எனது கதைகளின் கதைகள்/013-022
யமுனைக் கரையில்...
‘நண்பர் வட்டத்தின்’ அக்டோபர்-நவம்பர் 90 இதழில் என்னைப்பற்றி ஆசிரியர் எழுதிய குறிப்பு, என் மனதை நெகிழச் செய்தது. பல்வேறு தோழர்கள், குறிப்பாக எழுத்தாளர்களும், எனக்குப் பல கடிதங்கள் எழுதினார்கள். ஏற்கனவே ஐந்தாண்டுகளுக்கு முன்பு எனக்கு ஏற்பட்ட தொலைக்காட்சி அனுபவத்தை வைத்து, ‘சத்திய ஆவேசம்’ என்ற நாவலை எழுதினேன். இதேபோல், ஒருவேளை இதன் இரண்டாவது பாகமாக ஒரு நல்ல நாவல் வரலாம். ஒரு எழுத்தாளருக்கு ஏற்படும் சோதனை படைப்பிலக்கியத்தில் சாதனையானால் அதுவும் நல்லதற்கே. என் அனுபவங்களை வைத்து அப்படிப்பட்ட சாதனையை நிகழ்த்த முடியுமா என்பதை காலம்தான் பதில் சொல்ல முடியும்.
இதற்கிடையே இரண்டு மாதங்களுக்கு முன்பு தில்லியில் ஒரு மாத காலம் தங்கியிருந்த அனுபவத்தைப் பற்றி நான்கு சிறுகதைகளை எழுதினேன். அந்த அனுபவத்தை நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
பயிற்சியோ-பயிற்சி
மத்திய-மாநில அரசுகளில் அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் பயிற்சி வழங்குவதற்கென்று பல உருப்படாத அமைப்புக்கள் உண்டு. அதில் ஒன்று புதுதில்லியில் உள்ள ஒரு அமைப்பு. இங்கே இருப்பவர்கள் வாழ்வதற்காக எங்கெல்லாமோ பணியாற்றுபவர்கள், பயிற்சிக்காக ‘சாகடிக்கப்படுவார்கள்’. யாருக்குமே தெரியாது. ஏதோ ஒரு கிளார்க் போடுகிற ‘நோட்டில்’ செக்ரட்டரி கையெழுத்துப் போட்டு அனுப்பி விடுவார் - லாட்டரி குலுக்கல் மாதிரி. ஆனால் லாட்டரியோ அதிர்ஷ்ட சீட்டுக்கள். பயிற்சியோ துரதிருஷ்ட சீட்டுக்கள். தற்காலிகமாக சிலரை கழித்துக்கட்டவும், சிலர் புதுதில்லி வேலைகளைப் புதுப்பித்துக் கொள்ளவும், இத்தகைய பயிற்சி உதவுவதுண்டு. இந்த வகையில் நானும், பயிற்சிக்காக அனுப்பப்பட்டேன். ஏற்கனவே இந்த அமைப்பில் மூன்று தடவை “பயிற்சி” பெற்றவன் நான். நான்காவது தடவையும் என்னை அனுப்பினார்கள். வெறுப்போடு சென்ற நான் பயிற்சி அதிகாரிகளின் பிரதிநிதியாக செயல்பட்டேன். அந்த வகையில் எனக்கு மகிழ்ச்சி. ஆனால் பயிற்சிக்கு வந்த அனைவருமே பயிற்சியாளர்களை பயிற்சிவிக்கும் தகுதியும் வயதும் பெற்றவர்கள். அந்த ‘ஏட்டுச்சுரைக்காய்கள்’ பேசும் போது தூங்குவதைத் தவிர வேறு வழியில்லை. என்றாலும், அரசு அலுவலகங்களில், துருப்பிடித்துக் கிடந்த சொந்த ‘பைல்களைத்’ துடைப்பதற்கு எங்களைப் போன்றவர்களுக்கு பயிற்சி என்ற பெயரில் ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. இந்தப் பயிற்சி என்பது எப்படி நாட்டிற்கோ அல்லது சம்பந்தப்பட்டவர்களின் வீட்டிற்கோ உதவாதது என்பதுமல்லாமல், விவஸ்தை கெட்டது என்பதை ஒரு ‘சட்டயர்’ சிறுகதையாய் எழுதியிருக்கிறேன். பயிற்சிக்கு சென்ற ஒரு தமிழக அதிகாரி, பயிற்சி நிறுவன இயக்குனரைப் பார்த்து “28ம் தேதியே பயிற்சி முடிய வேண்டும்” என்கிறார். நிறுவனத்தலைவரோ, 31ம் தேதிதான் முடியும் என்கிறார். இருவருக்குமிடையே வாக்குவாதம், கடைசியில் நிறுவன இயக்குனர் 28ம் தேதி எதற்காக பயிற்சி முடிய வேண்டும் என்று கேட்க, அந்த அதிகாரி, 28ம் தேதி முடிந்தால்தான், நான் உடனே தில்லியிலிருந்து சென்னைக்குப் புறப்பட்டு, 31ம் தேதி பொறுப்புக்களை ஒப்படைக்க முடியும். ஏனென்றால் 31ம் தேதி நான் ரிட்டயர்டு ஆகிறேன் என்கிறார். இப்படி உள்நாட்டுப் பயிற்சிகள் அல்ல, வெளிநாட்டுப் பயிற்சிகளும இந்த லட்சணத்தில்தான் நடைபெறுகின்றன.
