எனது கதைகளின் கதைகள்/011-022

விக்கிமூலம் இலிருந்து

11
எனது களங்கள்


ஒரு அமாவாசை பெளர்ணமியாகிறது

ஒரு அலுவலகத்தில் அரசுப் பத்திரிகையின் உதவி ஆசிரியராக நான் பணியாற்றினேன். அதன் ஆசிரியர் நோயால் அவதிப்பட்டதால், கிட்டதட்ட நானே அந்தப் பத்திரிகையை நடத்திக் கொண்டு இருந்தேன். இங்கே ஒரு ஏழைப்பெண் கிளார்க்காக இருந்தாள். இவளுக்கு தமிழ் டைப்ரைட்டிங் தெரியும் அப்போதெல்லாம் நான் அதிகமாகச் சிறுகதைகள் எழுதுவதால், அந்தக் கதைகளை அவளிடமே டைப் அடிக்கக் கொடுப்பதுண்டு. கதைகளுக்கு சன்மானம் கிடைத்ததால், அவளுக்கும் ஒரு கதைக்கு பத்து ரூபாய் கொடுப்பேன். சில நாவல்களும் டைப் அடிக்கப்பட்டு, அவளுக்கு நூற்றுக்கணக்கிலும் கொடுத்திருக்கிறேன். இந்த டைப் வேலை பொதுவாக அலுவலகம் முடிந்த பிறகே நடைபெறும். அந்தப் பெண்ணும் அலுவலகப் பணியை சுறுசுறுப்பாகச் செய்வாள். அவள் ஏழை என்பதாலும், ஒரு பெரிய குடும்பத்தை சுமந்து கொண்டிருப்பதாகச் சொன்னதாலும், எனக்கு அவளிடம் ஒரு பரிவுணர்வு. எங்கள் இலாகா இயக்குனர் எனக்கு மிகவும் வேண்டியவர். சென்னைக்கு வந்திருந்த அவரிடம் வாதாடி, இந்தப் பெண்ணிற்கு இவள் தகுதிக்கு மீறிய ஒரு உயர்ந்த வேலையை இன்னொரு துறையில் வாங்கிக் கொடுத்தேன். ஒரு மாதத்திற்குப் பிறகு, ஒரு கடிதம் வந்தது. எங்கள் பத்திரிகையில் கட்டுரை எழுதிய ஒருவர், தனக்கு அன்பளிப்பு பணம் வரவில்லை என்று கடிதம் எழுதியிருந்தார். கேஷ் புக்கைப் பார்த்தால், அதில் அவருக்குக் கொடுக்கப்பட்டதாகக் கடிதம் எழுதியிருந்தது. அந்தப் பெண்ணைக் கூப்பிட்டு மிரட்டினேன். அந்த உத்தமி உண்மையை ஒப்புக் கொண்டாள். தில்லிக்கு இப்படி பணம் கொடுத்ததற்காக எழுதியக் கடிதத்தை கிழித்துப் போட்டுவிட்டு, டெஸ்பாட்ச் ரிஜிஸ்டரில் தில்லிக்குக் கடிதம் அனுப்பப்பட்டதாக எழுதியதாகவும், வேண்டுமென்றே மோசடி செய்ததாகவும் அவள் ஒப்புக் கொண்டாள். இந்த விவகாரத்தை நான் தில்லிக்குத் தெரிவித்திருந்தால், அவள் சின்னாபின்னமாகி இருப்பாள். எனக்கோ மனசு கேட்கவில்லை. பணம் அனுப்பாதவர்களுக்கெல்லாம் பணம் அனுப்பும்படி சொல்லி விவகாரத்தை விட்டுவிட்டேன். அப்போது ஏதாவது தப்பு செய்திருந்தால் இப்போதே சொல்லிவிடு. சரிக்கட்டி விடுகிறேன்” என்று கூட சொன்னேன். அவள் சத்தியம் செய்தாள்.

ஒருநாள் அலுவலக டெலிபோன் கட்டாகியது. விசாரித்தால், டெலியோன் பணம் கட்டப்படவில்லை என்று சொல்லப்பட்டது. கேஷ் புக்கைப் பார்த்தால் கட்டப்பட்டதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

