந்திக்கு கொண்டு வந்து இறுதியில் அதன் குரல்வளையை நெறித்துவிட்டன. நான் எழுதிய “கேள்வித்தீயும்” பொன்னிலன் எழுதிய “கொள்ளைக்காரர்கள்” குறுநாவலும் இதற்கென்று இருந்த வாசர்களிடம் நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தன. ஆனாலும் ‘டூ லேட்’. அழகியல்வாதிகள் என்று கருதப்படுபவர்களுக்கு இது ‘டூ லெட்’ செய்யப்பட்டதால் கடைசியாக எழுதிய எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை. ஆனாலும் கல்பனா ஒரு அற்புதமான முயற்சி.

இவர்களின் உலகம்

‘இந்தியா டுடே’யில் அதன் ஆசிரியர் திரு. மாலன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க ஒரு சிறுகதை எழுதப்போனேன். வழக்கம்போல் கடற்கரையில் உட்கார்ந்து சிந்தித்தேன். முன்பு பஞ்சாயத்து விஸ்தரிப்பு அதிகாரியாக பார்த்த ஆட்சித் தலைவரை, மாவட்ட அதிகாரிகளின் பார்வையில் பார்த்தேன். பல்வேறு நிகழ்ச்சிகள் நினைவுக்கு வந்தன. பொதுவாக மாவட்ட நிர்வாகம் செக்குமாடு மாதிரி ஆட்சித் தலைவரையே சுற்றிச் சுற்றிவரும். செகரட்டேரியட்டில் டெப்புடி செகரட்டிரிகளாக கிடக்கும் தூங்குமூஞ்சிகள் கூட மாவட்ட கலெக்டராகி மாவட்டங்களில் ஆட்சித் தலைவர்களாகி சக்கைபோடு போடுவார்கள். அண்மையில்கூட ஒரு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு நான் போயிருந்தபோது, ஆட்சித் தலைவர் காருக்கு என்று ஒரு மைதானத்தில் பாதி இடத்தை அடைத்து வைத்திருந்தார்கள். அவரைப் பார்க்கப் போகும் எவரும், காரை அந்த சின்னச் சுவர் கேட்டிற்கு அப்பால் நிறுத்தி விட்டுத்தான் போகவேண்டும். இத்தகைய சுல்தான் கோடுகள் இன்னும் நமது நிர்வாக வளாகங்களில் வரையப்பட்டுத்தான் வருகின்றன. இந்த நிகழ்ச்சியும் மனதுக்குள் வந்தது. இதை வைத்து “இவர்களின் உலகம்” என்ற சிறுகதையை எழுதினேன். தோழர் மாலன் ஒரு வரியைக்கூட சிதைக்காமல் அப்படியே பிரசுரித்தார். இந்தக் கதைக்கு நல்ல பேர்.

மூன்று வரி விமர்சனம்

இந்தக் கதை பிரசுரமானதை விட என்னைப்பற்றி நண்பர் மாலனே மூன்று வரிகளில் எழுதியிருந்த விமர்சனம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது. ‘பகிரங்கமான கிண்டலுக்கும் அதற்குள் மறைமுகமான எதிர்ப்புக் குரலுக்கும் பேர் போனவை சமுத்திரம் சிறுகதைகள்’ என்று எழுதியிருந்தார். இதுதான் என்னைப் பற்றி நானும் கொண்டிருக்கும் கணிப்பு. இந்தக் கதையை பல வாசக நண்பர்கள் படித்திருப்பார்கள் என்ற அனுமானத்தில் இதனை எப்படி உருவாக்கினேன் என்பதை இதோ பகிர்ந்து கொள்கிறேன்.

கொள்ள வேண்டியவை - தள்ள வேண்டியவை

மாவட்ட அதிகாரிகளுக்கு குறிப்பாக வருவாய்த் துறை நண்பர்களுக்கு கலெக்டரே உலகம். ஒரு வேடிக்கையான கதை கூடச் சொல்லுவார்கள். ஒரு டாவாலிப் பியூன் ஆட்சித் தலைவர் வீட்டுக் கிணற்றில் ஒரு தவலையைக் கட்டி தண்ணீர் மொண்டு கொண்டு இருந்தாராம். கயிற்றை இழுத்து குடம் பாதி தூரம் வந்துவிட்டது. அந்தச் சமயம் பார்த்து ஒரு கிளார்க் வந்து அந்த ஆட்சித்தலைவர் மாற்றப்பட்டார் என்றும், புது ஆட்சித் தலைவர் பொறுப்பேற்க வந்திருக்கிறார் என்றும் சொன்னாராம். உடனே நமது டவாலி அந்தப் பாத்திரத்தை அப்படியே கிணற்றில் போட்டுவிட்டு புது கலெக்டர் இருக்கும் இடத்திற்கு ஓடினாராம். இப்படி, கலெக்டர்களுக்கே கொத்தடிமை என்று ஆகிப்போனவர்கள், ரயில் நிற்பதை பார்த்துவிட்டு, “கலெக்டர் அம்மா வருகிற ரயிலை ஸ்டேஷன் மாஸ்டர் எப்படி நிறுத்தி வைக்கலாம்?” என்று நினைக்கிறவர்கள். கலெக்டர் அம்மா ரயில்வே மாடிப் படிகளில் ஏறினால் உடம்பு வலிக்கும், என்று எண்ணி, அந்த ரயிலை வேறு பிளாட்பாரத்திற்கு விடக்கூட நினைக்கிறார்கள்” என்று எழுதினேன். இந்த ஒரு வரியில் இவர்கள் கலெக்டர் என்ற மூல ஸ்தானத்தை எப்படி மார்க்கண்டன் மாதிரி பிடித்துக் கொண்டார்கள் என்பதை சித்தரித்தேன்.

