உள்ளடக்கத்துக்குச் செல்

எனது கதைகளின் கதைகள்/மீண்டும் கிராமப் பயணம்

விக்கிமூலம் இலிருந்து

8
மீண்டும் கிராமப் பயணம்


ரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில், நான் அதிகமாகக் கதைகள் எழுதவில்லை. அதற்கு முன்பு, எல்லா பத்திரிகைகளிலும், ஏதாவது ஒருவிதத்தில், என் பெயரோ அல்லது கதையோ அல்லது நான் பேசிய உரையின் ஒரு பகுதியோ வெளியாகிக் கொண்டிருக்கும். “சோற்றுப் பட்டாளம்” திரைப்படமாகப் போனபோது, அதற்கு வசனம் எழுதுவதற்காக, எடுத்துக் கொண்ட ஆறுமாத இடைவெளி, ஐந்தாண்டு கால இடைவெளியாகி விட்டது. அவ்வப்போது, நான் இருக்கிறேன் என்பதைக் காட்டிக் கொள்ளவே கதை எழுதும் நிலைக்கு வந்துவிட்டேன். பொதுவாக, பத்திரிகைகளுக்கு நானாக கதை அனுப்புவதில்லை என்றும், கேட்டால் எழுதுவது என்றும், தீர்மானித்தேன். பத்திரிகைகளும் கண்டு கொள்ளவில்லை, நானும் அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால் பலர் ‘துக்கம்’ விசாரிக்க ஆரம்பித்தார்கள். பிரபல பத்திரிகைகளோ, டி.வி.யில் மலரும் நினைவுகள் வருவது போல, என்னை, பொங்கல், தீபாவளி மலர்களுக்கு மட்டுமே, எழுதச் சொல்வது என்று தீர்மானித்து விட்டன. ஏதாவது ஒரு பத்திரிகை ஒரு கதை கேட்டாலோ, என்னால் உடனடியாக எழுத முடியவில்லை. அதுவும் ஒருகாலத்தில் மூன்று மணி நேரத்தில் ஒரு சிறுகதையை முடித்த எனக்கு, மூன்று நாட்களில்கூட முடிக்க முடியவில்லை. அலுவலக வேலைப்பளுவாலும், நமது ‘சீசன்’ முடிந்துவிட்டது என்ற எண்ணத்தாலும், நானும் அதிகமாகக் கவலைப்படவில்லை.

தோழியரே! தோழியரே!

இந்தப் பின்னணியில், ஓரிரு மாதங்களுக்கு முன்பு நெல்லை மாவட்டத்தில் உள்ள எனது கிராமத்திற்குப் போயிருந்தேன். நான், ஒரு காலத்தில் மனதுக்குள்ளாவது ரசித்த பெண்களில் பலர் பேத்திகள்கூட எடுத்துவிட்டார்கள். என்னுடைய தோழர் ஒருவர், ஊராட்சி ஒன்றியத் தலைவராகி, சதா அரசியலைப் பற்றியே புலம்பினார். அப்போதைய தோழர்கள், இப்போதைய குடும்பத் தலைவர்களாகி, தெருவாசிகளுக்கும் உதவாத சிறியவர்களாகிவிட்டார்கள். இளைய தலைமுறையோ பரிச்சயமற்றது. ஆனாலும் நானே இளைய தலைமுறையினரிடம் வலியப் பேசினேன். சிலர் “எங்கள வச்சிக் கதை எழுதவா” என்று சொல்லி நழுவினார்கள். சிலர் நம்ம ஊரைக் கேவலப்படுத்துகிறீர்களே என்றார்கள். நான் அவர்களுக்கு நம்முடைய பண்பாட்டில் நாம் பெருமைப்பட வேண்டும் என்று லெக்சர் அடித்தேன். சிலர் சிரித்தார்கள்; சிலர் ரசித்தார்கள். ஊரிலிருந்து திரும்பும்போது, “ஒரு வண்டிக்” கதைகளுடன் திரும்பினேன். இப்போது மடமடவென்று எழுதிக் கொண்டிருக்கிறேன். கிராமத் தொடர்பு, ஐந்தாண்டுகளாக அற்றுப் போயிருந்ததால் தான், கதை எழுத இயலாதவனாகி விட்டேன் என்ற உணர்வு, எங்கள் ஊருக்குப் போன பிறகுதான் தெரியவந்தது. ஒருவேளை, நான் எனது கதைகளை டெஸ்ட் டியூப் பேபிகளாக, சோதனைக்கூடத்தில் எழுதாமல் இருப்பதை ஒரு வைராக்கியமாக வைத்திருப்பதும், இதற்கு ஒரு காரணமாகும். எனக்குக் கிடைத்த கதைகளை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்தப் பீடிகை.

