உள்ளடக்கத்துக்குச் செல்

எனது கதைகளின் கதைகள்/கிராமிய அனுபவங்கள்

விக்கிமூலம் இலிருந்து

5
கிராமிய அனுபவங்கள்


வளத்தம்மா

அம்மா இறந்த பிறகு, என் அம்மாவின் அம்மாவான வளத்தம்மாவிடம் வளர்ந்தேன். என் வளத்தம்மாவை ‘பாப்பாத்தி’ என்பார்கள். அந்த அளவிற்கு சிவப்பு, ஊரில் பிள்ளைகள் “தாயை வாளா, போளா” என்பார்கள். என் வளத்தம்மா, தன் பிள்ளைகள் தன்னை நீங்க நாங்க என்று பேசும்படி செய்தவர். வயல்வரப்பிற்குப்போகாதவள். ஏழையாக இருந்தாலும், பண்ணையார்த் தனத்தில் இருந்தவள். எஸ்.எஸ். எல்.சி. படிக்கும் வரை வளத்தம்மாவுடன், படுப்பேன். வளத்தம்மாவைப் பார்க்காமல், என்னால் இருக்க முடியாது. பிறகு, சென்னைக்கு படிக்க வந்ததும், தூங்கி எழுந்திருக்கும் போதெல்லாம், ‘வளத்தம்மா, வளத்தம்மா’ என்று சொல்லிக் கொண்டே எழுந்திருப்பேன். ஆனால் காலப்போக்கில், வளத்தம்மாவை மறக்கத் தொடங்கி விட்டேன். நான் சென்னையில் பட்ட சிரமங்களும், வளத்தம்மா, மகள்கள் விஷயத்தில் மேற்கொண்ட திருமண முடிவுகளும், (அப்போது நான் பிறக்கக் கூட இல்லை) எனக்கு வளத்தம்மா மீது ஒருவித விருப்பமின்மையை ஏற்படுத்தின. மூத்த மகளை முதல் மனைவியைத் தள்ளி வைத்த அண்ணன் மகனுக்கு கொடுத்தது (அதாவது என் பெரியம்மாவை) எனக்கு ஏனோ ஒரு வித இடைவெளியை அவளிடமிருந்து ஏற்படுத்தியது. விடுமுறையில் ஊருக்குப் போகும்போதெல்லாம், வளத்தம்மாவுடன் பழைய பாசத்துடன் பேசியதில்லை. வளத்தம்மாவிற்கும், மகன் வழிபேரன்கள் - பேத்திகளும் நிறைய பேர் தோன்றிவிட்டதால், என்மீது பழைய பிடிப்பு இல்லை. ஆனாலும் வளத்தம்மாவிற்கு அவ்வப்போது பணம் அனுப்பிக் கொண்டிருந்தேன். அவளுக்கு 90 வயது வந்து விட்டது. குடும்பத்தில் ஒவ்வொருவராக இறந்தார்கள். வீட்டில் பெரியவர்கள் சாகவில்லை என்றால், சின்னவர்கள் சாவார்கள் என்ற மூடத்தனத்தை எனது உறவினர்கள் சொல்லும்போது, நானும் தலையாட்டி ரசிப்பேன். திடீரென்று ஒருநாள் வளத்தம்மா இறந்து போனாதாக தந்தி வந்தது. அலறி அடித்து ஊருக்கு சென்றேன். அப்போது தான் வளத்தம்மா, என்னை வளர்த்த விதம், அம்மா இல்லாத குறையை நீக்கியது, ஆசையோடு ஊட்டியது, அடுக்கடுக்கான அறிவுரைகளைச் சொன்னது - எனக்கு நினைவிற்கு வந்தது. சின்னப்பிள்ளை போல கேவிக்கேவி அழுதேன். இன்னும் கூட சில சமயம் அழுகிறேன். இந்தப் பின்னணியில் ‘வளத்தம்மா’ என்ற கதையை ‘தாயில்’ எழுதினேன். இதில் என்னையும் தாக்கிக் கொண்டேன்.