சூடாமணியின் கண்ணீர்
புதுதில்லியில் அந்த அமைப்பிடம் உள்ள ஹாஸ்டலில் நாங்கள் தங்கினோம். பம்பாய்த் தொலைக்காட்சி ஆசிரியை, அஸாம் செய்தி விளம்பரத்துறை அதிகாரி, பெங்களூர் பத்திரிகை தகவல் அதிகாரி, முதலிய பல்வேறு மாநில அதிகாரிகள் ஒன்று சேர்ந்து ஒரு மாதம் இருந்தோம். இது புதிய அனுபவம்; இதே விடுதியில் பத்திரிகை இயல் பற்றி பட்டம் வாங்குவதற்காக பல மாணவ, மாணவிகள் இருந்தனர்; தமிழக மாணவிகளும் நான்கைந்துபேர் இருந்தனர். இந்த இளைய தலைமுறையினரிடம் ஒரு அளவு கூட சமூகப்பிரக்ஞை என்பது இல்லை. பல “தோழர்களோடு” ஒருத்தி செல்வதும், ஒருத்தியுடன் பல “தோழர்கள்” செல்வதும், இரவெலாம் கும்மாளம் அடிப்பதும், தோழர், தோழிகள் ஒருவரை விட்டு ஒருவர் காதல்-காட்சிகள் மாறுவதும், சகஜம். (ஒரு வேளை பாதிக்கிழடுகளான எங்களுக்கு, பொறாமையாகக் கூட இருந்திருக்கலாம்!) ஆனாலும் இந்த இளம் பட்டாளம் நடந்து கொண்ட முறை என்னவோ போலிருந்தது. குறிப்பாக அச்சம், மடம், நாணம், பயிற்பு என்ற அரும்பெரும் குணங்களைக் கொண்டதாக கருதப்படும் நமது தமிழ் தாய்க்குலம், காஞ்சமாடு கம்பம் புல்லுக்குள் போன கதையாய் நடந்து கொண்ட விதம், பிரச்னையை இன்னும் ஆழமாய்ச் சிந்திக்கத் தூண்டியது. அதேசமயம் அங்கேயிருந்த ஒரு உத்திரபிரதேச சமையல்காரப் பெண், அசல் தமிழ்பெண் போல் நடந்து கொண்டாள். எங்களுக்கும், மாணவர்களுக்கும் சப்பாத்திகள் வழங்கும்போது, அந்த இளம் பெண் ஒரு மூதாட்டி போல தாய்மைப் பரிவோடு நடந்து கொண்ட போக்கும், பாட்டாளி கலாச்சாரம் இன்னும் கெட்டுப் போகவில்லை என்ற எண்ணத்தை எனக்குத் தோற்றுவித்தது. நெருப்புக்கு நெருப்பாகவும், நீருக்கு நீராகவும், அந்தப் பெண் பல்வேறு தரப்பினரிடமும் பட்டும் படாமலும் அதே சமயம் தாய்மைப் பாசத்துடனும் நடந்து கொண்டாள். இப்படிப்பட்ட இரண்டும் கெட்டான் பெண்மையையும், இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாய் இருந்த சமையல்காரப் பெண்ணின் பெண்மையையும், இவற்றின் முரண்பாடுகளையும் விவரித்து ஒரு சிறுகதை எழுதினேன். குங்குமம் கேட்டதற்கிணங்க, இந்த கதையை அனுப்பி வைத்தேன். பிரசுரமானது என்பதை சொல்லத் தேவையில்லை.