ஊருக்குப் போனபிறகு, அங்கே பீடி சுற்றும் தொழில் பெரிதாக வளர்ந்திருப்பதைப் பார்த்தேன். ஒரு விவசாய சூழல், தொழில் துறைச் சூழலாக மாறும்போது, பண்டைய மரபுகள் அற்றுப்போகும் என்பது, சமூக இயல்.

வீடியோ–ஆடியோ சூழலிலும், பெண்கள் மத்தியில் முற்போக்குச் சிந்தனை வளர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அங்குள்ள ஒரு இளைஞர் - கண்ணாடிக்காரர் என்று அழைக்கப்படுகிறவர், கம்யூனிஸ்ட் கட்சி இயக்கத்தில் ஈடுபட்டு, இந்தப் பெண்களுக்கு சங்கம் அமைக்கப் பாடுபடுகிறார். அந்தக் கிராமத்தில் கம்யூனிஸ்ட் கட்சி பெயர் அடிபடுவதே, அண்மையில்தான். ஒரு காலத்தில் அதாவது அறுபதுகளில், நான் அந்தக் காலத்து மூக்கு வழிப் பேச்சாளர்களால், தமிழர்கள் முழு மூடர்களாகி விடுவார்கள் என்று சரியாகக் கணித்ததால், அப்போதிருந்த ஒரே ஒரு பழுதுபட்ட–தவிர்க்க முடியாத இயக்கமான காங்கிரஸ் கட்சியில் பேச்சாளனாக இருந்தேன். எங்கள் கிராமத்தில் கட்சிக்கொடியை ஏற்றப்போகும்போது, ஒருவர் “அமைதியாக இருக்கும் இந்த ஊரில், அரசியலைப் புகுத்திக் கெடுக்காதே” என்றார். அவர் சொன்னது, சரியாகப்பட்டதால், நானும் ஒதுங்கிக் கொண்டேன். அதற்குப் பிறகு திராவிட முன்னேற்றக் கழகமும், காங்கிரஸ் கட்சியும் கொடிகட்டின. இதுகூடப் பெரிய அளவில் இல்லை. ஆனால் இப்போதோ கம்யூனிஸ்ட் இயக்கம், பெண்கள் மத்தியில் ஒரு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. சங்கம் அமைக்க முற்பட்ட கண்ணாடிக்காரன், பீடி முதலாளிகளிடம், தான் சங்கம் வைக்காமல் இருக்க பணம் கேட்டதாக ஒரு புரளியை ஊரில் கிளப்பிவிட்டிருக்கிறார்கள் என்று என்னிடம் முறையிட்டார். நான் “கவலைப்படாதே, உன்னை வைத்தே ஒரு கதை எழுதி ஊக்கப்படுத்துகிறேன்” என்றேன். சொன்னபடி “தோழியரே, தோழியரே” என்ற சிறுகதை தாயில் பிரசுரமாயிற்று. அதற்கு இலக்கியச் சிந்தனை பரிசும் கிடைத்தது.

பூனைக்கும் மணிகட்டலாம்

எங்கள் ஊரில் ஒரு காலத்தில் யார் வேண்டுமானாலும் அடிக்கலாம் என்பது மாதிரி இருந்த ஒரு குடும்பம், இப்போது எழுச்சிபெற்று நிற்கிறது. அந்தக் குடும்பத்தின் இளைஞர்கள் இப்போது எந்த கொம்பனையும் எதிர்ப்பதற்குத் தயாராகிவிட்டார்கள். இதை வைத்து “பூனைக்கும் மணி கட்டலாம்” என்று ஒரு சிறுகதையை “தாய்” பெற்றுக் கொடுத்தாள்.

ஒரு போலிஸ் படையின் கிராமப் பிரவேசம்

எங்கள் ஊருக்குப் பக்கத்து ஊரான சிவநாடான் ஊரில் ஒரு சம்பவம் அப்போது நடைபெற்றது. போலீஸ்காரர்களில் ஒரு பகுதியினர், ஒரு வேனில் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களிடம் மாமூலாகக் குடித்துவிட்டு, வழியில், வயலுக்குத் தண்ணி கொண்டு போன ஒரு இளைஞனை வேனில் தூக்கிப்போட்டுக் கொண்டு போயிருக்கிறார்கள்; அவனை எங்கெல்லாமோ நிறுத்திவிட்டு, அவன் முன்னாலேயே சாராயமும் குடித்திருக்கிறார்கள்; சட்டமும் பேசியிருக்கிறார்கள். அந்த இளைஞனின் தந்தை ஒரு ஆசிரியர். ‘ஜாக்டி’ அமைப்பாளர்; அந்த வேனை ஊர்க்காரர்கள் மறித்து, போலீஸ்காரர்களை பலவந்தமாக இறக்கி, காலில் கிடந்த பூட்ஸ்களை கையில் பிடிக்கச் செய்து, ஊர்வலமாக நடத்தி இருக்கிறார்கள். இதைப் பின்னணியாக வைத்து, “ஒரு போலீஸ் படையின் கிராமப்பிரவேசம்” என்ற சிறுகதையை ‘செம்மலரில்’ எழுதினேன். எனக்குப் பிடித்த கதை. நான் ஏதோ ஒரு அப்பட்டமான பிரசார நெடியை அலைமோத விட்டிருப்பதாகவும், ‘செம்மலர்’ என்பதால், கதையை முற்போக்காக முடித்திருக்கிறேன் என்றும், நமது ஞான பண்டிதர்கள் நினைக்கலாம். ஆனால் கதை முழுக்க முழுக்க நடந்த நிகழ்ச்சி.

