எனது நண்பர்கள்/புரட்சிக் கவிஞர்

விக்கிமூலம் இலிருந்து

புரட்சிக் கவிஞர்

லகத்தில் மதங்கள் பல. அவற்றுள் மிகப்பெரிய மதங்கள் ஒன்பது. இவை இந்து மதம், புத்தமதம், சமணமதம், இஸ்லாம் மதம், பார்லி மதம், சைவம், வைணவம், சன்மார்க்கம் எனப்பெறும். இவை ஒன்பதும் நாம் வாழ்கின்ற இதே ஆசியாக் கண்டத்தில் தோன்றியவை. இதனால், இக் கண்டத்தை ‘ஞானம் பிறந்த கண்டம்’, “ஞானம் பிறந்த கண்டமென நல்லறிஞர்கள் கூறுவதுண்டு. பிற கண்டங்களில் ஞானம் விளையாமல் உப்பே விளைவதனால் அவை உப்புக் கண்டங்களாகப் போய் விட்டன. இத்தனை சமயங்களுக்கும் இலக்கியங்களைச் செய்து, உலக மொழிகளில் உயர்ந்து நிற்கும் ஒரே மொழி நம் தமிழ் மொழி. பிற மொழிகளில் எதுவும் இப்பெருமையைப் பெறவில்லை.

ஒரு மனிதனும், ஒரு நாடும் வெவ்வேறல்ல. இரண்டும் ஒன்றே. இரண்டையும் ஓவியங்களாக வரைந்து பார்க்கின் இவ்வுண்மை புலப்படும். முடி – காடு, பேன் – விலங்கு, நெற்றி – சமயம், மூளை–மெய்ஞ்ஞானம் - விஞ்ஞானம், மூக்கு – சுகாதாரம், கன்னங்கள்–கலைகள், காதுகள் – ஒற்றர்கள், வாய் – பத்திரிகைகள், பற்கள் – ஆலைகள், கழுத்து – பாதுகாப்பு, கைகள் – தொழில்கள், கால்கள் – போக்குவரத்து, முதுகெலும்பு – வணிகம், வயிறு – விவசாயம். இவற்றுள் நெஞ்சுதான் பண்பாடு.

ஒரு நாட்டின் உறுப்புகளும் ஒரு மனிதனின் உறுப்புகளும் புறக்கண்களால் காணக்கூடியவை. ஒரு நாட்டின் பண்பாடும், ஒரு மனிதனின் பண்பாடும் அகக் கண்களால் காணக் கூடியவை. இப்பண்பாட்டை விளக்கி வற்புறுத்தித் செயல்படுத்துவதே நம் தமிழ் இலக்கியங்களின் உயிரோட்டமாகும். இத்தகைய பணியே. தமிழகத்துச்சான்றோர்களாகிய தமிழ்ப்பெரும் புலவர்கள் சங்க காலத்திலும் அதனைத் தொடர்ந்தும் நம் நாட்டில் செய்து கொண்டு வந்திருக்கின்றனர்.

அவர்களின் வழியில் கடந்த நூற்றாண்டிற் பிறந்தவர்களில் யாழ்ப்பாணம் ஆறுமுக நாவவர், பூவை கல்யாணசுந்தர முதலியார், சோமசுந்தர நாயகர், பாம்பன் சுவாமிகள், நா. கதிரை வேல் பிள்ளை, மறைமலை அடிகள், திரு. வி.க., வ. உ. சிதம்பரனார், நாவலர் சோமசுந்தர பாரதியார், பண்டிதமணி கதிரேசன் செட்டியார், தமிழ்க் காசு எம். எல். பிள்ளை நாட்டார் ஐயா முதலியோர் குறிப்பிடத் தக்கவர்கள்.

இவர்களில் நாட்டுக்கும், மொழிக்கும் சமூகத்துக்கும் தொண்டு செய்யக் கருதிக் கவிதைகளைச்செய்து பெரும் பணி புரிந்தவர்கள். தேசியகவி சுப்பிரமணிய பாரதியார் அவர்களும், கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை அவர்களும், நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளையும் ஆவர்.

இப்பரம்பரையில் இக்காலத்தில் தோன்றி மறைந்த ஒரே கவிஞர் கனக சுப்புரத்தினம் ஆவார். இவரது கவிதைகளில் நாட்டுப்பற்றையும், மொழிப்பற்றையும், சமூகப்பற்றையும் ஒருங்கே காணலாம்.

சமூக சீர்திருத்தத்தில் சாதிகள் ஒழிய, வறுமைகள் ஒழிய, தீண்டாமை அழிய, விதவை மணம் புரிய, பெண்னுரிமை பேண, கலப்பு மணம் செய்ய, பொருளாதாரம் வளர, தமிழ் மொழியைப் போற்ற புரட்சியைச் செய்த பெருமை இவரையே சாரும். இதனால் இவர் புரட்சிக் கவிஞர் என்ற பெயரைப் பெற்றார்.

