உள்ளடக்கத்துக்குச் செல்

எனது கதைகளின் கதைகள்/001-022

விக்கிமூலம் இலிருந்து


எனது கதைகளின் கதைகள்


நான், கதை எழுத வந்ததே தனிக்கதை. பள்ளிக்கூடக் காலத்திலும், கல்லூரிக் காலத்திலும் “மலர் கவிஞனாக இருந்திருக்கிறேன். அதாவது பள்ளிக்கூட கல்லூரி - கல்வி மலர்களில் கதை, கட்டுரை எழுதியிருக்கிறேன். பேச்சுப் போட்டிகளிலும் முதலாவதாக வந்திருக்கிறேன். கல்லூரி காலத்தில், ஒரு கதை எழுதி ஒருபத்திரிகைக்கு காலையில் அனுப்பினால், அது மறுநாள் காலையில் திரும்பி வந்தது. ஆனால் 1973ம் ஆண்டு இதில் எனக்கு ஒரு திருப்புமுனை. இப்போது புதுதில்லியில் தொலைக்காட்சித் துறையில் செய்தி ஆசிரியராகப் பணிபுரியும் திரு. செல்வராஜுடன் அப்போதைய கதைகளின் தரம் மட்டமாய் இருப்பதாக அடிக்கடி சொல்வேன். (இப்போதோ அந்தக் கதைகள் உயர்தரம்) அவரும் ஒரு நல்ல எழுத்தாளர். ஒரு தடவை “நீங்கள் வீணாக குறை சொல்லிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. ஒரு கதையை எழுதி பிரசுரித்துக் காட்டுங்கள். அதற்குப் பிறகு - பேசுங்கள்” என்றார். எனக்கு சற்று ரோஷம் வந்தது. அன்றிரவே, எழுதத் துவங்கினேன். அந்தக் கதையை, ஆனந்த விகடனுக்கு அனுப்பிவிட்டேன். கதை பிரசுரமாயிற்று. விசாரித்துப் பார்த்ததில், எனக்கு ஏற்கெனவே அறிமுகமாயிருந்த நண்பர் தாமரை மணாளனும், இப்போது மலேசிய தொலைக்காட்சியில் பணியாற்றும் நண்பர் ஜே.எம். சாலியும், இந்தக் கதை பிரசுரமாவதற்கு, பெரிதும் முயற்சி எடுத்தார்கள் என்பது தெரிய வந்தது. இந்தப் பின்னணியில் வாசகர்களிடம் எனது பல்வேறு கதைகளுக்குப் பின்புலனாக இருந்த மெய்யான கதைகளைப் பகிர்ந்து கொள்ளலாமென்று நினைக்கிறேன்.

திரு. செல்வராஜின் “நாக்கைப் பிடுங்குவது மாதிரியான” அறிவுரைக்கு, ஒரு கதையாவது பதிலாக வேண்டும் என்பதுதான் என் எண்ணம். நான், பிரபல எழுத்தாளனாக வேண்டும் என்பதல்ல. முதல் கதை என்பதாலோ என்னவோ, அந்தக் கதை எழுதுவதற்கு முன்னாலும், பின்னாலும் இருந்த என் மனப்போக்கு இப்போதும் நினைவுக்கு வருகிறது.

இப்போது, உருவம், உள்ளடக்கம், உத்தி போன்ற இலக்கிய அனாவசியங்களுக்குள் அவஸ்தைப்பட்டு, ஒரு சிறுகதை எழுத பல நாட்கள் எடுத்துக் கொள்கிறேன். அப்படி இல்லாமல், ஒரே ஒரு மணி நேரத்தில் மடமடவென்று எழுதிவிட்டேன். ஊரில் நடந்த பல நிகழ்ச்சிகளில், ஒரு நிகழ்ச்சியை மனதில் நிலைப்படுத்தி, ஒரு சிறுகதையை உருவாக்கிவிட்டேன். கதையை முடித்ததும், ஒரு பரமார்த்த திருப்தி. அந்தக் கதையில் சில ‘அறிவுரைகளும்’ சொல்லப்பட்டதால், நாட்டைத் திருத்த என்னால் (என்னால் தான் அல்ல) முடியும் என்ற உறுதி. ஏதோ பிறந்ததற்கு பிரயோசனப்படுவது போன்ற நிறைவு. அந்தச் சிறுகதை நிச்சயம் பிரசுரமாகிவிடும் என்ற நம்பிக்கை. காரணம், அந்தக் காலத்துக்கு, அது வித்தியாசமான கதை. அரசியல் உப்பு கலந்த “பொடிக்” கதை. புதுதில்லியில் இருந்து எழுதிய கிராமத்துக் கதை. தனிநபர் வழிபாட்டை கண்டிக்கும் புதுக்கதை.