அந்தப் பெண்ணை மீண்டும் கூப்பிட்டு விசாரித்தால், அந்த உத்தமியோ, அந்த ஒரே ஒரு தப்பைத் தவிர அடுத்த தப்பைச் செய்யவில்லை என்று சொல்லி விட்டாள். அவளிடம் நடந்ததை எழுதி வாங்கிக் கொண்டு வேறு வழியில்லாமல் நடந்தது அனைத்தையும் தில்லிக்கு எழுதினேன். இதற்குள் பழைய இயக்குனர் போய்விட்டார். புதிய மனிதர் உடனடியாக விசாரணைக்கு உத்தரவிடுவார் என்று நான் நினைத்தால், ஒருநாள் இன்னொரு அதிகாரி வந்து, நான் இனிமேல் கேஷ் விவகாரங்களைக் கையாளக் கூடாது என்று உத்தரவிட்டுவிட்டுப் போனார். என்னால் பொறுக்க முடியவில்லை. தில்லி மேல் அதிகாரிகளுக்கு கடிதம் மேல் கடிதம் எழுதிப் போட்டேன். அந்தப் பெண் சம்பந்தப்பட்ட கையாடலை விசாரித்து, என் பங்குபணி பற்றியும் கண்டறிந்து, தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடுமையாக எழுதிப் போட்டேன். பதில் வரவில்லை. இந்தப் பெண் தில்லிக்குச் சென்று விளையாடி விட்டாள் என்பது பின்னர் தெரிந்தது. நானும் ஒழிந்து போகட்டும் என்று விட்டு விட்டேன்.

ஒருநாள், திடீரென்று, ஒரு சர்தார்ஜி அதிகாரி என்முன் தோன்றினார். அந்தப் பெண் மீது, நான் எழுதிய புகாரை விசாரிக்க வந்ததாகப் பைலைக் காட்டினார். அவர், கேட்ட குறுக்குக் கேள்விகள், நான்தான் அவளை அப்படிக் கையாட வைத்தேன் என்பதுபோல் இருந்தது. நான் பலமாக ஆட்சேபித்தேன். உடனே அவர், ஒரு சிறு துண்டுக் காகிதத்தைக் காட்டினார். அதில் என் கைப்பட எழுதிய கணக்கு விவரம் இருந்தது. மொத்தம் 300 ரூபாய் இருக்கும். இதை அந்தப் பெண்ணிடம் நீங்கள் கொடுத்தது உண்டா என்று கேட்டார். எழுத்து என் எழுத்து. ஆனால் எப்போது கொடுத்தேன் என்பது தெரிவில்லை. நான் குழம்பினேன். இதைத் திருட்டுத்தனமாகக் கருதிய அந்த அதிகாரி, இன்னின்ன தேதிகளில் இவ்வளவு இவ்வளவு பணத்தை அந்தப் பெண் உங்களுக்குக் கொடுத்ததாகவும், அது அலுவலகப் பணம் என்றும், ஆகையால் கையாடல் செய்ய வைத்தது நீங்கள்தான் என்று அவள் விளக்கம் அளித்திருக்கிறாள் என்றும் விளக்கினார். பிறகு இதற்கு பதில் சொல்லுங்கள் என்றார் கம்பீரமாக, நான் பதறியடித்து, அந்தக் காகிதத்தைப் பார்த்தேன். அதில் “தினமணிக்கதிர்”, “குங்குமம்” போன்ற வார்த்தைகள் இருந்தன. திடீரென்று எனக்கு நினைவுக்கு வந்தது. அந்தப் பெண் டைப் அடித்ததற்கு அதிகமாகப் பணம் வாங்கி இருப்பதாக என் மனைவி என்னிடம் சொன்னதை, நான் அந்தப் பெண்ணிடம் சொன்னேன். உடனே அவள் “இந்தந்தக் கதைகள் இந்தந்த பத்தரிகைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன, நீங்கள் இவ்வளவு பணம் தரவேண்டும். உங்களுக்கு ஞாபகமறதி அதிகம். ஆகையால் இதில் கையெழுத்துப் போடுங்கள்” என்று கேட்க, நானும் அப்பாவித்தனமாகப் போட்டுவிட்டேன். எனக்குப் பற்றி எரிந்தது. ஆனாலும் அந்த அதிகாரியிடம் “குமுதம்” “தினமணிக்கதிர்” என்ற வார்த்தைகள் வந்திருந்தால், அது என்னவாக இருக்கும் என்று திருப்பிக் கேட்டேன். பிறகு நிலைமையை விளக்கினேன். அந்த அதிகாரியும் புரிந்து கொண்டார். ஒருமணி நேரத்திற்குப் பிறகு, அந்தப் பெண்ணிடம் பேசியிருப்பார் போலிருக்கிறது. எனக்கு டெலிபோன் செய்தார். அந்த பெண் என் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க, தயாராக இருப்பதாகவும், என்னால் காலை நீட்ட முடியுமா என்றும் கேட்டார். நான் அவள் முகத்திலேயே விழிக்க விரும்பவில்லை என்று சொல்லிவிட்டேன். அவள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நான் இந்த விவரங்களையெல்லாம் மேல் அதிகாரிகளுக்கு எழுதியும், அது கிணற்றுக்குள் விழுந்த கல்லாகியது. பிறகு விசாரித்துப் பார்த்ததில் அந்த சர்தார்ஜி அதிகாரி சென்னைக்கு மாற்றப்பட்டார் என்றும், பதவியில் சேருவதற்கு முன்பு, சென்னையில் வீடு பார்ப்பதற்காக வந்தார் என்றும், அதற்கு இந்த விசாரணையை ஒரு சாக்காக வைத்துக் கொண்டு சர்க்கார் செலவில் ஓடி வந்திருக்கிறார் என்பதும், தெரிய வந்தது. இப்படிப் பட்டவர்கள்தான் இந்த நாட்டிலே அதிகாரிகள். ஈரத்துணியைப் போட்டு கழுத்தறுப்பவர்கள்தான் அலுவலர்கள். இப்படிச் சொல்வதால், எல்லாரையும் இப்படி சொல்ல மாட்டேன். ஆனால் இந்த பரந்து விரிந்த பாரதப் பெருநாட்டில், ஒரு தாலுகாவில் ஒரு காவல் நிலையம், ஒரு இன்கம்டாக்ஸ் ஆபீஸ் முழுமையாக லஞ்சப்பிடிப்பிலிருந்து விலகியிருக்கிறது என்று நம்மால் சொல்ல முடியுமா? அப்படிச் சொல்ல முடியாத வரை இப்படி ஒட்டுமொத்தமாகச் சொல்வதிலும் தவறில்லை. எப்படியோ, இந்தப் பின்னணியை வைத்து ஒரு குறுநாவல் எழுதினேன். குங்குமத்தில் பிரசுரமாயிற்று.

