உள்ளடக்கத்துக்குச் செல்

எனது நாடக வாழ்க்கை/அணிந்துரை

விக்கிமூலம் இலிருந்து




அணிந்துரை

சிலம்புச்செல்வர் ம. பொ. சிவஞானம் எம். எல். சி. அவர்கள்

‘எனது நாடக வாழ்க்கை’ எனும் பெயரில் அவ்வை தி. க. சண்முகம் எழுதி வானதி பதிப்பகத்தார் வெளியிட்டுள்ள இந்நூல் தமிழ் இலக்கியக் களஞ்சியத்துக்குப் புதிய வரவு எனலாம். ஆம்; நாடக நடிகர் எவரும் இதுவரை தனது நாடகவாழ்க்கையை ஒரு நூலாக உருவாக்கித் தந்ததில்லை. கலைஞர் சண்முகம் போற்றி வரும் நாடகப் பேராசிரியர் பம்மல் சம்பந்த முதலியார், “நான் கண்ட நாடகக் கலைஞர்கள்” எனும் பெயரில் சிறிய நூல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதனை நான் படித்தும் இருக்கிறேன். ஆனால், அது முதலியாரின் நாடக வாழ்க்கையன்று. நாடக உலகில் தாம் சந்தித்த சில நடிகர்களைப் பற்றிய குறிப்புக்களையே அவர் அந்நூலில் தந்துள்ளார்.

கலைஞர் சண்முகம், “எனது நாடக வாழ்க்கை” என்று இந்நூலுக்குப் பெயரிட்டிருப்பினும், கடந்துபோன அரை நூற்றாண்டு காலத்தில் தமிழ்நாடகம் வளர்ந்து வந்த வரலாற்றையும் விரிவாகக் கூறியுள்ளார்.

ஐந்தாண்டு பிள்ளைப்பருவத்தில் இந்நூலாசிரியர் நாடக மேடையில் தோன்றினார். அறுபதாண்டு நிறைவு பெற்று, தமக்கு மணிவிழா நடைபெறும் இந்நாளிலே, தமது 55 ஆண்டு கால நாடக வாழ்க்கையை விரித்தெழுதும் பேற்றினைப் பெற்றிருக்கிறார் என்றால், இதனைத் தமிழ் நாடகம் செய்த தவம் என்றே சொல்ல வேண்டும்.

நடிகரெல்லாம் ஆற்றல் மிக்க எழுத்தாளராகி விடுவதில்லை. அப்படியே ஆற்றல் மிக்க எழுத்தாளரெல்லாம் புகழ் மணக்கும் நடிகராகி விடுவதில்லை. இந்த இரண்டு ஆற்றல்களும் அவ்வை சண்முகனாரிடம் நிறைவு பெற்று விளங்குகிறது என்பதற்கு இந்நூல் சான்றாகும். கடந்த காலத்தில் நாடக அரங்கில் தோன்றிப் புகழோடு விளங்கிய பலர் காலப்போக்கிலே மக்கள் கவனத்திலிருந்து மறைந்தே போயினர். ஆம்; மக்கள் என்றென்றும் நினைவில் வைத்துப் போற்றத்தக்க பெருமைக்குரிய நடிக-நடிகையர்கூட இன்றையத் தலைமுறையினரின் நினைவுக்கு அப்பாற்பட்டவராகி விட்டனர். அவர்களை எல்லாம் இந்நூலில் நல்லவிதத்தில் அறிமுகப்படுத்தி, அவர்களுடைய பெயர்கள் மறைந்து போகாதபடி செய்துவிட்டார் ஆசிரியர் சண்முகனார். பொறாமையற்ற பண்பாளர்களுக்கே இது சாத்தியமாகும். கலைஞர் சண்முகம் தம்மிலே நாடக உலகை அடக்கிவிடாமல் நாடக உலகில் தம்மை ஒரு அங்கமாகக் கருதக்கூடிய உயர்குணம் படைத்தவர். அதனால் தமது வாழ்க்கையை மையமாகக் கொண்டு தமிழ் நாடக உலகின் அரை நூற்றாண்டு காலச் சரித்திரமாக இந்நூலைப் படைத்துள்ளார்.

ஒருவருடைய சுய சரிதம் எப்படி எழுதப்பட வேண்டுமோ, அப்படி எழுதப்பட்டுள்ளது இந்நூல். பல இடங்களில் நாடகக் காட்சிகளைப்பற்றிப் படிக்கிறோம் என்பதனை மறந்து, அந்தக் காட்சிகளைப் பார்க்கிறோம் என்ற உணர்வையே பெற்றுவிடுகிறோம்.

நாடக மேடையிலே நடிகர்களுக்கு விபத்துக்கள்கூட ஏற்படுவதுண்டு. இதனை, தாம் பெற்ற அனுபவத்தைக் கொண்டு படிப்பவருடைய மனம் உருகும்படி எழுதியுள்ளார். ஒரு காட்சியிலே கலைஞருக்கு ஏற்படவிருந்த விபத்திலிருந்து அவர் தெய்வாதீனமாகத் தப்பியதனை நாம் படிக்கும்போது, மணிவிழாக் காண வேண்டிய நம் சண்முகனார் விபத்திலிருந்து தப்பியது குறித்து நாம் வியப்பும் மகிழ்ச்சியும் அடைகிறோம். இந்த ஒரு நிகழ்ச்சியை சான்றாகக் கொண்டு, நாடக உலகுக்கு ரசிகர் உலகம் எவ்வளவோ கடமைப் பட்டிருக்கிறது என்பதனை நன்றியறிதலோடு உணர்கிறோம்.

