எனது கதைகளின் கதைகள்/004-022

விக்கிமூலம் இலிருந்து

4
கோலங்களான அலங்கோலங்கள்


கலெக்டர் வருகிறார்

நான் பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரியாக, செங்கை மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றியத்தில் பணியாற்றினேன். அந்தப் பகுதிக்கு கலெக்டர் வேட்டைக்கு வருவார். அவர் ஓய்வெடுக்கும் அறைக்கு வெளிப்பக்கம் நடக்கக்கூட விடமாட்டார்கள். கலெக்டருக்கு சுகக்கேடோ, துக்கக்கேடோ ஏற்படுமாம். கலெக்டர்கள் முன்பு தாசில்தார்களும், ஆணையர்களும் குழைகிற குழைவும், அவருக்கு இடைவெளி விட்டு, இவர்கள் நிற்பதும் பார்ப்பதற்கு வேடிக்கையாக இருக்கும். கலெக்டருக்கு மூன்று அடி தொலைவில் தாசில்தாரோ, ஆணையரோ இருப்பார்கள். கலெக்டர் தாம் நிற்கும் இடத்திலிருந்து ஒரு அடி முன்னால் நகர்ந்தால், தாசில்தார் ஒரு அடி மட்டுமே முன்னால் நகர்வார். பின்னால் நகர்ந்தாலும் இப்படியே. எப்படியும் மூன்றடி ‘கேப்’, பராமரிக்கப்படும். அந்தச் சமயத்தில் ஒரு பஞ்சாயத்து யூனியனில் யாரோ ஒரு அலுவலர், கலெக்டரிடம் கோழி வறுவலையும் அதன் இதர வகையறாக்களையும் கொடுத்திருக்கிறார். உடனே கலெக்டர். “இவ்வளவு பணம் ஏன் செலவழித்தாய்” என்று கேட்ட போது, அந்த ஆசாமி “அவ்வளவும் ஒரு ரூபாய்” என்றிருக்கிறார். கலெக்டர் ஜ.ஏ.எஸ். ஆச்சே. விடுவாரா? அப்படியானால். கோழி விலை ஒரு ரூபாய்க்கும் குறைவாக இருக்கலாம் என்று அனுமானித்து, முப்பது ரூபாயை அந்த ஆசாமியின் கையில் திணித்து தினமும் ஒரு ரூபாய்க்கு, ஒரு கோழி வாங்கி தனது வீட்டுக்கு அனுப்பும்படி கேட்டிருக்கிறார். நடந்ததோ, நடக்கவில்லையோ, நடந்ததாக கூறப்பட்ட செய்தி. இதை வைத்து, “கலெக்டர் வருகிறார்” என்ற தலைப்பில் குமுதத்தில் ஒரு சிறுகதை எழுதினேன். சொந்தப் பெயரில் எழுத அச்சப்பட்டு (ஏனென்றால் நானும் அரசு ஊழியனாச்சே!) கடல்மணி என்ற பெயரில் எழுதினேன். அப்போது சேலத்தில் கலெக்டர்கள் மகாநாடு நடைபெற்ற நேரம். அந்த மகாநாட்டில் பல தாசில்தார்கள், முப்பது குமுதங்களை வாங்கி, கலெக்டர்கள் கண்ணில் படும்படியாக போட்டதாக அப்போது டெபுடி கலெக்டராக இருந்த எனது நண்பர் தெரிவித்தார்.

குமுதத்தில் வெளியான எனது முதல் கதை இது. இதில் ஒரு ரூபாய் ஒரு கோழி என்று சொல்லி அசட்டுத்தனமாக மாட்டிக்கொண்ட கிளார்க்கிற்கு பண்டாரம் என்று பெயர் வைத்தேன். இந்த பண்டாரம் பிறகு பல சிறுகதைகளில் வந்தான். அவனும் அசட்டுத் தனத்திலிருந்து படிப்படியாக முன்னேறி பலரை ஆட்டி வைக்கும் சக்தியைப் பெற்றான். நான் அலுவலகங்களில் கேட்ட சங்கதிகளில் இந்த பண்டாரத்தை புகுத்தி கதைகளாக்கினேன். இவற்றில் முக்கால்வாசி நடந்தவை.