நோக்க வேண்டியவை...

இரண்டாவதாக ஒரு கதையை அல்லது அதில் வரும் கேரக்டர்களை எந்த எழுத்தாளனும் கொச்சைப் படுத்தக் கூடாது. முதலில் மனம்போன போக்கில் எழுதலாம். பின்னர் அதை நன்றாகப் படித்து சமூக நோக்கத்தோடு திருத்த வேண்டும். இந்தக் கதையில் டெப்புடி கலெக்டரான இளைஞன் இளவயது கலெக்டர் அம்மாவுக்கு வரவேற்பு மாலையை கழுத்தில் போடுகிறான். இதனைச் சொல்லிவிட்டு அந்த அம்மா “புருஷன் போடுவது மாதிரி மாலையைப் போடுகிறானே” என்று கோபப்படாமல் அந்த மாலைக்காக மனதுக்குள் மகிழ்ந்து வெளியே ஒப்புக்காக மறுத்துப் பேசினாள்” என்று எழுதியிருந்தேன். இப்படி எழுதியதை பிறகு அடித்துவிட்டேன். காரணம் கலெக்டர் என்ற பதவி எப்படி நோக்கப்படுகிறது, அந்த பதவிக்குரியவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை சித்தரிக்கும் நோக்கத்தைக் கொண்டதே தவிர, அந்தப் பதவியில் இருப்பவர்களை மலிவாகக் கொச்சையாக விமர்சனம் செய்ய வேண்டும் என்ற நோக்கமல்ல. ஆகையால்தான் கலெக்டர் அம்மாவைப் பற்றி எந்த இடத்திலும் தரம் குறைத்து நான் விமர்சிக்கவில்லை.

மூன்றாவதாக ரயிலில் தன்னுடன் வந்த ஒரு தொழிலதிபரை கலெக்டர் அம்மா “யு ஆர் அன் இன்டரஸ்டிங் பெர்சானாலிட்டி” வீட்டுக்கோ ஆபீசுக்கோ டெலிபோன் செய்து விட்டு வாருங்கள் என்கிறாள். இதில் ஆபீசுக்கோ என்று போட்டதன் நோக்கம், இந்த இளமங்கை, அந்த தொழிலதிபரை காதல் கண்ணோட்டத்தோடு கூப்பிடவில்லை என்பதைச் சித்தரிக்கவும் பொதுவாக பெரிய அதிகாரிகள் பெரிய முதலாளிகளின் நலன்களையே பேணுவார்கள் என்பதை எடுத்துக்காட்டவும் போடப்பட்ட வார்த்தை. எழுத்தில் வீணான அர்த்தம் வராமலும் பார்த்துக் கொள்ள வேண்டும்.

நான்காவதாக அதிகாரவர்க்கம் என்பது ஆட்சித் தலைவரோடு நின்று விடவில்லை என்பதை விளக்கும் வகையில் மாவட்ட அதிகாரிகள் கலெக்டர் தங்களை தப்பாக நினைத்துக் கொண்டாரோ என்று கவலைப்படும் போது ‘கலெக்டர் அம்மா’ சீப் செகரட்டரி தன்னைத் தப்பாக நினைத்திருப்பாரோ என்று கவலைப்படுவதாக இறுதியில் எழுதினேன்.

ஐந்தாவதாக எந்தச் சிறுகதையிலும் ஒரு சமூகப் பிரச்சினை தெளிவாகவே உணர்த்தப்பட வேண்டும். இந்தக் கதையில் “குட்டாம் பட்டியில் மனுநீதி நாளுக்காக அதிகாரிகளின் வரவிற்கு பொதுமக்கள் காத்திருந்தாலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள், கலெக்டர் மனதில் ஒரு நல்லெண்ணத்தை ஏற்படுத்தும் முன்னால் எந்த வேலையும் செய்வதில்லை என்பது போல் நின்றார்கள்” என்று குறிப்பிட்டிருந்தேன். அதிகாரிகளின் மனப்போக்கால் குடியானவர்களின் எதிர்பார்ப்பு எப்படி வீணாகிறது என்பதையும் இன்றைய அதிகார வர்க்கம் எப்படி செயல்படுகிறது என்பதையும் சித்தரிப்பதே இந்தக் கதையின் நோக்கம். ஒரு கதையை எழுதி விட்டு அதைப் படிக்கும் போது எவையெல்லாம் எனக்கு போர் அடிக்கிறதோ அவை எல்லாம் வாசர்களுக்கும் போர் அடிக்கும் என்று நான் அடித்து விடுவேன் அல்லது திருத்திவிடுவேன்.

என்னடா இது, சமுத்திரம் சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளாமல் அவர்பாட்டுக்கு லெக்சர் அடிக்கிறாரோ என்று நீங்கள் நினைக்கலாம். சமுத்திரம் கட்டுரை இளைய தலைமுறை எழுத்தாளர்களுக்கு வழி காட்டக் கூடியவை என்று வாசக நண்பர்களின் கடிதங்கள் நண்பர் வட்டத்தில் அடிக்கடி பிரசுரம் ஆவதால் ஏற்பட்ட கோளாறு இது. இந்தக் கோளாறு இனிமேல் வராமல் பார்த்துக் கொள்வேன்.

குறிப்பு :

என்னைப் பொதுவாக மனமாறப் பாராட்டும் பெரியவர் வல்லிக்கண்ணன் அவர்கள் இந்த கதையின் பிலாக்கணத்தைக் கண்டித்தார். சமுத்திரத்திற்கு ஏன் இந்த வாத்தியார்த்தனம் என்று நண்பர் வட்டம் மூலமாகக் கேட்டார்.