இந்த ஒருமாத இடைவெளி என்னை முழுக்க முழுக்க ஒரு கலைஞனாக்கியது. வானொலியிலும் பின்னர் தொலைக்காட்சியிலும் மாட்டிக் கொண்டு யந்திரமயமான வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்த எனக்கு, புதுதில்லியில், ஒருமாத காலம், பிரிந்துபோன கலைக்கண்கள் மீண்டும் பொருந்தின. ஒவ்வொரு நிகழ்ச்சியையும், கலாபூர்வமாகப் பார்த்து சமுதாய ரீதியில் சிந்தித்து மனோதத்துவ ரீதியில் எழுத முற்பட்டேன். இந்த ஒருமாத கால அனுபவம் பாலைவன பசுஞ்சோலை போன்றது. சென்னைக்குத் திரும்பியதும், செயற்கை வாழ்வு பிடித்துக் கொண்டது. இதிலிருந்து எப்படியாவது மீள வேண்டும் என்ற ஒரு உத்வேகமும், தொலைக்காட்சியில் செய்திகளைப் போடுவதில் காட்டும் ஆழத்தையும் அறிவையும் இனிமேல் இலக்கியத்தில் காட்ட வேண்டும் என்ற ஒரு எண்ணமும் ஏற்பட்டுள்ளது.
சடையன்
அஸாம் தொலைக்காட்சி அதிகாரி ஒருவர் ஒரு தலைமை அதிகாரியைப் பற்றி சொல்லிச் சொல்லிச் சிரித்தார். அந்தத் தலைமை அதிகாரி அலுவலகக் காரில் போவாராம். காரை ஒருபக்கமாக நிறுத்திக் கொண்டு, டிரைவரை வாழைப்பழம் என்ன விலை என்று கேட்கச் சொல்வாராம். பக்கத்துக் கடையில் கேட்டால் கார் இருப்பதால் விலையைக் கூட்டுவார்கள் என்று, ஒரு கிலோ மீட்டருக்கு அப்பால் தென்படும் ஒரு கடையை நோக்கி டிரைவரை நடக்கச் சொல்வாராம், அந்த டிரைவரும் ஒரு கிலோ மீட்டர் நடந்து, வாழைப்பழம் விலை கேட்டு மறு கிலோமீட்டர் நடந்து இவரிடம் விலையைச் சொல்லுவாராம். மீண்டும் காசை வாங்கிக்கொண்டு, கடைக்குப் போவாராம். வாழைப்பழத்தோடு திரும்பியவரைப் பார்த்து, “இந்தப் பழம் நல்லா இல்ல. பழத்தைக் கொடுத்து காசு வாங்கிட்டுவா” என்று பழையபடி இரண்டு கிலோமீட்டர் நடக்க வைப்பாராம். இப்படிப்பட்ட பின்னணி யில், ஒரு டிரைவர், அதிகாரி முன்னாலேயே வாழைப்பழத்தை விழுங்கிவிட்டு, தனது சட்டைப்பையிலிருந்து காசை எடுத்துக் கொடுத்தாராம். இதனால் ஆண்டானுக்கும், அடிமைக்கும் பலத்த சண்டையாம். இப்படிப்பட்ட இந்த அதிகாரி அலுவலகத்திலும், ஏடாகோடமாம். இப்படிப்பட்டவர்களை நாம் சென்னையில் சடையன் என்று சொல்வதுண்டு.