அன்பில்லாத அண்ணனுக்கு

இதே மாதிரி இன்னொரு சுயவிமர்சனக் கதையையும் எழுதினேன். என்னைப் படிக்க வைத்த எனது சித்தப்பா இறந்துவிட்டார். எனது சித்தியும், பிள்ளைகளும் சென்னையிலிருந்து ஊருக்கு வந்து விட்டார்கள். மாதச் சம்பளம் வாங்கும் என்னால், அதிகமாக உதவ முடியவில்லை. என் சித்தியும், என்னிடமிருந்து அன்பைத்தான் எதிர்ப்பார்த்தாளே தவிர, பணத்தை அல்ல. ஆனாலும் சித்தப்பா மகள் ஒருத்தி வயதுக்கு வந்து விட்டாள். அவளுடைய திருமணத்திற்கு ஏற்பாடு செய்யும் பொருளாதாரச் சக்தி எனக்கில்லை. எப்படியோ அவளுக்கு ஒரு திருமணமும் முடிவாகி, எனக்கு அழைப்பிதழ் வந்தது. நான் அந்த அழைப்பிதழைக் காட்டியே ஜி பி எப் லோன் போடப்போனேன. நம்மால் திருமணத்திற்கு உதவ முடியவில்லை, என்றாலும் அந்த அழைப்பிதழையே மூலதனமாக்குறோமே என்று எழுதிய விண்ணப்பத்தை கிழித்துப் போட்டேன். அந்த குற்ற உணர்வில், ‘குமுதத்தி’ல் “அன்பில்லாத அண்ணனுக்கு” என்ற சிறுகதை எழுதினேன்.

ஊர்க்காரர்களுக்கு கொஞ்சம் மகிழ்ச்சி. நான் அவர்களைப் பற்றி மட்டுமல்ல, என்னைப் பற்றியும் எழுதுவதால், என்னிடம் எந்தவித பாரபட்சமும் இல்லை என்பதை அவர்கள் புரிந்து கொண்டார்கள்.

எந்தன்றி கொன்றார்க்கும்

எங்கள் ஊரில் ஒருவர் அந்தக் காலத்திலேயே சப் இன்ஸ்பெக்டரானார். அவரது குடும்பத்தாருக்கோ பெருமை பிடிபடவில்லை. ஊருக்கு அம்மன் கொடைக்கு, அவர் வரும் போதெல்லாம் போலீஸ் பாராவோடு வருவார். ஒரு தடவை, அந்தக் குடும்பத்தில், பங்காளிகளுக்குள்ளேயே சண்டை ஏற்பட்டது. இந்த சப் இன்ஸ்பெக்டர், எந்த பங்காளிகள் அவரது பதவியை பெருமையடித்துப் பேசினார்களோ, அவர்களையே உள்ளே தள்ளிவிட்டதாக பேச்சு அடிபட்டது. இதை வைத்து, ‘எந்நன்றி கொன்றார்க்கும்’ என்ற ஒரு சிறுகதையை ‘விகடனி'ல் எழுதினேன். இந்தக்கதை வெளியான பிறகு, அவரது மனைவி தகராறு வரும் போதெல்லாம் “உங்க புத்திக்குத்தான்-சமுத்திரம் இப்படி எழுதியிருக்கிறான்” என்று சொன்னதாகக் கேள்வி. இவ்வளவுக்கும் தூரத்து உறவினரான அவரை, நான் நேருக்கு நேர் பார்த்ததில்லை. பிறகு அவர் எஸ்பியாக பணியாற்றி, பணியிலேயே உயிர்நீத்தார். அவர்மீது, எனக்கு பிற்காலத்தில் ஒரு பாசம் ஏற்பட்டது. அவரும் என்னைப் பார்க்கத் துடித்ததாக அறிந்தேன். பார்க்கலாம் என்றிருந்த காலக் கட்டத்தில், அவர் பறந்து விட்டார். இப்போதும் திருச்செந்தூர் வட்டத்தில், அவருக்கு ஏகப்பட்ட நல்லபெயர். ஒரு குடும்பத்தில் முதன்முதலாகப் படித்து, காவல் துறைக்கு நேர்மையான ஒருவன் சென்றாலும் அவனைச் சொந்தக்காரர்கள் விட மாட்டார்கள் என்பதைப் புரிந்து கொண்டேன். இந்த பிற்கால ஞானோதயத்தின் அடிப்படையில், ‘நெருப்புத் தடயங்கள்’ என்ற எனது நாவலில் சொந்தக்காரர்களால் சுரண்டப்படும் நேர்மையான போலீஸ் அதிகாரியாக அவரைச் சித்தரித்தேன்.