அங்கே கல்யாணம் - இங்கே கலாட்டா

1974-ம் ஆண்டு நடைபெற்ற இந்த உரையாடல் என்னை என் கிராமத்திற்கு 1950-களுக்குக் கொண்டு சென்றது. அப்போதைய காலகட்டம் மிகவும் வித்தியாசமானது. இப்போதைய தமிழன்போல் அறுக்கப்படும் போது கூட அழத் தெரியாத முயல்போல் இல்லாமல், போர்க்குணத்தோடு இருந்த காலம். இரயில், பேருந்து, சந்தை, கல்யாணம் போன்ற பொது நிகழ்ச்சிகளில் அரசியல் விவாதங்கள் அடிதடி அளவுக்குக் கூட போன காலம். அடைந்தால் திராவிட நாடு இல்லையானால் சுடுகாடு என்றும், பண்டித நேருவை நேரு பண்டிதர் என்றும், உழைப்பால் உயர்ந்த உத்தமர் காமராஜை படிக்காத பாமரர் என்றும், திராவிட முன்னேற்றக் கழகத்தினர் வாதித்து வந்த காலம். இந்த இயக்கத்தின் தலைவர் அண்ணாவை, காங்கிரஸ்காரர்கள் ஒரு சிலர் கொச்சையாக வருணித்த காலம். பள்ளிக்கூடம், கல்லூரி முதலியவற்றில் இந்தித் திணிப்பு பற்றிக் காரசாரமான விவாதங்கள் நடைபெற்ற காலகட்டம், நாலு பேர் கூடிவிட்டால் போதும், உடனே அரசியல் பேச்சு. உடனே அக்கம்பக்கத்தில் இருப்பவர்களும் கும்பலாகி விடுவார்கள். ரத்த ஆறு, இருப்பது ஒரு உயிர், அது இப்போது வேண்டுமானாலும் போகட்டும் என்ற புறநானூறு முழக்கங்களோடு, ஒசைப்படாத “அகநானூறு” நிகழ்ச்சிகளும் நடந்த காலம். கட்டிளங்காளைகள், கலைஞரின் பராசக்தி பாணியில், அதே சமயம் அரைகுறைத் தமிழில், அண்ணா பாணியில் சொல்லப்போனால் “பருவ மங்கைகளுக்கு”, காதல் கடிதங்கள் எழுதிய காலம். கண்ணே, கற்கண்டே, கற்பகமே, பெட்டகமே என்று குறைந்தது இரண்டு பக்கத்திற்காவது ஒருத்தன் கடிதம் எழுதவில்லையானால், கடிதத்திகுரிய காரிகை அவனை ஏறெடுத்துக் கூட பார்க்க மாட்டாள். சில அண்ணன்மாருக்கு நானே கூட பல காதல் கடிதங்களை எழுதிக் கொடுத்திருக்கிறேன். இதனாலேயே சில பெண்களிடம் செல்லமான முத்துக்களையும், வலிதாள முடியாத மொத்துக்களையும் வாங்கி இருக்கிறேன்.