இடைவேளை - கதையாகாத நினைவுகள்
புதுதில்லியில் எனது பயிற்சி என்னைப் பொறுத்த படைப்பிலக்கியத்தில், அதற்குரிய சிந்தனைக்கு ஒரு பொற்காலம். ஏகப்பட்ட கதைகள், உவமானங்கள், என்னை அறியாமலே வந்தன. மைனாக்குருவி நடப்பதைப் பார்க்கும்போது, கர்ப்பிணிப்பெண் நடப்பது போல் தோன்றியது. மேக்கப் போட்ட ஒரு ‘அதிகாரி-பாட்டியின்’ இளமைக்காலத்தைக் கிளறியபோது, அவர் தன்னை மறந்து, தனது காதல் திருமணத்தை விளக்கிய விதம், இன்னும் மனதைவிட்டு அகலவில்லை. அதே சமயத்தில் என்னை மாதிரியான நடுத்தர வயதுக்காரர்கள், ‘சின்னஞ்சிறுசுகள்’ காதலிப்பதை அலட்சியப்படுத்துவதுபோல் லட்சியப்படுத்தியதும், லேசாக கண்களைச் சிமிட்டியபடியே ஒவ்வொருவரும் தனக்குள்ளேயே ஒன்றையோ, பலதையோ தேடிப்பார்த்ததையும் நினைத்தபோது, இந்த இளைய தலைமுறையினரும், பிற்காலத்தில் இப்படித்தானே நினைக்கப் போகிறார்கள் என்ற சிந்தனை ஏற்பட்டு, வாழ்க்கை சுவையானதாகவும், ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், நினைவுகளின் சாம்பலின்றி வேறில்லை என்பது போலவும் தோன்றியது. ஒவ்வொரு நிகழ்ச்சியிலும், ஒரு கலை நயத்தைக் கண்டேன். ஒவ்வொருவர் பேச்சிலும், மனித உணர்வு சர்வதேசத் தன்மை வாய்ந்தது என்பதை உணர்ந்தேன். மொழி, மதம், என்பவை வெறும் போர்வைகளே என்பதை முன்பே கண்டிருந்தாலும், இந்த வயதில் கண்டது ஒரு அருமையான அனுபவம். இப்போது நினைக்கும்போதும், மனது அடித்துக் கொள்ளுகிறது. அந்த ஒருமாத கால பொற்காலத்தில் இருந்து, மீண்டும் தமிழக கற்காலத்தில் விழுந்து கிடக்கிறேனே. விழுவதும் எழுவதற்கே - அதாவது எழுதுவதற்கே!
‘நண்பர் வட்டத்தில்’ எனக்கு சாகித்ய அகாதமி விருது கிடைத்ததைப் பாராட்டி எழுதிய பாங்கு என்னை மிகவும் நெகிழ வைத்தது. சாதாரணமாக ஒரு நட்புப் பத்திரிகையின் தோழமை வியப்புக்குரியது அல்ல. ஆனாலும், இந்த விருது பற்றிச் சில வகுப்புவாதிகள், சில தமிழ் வியாபாரிகள் மேற்கொண்ட அணுகுமுறை விருதுக்குள்ளான எனது “வேரில் பழுத்த பலா” என்ற நாவலில் உள்ளடக்கம் இன்னும் பூதாகாரமாக இருக்கிறது என்பதை உறுதிப்படுத்தியது. வகுப்புவாதிகளால் நடத்துவது போல் தோன்றும் கணையாழி பத்திரிகை ‘இட ஒதுக்கீடு இலக்கியத்திற்கும் வந்து விட்டது’ என்று எழுதியது. அதன் அடுத்த இதழில் ஐயருக்குப் பூணூல் இருப்பதால் விருது வருவதில்லை என்ற அர்த்தத்தில் ஒரு கடிதம் புலம்பியது. போதாக்குறைக்கு சுஜாதா என்னை வாழ்த்துவது போல் வாழ்த்தி வீழ்த்துவது போல் வீழ்த்துவதற்கு முயற்சி செய்வது போல் அதே பத்திரிகையில் ‘கமெண்ட்’ அடித்திருந்தார். இப்படி எழுத்துக்களைப் பூணூலை வைத்து அளப்பது இன்னும் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், பனையேறிகளை முன்னோர்களாகக் கொண்ட நான், என் இலக்கியத்தைப் பனை நாராலேயே அளக்கிறேன். பூணூலைவிடப் பனை நார் வலுவானது.