தேசிய கவி சுப்பிரமணிய பாரதியாரிடம் இவருக்குப் பெருமதிப்பு உண்டு. அவருடைய தொண்டிலும், கவிதையிலும் பெரும்பற்றுக்கொண்டு அவரை ஆசிரியராகவும் கொண்டவர். இதனாலேயே அவர் பாரதிதாசன் என்ற பெயரும் பெற்றார்.

இவர் வாழ்ந்த காலத்தில் இவருக்கு ஈடு இணையான கவிதைகளை இயற்றுகின்ற ஆற்றலைப் பெற்ற புலவர்கள் எவரும் தோன்றவில்லை. இவரது பாடல்கள் பல்வேறு சுவைகளையும் ஒருங்கே தருவன.

45 ஆண்டுகளுக்கு முன்பு இவரது பாடல்களைத் திரட்டி ‘பாரதிதாசன் கவிதைகள்’ என நூலை வெளியிடும் தொண்டில் நான் பங்கு பெற்றேன். அதற்கு அவர் மதிப்புரை ஒன்றை வேண்டியபொழுது நான் எழுதித் தந்தது இது:

“கதைக்காக ஒரு முறை, கவிதைக்காக ஒரு முறை, கற்பனைக்காக ஒரு முறை, இன்பத்துக்காக ஒரு முறை, அதன் எழிலுக்காக ஒரு முறை, சுவைக்காக ஒரு முறை, சொல்லாட்சிக்காக ஒரு முறை படித்தேன். அது ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு படி–தேன் என ருசித்தது” என்பதே.

இவரது பரம்பரையாக இன்று தமிழகத்தில் பல இளம் புலவர்கள், கவிஞர்கள் தோன்றியிருக்கின்றனர். இவர்களில் குறிப்பிடத்தக்கவர் கவிஞர் சுரதா என்பவர். சு-சுப்பு, ர-ரத்தினம், த-தாசன், எனத் தன் பெயரிலேயே புரட்சிக் கவிஞரின் பெயரையும் வைத்துக் கொண்டவர்.

இவரைப் போன்ற கவிஞர்கள் ஏராளமானவர்களைத் தமிழகம் பெற்றிருக்கிறது. இத்தகைய அறிஞர்கள் அனைவரையும் பாரதிதாசன் பரம்பரையே எனக்கூறலாம். இத்தகைய பரம்பரை தமிழகத்தில் இன்னும் அதிகமாக வளரவேண்டுமென்பதே என் விருப்பம். வளரும் என்ற நம்பிக்கையும் எனக்கு உண்டு.

இக்காலத்திலும் எல்லோரும் கவிபாடலாம் என்றும், அதற்கு இலக்கணமே தேவையில்லை என்றும் ஒரு கருத்துப் பரவி வருகிறது. சில கவியரங்குகளில் பாடப்பெறுகின்ற கவிதைகளில் எதுகையும் மோனையுங்கூடத் தேவையில்லை எனக் கருதிகிறார்கள். இக்கருத்து அறிஞர்களால் ஏற்கக் கூடியதன்று. இத்தகையோர் பாரதிதாசன் கவிதைகளைப் பலமுறை படித்தறிவதன் மூலம் சிறந்த கவிதைகளை இயற்றும் ஆற்றலைப்பெற முடியும். இத்தகையோர்களால் நாடும் சிறக்கும்; மொழியும் வளரும்; மக்களும் நல்வாழ்வு வாழ்வர். பாரதிதாசன் பரம்பரையும் வளரும்.

“கோழியும் தன் குஞ்சுகளைக் கொத்தவரும் வான் பருந்தை சூழ்ந்து எதிர்க்க அஞ்சாத தொல் புலி” எனத் தமிழ் மண்ணின் வீரத்திற்கு உவமை கூறிய ஒரே கவிஞர் பாரதிதாசனார்.

இப்பெரும் புலவர் பெருமகனை நினைந்து தமிழக அரசு தான் நடத்தும் “தமிழரசு” இதழைத் தமிழ்ப் புத்தாண்டு இதழாக, தமிழ் வளர்ச்சி இதழாக, புரட்சிச் சிறப்பிதழாக கவிஞர் பாரதிதாசனார் சிறப்பிதழாக வெளியிட அவர் பெயரால் பல்கலை கழகம் அமைக்க முன் வந்திருப்பது கண்டு பெருமகிழ்ச்சியடைகிறேன்.

நாட்டுக்காக, மொழிக்காக, மக்களுக்காக, தமிழ்ப் பண்பாட்டிற்காக, தமிழக அரசினால் வெளிவந்து கொண்டிருக்கின்ற இத் “தமிழரசு” இதழும், தமிழக அரசும் இன்னும் இதுபோன்ற பல நல்ல தொண்டுகளைச் செய்து சிறப்புற்று விளங்க வேண்டுமென, இந்த நல்ல நாளில் முழுமனத்துடன் வாழ்த்துகிறேன்.