ஒரு சந்தேகத்தின் நன்மை

எங்கள் ஊருக்குப் பக்கத்து ஊரில், ஒரு இளம் பெண் இறந்து விட்டாள். தாய் வீட்டில் இருந்த அவளை வெளியூரைச் சேர்ந்த கணவன் விஷம் வைத்துக் கொன்று விட்டதாகக் கேள்வி. அந்த பெண்ணின் உற்றார் உறவினர்கள், அவள் கணவனை எதிர்பார்த்து நின்றார்கள். அவனையும் வெட்டி, அவளுக்கு வெட்டிய குழியிலேயே போட்டுவிடுவது என்பது முடிவு. இந்தக் கணவனின் பெரியப்பா மகள், அந்த ஊரில் திருமணமானவள். அவளுக்கு விஷயம் புரிந்துவிட்டது. அண்ணன்காரன் சற்றுத் தொலைவில் வரும்போதே “அடே அற்பப்பயலே, எங்க மதனியை விஷம் வச்சாடா கொன்னே இங்கே வா, உன்னையும் வெட்டி புதைக்கப் போறோம் பாரு” என்று வாயிலும் வயிற்றிலும் அடித்தபடி அவனை நோக்கி ஓடினாள். உடனே அவனும் உயிர் பிழைக்க ஓடிவிட்டான். ஓடி தப்பித்து விட்டான். இந்தப் பெண் தனது பெரியப்பா மகனை இப்படி சாமர்த்தியமாக தப்பிக்க வைத்ததாக ஊரார் சொன்னபோது, அவளோ உணர்ச்சி வசப்பட்டு, தார்மீகக் கோபத்தில், “அப்படிச்” செய்ததாக சொல்லிப் பார்த்தாள். யாரும் அவளை நம்பவில்லை-நம்ம முடியாதுதான். அந்தப் பெண்ணை, இறந்து போன பெண்ணின் அண்ணனாக மாற்றி, ‘ஒரு சந்தேகத்தின் நன்மை’ என்ற ஒரு சிறுகதையை ‘விகடனி’ல் எழுதினேன்.

கதிர்வராத பயிர்கள்

நான் கல்லூரியில் படிக்கும் போது ஊரில் விடுமுறைக்குப் போவேன். ஒரு இளம்பெண் லேசாக சிரிப்பாள். அவள் எனக்கு துரத்து முறைப்பெண்தான். எனக்குப் பயம். படிப்பு போய் விடக் கூடாதே என்ற பயம். ஊரில் புரட்சிக்காரன் என்று பேர் வாங்கிய நான், ‘அம்போக்கு’ என்று அடிபட்டு விடக்கூடாதோ என்ற எச்சரிக்கை. அவள் எவ்வளவோ என்னிடம் பேசிப் பார்த்தாள். நான் என்னைக் கட்டுப்படுத்திக் கொண்டேன். ஒரு நாள் என்னால் இயலவில்லை. தனியாக வந்த அவளிடம், ஏதோ பேசப்போனேன். உடனே அவள் “முகரக்கட்டையயும் மூஞ்சியையும் பாரு” என்றாள். முழுக் கறுப்பனாகவும், முன் நீண்ட பற்கள் உடையவனாகவும், உள்ள நான் கோபத்தில் கண்சிவந்து, அவளைப் பதிலுக்கு திட்டிவிட்டு வந்து விட்டேன். நான்கு ஐந்தாண்டுகளுக்கு முன்பு, இருவரும் (அரைக்கிழடுகளான பிறகு) சந்தித்தோம். அவளிடம் ‘முகரக்கட்டையை'ப் பற்றிக் கேட்டேன். உடனே அவள் ‘செல்லமாக’ சொன்னதாகச் சொன்னாள். நான் தான் அவள் காதலை புரிந்து கொள்ளாமல் திட்டிவிட்டதாக அங்கலாய்த்தாள். அன்புச்சக்தி எப்படி விபரீதமாகவும் மாறலாம் என்பதை வைத்துக் “கதிர்வராத பயிர்கள்” என்ற கதையை ‘தேவி'யில் எழுதினேன்.