கலைஞர் சண்முகம் நகைச்சுவை ததும்ப எழுதுவதில் தமக்குள்ள ஆற்றலை இந்நூலில் பல்வேறு இடங்களில் வெளிப்படுத்தி, யுள்ளார். நகைச்சுவை ததும்பப் பேசுவது வேறு; எழுதுவது வேறு. நகைச்சுவை ததும்பப் பேசும் ஆற்றல்பெற்றவரைப்போல் அதே முறையில் எழுதுகின்ற ஆற்றலைப் பெற்றவர் கலைஞர் சண்முகம். சில நடிகர்களைப் பற்றி நகைச்சுவையோடு குறிப்பிடும் போது பலமுறை என்னையறியாமலே நான் சிரித்ததுண்டு.

சின்னஞ்சிறு பிள்ளைகளைக் கொண்ட “பாய்ஸ் கம்பெனி” எதுவும் இந்நாளில் இல்லை. அதனால் நாடக உலகில் பிள்ளைகள் பட்ட அல்லல்களை இந்நூலின் வாயிலாகவன்றி வேறு வகையில் தெரிந்துகொள்ள வருங்காலத் தலைமுறையினருக்கு வாய்ப்பில்லை. இந்தப் பத்தொன்பதாம் நூற்றாண்டில் வறுமையோடு உறவு கொண்டுதான் நாடகக்கலை வளர்ந்து வந்திருக்கிறது. ஐந்து வயதில்-பள்ளிக்குச் செல்ல வேண்டிய பருவத்தில் நாடகத் துறையில் பிள்ளைகள் ஈடுபடுத்தப்பட்ட கொடுமை கடந்த தலைமுறையோடு முடிந்துபோனதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி, நாடகக் கம்பெனி என்பது, நடிக்கின்ற பிள்ளைகளை அடைத்து வைக்கும் சிறைச்சாலையாகவும் இருந்து வந்த கொடுமையினை கலைஞர் சண்முகத்தின் நாடக வாழ்க்கையைக் கொண்டே நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

சங்கரதாஸ் சுவாமிகளைப் பற்றிக் குறிப்பிடும் இடங்களில், குரு பக்தியை நன்றி உணர்வோடு வெளிப்படுத்துகிறார் இந்நூலாசிரியர். தம்முடைய பெற்றோர்களிடமும் பக்தியையும் நன்றியுணர்வையும் வெளிப்படுத்துகிறார் என்றாலும், நாடகக் குருநாதரிடமே இந்த அரிய பண்புகளை அதிகமாக வெளிப் படுத்துகிறார். இதனை எல்லா நடிகர்களிடமும் நாம் காண முடிவதில்லையல்லவா?

இந்த நூலை மிகச் சிறந்த இலக்கியமாகவே நான் கருதுகின்றேன். தமிழிலுள்ள இதனைப் பிற மொழிகளில்-குறிப்பாக உலகமொழியான ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வேண்டும். இது சரித்திர நூல் மட்டுமல்ல; நாடக உலகைப்பற்றிய மிகச் சிறந்த தகவல்நூல். இன்னொரு வகையில் சொன்னால், தமிழ் நாடக மேடையைப் பற்றிய எல்லாத் தகவல்களையும் தரும் நாடகக் கலைக் களஞ்சியம் என்றும் கொள்ளலாம். நூலாசிரியருக்கு என் மனமுவந்த வாழ்த்துக்கள்.

தம்மோடுபிறந்து, தம்மோடுவளர்ந்து, தமதுவளர்ச்சிக்குத் துணை புரிந்து வருபவர்களான தம் சகோதரர்கள் பற்றி மிகுந்த வாஞ்சையோடு நூலின் பல்வேறு இடங்களில் குறிப்பு களைத் தந்துள்ளார் ஆசிரியர். இந்த உயரிய சகோதர வாஞ்சை தான் “டி. கே. எஸ். சகோதரர்கள்” என்ற பெயரே கலைச்சொல் ஆக்கி விட்டது. வருங்கால எழுத்தாளர்கள் இதைவிடவும் பெரிய நூல் ஒன்றைப் படைப்பதற்கான முதல் நூலாக இந்நூல் அமைந்து விட்டது.

அன்பர் திருகாவுக்கரசு நடத்தும் வானதி பதிப்பகம் இந்நூலை வெளியிட்டுத் தனது வரலாற்றிலே புதியசிறப்பொன்றைச் சேர்த்துக் கொண்டுவிட்டது. நல்ல காகிதத்திலே, பிழையற்ற முறையிலே, அழகிய பதிப்பாக இதனை வெளியிட்ட அன்பர் திருநாவுக்கரசைப் பாராட்டுகின்றேன்.

சென்னை
20-4-72

ம. பொ. சிவஞானம்