பண்டாரம் படுத்தும் பாடு

ஒரு அலுவலகத்தில் ஒரு குமாஸ்தா, ஆபீஸ் பணத்தை கையாடுவது வழக்கம். ஒரு நாள் திடீரென்று மேலதிகாரி பணத்தை சரிபார்க்க வந்தார். அந்த கிளார்க்கிடம், பணப் பெட்டியில் இருக்க வேண்டிய அளவிற்கு பணம் இல்லை. அதிகாரியோ, முன்னால் வந்து நின்று விட்டார். என்ன செய்வது என்று புரியாமல் விழித்த மோசடி ஆசாமிக்குள் ஒரு அதி மோசடி எண்ணம் உதயமானது. பெட்டியைத் திறந்து ரூபாயை அவர் முன்னால் கொட்டி “இந்தாருங்கள் சார் எண்ணுங்கள்” என்றார். அதிகாரி எண்ணிக்கொண்டிருக்கும் போதே, பாத்ரும் போய் வருவதாகச் சொல்லி பத்து நிமிடம் கழித்து வந்தார். பணத்தை எண்ணிய அதிகாரி திரும்பி வந்தவரிடம் கடு கடுப்பாக “பணம் குறைகிறதே” என்று கேட்ட போது, அந்த ஆசாமி “நான் வைத்து விட்டுப் போனேன். நீங்கள்தான் எடுத்திருப்பீர்கள்” என்று ஊரைக்கூட்டி சத்தம் போட்டான். மோசடியைக் கண்டுபிடிக்க வந்த அதிகாரி மோசடிக்காரனாக சித்தரிக்கப்பட்டார். அந்த ஆசாமி களவாணி என்று தெரிந்தாலும் மேலதிகாரிகளால் அவனை ஒன்றும் செய்ய முடியவில்லை. இனிமேல் பணத்தை சோதிக்கச் செல்பவர்கள் சம்பந்தப்பட்ட கேஷியரைத்தான் எண்ணச் சொல்ல வேண்டும். சோதிப்பவர் சும்மா இருக்க வேண்டுமே தவிர, காசு மீது கை வைக்க கூடாது என்ற ஒரு ஜி-ஒ (அரசாங்க உத்தரவாக) வெளியானது. அந்த ஆசாமி என் பேனாவில் பண்டாரமாக வடிவம் பெற்றான்.

நடந்தது.....

இதுபோல் கர்நாடக மாநிலத்தில், மத்திய அரசு விளம்பரத்துறை தலைமை அதிகாரியாக பெங்களூரில் இருந்தேன். அப்போது அங்குள்ள தலைமை கணக்காயர் அலுவலதகத்தில் ஒரு சம்பவம் நடந்தது. ஒரு ஆடிட்டரை மங்களுருக்கு ‘டூர்’ அனுப்பினார்கள். அவர் ஒரு மாதமாக அந்த ஊரிலிருந்து வரவில்லை. ஒரு வாரத்தில் வரவேண்டியவர். அதிகாரிகள் குழம்பிப்போய் நின்றபோது ஒரு நாள் அவர்கள் முன்னால் அந்த ஆடிட்டர் தோன்றினார். ஒரு வாரத்திற்குள் திரும்பாமல் ஒரு மாதத்திற்கு பிறகு வந்ததற்கு அவரிடம் எழுத்து மூலம் விளக்கம் கேட்கப்பட்டது. உடனே அந்த சூரர், தனக்கு, இலாகாவிலிருந்து ‘டூர் அட்வான்ஸ்’ எனப்படும் முன்பணம் அனுப்பப் படவில்லை என்றும் கையில் காசில்லாததால், ஒரு வார காலப் பணியை முடித்துவிட்டு, மங்களூருக்கும், பெங்களுருக்கும் இடையேயுள்ள முன்னூறு கிலோமீட்டர் துரத்தை 22-நாட்களாய் நடந்து வந்ததாக எழுதிக் கொடுத்தார். இதற்கு தனக்கும், ‘நடை அலவான்ஸ்’ கொடுக்க வேண்டும் என்றும் ஒரு சட்ட விதியையும் குறிப்பிட்டார். அதிகாரிகளால், அவரை ஒன்றும் செய்ய முடியவில்லை. அவர் கையை காலைப்பிடித்து, ஐந்து நாள் நடந்ததாகவும், எஞ்சிய நாட்களில் விடுமுறையில் இருந்ததாகவும், எழுதித்தரும்படி கேட்டுக் கொண்டார்கள். அவரும் போனால் போகட்டும் என்பதும் போல் பெரியமனது வைத்து எழுதிக் கொடுத்தார். இதை ‘நடந்தது’ என்ற தலைப்பில், கல்கியில் சிறுகதையாக எழுதினேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=எனது_கதைகளின்_கதைகள்/004-022&oldid=1150090" இலிருந்து மீள்விக்கப்பட்டது