தர்மவான் தோற்றாலும் தர்மம் ஜெயிக்கும்

நான் களவிளம்பரத்துறை அதாவது பீல்டு பப்ளிசிட்டி ஆபீசராக இருந்தேன். இது ஒரு வேடிக்கையான டிபார்ட்மென்ட். ஊர்ஊராக திரைப்படம் போடுவது, பப்ளிசிட்டி ஆபீசர் வேலை. அவருக்கு ஒரு ஜீப் உண்டு. ஆனால் இப்படி ஏழெட்டு பப்ளிசிட்டி ஆபீசர்களை மேற்பார்வையிடும் தலைமை அதிகாரிக்கு ஜீப் போகட்டும் - ஒரு சைக்கிள் கூட கிடையாது. ஆனால், இந்த தலைமை அதிகாரி பப்ளிசிட்டி ஆபீசர் ஜீப்பை எடுத்துக் கொண்டு கண்டபடி சுற்றுவார். மாமா வீட்டிற்குப் போவார். மச்சினி சடங்கான விழாவிற்கு குடும்பத்தோடு போவார். தான் மட்டும் போனால் போதாது என்று தன் தம்பியையும் தம்பி மனைவியையும் தனியாக அனுப்பி வைப்பார். இவற்றிற்கெல்லாம் கணக்கு பப்ளிசிட்டி ஆபீசர் எழுதவேண்டும். பொதுவாக இந்த பப்ளிசிட்டி அதிகாரிகள் தலைமை அதிகாரிக்கு ஜீப் பைக் கொடுத்துவிட்ட தைரியத்தில் தங்கள் பங்குக்கும் ஒரு சுற்று சுற்றுவார்கள். இவர்களுக்கு ஒரு சுற்று என்றால், இவர்களது பெண்டாட்டிகளுக்கு ஒன்பது சுற்று. இந்த ஜீப் போகின்ற கிலோமீட்டர்கள் பல கிராமங்களுக்குப் போய் திரைப்படங்கள் காட்டப்பட்டதாக (லாக்புக்கில்) எழுதப்பட்டிருக்கும். சென்னையில் பப்ளிசிட்டி ஆபீசராகச் சேர்ந்த நான், என் குடும்பத்தினரை எந்தக் காரணத்தைக் கொண்டும் ஜீப்பில் ஏற்றியதில்லை. இவ்வளவுக்கும் புதுப்பெண்டாட்டி; அரசு வண்டிகளை அத்தை மாமி வேலைக்கு பயன்படுத்துபவர்கள் சமூக விரோதிகள் என்று கருதுபவன் நான். ஆகையால் ஒரு மூடத்தனமான அக்கவுன்டன்ட் ரிஜினல் ஆபீசர் மாமியின் பிரிட்ஜை ரிப்பேர் செய்ய ஜீப் வேண்டும் என்று கைப்பட எழுதிக் கொடுத்த போதும், நான் ஜீப்பைக் கொடுக்க மறுத்து விட்டேன். இதனால், தலைமை அதிகாரிக்கும் எனக்கும் வாய்ச்சண்டையும், பேப்பர் சண்டையும் நடைபெற்றது. என்னை அந்தமானுக்கு மாற்றுவது என்று தில்லி முடிவு செய்து விட்டது. நான் நினைத்திருந்தால், அந்த அக்கவுன்டன்ட் கைப்பட எழுதிய கடிதத்தை தில்லிக்கு அனுப்பி அவரையும், அந்த ரிஜினல் ஆபீசரையும் சின்னாபின்னமாக்கியிருக்கலாம். ஆனால் அர்ஜுனனைப் போல் நான் “திவ்ய” அஸ்திரங்களைப் பிரயோகப்படுத்த விரும்பவில்லை. ஆனாலும் போராட்டத்தை விடவில்லை. விளைவு நான் எச்சரிக்கப்பட்டேன். அதேசமயம் நான் எதற்காக சண்டை போட்டேன் என்பதைப் புரிந்து கொண்ட, தில்லி மேலதிகாரிகள், அரசு வண்டிகளைத் தவறாகப் பயன்படுத்தாமல் இருப்பதற்கு, சில கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்தார்கள். இந்தப் போரில் நான் தோற்றாலும், நான் சுட்டிக்காட்டிய கொள்கை, கொள்கை அளவிலாவது ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஒரு கூட்டத்தில் திரு மா.பொ.சிவஞானம், தர்மவரன் தோற்றாலும் தர்மம் ஜெயிக்கும் என்று பேசிய பேச்சு, நினைவுக்கு வந்தது. தர்மம் ஜெயிக்கும் என்ற தலைப்பில், குமுதத்தில் ஒரு சிறுகதை வெளியாயிற்று. எமர்ஜென்ஸி சென்சார் இருந்த நேரம். சம்பந்தப்பட்ட சென்சார் அதிகாரி, எனது தலைமை அதிகாரிக்கு விரோதி என்பதால், இந்தக் கதையை பிரசுரிக்க அனுமதித்து விட்டார். ஆனால் இந்த சென்சார் அதிகாரியே, பிறகு எனக்கு தலைமை அதிகாரியாக வந்தார். ராமராவண யுத்தம் முடிந்து, மகாபாரத யுத்தம் துவங்கியது.

