எனது கதைகளின் கதைகள்/017-022

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

17
கிறிஸ்துவக் கதைகள்


மது சகோதர சகோதரிகள் கிறிஸ்மசைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில் கிறிஸ்துவ மதமும், அதைச் சார்ந்த நண்பர்களும் என்னில் எந்த அளவிற்கு தாக்கம் ஏற்படுத்தியிருக்கிறார்கள் என்று எண்ணிப் பார்த்தேன். இதுவரை சிந்தித்துப் பார்க்காத எனக்குப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இந்த மதமும், மக்களும் ஏன் இதுவரை என்னால் நினைத்துப் பார்க்கப்படவில்லை என்ற எண்ணம் ஏற்பட்டது.

எலியபெத்தாகும் மாரியாத்தா

எங்கள் ஊரில் கிறிஸ்துவர்கள் நான் சார்ந்த சாதியிலேயே பாதி அளவு இருக்கிறார்கள். இவர்கள் ‘தெக்கூர்காரர்'கள்; ‘வடக்கூரில்’ வாழ்கிறவர்கள் உதிரமாடனையும், சுடலைமாடனையும் கோவிலில் கும்பிட்டுக் கொண்டிருப்பவர்கள். முருகன், பிள்ளையார் கோவில்கள் இரண்டு உண்டு. இவற்றிற்கு பிள்ளைமார்கள்தான் போவார்கள். மாடன்களை வழிபட்டுக் கொண்டிருக்கும் ‘வடக்கூரார்’களுக்கு தாங்கள் இந்துக்கள் என்று தெரியாது. எனக்கும் அப்போது தெரியாது. கிறிஸ்தவ ஆலயக்காரர்கள் மாடன் கோவில்களுக்கு போவதும், மாடன் கோயில்களில் சாமியாடுகிறவர்கள் கூட கிறிஸ்தவ கோயில்களுக்குப் போவதும் அத்துபடி. வருடத்தில் இரண்டு மூன்று தடவை அந்தக் கிறிஸ்தவ ஆலயத்தில் ஸ்பீக்கர்கள் கட்டப்பட்டு அனைத்து சினிமா பாடல்களும் ஒலிக்கும். அப்போது உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த நானும் நண்பர்களும் குளத்துக்கரையில் “வாராய் நீ வாராய்” என்ற பாட்டையும் “அமுதைப் பொழியும் நிலவே” என்ற பாட்டையும் எங்களுக்குப் பிடித்த பெண்களை மனதில் நினைத்துக் கொண்டு கேட்டது நினைவுக்கு வருகிறது. பண்டிகை முடிந்ததும், செட்டுக்காரன் ஸ்பீக்கரை சுழட்டிக்கொண்டு டவுனுக்கு போகும்போது எங்களுக்கு என்னவோ போல் இருக்கும். ஏனென்றால், எங்கள் ஊரில் அப்போது ரேடியோ கிடையாது. கல்யாணத்தில் கூட மேளம்தான். ஆகையால் எனக்கு கிறிஸ்தவ மதத்தில் (சினிமாபாட்டை கேட்பதற்கு) ஒரு ஈடுபாடு ஏற்பட்டது. அதோடு பெண் கொடுக்கல் வாங்கல் கூட ஒரே சாதிக்குள்தான் நடக்கும். மாடசாமி ஒரு நாளைக்கு எட்வர்டு என்றாகி ஒரு எலியபெத்தை திருமணம் செய்து கொள்வான். ராசம்மா திடீரென்று ரோஸ்லின் ஆகிவிடுவாள். ஆனால் பழக்கவழக்கத்திலோ மற்றவற்றிலோ எந்த வேறுபாடும் இருந்தது இல்லை. நிலைமை இன்னும் அப்படியே நீடிக்கிறது. எங்கள் பக்கம் ‘மண்டைக்காடு’ வரவில்லை; வரவும் வராது.

எங்கள் ஏரியாவிலேயே அதிமாகப் படித்து ஒன்றிய ஆணையாளராகப் பணியாற்றிய ஒருவர், டில்லியில் வேலைபார்த்த என்னை நேரிடையாக அழைத்துத் தனது மகளை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டார். அவர் கிறிஸ்துவர். எனக்கும் பெண்ணைப் பிடித்துவிட்டது. நானும் தலையாட்டினேன். உடனே அவர் ஞானஸ்நானம் எப்பொழுது வைத்துக் கொள்ளலாம் என்றார். நான் இலேசாய்த் தயங்கி மறுநாள் பதில் அளிப்பதாகத் தெரிவித்தேன். நான் வரட்டும் என்று அவரும், அவர் வரட்டும் என்று நானும் இருந்து விட்டோம். இல்லையானால் நான் ஒரு தாமஸ் ஆகவோ அல்லது ஜேசுராஜாவாகவோ மாறி இருப்பேன்.