இப்படிப்பட்ட காலப் பின்னணியில், எங்கள் பக்கத்து ஊரில் ஒரு வாத்தியாரும், அப்போதைய பெரிய படிப்பான எட்டாம் வகுப்பைப் படித்த ஒருத்தியும் காதலித்த நேரம். இருவரும் நிலம் பார்த்து, குலம் பார்த்துக் காதலித்தால் பிரச்சினை இல்லை. இவர்களின் ஒத்திகையை அரங்கேற்ற இருவீட்டாரும் தீர்மானித்து ஊரைக் கூட்டினார்கள். ஆனால், அய்யகோ (அந்தக் கால பாணி) பெண் வீட்டுப் பங்காளிகள் காங்கிரஸ்காரர்கள். மாப்பிள்ளை வீட்டுப் பங்காளிகள் தி.மு.க.வினர். வந்ததே வாதம். அந்தக்கால வழக்கப்படி எந்தத் தலைவரை “இல்லற ஒப்பந்த விழாவிற்குத்” தலைமை தாங்க வரவழைப்பது என்பது பிரச்சினையானது. தலைவர்கள் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்கள். இதனால் தொண்டர்கள் கம்புகளைத் தூக்க வேண்டிய கட்டம். இதனால், நம்புங்கள், அந்தத் திருமணமே நின்றுவிட்டது. தலைவர்கள் தங்களது கருத்து வேற்றுமைகளை மறந்து, கல்யாணக் காட்சிகளில் கலந்து கொள்ளும்போது, எங்க ஊர்க்காரன், கல்யாணம் போகட்டும், கருமாதியில் கூட கலந்து கொள்வது இல்லையே என்கிற ஆதங்கம் என் மனதில் இருந்தது. இதற்கு வடிகாலாக “குட்டாம் பட்டியில் கலாட்டா - சென்னையில் கல்யாணம்” என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதினேன். இறுதியில் எந்தத் தலைவர்களுக்காக குட்டாம்பட்டிக் கல்யாணம் நின்றுபோனதோ, அந்த தலைவர்களின் மகனுக்கும், மகளுக்கும் திருமணம் நடப்பதாகவும், இதில் சர்வகட்சித் தலைவர்கள் கலந்து கொண்டதாகவும் கதையை முடித்தேன்.

திரு. செல்வராஜ் நான் கதை எழுத ஒரு தூண்டுகோல் என்றால், இப்பொழுது சென்னை பத்திரிக்கை தகவல் அலுவலகத்தில், தகவல் அதிகாரியாகப் பணிபுரியும் திரு. பாலசுப்பிரமணியம் என் இலக்கியப் பிரவேசம் முதல் கோணல் ஆகாமல் பார்த்துக் கொண்டவர். புதுடில்லியில் என்னுடன் பணியாற்றிய இவர், “வளவள வைக்கப்படப்பு” என்று 20 பக்கங்கள் வரை எழுதிய இந்தக் கதையை பத்து பக்கங்களாக்கி முத்து முத்தான எழுத்துக்களில் நகல் எடுத்துக் கொடுத்தார். ஆனந்த விகடனுக்கு அப்போதைய காலகட்டத்தில் இது வித்தியாசமான கதை. பாலசுப்பிரமணியம் கத்தரித்து அனுப்பியதை, சுத்திகரித்து “அங்கே கல்யாணம் இங்கே கலாட்டா” என்ற பெயரில் பிரசுரித்தது. இதைப் படித்த டில்லித் தமிழர்கள் “சிரித்து சிரித்து வயிறு புண்ணாயிற்று. ஒரே தமாஷ்” என்று சொன்னபோது நான் நொந்து போனேன். தமிழன் பொது வாழ்க்கைக்காக, குடும்ப வாழ்க்கையை எப்படி சிதைக்கிறான் என்கிற ஆதங்கத்தைச் சரியாகப் புரிய வைக்கவில்லையோ என்று நான் நினைத்தபோது, புதுடில்லியில் இந்தியன் எக்ஸ்பிரஸ் தலைமைச் செய்தியாளரும், தலைசிறந்த சிந்தனையாளருமான திரு. கே. சீனிவாசன், இந்தக் கதையில் உள்ள அரசியல் பொடி அபாரம் என்று சொல்லி என்னைப் பாராட்டினார். அதற்குப் பிறகுதான் எனக்கு தெம்பு வந்தது. மனிதர்களுக்காகக் கதையே தவிர, கதைக்காக மனிதர்கள் அல்ல என்ற இலக்கியக் கோட்பாடு வலுப்பெற்றது.

குறிப்பு: திரு. செல்வராஜ் சிறந்த எழுத்தாளர். தாமரையிலும், கணையாழியிலும் தரமான சிறுகதைகளை எழுதியவர். இப்போது, தொலைக்காட்சித் துறையில் இருந்து, “வாலண்டரி ரிடையர்மெண்ட்” எனப்படும் சுய ஓய்வில் விலகியவர். தனியார் தயாரிப்பு நிகழ்ச்சி அமைப்பு ஒன்றை நிறுவி, பல்வேறு தொலைக்காட்சி நிறுவனங்களில், கொடிகட்டிப் பறக்கிறார். வாழ்க்கையில் ரிஸ்க் எடுப்பவர்கள்தான் முன்னேற முடியும் என்பதற்கு இவர் ஒரு உதாரணம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=எனது_கதைகளின்_கதைகள்/001-022&oldid=1150087" இலிருந்து மீள்விக்கப்பட்டது