இந்த அனுபவங்களை வைத்து, பல கதைகளை எழுதியுள்ளேன்.

ஒரு மணி நேர அறுவை

இப்படி அதிகார வர்க்கத்தோடு நான் அடிக்கடி போராடினாலும், பப்ளிசிட்டி ஆபிசர் என்ற முறையில் எனக்கு அலாதியான அனுபவங்கள் கிடைத்தன. ஒரு தடவை ஒரு ஊரில் மேல்நிலை தண்ணீர் தொட்டியை மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் அப்போதைய அமைச்சர் காளிமுத்து திறந்து வைக்க வேண்டும். இதற்கு விழா எடுத்தார்கள். இதில் நானும் ஒரு பேச்சாளர். திரு. காளிமுத்துக்கு என் எழுத்து மீது மிகுந்த மரியாதை உண்டு. இதே போல், மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த திரு.யூ.சுப்ரமணியத்திற்கும் என் மீது கொள்ளைப் பிரியம், (ஆனாலும் அவருக்கு அரசு வட்டாரத்தில் ‘மிளகாய்’ என்று பெயர்). நாங்கள் மூவரும் இந்த விழாவிற்குப் போயிருந்த போது பஞ்சாயத்து யூனியன் ஆணையாளர் என் காதில் கிசுகிசுத்தார். அமைச்சர் திறப்பதாக உள்ள மேல்நிலை தண்ணீர் தொட்டி சரியாக இயங்கவில்லை என்றும், இப்போது அதை ரிப்பேர் செய்து கொண்டிருக்கிறார்கள் என்றும், அதற்கு ஒரு மணி நேரம் ஆகும் என்றும், அதுவரைக்கும் நான் மேடையில் பேசிக் கொண்டே இருக்க வேண்டும் என்றும் கையெடுத்துக் கும்பிட்டார். விழாத் துவங்கியதும், நான் பேசத்துவங்கினேன். குடும்ப நலம், நாட்டு நலம், மொழிநலம் என்ற சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் பேசிக் கொண்டே போனேன். அமைச்சர் கடிகாரத்தைப் பார்த்தார் உடனே அவரைப் பற்றி ஒரு கால் மணி நேரம் துதி பாடினேன். உடனே கலெக்டர் கடிகாரத்தைப் பார்த்தார். இவரைப் பற்றி ஒரு கால் மணி நேரம் துதித்தேன். இப்படி அவரைப் பற்றியும், இவரைப் பற்றியும் மாறிமாறி புகழ்ந்துரைத்து முக்கால் மணி நேரத்தைப் போக்கிவிட்டேன். அதற்கு ஆணையாளரும் தண்ணீர் தொட்டி ரெடியாகிவிட்டது என்று தலையசைத்தார். இதை வைத்து “ஒரு மணி நேர அறுவை” என்ற தலைப்பில் ஆனந்த விகடனில் ஒரு சிறுகதை வெளியாகினது.