இப்படி வகுப்புவாதம் என்மீது ஏவி விடப்பட்டாலும், என் நாவலை விமர்சிக்காமல் என்னை விமர்சிப்பது முஸ்தபா என்ற பேருக்குள் ஒளிந்திருக்கும் எழுத்தாளருக்கு ஒரு பொழுதுபோக்கானாலும், நான் ஒரு வகுப்புவாதியாகவில்லை. காரணம் ‘வேரில் பழுத்த பலா’வில் வரும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சரவணன் என்ற கதாநாயகன் போலவே நானும் நடந்து கொள்ள விரும்புகிறேன். அந்தக் கதாநாயகன் இதேபோன்ற வகுப்புவாதிகளால் அல்லலுக்கு ஆளானாலும், அவன் வகுப்புவாதியாக மாறவில்லை. சந்தானம் என்ற பிராமண இளைஞனின், நியாயமற்ற வேலையையும், அதிகாரி என்ற முறையில், மனிதாபிமானத்தின் உந்தலில் அவன் கட்டிக்காத்தான். சில பேர்வழிகள், வகுப்புவாத சாக்கில் என்னைச் சாடினாலும் இதை ஒரு வகுப்புவாத பிரச்னையாக பெரியவர்கள் எடுத்துக் கொள்ளவில்லை என்பது மகிழ்ச்சிக்குரியது. எடுத்துக்காட்டாக நான் விருது பெற்ற செய்தியை மிகச்சிறப்பாக வெளியிட்டவர் எனது நண்பரும் தினமலர் ஆசிரியருமான கிருஷ்ணமூர்த்தி. அதை இருட்டடிப்பு செய்தவர் ஒருவேளை எனது தூரத்து உறவினராக இருக்கக் கூடிய ‘மாலைமுரசு’ ஆசிரியர் ராமசந்திர ஆதித்தன். பழைய கசப்பான அனுபவங்களையும் மறந்து எனது பேட்டியை தான் பெற்ற குழந்தைக்குக் கிடைத்த பேறு போல பெருமிதத்துடன் போட்டவர் ‘ஆனந்த விகடன்’ ஆசிரியர் திரு. பாலன். பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் எழுச்சியுற்று வரும் சக்திகளை அடையாளம் காட்டும் இந்த நாவலுக்கான விருதை வெறுப்போடு அணுகியவர்களில் தமிழர் ‘தளபதி’யும் ஒருவர். ஆகையால், இந்த அகாதமிப் பரிசில், வகுப்புவாத முலாம் பூசுவது சந்தர்ப்பவாதிகளுக்கு ஒரு சாக்கு என்பதும் அதே சமயம், அந்த வகுப்புவாதம் இன்னும் இருக்கத்தான் செய்கிறது என்பதையும் கண்கூடாகக் கண்டேன்.
வேரில் பழுத்த பலா
‘வேரில் பழுத்த பலா’ என்ற குறுநாவல் வலம்புரி ஜானை ஆசிரியராக கொண்ட ‘மெட்டி’ என்ற மாத நாவல் இதழில் வெளியானது. ஆதி திராவிட இனத்தைச் சேர்ந்த ஒரு பெண் முதன்முதலாக மத்திய அரசு அலுவலகத்திற்குள் வேலைக்கு வரும் போது மேல் ஜாதிக்காரர்கள் - குறிப்பாக பிராமணர்கள் அவளை என்ன பாடுபடுத்துகிறார்கள் என்பது நாவலில் ஒரு அம்சம். சொல்லுக்குச்சொல் “காலனிக்காரி, காலனிக்காரி,” என்று அவளை ஒரேயடியாய் பிரமை அடிக்க வைத்து, அவள் தகுதிக்கோ, தேர்வுக்கோ குறைந்த, டெஸ்பாட்ச் செக்ஷனில் போடுகிறார்கள். இதே சமயம், சர்வீஸ் கமிஷன் தேர்வு மூலம் வராத சந்தானம் என்ற இளைஞனை அக்கவுண்டண்ட் வேலையில் வைக்கிறார்கள். இந்தச் சமயத்தில் பின்தங்கிய சமூகத்திலிருந்து வந்த சரவணன் என்ற இளைஞன் அந்த ஆதிதிராவிடப் பெண்ணை மேன்படுத்துகிறான். அவளுக்குரிய செக்ஷனைக் கொடுக்கிறான். “கான்ட்ராக்டர்களுடன் உடன்பட மறுக்கிறான். இதனால், அலுவலக மேல்ஜாதிக்காரர்களாலேயே அல்லலுக்கு உள்ளாகிறான். ஆனாலும், அரசு விதிமுறைகளுக்கு மாறாக போராட்டத்திற்கு தயாராகிறான்.