சாமியாடிகள்

எங்கள் ஊரில் பல குடும்பங்கள். சுமார் 100 தலைக்கட்டுக்களைக் கொண்ட ஒவ்வொரு பங்காளிக் கூட்டமும், பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும். பண்டாரக் கூட்டம், மாதவன் கூட்டம், சங்கிக் கூட்டம், குழியன் கூட்டம், இப்படி பலப்பல கூட்டங்கள். இந்தக் கூட்டங்களில் அருகருகே உள்ள இரண்டு கூட்டங்களுக்குத் தீராப்பகை. மாமா மச்சான்களாகப் பழகியவர்கள், தத்தம் குல தெய்வங்களுக்கு ஒரே சமயத்தில் போட்டி போட்டு, கொடை கொடுத்தார்கள். இந்தச் சூழலில், இந்தக் கூட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண், எதிரிக் கூட்டத்தைச் சேர்ந்த ஒரு இளைஞனோடு ஓடி விட்டாள். பெண் பிறந்த குடும்பக் கூட்டத்தினர் இதை ஒரு தலைகுனிவாக நினைத்தார்கள். பையனின் கூட்டமோ, அவர்களை அவமானப்படுத்தி விட்டதுபோல் துள்ளினார்கள். விவகாரம், காவல் துறைக்குச் சென்றது. ஆனால் காவல் துறையின் சப்-இன்ஸ்பெக்டரோ கிராமத்திற்கு வந்து இந்த விவகாரத்தை முழுமையாக விசாரித்து, ஒரு முடிவெடுக்காமல், பையனைப் பெற்ற குடும்பத்தோடு சேர்ந்து, ஏற்கனவே அவமானப்பட்டது போல் துடித்த குடும்பத்தினரை மிரட்டத் துவங்கினார். இதில் எனது உறவினரும் பாதிக்கப்பட்டார். நான் அந்த சப்இன்ஸ்பெக்டருக்கு எனது நண்பரான ஊராட்சி ஒன்றியத் தலைவர் மூலம், நிலைமையை எடுத்துச்சொல்லி, அவர் ஓரம் சாயாமல் பார்த்துக் கொண்டேன். ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஏற்பட்ட அல்லது ஏற்படுத்தப்பட்ட காதல், எப்படி விஸ்வரூபம் எடுத்து, பல தலைகளை விழ வைக்கும் நிலைமைக்குக் கூடப் போகும் என்பதை உணர்ந்தேன். இந்தக் காதலில், அந்தப் பையனோ, அல்லது அந்தப் பெண்ணோ முக்கியத்துவமற்று, சுமார் முந்நூறு பேரின் மானமே நடுத்தெருவுக்கு வந்ததுபோல், ஒரு எண்ணம் ஏற்பட்டது; ஏற்படுத்தப்பட்டது. நமது “புனிதக் காதல்” எழுத்தாளர்கள் இத்தகைய சூழலை ஆழ்ந்து பார்த்து, எழுத வேண்டும்; எழுதினால் நன்றாக இருக்கும். இப்போது ஒடிப்போனவனும், உடன்போனவளும் இரு கூட்டங்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டார்கள் என்ற சுப செய்தி எனக்குக் கிடைத்தது. ஆனால் இருதரப்பிலும் ஏதாவது ஒரு தரப்பு சற்று மிதமிஞ்சிப் போயிருந்தால், கொலை அல்ல, படுகொலை விழுந்திருக்கும். காவல்துறையினரோ ‘மாமூலாகத்தான்’ நடந்தார்கள். இந்தக் கொலைகள், காவல்துறை இருந்தும் நடைபெறவில்லை என்பதுதான் முக்கிய அம்சம்! இந்தப் பின்னணியில் ‘கோலவடிவு’ என்ற தொடர்கதையை ‘தினகரனில்’ எழுதினேன்.

குறிப்பு: நான் எழுதியதில் ஒரு வரியைக்கூட மாற்றாமல் வெளியிட்ட தினகரனுக்கு நான் நன்றி சொல்லியாக வேண்டும். இந்தத் தொடர்கதை ‘சாமியாடிகள்’ என்ற தலைப்பில் மதுரையில் உள்ள மீனாட்சி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. இன்றைய கிராமங்களில் வீடியோ - ஆடியோ தாக்கங்கள் எப்படி இருக்கின்றன என்று விலாவாரியாக எடுத்துக்கூறும் படைப்பு.