கிழவிகளைப் பிடித்து

ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்களுக்கு எத்தனையோ வேலைகள்; பல ஆதாயமானவை. ஒரு சில அப்படி அல்ல. குடும்பக் கட்டுப்பாட்டுக்கு ஆள் பிடிக்க வேண்டியதும், முதியவர்களின் கண்பிறை நோயையை குணப்படுத்துவதற்கு முகாம் போடுவதும் அவர்களை முகம் சுழிக்கச் செய்யும் வேலைகள். ஒரு ஊராட்சி ஒன்றியத்தில், இப்படியாக, கண்நோய் சிகிச்சைக்கு பல கிழவர்கள் கிழவிகள் வைக்கப்பட்டிருந்தார்கள். இவர்களுக்கு சுகமாகிறதா என்பது முக்கியம் அல்ல. எத்தனை பேருக்கு சிகிச்சை வழங்கப்பட்டது என்ற புள்ளி விவரமே முக்கியம். அந்தச் சமயத்தின் அந்த ஒன்றியத்திற்கு நான் திரைப்பட பிரிவுடன் காம்ப் போயிருந்ததேன். இந்த முகாமில் ஒரு கிழவி காணாமல் போய் விட்டாள். பலருக்கு அவளை அடையாளம் தெரியவில்லை. ஆகையால் ஆணையாளர் ஜீப்பும், எனது அம்பாசிடர் காரும் பறந்தன. அந்த வட்டாரத்தில் எந்தெந்த கிழவிகள் எல்லாம் தனியாக நடந்து கொண்டிருந்தார்களோ அவர்களையெல்லாம் காரில் தூக்கிப் போட்டுக் கொண்டு முகாமிற்கு வந்தோம். அவர்கள் கூப்பாடு போட்டார்கள். நாங்கள் விடவில்லை. புள்ளி விவரம் கூடியது. ஆனால் தப்பித்த கிழவி கிடைக்கவில்லை. இதை வைத்து ஆனந்தவிகடனில் ஒரு சிறுகதை எழுதினேன்.

இல்லந்தோறும் இதயங்கள்

நெருக்கடி காலத்தில் தேனும் பாலும் ஓடியதாக மக்களிடம் சொல்ல வேண்டியது எங்களுடைய பொறுப்பு. தில்லியிலிருந்து ஒரு நாற்பது பேர் கொண்ட நாட்டியக் குழு சென்னைக்கு வந்தது ஒவ்வொரு பெண்ணுக்கும், தான் இந்திராகாந்தி என்ற நினைப்பு. (ஆனால் நான் அறிந்த அளவில் அன்னை இந்திரா எந்தவிதமான பந்தாவும் இல்லாத தலைவர்) இந்தக்குழுவுக்கு, குன்றத்தூர் பக்கம் ஒரு நாட்டிய நிகழ்ச்சி நடத்த ஏற்பாடாகியிருந்தது. எல்லாம் 20 அம்ச திட்டத்தைப் பற்றித்தான். நான் முன்னதாகவே போய் விட்டேன். நாற்பது அடி அகல மேடை போடப்பட்டது. அந்தப் பகுதி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் திரு. அந்தோணி எனது பழைய பஞ்சாயத்து சகா. அவரும் நானும் இந்த தில்லிக் கலைஞர்கள் தங்கியிருந்த இடத்திற்குப் போனோம். அங்கே அவர்கள் பரிதாபமாகப் படுத்துக்கிடந்தார்கள். உடனே நான் அவர்களுக்கு தக்க வசதி செய்து கொடுக்கவில்லை என்ற காரணம் காட்டி, எனது நண்பர் அந்தோணியை சத்தம்போட்டு அதட்டினேன். உடனே தூங்கிக் கொண்டிருந்த ஒரு “மூதேவி” எழுந்தாள் எங்கள் பேச்சு, அவள் தூக்கத்தைக் கெடுத்துவிட்டதாகவும், இந்திரா காந்தியிடம் புகார் செய்யப்போவதாகவும் அதட்டினாள். நான் எவ்வளவோ சொல்லிப் பார்த்ததேன். இவ்வளவுக்கும் அவள் தமிழ்நாட்டுக்காரி. “அம்மா உங்களுடைய வசதிக்காகத்தான் பிடிஓ சார்கிட்டே சண்டை போடுகிறேன்” என்று பரிதாபமாச் சொன்னேன். என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். ஆனாலும் அவள் கேட்கவில்லை. கண்டபடி திட்டினாள். உடனே நானும் “சரிதான் போடி” என்று, சொல்லிவிட்டு ஆணையாளருடன் போய்விட்டேன். ஒரு மணி நேரம் கழித்துப் பார்த்தால், மேக்கப் அறையில் ஒரே கலாட்டா. நான் அந்தப் பெண்ணிடம் மன்னிப்புக் கேட்கவில்லை என்றால், கலைநிகழ்ச்சி நடக்காது என்பதோடு, விவகாரம் அன்னை இந்திரா காந்தியிடம் போகும் என்றார்கள். என்னுடைய மேல் அதிகாரி என்னை மன்னிப்புக் கேட்கச் சொன்னார். நான் மறுத்துவிட்டேன். உடனே அவர் என் சார்பில் மன்னிப்புக் கேட்டார். உடனே அந்த மன்னிப்புக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என்று நானும் உரக்கக் கத்தினேன். எப்படியோ கலை நிகழ்ச்சி கலைக்கப்படவில்லை.