விருதுக்கான பாராட்டு விழாவில் என்னை வாழ்த்திப்பேசிய பலர் கிராமத்தில் பிற்படுத்தப்பட்ட மக்கள் தூசி படிந்த கண்ணாடி மாதிரி; அதை துடைக்க வேண்டுமே தவிர உடைக்கக்கூடாது” என்று சரவணன் தன் சகாக்களுக்குச் சொன்ன அறிவுரையை மேற்கோள் காட்டிப் பேசினார்கள். இந்த நாவலில் வருவதுபோலவே, ஒருவேளை என்மீதுள்ள பிரச்சார தூசியை துடைத்து என்னைப் பிரகாசப்படுத்துவதற்குப் பதிலாக நான் ஏற்கனவே சொன்ன பேர்வழிகள் என் முகத்தை உடைப்பதையே ஒரு பிரச்சாரமாக வைக்கிறார்கள். இதே நாவலில் சரவணன், மேல்ஜாதி ஜூனியர்களைப் பார்த்து, “அரசாங்க வேலை என்பது உங்களுக்கென்ன பட்டா போட்ட சொத்தா” என்று கேட்பான். இதேபோல் நாடகம், நாட்டியம், கதை, நாவல் போன்றவற்றில் தங்களுக்குத்தான் பட்டா என்று நினைத்துக் கொண்டிருக்கும் அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி போன்ற எழுத்தாளர்கள் தங்களது பட்டா பறிபோய்விட்ட ஆத்திரத்தில் நாவலை விமர்சிக்காமல், நாவல் ஆசிரியரை விமர்சிக்கிறார்கள். ‘வேரில் பழுத்த பலா’வில் வருவது போலவே, ஒரு மர்மத்தனமாக கான்ட்ராக்டருக்கு உடன்போக விரும்பிய அலுவலக சகாக்கள் போல், அசோகமித்திரனை இலக்கிய மூலஸ்தானத்தில் வைக்க வேண்டும் என்றால், சா. கந்தசாமி, வண்ணநிலவன், போன்ற சூத்திரர்களை துவாரக பாலகர்களாக நிறுத்துவதற்கு முயற்சி செய்கிறார்கள். அதேசமயத்தில் இந்த வகுப்புவாதிகளை நினைக்கும்போது மனித நேயத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட, என் மீது உயிரையே வைத்திருக்கும் பிராமண சமூகத்தைச் சேர்ந்த மதுராந்தகம் குமார், ஒரு பத்திரிகை என்னை இருட்டடிப்புச் செய்ததால் துடித்த கவிஞர் பீஷ்மன், எழுத்தாளர் சி.ஆர். கண்ணன், தீபம் திருமலை ஆகியோரை நினைத்துப் பார்க்கிறேன். வகுப்புவாதம் அதுவும் மாறும். என் அனுபவத்தில் வலுக்கட்டாயமாக வந்திருப்பது ஆச்ரியம் தான். ஆனாலும், கஸ்தூரி ரங்கன் போன்ற ஒரு பிராமண எழுத்தாளர் பீஷ்மன் போன்ற மனிதாபிமானிகளை விழுங்கிவிடும் கேந்திர நிலையிலிருக்கிறார் என்பதும் உண்மை. வேரில் பழுத்த பலாவில் மேலதிகாரியைப் பாராட்டிக் கொண்டே அவனுக்கு குழி பறிக்கும் சகாக்கள் போல், தினமணிக் கதிரில் என்னை இலக்கியவாதி என்று சொன்ன கஸ்தூரி ரங்கன், ‘கணையாழி’ப் பத்திரிகையில், அதே பேனாவால் ‘இடஒதுக்கீடு’ என்கிறார். எனது நாவலில் வரும் ‘பட்டா போட்ட’ கதாபாத்திரங்கள் போல், இந்த பூணூல் போட்ட மனிதர்கள் தங்களைக் காட்டிக் கொள்ளாமலே முஸ்தபா என்ற முஸ்லீம் பெயருக்குள் நுழைந்து கொண்டு பேடித்தனம் செய்கிறார்கள்.
எந்த நாவலில் என்ன எழுதினேனோ, அந்த சமாச்சாரங்கள் எனக்கே நடந்து விட்ட பின்னணியில் அந்த நாவல் எப்படி உருவானது என்பதைப் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.