பால்கணக்கு

ப்போது எனக்கு ஆறு வயதிருக்கும், இன்னும் நன்றாகவே நினைவிருக்கிறது.

என் விதவைத் தாயாருக்கு 25 வயதிருக்கலாம். அம்மாவிற்குத் திருமணமான ஆறுமாதக் காலத்திற்குள்ளேயே, அப்பா இறந்து விட்டார். நான்தான் அம்மாவின் மூத்த-கடைசி மகன். ஆகையால், அம்மா என்னை ‘படி படி’ யென்று சொன்னதும், படிக்கவில்லை என்றால் அடித்ததும், இன்னும் நினைவிற்கு வருகிறது. வெளியூரில் சொந்தக்காரர்களின் திருமண நிகழ்ச்சிகள் போன்ற விழாக்களில், கலந்து கொள்ளும் போது, எனக்கு இரவல் சட்டை வாங்கி இடுப்பில் தூக்கி வைத்துச் சென்றதும் இப்போது கூட, அழுத்தமாக நெஞ்சில் நெருடுகிறது. நான், அம்மாவோடுதான் தூங்குவேன். என் தாய் அதிகாலையில் வயலுக்குப் போய்விட்டு, இரவில்தான் வருவாள். அதுவரைக்கும், நான் நிலா வெளிச்சத்தில் கிளித்தட்டு, சடுகுடு போன்ற விளையாட்டுக்களை, இதர தெரு வீரர்களுடன் விளையாடியது ஞாபகம் வருகிறது. அப்போதெல்லாம், என் தாய் வயலிலிருந்து வந்த வேகத்திலேயே, என் விருப்பத்திற்கு விரோதமாக என்னைத் தூக்கிக் கொண்டு போய் விடுவாள். ஒருநாள், என் தாய் வெளியூரில் எனது பெரியம்மா வீட்டிற்கு சென்றிருந்தாள். சாயங்காலம் திரும்ப வேண்டியவள், திரும்பவில்லை. மறுநாள் காலையிலும் வந்தபாடில்லை. உடனே நான் ஒரு வாதமடக்கி மரத்தில் ஏறி, அம்மா வரும் திசையை நோக்கி, கண்களைச் செலுத்தினேன். சிறிது நேரத்திற்குள், அம்மா அங்குமிங்குமாய் உட்கார்ந்து உட்கார்ந்து வருவது தெரிந்தது. அந்தக் கருப்புச்சேலை, அம்மாவாகத்தான் இருக்க வேண்டும் என்பது தெளிவாகிவிட்டது. ஒருவேளை அம்மாவாக அல்லாமல் இருக்கலாம் என்று நான் மரத்திலேயே இருந்துவிட்டு, சிறிது நேரம் கழித்து இறங்கினேன். என் அம்மா வேகவேகமாக வந்து, வீட்டுத் திண்ணையில் படுத்தாள். உடனே வாந்தியும், பேதியுமாக வந்தது. என் தாத்தா, அம்மாவின் நாடியைப் பார்த்த விட்டு தலையில் அடித்துக் கொண்டு அழுதார். ஊரே கூடிவிட்டது. அம்மாவின் கண்கள், என் மீதே நிலைத்திருந்தன; நான் அங்கே இங்கே நகரும்போதெல்லாம் அவள் கண்கள் நகர்ந்தன. அம்மாவிற்கு காலராவாம். அருகே உள்ள தென்காசிக்குப் பேயிருந்தால், ஒரு வேளை பிழைத்திருக்கலாம். அறியாமையும், மூட நம்பிக்கையும், அதற்கு மூலமான ஏழ்மையும், அம்மாவை மறுநாள் இறக்கச் செய்துவிட்டன. என்னைப் பாராமுகமாக இருந்த உறவினர்கள் அனைவரும், அன்று ஒருநாள் என் மீது அன்பு பொழிந்தார்கள். எனக்குகூட, அம்மா நான்கு நாள் இப்படி படுத்துக்கிடந்தால், நிலா வெளிச்சத்தில் தடையின்றி விளையாடலாமே என்ற ஒரு எண்ணம் ஏற்பட்டது இப்போதும் நினைவிற்கு வருகிறது. மறுநாள், வெள்ளிக்கிழமை, எனது தாயார் என்மீது கண்களை நிலை நாட்டியபடியே இறந்து விட்டாள். இந்தப் பின்னணியில், நான் நாற்பத்தைந்து வயது வந்தபிறகு, “பால் கணக்கு” என்ற சிறுகதை எழுதினேன். இது ‘தாயி’ல் பிரசுரமாயிற்று. ஒரு ஏழைத்தாய் புற்றுநோயால் உயிருக்குப் போராடுகிறார். ஏழைபாளைகள் அவள் அவதிப்படாமல் இறந்தால் தேவலை என்று நினைக்கும்போதோ, அவளுக்கு இறப்பு வரவில்லை. இறுதியில் ஒருவர் அவளின் ஆறு வயது மகனைக் கூப்பிட்டு, காதுக்குள் கிசுகிசுக்கிறார். உடனே அந்தச் சிறுவன் அம்மாவின் அருகே சென்று “நீ சந்தோஷமா போம்மா. நான் ஆடு மேய்ச்சோ, மாடுமேய்ச்சோ உன் பெயர் விளங்கப் பிழைத்துக் கொள்வேன்” என்று மாறி மாறி சொல்லுகிறான். அந்தத் தாயின் உயிர் நிம்மதியாகப் பிரிகிறது. இந்தக் கதையை எழுதும்போது என்னையறியமால் அழுது விட்டேன். இது எனக்குப் பிடித்த அம்மாவைப் பற்றி எழுதிய பிடித்தமான கதை.