இந்த நாட்டியக்குழு நங்கையரை கூட்டிக் கொண்டு, உத்திரமேரூர் போனேன். இதற்குள் அந்தப் பெண்களுக்கு என்மேல் ஒரு பிடிப்பு ஏற்பட்டுவிட்டது. அவர்களது வசதிகளை நான் நல்ல படியாகக் கவனித்துக் கொண்டதும், நான் வெளிப்படையாக பேசக்கூடியவன் என்பதும், அவர்களுக்குப் பிடித்து விட்டது. உத்திரமேரூரில் இவர்களுடைய பிரமாதமான நாட்டியம் நடந்து கொண்டிருந்தபோது உள்ளுர் முனியாண்டி ஹோட்டல் பக்கம் ஒரு சத்தம் கேட்டது.

மதுரை மணிக்குறவன் மாண்ட கதை சொல்லுகிறேன்’ என்று பாட்டு கேட்டது. ஒரு மைக் முன்னால் ஒருவர் மேளம் அடித்துப் பாட, இரண்டு, மூன்று ஆண்களும் பெண்களும் முன்னும் பின்னுமாக ஆடினார்கள். அற்புதமான குரல்; அதிசயமான ஆட்டம். எங்கள் நாட்டியத்தைப் பார்த்த எல்லா மக்களும் மணிக்குறவன் பக்கம் போய்விட்டார்கள். எங்கள் நாற்காலிகள் காலியாகக் கிடந்தன. இறுதியில் கலை நிகழ்ச்சியை மூட்டை கட்டிவிட்டு, நாங்களும் அங்கே போனோம், அப்போது ஒரு பாட்டு “டி.வி.எஸ்.டிரைவர் தன்னை எட்ட நின்னு வெட்டுனானே” என்று கேட்டது. நிகழ்ச்சி முடிந்ததும், இந்தப் பெண்களின் மத்தியில், மணிக்குறவனிடம் ‘ஒரு வீரன், “எதற்காக ஒருவனை எட்ட நின்னுவெட்ட வேண்டும்” என்று கேட்டேன். உடனே அந்த ‘ஆசாமி அறுவா அம்புட்டு நீளமுங்க’ என்றார். நான் இந்தப் பெண்களிடம் ஒரு லெக்சர் அடித்தேன். கலை என்பது அடித்தளத்தில் இருந்து வந்தால்தான், அற்புதமாக வரும் என்று சொன்னேன். அவர்கள் புரிந்து கொண்டார்கள். கர்வபங்கப்பட்டது போல் லேசாக நமுட்டுச் சிரிப்பு சிரித்தார்கள். இதை வைத்தும் ஒரு கதை எழுதினேன் என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை. இந்த கூத்துக் கலைஞன் மேலே குறிப்பிட்ட நாவலில் ஒரு முக்கிய பாத்திர் ஆனார்.