1976ம் ஆண்டு வாக்கில் ‘சென்னை வானொலி’ நிலையத்தில் வானொலி என்ற பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்தேன். வானொலி நிகழ்ச்சிகளை மட்டுமே கட்டம் போட்டுச் சொல்லிக் கொண்டு 10 ஆயிரம் பிரதிகளுடன் உலா வந்த அந்தப் பத்திரிகையில் வானொலி உரையாடல்கள், கட்டுரைகள், கவிதைகள், நாடகங்கள் ஆகியவற்றைப் பிரசுரித்து 50 ஆயிரம் பிரதிகளாகக் கூட்டினேன். ஆனால், ஒப்பந்தக்கார பிரிண்டர் ஒத்துழைக்கவில்லை. பயன் என்கிற வார்த்தை பய என்று வந்துவிட்டதே என்று கேட்டால் ‘ய்’ டைப் இல்லை என்பார். இப்படிப்பட்ட ஆசாமிக்கு எனது அலுவலக அக்கவுண்டண்டும் ஒருசில ஊழியர்களும் உடன்பட்டனர். ஒரு ஊனமுற்ற கருப்பு இளைஞருக்கு நான் புதிய பொறுப்பைக் கொடுத்த போது முணுமுணுத்தனர். ஒரு, பெண் ஊழியை, “சொஸைட்டியில் அந்தஸ்து இல்லாதவங்கல்லாம் ஆபிஸ்ரா வந்துட்டாங்கண்ணு” என் காதுபடவே சொன்னார். இறுதியில், அந்த கான்ட்ராக்டரைத் தூண்டி விட்டு நான் வேறு அச்சகத்திடம் இச்சகமாகி விட்டேன் என்று புகார் மனுக்களை எழுத விட்டார்கள். அந்த ஆசாமியின் கடிதங்களுக்கு விளக்கம் கொடுக்கவே எனக்கு நேரம் போதவில்லை. போதாக்குறைக்கு இந்த கான்ட்ராக்ட் ஆசாமியின் சட்டகர் மத்திய அரசின் பிரசுரத்துறையில் துணை இயக்குநர். எனது நிலைய இயக்குநர் எம்.எஸ். கோபாலுக்கு என் மீது அனுதாபம் இருந்தாலும், அதைவிட பயம் அதிகம். சக்தி வாய்ந்த மேலதிகார வாய்மொழி உத்தரவுகளுக்கு அடங்கிப் போனார். ஆனாலும் நான் விட்டுக் கொடுக்கவில்லை. ஒப்பந்த விதிகளின்படி பிரிண்டருக்கு கடுமையான அபராதம் விதித்து, ‘கமாண்டோ’ நடவடிக்கைகளில் இறங்கினேன். இறுதியில் அந்தப் பத்திரிகை கோவையில் உள்ள அரசு அச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த அனுபவத்தை வைத்து எழுதப்பட்ட நாவல்தான் ‘வேரில் பழுத்த பலா’, பத்தாண்டுகளுக்குப் பிறகு இந்த பழைய அனுபவத்தை சமூக நோக்கோடு அணுகி விஞ்ஞான ரீதியாகப் பரிசீலித்து, அதை ஒரு நாவலாக வடிவம் கொடுத்தேன். இந்த நாவல் விமர்சனம் செய்யப்பட்டால், நம் சமூகத்தின்முன் இப்போதும் பூதாகரமாக வியாபித்திருக்கும் வகுப்பு பிரச்னைகளையும் வர்க்கப் பிரச்சனைகளையும் அடையாளம் கண்டு கொள்ள உதவும். ஆனால் அவர்களோ நிஜத்தை விட்டு நிழலை அடிக்கிறார்கள். நிழலை அடிப்பவன், எப்படிப்பட்டவன் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.
புதுதில்லியில் சாகித்ய அகாதமியில் நான் ஆற்றிய உரை அனைவராலும் பாராட்டப்பட்டது. தில்லித் தமிழ்ச்சங்கம், பாவேந்தர், பாரதிதாசன் பாசறை, சந்திப்புமுனை போன்ற அமைப்புகள் எனக்கு சிறப்பான வரவேற்பை அளித்தன. தமிழில் சாகித்ய அகாதமி பெற்ற ஒருவருக்கு இப்படி எல்லா அமைப்புகளும் போட்டி போட்டு ஜாதி வித்தியாசம் இல்லாமல் நடந்து கொண்டது இதுவே முதல் தடவை என்று பலர் சொன்னார்கள்.
எழுத்தாளன்தான், கதாபாத்திரங்களைத் தீர்மானிப்பான். ஆனால், பரிசுக்குப் பிறகு ஏற்பட்ட விமர்சன அமளியில் தேசிய வாதியான நான் வகுப்புவாதியாகாமல் விஞ்ஞானபூர்வமாக நடந்து கொண்டதற்கு நான் உருவாக்கிய சரவணன் என்ற பாத்திரம் ஒரு காரணம். ஒரு பாத்திரமே படைப்பாளனின் போக்கைத் தீர்மானிப்பது ஒரு அதிசயந்தான். ஆனாலும் உண்மை.