குறிப்பு

1. ‘பால்கணக்கு’ சிறுகதை பிரபல பிரசாத் ஸ்டுடியோ உரிமையாளரின் மகன் ரவியால் தயாரிக்கப்பட்டு தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. ரவி இனிமையான இளைஞர். ஆனால், அந்தத் தயாரிப்பு எனக்கு கசப்பைக் கொடுத்தது. சாகும் தருவாயில் இருக்கும் அந்தப் பெண் எப்பொழுது சாவாள் என்று வெட்டியான் ஆவலோடு காத்துக் கொண்டு இருப்பதாகக் கதையில் இல்லாத ஒன்றைச் சேர்த்து அந்தக் கதை கொச்சைப்பட்டது. எந்த வெட்டியானும் இப்படி நடந்து கொள்ளமாட்டார். இது கிராமத்துப் பண்பு. நகரத்து ‘டெஸ்ட டியூப் பேபி’ மன்னர்களுக்கு இதெல்லாம் தெரியாது. இனிமேல் என் கதைகள் என் மேற்பார்வையின்றி ஒளி வடிவம் பெற அனுமதிக்கலாகாது என்று உறுதி பூண்டிருக்கிறேன்.

2. சென்னைப் பல்கலைக்கழத்தின் தமிழத்துறை சார்பில் எழுத்தாளர்களை வரவழைத்து அவர்களையே தத்தம் கதைகளைப் படிக்கச் சொல்லி, ஒலிப் பேழையாக்கினார்கள். நானும், “வேலைக்காரியின் மகன்” “பால்கணக்கு” என்று இரு கதைகளை தமிழ் அறிஞர்கள் முன்னால் படித்தேன். பால்கணக்கு கதையைப் படித்தபோது கிட்டத்தட்ட அழுது விட்டேன். இறுதியில் ‘என்னைச் சிலர் இலக்கியவாதி இல்லை என்கிறார்கள். நீங்கள்தான் பதில் சொல்ல வேண்டும்’ என்றேன். உடனே தமிழ்த்துறை தலைவர் டாக்டர் பொற்கோ அவர்கள் வெகுண்டெழுந்து, ‘உங்களை இலக்கியவாதி இல்லை’ என்று சொல்பவர்களை நீங்கள் துச்சமாக மதிக்க வேண்டும் என்றார்.