புதிய திரிபுரங்கள்

அலுவலக சம்பந்தமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுப் பயணம் செய்து கொண்டிருந்தேன். அங்கே உள்ளவர்கள், சில எஸ்டேட் முதலாளிகளின் பேச்சும் போக்கும் கிட்டத்தட்ட திரைப்படங்களில் வருவது போலவே இருந்தன. அரசை ஏமாற்றி ஆயிரககணக்கான ஏக்கரை 99 ஆண்டு காலத்திற்கு லீஸ் என்ற பெயரில் வைத்துக் கொண்டு, தொழிலாளர்களை இவர்கள் படுத்தும்பாடு பெரும்பாடு. திரும்பி வரும் போது ஒரு எஸ்டேட்டில் ஒரு மரத்தில் ஒரு தொழிலாளியின் பிணம் தொங்கிக் கொண்டிருந்தது. அக்கம்பக்கம் விசாரித்ததில், அவர் அடித்துக் கொல்லப்பட்டதாக முணுமுணுக்கப்பட்டது. இதற்குள் ஒரு கார் வந்து நின்றது. அதில் ஒரு கான்ஸ்டபிள் கம்பீரமாக வந்து இறங்கினார். கார், எஸ்டேட் முதலாளியுடையது ‘அந்தக் காரில் வந்து இறங்கும் போலீஸ்காரரிடம் எப்படி நியாயத்தை எதிர்பார்க்க முடியும்? அப்படியே அவர் நியாயமாக நடந்து கொண்டாலும் மக்கள் எப்படி நம்புவார்கள்? இதேபோல் தமிழக மின்சார வாரிய காட்டுப்பகுதிகளில் ஒப்பந்தத் தொழிலாளர்கள், கோணிகளையே கதவுகளாகக் கொண்ட குடிசைகளில் சேரும் சக்தியுமான கரைகளில் வாழ்வதைப் பார்த்தேன். இவர்களைப் பற்றி நிரந்தரமான தொழிலாளர்கள் கவலைப்படுவதில்லை. இந்த இரண்டு பின்னணியையும் வைத்து “புதிய திரிபுரங்கள்” என்ற குறநாவலை எழுதினேன். ‘நாகமணி’ என்ற ஒரு அருமையான பத்திரிகை. இதன் ஆசிரியர் திரு.குமாரசுவாமி, பிரபல மருத்துவ நிபுணர். ஓய்வு என்பதே இல்லாதவர். ஆனாலும், சமூக பிரச்சனை காரணமாக நாகமணி என்ற பத்திரிகையைத் துவக்கினார். இந்தப் ‘புதிய திரிபுரங்கள்’ இந்தப் பத்திரிகையில் வந்தது. ‘நாகமணி’ நல்ல பத்திரிகை என்பதால் அதுவும் விரைவில் மூடப்பட்டது. எனக்குப் பிடித்த குறுநாவல்களில் இது ஒன்று.

ஊருக்குள் ஒரு புரட்சி

செய்தி - விளம்பர அதிகாரியாக இருக்கும்போது நமது ஐந்தாண்டு திட்டங்கள் எப்படி சீரழிந்து செயல் இழந்து அமல் செய்யப்பட்டன என்பதை நேரிடையாகக் கண்டேன். பணக்காரர்கள், ஏழைகள் பெயரில் மாடுகளை வாங்கி பயன்படுத்திக் கொள்வதையும் சமபந்தி போஜனம் என்ற பெயரில் அரிஜன மக்களுக்கு சாப்பாடு போட்டே அவர்களைச் சாப்பிட்டதையும் கண்டேன். பெரும்பாலான வங்கிக் கடன்கள், உதவிப் பொருட்களை எல்லாம், ஏழைகள் பெயரில் பணக்காரர்கள் அமுக்கிக் கொள்வார்கள். மாவட்ட அதிகாரிகளும், ஜாதிக்கார கிராமங்களுக்குப் போய் பண்ணையாளர்கள் வீட்டில் கோழி வகையாறாக்களைத் தின்றுவிட்டுப் போய்விடுவார்களே தவிர, சேரிக்கார காலணிகளுக்குப் போகமாட்டார்கள். பொதுவாக, தாசில்தார், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர், ஊராட்சி ஒன்றியத் தலைவர், சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ஆகியோர் ஒன்றாகச் சேர்ந்துக் கொண்டு ஊர்களை அடித்து உலையில் போடுவார்கள். இவர்களோடு தனியார் பள்ளிக்கூட மானேஜரும் சேர்ந்து கொள்வார். கிராம நிர்வாக அதிகாரிகளும் இவர்களது கட்சி. இந்தப் பின்னணியில் ஏழை மக்களால் எதுவுமே செய்யமுடியாது. இந்த அம்சங்களை எல்லாம் வைத்து ஒரு குறுநாவல் எழுதினேன். ‘கல்பனா’ என்ற மாத நாவல் பத்திரிகை எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு அடுத்தபடியாக சு.சமுத்திரம் என்ற பெயரில் ஒரு நாவல் வரவேண்டும் என்று நியூஸ் செஞ்சுரி புக் நிறுவனத்தின் தலைவரும், மார்க்சிய அறிஞருமான திரு. ராதாகிருஷ்ணனனும், செயலாளர் குசேனும் கேட்டு கொண்டதற்கு இணங்க இந்தக் குறுநாவலை எழுதினேன். ஆனால் பத்திரிகை ஆசிரியர் ஜெயகாந்தன் அடுத்த ஆறு மாதங்களுக்கான எழுத்தாளர் பட்டியலைப் போட்டு விளம்பரம் செய்துவிட்டார். அசோகமித்திரன், ச.கந்தசாமி போன்ற எழுத்தாளர்களின் பட்டியல் அது. அந்த அறுவர் பட்டியலில் என் பெயர் இடம் பெறவில்லை. ஆனால் நான் மனம் தளரவில்லை. அதையே பெரிய நாவலாக எழுதப் போனேன். இந்தச் சமயத்தில் தேவி பத்திரிகையில் ஒரு தொடர் கதை கேட்டார்கள். இதே நாவலை “ஊருக்குள் ஒரு புரட்சி” என்ற பெயரில் தேவியில் எழுதினேன். இந்த நூலுக்கு தமிழக அரசின் பரிசு கிடைத்தது. இதைத் திரைப்படமாகவும் தயாரித்தார்கள். உருப்படவில்லை. ஆனாலும் இந்திய அரசின் செய்தி விளம்பரத் துறையில் இந்தப் படம் 16 எம் எம் களாக ஆங்காங்கே திரையிடப்படுகின்றது.