இந்த உணர்வை உணர்த்துவதற்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஒரு பின்புல சக்தியாக விளங்கியது. செம்மலர் பத்திரிகை எனக்கு வாழ்த்து தெரிவித்ததோடு என்னை தண்டித்த கனையாழியை கண்டித்து எழுதியது. த.மு.எ.ச. தலைவர்களான தோழர்கள் கே.எம். முத்தையா, செந்தில்நாதன், அருணன், எஸ்.ஏ. பெருமாள் எனக்கு பக்கபலமாக நின்றார்கள். தமிழ்நாடு கலை, இலக்கிய பெருமன்றம் எனக்குப் பாராட்டு விழா நடத்தியது. தமிழ்நாடு காங்கிரஸ் (ஐ) கட்சியின் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தியும், மக்களின் மரியாதைக்குரிய ஜி.கே. மூப்பனாரும் எனக்குத் தனித்தனியே விழா நடத்தி கெளரவித்தார்கள். கவிஞர் இளந்தேவனும் தனியாக விழா நடத்தினார். த.மு.எ.ச. கிளைகள் பலவற்றிலும் எனக்கு விழாக்கள் நடத்தினார்கள். என் ஆஸ்தான பதிப்பகமான மணிவாசக நூலகத்தின் உரிமையாளர் ச.மெய்யப்பனும், அவரது சகாக்களான நாராயணன், குருமூர்த்தி ஆகியோர் இந்தப் பரிசு தங்களுக்குக் கிடைத்ததாகவே நினைத்தார்கள். தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்கள் தியாகராஜன், து. ராஜா, மகேந்திரன் ஆகியோர் மகிழ்ச்சி தெரிவித்தார்கள். பெல் நிறுவன ஊழியர்கள், வருமான வரித்துறை ஊழியர்கள், சங்கங்கள் இதே மாதிரி இயங்கின. கல்வி, விகடன் போன்ற மூத்த பத்திரிகைகள் வாழ்த்துகளை தெரிவித்தன. தினமணிக் கதிரும் அப்படியே... எழுத்தாளர் விக்கிரமன் அவர்கள் தாம் தலைமை ஏற்றிருக்கும் அகில இந்திய எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் ஒரு தேநீர் விழா கூட்டத்தை ஏற்படுத்தினார்... எழுத்தாளர்கள் பாலகுமாரன், இந்துமதி உட்பட பல எழுத்தாளர்கள் வாழ்த்திப் பேசினார்கள்... ‘இலக்கியவீதி’ சார்பில் அதன் தலைவர் இனியவன் செங்கையில் ஒரு பாராட்டு விழாவை நடத்தினார்.. டாக்டர் தமிழ்க்குடிமகன் உட்பட பல சிந்தனையாளர்கள் வாழ்த்து தெரிவித்தார்கள்... டாக்டர் ரபீர்சிங், டாக்டர் குருநாதன், டாக்டர் இளவரசு, கவிஞர் இளவேனில் போன்ற சான்றோரும், பொன்னிலன், செ. யோகநாதன், கந்தர்வன், மேலாண்மை பொன்னுச்சாமி, கு. சின்னப்பபாரதி, டி.செல்வராஜ், பிரபஞ்சன், திலகவதி போன்ற சமூக நோக்குள்ள படைப்பாளிகள் எனக்கு வாழ்த்துக் கடிதங்கள் எழுதினார்கள். கவிஞர் கே.சி.எஸ். அருணாசலம், டாக்டர் தயானம் பிரான்சிஸ் உட்பட தமிழகம் எங்குமிருந்தும் நூற்றுக்கணக்கான வாழ்த்துக் கடிதங்கள் வந்து குவிந்தன. என் சிந்தனையை வளமைப்படுத்திய என் தோழர் இளவேனில் சத்திரியனில் என்னைப் பாராட்டி ஒரு கட்டுரையே எழுதினார். இவையே சாகித்ய அகாதமியை விடப் பெரியது. இவன் கிடக்கான் கணையாழிக்காரன்.
குறிப்பு : அண்மையில் வெளியான சுபமங்களா பேட்டியில் திரு. கஸ்தூரி ரெங்கன் இட ஒதுக்கீட்டை அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை என்று பூசி மழுப்பினார்... என்மீதும், என் இலக்கிய முயற்சி மீதும் மரியாதை இருப்பதாகவும் தெரிவித்தார்.