திடப்பட்டவள்

கிறிஸ்தவப் பின்னணியில் எனக்குப் பிடித்த ஒரு சிறுகதையை எழுதியிருந்தேன். அதற்கு திடப்பட்டவள் என்று பெயரிட்டேன். எங்களுடைய உறவுக்கார மூதாட்டி ஒருவர் இன்னும் தனது பாதிரியார் மருமகனுடன் இருக்கிறார். இவர் வாயில் அதிரடியான வார்த்தைகள் எதையும் கேட்க முடியாது. யாராவது திட்டினால் கூட ‘ஏசுவே’ என்றுதான் தனக்குள்ளே பேசிக்கொள்வார். எவராவது நோய்ப்பட்டிருந்தால், உடனடியாக அவர்களுக்காக ஜெபிப்பார். ஆனால் யாரையும் தனது வழிக்கு வரும்படி சொல்லவே மாட்டார். கிராமத்தில் ஆசிரியையாக பணியாற்றிய இவர் தனக்கு குழந்தை இல்லை என்பதை அறிந்தும், நடுத்தர வயதில் தனது கணவனுக்கு தானே முன்னின்று திருமணம் நடத்தினார். இரண்டாவதாக வந்தவளுக்குப் பிறந்த குழந்தைகளைத் தன் குழந்தைகளாக நினைத்து மகிழ்ந்தார். ஆனால் அவருக்கோ பல சோதனைகள். கிராமத்தை விட்டு நகரத்திற்கு வர வேண்டிய கட்டாயம். நான் கூட அவரிடம் கணவருக்கு திருமணம் செய்து வைத்தது தவறு என்று வாதாடினேன். அவரால் அதை மறுக்கவும் முடியவில்லை. உடன்படவும் முடிய வில்லை. ‘ஏசுவே’ என்று ஒரே பதில்தான். உத்தமியான இந்த மூதாட்டி இப்படி அல்லல்படுவதை நினைக்கும் போது சாமர்செட் மாம் எழுதிய மனிதபந்தம் (HUMAN BONDAGE) என்ற நாவல் நினைவுக்கு வந்தது. அதில் ஒரு கால் ஊனமுற்ற மாணவன் பொருமிக் கொண்டேயிருப்பான். அவனுடைய ஆசிரியர் அவனைக் கூப்பிட்டு “ஆண்டவர் உலக பாவத்தை சுமப்பதற்காக உனக்கு ஒரு சிலுவை கொடுத்திருக்கிறார். உன்னால் தான் அதைத் தாங்கிக் கொள்ள முடியும் என்று உன்னைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். ஆகையால் நீ பெருமைப்படு, சிறுமைப்படாதே” என்பது மாதிரியான வாசங்கள் வரும். இவை எனக்கு மிகவும் பிடித்து மனதில் ஒலித்துக் கொண்டிருப்பவை. இதில் எனது நம்பிக்கை முக்கியமல்ல. இந்த மாதிரியான மானுட சேதங்கள் வாழ்வதற்கு இந்தக் கருத்து ஒரு மாமருந்து என்பதே காரணம்.

பேராசிரியை சரோஜினி பாக்கியமுத்து எழுதிய பிரபலமான “விவிலியமும் தமிழும்” என்ற நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் நானும் உரையாற்றினேன். அந்தப் புத்தகத்தில் கிறிஸ்தவ பெரியவர்கள் தமிழ் உரைநடைக்குச் செய்த அரும் தொண்டை அப்போது தான் ஆழமாக அறிந்து கொள்ள முடிந்தது. இந்தப் பின்னணியில் சீகன் பால்குவும், அவரைப்போன்ற தமிழ் அறிஞர்களும் எனது மூதாதையர்கள் என்று நான் ஆங்கிலத்தில் சொன்னபோது அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வெளிநாட்டுக்காரர்களும் மகிழ்ச்சி ஆரவாரம்-தெரிவித்தார்ள். உண்மைதான். தமிழ் இலக்கியத்திற்கு சேவை செய்த கிறிஸ்தவ பெரியவர்களை மூதாதைகளாக நினைக்காதவர்களும் கிறிஸ்தவத்தை நமது பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக சேர்க்க மறுப்பவர்களும் அரசியல்வாதிகளாக கொடி கட்ட முடியும். ஆனால் முழுமையான எழுத்தாளர்களாகத் திகழ முடியாது.

வழக்கமாக எழுதும் பாதையில் இருந்து இந்தக் கட்டுரையில் சிறிது விலகிவிட்டேனா என்று நினைக்கிறேன். எண்ணிப் பார்த்தால் நான் விலகவில்லை. ஒருவனின் எழுத்துக்கு அவனது அனுபவப் பின்னணியும் ஒரு காரணம் என்பதால் இந்த அனுபவ நினைப்பைப் பகிர்ந்து கொள்கிறேன்.