இந்த நாவல் சம்பந்தப்பட்ட திரைப்பட அனுபவத்தையும், உங்களுடன் பகிர்ந்தால்தான் எனக்கு சுமை குறையும். ‘ஒரு இந்தியக் கிராமத்தின் கனவு’ என்ற திரைப்படத்தை தயாரித்து, விருது பெற்ற திருவாளர்கள் தேசிகன், வரதராஜன் ஆகியோர் இந்தப் படத்தையும் தயாரித்தார்கள். பணம் செலவாகிறது என்று அழுதுகொண்டே இந்தப் படத்தைத் தயாரித்தார்கள். டைரக்டராக ஆசை பட்ட ஒருவர் இவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தார். கொடுத்தது கடன். ஆனாலும் இவர்கள் அதை இனாமாகக் கருதிவிட்டார்கள். படமும் வெளியாகி, சென்னையில் சோவியத் தூதரகத்தில் இது காட்டப்பட்டது. படத்திற்கு பலரின் பாராட்டுகள் கிடைத்தாலும் அது என்னமோ டப்பாவை விட்டு நகரவில்லை. இதற்குப் பிறகு, இரண்டு நண்பர்களும், எனக்குத் தெரியாமல் செய்தி விளம்பரத்துறையில் இதை விற்பதற்கு ஏற்பாடு செய்வதாகக் கேள்விப்பட்டேன். உடனே அவர்களை டெலிபோனில் கூப்பிட்டு வரவழைத்தேன். என்னுடைய கணக்கை செட்டில் செய்யும் முன்னால் படப் பிரதிகளை வாங்கக்கூடாது என்று புதுதில்லியில் உள்ள செய்தி விளம்பரத்துறைக்கு எழுதப் போவதாக மிரட்டினேன். அப்படி நான் எழுதியிருந்தால் படப் பிரதிகள் விற்பனையாகாது என்பது அவர்களுக்கும் தெரியும். கையெடுத்துக் கும்பிட்டார்கள். செய்தி விளம்பரத் துறை படத்தை வாங்கிய உடன், எனக்கு பாக்கித் தொகையில் ஒரு பகுதியைக் கொடுப்பதாக எழுதிக் கொடுக்க முன்வந்தார்கள். ஏமாளியான நான் அவர்கள் விசுவாமானவர்கள் என்று கருதி “எழுத வேண்டியதில்லை உங்களை நம்புகிறேன் பிரதிகள் விற்றதும் சொன்னபடி பணத்தைக் கொடுங்கள்” என்று சொன்னேன். ஆனால் அந்தப் பேர்வழிகளோ எனக்குத் தெரியாமலே படத்தை விற்று பணத்தையும் வாங்கிக் கொண்டார்கள். நீண்ட நாளுக்குப் பிறகு இதைக் கேள்விப்பட்ட நான் மீண்டும் அவர்களுக்கு டெலிபோன் செய்தால், கோர்ட்டுக்குப் போ என்று சொல்லி விட்டார்கள். கோர்ட்டுக்கும் போயிருக்கிறோம்.

குறிப்பு:

1. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத் தலைவரும், என் குடும்ப நண்பருமான தோழர் செந்தில்நாதன் இந்த வழக்கை எங்களுக்காக வாதாடினார். வெற்றி கிடைத்தது. சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்களிடம் இருந்து 10,000 ரூபாய் வந்தது.

2. “ஊருக்குள் ஒரு புரட்சி”, பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் பாடநூலாய் இருந்ததாய் கேள்வி. கேள்வி என்று சொல்வதற்குக் காரணம் சம்பந்தப்பட்ட பல்கலைக் கழகங்கள் ஒரு எழுத்தாளரின் படைப்புகள் பாடநூலாக வைக்கப்படுவதை அவருக்கு தெரியப் படுத்துவதே கிடையாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=எனது_கதைகளின்_கதைகள்/011-022&oldid=1150097" இலிருந்து மீள்விக்கப்பட்டது